PDA

View Full Version : வணங்கா முடி



அமரன்
25-09-2010, 09:42 PM
அண்மையில் கடந்த நாட்களில் ஒரு ஞாயிறு அன்று பூமகளுடன் கூகிளில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அன்றைய தினம்ஆசிரியர் தினம் என்று அறியத் தந்தார். ஏதாச்சும் எழுதுங்க என்று கட்டளையும் உதிரியாகப் பூத்தது பூமகளிடமிருந்து. எழுதும்படியாக எதுவும் இல்லையே என்று நினைத்தபடி சரி என்று சொல்லி வைச்சேன். இன்றைக்குஎழுதுகிறேன்.

இன்று காலை கொஞ்சம் என்னைக் கவனித்த போது கண்ணாடியில் என் உச்சிச் சுழியை அண்டிய தலை முடி குத்திட்டு நின்றது. அது எப்பவும் அப்படித்தான். எண்ணை வைச்சாலும், கிறீம் போட்டாலும், ஜெல் பூசினாலும் அது சொல்வழி கேட்பதில்லை. சின்ன வயசில் தலை சீவிய அம்மம்மாவும் சரி, பருவவயசில் பிடித்திழுத்து எண்ணெய் தேய்த்த சித்தியவையும் சரி இந்த வணங்காமுடியை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு ‘புகழத்’ தவறவில்லை. வணங்கா முடி என்றாலே நினைவுக்கு வரும் சம்பவம் ஒன்று உண்டு.

அப்போது நான் முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். நான்காம் வகுப்பு வரை மட்டும் இருந்த அந்தக் கீழ் நிலைப் பள்ளியில் எனக்கு முதலாம் வகுப்பு மரியாதை எல்லாரிடமிருந்தும் கிடைக்கும். ஒருவிதத்தில் அது பெருமையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் அது எரிச்சலையும் தரும். அன்பும், கண்டிப்பும் ஒன்றாக் குடும்பம் நடத்தும் அம்மாவின் கண்கள் வீட்டிலிருந்தாலும், பள்ளியில் தொண்டர் ஆசிரியராகப் பணி புரிந்த சித்தியோ பல ஜோடி கண்களால் என்னைப் பின் தொடர்ந்து அம்மாவின் பார்வையில் என்னை வைத்திருப்பார்.

அதனாலோ என்னவோ நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொல்லும் அளவுக்கு என் நடத்தை இருந்தது. நல்ல பிள்ளை என்றுதான் சித்ரா டீச்சரும் நினைச்சிருப்பா.

சித்ரா டீச்சர்... பள்ளியில் இருந்த ஒவ்வொரு டீச்சரும் ஒவ்வொரு கிராமமாகத் தெரிய, சித்ரா டீச்சர் டவுனாகத் தெரிந்தார். படிக்கிற பிள்ளைகளுக்கு மட்டுமில்லாது படிப்பிக்கிறவங்களுக்கும் அவ அப்படித்தான். ஒற்றுமையாக இருக்கும் உதடுகளைப் பிரிச்சு வைக்கும் கைங்காரியாக பள்ளியில் வலம் வந்தவர், எனக்கு ஆங்கில டீச்சராக வாய்த்தார். எல்லா டீச்சரும் வக்குப்பறைக்குள் அடைத்து படிப்பிக்க அவரோ பக்கத்தில் இருந்த தேவாலய வளவுக்குள்ளிருந்த மரத்தடிக்குக் கூட்டிப் போய்ப் படிப்பிப்பார். அதனால் அவரில் விருப்பம் அதிகம் எனக்கு.

அப்படிப் போகும் போது அவருக்கு ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு போவேன். அந்தச் சின்னக் கதிரையில் அவரமர்ந்து எங்களை விளையாட வைச்சு படிப்பிப்பார். ஒரு நாள் அவரை விட வேறு ஒன்று எனக்கு முக்கியமாகப் பட்டிருக்க வேண்டும். அந்த சந்தோசத்துக்கு இடைஞ்சலாக சித்ரா டீச்சர் வந்தார். எனக்குக் கோபம் விலைவாசி போல ஏறியது. இவவுக்கு என்ன கதிரை என்று நினைத்து விட்டேன். டீச்சர் எத்தனை சொல்லியும், மிரட்டியும், அடித்தும் கதிரை எடுத்து டீச்சருக்குக் குடுக்கவில்லை.

அந்த சம்பவத்துக்குப் பிறகு சித்ரா டீச்சர் எனக்குவைச்ச பேர் வணங்கா முடி.

