PDA

View Full Version : நீலவேணி கதையின் விவாத திரி



ரங்கராஜன்
01-09-2010, 06:48 PM
நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! என்ற கதையின் விவாத திரி இது.

தாமரை அண்ணனின் அனுமதியுடன் தான் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்

தாமரை அவர்களின் சமீபத்திய தொடர்கதையான நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!!.......... என்ற திரியை அனைவரும் படித்து இருப்பீர்கள்.

நான் ஒரு கதை திரியை படிக்கும் சில வினாடிகளுக்கு முன்பாவது அந்த கதைக்கான உறவுகளின் விமர்சனத்தை படிப்பேன்.......... காரணம் அதில் பிரதிபலிக்கும் வாசகர்களின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளும்..........நானும் இந்த கதையை படித்தேன், அதற்கு முக்கிய காரணம் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள். இந்த கதையை படிப்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. ஆஹா, ஓஹோ, கொன்னுட்டார்யா, பிச்சிட்டார்யா..........

2. நல்லாயிருக்கு...... ஆனால் இந்த கதையை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கு அறிவு பத்தலையோ, இலக்கியதரம் வாய்ந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் படித்து, எதையாவது எழுதி விட்டு போவது.

3. எல்லா வரிகளையும் ஒண்ணு விடாமல் படித்து விட்டு, ஒரு வார்த்தை கூடா பின்னூட்டம் போடாமல் போய்விடுவது, புது பதிப்பு போட்டால் முதல் முதலில் முண்டியடித்துக் கொண்டு வந்து அதை படிப்பது.


இப்படி பட்ட மூன்று வகையான வாசகர்களை தாண்டித் தான் இந்த கதை வளர்ந்து இருக்கிறது. இந்த கதையை விமர்சிப்பதற்கு முன் இந்த கதையை நான் படித்த விதத்தை பற்றி சொல்லி விடுகிறேன்...... மொத்தமாக 5 முறை படித்தேன். 2 முறை கணிணி திரையில், மீதி 3 முறை பிரதி எடுத்து பேப்பரில் படித்தேன்.

சரி நான் என்னுடைய விமர்சனத்தை பதித்து விடுகிறேன், அதன் பின் விவாதத்தை ஆரம்பிப்போம். விமர்சனம் கடுமையாக இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும், தாமரை அண்ணாவிற்கு என்னை பற்றி தெரியும் அதனால் அவரிடம் மன்னிப்பு அவசியம் இல்லை. நான் கேட்காத கேள்விகள் அனைத்திற்கும் பதிலை ரெடியாக வைத்திருக்கும் அவர், நான் கேட்கும் கேள்விகளுக்கா பதில்லை என்று கூறப்போகிறார்.

என்னை பொறுத்தவரை இந்த கதை நாவலின் கோட்பாடுகள் பலவற்றை மிஞ்சி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நாவலாகி விடும் என்பது போல உள்ளது இந்த கதை.

முதலில் இருந்தே பற்றில்லாமல் சென்றுக் கொண்டு இருக்கிறது கதையின் தொடக்கம். காரணம் தேவையான இடத்தில் இல்லாத வர்ணனைகள் தேவையில்லாத இடத்தில் அதிகமாக இருக்கிறது. எது தேவையான இடம் எது தேவையில்லாத இடம் என்று நீ எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். உண்மையில் வாசகன் தான் அதை உணர வேண்டும், அல்லாது வாசகனுக்கு அதை உணர்த்தவாவது எழுத்தாளர் செய்து இருக்க வேண்டும்.

நீலவேணி என்ற பெயரில் உள்ள சஸ்பென்ஸ் புரிவதற்குள்ளே, முந்தைய விஷயங்கள், உப செய்திகள் எல்லாம் மறந்து போய்விடுகிறது......... இது கதையை திரும்ப படிக்க வைக்கும் உத்தியாக நீங்கள் கையாண்டாலும், அதில் பிரச்சனை என்னவென்றால், திரும்ப படிக்கவும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது..... புரிந்த வரை போதும் அப்படியே தொடர்வோம், பின்னாடி வரும் விஷயங்களாவது புரிகிறதா என்று வார்த்தைகளை சீக்கிரமாக முழுங்கி விட்டு செல்ல துடிக்கிறது மனது.

முக்கியமாக சிந்தினைவாதிகள் என்று அவர்களுக்கு சரியான அடையாளங்களை கொடுக்காமல் வெறும் சிந்தினைவாதி 1, 2 , 3, 4 என்று குறிப்பிட்டு இருப்பது, நாவலின் சறுக்கலில் முதல் இடம்.

பின்னர் வித்தியாசம் என்ற பெயரில், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல், மனது போன போக்கில் கருவை மாற்றுவது என்பது கண்டிப்பாக தவறான அணுகுமுறையாக நான் உணர்கிறேன். காரணம் அவை முழுவதும் திரைக்கதை வடிவத்தில் சரியாக வரும். அப்போது தான் வாசகர் சாரி பார்வையாளர்களின் மனதில் நீங்கள் நினைத்த கருவை கொண்டு வர முடியும்.

நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை, படத்தை பார்ப்பதற்கும் நாவலை படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படத்திற்கு இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர் என்று பலர் இருப்பார்கள். அதை பார்ப்பவர்கள் வேறும் ஒரு பார்வையாளன் மட்டுமே அவன் கண்முன்னே நடப்பதை அவன் பார்க்கிறான். அதில் அவனுடைய, அறிவுக்கும், சிந்தனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் நாவலை பொறுத்தவரை வாசகன் தான் இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர், ஏன் தயாரிப்பாளர் கூட அவன் தான். உதாரணத்திற்கு அமெரிக்காவை பற்றி நாவலில் படித்தால், அங்கு சென்று சுற்றித் திரிந்து விட்டு வருவான். இதில் எழுத்தாளன் என்பவன் அவனுக்கு எழுத்தை படிக்க உதவியவன் மட்டுமே.

