PDA

View Full Version : அன்பில்லத்தின் ஆற்றாமைகீதம்
27-08-2010, 01:10 AM
என் சுவாசம் இழையோடும் அன்பில்லமே!
அறிவாயா,உன்னைப் பற்றிய பக்கங்கள்யாவும்
அதிகாரபூர்வமாக அகற்றப்படவிருக்கின்றன,
என் மன ஏட்டிலிருந்து!

தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும்,
தலையில் முண்டாசுக்கட்டுடனும்
வெற்றுடம்பில் வியர்வை வழிந்தோட
வீடு கட்டிய கொத்தனார்த் தாத்தாவிடம்
என் கைகள் எடுத்துதந்த அரைச்செங்கற்கள்
இங்கேதான் எங்கோ இருந்துகொண்டு
என்னைப் பார்த்து வருந்தக்கூடும்.

சூடிக்கொடுத்த ஆண்டாளின் மாலைக்கு நிகராக
என் உடல் பூசி உதிர்ந்தபின்னரே
சுவரில் பூசப்பட்ட மணற்துகள்கள் ஒவ்வொன்றும்
என் பிரிவை உணர்ந்து வாடக்கூடும்!

மஞ்சள் தடவி குங்குமப்பொட்டிட்ட
தன்னைத் தூக்கிநிறுத்திய
சுமங்கலிகளின் ஊடே நுழைந்து
சுமைதாங்கிய இரு பிஞ்சுக்கரங்களின்
ஸ்பரிச சுகத்தில் இன்றும் திளைத்திருக்கும்
அந்த நிலைவாசல்,
மற்றொரு கரம் பற்றும்பொருட்டு
அவை தன்னை நீங்கிச் செல்லவிருப்பதைக்
காணச்சகியாமல் இமைக்கதவுகளை அடைக்கவும்கூடும்!

ஆசாரி மாமா அசந்தநேரங்களில்
அரைகுறை சன்னல்சட்டங்களில்
ஆட்டுக்குட்டிகள்போலத் தாவிக்குதித்து,
தடுமாறி விழுந்த ஞாபகங்கள் எனக்கிருப்பதைப்போல்
என் உதடு கிழித்த உறுத்தல்,
பொருத்தப்பட்டுவிட்ட பதினான்கு சன்னல்களில்
ஏதாவதொன்றிற்கு இருந்து சிரமப்படுத்தலாம்!

என்னைப் பெற்றவர்களைப்போலவே நீயும்
உன் துயரத்தை ஆழப்புதைத்து
சிரித்து விடைகொடுப்பாயோவென்று பயந்திருந்தேன்,
நல்லவேளை,
சிறுவிரிசலொன்றைக் காட்டி, அதனூடே,
பிளவுபட்ட உன் இதயத்தைக் காட்டிவிட்டாய்!

புரியாதவர்கள் வியப்புடன் கேட்கின்றனர்,
'திடீரென என்ன கேடு வந்தது
இந்த வீட்டுக்கு?'

Ravee
27-08-2010, 08:37 AM
:) வாவ் கவிதைகளிலும் சிக்சர் அடிக்கிறீங்க கீதம். நான் முன்பு எழுதிய ஒரு கவிதை என் நினைவில் வந்தது ( பூர்வீக வீடு சொத்து பிரிக்கப்பட்ட வருத்தத்தில் எழுதிய கவிதை )

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21994

அமரன்
27-08-2010, 09:38 AM
கிராமத்து நாயகியின் நிழல்படம் கவிதையின் கரு.

கிராமியம் அப்படியே கமழ்கிறது, கவிதையின் ஒவ்வொரு செங்கல்லிலும்.

அதிகார பூர்வமாக அக்கற்றப்பட இருக்கின்றன... கட்டாயமாக்கல் வெளிப்படுகிறது..

ஊரில் நமக்குச் சொந்த வீடிருந்துச்சு. அய்யா உழைச்சுக் கட்டின வீடு. சிறுவனாக இருந்த போது மாமாவும் இப்படி ஏதாவது செய்திருக்கக் கூடும். ஆனால், அந்த மாமா சொந்தமா வீடு கட்டிய பிறகு அந்த வீட்டு ஞாபகம் அறுந்து விட்டது. ஊரில் வீடு கட்டப்பட்ட போது எதுவுமே செய்யாத எனக்கோ, மறக்க முடியவில்லை.

நல்ல ஆற்றாமைக் கவிதை.

