PDA

View Full Version : குறளில் ஓர் ஐயம்

M.Jagadeesan
23-09-2010, 06:10 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.(72 )

இது அன்புடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற ஒருகுறள்.என்னுடைய ஐயமெல்லாம் "என்பு" என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்கு உரிய "அர்" விகுதியை ஏற்குமா என்பதுதான்.
"என்பும் உரிய பிறர்க்கு"-என்று இருந்தால் பொருத்தமாக இருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது.பல் இடுக்கிலே சிக்கிக்கொண்ட பாக்குபோல இந்த ஐயம் நெடுநாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றது.ஐயம் தீருமானால் மனம் அமைதி பெறும். யாராவது உதவுங்களேன்.

".

ஆதவா
24-09-2010, 02:58 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

இந்த குறளை அப்படியே எழுதினால்....

அன்பு இல்லாதவர் எல்லாரும் தமக்கு மட்டுமே உரியவர்கள், அன்பு உடையவர்கள்
எப்பொழுதும் பிறர்க்கு உடையவர்கள் (விளக்கவுரையில் சீர் மாற்றி படித்தால்)

அன்பே இல்லாதவன் சுயநலக்காரன்
அன்பு உடையவர்கள் எப்பொழுதும் பொதுநலக்காரர்கள்!!!

என்பும் (என்பு என்றால் எலும்பு மாத்திரமல்ல, எப்பொழுதும் என்றும் அர்த்தம் இருக்கிறதே..)
என்னைக் கேட்டால் அது சரிதான்... வேறு யாராவது மாற்றூ விளக்கம் சொல்லக் கூடும்.

குணமதி
24-09-2010, 05:04 PM
என்பும் உரியர் பிறர்க்கு - என்பதற்குத் தம் உடலையும் பிறருக்காகப் பயன்படுத்துவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

M.Jagadeesan
25-09-2010, 01:56 AM
என்பும் உரியர் பிறர்க்கு - என்பதற்குத் தம் உடலையும் பிறருக்காகப் பயன்படுத்துவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நன்றி. குணமதி அவர்களே.

M.Jagadeesan
25-09-2010, 02:06 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

இந்த குறளை அப்படியே எழுதினால்....

அன்பு இல்லாதவர் எல்லாரும் தமக்கு மட்டுமே உரியவர்கள், அன்பு உடையவர்கள்
எப்பொழுதும் பிறர்க்கு உடையவர்கள் (விளக்கவுரையில் சீர் மாற்றி படித்தால்)

அன்பே இல்லாதவன் சுயநலக்காரன்
அன்பு உடையவர்கள் எப்பொழுதும் பொதுநலக்காரர்கள்!!!

என்பும் (என்பு என்றால் எலும்பு மாத்திரமல்ல, எப்பொழுதும் என்றும் அர்த்தம் இருக்கிறதே..)
என்னைக் கேட்டால் அது சரிதான்... வேறு யாராவது மாற்றூ விளக்கம் சொல்லக் கூடும்.

நன்றி ஆதவா அவர்களே.

பாலகன்
25-09-2010, 04:17 AM
குறளில் ஐயம் கண்டு அதை தெளிவுபெற்ற உங்கள் தமிழ்பற்றை மனதார பாராட்டுகிறேன்

rajesh2008
25-09-2010, 09:55 AM
ஒருவேளை இதுதான் வழுவமைதியோ?

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:24 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.(72 )

இது அன்புடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற ஒருகுறள்.என்னுடைய ஐயமெல்லாம் "என்பு" என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்கு உரிய "அர்" விகுதியை ஏற்குமா என்பதுதான்.
"என்பும் உரிய பிறர்க்கு"-என்று இருந்தால் பொருத்தமாக இருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது.பல் இடுக்கிலே சிக்கிக்கொண்ட பாக்குபோல இந்த ஐயம் நெடுநாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றது.ஐயம் தீருமானால் மனம் அமைதி பெறும். யாராவது உதவுங்களேன்.

".

அஃறிணைச் சொல் உயர்திணை விகுதி ஏற்குமா என்பது அய்யம். உரியர் என்பதற்கு என்பு எழுவாய் அல்ல. அன்பிலார் தான் எழுவாய்.அன்பிலார் என்பும் தருவதற்கு உரியர் என்பது பொருள். என்பு இங்கே செயப்படுபொருள்.
ஓர் எடுத்துக்காட்டு:
அவர் படம் பார்த்தார். இதில் படம் என்ற அஃறிணைச் சொல் பார்த்தார் என்னும் உயர்திணை வினையுடன் முடிகிறதா? இல்லை. அவர் பார்த்தார் என இயைக்கவேண்டும்.இது போலவே குறளிலும் அன்பிலார் உரியர் என்று கொண்டுகூட்ட வேண்டும்.

