PDA

View Full Version : தீ அணைத்தபோது........

கீதம்
03-09-2010, 02:13 AM
நல்ல உறக்கத்தின் மத்தியில் சட்டென்று விழித்துக்கொண்டேன். ஏதோ இனந்தெரியாத திகிலுணர்வு அடிவயிற்றைக் கவ்வியது. சிறுதுளி பெருவெள்ளமென வியர்வைத் துளிகள் திரண்டு ஓடின. அளவுகடந்த வெப்பத்தால் உடல் முழுவதும் தகித்தது. என்னவாயிற்று திடீரென?

அப்போதுதான் கவனித்தேன். மேற்கூரையில் தீப ஒளி! திருவண்ணாமலை தீபத்தை என் வீட்டுக்கூரையில் ஏற்றி வைத்தது யார்? சிதறிய தீப்பொறிகள் என் பொறியைத் தட்டி எழுப்பின. இல்லை....... அது தீப ஒளியில்லை... நெருப்பூ....பூவா? இல்லையில்லை.....தீ.......

ஐயோ! என் வீடு பற்றி எரிகிறது. எப்படியானது? புகை எச்சரிக்கைமணி என்னாயிற்று? ஊதுபத்தி கொளுத்தி வைத்தாலே ஊரைக்கூட்டுமே? பாட்டரி தீர்ந்திருக்குமோ? என் குழந்தைகள் அகிலும், ஆர்த்தியும் எங்கே? கெளதம் எங்கே?

அருகில் எவரையும் காணோம். எப்படி இது சாத்தியம்? என்னைத் தனியே தீத்தீவுக்குள் விட்டுவிட்டு அவர்கள் எல்லாரும் வெளியேறிவிட்டார்களா? ஏன் என்னை எவருமே எச்சரிக்கவில்லை?

நேற்றிரவு எனக்கும் கெளதமுக்கும் சிறு சச்சரவு வந்தது உண்மைதான். அதற்காக நான் செத்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துவிட்டாரா? இருக்காது. அவசரத்தில் குழந்தைகளை வாரிக்கொண்டு வெளியில் ஓடியிருந்திருப்பார். என்னை மீட்பதற்குள் தீ பரவியிருக்கும். அப்படிதானிருக்கும்.

சரி, இப்போது நான் எப்படி வெளியேறுவது? மரத்தாலான வீடு இது. தீ தன் செங்கரங்களால் வீட்டை முழுவதுமாய் வளைத்து ஆக்கிரமித்திருந்தது. பார்ப்பதற்கு அது மிகுந்த தாபத்துடன் தன் காதலியைத் தழுவிக்கொண்டிருப்பது போலிருந்தது. காற்று மேலும் மேலும் வீசி அதைத் தீண்டியும் தூண்டியும் விளையாடிக்கொண்டிருந்தது.

தீ காதலன் என்றால், காதலி காற்றா? வீடா? தீயின் ஆக்ரோஷ அணைப்புக்குப் பிறகு இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த இடத்தில் எதுவுமே மிஞ்சப்போவதில்லை. அப்படியாயின் வீடு காதலியாய் இருக்கமுடியாது. தீயைக் காமுகனாகவும் வீட்டை ஒரு அபலைப்பெண்ணாகவும் நினைத்தால் என்ன? பெண்ணின் வாழ்வைச் சூறையாடும் கயவனாய் தீயை உருவகப்படுத்தலாம்.

மோகத்தைத் தீ என்கிறோம். தீக்கே மோகம் வந்தால்......? சிந்தனை வியப்பைத் தந்தது. சரிதான். இந்தக் காமவெறி என்றுமே அடங்கப்போவதில்லை. ஏன் முடியாது? நீரென்னும் மோகினியின் முன் தீயின் ஆட்டம் அடங்கிவிடுமே!

அடச்சே! இந்தப் பாழாய்ப்போன எழுத்தாள புத்தி, தீயின் பிடிக்குள் அகப்பட்டபோதும் எழுதுவதற்கு கருவைத் தேடுகிறதே! என்னவென்று சொல்வது?

காணுமிடமெல்லாம் கரும்புகை படர்ந்து கண்களை கசியச்செய்தது. இதுவரை தூரநின்று குசலம் விசாரித்துக்கொண்டிருந்த நெருப்பு, இப்போது நெருங்கி வந்து கைகுலுக்கத் தயாராய் நின்றது. ம்ஹும்! எனக்கு அதில் உடன்பாடில்லை.

அவசரமாய் சுய உணர்வுக்கு வந்து உதவி கேட்டு குரலை உயர்த்தினேன். உதவிக்காக உயர்ந்த என் குரல் ஓலமாகவே எதிரொலித்தது. இன்னும் ...இன்னும்.... என் தொண்டையிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கலந்து கண்ணாமூச்சியாடின. இனியும் உதவியை எதிர்பார்ப்பது மடத்தனம். பேசாமல் தீயிடமே தஞ்சமடைந்துவிடவேண்டியதுதான்.

‘தீயே! உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? என்னை இப்படி வாட்டலாமா? உன்னைத் தினமும் விளக்கிலேற்றிக் கும்பிடும் என்னை தண்டிக்கலாமா? எனக்கு நான்கு வயதிலும் ஏழு வயதிலுமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர், அவர்களை வளர்த்து ஆளக்க வேண்டாமா? கணவர் இருக்கிறாரே, அவர் பார்த்துக்கொள்ளமாட்டாரா என்கிறாயா? அவரை நம்ப முடியாது. பார், நேற்று ஒன்றுமில்லாத விஷயத்துக்காக என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு சாப்பிடவும் இல்லை. நான் எப்படியெல்லாம் வருந்தினேன், தெரியுமா? அழுதுகொண்டே தூங்கிவிட்டேன். கண்விழித்தால் நீதான் என்னெதிரில் நிற்கிறாய்!

