PDA

View Full Version : சின்னப்பாட்டி...!!!



சிவா.ஜி
02-09-2010, 04:35 PM
இரவு இரண்டு மணிக்கு அந்த செய்தியை சொல்லக் கமலா வீட்டுக்கு வந்திருந்தார்கள்.மூன்று மைல் தூரத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து, இந்த டவுனுக்கு துக்க செய்தி கொண்டுவந்தவர்கள், அவர்களை தூக்கக்கலக்கத்தோடு ஏறிட்ட கமலாவுக்கு கொழுந்தன் மகன்கள்.

“நைனா இல்லியா பெரிம்மா..சின்னப் பாட்டி செத்துடிச்சி...”

பெரிதாக எந்த அதிர்ச்சியையும் காட்டாமல்..எதிர்பார்த்த செய்திதான்...இருந்தாலும் இந்த வேளைகெட்ட வேளையில் எதிர்பார்க்கவில்லையென்பதை மிகச் சிறிய எரிச்சலைக் காட்டிக்கொண்டே கேட்டாள்.

“எப்ப?”

“எப்போன்னு தெரியில....ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் களியத் திண்ணுட்டு நாகன் வூட்டுக்கு வெளியிலத்தான் படுத்திருக்கு...ராத்திரி கொல்லைக்குப் போறதுக்கு எழுந்த நாகன் வூட்டுக்காரி பாத்துட்டுதான் சொல்லியிருக்கா....அவன் நேரா எங்க வூட்டாண்ட வந்து உங்க பாட்டிய தூக்கினு போங்கடான்னு கத்துனான். நானும் வடிவேலனும்தான் போய் தூக்கினு வந்து வூட்டாண்ட போட்டுனுக்குறோம்...நீ வா பெரிம்மா...பொணத்த வூட்ல போட்டுக்குனு ஒண்டியா இருக்குறதுக்கு பயமாக்குது...போய் பெரிம்மாவ இட்னு வாங்கடான்னு அம்மாதான் சொல்லுச்சி...”

“என்னாடா ரோதனையாக்குது...இந்தக் கெளவிக்கு சாவுறதுக்கு நடுக்கூறுதான் கெடைச்சுதா..உங்க பெரிப்பா வேற டூட்டிக்கு போய்ட்டுக்குது....சரி ஒக்காருங்க வரன்.”

அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டே கூடத்தில் படுத்திருந்த தன் மகளை எழுப்பினாள்.

“சுதா...சுதா...எழ்றி...பொட்டப்புள்ள...தொட்டாலே பொசுக்குன்னு எழுந்துக்கத்தாவல...எப்புடி உன் மாமியாக்காரிக்கிட்ட...பேச்சு வாங்காம பொயப்பு நடத்தினுக்கீறியோ...புள்ளையப் பாரு...ஒடம்பு சரியில்லாத புள்ள, ஒண்ணுக்கு போய்ட்டு ஈரத்துலயே கெடக்குது..”

“யாம்மா...என்னாத்துக்கு இந்தக் கூசல் போடற...பொழுது விடிஞ்சிடுச்சா...?”

குழந்தையின் ஈரத்துணியை இழுத்துக்கொண்டேக் கேட்டாள்.

“விடிஞ்ச மாதிரிதான்...உங்க சின்னப்பாட்டி செத்துப்போயிட்டாளாம்...உங்க சித்தப்பன் வூட்லதான் போட்டு வெச்சிக்கிறாங்களாம்...நான் முருகன்கூட போறேன். காத்தால நைனா வந்ததும் சொல்லிக் கூட்டுக்குனு வா”

சுதாவின் நைனா...பக்கத்திலிருக்கும் பால்பண்ணையில் இரவுக்காவலாளியாக இருக்கிறார். முன்னாள் இராணுவவீரர். இறந்துப்போனதாக முருகன் சொன்ன சின்னப்பாட்டிக்கு குழந்தைகள் எதுவுமில்லாமல், முருகனின் அப்பாவைத்தான் தனக்குக் கொள்ளிபோட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு தனக்கிருந்த அரை ஏக்கர் நிலத்தை அவருக்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.ஆனால்..அவர் கையால் கொள்ளி வாங்க கொடுத்துவைக்காமல் இந்த 90 வயதுவரைக்கும் வாழ்ந்துகொண்டிருந்தார். சின்ன வயதிலேயே கணவர் இறந்துவிட்டார். அந்த கிராமத்திலிருந்த மாந்தோப்புகளுக்குக் காவல் இருந்துகொண்டு அங்கேயே சின்னக் குடிசை போட்டுக்கொண்டு இருந்தார். இருந்த சின்ன குடிசையும், மாந்தோப்புகள் வீட்டுமனைகளாக்கப்பட்டதும், இல்லாமல் போனது. பதினைந்து வருடங்களாக ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் கொஞ்சக் காலம் என்று வாழ்ந்து...இன்று அதையும் முடித்துக்கொண்டார்.