ரங்கராஜன்
26-09-2010, 05:52 AM
:smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::eek::eek::eek::eek::mini023::mini023::mini023::mini023::eek::eek::eek::eek:

Nivas.T
26-09-2010, 06:18 AM
அழகான் பெயர்
நல்ல டீச்சர்
நல்ல சம்பவம்
அது என்ன கதிரை?:confused:

பூமகள்
26-09-2010, 06:18 AM
ஹா ஹா... :mini023: வணங்கா முடி அன்பிற்கு வணங்கியதாலா இப்பதிவு?? எப்படியோ.. எங்களுக்கெல்லாம் விருந்து தயாரிச்சாச்சு.. இன்னும் பதார்த்தங்கள் பாக்கி இருக்கே... ;):p

சித்ரா டீச்சர் மனக்கண்ணில்.. :)

நன்றிகள் அண்ணா. :)

மதி
26-09-2010, 06:27 AM
:D:D:):)
எப்ப்ப்போ தான் வணங்கும் முடி???

த.ஜார்ஜ்
26-09-2010, 06:43 AM
அப்படியென்ன முக்கியமாகப் பட்டது. சித்ரா டீச்சர் அதற்கு என்ன இடையூறு செய்தார். [இடையிலே கேள்வி கேட்கப்பிடாதோ?]

அந்த கதிரையின் பொருள் என்ன என்பதையும் சொல்லிபோடுங்க.[நாற்காலியோ?]

Narathar
26-09-2010, 06:48 AM
அது என்ன கதிரை?:confused:

உங்களூர் "செயார்"ஐ எங்களூரில் கதிரை என்போம்!!!!

உங்களூர் "சால்ட்"ஐ நாம் உப்பு என்பது போல..............:D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88

Nivas.T
26-09-2010, 07:36 AM
உங்களூர் "செயார்"ஐ எங்களூரில் கதிரை என்போம்!!!!

உங்களூர் "சால்ட்"ஐ நாம் உப்பு என்பது போல..............:D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88

ஓ நாற்காலியா.............:eek:

ஆனா இந்த லொள்ளு கொஞ்சம் அதிகம்தான் :sauer028:

:D

விகடன்
26-09-2010, 10:48 AM
காரணப்பெயர் என்றால் இதுதான் அமரா!

கீதம்
26-09-2010, 10:11 PM
அப்படிப் போடுங்க கீதம்.

இதையே சித்ரா டீச்சர் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைச்சுப் பாத்தேன். :)


யாரது சித்ரா டீச்சர்?:confused:


யாரு???

அவங்க வாயால் சொல்லி கேட்டு ரசிக்கும் அளவுக்கு உங்களை பாதித்த அந்த ரா யாரு???



அந்தச் சித்ரா டீச்சர் யார் என்று தெரிந்தே ஆக வேண்டும். இல்லையேல் தூக்கம் வராது! ஒரே மண்டை குடைச்சல் அமரன்!


அன்புக்குச் சொல்லுறதெண்டால் அவா என்ர ஆங்கில டீச்சர்.

கீதத்துக்கும் கலையரசிக்கும் சொல்வதானால் அவுங்களுக்கு மண்டைக் குடைச்சல் குடுத்த முதல் தர மாணவன் நான்.

அன்றைக்கு எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்த சித்ரா டீச்சரைப் பற்றி இன்றைக்கு ஒரு அனுபவப்பாடம். சொல்லுங்க, கேட்க ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன்.

அன்புரசிகன்
27-09-2010, 01:27 AM
எண்ணை கன்னத்தால் ஒழுக கன்னை உச்சி பிரிச்சு தலைஇழுத்து முகத்துக்கு பவுடர் பூசி இலாஸ்டிக் போட்ட நீல நிற அரைக்காற்சட்டை வெள்ளை சேட்டு அதில ஒரு பட்டன் கழன்றிருக்கும். முன் பக்கத்தில் ஒரு பக்க சேட்டு வெளியில் நிற்க சித்திரா டீச்சர் பிரப்பால அடிக்க நீர் தலையை குனிந்து கண்ணை நிமிர்த்தி பார்க்க.... இந்த காட்சியை நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு சிப்பு....

:D :D :D

கன்னத்தில நெத்தியில திருஷ்டிப்பொட்டு வைச்சிருந்தீங்களோ????

ஆனாலும் நீர் பரவாயில்லை. சித்திதான். எனக்கு அம்மாவே................:frown:

அமரன்
27-09-2010, 09:02 PM
இதை இன்னார் கண்டு பிடித்தார் என்றுதான் சொல்கிறோம். உருவாக்கினார் என்று சொல்வது இல்லை. அல்லது மிகவும் குறைவு. அப்படித்தான் எனக்குள் இருந்த பிடிவாதக் குணத்தை சித்ரா டீச்சர் கண்டு பிடித்தார். எனக்கு அறிமுகப்படுத்தினார். எந்த முகூர்த்தத்தில் அவர் எனக்கு வணங்கா முடிப் பட்டாபிஷேகம் செய்தாரோ தெரியவில்லை. பிடிவாதத்தின் ஆட்சி என்னில் செழித்தது. அம்மாவின் அடியும் மாமாவின் அதட்டலும் கூட்டணி அமைத்தும் பிடிவாதத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.

புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் பலரும் ஆதங்கப்படும் விசயங்களில் ஒன்று, வயசானவர்கள் வீட்டில் இல்லாததால் தமது பிள்லைகளின் வளர்வில் தடுமாற்றமும் தடம்மாற்றமும் நிகழ்கிறது என்பது. உண்மைதான். பேரன், பேத்தியுடன் வளரும் பிள்ளைகளுக்கும் அம்மா, அப்பாவுடன் மட்டும் இருந்து வளரும் பிள்ளைகளுக்கும் பல விசயங்களில் வித்தியாசம் உண்டு.

தாத்தா, பாட்டியுடன் கூட்டாக வளரும் பிள்ளைகளின் அன்பின் ஆதிக்கம் அதிகம். இது சில நேரங்களில் பிரதி கூலமாகி விடுவதுமுண்டு. என் அழுங்குக் குணத்தை கடுமை காட்டி முறிக்க முனைந்தவர்கள் எல்லாம் அம்மம்மா, அய்யாவினால் அடக்கப்பட்டதால் பிடிவாதம் பிடிவாதமாய் என்னுடன் ஒட்டி விட்டது.

இப்படியான சூழ்நிலைகளினால் பிடிவாதத்தை நானும், பிடிவாதம் என்னையும் விட்டுப் பிரியவில்லை. சித்ரா டீச்சருக்கும் எனக்கும் இடையில் பனி யுத்தம் உக்கிரமானது. டீச்சர் இறங்கி வர கிறங்குவதாவும், டீச்சர் எகிறினால் ஏறுவதுமாக என்னுடைய யுத்த தந்திரம் அமைந்திருந்தது. தலைமை ஆசிரியரால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. சின்ன வயசு என்ற காரணம் இருந்தாலும் பள்ளியின் பேர் சொல்லும் பிள்ளையாக வருவான் என்ற நம்பிக்கையும் முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியவில்லை.

இலங்கையில் நான்காம் வகுப்பில் ஸ்கொலர்ஷிப் என்றொரு தேர்வு நடக்கும். அதில் சித்தி எய்தும் மாணவர்களை கற்றோருக்கு உரிய சிறப்புடன் நோக்கும் பழக்கம் இருந்தது. நம்மூர் அந்தப் பழக்கத்தின் அதி தீவிர ஆளுகையில் இருந்தது. அந்தத் தேர்வில் சிறப்பாகச் சித்தியடைந்து பள்ளிக்குப் பெருமை சேர்ப்பான் என்ற எதிர்பார்ப்பு பள்ளியில் எல்லாரிடமும் இருந்தமை என்னை மேலும் உசுப்பேத்தியது.

நாட்டில் பெரிதாக நானிருக்க இவ்ர்கள் என்ன கோரை என்று நினைத்ததோ என்னவோ.. நான்காம் வகுப்பு எட்ட முன்னரே தன்னிருப்பைக் காட்டி எம்மிருப்பைக் குலைத்தது இனவாதப் போர். ஊரை விட்டுக் கலைக்கப்பட சித்ரா டீச்சருக்கும் எனக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது.

வேறு ஊரில் நான்காம் வகுப்பு படித்தேன். அப்போது பிடிவாதம் நித்திரைக்குப் போயிருந்தது. என் தலை முடி வெட்டும் மாறிப் போனது. பொலிஸ் கட் எனும் ஒட்ட வெட்டும் ஃபேசனுக்கு நானும் இரையானேன். :) நாட்டு நிலை காரணமாக ஸகொலர்ஷிப் தேர்வும் தள்ளிப் போனது. எங்கள் வீட்டிலும் ஏதோ ஒரு நிம்மதி. கொஞ்ச நாட்கள்தான்...

நோஞ்சானாக இருந்த என்னை, அஞ்சாம் வகுப்புக்காக வேறு பள்ளி மாறிய போது அஞ்சா நெஞ்சனாக மாற்றியது நித்திரை விட்டெழுந்த பிடிவாதம். சிறுத்தையின் மீசையை எடுத்து அதன் மூக்கிலேயே விட்டு ஆட்டியது போல அமைந்த அந்தச் சம்பவம் களத்தை மாற்றியது..




:smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra::eek::eek::eek::eek::mini023::mini023::mini023::mini023::eek::eek::eek::eek:
:auto003:

கீதம்
27-09-2010, 09:36 PM
பால்யகால நினைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவம்.