என்னை இவ்வளவு சீக்கிரம் அழிக்கத்தான் வேண்டுமா? யோசித்துப்பார்! இந்த வீட்டை அழித்துவிட்டாய், வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அழித்துவிட்டாய்!அது போதாதா? என்னதான் காப்பீட்டுத்தொகை கைக்கு வந்தாலும் இது போல் இன்னொரு வீடு உருவாக எனக்கு இன்னும் இரண்டு வருடம் பிடிக்குமே! என் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படுவார்களே? இத்தனைப் பேசுகிறாரே, கெளதம், அவருக்கு ஒருநாள் நான் இல்லையென்றாலும் கை உடைந்ததுபோலாகிவிடுமே? என்னை விட்டுவிடேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்.’

தீ எதற்கும் இசைவதாயில்லை. புண்ணியம் தேவையில்லை என்று எண்ணிவிட்டது போலும். காப்பாற்றுபவர்களை எதிர்பார்த்து தீயிடம் கேட்ட காலக்கெடுவை அது தனக்குச் சாதகமாக்கிகொண்டது. என்னிடம் நின்று கைகளைக் கட்டி உபதேசம் கேட்பதுபோல் பாவலா காட்டிக்கொண்டு பின்புறம் கண்ணசைத்து தன் உபகரங்களை அனுப்பி உரிய வேலையை செய்துகொண்டுதானிருந்தது.

நானோ எதையும் கவனியாதவள் போல் அதன் காலடி பற்றிக் கெஞ்ச முற்பட்டேன். தீ வெகு சாமர்த்தியமாய் தன் கால்களை எனக்குக் காட்டாமல் மறைத்துக்கொண்டு தடமின்றி நடந்து தன் மனம்போனபோக்கில் சென்றது.

இனிப் பேசிப் பயனில்லை. தண்ணீருக்கு இரங்குவது கண்ணீருக்கு இரங்காதா? கடைசி அஸ்திரத்தைக் கையிலெடுத்தேன், இல்லையில்லை, கண்ணிலெடுத்தேன். என்னென்னவோ சொல்லிப் புலம்பி அழுதேன். கண்ணீர் விட்டுக் கதறி அரற்றினேன். படபடவெனச் சத்தத்துடன் எரிவது என்னைப் பார்த்து அது எக்காளமிட்டுக் கொக்கரிப்பது போலிருந்தது.

‘உனக்காக யாருமில்லை, உன்னைக் காக்க எவரும் முன்வரவில்லை, உனக்காக உயிர்கொடுக்க எவரும் தயாராய் இல்லை, ஆக மொத்தம், நீ எவருக்கும் தேவையில்லை. நீ பொய் சொல்லி என்னை எமாற்றப் பார்க்கிறாய்’ என்று சொல்லியபடியே என்னை நோக்கி முன்னேறிய தீயை வெறுங்கையால் புறந்தள்ளிவிட்டு ஓட முனைகிறேன்.

இப்போது தீக்காமுகன் என்னிடமே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டான். கண்களில் மின்னும் வெறியுடன், தன் வெங்கரங்களால் என் சேலையைப் பற்றிவிட்டான். பதறியபடியே அவனிடமிருந்து என்னை விடுவிக்கப் போராடித் தோற்கிறேன். கத்திக் கதறிக் கையெடுத்துக் கும்பிட்டுக் கூப்பாடு போடும்போது........

"அம்மா..."

"பானூ...."

"அம்மா...."

என்ன இது? என்னை வெளியிலிருந்து அழைப்பது யார்? கெளதமும், குழந்தைகளுமா? நான் இப்போது தீயுடன் போராடிக்கொண்டிருக்கிறேனே, நான் எப்படி பதில் சொல்வது? என் சேலையும் உருவப்பட்டுவிட்டதே.......கடவுளே.....என்னைக் காப்பாற்றுவாரில்லையா.......

"அம்மா......அம்மா......"

"பானூ......"

நான் பலமாக உலுக்கி எழுப்பப்பட்டேன். மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்தால்........எதிரில் கெளதமும், குழந்தைகளும்! சரேலென என் போர்வையை வாரி என்னுடலைப் போர்த்துக்கொண்டேன். மலங்க மலங்க விழித்தபடி இருந்த என் கண்களிலிருந்து வழிந்துகொண்டிருந்த நீரை என் குழந்தைகளின் தளிர்க்கரங்கள் துடைத்தன. கெளதம் என்னை தன் மார்போடு சேர்த்தணைத்தபடியே, " என்னம்மா.....ஏதாவது பயங்கர கனவா?" என்றார்.

"க...க...கனவா......? கனவா அது? கனவுதானா? "

மெல்ல என்னைச் சுற்றிப்பார்க்கிறேன். என் வீடு, உடமைகள் எல்லாம் அப்படியே அதனதன் இடத்தில்! என் போர்வைக்குள் குனிந்து நோக்கினேன். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.

அப்படியென்றால்....அத்தனையும் கனவுதானா?

கெளதம் தண்ணீர் எடுத்துக்கொடுக்கிறார். படபடப்பு சற்றே அடங்க, பலத்த பிரயாசைக்கிடையில் நடந்தவற்றைச் சொல்லிமுடிக்கிறேன்.

"அம்மா.....அதுக்குதான் அப்பா 'அதை’ வாங்கி வச்சிருக்காரில்ல.....'அதை’ யூஸ் பண்ணியிருக்கலாமில்ல.....?"

அகிலின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறியபடியே அவரைப் பார்க்கிறேன். அவரோ ஒரு கள்ளச்சிரிப்புடன் என்னைப் பார்க்க.....நேற்றிரவு அவர் வாங்கிவந்த தீயணைப்பானின் விலையைப் பார்த்துவிட்டு, இப்போது இது தேவையா என்று நான் அவரைக் கடிந்துகொண்டதும், பதிலுக்கு அவர், மனித உயிர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் அதிகமில்லை என்று வாதிட்டதும், கடைசியில் வாக்குவாதம் முற்றி இருவருமே கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் உறங்கப்போனதும் நினைவுக்கு வர.....அசட்டுச் சிரிப்பைச் சிந்தியபடியே தலைகுனிந்துகொள்கிறேன்.