கமலா அங்கு போய் சேர்ந்தபோது, இன்னும் சில பெண்கள் வந்துவிட்டிருந்தார்கள். முருகனின் அப்பாவுடைய வேட்டியை ஒரு பாயின் மேல் விரித்து பாட்டியை கிடத்தியிருந்தார்கள். விடிய விடியவே அந்த வீடு சாவு வீட்டின் அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும் உறவுக்காரர்களே அக்கம்பக்கத்தில் வசித்து வந்ததால்...செய்திக் கேட்டதும்...வீட்டுப்பெண்களெல்லாம் வரத்தொடங்கிவிட்டார்கள். கண்ணீரே வராத வெறும் அழுகைச் சத்தமும், சம்பிரதாய மூக்கு சிந்தல்களும் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. ஒரு அனாதைக் கிழவியின் பரிதாபச் சாவின் பரிமாணம் தெரியத்தொடங்கியது....

மாலையோடும், ஊதுபத்திகளோடும் வந்த கமலாவின் கணவர் பெருமாள், இரவுப்பணிக்குப் பிறகான இன்றைய தூக்கம் போன எரிச்சலில் கண்கள் சிவக்க, மாலையைப் போட்டுவிட்டு, தன் தம்பி மகன்களை அருகில் அழைத்தார்.

“மோளம் அடிக்கிறவனுக்கு சொல்லி வுட்டீங்களா?”

“எல்லாம் நீ வந்ததுக்கப்பறமா சொல்லிக்கலான்னு அம்மா சொல்லிச்சி நைனா”

“ஏன்...எல்லாத்தையும் என்னக் கேட்டுக்கிட்டுதான் செய்யறாளா உங்கம்மா...”

“அனாதையா அந்த வூட்ல கெடக்குதேன்னு பொணத்தை தூக்கினு வந்து வூட்டாண்ட அந்த நேரத்துல போட்டதுக்கு அல்லாத்தையும் எங்க தலையிலதான் கட்னுமா..உனுக்குந்தான சின்னம்மா...ஆகற செலவுக்கு என்னா பண்றதுன்னு மொதல்ல பேசிக்கலாம்”

தூரத்தில் அழுகைப் பெண்களோடு உட்கார்ந்திருந்தாலும்...மகன்களிடம் பெருமாள் பேசத்தொடங்கியதுமே காதுகளை உன்னிப்பாக்கிக்கொண்ட சரோஜா, பெருமாளின் நக்கல் கேள்வியைக் கேட்டதும், பாய்ந்து வந்து சொன்னாள்.

“எனக்கும் சின்னம்மாதான்....ஆனா உன் வூட்டுக்காரனுக்குத்தானே கயனிய எழுதி வெச்சா கெழவி. அவனத்தான கொள்ளிப்போடச் சொன்னா...இப்ப செலவுக்கு மட்டும் என்னைய பங்கு சேத்துக்கிறியா...?”

“அத்தக்கூட நீதான எழுதி வாங்கிக்கின....குடிகாரனுக்கு சாராயத்தை வாங்கிக் குடுத்து அடிமாட்டு வெலைக்கு வாங்குனியே..குடிச்சுக் குடிச்சே எல்லாத்தையும் காலி பண்ணிட்டு என்ன முண்டச்சியாக்கிட்டு போய் சேந்துட்டான்...ஏதோ இந்தப் புள்ளைங்க தலையெடுத்துதான் நாலு காசு சேத்துக்குறானுங்க...அதுகூட பொறுக்கலையா உனக்கு...உங்க சின்னம்மாளுக்குத்தான செய்யுற...”

“இங்க பாரு சரோசா...சாவு வூடாக்குதேன்னு பாக்குறேன்...உன் ஊட்டுக்காரன் குடிக்கறதுக்கு வித்தான். வேற எவனாவது வெளியாளு வந்து எதுக்கு வாங்கனுன்னுதான் பென்ஷன் வந்த பணத்தக் குடுத்து கயனிய வாங்குனேன். என்னவோ அடிச்சு புடிங்கிட்ட மாதிரி பேசற”

“ஏ பெருமாளு இப்ப என்னாத்துக்கு நீங்க ரெண்டுபேரும் அடிச்சிக்கிறீங்க. ஆக வேண்டியத பாருங்கப்பா...உங்க ரெண்டுபேர வுட்டா கெழவிக்கு வேற யாரு இருக்காங்க”

நடுவில் புகுந்து நியாயம் சொன்ன பெருமாக்காளைப் பார்த்து,

“நீ நாயம் பேசாத..கெழவி நல்லாருந்தப்ப காதுலக்கிறத கலட்டி வாங்கிக்கினவதான நீ...ஒருநாளானா அவளுக்கு சோறு போட்டுருக்கியா?”

