PDA

View Full Version : இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?



Ravee
04-09-2010, 05:58 AM
இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?

நன்றி : வெப்துனியா


http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1009/03/images/img1100903041_1_2.jpg


தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது.
இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார்.

இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீ்ண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக நினைக்கிறது என்பதும் தமிழர்களுக்கோ அல்லது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரியாதது அல்ல.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் (இதன் மூலம்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது) முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம் என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே அதுதான் வேடிக்கையாகவுள்ளது!

இரகசியமாக செய்யப்பட்ட ஒப்பந்தம்!

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (disputed island) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.

கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது, அப்போது பேசிய தமிழக உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.மூக்கையாத் தேவர், விஸ்வநாதன் ஆகியோர் கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிப் பேசினர். ஆனால், அதற்கு உரிய பதில் தராமல் இந்திரா காந்தி அரசு தட்டிக் கழித்தது.


ஏனென்றால் கச்சத் தீவு நமது நாட்டின் ஒரு பகுதி என்றால், அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் வேறொரு நாட்டிற்குத் தாரை வார்த்திட முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்க்கவே - அதாவது இரகசியமாக வைத்து ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிடவதற்காகவே - கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்டத் தீவு என்று மத்திய அரசு நிலையெடுத்தது. (இத்றகான ஒத்திகை 1956ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்திருப்பது பின்னர் தெரிந்து வரலாறு).

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இரகசியமாக பேசி, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ‘முறையாக செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்’ என்கிறார் அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா!

அதுமட்டுமல்ல, எல்லைக் கோடு வரைவில் கூட ஒரு மோசடி செய்துதான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்கரைகளில் இருந்து சம தூரத்தில் புள்ளிகளை வைத்து, அந்தப் புள்ளிகை இணைத்து கோடு போட்டு எல்லை நிர்ணயம் செய்து கொள்வது என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு கச்சத் தீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு ஏற்றார்போல் கோட்டை இழுத்து போட்டார்கள் என்று இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா கூறியுள்ளார்! இப்படியெல்லாம் மோசடி செய்து கொடுக்கப்பட்டதுதான் கச்சத் தீவு.

கச்சத் தீவு அரபிக் கடல் பகுதியில் இருந்து, அங்கு கர்நாடக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்திருந்தால், இப்படி பேசுவாரா கிருஷ்ணா? தமிழன் உரிமை இருந்தால் என்ன, போனால் என்ன?


பாதுகாப்புக் காரணத்திற்காகவே கொடுக்கப்பட்டது



1971ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடைபெற்ற போரின்போது, தனது விமான தளங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடந்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அப்படிப்பட்ட நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இலங்கையை நட்பு நாடாக்கிக் கொள்ள கச்சத் தீவை கொடுத்து இந்த ஒப்பந்தத்தை இந்திரா காந்தி போட்டதாகக் கூறினார்கள். இதுதான் அதற்கான அடிப்படை என்றால், அதே காரணத்தைக் கூறி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று தமிழ்நாட்டின் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை டெல்லியால் பதில் தர முடியவில்லை.

அதற்கு பதிலளித்தால், அது ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய கட்டாயம் டெல்லிக்கு உருவாக்கிவிடும். 1962 போரில் சீன ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியையும், இப்போது சீனா கேட்கும் அருணாச்சல பிரதேசத்தையும் தூக்கி கொடுத்துவிட்டு சீனாவின் நட்பைப் பெறலாமே? உலகின் மிக உயரமான போர்க்களம் என்றழைக்கப்படும் சியாச்சின் பனி மலைப் பகுதியை பாகிஸ்தானிற்கு கொடுத்துவிட்டு, அதோடு சேர்த்து ஜம்மு-காஷ்மீரையும் கொடுத்துவிட்டு அந்நாட்டின் நட்புறவையும் பெறலாமே என்றெல்லாம் கேள்வி எழுமல்லவா? அதனால்தான் டெல்லி பதில் கூறவில்லை.