கண்மணி
03-09-2010, 02:34 AM
தீ கொஞ்சம் வித்தியாசமான ஒன்று..

அதை ஆசைப்பட்ட எதைப் பார்த்தாலும் அதுக்கு இன்னொரு கை முளைக்கும். ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க அது ஆயிரமாயிரம் கரங்கள் கொண்ட மிகப் பெரிய இராட்சசனா வளர்ந்திரும்.

தீ ஒரு விதத்தில் நக்ஸலைட். வெள்ளம் ஒரு விதமான ஆதிக்கவாதி..

தீ தனக்கு மேலுள்ளதைத்தான் அழிக்கும். தனக்குக் கீழே உள்ளவர்களைத் தொடாது. கூரையில் தீப்பிடிச்சா கூரைதான் கீழே விழுந்து கீழே உள்ளவர்களுக்குச் சேதம் உண்டாக்குமே தவிர தீ எப்பவுமே மேல் நோக்கித்தான் பரவும்.

வெள்ளம் கொடூர அடக்குமுறையாளன் மாதிரி. தன்னிலும் தாழ்ந்தவர்களை மட்டும்தான் அழிக்கும்.

அதான் தீக்கரங்கள் என்கிறோம்.. நீரின் கால்கள் என்கிறோம்.

ஆனால் பாருங்க நாம தப்பா வெள்ளந்தீ மனிதர்கள் என அப்பாவிகளைச் சொல்றோம். வெள்ளமும் தீயும் வித்தியாசம் பார்க்காதாம்..

அதுசரி.. ஓவர் சிந்தனை ஒடம்புக்காகாதுன்னு சொல்வாங்க. தீபத்தில் ஏற்றி வைத்த தீயை வணங்குவோம். சிகரெட்டில் ஏற்றி வைத்தால் திட்டுவோம். ஆக மரியாதை தீக்கு இல்லை. அது இருக்கிற இடத்துக்குத்தான். அதான் கண்ணதாசன் சொல்லி இருக்காரு இல்லையா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே.. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது.

ஒரு வேளை இப்படி பல விஷயங்களைப் புரிய வைக்கத்தான் தீ வந்ததோ என்னவோ..

தீ பிடித்தது கனவில் என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவது கொஞ்சம் கதையை பலவீனமாக்கிடுது..

தீயிடம் வாக்குவாதம் நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
03-09-2010, 02:59 AM
இதை படிக்கும் போது உள்ளூர சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை. உசிர்போற நேரத்திலும் இப்படியான சிந்தனைகள் கனவில் தானே வரும். :D
தீயிடம் கெஞ்சும் ஒரு பார்வை. படிக்கும் போது இமை மறுக்காது படித்தேன். வாழ்த்துக்கள் கீதம்...

அதுசரி காலை உணவு சாப்பிட்டாரா இல்லை விரதமா???

ஆதவா
03-09-2010, 07:48 AM
உயிர் வேண்டி இயற்கையிடம் வேண்டுதல்!!! ஹாஹா... அருமை கீதம்!!
நினைவுகள் தடம்புரண்டால் இப்படித்தான்..... கணக்கு வழக்கு இல்லாமல் பேசத் தோணும்.
கதைசொல்லி ரொம்ப பயந்த சுபாவம் போல..... இதுக்கே பயந்தா எப்படி?

கதையில் எனக்கு மிகவும் பிடித்தது
நெருப்பு பரவும் பொழுது அதனோடு கெஞ்சுவதாக இருப்பது,
கனவு உருவான இரவு
குறிப்பாக சில வரிகள்...

தண்ணீருக்கு இரங்குவது கண்ணீருக்கு இரங்காதா? கடைசி அஸ்திவாரத்தைக் கையிலெடுத்தேன், இல்லையில்லை, கண்ணிலெடுத்தேன்.

அருமை!! அஸ்திவாரமல்ல. அஸ்திரம்.
இந்த அஸ்திரங்கள் இருக்கிறதே.... அதற்கு வன்மம் தவிர வேறேதும் தெரியாது. ஆனால் இந்த வரிகள் வன்மத்தைக் குறிக்கவில்லை!! கெஞ்சல்.....

கண்ணீர் என்பது பலவகையான உணர்வுகளின் குறியீடு..... அது தாமரை அண்ணா மாதிரி.... என்ன சொல்லுதுன்னு விளக்கறதுக்குள்ள வேற அர்த்தம் ஆகிடும்!! :)

///என்னை நோக்கி முன்னேறிய தீயை வெறுங்கையால் புறந்தள்ளிவிட்டு ஓட முனைகிறேன்.

தீக்காமுகன் என்னிடமே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டான். கண்களில் மின்னும் வெறியுடன், தன் வெங்கரங்களால் என் சேலையைப் பற்றிவிட்டான்.

இதுவரை தூரநின்று குசலம் விசாரித்துக்கொண்டிருந்த நெருப்பு, இப்போது நெருங்கி வந்து கைகுலுக்கத் தயாராய் நின்றது///

கதையில் இந்தமாதிரி வரிகள் முழுக்க இருந்திருந்தால் அது “நீலவேணி” கதை மாதிரி குறியீடுகளோடும் படிமங்களோடும் பயணிக்க ஆரம்பித்திருக்கும். எதையுமே அணுகும் கோணம் வித்தியாச்மாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும்.. இங்கே நீங்கள் தீயை ஒரு ரூபமாக்கிவிட்டீர்கள் அப்படியல்லாமல் அரூபமாகவே எழுதியிருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும்.... தீ பற்றியது என்பதற்கும் தீயென்பவன் பற்றினான் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான்... தீக்காமுகன் என்ற சொல், ஒரு குறியீடு.. அதை பலவற்றுக்கும் பொருந்தப் பார்க்கலாம்.>!!! சபாஷ் கீதம்!