உங்கள் நீலவேணி கதை, மனோதத்துவரீதியான கட்டுரை அதுவும் வாழ்வியல், உலக நடப்பு, சகமனித உணர்ச்சி என்று சேரக்கூடாத பல கலவைகள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறது, அதுவும் சொல்லகூடாத விதத்தில். இந்த கதையை புகழ்ந்தவர்களை எல்லாம் இலக்கியவாதிகளாகவும், புகழாதவர்களை கடைநிலை வாசகனாகவும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இதைப் பற்றி சொல்லப்போகிறோம் என்ற தெளிவான முடிவில் நீங்கள் இருப்பதாக நான் உணரவில்லை. காலம் போன போக்கில் கதையையும் அறிவுரையையும் சொல்லி விட்டு போவதாக நான் உணர்கிறேன். அறிவுரைகள் எல்லா நேரத்தில் இனிப்பதில்லை, நாவலுக்கு உண்டான தவிர்க்க முடியாத சிலவற்றை நீங்கள் சேர்த்து தான் ஆகவேண்டும். முக்கியமாக இழையோடும் நகைச்சுவைகள், இல்லை என்றால் அலுப்பு தட்டி விடும். இந்த கதையை படித்து விட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நான் ஆதனை தொடர்ப்பு கொண்டேன். பின் வரும் வசனங்களில் 1 நான், 2 என்று குறிப்பிடுவது ஆதன்.

1 - என்னடா பண்ற, தாமரை அண்ணாவின் கதையை படிச்சியா.

2 - படிச்சேன்.

1 - எப்படி இருந்தது.

2 - இன்னொரு வாட்டி படிக்கனும் டா.

1 - நான் 3 முறை படிச்சிட்டேன்,

2 - எப்படி இருக்கு,

1 - சின்னதா சொல்லனும்னா, அது வெறும் சொற்களின் குவியலாக தோன்றுகிறது.

2 - ஏன்டா, அது ஒரு புதிய முயற்சி டா, வித்தியாசமான முயற்சி டா. அதில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்டா, அதை நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

1 - டேய் என்னடா தாமரை அண்ணாவோட பிஆர்வோ மாதிரி பேசற, எந்த விஷமாக இருந்தாலும் மக்களிடத்தில் போய் சேரணும் அப்ப தான் புரியும்.

2 - பாரதி வார்த்தைகள் புரியவில்லை என்றால், அதுக்குன்னு பாரதி தப்புனு ஆகிடுமா.

1 - எல்லாருக்கும் பாரதியை புரியுமா, இல்லை கண்ணதாசனை புரியுமா.

2 - இது தப்பான எடுத்துக்காட்டு டா.

1 - சரி எதுவாக இருந்தாலும், தாமரை என்ற மனிதரை உனக்கு தெரியும் எனக்கு தெரியும், அவரின் வார்த்தைகளில் எதாவது நன்மை இருக்கும் என்று அவரை தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனால் அவரைப் பற்றி தெரியாத ஒருவனுக்கு இந்த கதையை படிக்க நாட்டம் வரும்மா வராத, மனதில் கைவைத்து சொல்லவும்.

2 - அப்படியில்லடா வித்தியாசமான முயற்சிடா இது ஒருவேளை நமக்கே கூட அப்புறமா புரியலாம்.

1 - எப்போ குழிக்குள் இறங்கியதுமா, டேய் ஒரு படைப்பை படித்தால் நாம் திக்குமுக்காடி போகவேணடும் என்ற அவசியம் இல்லை, உதட்டோரமாக புன்னகை பூத்தாலே போதும்.......... அறிவுரைகளை எல்லாம் மக்களுக்கு இலை மறைவு காயாக தான்டா கொடுக்கனும், இந்த மாதிரி கையில் குச்சியை வைத்துக் கொண்டு கரும்பலகையில் பாடம் நடத்தினால் புரியவே புரியாது.

2 - அப்ப விமர்சனம் எழுத வேண்டியது தானே.

1- நான் எழுதி விடுவேன், என் மனதில் பட்டதை தான் நான் எழுதுவேன், அதுவும் நான் நம்பும் மனிதர்களுக்கு தான் எழுதுவேன், காரணம் நான் எழுதப்போய் அதை அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டால் அது பிரச்சனை இல்லையா. அதனால் தான் அதுவும் இல்லாமல் இந்த தொடர்கதைகள் பக்கம் நான் தலைவைத்து படுப்பதில்லை, காரணம் என் மனதில் பட்டதை எழுதப்போய், திரியின் உரிமையாளருக்கு அது மனகஷ்டத்தை உண்டு செய்து, திரியை தொடரமுடியாமல் போய்விட்டால் எனக்கு கஷ்டமாக ஆகிவிடும் அதனால் தான். நீ போட வேண்டியது தானே.

2 - இரு அவர் இப்ப தானே கொஞ்சம் எழுதி இருக்காறு இன்னும் நிறைய இருக்கே அப்புறம் விமர்சனம் எழுதுவோம்.

1 - கண்டிப்பாக ஒரு நாவலின் முதல் பத்து பக்கங்கள் தான் முக்கியமானது. காரணம் இந்த நாவலை படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வைப்பது அந்த பக்கங்கள் தான், இந்த கதையை பொறுத்த வரை அதற்கான வாய்ப்பு இல்லை.

2 - பின் வரும் பாகங்களில் சுவாரஸ்யம் கூட வாய்ப்பு இருக்கலாம் இல்லையை.

