PDA

View Full Version : தினமணி தலையங்கம்: பெற்றதுதான் பாவமா?



nambi
20-09-2010, 05:39 PM
இடைக்காலத்தடை என்பது தீர்ப்பு அல்லதான். மேல் முறையீடு, உயர் நீதிமன்ற பெஞ்சின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் என்று நியாயம் கேட்டு நெடும்பயணம் போக வழிகள் ஏராளம் இருக்கின்றன. ஆனாலும், உடனடியான பாதிப்புகள் ஏற்பட இருக்கின்றனவே? இடைக்கால இடைஞ்சல்களைச் சந்தித்தாக வேண்டுமே என்கிற கவலை, சட்டத்தை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு விவாதிக்கும் நடைமுறை நீதிமன்றங்களுக்கு இல்லாமல் போனாலும், தீர்ப்புகளின் சாதக - பாதகங்களை விவாதிக்கும் உரிமையுள்ள மக்கள் மன்றத்துக்கும் இல்லாமல் இருந்தால் எப்படி?

÷பல தனியார் பள்ளிகள், தங்களது கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொள்ளாமல் மனம்போன போக்கில் கல்விக்கட்டணம் வசூலித்துவரும் அவலம் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றது. குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வி படித்தால்தான் அவர்களுக்கு வருங்காலம் என்று கருதும் பெற்றோர்கள், தங்களது வசதிக்கும் மீறிய பள்ளிக் கட்டணங்களைச் செலுத்தி குழந்தைகளைப் படிக்கவைக்க நினைக்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் அரசின் மானியம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் தரம் குறைந்துவருகிறது என்கிற எண்ணத்தால் உந்தப்பட்டு, தனியார் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் என்கிற மாயையைப் பெற்றோர்கள் வளர்த்துக் கொள்வதும் இதற்குக் காரணம்.

÷தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டப்படமாட்டாதா என்று ஏங்கிய பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பல பள்ளிக்கூடங்கள், பெற்றோர்கள் கடன்வாங்கி வழங்கிய நன்கொடைகளை முதலாகக் கொண்டு வளர்ந்தவைதான். பல தனியார் பள்ளிக்கூடக் கட்டடச் செங்கல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெற்றோரின் கண்ணீர்க் கதையை வாயிருந்தால் விவரிக்கும்.

÷கட்சி பேதமில்லாமல் பல அரசியல்வாதிகளும் அவர்களது உறவினர்களும் பள்ளித் தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொழித்துக்கொண்டிருந்த காரணத்தால், அரசும் இந்தக் கட்டணக் கொள்ளையைக் கண்டும் காணாமலும் பல ஆண்டுகளாகத் தொடரவிட்டது என்பதுதான் நிதர்சன உண்மை.

÷மக்களின் மனதில் குமுறிக்கொண்டிருந்த கட்டணக் கொள்ளை பற்றிய கோபத்துக்கு வடிகாலாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை 2009 டிசம்பரில் அமைத்து, பல பெற்றோர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. நீதிபதி கோவிந்தராஜன் குழுவும், பள்ளிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் விகிதம், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய பட்டியல் ஒன்றை எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பியது. இந்தக் கேள்விப் பட்டியலுக்குத் தமிழகத்தில் உள்ள 10,233 தனியார் பள்ளிகள் பதிலளித்திருந்தன.

÷அந்தந்தப் பள்ளிகள் அளித்த விவரங்களின் அடிப்படையில் நீதிபதி கோவிந்தராஜன் குழு 10,233 பள்ளிகளுக்குக் கட்டண நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. 701 பள்ளிகள் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. அந்தப் பள்ளிகளுக்கு ஒரு பொதுவான கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்தது. கட்டண நிர்ணயம் அறிவிக்கப்பட்டவுடன், 6,400 பள்ளிகள் இந்த நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தன. ஏறத்தாழ 4,000 பள்ளிகள் கட்டண நிர்ணயத்தை ஏற்றுக்கொண்டன.

÷மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்து வெளியிடக் காலதாமதமாகும் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலித்துப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் குழு கடந்த மாதம் அறிவித்தது. இப்போது எல்லா பள்ளிகளும் மாணவர் சேர்க்கை முடித்து செயல்பட்டு வருகின்றன.

÷வேடிக்கை என்னவென்றால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை 10,943 தனியார் பள்ளிகளில் பாதிதான் வசூலிக்கின்றன. மற்ற பள்ளிகள் மீறியுள்ளன. பள்ளிக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் குழந்தைக்குப் பேருந்துக் கட்டணம் வசூலித்த கேலிக்கூத்துவரை அரங்கேறியிருக்கிறது.

÷10,943 பள்ளிகளின் மனுக்களை 6 பேர் கொண்ட நீதிபதி கோவிந்தராஜன் குழு ஒரு மாதத்துக்குள் பரிசீலித்திருக்க முடியாது என்கிற காரணத்தால், புதிய கட்டணத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாம் தலைவணங்குவோம். அதே நேரத்தில், இந்தத் தீர்ப்பால் பெற்றோர்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது.

÷நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை, கடனை வாங்கிக் கட்டி, குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து சற்று மூச்சுவிட இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் தலையில் சம்மட்டியாக வந்து விழுந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. அதிகப்படியான கட்டணத்தைக் கட்டினால்தான் பள்ளியில் தொடர முடியும் என்பார்கள் கல்வித் தொழிற்சாலை உரிமையாளர்கள். பெற்றோர்களால் தங்களின் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றவும் முடியாது. அதிகப்படியான பணத்தைப் புரட்டவும் முடியாது. அவர்கள் என்னதான் செய்யப் போகிறார்களோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

÷பள்ளிகள், அதிகப்படியான கட்டணம் வசூலித்தாலும் அது இறுதித் தீர்ப்புக்கும் உள்பட்டது என்றும், அடுத்த விசாரணை நவம்பர் 29-ம் தேதி நடைபெறும் என்றும், நீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் கட்டாயமாக வசூலிக்கப்படும் கட்டணம் திருப்பித் தரப்படவா போகிறது?

÷அதெல்லாம் போகட்டும். நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டணப் பரிந்துரையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்குத்தானே கட்டண நிர்ணயத்துக்குத் தடை வழங்கப்பட்டிருக்க வேண்டும். கட்டண நிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட பள்ளிகளும் அல்லவா இப்போது பெற்றோரைக் கசக்கிப் பிழியத் தயாராகும். பொதுமக்களின் அவலத்தை, பெற்றோர்களின் தர்மசங்கடத்தைப் புரிந்து செயல்பட தமிழகக் கல்வித் துறையும், அரசும் தயாராகாவிட்டால், அதன் விளைவுகள் நிச்சயமாகச் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

÷வீணாகும் தானியங்களை இலவசமாகக் கொடுங்கள் என்று சொல்லும் நீதியின் நல்லிரக்கம், கல்விக்கட்டணக் கொள்ளையில் மனம் இரங்காமல் சட்டத்தின் உயிரற்ற வார்த்தைகளில் நல்லடக்கமாகிவிட்டதே... நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதில் அரசு என்ன செய்யப்போகிறது? இதுதான் செய்வதறியாது கையைப்பிசைந்து நின்றுகொண்டிருக்கும் பெற்றோரும், தங்களது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் விழிக்கும் குழந்தைகளும் கேட்கும் கேள்வி

....தினமணி 16.09.2010