Log in

View Full Version : சர்வம் போலிகள் மயம்



பாரதி
25-08-2010, 07:53 PM
சர்வம் போலிகள் மயம்

போலி மார்க் சான்றிதழ்களை வழங்கி, பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை தனிப்படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில், அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சார்யப்படுவதற்கில்லை.

"உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறது தானா?"

இல்லைங்க. பல தொழில்களில் அதுவும் ஒண்ணு. எந்த சர்டிபிகேட் வேணும்னாலும் எங்ககிட்டே கிடைக்கும்.போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி பத்திரம், போலி முத்திரைத் தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமெண்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்.

"அடப்பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?"

ஏன் தெரியாது? ஒரு காலத்துலே கள்ள நோட்டே அடிச்சவங்க சார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்.

"கவர்மெண்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யாலாம்? அது சட்டவிரோதம்னு தெரியாதா?"

என்ன சார் பேசறிங்க நீங்க? உங்க கவர்மெண்ட்ல எந்த சர்டிபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமா? மைல் கணக்கிலே க்யுவிலே நின்னு, மாசக் கணக்கிலே இழுத்தடிச்சு, கண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குது? எங்ககிட்டே அப்பிடியிலை. எந்த சர்டிபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். பிக்சட் ரேட், மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க, நாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?

"இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?"

போலி செக் கொடுத்து, பேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்

"எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியாது?"

நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை சார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சு? ஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?

"இப்ப நான் எந்த சர்டிபிகேட்டை கேட்டாலும் உடனே தர முடியுமா?"

என்ன சார் அப்படி சந்தேகப்படுறீங்க? இப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டு தரவா? யாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாலும் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்ப்ட்டா போலி ஜட்ஜ்மெண்டே வாங்கிக்காட்டறேன்

"ஐயையோ...அதெல்லாம் வேண்டாம்"

பயப்படறீங்க போல் இருக்குது. சரி, பேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்? பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமெண்டையும் ரெடி பண்ணி, சேங்க்ஷனும் வாங்கிக்கொடுத்துடறேன்.

"யோவ்...கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?"

தனியா முடியுமா சார்? அததுக்குனு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும், கையெழுத்துப் போடணும், பிரிண்ட் போடணம், ஏஜண்ட் வெக்கணும், டிஸ்ட்ரிபூசன் செய்யணும், டைப்பீஸ்ட், க்ளார்க், கம்ப்யூட்ட்ர் ஆப்ரேட்டர், பி.ஆர்.ஒ. னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?

"ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்துறீங்க?"

அதை ஏன் அப்படிப் பாக்கறீங்க? இந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மெண்டால இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமா? ஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க

"உங்களாலே கவர்மெண்டுக்கு எவ்வளவு கெட்ட் பேரு தெரியுமா?"

நல்லா கேள்வி. இப்படித்தான் என் ப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிபிகேட் வாங்கிகொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும், டக்குனு அவனை போலி சி.பி.ஐ. அதிகாரியா மாத்திட்டேன்.

"நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?"

அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சதிபதியா இருந்தவருங்க. ஒரு நாள் வருமான் வரித்துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்து, வீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது.

"போலீசுலே புகார் கொடுத்தீங்களா?"

கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீசுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீசுன்னு தெரிஞ்சது.

"ஐய்யையோ!"

கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம் அது கள்ளஸ் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை.

"அப்புறம்?"

கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டு, பலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்ட போனோம். வியாதி முத்தின பிறகு தான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சது.

"அட்டா! நல்ல டாக்டர்கிட்ட போயிருக்கக் கூடாதா?"

நல்ல டாக்டர் தேடி கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனா, அதெல்லாம் போலி மருந்துனு எங்களுக்கு தெரியாமப் போச்சு.

"அட கஷ்ட காலமே!"

சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, 'மகனே...போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாகவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சு காட்டணும்' னு சத்தியம் வாங்கிட்டாரு.

"நீ என்ன பண்ணே?"

ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணி, போலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேண். வருமானம் போதலை. போலி லாட்டரிஸ் சீட்டு அச்சடிச்சேன்.அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீசுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கி, போலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலே.

"உனக்கு நல்ல சிந்தனையே வராதா?"

வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு, ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசிதாராவே ஆயிட்டேன்

"அடப்பாவி!"

இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டு, போலி டிரைவிங் லைசென்ஸ், போலி ஜாதி சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.

"உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகளா?"

அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் இருக்காங்க.

"போலி சான்றிதழ்களை தயாரிக்கிறது தப்புனு உங்களுக்கு தோணவே இல்லையா?"

எதுங்க தப்பு? எங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடு, மாடுகளை கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை.

"யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?"

அதை விடுங்க சார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்களா? மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டு, எத்தனை போலிகள் தலைவர்களா இருக்காங்க? அதை தடுக்க முடியுதா? நாங்க ஏமாந்தவனுங்கனுத்தானே எங்களை பிடிக்கிறீங்க? எங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சினை.

"உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கு ஆபத்து. உங்களை விடமாடோம்."

ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களா? அப்ப பிடிங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சா, இத போலின்னு நிருபிங்க. மத்த நடவடிக்கைகளை எங்க மேலிடம் எடுக்கும்போது தெரிஞ்சுக்குங்க.