தாமரை
27-09-2010, 05:59 AM
இதை அழகாச் சொல்லணும்னா ததீசி முனிவரைப் பற்றி இங்கே சொல்லவேண்டும்.
தியாகம் என்ற சொல்லுக்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

ததீசி முனிவர் தமக்கென்று ஆசிரமம் அமைத்துக்கொண்டு தம்முடைய மனைவியாராகிய லோபாமுத்ரையுடன் வாழ்ந்துவந்தார். அகத்தியரின் மனையின் பெயரும் லோபாமுத்ரைதான்.

பாற்கடலை கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலகர்கள் முதலான சர்வோமயமானவர்களும் தங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம்தான் ஒப்படைத்தனர். அவரோ பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். தன்னை நம்பி ஒப்படைக்கப்படு வதைக் கண்போல காக்க விரும்புபவரும்கூட... மிகச் சிறந்த ஆசார சீலர்! எனவேதான் அவரிடம் அவ்வளவு பேரும் தங்களது ஆயுதங்களைப் பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்தனர்.

ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில், தேவர்களுக்கு அந்த ஆயுதங்கள் எல்லாம் இனி தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது. ததீசி முனிவரிடம் வந்து அவற்றைத் திரும்பக் கேட்கவேயில்லை.
இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் யுத்தம் மூண்டது. விருத்திகாசுரன் துவஷ்டா எனும் அசுர குருவின் ஏவல் சக்தியாவான். ஒட்டுமொத்த ஆவேசத் தோடு விருத்திகாசுரன் இந்திரனை விரட்டி வந்தபோது, இந்திரன் ஓடி ஒளிந்து கொண்டான்.

சில காலம் தாமரைத் தண்டுக்குள் ஒரு சிறு வண்டுபோல தன்னை ஆக்கிக் கொண்டெல்லாம் ஒளிந்தான். விருத்திகாசுரனை வெற்றி கொள்ள வலுவான ஒரு ஆயுதம் அவனுக்குத் தேவைப் பட்டது. அவ்வேளையில் காக் கும் கடவுளாகிய மகாவிஷ்ணு தான் இந்திரனுக்கு வழிகாட்டி னார்.

வெகுநாள் வரை பாதுகாத்து வைத்திருந்த ததீசி முனிவர், யாரும் திரும்பி வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல் அவ்வளவையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி அப்படியே விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனது முதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து விட்டார். இதனால் அவரது முதுகெலும்பு உலகின் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அதுதான் விருத்திகாசுரனை அழிக்கும் என்பதை விஷ்ணுமூர்த்தி இந்திரனுக் குக் கூறி, ததீசியை போய்ப் பார்க்கும்படி கூறினார்.

இந்திரனும் சென்று பார்த்தான். தேவலோகத் தின் இழிநிலையையும், தான் தாமரைத் தண்டுக்குள் எல்லாம் ஒளிய நேர்ந்ததையும் கூறியவன், விஷ்ணுவின் வழிகாட்டுதலையும் கூறி முடித்திட, ததீசி முனிவர் அதைக் கேட்டு அக மகிழ்ந்து போனார்.

"இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு விஷயம்கூட காரணம் இல்லாமல் நடப்பதில்லை. தேவர்களின் ஆயுதத் தொகுப் பாக எனது முதுகெலும்பு மாறியபோதே நானும் இதனால் ஆகப்போகும் பயன் தான் என்ன என்று எனக்குள் ளேயே கேட்டுக் கொண்டேன். இப்போது எனக்குப் புரிகிறது.

இந்த உடம்பால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. பாம்பின் சட்டை, குருவிக் கூடு போன்றதே இந்த உடம்பும். மண்ணுக்கும் நெருப்புக்கும் போகப் போகும் இதனுள் இருக்கும் ஒரு முதுகெலும் பால் தேவர் சமுதாயமே உய்வு பெற்றிடும் என்றால், அதற்காக நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்' என்று பலவாறு மகிழ்ந்த ததீசி, அப்போதே தனது உயிரை நீக்கிக் கொண்டு உடம்பை இந்திரன் வசம் ஒப்புவிக்க, இந்திரனும் அந்த உடம்பைத் தீயிட்டுக் கொளுத்தி முதுகெலும்பை மட்டும் அழிவின்றிப் பெற்று, பின் அதை விஸ்வகர்மாவிடம் கொடுத்து வஜ்ராயுதமாக ஆக்கிக் கொண்டான். பின் விருத்திகாசுரனுடன் போருக்கும் சென்று, அவனைப் புறமுதுகிட்டு ஓடவும் வைத்தான்.