“இத பாரு சரோசா...அவ பிரியத்தோடத்தான் கம்மலக் குடுத்தா...நீ இப்பிடியெல்லாம் அக்குறும்பா பேசாத...எனக்கென்னா...சாவுக்கு வந்தமா...மூக்க சிந்தனமான்னு போய்ட்டேக்கிறேன். நீங்க பாடையிலயானா கொண்டு போங்க...முனிசிபாலிட்டி வண்டியிலயானா கொண்டு போங்க...எனக்கென்னா...”

கூட்டத்திலிருந்த பெருசு ஒருவர், முண்டாசை அவிழ்த்து, மீண்டும் கட்டிக்கொண்டு வந்து பெருமாளிடம்,

‘பொணத்தை நடுவூட்ல வெச்சுக்குனு..என்னாத்துக்கு ஆளாளுக்கு பேசினு கீறீங்க? ஆளுக்குக் கொஞ்சமா பணத்தப் போட்டு கடைசியா அவள நிம்மதியா அனுப்பி வெய்யுங்க”

“சித்தப்பா...என் கையில காசு இல்ல. சுதா...ஒடம்பு முடியாத புள்ளைய தூக்கிக்கினு வந்திருக்கா...அந்தப் புள்ளைக்கு ஆசுபத்திரி செலவுக்கே காசு பத்தலன்னு அல்லாடின்னு கீறேன்...என்னாண்ட வந்து கேட்டா நான் எங்க போறது”

“என்கிட்ட மட்டும் என்னா கொட்டிக் கெடக்குதா...இப்பதான் முருகனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்...வடிவேலுக்கு வேலைக்குப் போறதுக்கு செலவு பண்ணிட்டு சுத்தமா தொடச்சி வெச்சுனு கீறேன்”

பெருமாளும், சரோஜாவும் சொல்ல, பெரிசு,

“ஏம்மா...எம்புட்டு காசு ஆயிடும்? உங்கள என்னா பூப்பாடையா கட்ட சொல்றேன்...நாலு மூங்கிலு வாங்கனும்...குழி வேணுன்னாக் கூட நான் வெட்டிக் குடுத்துடறேன், ஒரு கோடித்துணியாவது வாங்கி அவளுக்குப் போடுங்க.மோளக்காரனுக்கு அம்பதோ நூறோ ஆகும்,சனிப்பொணத்துக்கு தொணப்பொணமா ஒரு கோழிய வாங்கிக் கட்டுங்க..”

“உனுக்கு என்னா மாமா..சுளுவா சொல்லிட்ட....கெழவி மாங்காத் தோப்புக் காவலுக்கு இருக்க சொல்லோ நீ கூடத்தான் அவளாண்ட காசு வாங்கிக்கீற...அதுக்கு குழி மட்டும் வெட்னா சரியாப்போச்சா? என்னாண்ட தம்பிடி பைசா இல்ல..”

சரோஜா தீர்மாணமாய் சொன்னதும், பெருமாளும் முறுக்கிக்கொண்டு நின்றார்.

அதற்குள் கணிசமாய் ஆட்கள் சேரத்தொடங்கினார்கள். அதிலிருந்த ஒருவர்...

“பெருமாளு கோடித்துணி வாங்கியாந்துட்டியா..?”

“ம்க்கும்...கெடக்குறது கெடக்குது...கெழவியத்தூக்கி மனையில வெய்யுன்னு சொல்றா மாதிரி கேள்வியப்பாரு...அவளாண்டப் போய்க் கேக்கறதுதான..”

‘ஏம்ப்பா...உனக்கு சின்னம்மாதான...நீ செய்யாம வேற யாரு செய்வாங்க...”

“வேணா...மச்சான்....எதானா சொல்லிடப்போறேன்...உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ”

“டே...என்னா சொல்லிட்டன்னு இந்த எகிறு எகிறுற...உங்க சின்னாத்தாளுக்கு கோடித்துணி வாங்கிட்டியான்னுதானக் கேட்டேன்...அதுக்கு என்னா பேச்சு பேசற...ஏன் எங்களுக்கு பேசத் தெரியாதா..”

என அவரும் சிலுப்பிக்கொண்டு வர, பெருமாளுக்கு இருந்த எரிச்சலில், இந்த சிலுப்பலும் கோபத்தைத் தூண்டிவிட...சண்டைக்குத் தயாரானபோதுதான்...பிணத்தைச் சுற்றி அழுதுகொண்டிருந்த பெண்களில் ஒருத்தி,

“மாமா....கெழவி இடுப்புல இந்த தோப்பைய சொருகி வெச்சினிருந்திச்சி...மொடமொடன்னுருக்கு...ஏதானா காசு...கீசு..கீதான்னு பாரு”

என அந்த பையை எடுத்துக்கொண்டுவந்து பெருமாளிடம் கொடுக்க, அதைத் திறந்து பார்த்து ஆச்சர்யத்துடன், அதிலிருந்த ஐந்து நூறுரூபாய்த் தாள்களை வெளியில் எடுத்தார். இதைக் கவனித்த சரோஜா..தாவி அருகில் வந்தாள். பணத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

“ம்...உங்கபிரச்சனை தீந்துச்சா....பொணத்தப் போட்டு வெச்சுக்கிட்டு நீங்க அடிச்சுக்குவீங்கன்னு தெரிஞ்சிதானோ என்னவோ கெழவி...அவ கடைசிக் காரியத்துக்கு...காசு சேத்து வெச்சிருந்தா போலருக்கு...அப்புறம் என்னாப்பா...ஆக வேண்டியதப் பாருங்க...”

