PDA

View Full Version : காலத்தினை விற்கும் ஒருவனின் நாள்அகத்தியன்
02-09-2010, 10:26 AM
நீண்ட பகலொன்றின் ஆரம்பம் இன்று,
அதே கவலைகளுடன் எனது பயணம் ஆரம்பமானது
எதுவும் புதிதாய் இல்லை.
கடக்கின்ற மனிதர்கள் முதல்,
தானியம் தேடும் அப்புறாக்கள் வரை.
மேசை - தாள்களால் நிறைய,
கவலைகள் உருமாறி,
அலுவலாகத் தொடங்கியது.

காலம் கரைய, இதோ உணவு வேளை.
பசி மட்டுமே தணிக்கும் உணவினை தேடி ஓடுகின்றேன்.
அதோ அப்புறாக்கள் கூட இன்னும் மேய்கின்றன.
அசதியான ஒரு மாலையில் மீண்டும்,
எந்திரங்கள் முடுக்கப்பட,

முடிவில்
இதோ இரவின் எதிர்பார்ப்போடு
ஓர் நடைப்பிணம் அறை நோக்கி நகர்கின்றது.
நாளை
மீண்டும் அதே மீட்டலுக்கு தயாராகவென…

ஆதி
02-09-2010, 12:55 PM
மேசை - தாள்களால் நிறைய,
கவலைகள் உருமாறி,
அலுவலாகத் தொடங்கியது.

இந்த படிமம் மனதை கவர்ந்தது அகத்தியன் இவ்வாறு நாம் ஒன்றில் இன்னொன்றை தொலைத்தோ ? ஒளித்தோ ? மறந்தோ ? தற்சமய நிவாரனியோடு வாழ பழகி விட்டோம், நாளை அதையே தான் சந்திக்க போகிறோமெனும் நினைப்பில்லாம..

பாராட்டுக்கள்

Nivas.T
02-09-2010, 01:05 PM
எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிச்சி

அழகான படைப்பு
நன்றி அகத்தியன்

ஆதவா
05-09-2010, 01:25 AM
எல்லாரும் பூசிக்கொள்ளும் பொதுவேஷம். இல்லையா அகத்தியன்?
ஆனால் சிலருக்கு வேஷத்தைக் கழுவி துடைக்கத் தெரிகிறது. நம் கரங்கள்தானே வேஷமிட்டன? அழிக்க மட்டும் மறப்பதேன்?

//பசி மட்டுமே தணிக்கும் உணவினை தேடி ஓடுகின்றேன்.//

ரொம்ப அழகாக இருக்கிறது.. வெறுஞ்சோற்றுக் குவியலோடுதான் எல்லா வயிறுகளும் நிறைகின்றன. மனம் நிறைந்து சாப்பிட எவ்வளவு தருணங்கள் இருக்கின்றன?

இந்தமாதிரி சுழற்சி கொண்ட ஒரு கவிதையை மன்றத்தில் எழுதியிருக்கிறேன். வாசியுங்களேன்..

http://tamilmantram.com/vb/showthread.php?p=404222#post404222

அமரன்
05-09-2010, 10:00 AM
அருமை.. அருமை..

குடும்பத்துடன் குதூகலமாக இருக்கும் போது விற்ற காலங்களை வாங்கி விடுகிறோம் என்பது உண்மை.

நுண்மையான உணர்வுகளால் கவிதை பின்னப்பட்டுள்ளது.

பாராட்டுகள் அகத்தியன்.

பூமகள்
05-09-2010, 10:31 AM
இழந்த காலம்
இல்லத்தில் கழித்து
மகிழ்ச்சி கூட்டலாம்..

மனமும் வயிறும்
நிரம்புமே...!!

எந்திர வாழ்க்கை.. எதார்த்தமாக எடுத்துக் கொள்ளத் தள்ளப்பட்டுவரும் காலம் இது... உணர்த்தியது கவிதை..

அவசர அவசிய மீட்டல் தேவை..

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் அகத்தியன்.

சிவா.ஜி
05-09-2010, 01:39 PM
ஒரே படகின் சக பிரயாணியாய் நானும். சில நேரங்களில் இது இன்றுதானா...என்ற சந்தேகமே ஏற்பட்டிருக்கிறது.

நுண்ணிய கவிதை. வாழ்த்துக்கள் அகத்தியன்.

சுடர்விழி
06-09-2010, 02:27 AM
நல்ல கவிதை அகத்தியன்...
’பசி மட்டுமே தணிக்கும் உணவினை தேடி ஓடுகின்றேன்.’ அருமையான வரிகள்..எந்திர வாழ்க்கையின் பாதிப்பை ,மெல்லிய உணர்வுகளாக வெளிப்படுத்தியிருக்கிறிர்கள்...வாழ்த்துக்கள் !

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-09-2010, 02:56 PM
சற்றும் விலகிராத வாழ்க்கைக் கோட்டின் பயணத்தை விளக்கும் அர்த்தமுள்ள கவிதை. பாராட்டுக்கள்.

govindh
08-09-2010, 06:24 PM
காலத்தினை விற்கும் ஒருவனின் நாள் -
எந்திர வாழ்க்கை ...ஒவ்வொரு நாளும்
இப்படியே கழிகிறது....

கவிதை அருமை....
பாராட்டுக்கள் அகத்தியன்.

பாரதி
11-09-2010, 11:29 AM
காலத்தை விற்று கவலைகளை வாங்க வேண்டுமா என்ன..?

எல்லாவற்றுடன் வேலையையும் நேசியுங்கள். பின்னர் கூறுங்கள்.

வேறுபட்ட சிந்தனைகளை கவிதையாய் மீட்டும் கைவண்ணம் உங்களிடம் இருக்கிறது.

கவலைகள் மறையட்டும். கவிதைகள் விளையட்டும்.

எழுதுங்கள் நண்பரே.