வஜ்ராயுதத்தின் பின்னே இப்படி ஒரு கதை உள்ளது. ஒருவேளை வள்ளுவர் இதையும் உள்ளே வைத்திருக்கலாம்.

இங்கே வள்ளுவர் பேசுவது எதைப் பற்றி? அன்பிலார், அன்புடையார் பற்றி..

அன்பிலார் எப்படிப்பட்டவர் "எல்லாம் தமக்குரியர்"

தாமே எல்லாவற்றிற்கும் உரியவர்கள் என எண்ணுவார்கள் அன்பில்லாதவர்கள்.. எனக்காக எல்லாம் எனக்காக .. ஆண்டவன் படைச்சான், எங்கிட்ட கொடுத்தான் அனுபவி இராஜான்னு அனுப்பி வச்சான்.. இப்படி அன்பிலார் எல்லாமே எனக்குதான் என நினைப்பவர்கள். அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்

அன்புடையவர், தங்கள் உடல் உறுப்புகளைக் கூட பிறர்க்கு உரிமையாய் நினைப்பார்கள். ததீசி கதையைப் பார்த்தீர்கள் இல்லையா?

அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு, தமது எலும்புகள் கூட பிறர்க்கு பயன் தரவேண்டும் என எண்ணுபவர்கள்.

அன்பிலார் யார் அன்புடையார் யார் என உயதிணை பற்றிப் பாடியமையால் உரியர் என விகுதி வந்தது.

குழப்பத்திற்கான காரணம் "அன்புடையார் என்பு" என்று படித்ததால். அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு எனப் படித்தல் வேண்டும்.

M.Jagadeesan
27-09-2010, 08:54 AM
குறளில் ஐயம் கண்டு அதை தெளிவுபெற்ற உங்கள் தமிழ்பற்றை மனதார பாராட்டுகிறேன்

நன்றி.

M.Jagadeesan
27-09-2010, 09:13 AM
அஃறிணைச் சொல் உயர்திணை விகுதி ஏற்குமா என்பது அய்யம். உரியர் என்பதற்கு என்பு எழுவாய் அல்ல. அன்பிலார் தான் எழுவாய்.அன்பிலார் என்பும் தருவதற்கு உரியர் என்பது பொருள். என்பு இங்கே செயப்படுபொருள்.
ஓர் எடுத்துக்காட்டு:
அவர் படம் பார்த்தார். இதில் படம் என்ற அஃறிணைச் சொல் பார்த்தார் என்னும் உயர்திணை வினையுடன் முடிகிறதா? இல்லை. அவர் பார்த்தார் என இயைக்கவேண்டும்.இது போலவே குறளிலும் அன்பிலார் உரியர் என்று கொண்டுகூட்ட வேண்டும்.

நன்றி. தங்களுடைய விளக்கத்தில் "அன்புடையார்' என்று எழுதுவதற்குப் பதிலாக "அன்பிலார்' என்று எழுதியுள்ளீர்கள்.
"அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு" -என்ற பாடமே தெளிவான பொருள் தருகிறது.அன்பே வடிவான புத்தர் பெருமானின் புனிதப்பல் சிங்களத்தீவினிலே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதே தக்க சான்று.

தீபா
27-09-2010, 09:27 AM
இதை அழகாச் சொல்லணும்னா ததீசி முனிவரைப் பற்றி இங்கே சொல்லவேண்டும்.
தியாகம் என்ற சொல்லுக்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

ஓ, இப்படித்தான் வஜ்ராயிதம் உருவாச்சோ?
பகிர்வுக்கு நன்றிங்க சார் :icon_b:

சொ.ஞானசம்பந்தன்
29-09-2010, 04:59 AM
நன்றி. தங்களுடைய விளக்கத்தில் "அன்புடையார்' என்று எழுதுவதற்குப் பதிலாக "அன்பிலார்' என்று எழுதியுள்ளீர்கள்.
"அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு" -என்ற பாடமே தெளிவான பொருள் தருகிறது.அன்பே வடிவான புத்தர் பெருமானின் புனிதப்பல் சிங்களத்தீவினிலே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதே தக்க சான்று.

ஆம். அன்புடையார் என்பதே சரி.