உங்கள் அனுபவங்கள் படிக்கும்போது எங்கள் வீட்டு சிங்கக்குட்டியின் சிலும்பல்தான் நினைவுக்கு வந்துபோகிறது. சிறுத்தையின் மூக்குக்குள் அதன் மீசையை விட்டு ஆட்டினால் என்ற வரிகளைப் படித்து ரசித்தேன். தொடரட்டும் உங்கள் பள்ளிப்பருவ நினைவுகள்.

பூமகள்
28-09-2010, 07:05 AM
இத்தனை நல்ல பிள்ளை உருவாக உங்களுக்குள் நிகழ்ந்த அந்த பரிணாமங்களையும் வெளியிலிருந்து தட்டிச் செதுக்கியவர்களையும் கண் முன் சில வரிகளில் கொண்டு வந்துவிட்டீர்கள்..

பிடிவாதமான குட்டி அமரனை கற்பனையில் எண்ணிப் பார்க்கிறேன்.. அரைக்கால் சட்டையும் அமுல் பேபி முகமுமாக ஒரு பிரகாசமான பால் வடியும் முகம் மனக்கண்ணில்.. ;):p

சுட்டித் தனத்தை ரசித்தபடியே நெகிழ்ச்சியுடன் தொடர்கிறேன்.. தொடருங்கள் அமர் அண்ணா.

இவரை இங்கு கண்டது என் வரம்...! முத்தெடுத்துக் கொடுத்த தமிழ் மன்றம் வாழ்க. :)

தீபா
28-09-2010, 07:15 AM
வணங்கா முடி

பொருத்தமாக இருக்கிறது
முடிக்கும் (புறம்)
முடிக்கும் (அகம்)

அழகு அமரன்...
வாழ்த்துக்கள்

அமரன்
22-10-2010, 09:18 PM
என்னைப் பொருத்தவரை மேடைப்பேச்சு என்றால் பல்லில்லாக் கிழவன் பொரிவிளாங்காய் சாப்பிடுவது மாதிரி. என் குடும்பத்தார் எவ்வளவு முயன்றும் முடி....ல என்று ஒதுங்கி இருந்தார்கள். எனக்கும் அதில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. அதனால் தமிழ்த்திறன் போட்டிகளுக்கும் எனக்கும் நீண்ட தூரம் இருந்தது.

இதைத் தெரிந்தோ என்னவோ தெரியவில்லை. நான்காம் வகுப்பு ஆசிரியை தமிழ்த் திறன் போட்டிகளில் என்னை ஓரம் கட்டினார். அது என்னைப் பெரிதாகத் தாக்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவர், என் அந்த நேரத்து எதிரிக்குப் பரிவட்டம் கட்டி என்னை மட்டம் தட்டியது சுர்ரென்று ஏற்றியது. அதனை அடக்கி அமைதியாகியவன் போய்ச் சுழன்றடித்த இடம் அம்மாவின் முன்னிலை.

உடனடியாக ஒரு பேச்சு எழுதப்பட்டது. பக்கத்து வீட்டுப் பேராசானிடம் கொடுத்துப் பழுது பார்க்கப்பட்டது. சொற்ப காலத்தில் சொற்போர் என்பதால் துரித கதியில் ஆயத்தம் செய்யப்பட்டது. பள்ளி மட்டப் போட்டி நடந்தது.

மட்டம் தட்டிய ஆசிரியை பக்கம் வந்து பக்குவமாய்க் கட்டிப் பிடிக்கும் நிலை.. போட்டியில் முதலிடம்.. எற்கனவே இருந்த தலைக்கனத்துடன் முதலிடமும் சேர்ந்துவிட என் பிடிவாதக் கோட்டை கருங்கற்கள் கொண்டு பலப்படுத்தப்பட்டது.

அடுத்து கொத்தணி மட்டம்.. அங்கேயும் முதலிடம்.. அடுத்து கோட்ட மட்டம்.. அங்கேயும்.. அடுத்து வலயம்.. எங்கும்.. அடுத்து மாவட்டம்.. இங்கே எழுந்தது சிக்கல்..


பள்ளி, கொத்தணி, கோட்டம், வலயம் போன்றவற்றில் ஐந்தில் விரும்பிய ஒரு தலைப்பு பேசலாம். நான் வளைத்த நாவில்லிருந்து புறப்பட்டு நடுவர்களையும், சபையினரையும் தாக்கி வீழ்த்தியவர் மகாகவி பாரதி. மாவட்டத்தில் அப்படி இருக்கவில்லை. ஐந்து தலைப்புகளில் ஆன் தி ஸ்பாட்டில் குலுக்கல் முறையில் கிடைக்கும் தலைப்பில் பேசுதல் வேண்டும்.

