PDA

View Full Version : ஒப்பந்தங்கள்...........



Nanban
13-11-2003, 08:59 AM
ஒப்பந்தங்கள்...........


உனக்கும் எனக்கும்
ஒரு ஒப்பந்தம் செய்தனர் -
ஒருவரைப் பிரியாமல்
ஒருவர் வாழ்வோம் என்று.

ஒப்பந்தம் இன்றும்
அமுலில் உண்டு.
நீயும் நானும்
ஒருவருக்குத் தொலைவாக
மற்றவர் ஆகிவிட்ட பொழுதிலும்....

ஒப்பந்தம்
உனக்குக் கொடுத்தது
சுதந்திரம் - ஊரெல்லாம்
நீ போய் வர.
ஒப்பந்தம்
எனக்குக் கொடுத்தது,
தந்திரமாய் -
திரைகள் இட்ட
ஜன்னல்களை......

என்றென்றும்
இவளைக் கைவிடாதிருப்பேன்
என்று தான் ஒப்பந்தம் செய்தாய்...
என்றாவது,
நிர்ப்பந்தம் இல்லாத
நிமிடங்களில்
பிடித்திருக்கிறாயா
என் கைகளை?

ஒப்பந்தத்தில்
ஒரு தவறு உண்டு -
ஒருத்தி கையைத் தான்
பிடிக்க வேண்டும் என்று
என்னைச் சார்ந்தவர்கள்
வலியுறுத்தவில்லை உன்னிடம்.

இப்பொழுது
உன்னிடம்
ஒரே ஒரு விண்ணப்பம் -
நம் ஒப்பந்த விதிகளை மீற
எனக்கும் ஆசை உள்ளது -
நம் ஒப்பந்த சாட்சியான
மஞ்சள் கயிற்றை
கட்டில் காலில்
கட்டி விட்டேன் -
மௌனமாக
நீ ஒப்பந்த விதிகளை
மீறுவதை
பார்த்துக் கொண்டே இருக்கும்......

puppy
13-11-2003, 03:18 PM
கட்டில் காலில்
கட்டி விட்டால்
இன்னும் ஆடுவான்......
அவனையே கட்டில் காலில்
கட்டிவிடு பெண்ணே.....அதுதான்
உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது....

நல்ல கவிதை நண்பன் அவர்களே......

gankrish
14-11-2003, 05:06 AM
நண்பா நறுக் கவிதை... இப்போது பல பெண்கள் கல்யாணம் ஆகியும் தனியாக தான் இருக்கிறார்கள். கட்டினவன் எங்கோ இருந்து கொண்டு சம்பாதித்து அனுப்புகிறான்.. இவள் இங்கே தனிமையில்... அங்கோ அவன் ?? !!!

rambal
14-11-2003, 05:59 AM
பெண்மை பற்றிய அருமையான கவிதை நண்பன் அவர்களே..

கவிதையில் ஒனக்கு என்று வருகிறது..
உனக்கு என்பதே சரி என்று நினைக்கிறேன்..
முழுக்கவிதையும் வட்டார வழக்கு மொழியில் இருந்தால் மட்டுமே
ஒனக்கு என்று வந்தது சரி ஆகும்..
ஆனால், ஒனக்கு என்று வட்டார மொழி வழக்கும் மற்ற வார்த்தைகள்
அனைத்தும் சுத்தமான தமிழிலும் வருவதால் இந்த இடத்தில் பிழையாகிறது...
தவறாக எடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளேன்..

Nanban
14-11-2003, 06:17 AM
நண்பா நறுக் கவிதை... இப்போது பல பெண்கள் கல்யாணம் ஆகியும் தனியாக தான் இருக்கிறார்கள். கட்டினவன் எங்கோ இருந்து கொண்டு சம்பாதித்து அனுப்புகிறான்.. இவள் இங்கே தனிமையில்... அங்கோ அவன் ?? !!!

வாழ்க்கையில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பிரிந்து இருப்பவர்களைப் பற்றி நான் குறை கூறவில்லை. இது, துரோகம் இழைக்கும் கணவனைப் பற்றியது மட்டுமே.....

நன்றி, கான்கிரீஷ்......

Nanban
14-11-2003, 06:21 AM
பெண்மை பற்றிய அருமையான கவிதை நண்பன் அவர்களே..

கவிதையில் ஒனக்கு என்று வருகிறது..
உனக்கு என்பதே சரி என்று நினைக்கிறேன்..
முழுக்கவிதையும் வட்டார வழக்கு மொழியில் இருந்தால் மட்டுமே
ஒனக்கு என்று வந்தது சரி ஆகும்..


நல்வரவு, நண்பரே,

மிகச் சரி தான். திருத்திவிட்டேன்........

அது சரி, பல நாட்கள் கழித்து மன்றம் வந்திருக்கிறீர்கள்........கவிதைகள் நிறைய வருமா? பலநாட்களாகக் காத்திருக்கிறோம்...........

இடையிலே பொறுக்க முடியாமல், உங்கள் பழைய கவிதைகள் ஒன்று இரண்டையும் கூட மறுபதிப்பும் செய்து விட்டேன்......

புதிய கவிதைகளோடு எப்பொழுது வருவீர்கள்.......?