1 - வாசகன் அந்த பக்கம் வரை வந்தால் தானே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. 9 பக்கத்தோடு புத்தகத்தை ஓரம் கட்டி விட்டால். என்ன செய்வது. தோ பாரு ஆதி தாமரை என்ற மனிதனை பற்றி தமிழ்மன்றத்தில் இருக்கும் அனைவரும் அறிவார்கள். அவரின் எழுத்துக்கு என்ற ஒரு மரியாதை இருக்கிறது. எதாவது அவர் நல்லது சொல்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் உலக வாசகர்கள் என்பது தமிழ்மன்றம் மட்டுமல்ல, தாமரை நல்ல விஷயங்களை தான் சொல்வார் என்று குருடாம்போக்கில் நம்பவேண்டிய அவசியம் உலக வாசகனுக்கு கிடையாது. அதே போல தாமரையின் மனது நோகாமல் விமர்சனம் அளிக்க வேண்டும் என்றும் அவன் நினைக்க மாட்டான். அவர்களை பொறுத்த வரை தாமரை ஒரு எழுத்தாளன், அவரின் முதல் நாவல் இது, அதில் இருக்கும் விஷயங்கள் சரியா தப்பா, சுவாரஸ்யமா இருக்கிறதா இல்லையா, படிக்கலாமா வேண்டாமா என்று தான் யோசிப்பானே ஒழிய. அங்கு தாமரையின் பெயர் கூட நினைவுக்கு வராது. இதே போல தாமரை ஒரு கன்னி எழுத்தாளர் என்றால் அவரை நாம் உற்சாம மூட்டி தேத்தி எழுத வைக்கலாம். ஆனால் அவரோ உலக விஷயத்தில் இருந்து ப்ளூட்டோ வரை விவரிப்பவர், அத்தகைய எழுதாளனிடம் இருந்து இந்த மாதிரி ஒரு நாவலோ, தொடர்கதையோ நான் எதிர்பார்க்கவில்லை.

கதையில் வரும் சிந்தனைவாதிகளுக்கு.............. ஒரு வாசகனின் வேண்டுகோள்.

அறிவரைகளை தேனில் நனைத்து கொடுங்கள் சாப்பிடுகிறோம், ஆனால் வேப்பிலையை ஒரு சிந்தனைவாதி அப்படியே சாப்பிட்டான் என்றால் நாங்களும் அதை அப்படியே சாப்பிடுவதற்கு நாங்களும் சிந்தனைவாதிகள் கிடையாது......... அப்படி அது நல்லது என்று நாங்கள் சாப்பிட்டால், நாங்கள் கதை எழுத நீங்கள் அதை படித்துக் கொண்டு இருப்பீர்கள்.......... தேனில் வைத்து கொடுத்தால் சாப்பிட்டுகிறோம் என்பதால் ஊட்டிக் கொண்டே இருக்காதீர்கள்... வாந்தி தான் வரும்...........

தமிழ்மன்ற தாமரை என்ற பர்சனாலிட்டியை தூக்கி எறிந்து விட்டு, அனுபவஸ்தன் தாமரை என்ற எழுத்தாளனை துணைக்கு வைத்துக் கொண்டு எழுதுங்கள்.............. என்னைப் போன்ற கடைநிலை வாசகனும் மனநிறைவோடு உடன் வருவோம்.

வாழ்த்துக்கள்

தம்பி தக்ஸ்

தாமரை
02-09-2010, 01:24 AM
என்னை பொறுத்தவரை இந்த கதை நாவலின் கோட்பாடுகள் பலவற்றை மிஞ்சி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நாவலாகி விடும் என்பது போல உள்ளது இந்த கதை.

எந்த புதுப்பாணியும் உருவாகும் பொழுது இந்த விமர்சனம் சட்டென அங்கு வரும். அந்தப் பாணி மீண்டும் மீண்டும் கண்ணில் படும்பொழுது அதை மனம் ஒப்புக் கொள்ள ஆரம்பிக்கிறது. தெரியாத பாதையில் பயணிக்க ஆசைப்படுபவர்களுக்கு ட்ரெய்ல் பிளேசர்ஸ் என்று பெயர். இனம் புரியாத பாதையில் பயணிப்பவர்கள். நாவலாக எழுதும் எண்ணமில்லாமல் ஆரம்பித்து பின்னால் பயணிக்க பயணிக்க நாவலாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனால் இங்கு நாவலுக்கான இலக்கணங்கள் இல்லை.


முதலில் இருந்தே பற்றில்லாமல் சென்றுக் கொண்டு இருக்கிறது கதையின் தொடக்கம். காரணம் தேவையான இடத்தில் இல்லாத வர்ணனைகள் தேவையில்லாத இடத்தில் அதிகமாக இருக்கிறது. எது தேவையான இடம் எது தேவையில்லாத இடம் என்று நீ எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். உண்மையில் வாசகன் தான் அதை உணர வேண்டும், அல்லாது வாசகனுக்கு அதை உணர்த்தவாவது எழுத்தாளர் செய்து இருக்க வேண்டும்.

கதை ஆரம்பித்த இடம் என்ன? கதையின் ஆரம்பம் வேறுதிரியில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த மனநிலையில் அது ஒரு உருவகமானக் கதை. வேறு கதை. அது ஒரு சங்கேதமான செய்தி. அட இந்தக் களம் நன்றாக இருக்கிறதே என தனித் திரியாக்கப்பட்டு நாவலாக மாற ஆரம்பித்து விட்டது. அதனால் துண்டாக ஆரம்பித்தது. இதை நாவலாக்க வேண்டுமானால் அதைச் சீரமைக்க வேண்டும்தான்.

நீலவேணி என்ற பெயரில் உள்ள சஸ்பென்ஸ் புரிவதற்குள்ளே, முந்தைய விஷயங்கள், உப செய்திகள் எல்லாம் மறந்து போய்விடுகிறது......... இது கதையை திரும்ப படிக்க வைக்கும் உத்தியாக நீங்கள் கையாண்டாலும், அதில் பிரச்சனை என்னவென்றால், திரும்ப படிக்கவும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது..... புரிந்த வரை போதும் அப்படியே தொடர்வோம், பின்னாடி வரும் விஷயங்களாவது புரிகிறதா என்று வார்த்தைகளை சீக்கிரமாக முழுங்கி விட்டு செல்ல துடிக்கிறது மனது.

இது வாசகனுக்கே உரிய பிரச்சனை. தன் மனக்கண்ணில் காட்சிகளை உருவகிக்க இயலாமல் போகும்பொழுதெல்லாம் மீண்டும் வாசிக்க வேண்டியதாகி விடுகிறது. சாதாரணமாக பெயருள்ள நதியையும்.. பெயரில்லா மனிதர்களையும் பார்த்தவுடன் மனம் குழம்ப ஆரம்பித்து விடுகிறது. மனதில் உருவாகும் அந்தச் சித்திரங்கள் மங்கலாகி விடுகின்றன.