.அடச்சே! இந்தப் பாழாய்ப்போன எழுத்தாள புத்தி, தீயின் பிடிக்குள் அகப்பட்டபோதும் எழுதுவதற்கு கருவைத் தேடுகிறதே! என்னவென்று சொல்வது?

இழவு வீட்டிலும் வரும்!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20268

---------------
என்றாலும் கனவாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடுதான் படித்தேன்.... கதையின் முதல்வரி அதற்குக் காரணமாக இருக்கலாம்!

ஆதவா
03-09-2010, 07:52 AM
தீ கொஞ்சம் வித்தியாசமான ஒன்று..

தீ ஒரு விதத்தில் நக்ஸலைட். வெள்ளம் ஒரு விதமான ஆதிக்கவாதி..

தீ தனக்கு மேலுள்ளதைத்தான் அழிக்கும். தனக்குக் கீழே உள்ளவர்களைத் தொடாது. கூரையில் தீப்பிடிச்சா கூரைதான் கீழே விழுந்து கீழே உள்ளவர்களுக்குச் சேதம் உண்டாக்குமே தவிர தீ எப்பவுமே மேல் நோக்கித்தான் பரவும்.

வெள்ளம் கொடூர அடக்குமுறையாளன் மாதிரி. தன்னிலும் தாழ்ந்தவர்களை மட்டும்தான் அழிக்கும்.

அதான் தீக்கரங்கள் என்கிறோம்.. நீரின் கால்கள் என்கிறோம்.

வரவர ஓவரா சிந்திக்க (அட, தண்ணிய இல்ல) ஆரம்பிக்கிறீங்க கண்மனி!!! இது நல்லால்ல!! :rolleyes:

சிவா.ஜி
03-09-2010, 08:16 AM
கனவு எனத் தெரிந்துவிட்டாலும், தீயுடனான உரையாடல்கள் மூலம், ஆழ்மன அச்சத்தையும், அபிலாசைகளையும் மிக அழகாய் சொல்லியிருக்கும் விதம் அருமை.

மகன் சொல்லும் ‘அதை’ என்பது தேவையில்லாத சஸ்பென்ஸோ என எண்ணுகிறேன். தீயணைப்பானென்றே சொல்லியிருந்தாலும் அந்த இடத்துக்குப் பொருத்தமாகவே இருந்திருக்கும்.

வித்தியாசமான சிந்தனைக்கும், எழுத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கையே.

Ravee
03-09-2010, 08:28 AM
ரோம் நகரம் தீப்பற்றிய போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாய் .... அக்கா முடியலை , உங்கள் வர்ணனை நீண்ட போதே இது கனவு என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது . :lachen001: :lachen001: :lachen001:

கீதம்
03-09-2010, 11:37 AM
தீ கொஞ்சம் வித்தியாசமான ஒன்று..

தீ பிடித்தது கனவில் என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவது கொஞ்சம் கதையை பலவீனமாக்கிடுது..

தீயிடம் வாக்குவாதம் நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்

ஆகா, கலக்கல் கண்மணியிடமிருந்து முதல் விமர்சனம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. தீயையும், நீரையும் வைத்து நீங்கள் செய்த ஆராய்ச்சி அருமை. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கு நன்றி, கண்மணி.

Nivas.T
03-09-2010, 11:37 AM
அநியாயம்
நெருப்புக்கிட்ட ஒரு கெஞ்சல், ஒரு மிஞ்சல், காப்பீடு, அந்த நேரத்தல கதைக்கு கரு

நல்ல க(னவு)தை
அசத்தல் போங்க

கீதம்
03-09-2010, 11:41 AM
இதை படிக்கும் போது உள்ளூர சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை. உசிர்போற நேரத்திலும் இப்படியான சிந்தனைகள் கனவில் தானே வரும். :D
தீயிடம் கெஞ்சும் ஒரு பார்வை. படிக்கும் போது இமை மறுக்காது படித்தேன். வாழ்த்துக்கள் கீதம்...

அதுசரி காலை உணவு சாப்பிட்டாரா இல்லை விரதமா???

கதை முடிவில் சிரிப்பு வந்தால் சந்தோஷம். ஆனால் படிக்கும்போதே என்றால்..... நான் இன்னும் சரியாக எழுதியிருக்கவேண்டுமோ?:confused:

கெளதம் காலை உணவைச் சாப்பிட்டாரா இல்லையா என்பதை பானுவிடம்தான் கேட்கவேண்டும்.:lachen001: விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி, அன்புரசிகன்.

கீதம்
03-09-2010, 11:49 AM
உயிர் வேண்டி இயற்கையிடம் வேண்டுதல்!!! ஹாஹா... அருமை கீதம்!!
நினைவுகள் தடம்புரண்டால் இப்படித்தான்..... கணக்கு வழக்கு இல்லாமல் பேசத் தோணும்.
கதைசொல்லி ரொம்ப பயந்த சுபாவம் போல..... இதுக்கே பயந்தா எப்படி?

கதையில் எனக்கு மிகவும் பிடித்தது
நெருப்பு பரவும் பொழுது அதனோடு கெஞ்சுவதாக இருப்பது,
கனவு உருவான இரவு
குறிப்பாக சில வரிகள்...

அருமை!! அஸ்திவாரமல்ல. அஸ்திரம்.
இந்த அஸ்திரங்கள் இருக்கிறதே.... அதற்கு வன்மம் தவிர வேறேதும் தெரியாது. ஆனால் இந்த வரிகள் வன்மத்தைக் குறிக்கவில்லை!! கெஞ்சல்.....