முதலிட வெறி.. அடிபட்ட பிடிவாதப் புலி.. ஐந்தையும் மனனம் செய்தேன்.. காலம் புரட்சியிலிருந்து வர்ணனைக்கு மாற்றியது. ஆம்! காலைக் காட்சி எனக்குக் கிடைத்த தலைப்பு. எப்படியோ.. எங்கேயும் முதலிடம்..

இப்படித் தொடங்கிய முதலிடம், என்ன காரணத்தினாலோ தெரியவில்லை எங்கும் எனக்குக் கொடுக்கப்பட்டது. வீட்டில், சுற்ற வட்டங்களில், கலாசாலைகளில் என எடுத்ததும் பெற்றதுமான முதலிடங்கள் பல. காலப்போக்கில் அது இல்லாட்டால் இயக்கமில்லை. இருந்தாலும் அரக்கத்தனம் என்றவாறு மாறி விட்டிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், ராசா என்றா அடிமையாகவும், அடிமை என்றால் ஏகாதிபத்திய ராசாகவும் ஆகும் குண்மாக ஆபத்தான நிலைக்குப் பரிணமித்தது பிடிவாதம்..

இந்நிலையில் மீண்டும் பள்ளு மாற்றம். புது இடத்தில் பவ்வியமாக நடந்து கொள்வே என்று நாகரிகமாகச் சொல்வதை அபட்டமாகச் சொல்றதென்றால் பம்முவேன். அப்படித்தான் அங்கேயும். கொஞ்சக் காலம்தான்.. பள்ளியின் விதிக~ளுக்கு அடங்கி பழயபடி வேதாளம் முருங்க மரத்தில் ஏறியது.

.......................
.........................

புண்ணிய மூர்த்தி.. விராடனுக்குத் தெரிந்திருக்கும். கெட்ட வார்த்தை பேசினால் ‘எதை நீ விரும்புகிறாயோ, எதை நீ அடிக்கடி உச்சரிக்கிறாயோ அந்த வடிவில் இறைவனைக் காண்பாய்’ என்று போதிக்கும் ஆன்மீகவாதி.

மேற் சொன்ன வாக்கியங்களை நானும் அவரிடம் வாங்கியிருக்கிறேன். ஆண்டவனை நம்பும் ஆன்மீகத்துடன் ஆன்மா ஆகிய மனசை ஆளும் கலையும் அவரிடம் இருந்தது. என் குணத்தை, என் மனசைப் புரிந்து அதற்கேற்றபடி காய் நகர்த்தினார்.

சீண்டினால் சீறியவனை தீண்டினால் ஒளிர்பவனாக மாற்ற முயன்றார். காயத்ரி மந்திரம், ஓங்காரம். இன்ன பிற எனப் பலதைக் கற்றுக் கொடுத்தார். படிப்பில் நாட்டம் குறைஞ்சப்போ, தேர்வுகளில் 75 புள்ளிச் சராசரி பெற்றால் வழங்கப்படும் ஒப்ரிமிச் சான்றிதழைஎன் இலக்காக்குவார். என்னையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அவருடைய விஷேட பண்பு.

ஆங்கிலப் பாட நேரத்தில் புத்தகத்துக்குள் காமிக்ஸ் புத்தம் ஒளிச்சுப் படித்தால், திட்டாமல், அடிக்காமல் காசு கொடுத்து, அல்லது தானே கடைக்குப் போய் புத்தங்கள் வாங்கித் தந்து தண்டிந்திருக்கிறார். வீட்டிலும் சந்தோசப்பட்டார்கள், பொடியன் திருந்தி விடுவான் என்று. ஆனால் நடந்ததோ வேறு.. உள் நாட்டுப் பிரச்சினை இடத்தை மாற்றியது..

வன்னி...

ஏழு மாதம் வாழ்ந்திருப்பேன்.. புண்ணிய மூர்த்தி செதுக்கிக் குறையில் விட்ட இரண்டுங் கெட்டான் நிலை.. வயதும் அப்படி.. ஆட்டம் அதிரடியாக இருந்தது.

முந்திக் கொண்டு மூக்கில் முயல் புல்லு முளைத்த காலம். அதான், ஆத்திரம் முட்டி வரும் காலம்.

பாடசாலையில் நான் வைச்சது சட்டம். மேல் வகுப்பினர் கூட கட்டுப்படுத்த முடியாத சூழல். அதிபர் சொல்லவே வேண்டாம். தம்பி ராசா.. நீ என்ன வேணும் என்றாலும் செய். என் மானத்தை மட்டும் வாங்கிடாத.. எனும் கேஸ். வீட்டிலும் இருந்த கட்டுப்பாடுகள் வெளிநாடு சென்று விட்டமை வேறு வசதியாகப் போய்விட்டது. தனிக்காட்டு ராஜாவாக புலிகேசி புழுதியைக் கிளப்பினார், பலமான பக்க வாத்தியங்களுடன்.