--நன்றி துக்ளக்

Mano.G.
26-08-2010, 04:42 AM
இது எல்லாம் அவசரத்தால
வந்த அவதிகள்,
எல்லோரும் பல வருடங்கள்
படிச்சு நல்ல மார்க் வாங்கி
உயர் நிலைக்கு வராங்க,
ஆன இந்த போலி ஆசாமிகள்
நேரத்த வீணடிச்சு- முன்னேரியவன் மாதிரி நாமும் வரனுமே , எல்லோர் மாதிரி
வாழ்க்கையில முன்னுக்கு வரனும்னா
குறுக்கு வழி இந்த போலி தான்.
அதே போல அசல் பொருட்கள் வாங்கரத்துக்கு
செலவு அதிகமாகும்- கடன் அட்டை இருந்தால்
உடனே வாங்கிடலாம்- அதுக்கு குறுக்குவழி
போலி தான் , அவரசமா வாங்கி பந்தாவுக்காவது காட்டனுமே.

போலியை ஆதரிக்கரது நாம் தானே

aren
26-08-2010, 04:49 AM
வெறும் மார்க்கை மட்டுமே வைத்து மேல் படிப்பிற்கு சீட் கொடுத்தால் இப்படித்தான் ஆகும். இனிமேல் யோசிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

கீதம்
26-08-2010, 05:21 AM
நகைச்சுவையாக இருந்தாலும் அதனுள்ளிருக்கும் உண்மை சுடுகிறது. காந்திக்கே போலியான பிறப்புச்சான்றிதழ் தயாரித்து வழங்கிய தேசமாயிற்றே! (கூடுவாஞ்சேரிக்கருகே சில வருடங்களுக்கு முன் நடந்தது)

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்னும் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

த.ஜார்ஜ்
26-08-2010, 05:48 AM
சும்மா சிரித்து விட்டு போய்விடமுடியவில்லை சாமி..
இந்த போலிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் தேசம் என்றுதான் விடுதலை பெறுமோ?

ஆதவா
26-08-2010, 07:43 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

:eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:

சிரிப்பு கலந்த சிந்தனைகள்!!!

இப்போத்தான் தெரியுது... மன்றமே போலி’ யோ என்னவோன்னு!!

சூரியன்
26-08-2010, 08:53 AM
நாடு இப்படி கெட்டு கிடக்கிறது.
இது எங்க போய் முடியுமோ?:redface:

Nivas.T
26-08-2010, 09:06 AM
இப்போத்தான் தெரியுது... மன்றமே போலி’ யோ என்னவோன்னு!!

:eek::eek::eek::eek:

அலும்பு ஆதவா :)

சூரியன்
26-08-2010, 09:17 AM
:eek::eek::eek::eek:

அலும்பு ஆதவா :)

பேரு நல்லா இருக்கே.:D

xavier_raja
26-08-2010, 01:11 PM
இது கிண்டலுக்காக எழுத்தபட்டதல்ல.. படித்துவிட்டு சிரிக்காமல் சிந்திக்கவும் வேண்டுகிறேன்..

ஜிங்குசாங்கு
01-09-2010, 08:24 PM
படிப்பதற்கு சுவாரசியமாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும், வருத்தப்பட வைப்பதுமாகவும் உள்ளது இந்த பதிவு...

இது எங்கு போய் முடியுமோ...

அன்புரசிகன்
02-09-2010, 12:48 AM
அதிகாரிங்க லஞ்சமா கேட்டா ஒன்றும் சொல்லமாட்டீங்க. ஆனா யாராவது ஏதாவது சமூக சேவை செய்தா போலி என்கிறீங்க... இது தான் உலகம். :D :D :D துக்ளக் இல் எழுதியவருக்கு ஒழுங்கா கமிஷன் வந்திருக்காது. வயித்தெரிச்சலில் இப்படி எழுதியிருப்பார். கண்டுக்காதீங்க:lachen001:.

ஓவியன்
02-09-2010, 06:09 AM
சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..!!


பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

உமாமீனா
08-02-2011, 09:22 AM
சிந்திக்க வைத்த பதிவு அப்பட்டமான உண்மை

M.Jagadeesan
08-02-2011, 09:36 AM
நல்ல நோட்டைவிட, கள்ள நோட்டு
நன்றாக இருப்பது ஒன்றே, அதுஒரு
கள்ள நோட்டு என்பதை போலீஸ்
எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 09:39 AM
இன்றைய அரசியல்வாதிகள் போல் அடிக்கும் கொள்ளையை விட இது பெரிதல்ல என்றாலும் இன்றைய போலிகளால் ஏற்படும் விளைவுகள் அன்றாடம் செய்திகளில் பார்ப்பதுதான் ..ஆனால் இதனை கூறியவிதம் அதனை சிந்திக்க வைக்க துக்ளக் கையாண்ட எழுத்து நடை மிகவும் அருமை ..அரசு எந்திரம் ஒழுங்காக நடந்ததால் இதுபோன்ற தவறுகள் நிகழ்வதை தடுக்கலாம் ..இது நிகழ்வது தான் சாத்தியமா என்றுதான் தெரியவில்லை ..