கண்ணீர் என்பது பலவகையான உணர்வுகளின் குறியீடு..... அது தாமரை அண்ணா மாதிரி.... என்ன சொல்லுதுன்னு விளக்கறதுக்குள்ள வேற அர்த்தம் ஆகிடும்!! :)

கதையில் இந்தமாதிரி வரிகள் முழுக்க இருந்திருந்தால் அது “நீலவேணி” கதை மாதிரி குறியீடுகளோடும் படிமங்களோடும் பயணிக்க ஆரம்பித்திருக்கும். எதையுமே அணுகும் கோணம் வித்தியாச்மாக இருந்தால் ரசிக்கும்படி இருக்கும்.. இங்கே நீங்கள் தீயை ஒரு ரூபமாக்கிவிட்டீர்கள் அப்படியல்லாமல் அரூபமாகவே எழுதியிருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும்.... தீ பற்றியது என்பதற்கும் தீயென்பவன் பற்றினான் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான்... தீக்காமுகன் என்ற சொல், ஒரு குறியீடு.. அதை பலவற்றுக்கும் பொருந்தப் பார்க்கலாம்.>!!! சபாஷ் கீதம்!

இழவு வீட்டிலும் வரும்!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20268

---------------
என்றாலும் கனவாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடுதான் படித்தேன்.... கதையின் முதல்வரி அதற்குக் காரணமாக இருக்கலாம்!

விமர்சனம் கண்டு மெய்சிலிர்த்துப்போனேன், ஆதவா. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

நீங்கள் சுட்டிய கவிதை படித்தேன். மிக அருமை. இப்படித்தான் இப்போதெல்லாம் எனக்கும் எதைப்பார்த்தாலும் எதையாவது எழுதத் தோன்றுகிறது. உண்மையில் நேற்றிரவு தீக்குள் அகப்பட்டதைப் போலொரு கனவு கண்டேன். கவிதையாக எழுதலாம் என்றுதான் நினைத்தேன். முடிவில் கதையாகிவிட்டது. ஊக்கமிகு பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ஆதவா.

(அதுசரி, பல முறை படித்தும் என் கண்களில் தட்டுப்படாத பிழைகள் உங்களுக்கு மட்டும் தெரிவதேன்? எனக்கு ஒரே வியப்பு!)

கீதம்
03-09-2010, 11:52 AM
வரவர ஓவரா சிந்திக்க (அட, தண்ணிய இல்ல) ஆரம்பிக்கிறீங்க கண்மனி!!! இது நல்லால்ல!! :rolleyes:

அட, ரொம்ப நாளைக்கப்புறம் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்காங்க, அதுக்குள்ளே மிரட்டலா? கண்மணி இதுக்கெல்லாம் பயப்படமாட்டாங்கன்னு தெரியாதா உங்களுக்கு?

கீதம்
03-09-2010, 11:58 AM
கனவு எனத் தெரிந்துவிட்டாலும், தீயுடனான உரையாடல்கள் மூலம், ஆழ்மன அச்சத்தையும், அபிலாசைகளையும் மிக அழகாய் சொல்லியிருக்கும் விதம் அருமை.

மகன் சொல்லும் ‘அதை’ என்பது தேவையில்லாத சஸ்பென்ஸோ என எண்ணுகிறேன். தீயணைப்பானென்றே சொல்லியிருந்தாலும் அந்த இடத்துக்குப் பொருத்தமாகவே இருந்திருக்கும்.

வித்தியாசமான சிந்தனைக்கும், எழுத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கையே.

பாராட்டுக்கு மிகவும் நன்றி, அண்ணா.

கனவு என்பதிலோ, மகன் அது என்று குறிப்பிடுவதிலோ எந்த சஸ்பென்சும் வைக்கவில்லை அண்ணா. கனவு உருவான காரணத்தை மட்டுமே இறுதி முடிச்சாக வைத்திருந்தேன். சற்று நகைச்சுவையாக இருக்கும் என்று எண்ணினேன். மற்றபடி மகனுக்கு ஏழு வயது என்று குறிப்பிட்டதால் தீயணைப்பான் என்றும் சொல்லவராது, fire extinguisher என்றும் சொல்லவராது. அதனால் பொருளைக்காட்டி அது என்று குறிப்பிடுவதாக எழுதினேன். மேலும் கனவுக்குக் காரணமான, சண்டைக்குக் காரணமான அந்தப்பொருளை கடைசியில் குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என்றும் நம்பினேன்.

கீதம்
03-09-2010, 12:02 PM
ரோம் நகரம் தீப்பற்றிய போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாய் .... அக்கா முடியலை , உங்கள் வர்ணனை நீண்ட போதே இது கனவு என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது . :lachen001: :lachen001: :lachen001:

கனவு என்பது தெரிந்துவிடும் என்பதை நானும் அறிந்திருந்தேன், ரவி. ஆனால் கனவு வந்த காரணம், கணவன் வாங்கி வந்த தீயணைப்பானும், அதனால் எழுந்த வாக்குவாதமுமே. திடீரென்று தீப்பிடித்துவிட்டால் என்ன செய்வாய் என்று கணவன் கேட்டிருக்கக்கூடும். அதையே நினைத்துக்கொண்டு படுத்ததால் வந்தவினை! பின்னூட்டத்துக்கு நன்றி, ரவி.

கண்மணி
03-09-2010, 12:03 PM
கண்ணீர் என்பது பலவகையான உணர்வுகளின் குறியீடு..... அது தாமரை அண்ணா மாதிரி.... என்ன சொல்லுதுன்னு விளக்கறதுக்குள்ள வேற அர்த்தம் ஆகிடும்!! :)

!

வரவர ஓவரா சிந்திக்க (அட, தண்ணிய இல்ல) ஆரம்பிக்கிறீங்க கண்மனி!!! இது நல்லால்ல!! :rolleyes:

கண்ணீர் வகைகளைப் பற்றிச் சொன்ன கண்ணீர் அருவியை மறந்துட்டீங்களே

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=335962&postcount=10

கணமணி சிந்திக்காம கண்ணீரை யார் சிந்துவாங்களாம் கண்ணுக்கு!!!

கண்மணி
03-09-2010, 12:04 PM
அட, ரொம்ப நாளைக்கப்புறம் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்காங்க, அதுக்குள்ளே மிரட்டலா? கண்மணி இதுக்கெல்லாம் பயப்படமாட்டாங்கன்னு தெரியாதா உங்களுக்கு?