டியூசன் சென்றரில் நான் விரும்பின நேரம்தான் எனக்கு கிளாஸ்.் ஒரு சின்ன உதாரணாம்.

இரண்டு மணிக்கு வகுப்பு.. எனக்குப் போக இஷ்டமில்லை. பாலக்காட்டுப் பக்கம் ஒதுங்கியாச்சு. ஒரு ஒட்டகச் சிவிங்கி கொப்பை வளைக்க நோகாமல் பாலைப்பழம் பிடுங்கித் தின்று விட்டு, கிளாசுக்குப் போனால், நேரம் மூன்று மணி. வாத்தியார் பெண்களுக்கும், ஒரே ஒரு பொடியனுக்கும் படிப்பித்துக் கொண்டிருந்தார். குருதிச்சுற்றோட்டம்.. கேட்டுக் கேள்வி இல்லாமல் போய் உட்கார்ந்த என்னைப் பார்த்து கேள்வி கேட்டார். கேட்டார்... கேட்டுக் கொண்டே இருந்தார்.. பிழையாகப் பதில் சொல்ல வை என்று இஷ்ட தெய்வத்தை வேண்டி இருப்பார், மனதில். கடவுளும் கை கொடுக்கவில்லை அவருக்கு.

பக்கத்தில் இருந்தவனைக் கேட்டார். முழித்தான். வாத்தி பொரிந்து தள்ளினார். மறை முகமாக என்னைத் தாக்கினார். பேச்சிலை நான். பேசாமல் எழுந்து போய்விட்டேன் வீட்டுக்கு.

கணக்கு மாஸ்டர்.. எனக்கு அவரை ரொம்பப்பிடிக்கும். வட்டக்கச்சிச் சந்தையில ஒன்றாகச் கொத்து ரொட்டி சாப்பிட்டிருக்கோம். கோயில் திருவிழாவில் சரிக்குச் சமமாக திரிஞ்சிருக்கோம். அப்படி ஒட்டாக இருந்த இடத்தில் ஒரு விரிசல்..

மாதாந்தச் சோதனை வைத்தார். விடைத்தாள் வாங்கும் நேரம், என் தாள் என்னிடம் இல்லை. அடுத்தவனைக் கெடுக்கிறேன் என்ற கோபம் அவருக்கு. வெடுக்கென்று ஏதேதோ கதைத்தார். கண்டபடி சொற்களால் உதைத்தார். ஒரு கட்டத்தில் நீ எல்லாம் ஊரில படிச்சியா என்றார். பின்ன என்ன உன்ன மாதிரி மாடா மேய்ச்சேன் என்றேன். அந்தளவுதான்..

மன்னிப்புக் கேக்க வேணும் என்று அவரும், ரியூசன் நிர்வாகியும் பிடிவாதம் பிடிக்க, முடியவே முடியாது என்று நான் விடாப்பிடியாய் நிற்க தமிழ் அங்கே தலை நுழைத்து சமாதானம் பேசியது. ஒத்த முனைகள் ஒன்றை ஒன்று முறைத்துத்தானே பழக்கம். தீர்வின்றிக் கலைந்தது அன்றைய பொழுது..

நடந்து ஓரு வாரத்துக்குப் பிறகு டெங்குக் காய்ச்சலால் கணக்கு மாஸ்டர் மரணித்து விட, பிடிவாதம்கட்டிய என் கோட்டையில் முதல் கல் பெயர்ந்தது.



:sport009:

கீதம்
22-10-2010, 11:32 PM
இலவங்காய்மனதில் பொத்திவைக்கப்பட்டிருந்த நினைவுப்பஞ்சு அத்தனையும் சட்டென வெடித்துக்கிளம்பி நாலாபக்கமும் பறக்க........உருகுவதும் இறுகுவதுமாய் எத்தனைப் போராட்டம் அவ்விளநெஞ்சுக்குள்!

ஒவ்வொருவரும் தாமே தங்களை அகக்கண்ணாடிமுன் நிறுத்திப்பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் தூண்டும் நிதர்சன வரிகள்.

எண்ணங்களுக்கு எழுத்துரு கொடுக்க தட்டச்சில் வார்க்கையில் எழுந்த தடுமாற்றத்தை எழுத்துக்களே எடுத்துச் சொல்கின்றன.

பால்யத்தின் பயண அனுபவம் தொடரட்டும். உள்ள(த்)தை உள்ளபடியே உரைக்கும் எழுத்துகளுக்கும் எழுதிய கரங்களுக்கும் என் பாராட்டுகள், அமரன்.

பாரதி
23-10-2010, 02:15 AM
பணியிடத்தில் இருக்கும் சமயத்தில் முதல் பகுதியை முன்பே படித்திருந்தேன். பின்னூட்டம் இட்டதாக நினைத்திருந்தேன்.

