PDA

View Full Version : ஒரு காற்றின் கவிதை



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
31-08-2010, 05:02 AM
வெளியெங்கும் விரவிய காற்றின்
நிதானங்களற்ற மென் வன் விசைகளை
காகிதத்தில் மீட்டெடுக்க பிரயாசையுற்றான்
பின் நவீனத்துவ கவிஞனொருவன்
நாணறுந்த வீணையின் துர் ஓலங்களாயும்
புயற் சுழற்சியின் மையப் புள்ளியில் ஆட்பட்ட
வழி தவறிச் சேர்ந்த அனாதைச் சிறகுகளென்றும்
வார்த்தைகளில் வதைத்தான் அக்காற்றை!
வெளியின் தனக்குண்டான ஆளுகைகளை
அகன்ற விரல்களின் ஒற்றை நுனியில் அடக்கிய
இச்சராசர பிரபஞ்சங்களின் சூட்சமங்களை
எல்லார் காதுகளில் ஓதிய படி
திரிந்தலைந்தது தெருவெங்கும் அது
மாலையென தலைகள் தொங்கும் அரக்கனாய்
விடைத்த மார்பு கொண்ட அடங்காத் திமிறனாய்
கணத்தில் களவோட்டிச் செல்லும் கள்வனாய்
இன்னும் சித்தரித்தான் கவிஞன்
ஆவென அப்படியே விழுங்கிச் செறிப்பதாய்
மீறிப் பிரவேகித்த காற்றின் சலசலக்களில்
சிதறிப் பறந்த கவிஞனின் கவிதைகளை
முழுப் பிரபஞ்சங்களும் ஒன்றாய் கூடி பிரசுரித்தன.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

ஆதி
02-09-2010, 01:02 PM
ஜூனத், பின்னவீனத்துவ கவிஞன் என்பதை நவீனக்கவிஞன் என்று சொல்லி இருந்தால் அற்கப்புறம் ஒவ்வொன்றையும் படிமங்களாக்கி கொண்டிருக்க இயலும், பின்னவீனத்தின் முக்கியத்தத்துவமே மையத்தையும், விளம்பையும் சமனாக்குவதுதானே..

நன்றி...

ஆதவா
05-09-2010, 01:41 AM
உங்கள் கவிதைகளை வாசிக்கும் பொழுது நீங்கள் எவ்வளவு நெருக்கமாக வார்த்தைகளைப் பின்னுகிறீர்கள் என்று வியக்கிறேன் ஜுனைத். அது இன்னும் தொடர்ந்து வருகிறது.

இக்கவிதையை வாசிக்கும் பொழுது இப்பேர்பட்டவனா என்று தோணுகிறது.
அதேசமயம் சற்று கர்வம் பிடித்தவனோ என்றும் தோணுகிறது.
கவிதை அரூபத்தையும் குறிக்க இருப்பதால்.... கவிஞன் என்ற வார்த்தை பொருந்தலாம், பொருந்தாமலும் போகலாம்.

தலைப்பு வசீகரிக்கிறது.


நாணறுந்த வீணையின் துர் ஓலங்களாயும்
புயற் சுழற்சியின் மையப் புள்ளியில் ஆட்பட்ட
வழி தவறிச் சேர்ந்த அனாதைச் சிறகுகளென்றும்
வார்த்தைகளில் வதைத்தான் அக்காற்றை!

துர் ஓலங்களாயும் எனும் பதம் தள்ளி நிற்கிறது. அதனை “ஓலங்களென்றும்” என்றே கொடுத்திருக்கலாம். அல்லது “அனாதைச் சிற்குகளாயும்” என்று. இரண்டுமே வேறு வேறு உணர்வுகளைக் கொடுக்கக் கூடியது.
அதைப் போன்றே “ எல்லார் காதுகளிலும்” வந்திருக்கலாம்.
” சலசலக்களில்” சரியான வார்த்தையா என்பது தெரியவில்லை... சலனங்களில் என்பது சரியாக இருக்கலாம்.

வாழ்த்துக்கள் ஜூனைத்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-09-2010, 02:57 PM
நவீன கவிஞன் என்றால் நவீனங்களை மட்டும் பேசும கவிஞன் என்று பொருள் கொள்ளப்படுமோ என்றஞ்சிதான் பின் நவீனக் கவிஞன் என்று கறிப்பிட்டேன் ஆதன். ஆனால் அந்த வார்த்தையை எழுதும்போதே சற்று நெருடியது. உணர்த்தியமைக்கு மிக்க நன்றி ஆதன் அவர்களே.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-09-2010, 03:11 PM
காற்றை மட்டுமே கர்வியாக்க நினைத்தேன் நான் அல்ல ஆதவா.
துர் ஓலங்கள், அனாதைச சிறகுகள் இரண்டும் கேட்பாரற்று மிதந்து கிடப்பதால் அவ்விரண்டையும குறிப்பிட்டேன்.

காற்றில் பதறும் இலைகளின் சலசல சப்தங்களைத்தான் காற்றின் சலசலக்களில் என்று குறிப்பிட்டேன.

தெளிவாய் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி ஆதவா.

பாரதி
11-09-2010, 11:53 AM
கவிதையின் சில சொற்கள் சரியாக பொருந்துவதாக எனக்குத்தோன்றவில்லை.
பிரபஞ்சம் என்பதே எல்லாவற்றையும் உள்ளடக்கியதென்று எண்ணுகிறேன்.
படிப்பவர்களுக்கு கவிதையின் கரு ஓரளவுக்கு எளிதில் சென்றடைந்தால் கவிஞரின் எண்ணம் வெற்றி பெறும்.

எழுதுங்கள் நண்பரே.