மிரட்டலா? அப்படின்னா என்னங்கக்கா?:confused::confused::confused:

கீதம்
03-09-2010, 12:08 PM
அநியாயம்
நெருப்புக்கிட்ட ஒரு கெஞ்சல், ஒரு மிஞ்சல், காப்பீடு, அந்த நேரத்தல கதைக்கு கரு

நல்ல க(னவு)தை
அசத்தல் போங்க

அநியாயம்னு சொல்றீங்க, அசத்தல்னு சொல்றீங்க. எதை எடுத்துக்கறது? சும்மா தமாஷுக்கு சொன்னேன்.:)

பாராட்டுக்கு மிகவும் நன்றி, நிவாஸ்.

அன்புரசிகன்
03-09-2010, 12:08 PM
கதை முடிவில் சிரிப்பு வந்தால் சந்தோஷம். ஆனால் படிக்கும்போதே என்றால்..... நான் இன்னும் சரியாக எழுதியிருக்கவேண்டுமோ?:confused:

கெளதம் காலை உணவைச் சாப்பிட்டாரா இல்லையா என்பதை பானுவிடம்தான் கேட்கவேண்டும்.:lachen001: விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி, அன்புரசிகன்.

நீங்க வேற.. நான் சொன்னது அந்த ஆபத்திலயும் இப்படியான எண்ணங்கள் வருகிறதே என்று நினைத்து சிரிப்பு வந்தது... தவிர சரியாக எழுதவில்லை என்று நான் சொல்லல... எனக்கு கண்ட இடங்களிலும் சிரிப்பு வரும். சில மரண வீட்டுக்கு சென்றால் அங்கு நடக்கும் கூத்துக்கண்டு சிரிப்பு வந்திடும்.

ஒரு முறை ஒரு மரண வீட்டுக்கு சென்றவிடத்து ஒருத்தி சொல்லிச்சொல்லி அழுதா... அண்ணேய்......... நீ எப்படியெல்லாம் என்ன பாத்துக்கிட்டா............ அண்ணோய்........ நேத்தைக்கும் என்டகையால சாப்பிட்டா........ அண்ணோய்.......... உன்ட நடயப்பார்த்தா உன்ட மனிசி கட்டிக்கிட்டா அண்ணோய்... இப்படி கனக்க வந்தது. 2 நாளுக்கு முன்னம் அந்த மனுசன எவ்வளவு கேவலமா திட்ட ஏலுமோ அவ்வளவு மோசமா திட்டிப்போட்டு அன்று அப்படி அழுதா சிரிக்காம ... அதுவும் அவற்ற நடைய நினைச்சா எனக்கு இப்பவும் சிரிப்பு வரும். லொடுக்குப்பாண்டி நடையப்பார்த்து அவங்க மனசி கட்டினாங்களா...

இப்ப ஏன் இத சொன்னேன் என்றால் அவரவர் சிரிக்கிறதுக்கு பல காரணங்கள். உங்களை அந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்தேன். சிரிப்பு தாளல... அது தான் காலை விரதம் பற்றி கேட்டிருந்தேன்... :D

கீதம்
03-09-2010, 12:10 PM
மிரட்டலா? அப்படின்னா என்னங்கக்கா?:confused::confused::confused:

அதானே? சொல்லக்கூடாத ஆள்கிட்ட சொல்லக்கூடாத வார்த்தையைச் சொல்லிட்டேனே!:D

கீதம்
03-09-2010, 12:14 PM
நீங்க வேற.. நான் சொன்னது அந்த ஆபத்திலயும் இப்படியான எண்ணங்கள் வருகிறதே என்று நினைத்து சிரிப்பு வந்தது... தவிர சரியாக எழுதவில்லை என்று நான் சொல்லல... எனக்கு கண்ட இடங்களிலும் சிரிப்பு வரும். சில மரண வீட்டுக்கு சென்றால் அங்கு நடக்கும் கூத்துக்கண்டு சிரிப்பு வந்திடும்.

ஒரு முறை ஒரு மரண வீட்டுக்கு சென்றவிடத்து ஒருத்தி சொல்லிச்சொல்லி அழுதா... அண்ணேய்......... நீ எப்படியெல்லாம் என்ன பாத்துக்கிட்டா............ அண்ணோய்........ நேத்தைக்கும் என்டகையால சாப்பிட்டா........ அண்ணோய்.......... உன்ட நடயப்பார்த்தா உன்ட மனிசி கட்டிக்கிட்டா அண்ணோய்... இப்படி கனக்க வந்தது. 2 நாளுக்கு முன்னம் அந்த மனுசன எவ்வளவு கேவலமா திட்ட ஏலுமோ அவ்வளவு மோசமா திட்டிப்போட்டு அன்று அப்படி அழுதா சிரிக்காம ... அதுவும் அவற்ற நடைய நினைச்சா எனக்கு இப்பவும் சிரிப்பு வரும். லொடுக்குப்பாண்டி நடையப்பார்த்து அவங்க மனசி கட்டினாங்களா...

இப்ப ஏன் இத சொன்னேன் என்றால் அவரவர் சிரிக்கிறதுக்கு பல காரணங்கள். உங்களை அந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்தேன். சிரிப்பு தாளல... அது தான் காலை விரதம் பற்றி கேட்டிருந்தேன்... :D

நல்லா சொன்னீங்க. மரணவீட்டில் சிரித்து அடி வாங்காமல் தப்பினீர்களே! :icon_b:

அப்புறம் அந்தக்கனவு என்னுடையதுதான். ஆனால் தீயோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தலை. அதெல்லாம் நம்ம கற்பனை.:D

ஆதவா
03-09-2010, 12:28 PM
கண்ணீர் வகைகளைப் பற்றிச் சொன்ன கண்ணீர் அருவியை மறந்துட்டீங்களே

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=335962&postcount=10

கணமணி சிந்திக்காம கண்ணீரை யார் சிந்துவாங்களாம் கண்ணுக்கு!!!