“மாமா...அந்தப் பணத்த என்கிட்டக் குடுக்கச் சொல்லுங்க...நாங்க பாத்துக்கறோம்”

“வாம்மா மவராசி....இப்ப மட்டும் நீங்க பாத்துக்குவீங்களா? இப்ப மட்டும் கெழவி எனக்கு சின்னம்மா இல்லியா...ஒண்ணும் வேணாம்...நீ கம்முன்னு இரு...நான் பாத்துக்கறேன்”

“அடடா...காசு இல்லன்னாலும் அடிச்சுக்கிறீங்க....காசு இருந்தாலும் அடிச்சுக்கிறீங்க...உங்களோட ஒரே ரோதனையாப் போச்சுப்பா...யாராவது பொறுப்பு எடுத்து செய்யுங்கப்பா...ஏம்மா சரோசா...உங்க மாமனே செய்யட்டுமே..நீ கம்முன்னுதான் இரேன்...”

“நான் எதுக்கு கம்முன்னு இருக்கனும், பொணத்த நாங்கதான எங்க வூட்ல கொண்டு வந்து போட்டுனுக்கிறோம்...பணத்த எங்களாண்ட குடுக்கச் சொல்லு...”

“இதப்பாரு ஜாஸ்தி பேசுனா...நடக்கறதே வேற...ஒழுங்கு மரியாதையா போய் ஒரு எடத்துல ஒக்காரு...எல்லாம் நான் பாத்துக்கறேன்...”

“எனக்கு ஒழுங்கு மரியாதையக் கத்துக்குடுக்க நீ யாருய்யா...?”

“என்னாடி வாய் நீளுது...எங்க வூட்டுக்காரனப் பாத்துக் கேள்விக் கேக்கற அளவுக்கு வந்துட்டியா....”

கமலா களத்தில் இறங்க....நடப்பவற்றைப் பார்த்து நியாயம் தெரிந்தவர்கள்...தலையில் அடித்துக்கொண்டார்கள்...கூட்டத்தில் ஒரு குரல்...

“ஊர் கவுண்டரக் கூப்புடுங்கப்பா....அவருக்குத்தான்...இதுங்க கட்டுப்படும். அவரே வந்து ஒரு நாயத்த சொல்லட்டும்....”

என்றதும்...ஊர்கவுண்டரைக் கூட்டிக்கொண்டுவர சிலர் போனார்கள். அமளி நிற்கவில்லை.

இந்த அமளியிலிருந்து தன் மனைவியைத் தனியேக் கூட்டிக்கொண்டு வந்த நாகன்,அவளைப் பார்த்து,


“ஏண்டி...எரும...மொதல்லயே அந்தக் கெழவி இடுப்புல தோப்பைய பாத்திருக்கறதுதான...ஏதோ நூறோ எரநூறோ செலவு பண்ணி நாமளே தூக்கிப் போட்டுட்டு இருக்கலாம். முன்னூறு நானூறு ரூபாவாவது கெடைச்சிருக்கும்”

கலையரசி
02-09-2010, 05:46 PM
இழவு வீட்டில் நடப்பனவற்றை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வசனம் மிக இயல்பு.

பணத்தாசை பிடித்த தன் உறவுகள், தன் கடைசி யாத்திரைக்குச் செலவு செய்ய அடித்துக் கொள்வார்கள் என்பதைச் சரியாக யூகித்துப் பணமும் சேர்த்து வைத்து விட்டுக் கெளரவமாக இறந்திருக்கிறாள் சின்னப்பாட்டி. நல்லவேளை, இல்லையேல் அவளுக்குக் கோடித்துணி கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பணம் கிடைத்தவுடன் அவர்களிடையே எப்படியொரு தலைகீழ் மாற்றம்!

முதலிலேயே பார்த்திருந்தால் முந்நூறு, நானூறு ரூபாய் கிடைத்திருக்கும் என்ற நாகனின் வார்த்தைகள், எல்லாவற்றிற்கும் மேலாய்ப் பிணத்திடமிருந்து கூட திருட வெட்கப்படாத மனிதனின் அக அழுக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அருமையான கதை! வாழ்த்துடன் பாராட்டுக்கள்!

ஆதவா
02-09-2010, 06:31 PM
பிணத்திடமிருந்து கூட திருட வெட்கப்படாத மனிதனின் அக அழுக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
!