பள்ளிப்பருவம்... எத்தனை முறை கிள்ளிப்பார்த்தாலும் இனிய நினைவுகளே முன் நிற்கும். அவ்வயதில் மனதில் இருக்கும் உணர்வுகளை அப்படியே பகிர்ந்திருக்கும் பாங்கு கரும்புப்பாகு.

முயன்றால் எங்கும் முதலிடம்தான் என்பதை சாதித்தவர்களின் பட்டியலில் நிச்சயம் உங்களுக்கும் இடமுண்டு.

தொடருங்கள் அமரன்.:)

அமரன்
23-10-2010, 09:04 AM
மீண்டும் ஒரு இடமாற்றத்தை தந்தது காலக் கட்டளை.

எந்தச் சிங்களம் விரட்டி விரட்டித் துரத்த அரண்டு மிரண்டு காடு மேடு எல்லாம் ஓடினோமோ, அந்தச் சிங்களம் கோலோச்சும் கொழும்புக்கு புதுப்பெயர்வு. மனசுக்குள் இருந்த பயத்தை ஓரளவுக்குக் குறைத்து பக்கபலம் தந்தது ஓ’லெவலில் எடுத்த 8 D யும் அது வழங்கிய Royal college அனுமதியும்.. கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் மதிப்பு என்று சொல்லி அம்மா ஔவையாரான தருணங்களை இப்பவும் நினைச்சுப் பார்ப்பேன்.

எதிரியின் தாக்குதலில் உடையத் தொடங்கிய கோட்டையிலிருந்து எப்படி கடைசிக்கட்டத்தில், உக்கிரமான, மூர்க்கத்தனமான பதில் தாக்குதல்கள் கிளம்புமோ அப்படி ஒரு வேகத்துடன் என்னிலிருந்து புறப்பட்டது சினம், பிடிவாதம், கர்வம் போன்றன. குடும்பம் உட்பட்ட எல்லாரும் கிட்ட வரப் பயந்து எட்டி நின்று ரசித்தாலும் நண்பர்கள் மட்டும் கட்டிப் பிடித்துப் பழகினார்கள்.

அப்படிப்பட்ட ஒருத்திதான் அவள். அவளை எப்படி வரையறுப்பது....? மற்றவர்களுக்கு நம் பழக்கம் தெரியக் கூடாது என்பதற்காக ஒளிஞ்சு ஒளிஞ்சு சந்தித்தவளைப், பழகியவளை எப்படித் தோழி எனலாம். ஒருவேளை இரகசிச் சினேகிதி எனலாமொ என்றால் அதுவும் தப்பாகி விடக் கூடும், இன்றைய சொல்லாடல் சூழலில். காதலி... அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. காதலி எப்படி இருப்பாள் என்ற அனுபவப் பாடம் படிக்காவிட்டாலும் அவளுக்கும் எனக்கும் இடையில் காதல் தொடர்பு இல்லை என்பது மட்டும் உறுதி. அப்போ அவள் யார்..

அவள் அறிமுகமானதே ஒரு இனிய நிகழ்வு. நான் தமிழன்.. கொழும்பில் ஒரு முஸ்லிம் குடும்பம் நட்பு. அவர்கள் மூலமாக அவள் அறிமுகம். அவள்....... சிங்களம்!

அவளைச் சந்திக்கும் முன் பெண்களுடன் கொண்ட நட்பு தடம் மாறி தடம் புரட்டிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. அந்தக் காயங்களுக்கு அவள் மருந்து.

இனி ஏற்படுப் போகும் விபத்துகளுக்கு அவள் தடுப்பூசி. தப்பித் தவறி விபத்தில் சிக்க நேரிட்டால் அதுக்கான காரணமும் அவள்தான். இப்படித்தான் அவளை வரையறுக்கக் கூடியதாக உள்ளது எனக்கு.

இப்பக் கூட உன் தாத்தாவை அங்கே கண்டேன். உன் பாட்டிக்கு என்ன வருத்தம். நீ நின்ற அந்த இடத்தில் இன்று எவனோ ஒருவன் புகைப்பிடித்தபடி நிர்கிறான்,,, என எல்லைச் சுற்றி அவளது விழிகள் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

அன்றும் அப்படித்தான்.. ஊடுறுவிப் பார்த்திருப்பாள் போல. ஒவ்வொரு குணாதிசியங்களையும் புட்டுப் புட்டு வைத்தாள். பிடிவாதத்தை விடு என்றால். கோபத்தைக் குறை என்றாள். அப்படிச் சொன்னவர்களைத்தான் விட்டிருக்கிறேன். அப்படிச் சொன்னவர்களுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் மட்டும் விதி விலக்கானாள்.. புதிய விதியையும் என்னில் எழுதினாள்..