:traurig001::traurig001:

கலையரசி
03-09-2010, 12:59 PM
எல்லோரும் சொன்ன பிறகு நான் சொல்வதற்கு எதுவுமே மிச்சமிருக்கவில்லை. கனவு என்று தெரிந்து விட்டாலும், தீயுடனான உரையாடல்களும், எழுதுவதற்குக் கரு தேடுகின்ற புத்தியும் அருமையாக இருந்தன. கவிதையாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுமளவுக்கு வரிகள் அமைந்திருந்தன. பாராட்டுக்கள் கீதம்.

த.ஜார்ஜ்
03-09-2010, 04:26 PM
தீயுடன் பேச்சிவார்த்தை நடத்தியதன் பலனாக தீ ஒரு தேவதையாக உருமாறி அப்படியே உங்களை தூக்கிக் கொண்டு போய் பட்டத்து ராணியாக்கி கேட்டதை அருள் பாலித்துக் கொண்டிருந்ததாம். ஒரு முனிவரால் ஏற்பட்ட சாபத்திற்கு நீங்கள் விமோசனம் கொடுத்ததால் இந்த கைமாறாம்.
இதைக் கண்டு பொறுக்காத முனிவர் காற்றாக வந்து தூக்கி வீச கீழே விழுந்து மயக்கமாகிப் போனீர்கள். அப்போதுதான் பழைய ஞாபகங்கள்.. தேவதை உங்கள் இறந்துவிட்ட சகோதரி என்று உணர்த்த.. ஏய்.ய ய .. என்று சீற்றமாக கிளம்பி......[இந்த எழுத்தாள புத்தி இருக்கிறதே..!!!!]

த.ஜார்ஜ்
03-09-2010, 04:32 PM
தீக்கும் வெள்ளத்துக்கும் கண்மணியின் விளக்கம் பிரமாதம்.
எதற்கும் அவைகளிடம் கொஞ்சம்
எச்சரிக்கையாகவே இருங்கள். தீவிரவாதியாக்கி விட்டீர்களே. அதற்காகக் சொன்னேன்.

பூமகள்
03-09-2010, 05:25 PM
நெருப்பு நாவுகள் பேசிய பேச்சை அடக்கி ஆளும் எழுத்தாளுமை அசர வைக்கிறது கீதம் அக்கா..

உங்களின் கற்பனைத் திறன், எழுத்துத் திறன், நகைச்சுவைத் திறன் அனைத்தும் விளக்கும் ஓர் கட்டியப் பதிவு இது..

படித்ததும் அசந்தேன்.. பாராட்டுகள் கீதம் அக்கா.. எப்படியெல்லாம் கதைக் கரு கிடைக்கிறது உங்களுக்கு... :eek::eek: வாழ்த்துகள். :)

பா.சங்கீதா
05-09-2010, 07:09 AM
நல்ல கதை, தீ அணைபானின் முக்கியதுவத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.:)

கீதம்
06-09-2010, 12:35 AM
எல்லோரும் சொன்ன பிறகு நான் சொல்வதற்கு எதுவுமே மிச்சமிருக்கவில்லை. கனவு என்று தெரிந்து விட்டாலும், தீயுடனான உரையாடல்களும், எழுதுவதற்குக் கரு தேடுகின்ற புத்தியும் அருமையாக இருந்தன. கவிதையாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுமளவுக்கு வரிகள் அமைந்திருந்தன. பாராட்டுக்கள் கீதம்.

சில சமயம் கவிதை எழுத நினைப்பேன், கதையாகிவிடும். சில சமயம் கதை, கவிதையாகிவிடும். எல்லாம் அப்போதைய மனநிலையைப் பொறுத்து அமைந்துவிடுகிறது. பின்னூட்டப்பாராட்டுக்கு மிகவும் நன்றி, அக்கா.

கீதம்
06-09-2010, 12:39 AM
தீயுடன் பேச்சிவார்த்தை நடத்தியதன் பலனாக தீ ஒரு தேவதையாக உருமாறி அப்படியே உங்களை தூக்கிக் கொண்டு போய் பட்டத்து ராணியாக்கி கேட்டதை அருள் பாலித்துக் கொண்டிருந்ததாம். ஒரு முனிவரால் ஏற்பட்ட சாபத்திற்கு நீங்கள் விமோசனம் கொடுத்ததால் இந்த கைமாறாம்.
இதைக் கண்டு பொறுக்காத முனிவர் காற்றாக வந்து தூக்கி வீச கீழே விழுந்து மயக்கமாகிப் போனீர்கள். அப்போதுதான் பழைய ஞாபகங்கள்.. தேவதை உங்கள் இறந்துவிட்ட சகோதரி என்று உணர்த்த.. ஏய்.ய ய .. என்று சீற்றமாக கிளம்பி......[இந்த எழுத்தாள புத்தி இருக்கிறதே..!!!!]

வாங்க, வாங்க. ரொம்பநாளா சொந்தக்கதை, சோகக்கதை எழுதிகிட்டு சிறுகதைப் பகுதிக்கே வராம சுத்திகிட்டு இருக்கீங்க. இப்படியாச்சும் என் கதை மூலமா ஒரு கதை யோசிக்கமுடியுதே, உங்களால். ரொம்ப சந்தோஷமா இருக்கு.:icon_b:

கீதம்
06-09-2010, 12:43 AM
நெருப்பு நாவுகள் பேசிய பேச்சை அடக்கி ஆளும் எழுத்தாளுமை அசர வைக்கிறது கீதம் அக்கா..

உங்களின் கற்பனைத் திறன், எழுத்துத் திறன், நகைச்சுவைத் திறன் அனைத்தும் விளக்கும் ஓர் கட்டியப் பதிவு இது..

