PDA

View Full Version : மரணித்தவனின் கனவு.



சசிதரன்
01-09-2010, 02:54 PM
ஏழாவது மாடியிலிருந்து குதித்து
இறந்து போனவனின் முகம்
ஒரு பக்கம் சிதைந்தே வருகிறது கனவில்.

பூங்கா ஒன்றின் மரபெஞ்சிலோ
கடற்கரையின் மணல்வெளியிலோ
நூலகத்தின் நிசப்தத்திலோ
ஓடும் பேருந்தின் கடைசி
இருக்கையிலோ
சிதைந்த முகத்தோடே பேசிக் கொண்டிருந்தான்.

அவனது முகத்தின் அகோரம் குறித்த
எந்தவொரு அருவருப்போ தயக்கமோ இன்றி
நான் மட்டுமே பேசிக் கொண்டிருப்பேன்.

என்ன பேசினோம் என்பதே
நினைவிலிருக்காது அடுத்த காலையில்.
எனினும் அடுத்த கனவிலும் பேசிக் கொண்டிருப்பான்.

அவன் குதித்த ஏழாவது மாடியின் விளிம்பில்
பேசிக் கொண்டிருந்தோம் ஒரு கனவில்.
அன்று ஏனோ அவன் முகம் மிக அழகாய் இருந்தது.
அன்றைய கனவு வழக்கத்தை விட
நீண்டதாய் இருந்தது.

நீண்ட இரவுக்குப் பிறகான பகல் போல
விடிந்திருந்தது அந்தப் பகல்.

அடுத்தடுத்த கனவுகளில் அவனின்றி
வேறு யார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தேன்.
அனைவரும் சொல்லியபடியே இருந்தார்கள்..
என் முகம் ஒரு பக்கம் சிதைந்திருப்பதாக.

"பொத்தனூர்"பிரபு
02-09-2010, 04:03 AM
நல்லாயிருக்கு

ஆதவா
05-09-2010, 02:09 AM
இக்கவிதையை உயிர்மையில் வாசித்தேன் சசி... அந்த வாரக் கவிதைகளில் சிறந்த கவிதையென இதை நினைக்கிறேன்.

கனவின் வெளித்தோற்றம் எனும் ஒரு கவிதையை எழுத நினைத்து விட்டுவிட்டேன்... அதாவது மையத்திலிருந்து குதித்து வெளியே வந்து அது அங்கேயே தங்கிவிடும்.... இக்கவிதை அப்படியல்ல... சின்ன சுழற்சி இருக்கிறது. வெளியே வந்து உள்ளே போய்.... (ரொம்ப குழப்புறேனோ?)

மரணத்தவனின் கனவு ஒரு நல்ல கற்பனை. பார்க்கப் போனால், உயிருள்ள பிணங்களின் கனவுகளும் இப்படித்தான்..

இக்கவிதையில் பிடித்த இரண்டு விஷயங்கள்..
மரணித்த கனவில், மரணத்தவ்னோடே இருத்தல்.
அது மரணித்தவந்தான் என்பதை இறுதி முடிச்சில் அவிழ்த்தல்.

ஒரு Parable கதை படித்தமாதிரி இருக்கிறது!! அதன் பிண்ணனி Abstract ஓவியங்களால் நிறைந்ததை உணரமுடிகிறது!

வாழ்த்துக்கள் சசி!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-09-2010, 03:04 PM
கற்பனைக்கான கரு பாராட்டுக்குரியது. இறுதியில் உங்கள் முகத்தையே சிதைந்திருப்பதாய் சித்தரித்தது கவிதைக்கான ஒரு நச். பாராட்டுக்கள்.

பாரதி
11-09-2010, 11:44 AM
கனவைப் பற்றிய கவிதை என்றாலும் எதைக்குறித்த பேச்சு என்பதை கூறாமலேயே விட்டிருப்பது படிப்பவர்களை சற்று சிந்திக்க வைக்கக்கூடும். முடிவே ஆரம்பமாக இருக்கும் சில புதுமையான உத்தி போல தோற்றமளிக்கிறது.

நீண்ட இரவுக்குப் பிறகான பகல் போல
விடிந்திருந்தது அந்தப் பகல்.

இவ்வரிகள் கவிதையில் தேவையா என்ற ஒரு சிறிய எண்ணம் எனக்கு.

நல்ல கவிதைகளும் நல்ல கவிஞர்களும் நிறைந்திருக்கும் மன்றம் மிக அழகுதான்.

வசீகரன்
16-09-2010, 08:01 AM
ஆச்சர்யம் தந்த கவிதை..!!!
சசி என்ற உன்னத கவிஞனை வியப்போடு பார்க்கிறேன்...!

இதற்க்கு என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.....!

தொடரட்டும் சசி...!