அதுமட்டுமல்ல, 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவை ஒட்டிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது என்று அன்றைய அயலுறவு அமைச்சர் சுவரண் சிங் கூறினார். அந்த உரிமையை 1976ஆம் ஆண்டு இந்திய அயலுறவுச் செயலரும், இலங்கை அயலுறவுச் செயலரும் செய்துகொண்ட கடித பரிமாற்றத்தில் டெல்லி அரசு விட்டுத் தந்துவிட்டது. இதைத்தான் திமுக உறுப்பினர் பாலுவும், அஇஅதிமுக உறுப்பினர் தம்பித்துரையும் கேள்வியாக எழுப்பி, கச்சத் தீவை கொடுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தமிழக மீனவர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து அனுபவித்துவந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை அவர்களின் சம்மதமின்றியும், தமிழக அரசின் ஒப்புதலின்றியும் எவ்வாறு விட்டுக் கொடுத்தீர்கள் என்பதற்கு கிருஷ்ணாவிடம் பதில் இல்லை. ஆனால் ‘முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம்’ என்று கூறுகிறார்.

இலங்கை நட்பு நாடா?

“இலங்கை நட்பு நாடென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார். எப்படி அது நட்பு நாடென்று விளக்கவில்லை!


இந்தியாவிற்கும் சீனாவிற்கு எல்லைப் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகள் உள்ளன. இன்றளவும் சீனத்துடனான உறவு கேள்விக்குறியதாகத்தான் இருக்கிறது. அந்த சீனத்துடன் சிறிலங்க அரசு நட்பு பாராட்டி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு இந்தியா உதவியிருக்காவிட்டால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சவும், அவருடைய மந்திரி பட்டாளங்களும் கூறுகின்றன. ஆனால் தங்களுடைய நட்பு நாடு என்று அவர்கள் சீனாவைத்தானே குறிப்பிடுகிறார்கள்? இந்தியா எனது சகோதர நாடு, அதாவது பங்காளி என்கிறார் ராஜபக்ச!

இந்தியப் பெருங்கடலில் தனது கட்டுப்பாட்டை கொண்டுவர நீண்ட காலம் முயற்சித்த சீன நாட்டிற்கு அம்மன்தோட்டத்தில் (சிங்கள மொழியில் ஹம்பன்தோட்டா) துறைமுகம் வசதியையும் அளித்து, அதனை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளது சிறிலங்க அரசு. இது இந்தியாவிற்கு ஏற்புடையதா என்ன? இப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தவுடன் இந்தியாவின் கடற்படை எந்த அளவிற்கு பதற்றப்பட்டது என்பது தெரியாதா?

போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கொழும்பு சென்ற அன்றைய அயலுறவு அமைச்சரிடம், வடக்கின் மேம்பாட்டுப் பணிகள் முழுவதும் இந்தியாவிற்கு்ததான் வழங்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். இப்போது நடப்பது என்ன? அங்குள்ள உள்கட்டமைப்புப் பணிகள் பல சீன அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி (ஜெயலலிதா அறிக்கை விடவில்லையா?). முல்லைத் தீவு கடற்பகுதில் மீன் பிடி உரிமை சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு பாதுகாப்பா? அச்சுறுத்தலா? யாரை ஏமாற்றுகிறது டெல்லி அரசு?

இந்தியாவிற்கு பாகிஸ்தான் பகை நாடு, ஆனால் சிறிலங்காவிற்கு நட்பு நாடு! இதையும் டெல்லி ஏற்கிறதா? அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது இலங்கைக்கு? இன்றைக்கு இந்தியாவிடன் உள்ள அதி நவீன ஏவுகணைகள் இலங்கைப் பகுதியில் இருந்து எழும் அச்சுறுத்தலை நொடியில் சிதைக்க வல்லனவாயிற்றே? டீகோ கார்சியா வரை தாக்கும் திறன் கொண்ட இந்தியாவிற்கு இலங்கை அச்சுறுத்தலாகிவிடுமா?