இது சென்னை வழக்கு மொழிதானே!!!! அப்படியெனில் நிச்சயம் யதார்த்தம் இல்லை!!! ஏனெனில் நான் சென்னையில் (வியாசர்பாடி முதல் மஹாகவி பாரதியார் நகர் வரை) இருந்தவரையில் இந்தமாதிரி சண்டைகளில் கெட்ட வார்த்தை இல்லாமல் கேட்டதே இல்லை... குறைந்த பட்சம் “த்தா” என்ற வார்த்தை இருக்கும்...
மொழிநடை குறித்து எனக்கு அவ்வளவு பரிட்சயம் கிடையாது......

மற்றபடி, கதையை நீங்கள் அப்படியே விட்டுவிட்டது...... அருமை!!! அதுதான் உங்களுக்கும் என்னைப் போன்ற கத்துகுட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று நினைக்கிறேன். வாசகன் மீதியை உணர்ந்து கொள்கிறான்... கலையக்கா சொன்னமாதிரி, அக அழுக்கை காட்டுகிறது (இனிமே இந்தமாதிரி விமர்சனம் பண்ணுனீங்கன்னா..... நான் அழுதுடுவேன் கலையக்கோவ்!!!) க்ரேட்!!

யதார்த்த மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். உடனடியாக திருந்த மாட்டார்கள். (அதெல்லாம் சினிமாவில்தான்) கதையின் முடிவு சுபமாகவே இருக்கவேண்டும் என்று பழக்கப்பட்டவர்களுக்கு எதிராக இருக்கும் இக்கதை!! ஹாஹா...

வாழ்த்துக்கள் அண்ணா.!! நாட் அவுட் பேட்ஸ்மேன். சிக்ஸர் அடிச்சுட்டே இருக்கீங்க!! தொடர்ந்து அடிங்க.....

சுகந்தப்ரீதன்
02-09-2010, 10:31 PM
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா...?

கிழவிக்கு கண்ணதாசன் வரிகளின் யதார்த்தம் புரிஞ்சிருக்கும் போல...!! அதான் போறதுக்கு முன்னாடியே கொசுவத்துல சொருகிவச்சுட்டு போயிருக்கா...!!

எதார்த்தமாக உச்சரிப்புகளுடன் இயல்பான நடையில் ஒரு நடைமுறை நிகழ்வை காட்சிகளாக்கிய விதம் நன்று..!! வாழ்த்துக்கள் சிவாண்ணா...!!:)

கீதம்
03-09-2010, 12:12 AM
கிழவி இறந்தபிறகு இப்படி நடக்குமென்று அறிந்திருக்கிறாள் என்றால் இதுபோன்ற சுயநலமிக்க மனிதர்களின் மத்தியில் வாழும்போது எத்தனைத் துயரங்களை அனுபவித்தாளோ?

வழக்கு மொழி பிரமாதம். (சிவாஜி அண்ணா அந்தக்கெட்ட வார்த்தைகளைத் தணிக்கை செய்திருப்பார், ஆதவா. உறுத்தலின்றிப் படிக்கவேணாமா? )

சாவுவீட்டினுள் இருக்கும் உணர்வை அனுபவித்தேன். எப்போதடா இதை விட்டு வெளியில் வருவோம் என்றாகிவிட்டதை, இக்கதையின் வெற்றியாக உணர்கிறேன்.

பாராட்டுகள் அண்ணா.

அன்புரசிகன்
03-09-2010, 04:43 AM
ஒரு சாவுவீட்டில் உறவுகளின் அல்லாடல்களை அழகாக படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள். பணத்துக்காக எப்படியெல்லாம் மனம் மாறுகிறது.
நீண்டநாட்க்களுக்கு பிறகு வந்த கதை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா..

சிவா.ஜி
03-09-2010, 07:41 AM
அக அழுக்கு....பிரமாதம் கலையரசி மேடம். இதைத்தான் சொல்ல வந்தேன். 90 வயது கிழவியின் சாவு சோகத்தை பெரிதாகக் கொடுக்காது என்பது உண்மைதான். ஆனால்....குறைந்தபட்ச மனிதாபிமானம், இரக்கம் இதையெல்லாம் கூடவா கொடுக்காது?


அருமையான விமர்சனப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க.

சிவா.ஜி
03-09-2010, 07:47 AM
ஆதவா...படிப்பதற்கு சென்னை வழக்கு மொழியாக இருந்தாலும்...இது எங்கள் பகுதியின் வழக்கு மொழி. கிராமப்புறங்களில் இன்னும் கொச்சையாக இருக்கும். வாசிப்பவர்களின் சுலபப் புரிதலுக்காக சற்று எளிமைப்படுத்தியிருக்கிறேன்.

அமரன், அன்பு, ஓவியன், அக்னி இவர்களுக்கெல்லாம் முழுதும் புரிந்துகொள்வதில் சிரமமிருக்கும். ஆனாலும்....வழக்குமொழியை மாற்ற விரும்பவில்லை. அதேபோல...இங்கும் கெட்ட வார்த்தைகள் சரளமாய் வந்துவிழும். கீதம் சொன்னதைப்போல தவிர்த்திருக்கிறேன்.