மனதில் தெளிவான படம் வரைய முடியாத போது முன்பு அறிந்தவைகள் மறந்து போவது மிக சகஜம். இங்கு களத்தை விட எழுத்து நடையின் ஜாலம்தான் இதற்கு முக்கிய காரணம். எழுத்துக்களில் உள்ள கருத்து வித்தியாசங்கள் மனதில் படம் வரைவதை தடுத்து அர்த்தங்கள் புரியவேண்டுமென அகராதியைத் தேடுகிறது. ஆனால் அகராதிகளில் சொல்லின் அர்த்தம் மட்டுமே இருக்கிறது. சொற்கட்டுகளின் அர்த்தங்கள் இருப்பதில்லை. இந்த ஒரு வாக்கியத்தில் என்ன சொல்கிறார் எனச் சிந்தனை வரும் பொழுது மனதில் உண்டான சித்திரம் அழிந்து விடுகிறது. படித்தது மறந்து விடுகிறது.

உதாரணமாக

மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது..

இப்படி தடால் என ஒரு சிந்தனை கதை நீரோட்டத்தில் வருகிறது. இப்படி நாவலின் கதையோட்டத்தின் குறுக்கே இப்படி பல சிந்தனை முட்டுக்கட்டைகள் இருப்பது கதையுடன் பயணிப்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கிற மாதிரி இருந்தாலும், இது புதிய விஷயமல்ல. இதைக் கண்ணதாசனின் நாவல்களில் அதிகமாகக் காணலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் வர்ணனைகள் தேவையில்லா இடத்தில் என்பதை விட எதிர்பாராத இடத்தில் என்று சொல்லலாம். வர்ணனைகள் என்று பார்த்தால் தீவின் அமைப்பு, மற்றும் புயல்மழை ஆகியவையே வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. மற்றவை உருவகங்களாகச் சங்கேதங்களாக மாறி இருக்கின்றன. அவைகள் வர்ணனை அல்ல.


முக்கியமாக சிந்தினைவாதிகள் என்று அவர்களுக்கு சரியான அடையாளங்களை கொடுக்காமல் வெறும் சிந்தினைவாதி 1, 2 , 3, 4 என்று குறிப்பிட்டு இருப்பது, நாவலின் சறுக்கலில் முதல் இடம்.

யார் என்பது முக்கியமல்ல என்பதன் நோக்கம் அது. ஒன்று இரண்டு மூன்று என்ற எண்கள் கூட தேவையில்லை. சொல்லப்போனால் இந்தக் கதையை பார்க்க வேண்டிய கோணம் என்ன? என்பதை ஒரு கைதேர்ந்த வாசகன் சட்டெனப் புரிந்து கொள்ளவே அப்படி இருப்பது உதவும். இது ஒரு சாதாரணமான கதை என்பதற்கும் இது ஒரு தத்துவம் என்பதற்கும் வேறுபடுத்திக் காட்ட இது மிகவும் உபயோகப்படும். சாதாரணமான ஒரு கதை நாவலை படிக்க ஆசைப்படும் வாசகன் இதை புரிந்து கொள்ள மிகவுமே சிரமப் படவேண்டும். ஆனால் தத்துவ ஆராய்ட்சியை நாடும் மனமுள்ளவன் இந்த வகையான கையாளுவதை மிகவும் ரசிக்க முடியும். கம்ப இராமாயணம், மகாபாரதம் போல கீதை மக்கள் மனதில் இல்லாததற்கு காரணம் அதனுள் வெறும் தத்துவம் மட்டுமே இருக்கிறது. ஆனால் கீதையின் தத்துவங்கள் துளித் துளியாக பலரின் மனதில் இருக்கிறது. கீதையை சாதாரண வாசகன் வாசிப்பது இல்லை. ஆனால் அடுத்தவர் சொல்லும் போது, விவரித்துச் சொல்லும் போது கேட்க ஆசையாக இருக்கும். கேட்ட பின்னால் மனதில் நிலைப்பது மறுபடி சில வரிகள் மட்டுமே. தத்துவக் கதைகளுக்கும், சாதாரண நிகழ்கதைகளுக்கும் உண்டான வித்தியாசம் இதுதான்.


பின்னர் வித்தியாசம் என்ற பெயரில், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல், மனது போன போக்கில் கருவை மாற்றுவது என்பது கண்டிப்பாக தவறான அணுகுமுறையாக நான் உணர்கிறேன். காரணம் அவை முழுவதும் திரைக்கதை வடிவத்தில் சரியாக வரும். அப்போது தான் வாசகர் சாரி பார்வையாளர்களின் மனதில் நீங்கள் நினைத்த கருவை கொண்டு வர முடியும்.

என்னப்பா இது கதையோட்டம் யூகிக்க முடியற மாதிரி இருந்தால் சுவாரஸ்யமே இல்லை என்கிறீர்கள், கதையோட்டம் யூகிக்க முடியாமல் இருந்தால் குழப்புகிறது என்கிறீரே.. சரி நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

ஒருவரின் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசம் கதையில் பளிச்சென தெரியும். எப்படியெல்லாம் சிந்தனைகள் மாறி பரிமாணம் அடைகின்றன. என்பதை பார்த்தால் இதேபோல்தான் இருக்கும். அதனால்தான் சிந்தனாவாதி உள்ளே வந்தார். சிந்தனாவாதி என்னும் பொழுது சாதாரண வாசகன் ஒரு உருவத்தைக் கற்பனை செய்கிறான். ஒரு இலக்கிய வாசகன் ஓ! இது மனதின் ஒரு பகுதி.. என்று புரிந்து கொள்கிறான். மனதில் பல சிந்தனாவாதிகள் இருக்கிறார்கள். மனம் ஒருமுகப் பட்டுச் சிந்திக்கும் பொழுது சிந்தனாவாதிகள் ஒத்த கருத்தைப் பேசுவதையும், குழப்பத்தில் இருக்கும் பொழுது வேறுபட்டுச் சிந்திப்பதையும் வாழ்க்கையில் ஏற்கனவே புரிந்திருப்பீர்கள். சிலசமயம் எல்லாச் சிந்தனாவாதியும் மௌனயுத்தம் நடத்துவது சிவா.ஜியும் உணர்ந்திருப்பார்.