எல்லாம் ஏமாற்றுச் சொற்கள். இந்தியாவின் பெரு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தங்கள் வணிக நலனை பெருக்கிக் கொள்ள ராஜபக்ச அரசு அனுமதிக்கிறது. அதை வைத்து அந்நாட்டை இந்தியாவின் நட்பு நாடு என்று கிருஷ்ணா கூறுகிறாரோ? அப்படியென்றால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

ஏனென்றால் பெரு நிறுவனங்களின் நலனைத்தானே நாட்டு நலனாகவே பார்க்கிறது மன்மோகன் சிங் அரசு. இல்லையென்றால் பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டிவிட்டு, அங்குள்ள வளங்களை வேதாந்தா, டாட்டா, ஜிண்டால், பாஸ்கோ என்று பெரு நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா? எனவே இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடுதான்.

Narathar
04-09-2010, 10:22 AM
மற்றுமொரு இணையதள செய்தியை இங்கு பதிந்திருக்கின்ரீர்கள். அதனால் கட்டுரையாளர் நீங்கள் என்ற வகையில் உங்களுக்கு பதில் கூற முடியாது. என்றாலும் இக்கட்டுரையில் இருக்கும் சில விடயஙளுக்கு பதில் கூற வேண்டுமென்று நான் சார்ந்த என் நாட்டுப்பற்று என்னை தூண்டுகின்றது....

முதலில் இந்த கட்டுரையின் தலைப்பே அபத்தமானது என்று நான் நினைக்கின்றேன்.... இலங்கை நட்பு நாடா என்பதுடன் நிறுத்திக்கொண்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும் "அச்சுறுத்தலா?" என்று கேட்பது அபத்தமானது.

பிராந்திய வல்லரசாகத்திகழும் இந்தியாவுக்கு இலங்கை எப்படி அச்சுறுத்தலாக இருக்க முடியும்? உங்களது உணர்ச்சி பூர்வமான கருத்துக்களையும் அரசியல் வாதிலகள் தங்கள் இலாபம் கருதி சொல்பவற்றையெல்லாம் கேட்டுக்கேட்டு நம் இந்தியத்தமிழர்கள் எண்ணத்தலைப்பட்டுள்ளார்கள். அந்த மாயவலைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்........

பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு இருப்பது போன்றோ அன்றி சைனாவுடன் இந்தியாவுக்கு இருப்பது போன்றோ எல்லைப்பிரச்சனைகளோ அன்றி வேறு பிணக்குகளோ இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்ததே இல்லை... கச்சத்தீவு கூட இந்தக்கட்டுரையில் கூரப்பட்டிருப்பது போல இலங்கை சீனாவின் பக்கம் சாயாமல் இருப்பதற்கு "அன்பளிப்பாக" அல்லது நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலைக்கு இலங்கையை ஆளாக்கும் நோக்கில் இந்திய அரசால் தரப்பட்டதே அன்றி வேறில்லை... அது இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த பிரச்சனை அதற்கு அவர்கள் ஒரு இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டியிருக்கின்றார்கள். அதற்காக பிராந்திய நலன் பேசி உங்கள் நாட்டு நலன் சார்ந்த பிரச்சனையை புரம் தள்ள வேண்டாம்.

கச்சத்தீவு என்ன சகல வளம்களும் கொளிக்கும் சொர்க்க பூமியா? அது ஒரு வெற்றுத்தீவு மட்டுமே.... இலங்கையின் பாதுகாப்பினை ஸ்திரப்படுத்திக்கொள்ள அது உதவியாக இருக்கின்றதே தவிர கச்சத்தீவால் இலங்கைக்கு வேறு எந்த நலனும் இல்லை......