எப்படியும் பிணம் சுடுகாட்டுக்குப் போகத்தான் போகிறது...எனவே முடிவை விரிக்க(விவரிக்க) விரும்பவில்லை. சிறப்பான பின்னூட்டமளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ஆதவா.

சிவா.ஜி
03-09-2010, 07:50 AM
உண்மைதான் சுபி(சுகந்தவாசன்) கிழவிக்கு மனிதர்களை படிக்க நிறைய அவகாசமிருந்திருக்கிறது.

மிக்க நன்றிப்பா.

சிவா.ஜி
03-09-2010, 07:58 AM
சுயமாய் சம்பாதித்த காலத்தில் இந்த அழுக்கு மனிதர்களின் அழுக்கை அறிந்திருக்க மாட்டாள். ஆனால் அடுத்த பதினைந்து வருடங்களில் நிறைய அனுபவித்திருப்பாள்.

அதைத்தான் நாகனும் அவன் மனைவியும் ஆரம்பத்திலேயே காட்டிவிட்டார்கள்.

பாராட்டுக்கு மிக்க நன்றி கீதம் தங்கையே.

ஆதவா
03-09-2010, 07:59 AM
ஆதவா...படிப்பதற்கு சென்னை வழக்கு மொழியாக இருந்தாலும்...இது எங்கள் பகுதியின் வழக்கு மொழி. கிராமப்புறங்களில் இன்னும் கொச்சையாக இருக்கும். வாசிப்பவர்களின் சுலபப் புரிதலுக்காக சற்று எளிமைப்படுத்தியிருக்கிறேன்.
இங்கும் கெட்ட வார்த்தைகள் சரளமாய் வந்துவிழும்..


உங்கள் ஊரிலும் இப்படித்தான் பேசுவார்களா? :eek:
அப்பறம் அந்த கெட்டவார்த்தை விஷயம்.........
அது மன்றத்துக்கு இழுக்காச்சே! க்ரியேடிவிடியில் ரியாலிடியை முழுமையாக சில இடங்களில் நாம் பார்க்கமுடியாதுதான்..... அதனால்தான் சொன்னேன்... யதார்த்தம் கதையில் இருந்தாலும், நடப்பு வாழ்வில் அது இன்னும் யதார்த்தமாகவே இருக்கும்!!! :icon_b:

நான் சென்னையில் ஒரு குழாயடிச் சண்டையில் மாட்டிக் கொண்டேன்.... ஒரே ஒரு வாட்டர் கேனில் தண்ணீர் பிடிக்கச் சென்ற என்னை வாயில் வந்தபடி சகட்டுமேனிக்குத் திட்டினார்கள்....:mad:
அப்போ எனக்கு 15 வயசு.... திட்டியவரை எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது... சும்மாவா, சுமார் 200 பவுண்டு இருப்பாங்க...:eek:

மதி
03-09-2010, 08:00 AM
ச்சே எப்படியெல்லாம் அடிச்சுக்கறாங்க..? உரையாடல்கள் மிக யதார்த்தம்.. சாவுவீட்டுல நடக்கற சம்பவங்கள்... ம்ம். என்னத்த சொல்ல..
அடிச்சுக்கறது சின்னம்மாக்கு தானே.. முதல்ல வர்ற சின்னபாட்டி வசனத்துக்கு அப்புறம் அந்த சிறுவர்கள் கதையில் இல்லாதததால்.. தலைப்பு பொருத்தமா இருக்கா??
நல்ல கதைக்கு பாராட்டுக்கள் அண்ணா..

சிவா.ஜி
03-09-2010, 08:01 AM
பணத்துக்கு உள்ள பெரிய சக்திகளில் இதுவும் ஒன்று அன்பு. மனத்தையும் மாற்றும் அனைத்தையும் மாற்றும்.

மிக்க நன்றி அன்பு.

சிவா.ஜி
03-09-2010, 08:04 AM
வயதுக்காக அந்த சின்னப்பாட்டி தலைப்பை வைத்தேன் மதி. ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான். பொதுவாய் 90 வயது முதுமகளை பாட்டி என எல்லோரும் அழைப்பது வழக்கமென்பதால்....தானாகவே தலைப்பு வந்துவிட்டது போலிருக்கிறது.

இதுக்குத்தான் மதி வேணுங்கறது. ரொம்ப நன்றி மதி.