பாராட்டுகள் கீதம்

வியாசன்
27-08-2010, 09:54 AM
கீதம் அருமையான உங்கள் கவிதை உங்கள் கற்பனைகள் கொத்தனாரையும் ஆசாரியையும் இணைத்து உங்கள் மனஉளைச்சலை கொட்டிவிட்டீர்கள் .நல்ல கவிதை

சுகந்தப்ரீதன்
28-08-2010, 07:02 PM
அன்பு குடிக்கொண்டிருக்கும் இதயத்தின் பிரிவாற்றாமையை இல்லத்தின் இயல்கொண்டு எடுத்தியம்பிய விதம் மிகவும் அழகு..!!

கவிதைக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி..!!:)

கீதம்
29-08-2010, 01:39 AM
:) வாவ் கவிதைகளிலும் சிக்சர் அடிக்கிறீங்க கீதம். நான் முன்பு எழுதிய ஒரு கவிதை என் நினைவில் வந்தது ( பூர்வீக வீடு சொத்து பிரிக்கப்பட்ட வருத்தத்தில் எழுதிய கவிதை )

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21994

மிகவும் நன்றி ரவி. உங்கள் கவிதையை முன்பே படித்திருக்கிறேன். சிலவற்றைப் படித்தபிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாய் இருந்துவிடுவதுண்டு. அப்படிதான் அதற்கும் இருந்துவிட்டேன். மனம் தொட்ட கவிதை உங்களுடையது.

கீதம்
29-08-2010, 01:43 AM
கிராமத்து நாயகியின் நிழல்படம் கவிதையின் கரு.

கிராமியம் அப்படியே கமழ்கிறது, கவிதையின் ஒவ்வொரு செங்கல்லிலும்.

அதிகார பூர்வமாக அக்கற்றப்பட இருக்கின்றன... கட்டாயமாக்கல் வெளிப்படுகிறது..

ஊரில் நமக்குச் சொந்த வீடிருந்துச்சு. அய்யா உழைச்சுக் கட்டின வீடு. சிறுவனாக இருந்த போது மாமாவும் இப்படி ஏதாவது செய்திருக்கக் கூடும். ஆனால், அந்த மாமா சொந்தமா வீடு கட்டிய பிறகு அந்த வீட்டு ஞாபகம் அறுந்து விட்டது. ஊரில் வீடு கட்டப்பட்ட போது எதுவுமே செய்யாத எனக்கோ, மறக்க முடியவில்லை.

நல்ல ஆற்றாமைக் கவிதை.

பாராட்டுகள் கீதம்

எத்தனை வயது ஆனாலும், எத்தனை அறிவு பெற்றாலும், கல்லுடனும் மண்ணுடனுமான பிணைப்பை நம்மால் அடியோடு வெட்டிவிட முடிவதில்லை. நான் சிறுபெண்ணாய் இருந்தபோது எங்கள் தாத்தா கட்டிய வீட்டை சமீபத்தில் விற்றபோது எனக்கும் மனம் கலங்கியது. அதன் பாதிப்பே இக்கவிதை.

கீதம்
29-08-2010, 01:46 AM
கீதம் அருமையான உங்கள் கவிதை உங்கள் கற்பனைகள் கொத்தனாரையும் ஆசாரியையும் இணைத்து உங்கள் மனஉளைச்சலை கொட்டிவிட்டீர்கள் .நல்ல கவிதை

ஆம், சிறு குழந்தைகளாய் இருக்கும்போது பார்ப்பவர்கள் அனைவரையும் உறவினராகவே எண்ணத்தோன்றும். வளர்ந்தபின்னாலோ உறவுகள் கூட வேற்றாட்களாய்த் தோன்றுகிற நிலை வந்துவிடுகிறது. மிகவும் நன்றி, வியாசன்.

கீதம்
29-08-2010, 01:50 AM
அன்பு குடிக்கொண்டிருக்கும் இதயத்தின் பிரிவாற்றாமையை இல்லத்தின் இயல்கொண்டு எடுத்தியம்பிய விதம் மிகவும் அழகு..!!

கவிதைக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி..!!:)

மிகவும் நன்றி, சுகந்தவாசன். திருமணமாகிச் செல்லும் பெண்களுக்கு அன்னை வீடும் அந்நியப்பட்டுப்போகும் அவலம்! இதை உணரும் எல்லாப் பெண் எழுத்தாளர்களும் எந்த விதத்திலாவது தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பர், என்னைப்போலவே.

பாரதி
29-08-2010, 02:39 AM
எனக்கு பல வருடங்களாகவே இருக்கும் ஐயம் இது.
பிறந்த வீடு, மண், ஊர், நாடு,மொழி இவற்றுடன் மிகப்பெரும்பாலோனோர் ஐக்கியமாகி விடுவதன் மர்மம் விளங்குவதே இல்லை. இதற்கு நானும் விதிவிலக்கானவனில்லை.
மனிதனின் மரபணுக்களிலேயே ஊறி இருக்குமோ..?