கதையைப் பலகோணங்களில் காணவேண்டும் என்பதுதானே அடிப்படை நோக்கம், அப்படி இருக்க வாசகனை திரும்பத் திரும்ப படிக்க வைக்காவிட்டால் நீதி போதனை கதைக்கும் தத்துவக் கதைக்கும் என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது?

தொடரும்

த.ஜார்ஜ்
02-09-2010, 04:03 PM
இங்கே நான் எழுதுவது இந்த திரியை குறித்து மட்டுமேயல்ல.. பொதுவான இலக்கிய சூழல் குறித்த எனது ஐயங்களாகவே புரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ராக்கி பற்றிய இழைகள் ஓடிக்கொண்டிருந்ததின் தொடர்ச்சியாக நீலவேணி தொடங்கப்பட்டதால் இது அந்த சகோதரி பற்றிய செய்தியாயிருக்குமென்று முதலில் நினைக்கத்தோன்றியது. அது மேலும் தொடர்ந்த போது ஏதோ ஒரு புதிய முயற்சி நிறைவேற்றுவதற்கான [அல்லது நிறைவேற்றிய] சூசகமான செய்தியாகப் பட்டது. பிறகு..... புரிந்துகொள்ள மெனக்கெட முடியவில்லை. அவ்வளவுதான்.

மெனக்கெட்டால்தான் புரிதல் வசப்படும் என்றாலும் பல்வேறு அல்லாடல்களுக்கிடையே அவை சாத்தியமில்லாமல் போய் விடுகிறது.

தாமரை சொல்லிய மாதிரி எந்த மாற்றங்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ள திணறுவது குற்றமல்ல. இயல்புதான். வழக்கமாக ஒரே தடத்தில் நடந்து பழகிவிட்டோமா.... புதிய தடம் பிடிக்க மனதை தயார் படுத்த வேண்டியிருக்கிறது.

கூடவே ஒரு கேள்வியும் எழுந்தது. ஓர் எழுத்தாளன் தனது படைப்பை வாசகன் புரிந்து கொள்ள மெனக்கெடதான் வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறான். நான் சிரமப்பட்டுதான் எல்லாம் தெரிந்து கொண்டேன். அதை இலகுவாய் நீ புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவா? அல்லது எளிமையானவை இலக்கியம் ஆகாது என்ற கொள்கைக்காகவா? அல்லது சங்கேதங்களாகவும், உருவகங்களாகவும் எழுதுவதே மேதாவிதன்மை என்று காட்டவா..? பல இலக்கியவாதி [என்று சொல்லிக்கொள்கிறவர்]களின் எழுத்துகளைப் பார்க்கிறபோது இப்படியெல்லாம் தோன்றுகிறது.
ஒரு எழுத்தாளர் ‘ நான் உங்களுக்காக எழுதவில்லை. காலம் தீர்மானிக்கும் என் இலக்கிய படைப்பை’ என்கிறார். மனிதர் படிக்காமல் காலம் அதை எவ்வாறு தீர்மானிக்கும் என்று புரியவில்லை.மனிதர்களுக்காக எழுதவில்லை என்றால் அவர் ஏன் அதை புத்தகமாக்கினார். பல நூறு ரூபாய்க்கு விலை வத்தார் என்றும் குழப்பம் வருகிறது.
தர்க்கமிடத் தெரிந்தவன்தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே அவனது தர்க்கம் மெய்பித்தவைதான் உண்மை என்றாகி விடுகிறதா..?
விவிலியத்தில் ஒரு செய்தி அறிய முடிந்தது... பழைய ஏற்பாட்டு காலங்களில் திருச்சட்டங்களை கடைபிடிக்காதவர்கள் பாவிகளாக கருதப்பட்டார்களாம். ஏன் கடைபிடிக்காமல் போனார்கள். முதலில் அவர்கள் திருச்சட்டத்தை படித்திருக்க வேண்டும். படித்தாலும் புரிந்திருக்க வேண்டும். இரண்டுமே அவர்களுக்கு வாய்க்கவில்லை.
படிக்கத்தெரிந்தவர்கள் அவர்களுக்கு எஜமானர்கள் ஆனான். ஒடுக்கி தண்டித்து. அடிமைப் படுத்தி கோலோச்சினானாம்.
இப்போதும் இலக்கியம் என்றும் அல்லாதவை என்றும் இருவேறு வர்க்கங்கள் இருப்பதைப் போன்ற தோற்றம் கண்ணில் நிழலாடுவது.. நிஜம்தானா?

ஆதவா
02-09-2010, 05:26 PM
இலக்கியம் குறித்த உங்கள் கேள்விகள் எல்லா வாசகர்களுக்கும் ஏற்படக் கூடியதுதான்!
ஏன் எளிமையாக எழுதக் கூடாது?
ஏன் கஷ்டமாகவே எழுதவேண்டும்??
இது சரியான கேள்விதான்... ஆனால் இதைப் பற்றி நாம் சந்திக்கும் பொழுது விவரமாகப் பேசலாம்.
ஆனால் அதற்கு முன்னர் (இந்த பதிவில் எழுத வந்துவிட்டதால்) ஒரு சிறு முன்னோட்டம் சொல்லுகிறேன்!!

நீங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் பயோ கெமிஸ்ட்ரி பற்றிய ஒரு புத்தகத்தைக் கொடுத்து படித்து புரிந்து கொள் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? புரியாது என்று சொல்வீர்கள் தானே? அதற்காக பயோ கெமிஸ்ட்ரி பற்றிய புத்தகம் என்றாலே அது புரியாத புத்தகம், மேதைதான் படிக்கவேண்டும் என்று சொல்வதா?

இலக்கியமும் அப்படித்தான்..