Ravee
03-09-2010, 08:14 AM
திட்டியவரை எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது... சும்மாவா, சுமார் 200 பவுண்டு இருப்பாங்க...:eek:

அடி பலமோ ஆதவா ... :lachen001: :lachen001: :lachen001:

Ravee
03-09-2010, 08:19 AM
நீண்டநாள் கழித்து கதை பகுதி சிவாஜி அண்ணா கையில் போய் இருக்கிறது இப்போது .... குருவே சரணம் ... இயல்பாய் சொல்லவேண்டியதை சொல்லி மற்றதை மக்களின் மனநிலையில் ( எல்லோரும் எல்லா இடங்களிலும் பார்ப்பதுதானே ) விட்டு சென்றது அருமை. வாழ்த்துக்கள் அண்ணா...:)

சிவா.ஜி
03-09-2010, 08:39 AM
மிக்க நன்றி ரவீ. கதைப்பகுதி...இன்று ஒருவர் கையில் இல்லை. மிகச் சிறந்த கதைசொல்லிகள் மன்றத்தில் உருவாகிவிட்டார்கள். இந்த ஆரோக்கியமான சூழல் மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இன்னும் நிறைய இருக்கிறது வாசிக்க....எப்போ வாசிச்சு...எப்போ பின்னூட்டம் போட்டு.....முடியல....!!!

அன்புரசிகன்
03-09-2010, 08:53 AM
எங்களுக்கு புரியாதா. ஒருசில வார்த்தைகள் புரியாமல் போகலாம். ஆனாலும் நாம தான் சினிமா பாக்கிறமில்லே............

உங்களுக்குத்தான் நம்ம பாசை புரியாமல் போகும்...:lachen001:

சிவா.ஜி
03-09-2010, 09:03 AM
ஆமா...ஆமா....சினிமாத்தான் இப்ப எல்லா வட்டார வழக்குமொழியிலயும் வெளிவர ஆரம்பிச்சுடிச்சே....!!! அப்ப அன்புக்கு புரியாம இருக்குமா...ஹா...ஹா...!!:lachen001:

meera
03-09-2010, 09:07 AM
அண்ணா,

முதலில் மெருகேறிய உங்கள் கதைக்கு என் வாழ்த்துக்கள். எதார்தமான கதை இது தான் உலக நடப்பு. பணம் இல்லைனா பிணம் ஆனாலும் அவஸ்தையே. சொந்த மக்களாய் இருந்தாலே அடித்துக்கொள்ளும் உலகில் மற்றவர்களை குறைகூற என்ன இருக்கிறது. இதே கதை எத்தனை வீடுகளில் அரங்கேறுகிறது. மனதின் ஓரத்தில் ஏதே ஒன்று சுக்கென தைக்கத்தான் செய்கிறது...

நாம் எங்கே போய் கொண்டிருக்கிறாம்???????
பதிலிலா கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது

சிவா.ஜி
03-09-2010, 09:13 AM
உண்மைதாம்மா மீரா. எங்கேயோ நிகழ்ந்த துயர சம்பவத்துக்கு நிதி கொடுப்பவர்கள் கூட..இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இப்படி நடந்துகொள்வதைப் பார்க்கும்போது....சில கேள்விகளுக்கு பதில் இல்லையென்றே தோன்றுகிறது.

ரொம்ப நன்றிம்மா.

(ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை மன்றத்தில் பார்ப்பது ரொம்ப சந்தோஷம். குட்டி சூப்பர் ஸ்டார் நலமா....?)

meera
03-09-2010, 09:16 AM
(ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை மன்றத்தில் பார்ப்பது ரொம்ப சந்தோஷம். குட்டி சூப்பர் ஸ்டார் நலமா....?)

இனி அடிக்கடி மன்றம் வருவேன் அண்ணா. உங்கள் அனைவரின் ஆசியால் குட்டி சுப்பர்ஸ்டார் மிக்க நலம்.

Nivas.T
03-09-2010, 09:56 AM
இப்படியும் பலர்

இதுபோல் நானும் நிறைய பார்த்திருக்கிறேன்

நல்ல கதை அண்ணா

மிக்க நன்றி

த.ஜார்ஜ்
03-09-2010, 04:49 PM
ஆமாங்க சண்டை ரொம்ப பலமாத்தான் இருந்தது.கூட்டத்தில என்னை அப்படியே விட்டுட்டு போயிடீங்க்களா.. அது கூட தெரியாம அங்கேயே உட்கார்ந்து நொந்து போயிட்டேன் தெரியுமா..[ கதையில் ரொம்ப இன்வால்வ் ஆயிட்டமாக்கும் ]

அமரன்
03-09-2010, 10:15 PM
கண்களை அலைபாய அனுமதிக்காமல், ஒரே இடத்தில் குத்த வைத்து விடுகிறது எழுத்தாளுமை.


முதியோர் இல்லக் காலம் போய் செத்த பிறகான பந்தாட்டக் காலம் விரைவில் மலரும் என்று அபாய எச்சரிக்கை விடுக்கிறது. அதுக்கேற்றார் போல் வாழும் போது திட்டமிடுங்கள் என அறிவுரைக்கிறது.

செத்தவீட்டில் சண்டை பிடிப்பது எங்கள் ஊரிலும் நடந்திருக்கு. அதே போல, என்ன மாதிரிப் பழகின மனிசி என்று ஊரே திரண்டு சண்டைக்காரரை உருட்டியோ வெருட்டியோ வழிப்படுத்தி சவத்தை வழி அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

என்னதான் இருந்தாலும் மனிதர்கள் இந்தளவுக்கு தரமிழக்கக் கூடாது.