படித்ததும் அசந்தேன்.. பாராட்டுகள் கீதம் அக்கா.. எப்படியெல்லாம் கதைக் கரு கிடைக்கிறது உங்களுக்கு... :eek::eek: வாழ்த்துகள். :)

இதைச் சொல்றது யாரு? பூமகளா?

உங்களிடமில்லாத திறமையா? கூடியசீக்கிரம் மன்றத்தில் முழுமையாய்ப் பங்குபெற்று எங்களை மகிழ்விக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். பாராட்டுக்கு மிக்க நன்றி, பூமகள்.

கீதம்
06-09-2010, 12:45 AM
நல்ல கதை, தீ அணைபானின் முக்கியதுவத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.:)

பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா, சங்கீதா.

சுடர்விழி
06-09-2010, 02:08 AM
என்ன ஒரு கற்பனை...தீயுடன் கெஞ்சல்,பேச்சு வார்த்தை..ஒவ்வொரு வரியும் கவிதை மாதிரி இருக்கிறது...ஒரு தீ கனவை இப்படி அருமையான கதையாக்கி இருக்கிறிர்களே !உங்க திறமையை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல..படித்து மலைத்தேன்..வாழ்த்துக்கள் கீதம்...

த.ஜார்ஜ்
06-09-2010, 03:32 PM
சிறுகதைப் பகுதிக்கே வராம சுத்திகிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.:icon_b:

நீங்களெல்லாம் இங்கே இருக்கிறீர்களே பொறுப்பாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற தைரியத்தில்தான் சுற்றியலைய போய்விட்டேன்...விடுங்கள்.. பட்டு தெளிந்த பிறகு தானே வந்து விட்டு போகிறேன். [ஆனாலும் அநியாயத்துக்கு சந்தோசப்படுகிறீர்கள்]

பா.ராஜேஷ்
06-09-2010, 06:56 PM
வழக்கம் போல அருமையான எழுத்துகளால் வசீகரித்து விட்டர்கள்... கதை மிக மிக அருமை... பாராட்டுக்கள் கீதம்.. என் பங்காக ஐந்து நட்சத்திர அந்தஸ்து..

கீதம்
07-09-2010, 03:12 AM
என்ன ஒரு கற்பனை...தீயுடன் கெஞ்சல்,பேச்சு வார்த்தை..ஒவ்வொரு வரியும் கவிதை மாதிரி இருக்கிறது...ஒரு தீ கனவை இப்படி அருமையான கதையாக்கி இருக்கிறிர்களே !உங்க திறமையை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல..படித்து மலைத்தேன்..வாழ்த்துக்கள் கீதம்...

கதையைப் பாராட்டி விமர்சித்து ஊக்கம் தரும் உங்கள் அன்புக்கு நன்றி, சுடர்விழி.

கீதம்
07-09-2010, 03:13 AM
நீங்களெல்லாம் இங்கே இருக்கிறீர்களே பொறுப்பாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற தைரியத்தில்தான் சுற்றியலைய போய்விட்டேன்...விடுங்கள்.. பட்டு தெளிந்த பிறகு தானே வந்து விட்டு போகிறேன். [ஆனாலும் அநியாயத்துக்கு சந்தோசப்படுகிறீர்கள்]

கிடைக்கிற இடத்தில் ஆப்பு வைக்கிறீர்கள், வாழ்க!

கீதம்
07-09-2010, 03:16 AM
வழக்கம் போல அருமையான எழுத்துகளால் வசீகரித்து விட்டர்கள்... கதை மிக மிக அருமை... பாராட்டுக்கள் கீதம்.. என் பங்காக ஐந்து நட்சத்திர அந்தஸ்து..

கதையைப் பாராட்டியதுடன், ஐந்து நட்சத்திரமும் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் பல, ராஜேஷ்.

சுகந்தப்ரீதன்
07-09-2010, 07:08 PM
”தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..
நின்னை தீண்டு இன்பம் தோன்றுதடா நந்தலாலா..”

தீயின் பிடிக்குள் அகப்பட்டபோதும் ’கரு’தேடும் மனதின் காட்சி மிகவும் ரசிக்க வைத்தது..!! இயல்பிலிருந்து விலகி சற்று வித்தியாசமான விதத்தில் கதையை நகர்த்தியவிதம் நன்று..!!

வாழ்த்துக்கள் கீதமக்கா..!!:)

ஜிங்குசாங்கு
07-09-2010, 09:30 PM
எப்படிங்க இப்பிடியெல்லாம் எழுத முடியுது!?
உங்கள் வார்த்தை ஜாலங்களையும், கண்மணி, ஆதவா மற்றும் பலரின் பின்னூட்டத்தையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

கீதம்
07-09-2010, 10:31 PM
”தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..
நின்னை தீண்டு இன்பம் தோன்றுதடா நந்தலாலா..”

தீயின் பிடிக்குள் அகப்பட்டபோதும் ’கரு’தேடும் மனதின் காட்சி மிகவும் ரசிக்க வைத்தது..!! இயல்பிலிருந்து விலகி சற்று வித்தியாசமான விதத்தில் கதையை நகர்த்தியவிதம் நன்று..!!

வாழ்த்துக்கள் கீதமக்கா..!!:)

மிகவும் நன்றி, சுகந்தவாசன். கதைக்கு முதலில் 'தீக்குள் விரலை வைத்தால்....' என்றுதான் தலைப்பிட நினைத்தேன். அது இன்பம், இது துன்பம் அல்லவா? அதனால் மாற்றிவிட்டேன்.

கீதம்
07-09-2010, 10:32 PM
எப்படிங்க இப்பிடியெல்லாம் எழுத முடியுது!?
உங்கள் வார்த்தை ஜாலங்களையும், கண்மணி, ஆதவா மற்றும் பலரின் பின்னூட்டத்தையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

மிகவும் நன்றி, ஜிங்குசாங்கு அவர்களே! உங்கள் பெயரை இப்படி வைத்து எங்களையெல்லாம் ஜால்ரா போடவைத்துவிட்டீர்களே!:)