எத்தனை காலம் கடந்தாலும் மனதின் மறக்கமுடியாத மூலையில் இவை ஒட்டிக்கொண்டிருப்பதை மறுக்கவே முடியாது.

மனதில் இருக்கும் ஏக்கத்திற்கு மனையே ஆறுதல் கூறுவதாக அமைத்திருப்பதையும், பொருள் புரியாதவர்கள் புறப்பொருளை மட்டும் காண்பதையும் கவிதை உணர்த்துவது மிகவும் சிறப்பு.

உங்கள் கவிதை அழகு என்பதை விட உண்மையில் ஊறி இருப்பது என்பது பொருத்தமானதாக இருக்கும்.

இன்னும் எழுதுங்கள்.

ஆதவா
29-08-2010, 02:46 AM
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதை இருக்கும்.
அதன் பிரிவை எண்ணும் பொழுது அது அழும்... ஆனால் எத்தனை பேருக்குத் தெரிகிறது?

அதிகாரபூர்வமாக அகற்றப்படவிருக்கின்றன,
என் மன ஏட்டிலிருந்து!

அகற்றமுடியாது. உங்கள் மனஏட்டில் மேலும் எழுதப்படாது.. அவ்வளவே!

சூடிக்கொத்த ஆண்டாளின்

சூடிக்கொண்ட?

கவிதை அருமையாக இருக்கிறது.. வீட்டின் நினைவு என்பதைவிட வீடு நினைக்கும் நினைவு சற்று இருப்பதே கவிதையில் சிறப்பம்சம்!!

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

கவிஞர் மகுடேசுவரனின் கவிதை!!! இது வெளிவந்த நாட்களில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது!!

கீதம்
31-08-2010, 10:23 PM
எனக்கு பல வருடங்களாகவே இருக்கும் ஐயம் இது.
பிறந்த வீடு, மண், ஊர், நாடு,மொழி இவற்றுடன் மிகப்பெரும்பாலோனோர் ஐக்கியமாகி விடுவதன் மர்மம் விளங்குவதே இல்லை. இதற்கு நானும் விதிவிலக்கானவனில்லை.
மனிதனின் மரபணுக்களிலேயே ஊறி இருக்குமோ..?

எத்தனை காலம் கடந்தாலும் மனதின் மறக்கமுடியாத மூலையில் இவை ஒட்டிக்கொண்டிருப்பதை மறுக்கவே முடியாது.

மனதில் இருக்கும் ஏக்கத்திற்கு மனையே ஆறுதல் கூறுவதாக அமைத்திருப்பதையும், பொருள் புரியாதவர்கள் புறப்பொருளை மட்டும் காண்பதையும் கவிதை உணர்த்துவது மிகவும் சிறப்பு.

உங்கள் கவிதை அழகு என்பதை விட உண்மையில் ஊறி இருப்பது என்பது பொருத்தமானதாக இருக்கும்.

இன்னும் எழுதுங்கள்.

இந்த உணர்வு மட்டும் இல்லையென்றால் நாமெல்லாம் பற்றற்ற ஞானிகளாகிவிடுவோமே? பின்னூட்டத்தின் வாயிலாய் உங்கள் உணர்வினைப் பகிர்ந்ததற்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி, பாரதி அவர்களே!

கீதம்
31-08-2010, 10:32 PM
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதை இருக்கும்.
அதன் பிரிவை எண்ணும் பொழுது அது அழும்... ஆனால் எத்தனை பேருக்குத் தெரிகிறது?

அகற்றமுடியாது. உங்கள் மனஏட்டில் மேலும் எழுதப்படாது.. அவ்வளவே!

இது என் வீடு என்னும் உரிமை பறிபோய்விடுகிறது அல்லவா? அதைத்தான் அப்படிக்குறிப்பிட்டேன். நீங்கள் சுட்டியபிறகு புரிகிறது. அகற்றப்பட்டிருந்தால் இக்கவிதை தோன்றியிருக்காது. உண்மைதான்.

சூடிக்கொண்ட?

சூடிக்கொடுத்த என்றிருக்க வேண்டும். திருத்திவிட்டேன், நன்றி.

கவிதை அருமையாக இருக்கிறது.. வீட்டின் நினைவு என்பதைவிட வீடு நினைக்கும் நினைவு சற்று இருப்பதே கவிதையில் சிறப்பம்சம்!!

பாராட்டுக்கு நன்றி.உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

கவிஞர் மகுடேசுவரனின் கவிதை!!! இது வெளிவந்த நாட்களில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது!!

கவிஞர் மகுடேஸ்வரனின் கவிதை சொல்லும் உணர்வை எங்கள் தாத்தா வாழ்ந்த வீட்டை விற்கும்போது உணர்ந்தேன். விமர்சனப்பதிவுக்கு நன்றி, ஆதவா.