வழக்கம் போலவே நல்ல கதை பாஸ்.

சிவா.ஜி
04-09-2010, 02:53 PM
நன்றி நிவாஸ்.

சிவா.ஜி
04-09-2010, 02:55 PM
ஆஹா....அப்ப அவ்ளோ நேரமும் அந்த ச்ண்டையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு உக்கார்ந்திருந்தது நீங்கதானா ஜார்ஜ்....சரி..சரி...எப்படியோ வந்துட்டீங்கல்ல....இல்லன்னா கொல்லிமலைக்கு ஒரு கை கொறைஞ்சிருக்கும்.

நன்றி ஜார்ஜ்.

சிவா.ஜி
04-09-2010, 02:57 PM
”என்னதான் இருந்தாலும் மனிதர்கள் இந்தளவுக்கு தரமிழக்கக் கூடாது.”

இழந்துவிட்டார்களே பாஸ்....இன்னும் இழந்துகிட்டேவும் இருக்காங்களே....!!!

ரொமப் நன்றி அமரன்.

பா.ராஜேஷ்
04-09-2010, 09:30 PM
வெகு நாட்களுக்கு பிறகு சிவா அண்ணாவின் கதை படிப்பதற்கு மிக நன்றாக இருக்கிறது... இன்னும் எழுதுங்கள் அண்ணா...

பா.சங்கீதா
05-09-2010, 06:57 AM
செத்த பிறகு கூட காசு செய்யும் வேலை நினைத்தாள் என் சொல்வது.
பாராட்டுகள்:)

சிவா.ஜி
05-09-2010, 08:55 AM
ரொம்ப நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
05-09-2010, 08:56 AM
ரொம்ப நன்றிம்மா சங்கீதா.

பூமகள்
05-09-2010, 01:38 PM
சின்னப் பாட்டியின் இறுதி யாத்திரைக்கு காத்திருந்து அங்கு நடக்கும் அனைத்தும் நேரில் கண்டது போன்ற உணர்வு..

சலசலப்பை அடக்க.. ஆக்ரோசம் வந்தது என்னிலும்.. பாட்டி முகம் கற்பனையில் பாவமாய் தெரிந்தது..

வெற்றுத் தாள் பணத்தின் இருப்பும், இல்லாமையும் எத்தனை பெரிய மனமாற்றத்தை மனிதன் மத்தியில் ஏற்படுத்த இயலும் என்பதற்கு ஓர் மிகப் பெரிய உதாரணம்..

நாகனின் வார்த்தை அதிதீவிர மனிதாபிமான வறட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது.. சுய நலம், பணத்தாசை மனிதர் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதற்கு இக்கதை ஓர் சான்று..

வழக்கு மொழி என்று சொன்னீர்கள்.. எந்த வட்டார மொழி என்று என்னால் உணர முடியாவிட்டாலும்... சொல்லாடல்கள்.. நேரே உரையாடுவது போன்றே அமைந்து வியக்க வைக்கின்றன..

எதார்த்தத்தை வெகு அழகாக கதையில் வார்க்கும் உங்கள் எழுத்துக்கு என்றுமே ரசிகை நான் சிவா அண்ணா..

இவ்வகை மனிதர்கள் தான் நிஜத்திலும் உள்ளார்கள் என்பது கசக்கும் நிஜம்.. எனக்கு ஜீரணம் பண்ண நேடு நாட்கள் ஆகும்.. அதற்குள் சின்னப்பாட்டியின் ஆன்மா அமைதியாய் உறங்கட்டும்.

பாராட்ட வார்த்தைகள் இல்லை.. தொடர்ந்து கலக்குங்க சிவா அண்ணா. :)

சிவா.ஜி
05-09-2010, 02:08 PM
வாம்மா....ரொம்பநாளைக்கு அப்புறமா என்னோடக் கதைக்கு ஒரு கவிதாயினியோட பின்னூட்டம். அதுவும் பின்னூட்டநாயகின்னு பட்டம் வாங்கின தங்கைகிட்டருந்துங்கும்போது...ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.

சுய நலத்துக்காக....பல மனிதர்கள் மனிதாபிமானத்தை தாற்காலிகமாக மறந்துவிடும் கொடுமை பல இடங்களிலும் நாம் பார்ப்பதுதான்.

இந்தமுறை எங்கள் கிராமத்தில் நிகழ்ந்த இதைப்போன்ற ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தேன். அங்கேயே...அனைவரின் பங்காக பணம் வசூலிக்கப்ப்ட்டு கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்கள். இறந்தது தனக்கென யாருமில்லாத ஒரு பாட்டிதான்.

என்னைப் பாதித்ததை...சற்று மாற்றி எழுதினேன். இந்த வட்டார வழக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிராமங்களில் வழங்குகிறது.

ரொம்ப நன்றிம்மா பூ.