ஒரு நாள் இன்ன கிளப்புக்கு வா என்று ‘அலை’த்தாள். அதுவா... அங்க போகப் ஃபாரின் பாச்போட் வேணுமே என்று இழுத்த என்னை வாடா என்று அதிகாரமாக இழுத்தாள். இருள் பூத்த நேரத்தில் போனேன். மிகச் சுலபமாக உள்ளே கூட்டிச் சென்றால். இருந்ததில் டீசண்டான இடத்தில் அமர்த்தினாள். சாரிடா.. உனக்கு இப்படியான இடத்தை அறிமுகஞ் செய்து வைச்சமைக்கு என்று தொடங்கி ஏதேதோ பேசினாள்.

எதுவும் ஏறவில்லை.. ஒன்றைத் தவிர.

சாவீடு என்றல் சடலம். திருவிழா என்றால் சாமி. இரண்டாகவும் நீ இருக்க வேண்டுமென்றால் செத்துச் செத்துப் பிழைக்க வேணும்..


எவ்வளவு பெரிய விஷயத்தை அவ்வளவு சாதாரணமாகச் சொன்னாள். விஷம் போல ஏறி எனக்குள் எங்கும் பரவியது. கோட்டையின் இறுதிக் கல்லும் அழிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் ஆனது கோட்டை. உயிர் இராசன ஆயுதத்தைப் பயன்படுத்தி அவளை போர் குற்றவாளியாக அறிவிக்க இதுவரை யாரும் ஆவன செய்யவில்லை.

:smilie_flags_kl:

சிவா.ஜி
23-10-2010, 04:10 PM
ஒண்ணாப்புச் சாரலாய் ஆரம்பித்து, சித்ரா டீச்சரின் வாசல் ஒதுங்கி, பின் முதலிட மோகமேறிய மழையாய் வலுத்து...அடுத்தப் பள்ளியின் கட்டுப்பாட்டுக்குப் பம்மி அடங்கி....இந்தப்பதிவில் பெருமழையாய் பொழிந்திருக்கிறீர்கள் பாஸ்.

உங்களைப் புடம் போட்டவர்கள், நிகழ்வுகளை உங்கள் பாணியிலேயே சொல்வதைக் கேட்க(நீங்க சொல்லி நான் கேக்கிற மாதிரியே ஒரு உணர்வு) ரொம்ப நல்லாருக்கு.

தொடர்ந்து அசத்துங்க அமரன்.

பாரதி
23-10-2010, 04:18 PM
ஒற்றை வாக்கியத்தில் முன் பற்றிய கர்வக்கோட்டையை எல்லாம் கனவுக்கோட்டையாய் மாற்றிய அந்த அதிசய சிங்களத்தைக் கண்டு வியக்கிறேன்!

வழக்கம் போலவே உங்கள் எழுத்து வீச்சும், நடையும் மிக அருமை.

அமரன்
24-10-2010, 01:07 PM
நன்றி அனைவருக்கும்...


ஒற்றை வாக்கியத்தில் முன் பற்றிய கர்வக்கோட்டையை எல்லாம் கனவுக்கோட்டையாய் மாற்றிய அந்த அதிசய சிங்களத்தைக் கண்டு வியக்கிறேன்!

வழக்கம் போலவே உங்கள் எழுத்து வீச்சும், நடையும் மிக அருமை.

நான் செய்தவை சரி என்றோ பிழை என்றோ ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க வைத்தாள்.

மௌனமும், சிரிப்புமாக சொல்லாமெல் தவிர்த்தாள்.

தவிர, சித்தியின் பிள்ளைகள் வளர்ந்து என் தோளில் கைபோட விரும்பிய காலமது. விருப்பமும், பயமும், ஏக்கமும் கலந்த அவர்கள் பார்வைகளை சந்தித்தி சந்தித்து சரியத் துவங்கிய நேரமும்..

இதை எல்லாம் தெரிந்து அன்று சொன்னாள்.. அதை விட செத்துச் செத்துப் பிழைக்க எவர்தான் விரும்புவர்.

வாக்கியம் சொல்லப்பட்ட காலக்கட்டமும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது..

த.ஜார்ஜ்
24-10-2010, 04:27 PM
ஏனென்று தெரியாமலே சிலருக்கு நம்மேல் ஏன் இவ்வளவு அக்கறை என்று நானும் நினைத்திருக்கிறேன்,சிற்பி ஏன் தன்னை செதுக்குகிறான் என்று கேட்கும் கல்லைப்போல.

இளவயது நிகழ்சிகள் அசைபோட சுவையானது. மணல் தடத்தில் நம் கால் தடத்தைப்பார்த்த்து சந்தோசிப்பதைப்போல... தொடருங்கள்.. என்னவெல்லாம் நடந்தது என்று நாங்களும் தெரிந்து சுவைத்துக் கொள்கிறோம்.