இந்த கச்சத்தீவுப்பிரச்சனை ஏன்? எப்படி? இவ்வளவு அரசியல் மயமாக்கப்பட்டது என்று சற்று ஆழமாகப்பார்த்தால் தான் இதை அரசியலாக்குபவர்களது உள் நோக்கம் புரியும்.. எனவே எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் கட்டுப்படாமல் நடு நிலையாக கீழே நான் சொல்லும் விடயங்களை வாசித்துப்பாருங்கள் உங்களுக்கே யதார்த்தம் புலப்படும்.


இலங்கையில் ஜூலைக்கலவரம் என்னும் எண்பத்துமூன்றாம் ஆண்டு கலவரம் நடக்கும் வரை இந்த கச்சத்தீவு இந்திய மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது இல்லை... இன்னும் சொல்லப்போனால் "கச்சத்தீவில்" வந்து இரு நாட்டு மீனவர்களும் ஒற்றுமையாக திருவிழா கொண்டாடியிருக்கின்றார்கள். இன்று வரை அந்த திருவிழாக்காலத்துக்கு மட்டும் மீனவர்கள் கச்சத்தீவுப்பகுதிக்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள் என்று தான் நான் நினைக்கின்றேன்.

இலங்கையில் இனப்பிரச்சனை உக்கிரமடைந்து வடக்கில் ஆயுதப்போரட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரம் தென்னிலங்கையிலிருந்து வடக்குகுக்கு செல்லும் சகல வினியோகங்களிலும் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் இருந்தது. சில வேளைகளில் வினியோகம் முற்றாகவே தடைப்பட்டது. அப்போதெல்லாம் வடக்கு வாழ் மக்களுக்கு அத்தியாவசியப்பொருள்கள் வினியோகம் தென்னிந்திய கடல் மார்க்கமாகவே வந்து சென்றது. ஆனால் நம்மவர்கள் அத்தியாவசியப்பொருள்களோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆயுதங்கள் வெடி பொருள்கள் என்று இந்த கடல் மார்க்கமாக எடுத்துவர முற்பட்ட போதுதான் பிரச்சனை ஆரம்பமானது. தென்னக மீனவர்களுக்கும் இலங்கைக்கு பொருள் வினியோகம் செய்வது ஒரு இலாபகரமான தொழிலாக மாறியது. பெற்றொல் டீசல் மண்ணெண்ணெய் என்று கொள்ளை இலாபம் சம்பாதித்தார்கள் இந்திய மீனவர்கள்.

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் தன் கண் முன் நடக்கும் போது எந்த நாடும் கை கட்டிப்பார்த்தொக்கொண்டி இராது... அந்த வகையில் அன்று தொட்டு கடலோரப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது இந்திய மீனவர்களது வருகையும் மட்டுப்படுத்தப்பட்டது.... என்றாலும் இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது காரணம் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் ஆயுதப்போராளிகளின் அத்தியாவசியத்தேவை......

இந்த நிலையில் எல்லை தாண்டிய மீனவர்கள் தண்டிக்கப்பட்டபோது அது அரசியலாக்கப்பட்டது. உண்மையில் மீனவர்கள் இந்த எல்லையை பொருள் வினியோகத்துக்காக மட்டுமன்றி மீன் பிடிப்பதற்காகவும் தாண்டுவதுண்டு... ஏனெனில் மீன் வளம் அதிகம் இருப்பது இந்த எல்லைப்பகுதியில் தான். அதற்கும் காரணம் இருக்கின்றது.

யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டதால் இலங்கை மீனவர்களால் கடல் தொழில் செய்ய முடியவில்லை, பாதுகாப்புக்கெடுபிடி... அதனால் இலங்கை வடக்கு மீன் வளத்தை அள்ளிச்செல்வதும் இந்த மீனவர்களது நோக்கமாக இருந்தது.... ஆனால் இலங்கை தமிழ் தரப்புக்கள் இதுசார்பாக மௌனம் காத்தார்கள் காரணம் யாருக்கும் பயனற்றுப்போவதை யாராவது பாவிக்கட்டுமே என்ற மனப்பான்மையும் இவர்களால் தானே நமக்கும் சில வினியோக வசதிகள் கிடக்கின்றது என்று கண்டும் காணாது இருந்து விட்டார்கள்.... ஆனால் சில நேரங்களில் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் நடுக்கடலில் சண்டைகளும் நடந்தது உண்டு...

அது போன்று இந்த மீனவர்களது போக்குவரத்தால் பலனடைந்தவர்கள் மீனவர்கள் தாக்கப்படும் போது அதை அரசிலாக்கினார்கள். இவர்களோடு தொடர்பிலிருந்த சில தமிழ் அரசியல் தலைமைகளும் இதை பெரிது படுத்தி இதை ஒரு தேசியப்பிரச்சனை போன்று பூதாகரமாக்கினார்கள். ஆனால் நிதர்சனத்தில் இதன் மூலம் பலனடைந்த ஒரு சிலர் ஆடும் நாடகம் இது என்பது பலருக்கு புலப்படவில்லை......

ஒரு நாட்டு எல்லையென்று ஒன்றிருந்தால் அந்த எல்லையை தாண்டி வருபவர்களை அவர்கள் மீனவர்களேயாகவிருந்தாலும் தடுக்கவோ விசாரிக்கவோ அந்தந்த நாட்டுக்கு உரிமை இருக்கின்றது.

மீனவர்கள் தங்களுக்கு உரிய சட்டரீதியிலான பிரதேசங்களில் தங்களது மீன்பிடியை மட்டுப்படுத்திக்கொள்வார்களானால் இந்தப்பிரச்சனைக்கே இடமில்லை

தமிழ் நாடு விரும்பியோ விரும்பாமலோ கச்சதீவு இலங்கைக்கு என்றாகி விட்ட பிறகு அப்பகுதிக்கு செல்லும் மீனவர்களை தடுக்காது கச்சத்தீவுக்கு உரிமை கோண்டாடுவதானது வேடிக்கையானதும் விசித்திரமானதாகவுமே இருக்கின்றது...

உண்மையில் தமிழக அரசு சட்டரீதியாக கச்சத்தீவை மீளப்பெற முயற்சிக்க வேண்டுமேயன்றி இவ்வாரான சில்லரை அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து...

இப்பதிவின் மூலம் யார்மனமாவது புண் பட்டிருப்பின் எனது மனவருஇத்தங்களை தெரிவிக்கின்றேன்... என்றாலும் உண்மைகள் எப்போதும் கசப்பாகவே இருக்கும்

வியாசன்
04-09-2010, 11:34 AM
ஐயா நாரதரே உங்கள் வாதம் ஒரு பக்க சார்பானது.

எரிபொருள் கடத்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் முன்பும்
இந்தியாவிலிருந்து கடத்தல் நடைபெற்றதுதான் புடவை மற்றும்
இலங்கையில் விலையான பொருட்கள் கடத்தபட்டு வந்தது

Ravee
04-09-2010, 12:21 PM
எப்போதும் கலகத்தை நாரதர் ( புராண நாரதர்) ஆரம்பித்து வைப்பார், இங்கு நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் போலும். எங்களை போல விஷயம் அதிகம் தெரியாத தமிழர்களுக்கு உங்கள் விவாதம் உதவும். பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவரும் என்ற நோக்கில் மட்டுமே இதை நான் பதிவிட்டு இருக்கிறேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது நான் எழுதிய கட்டுரை கிடையாது என்றாலும் இந்த விஷயம் எனக்கு சரியாக புரியாத ஒன்று :confused: . எனவே , எல்லோருடைய கருத்தையும் வரவேற்கிறேன்

Narathar
04-09-2010, 12:43 PM
ஐயா நாரதரே உங்கள் வாதம் ஒரு பக்க சார்பானது. பல கருத்துக்கள் விசமத்தனமானது.