புரியலையா...... ஓகே... டன்.... அது நமக்குத் தேவையில்லாத தளம்!!!
அப்ப எப்பத்தான் தெரிஞ்சுக்கறது?
அந்த தளத்தை நாம் மெல்ல அடைவோம்.... அப்ப தானா புரியும்!!

ஒரு குடத்தின் அடிப்பாகத்தில் தட்டுகிறீர்கள்... அது இசை
தெருப்பாடகன் வகையில்லாமல் பாடுகிறான் - அது இசை
மேடைப் பாடகன் சற்று இசைத்து பாடுகிறான் - அது இசை
இளையராஜா ஆர்மோனியம் வாசிக்கிறார் - அது இசை
டிசம்பர் மாதத்தில் கர்னாடிக் இசைக்கிறார்கள் - அது இசை...

இசையை ரசிப்பவன் பெரும்பாலும் இளையராஜாவோடு நின்றுவிடுகிறான். கர்னாடிக் பக்கம் வருவதே யில்லை!!! ஆனாலும் கர்னாடிக் கச்சேரிகள் இன்றும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன???

ஒருமுறை இளையராஜாவின் இசையில் வந்த பாடல், படம் என்னவென்று நினைவில்லை... பார்த்திபன் நடித்தது... அதன் இசையைக் கேட்கக் கேட்க..... கர்னாடி அவ்வளவு அற்புதமானதா என்று தெரிந்து கொண்டேன்//// அதுக்காக நான் முழுக்க அந்த இசையைக் கேட்க நினைக்கவில்லை. நம்ம மண்டைக்கு அதை ஏற்றும் சக்தியில்லை

அதிலும் கர்னாடிக் இருக்கிறதே.... ஒரே எழுத்தையே ஒன்பது விதமாகப் பாடுவார்கள்..... புரிகிறதா நமக்கு???? ம்ஹூம்....
இலக்கியத்தை புரிந்து கொள்ள ஜெயமோகனின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” உங்களுக்குத் தேவைப்படலாம்!!!

சரி!!! இப்பவே எனக்கு கண்ணக் கட்டுது!!!
தூங்கப் போறேன். எதுன்னாலும் நாளைக்குத்தான்!!

அப்பறம்..... இந்த கருத்து என்னோடது... அதுவும் உங்களுக்காக எழுதினது... இதற்கும் நீலவேணிக்கும் சம்பந்தமில்லை!!! :)

தாமரை
02-09-2010, 05:33 PM
ஜார்ஜ் இதில ஒரு விஷயத்தை மறந்திட்டீங்க. நாம யாருக்காக எழுதறோம்னு ஒரு விஷயம் இருக்கு.

பல சிந்தனைப் புலிகள், எழுத்தாளச் சிங்கங்கள் இருக்கும் ஒரு இடத்தில பாமரமக்களுக்கு கதை எழுதறது உங்களுக்கு தமாஷா தெரியலையா? (இந்த பதில் தக்ஸிற்கு அல்ல) இந்த இடத்தில் என் கடமையா நான் நினைக்கறது எழுத்தாளர்களை பல பரிமாணங்களில் சிந்திக்க வைப்பதுதான். அது நடந்தா போதும்னு நினைக்கிறேன்.

வெகுஜனப் பத்திரிக்கை இலக்கியப் பத்திரிக்கை எனப் பாகுபாடுகள் இருக்கு. எல்லோருக்கும் பொதுவான ஒரு கதையை யாராலும் எழுத முடியாது..

பசியில்லாதவனுக்கு திணித்து என்ன பயன்?

ரங்கராஜன்
02-09-2010, 05:52 PM
பசியில்லாதவனுக்கு திணித்து என்ன பயன்?

தாமரை அண்ணா தப்பு பண்ணி விட்டீர்கள்...

இந்த வாக்கியம் நூற்றுக்கு நூறு உண்மையான வாக்கியம் தான். ஆனால் இந்த விவாதம் இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்பு, சில பல கருத்துகளை நீங்கள் முன்வைத்த பின்பு, எங்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்த பின்னும் நாங்கள்(நான்) அடங்காமல் உங்களை கேள்விகளால் துளைத்து இருந்தால், நீங்கள் இந்த பதிலை போட்டு இருக்கலாம்..................

ஆனால் ஆரம்பத்திலே இதை போட்டு என்ட் கார்டு போட்டு விட்டீர்கள்.

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வரிக்கு எந்த கொம்பனாலும், சரியான பதில் சொல்ல முடியாது........ அவசரப்பட்டு விட்டீர்கள்

தாமரை
02-09-2010, 05:58 PM
நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை, படத்தை பார்ப்பதற்கும் நாவலை படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படத்திற்கு இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர் என்று பலர் இருப்பார்கள். அதை பார்ப்பவர்கள் வேறும் ஒரு பார்வையாளன் மட்டுமே அவன் கண்முன்னே நடப்பதை அவன் பார்க்கிறான். அதில் அவனுடைய, அறிவுக்கும், சிந்தனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் நாவலை பொறுத்தவரை வாசகன் தான் இயக்குனர், எடிட்டர், இசையமைப்பாளர், காமெடி டராக் இயக்குனர், ஏன் தயாரிப்பாளர் கூட அவன் தான். உதாரணத்திற்கு அமெரிக்காவை பற்றி நாவலில் படித்தால், அங்கு சென்று சுற்றித் திரிந்து விட்டு வருவான். இதில் எழுத்தாளன் என்பவன் அவனுக்கு எழுத்தை படிக்க உதவியவன் மட்டுமே.

ஒரு குறிப்பிட்ட இடத்தை சூழ்நிலையை உணரவைப்பது வர்ணனை மூலம்தான். வர்ணனைகள் ஒரு சித்திரத்தைக் கண்முன்னால் தீட்டுகின்றன.

வர்ணனைகள் அதிகமோ என்று வேற முன்னால சொல்லி இருக்கீங்க. ஆனான் வர்ணனையின் தேவையை இங்க சொல்லி இருக்கீங்க. இதுதான் சிந்தனை. இரண்டுக்கும் சம்பந்தம் இருப்பது மீள்பார்வை செய்யாமல் புரியாது.

