PDA

View Full Version : ரகசியங்களின் ஒற்றை சாவி



சசிதரன்
01-09-2010, 02:54 PM
ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்டது.

அவர்தம் ரகசியங்கள் கொண்டே
தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால்
அது செய்யப்பட்டிருந்தது.

பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
அனைவரின் ரகசியங்களும்
பாதுகாப்பற்றதாகின.

மெல்ல மெல்ல செய்தி ஒரு
காட்டுத் தீயென பரவத் தொடங்கியது.
அவரவர் ரகசியங்களுக்காய்
பதற தொடங்கினர் அனைவரும்.

ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்ட நாளில்
மீள்பாதையற்ற அடர் வனத்தினுள்
அனைவரும் தொலைக்க தொடங்கினர்
தத்தமது ரகசியங்களை.

ஆதவா
05-09-2010, 02:23 AM
சசி, உங்கள் கவிதைகள் சிறந்த தளத்தை அடைந்துவிட்டன...

இக்கவிதை தாங்கியிருக்கும் படிமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மனதில் படிகிறது.
ரகசியங்களின் ஒற்றைச் சாவி, பல விஷயங்களை கண்முன்னே கொண்டுவருகிறது. அது கருவியாகவும் இருக்கலாம்.. கண்டெடுக்கப்பட்ட நாள் முதல் அது திறக்கப்பட்டுவிடுகிறது. ரகசியங்கள் பாதுகாப்பற்றதாகிவிடுகிறது.

ஒரு ஆழ்மனதின் வெடிப்பு, பிளவு, அதனால் வெளியேறும் புதைரகசியங்கள்
புதைந்து கிடக்கும் ரகசிய செய்தியை ஊடக கருவியால் திறத்தல்
கரு தேங்கிக் கிடக்கும் வாசகன், படைப்பாளச் சாவியால் திறக்கப்பட்டு மனதின் மத்தியிலிருந்து படைப்பு வெளியேறுதல்,
என
பல தளங்களுக்குக் கொண்டு செல்லும் கவிதை!

வாழ்த்துக்கள் சசி!

தாமரை
05-09-2010, 04:31 AM
அடர்வனத்தில்
அவசர அவசரமாய்
ஒருபுறம்
தொலைத்துக் கொண்டிருந்தபோது

மறுபுறம்
அடர்வனம் தொலைந்துகொண்டிருந்தது..

:D:D:D:D:D

எழுதிகிட்டேப் போகலாம் இல்லையா??

பாரதி
11-09-2010, 12:11 PM
இரகசியங்கள் என்னும் போது பன்மையாகிறது. அத்தனை இரகசியங்களையும் திறக்கும் ஒற்றை சாவி கிடைத்து விடும் போது இரகசியங்கள் அவற்றின் பெயர்க்காரணங்களை இழந்து விடுகின்றன. அல்லவா...?

அதே போல மீண்டும் இரகசியங்களை மீள் பாதையற்ற அடர் வனத்தில் அனைவரும் தொலைக்கத்தொடங்கி இருந்தனர் என கவிதை முடியும் போது கவிதையின் தலைப்பும், முதல் இரு வரிகளும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றன.