1 எரிபொருள் கடத்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் முன்பும்
இந்தியாவிலிருந்து கடத்தல் நடைபெற்றதுதான் புடவை மற்றும்
இலங்கையில் விலையான பொருட்கள் கடத்தபட்டு வந்தது

அதைத்தான் நானும் கூறினேன்.....
வனிகப்பொருள்கள் மட்டுமன்றி எப்போது ஆயுதங்களும் போர்த்தளபாடங்களும் வர ஆரம்பித்ததோ அப்போதுதான் இந்தப்பிரச்சனையே ஆரம்பமானது என்றுதான் நானும் கூறியிருக்கின்றேன்,
உண்மையை உள்ளது உள்ளபடி எழுதினால் அதை பக்கச்சார்பானது என்பீர்கள் விசமத்தனமானது என்பீர்கள்.....

ஒரு பக்கம் சார்ந்து எழுதினால் அதை நடு நிலமை என்பீர்கள்.. இதைத்தானே கடந்த முப்பது வருடங்களாக செய்து நமது மக்களை முல்லிவாய்க்கால் வரை கொண்டுவந்து அநாதரவாக விட்டவர்கள் செய்தார்கள்???

அதைத்தான் இப்போது இடத்தை கூட சொல்ல மறுக்கும் பலர் இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்...

வெற்றுப்பிரதேசவாதம் பேசாமல் தேசிய நலனோடு பிரச்சனைகளை உற்று நோக்கினால் அவர்களது கண்கள் திறபடும்.....

ஆனால் இறுக்கி மூடிக்கொண்டல்லவா இருக்கின்றீர்கள்


2 மீனவர்கள் தாக்கப்பட்டால் அதை அரசியலாக்கினார்கள் என்கின்றீர்கள்
இலங்கை கடற்படையால் இன்றும் தாக்கபடுகின்றார்கள் அதையாரும் கேட்க
கூடாதா? அரசியல்வாதி தன் மக்களுக்காக கேட்டால் உடனே அரசியல்
என்கின்றீர்கள் அந்த உரிமை அவர்களுக்கு இல்லையா?


எல்லையைத்தாண்டி வரும் மீனவர்கள் தான் தாக்கப்படுகின்றார்கள்... இந்திய எல்லைக்குள் சென்று இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குவதில்லை.......அப்படிச்செய்தால் இந்திய அரசுதான் சும்மா இருந்துவிடுமா?

எல்லை தாண்டி வரும் மீனவர்களை அரசியல் வாதிகள் கண்டிக்க வேண்டுமா? இல்லை ஒரு இறைமையுள்ள நாடு அதன் எல்லைப்பகுதியில் தனது பாதுகாப்புக்காக ஊடுறுவல்களை தடுப்பதற்காக தடுப்பதற்காக தாக்குவதை கDஇக்க வேண்டுமா???

இதில் எது சட்ட ரீதியானது??

எல்லையில் அத்து மீறுவதா?
இல்லை நாட்டை பாதுகாப்பதா?

அப்படியானால் பொறுப்பான அரசியல் வாதிகளது பணி என்ன?? மீனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றால் கச்சத்திவை சட்டரீதியாக பெற்றுக்கொடுக்க வேண்டிய வழி வகைகளையல்லவா அவர்கள் செய்ய வேண்டும்????

அமரன்
04-09-2010, 09:30 PM
அன்பர்களே..

கண்ணியமாகக் கருத்தாடுங்கள்.

நன்றி

-பொறுப்பாளர்

அமரன்
04-09-2010, 09:32 PM
என்னதான் சொல்லுங்க நாரதரே!