வர்ணனை மனசைப் பிறாண்டுவதற்குக் காரணம் அது அதிகம் என்பதல்ல. அது இயல்பிற்கு மாறான வர்ணனையாய் இருக்கிறது என்பதுதான்.

உதாரணமா

நீலவேணியோட மனசைப் போலவே வானமும் அன்று கறுத்தது. வானத்தை அவள் பிரதிபலித்து போல அன்று வானம் அவள் மனதை பிரதிபலித்தது..

நீரின் நீலநிறத்திற்குக் காரணம் வானத்தில் ஏற்படும் ஒளிச்சிதறலின் பிரதிபலிப்பு என்பது இராமன் விளைவின் கண்டுபிடிப்பு.

இந்த அறிவியல் உண்மையைப் பிண்ணனியாக வைத்து வானம் கருத்தது என்பதற்கு உவமை கொடுத்திருக்கேன். இப்படிப் பட்ட கதைகளை நாமே படிப்பதை விட ஒருத்தர் விளக்கிக் கேட்கும் போது அழகாக இருக்கும். வானம் நீலவேணியின் மனம் போல் இருண்டது என்பது வழக்கமா படிப்பது. அதையே திருப்பித் திருப்பி எழுதப் பிடிக்கலை.

ஆதவா
02-09-2010, 06:00 PM
பசியில்லாதவனுக்கு திணித்து என்ன பயன்?

ருசியாயிருந்தா தின்போம்ல.... :D

தாமரை
02-09-2010, 06:20 PM
ருசியாயிருந்தா தின்போம்ல.... :D

அப்புறம் கொழுப்பேறி ,, தேவையா?

தாமரை
02-09-2010, 06:29 PM
பசியில்லாதவனுக்கு திணித்து என்ன பயன்?



இதை யாரையும் அடக்கப் போட்ட வார்த்தைகள் அல்ல.

சங்கேதமாய் சேதி சொல்லும் சித்தர் பாடல்கள் இன்னும் எப்படி வாழ்கின்றன?

யாருக்காக எழுதுகிறோம் என்பதில் வேறுபாடுகள் இருக்கு.

பல எழுத்தாளர்கள் தனக்காக எழுதுவார்கள். நிறைய பேர் அவர்கள் எழுதுவதைப் படிக்கணும். அவர்கள் எழுத்துக்கள் நிறைய வியாபாரம் ஆகி வருமானம் வரணும் புகழ் வரணும் என எழுதுவார்கள்.

சிலர் மேதன்மையைக் காட்ட எழுதுவாங்க. அவங்க எழுத்து பல ஜிகினா வேலைகளுடந்தான் இருக்கும்.

வெகுசிலர் மட்டுமே மனசில் தோணறதை எல்லாம் எழுதுவாங்க. மனதில் தோன்றுவதை எல்லாம் சென்ஸாரே செய்யாமல், திருத்தம் செய்யாமல் எழுதுவது என்பது மிகக் கடினமான ஒன்று,, அதுவும் நேரடியா தட்டச்சு செய்வது... உங்க ரஃப் நோட்டில் நீங்க கிறுக்கி வச்சதை வச்சி கதையை டெவலப் செய்வீங்க. நீலவேணியில் நீங்க பாக்கிறது அப்படிப்பட்ட ஒரு ரஃப் நோட்... கொஞ்சம் அங்க இங்க தட்டி சரியா ஃபிட்டிங் செய்யணும்.

இன்னொரு விஷயம்... வசன்ம் தவிர வேறு எதுவுமே இல்லாத கதைகள் கூட முதல் பரிசு வாங்கி இருக்கு. பட்டுக் கோட்டைப் பிரபாகர் அந்த நடையில் நாவலே எழுதி இருக்கார்.

ஆனால் இந்தக் கதையின் கடைசிப் பாகம் படித்த பின்னாலும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தோணனும். அப்படித் தோணினா அது இந்தப் புதிய நடையின் வெற்றி.. அதான் என அளவுகோல்.

மத்தியில் தொய்வு விழும் இடங்களை சரி செய்யணும், கதையின் திருப்பங்களை ஸ்மூத்தாக்கணும் என்பது இரண்டு விஷயங்கள்.

மூன்றாவது வர்ணனை. கோவைப்பழ உதடுன்னு வர்ணிக்கறோம், ஆனால் இப்ப எல்லாம் கோவைப்பழம்னா கோயம்புத்தூரில் விளைவதா என்று கேட்கிறார்கள். அதனால் வர்ணனைகளின் ஸ்டைல் மாறவேண்டிய காலகட்டத்தில் இருக்கோம்.

மரங்களுடன் பின்னிப் பிணைந்த கொடிகள் இக்கால பூங்காக்காதலர்களை நினைவூட்டின.. அணில்கள் அவர்களிடம் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தன.

இப்படி ரிவர்ஸ் உவமை எடுத்து எழுதியப்ப யார் ரசிச்சாங்களோ இல்லையோ எழுதிய நான் இரசிச்சேன்.


காற்றும் நலம் விசாரிக்க வந்தது. மெல்ல பெருமரங்களின் தலையைத் தட்வியபோது அவை என்ன சொல்லிற்றோ தெரியவில்லை.. காற்றிற்கு மதம் பிடித்தது.. ஓ என இரைந்தது.. மேகங்களைத் தட்டித் தட்டி முறையிட்டது.

மேகங்களோ காற்று சொன்ன முறையீடுகளைக் கேட்டு உறுமின. மேகங்களுக்கிடையே பலத்த விவாதம் எழும்பி இருக்கக் கூடும். சளார் சளார் என அவை வாள் போன்ற ஏதோ ஆயுதங்களை உருவின..

என்பது வர்ணனை அல்ல. உருவகம்.. இயற்கைக்கு உயிருண்டு, உணர்வுண்டு அதன் செயல்களுக்கு அர்த்தம் உண்டு என்று நம்புபவர்கள் கண்ணில் இது உணர்வுகளாகப் படும். மற்றவர்களுக்கு வர்ணனையாகப் படும். இந்தக் கதையில் இயற்கையும் ஒரு கதாபாத்திரம் என்பதால் இது மிக அவசியம்.