மீனவர்களைச் சுட்டுக் கொல்லுவதும், அடித்துத் துன்புறுத்துவதும் ஞாயப்படுத்த முடியாதவை. செய்பவனும் குற்றவாளி. தீர்க்கமான நடவடிக்கை எடுக்காதவனும் குற்றவாளி.

Narathar
05-09-2010, 06:06 AM
நான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையோ அன்றி மீனவர்கள் அடித்துத்துன்புருத்தப்படுவதையோ நியாயப்படுத்த வில்லை....

இவையெல்லாம் ஏன் நடக்கின்றது என்பதன் மறு பக்கத்தைத்தான் கூறினேன்.......

இந்தப்பிரச்சனையால் எனது தாய் நாட்டின் பெயர் கலங்கப்படுவதால் அது சார்பான உண்மை நிலையை ஒரு இலங்கையராக விளக்கினேன்....

அது சிலருக்கு பக்கச்சார்பாகப்படலாம்......

இந்தியத்தமிழர்கள் நான் முதலில் இந்தியன் அதன் பின்னர் தான் தமிழன் என்று சொல்வதை நாம் மெச்சுகின்றோமே? ஏன் இலங்கைத்தமிழர்களால் அப்படி இருக்க முடிவதில்லை? முதலில் நாம் இலங்கையராக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் தான் நாம் சார்ந்த இனக்குழுமத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்

நான் அப்படித்தான் சிந்திக்கின்றேன்.......

அமரன்
05-09-2010, 09:13 AM
நண்பர்களே!

மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றி மட்டும் பேசுவோம்.

எல்லை தாண்டிய கருத்து வாதத்தைத் தவிர்ப்போம்.

நன்றி.

பொறுப்பாளர்

Nivas.T
05-09-2010, 09:45 AM
நண்பர்களே!

மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றி மட்டும் பேசுவோம்.

எல்லை தாண்டிய கருத்து வாதத்தைத் தவிர்ப்போம்.

நன்றி.

பொறுப்பாளர்

பிரச்சனை இவ்வாறு திசை மாற வேண்டாம், அமரன் சொல்வது போல் அதே நிலையில் தொடரட்டும்

அமரன்
05-09-2010, 10:35 AM
கச்சதீவை மீட்க வேணும் என்கிற கட்டுரையாளர், சில கார வகைகளைத் தொட்டிருக்கார். அவருக்கு தன் பத்தி பரபரப்பாகப் பேசப்படல் வேண்டும் என்ற கவலை. பத்திரிக்கையாளருக்கோ பத்திரிக்கை விற்பனை கூடாவிட்டாலும் பரவாயில்லை, குறையக்கூடாது என்ற நோக்கம்.எனவே அவர்கள் கார, மசாலாக்கள் சேர்க்கிறார்கள்.

ஆனால் நாங்கள் அப்படி இல்லை.

மீனவர்கள் தாக்குப்டுவதை தடுக்க வேண்டும். அதுக்கு இரு நாடுகளும் என்ன செய்ய வேண்டும்.

எல்லை தாண்டி வந்தால் தாக்குவது சரியில்ல. பிழைப்புக்காகத்தானே எல்லை தாண்டுகிறார்கள். சிண்டு முடியவா தாண்டுகிறார்கள்.

நாடுகளின் எல்லைகளில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். அதை கடலிலும் கடைப்பிடிக்கிறார்கள். அப்படி இருக்க மீனவர்கள் எப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

யாரோ தப்புச் செய்கிறார்கள்.. யாரோ தண்டிக்கப்படுகிறார்கள்.

சுகந்தப்ரீதன்
07-09-2010, 07:44 PM
யாரோ தப்புச் செய்கிறார்கள்.. யாரோ தண்டிக்கப்படுகிறார்கள்.
இதை சொல்வதற்க்கு என்ன தயக்கம்..?! தப்பு செய்வது இந்தியர்களும் இலங்கையர்களும்.. தண்டிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமே..!!
இந்த உண்மைக்கூட கசக்கத்தான் செய்கிறது..!!