ஆதவா
02-09-2010, 06:33 PM
அப்புறம் கொழுப்பேறி ,, தேவையா?

'பயிற்சி’யினால உடம்பை மெயிண்டைன் பண்ணுவோம்ல.... :D

தாமரை
03-09-2010, 01:57 AM
'பயிற்சி’யினால உடம்பை மெயிண்டைன் பண்ணுவோம்ல.... :D

வேலண்டைன் வந்துட்டா மெயிண்டைன்ல பியூஸ் புடுங்கிருவாங்களே!!!

செல்வா
03-09-2010, 11:01 PM
இந்தத் திரியின் முதல் சில பதிவுகளை மட்டும் தான் நான் வாசித்தேன். எனது கருத்தை நானும் ஒரு வாசகன் என்ற முறையிலும் ஏதோ கொஞ்சம் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியிருக்கிறேன் என்ற தைரியத்திலும் சொல்ல விழைகிறேன்.
இந்த விழைகிறேன் - என்பதை ஆசைப்படுகிறேன் என்றும் எழுதியிருக்கலாம் ஏன் விழைகிறேன் என்று எழுதினாய் ஆசைப்படுகிறேன் என்று எழுத வேண்டியது தானே?

ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க படைப்பாளிக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

நானும் ஆரம்ப காலத்தில் அப்படி நினைத்தவன் தான். ஆதவாவின் கவிதைகள் புரியாமல் அவருடன் மல்லுக்கு நின்றவன் தான். ஆனால்... ஒரு படைப்பாளி என்பவன் அவனுள்ளே பல தேடல்களைக் கொண்டுள்ளான். தேடல்கள் இருக்கும் வரை தான் படைக்க முடியும். தேடல்கள் தான் வாழ்க்கையையே வடிவமைக்கிறது.
அந்த தேடல்களை அவன் வெளிக்கொண்டு வரும் முறை அவனே விரும்பி ஏற்பது. டாவின்சியின் ஓவியங்களை இப்போது அமர்ந்து ஆராய்ந்து பார்த்து வியந்து கொண்டிருக்கும் உலகம் புதிய புதிய விளக்கங்களை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறதே. அவரிடம் சென்று ஏனப்பா ஓவியம் வரைந்து ஏன் இப்படி வரைந்தாய் என்று குறிப்புகளும் எழுதிவைக்க வேண்டியது தானே என்று கேட்பது எப்படி அபத்தமாகப் பார்க்கப் படுகிறதோ அதேபோன்றது தான் இதுவும்.
ஒரு அறிவியல் அறிஞர் கண்டுபிடித்துக் கொடுக்கும் சூத்திரங்களை கரணம் போட்டு மனனம் செய்து விட்டு இருக்கும் நாம் ஒரு படைப்பாளி தனது திறமையை காட்டும் போது ஏன் அதைப் புரிந்து கொள்ள முன்வருவதில்லை.

கண்ணதாசனைப் பற்றிச் சொன்ன உதாரணத்தையே சுட்ட விரும்புகிறென். கண்ணதாசனின் எல்லா கவிதைகளும் நீங்கள் புரிந்து கொண்டீர்களா தக்ஸ்.
திரைப்பாடல்களிலேயே பலவித மறைபொருட்களையும் கொண்டு விளையாடியவன். அது தான் ஒரு கலைஞன் தன் மேதாவித் தனத்தைக் காட்டும் இடம்.
நவீன நாரதர், டிப்ஸ் கொடுப்பது சரியா தவறா மற்றும் இன்ன பல வினாக்களுக்கும் மிக எளிமையாக விளக்கமளித்த தாமரையண்ணாவின் அதே விரல்கள் தான் இந்தக் கதையும் எழுதுகிறது. எல்லோருக்கும் புரியும் படிதான் எழுத வேண்டும் என்றால் மன்றத்தில் பாதி கவிதைகள் இருக்காது. சொற்சிலம்பம் இருக்கவே இருக்காது.
எந்த ஒரு கலை வடிவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் நவீனத்துவம் பின்நவீனத்துவம்

வர்ணனைகள் கூடிய நேரடிக் கதைகள் உரையாடல்கள் சமூகக் கதைகள் பிளாஷ் பேக்குகளுடன் முன்னும் பின்னும் நகரும் கதைவடிவம் சரித்திரக் கதைகள் ஒரு பக்கக்கதைகள் என்று எத்தனையோ கதைவடிவங்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
எல்லாப் படைப்புகளும் எல்லா வாசகருக்காகவும் எழுதப்படுவதில்லை. கம்பராமாயணம் பள்ளியில் படித்த எத்தனை பேர் கம்பனின் கவிச்சுழலில் சிக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
எளிமையான வார்த்தைகளால் எழுதப்பட்ட பட்டுக்கோட்டையின் பாடல்கள் எத்தனைபேர் நினைவில் நிற்கிறது.

இப்படித்தான் நீ எழுதவேண்டும் என்று ஒரு படைப்பாளியைப் பார்த்து கூறுவது என்னைப் பொறுத்தவரை வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது. அது தக்ஸைப் பார்த்து யாரும் சொல்வதாயினும் சரி
தாமரையைப் பார்த்துச் சொல்வதானாலும் சரி.

த.ஜார்ஜ்
04-09-2010, 12:56 AM
என் ஐயங்களுக்கு விளக்கமளிக்க முன்வந்த ஆதவாவுக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட ஜெயமோகனின் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டி விடுகிறேன்.[அப்போதாவது தேறுவேனா என்று பார்ப்போம்]
பசியில்லாமல் எப்போதும் இருக்க முடியாதுதானே. அடுத்த வேளையாவது பசிக்கும்தானே.
நன்றாக பசித்தவனுக்கும் திணிப்பது ஆபத்துதானே.

அப்புறம் செல்வா.. போராட்டத்தின் அடுத்தக் கட்டம் என்ன?

கீதம்
04-09-2010, 08:28 AM
கொல்லிமலைப் பயணம் களைகட்டப்போவது உறுதி. :):)