PDA

View Full Version : நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!!தாமரை
25-08-2010, 02:20 AM
ஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்..

அத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,

இங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள்.

எல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...

சில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..

பூக்கள் பூத்தனவா..

தொடரும்

ஆதவா
25-08-2010, 05:16 AM
அந்தப் பஞ்சு முறுக்கிக் கொள்ளும் பொழுது நூலாகிறது.. கயிறாகிறது. கப்பல்களையும் யானைகளையுமே கட்டும் வல்லமை பெற்றதாகிவிடுகிறது.

பூக்கள் பூத்தனவா..

தொடரும்

ம்ம்!!! கதை நல்லாயிருக்கே... அப்படியே சுபம் போட்டிருக்கலாம்.

இருந்தாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்க....:D:D:D
நமக்கு அந்த அளவுக்கு தைரியமில்லை!!!! :D:D

நீங்க(தான்) தொடரணும்!!

தாமரை
25-08-2010, 05:45 AM
இது என்ன கதை என்றுப் புரிந்து கொண்டதைப் போல
நடிப்பதை... விட்டு விடலாமே!!!:lachen001::lachen001::lachen001:

ஒரு கதையை எங்கேயும் முடிக்கலாம்.. அந்த இடம் நமக்கு ஒரு திருப்தியை தருவது போல இருந்தால்.

திருப்தி இல்லாமல் தேடல் தொடர்வதால் பல கதைகள் முடிக்கப்படாமல் நீண்டு கொண்டே போகின்றன.

அதிருப்தி மேலிட்டு தேடலில் சுணக்கம் உண்டாகும் பொழுது.. சில கதைகள் அத்துவானத்தில் விடப்பட்டு திருவிழாவில் தொலைக்கப்படுகின்றன.

படிமங்களின் மீது உருவப் போர்வை போர்த்தி அதாக்கும் இதாக்கும் என்று எண்ணுவதால் நாம் முழு உருவங்களையும் காண முடியாது...

அதனால் வருவதை முடியும் வரை கவனித்துக் கொண்டே அனுமானங்களை மாற்றிக் கொண்டே கதைகளினூடே பயணிக்கவும்...

ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்து விட வேண்டியதில்லை.

தாமரை
25-08-2010, 06:30 AM
சிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.

தீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..

சில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.

சிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..

அவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.


மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.

ஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.

இரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..

அமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா? ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.

நாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை.

என்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..

சொன்னார் முதலாம் சிந்தனாவாதி.

எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..

கல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..

எழுத ஆரம்பித்தார்கள்..

வாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.

உணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..

தொடரும்

அன்புரசிகன்
25-08-2010, 06:53 AM
புரியுது. ஆனா புரியல... :)

தாமரை
25-08-2010, 06:57 AM
புரியுது. ஆனா புரியல... :)

நல்லது ஆனா நல்லதில்ல..:D:D:D

மதி
25-08-2010, 07:29 AM
அடடே.. நீலவேணி..ம்ம்ம்.

ஆதவா
25-08-2010, 07:52 AM
ஏன் என்ற கேள்வி.... பொருளின் மீதான சந்தேகம் அல்லது அறிவின் வளர்ச்சிக்கான கேள்வி... அதை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். சிந்தனாவாதிகளின் சிந்தனை நன்றாகத்தானே இருக்கும்!!
கதை நன்றாக இருக்கிறது. தொடருங்கள்!!

ஒருசில இடங்களில் கொஞ்சம் யோசித்து படித்தேன்!!!

ஓவியன்
25-08-2010, 08:11 AM
எல்லாம் சரி, சிந்தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...??? :icon_hmm:

ஆதவா
25-08-2010, 08:21 AM
எல்லாம் சரி, சிந்தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...??? :icon_hmm:

அவங்கம்மாவும் அப்பாவுமா இருக்கும்ங்க :lachen001::lachen001:.... இதெல்லாம் போய் கேட்டுகிட்டு!!!! :sprachlos020::sprachlos020:

தாமரை
25-08-2010, 08:51 AM
எல்லாம் சரி, சிந்தனாவாதிகளின் காலடி பட முன்னரேயே `நீலவேணி` எனப் பெயரிட்டது யாரு...??? :icon_hmm:

நீலவேணி-- நீல வண்ணக் கூந்தல்... அந்த நதி அப்படித்தான் இருந்தது.. மலை முகடு என்ற தலையில் இருந்து சடாரென்று இறங்கி!!!

நீலவேணி பெயரிட்டது யார்? யாராகவும் இருக்கலாம். தனக்குத் தானே அதுவே வைத்துக் கொண்ட பெயராகவும் இருக்கலாம்.

"பெயருக்கு" எதாவது காரணம் இருக்கும் வேணி என்பதால் உதிரும் என்பதும் என்பது கதாசிரியனின் கோட்பாடாக இருந்தாலும் இருக்கலாம். :icon_rollout::icon_rollout::icon_rollout:

ஓவியன்
25-08-2010, 08:57 AM
இருக்கலாம்.


--

இருக்கலாம். :icon_rollout::icon_rollout::icon_rollout:

இருக்கலாம். :icon_ush:

தாமரை
25-08-2010, 09:20 AM
நீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...

அவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.

குடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.

சிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா? நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன? இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது?

மிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.

மீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.

எதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.

நாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

காலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.

அந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,

நீட்சி செய்யலாம்.. யாருக்காக? எதற்காக? கேள்விகள் பிறந்தன சிந்தனாவாதிகளிடமிருந்து.

நீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.

எல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..

முதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..

வரமா? சாபமா..? தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.

தொடரும்

ஆதவா
25-08-2010, 10:04 AM
அப்படியே பேக்வர்ட் போனோம்னு சொல்லுவாங்களே.... அப்படியிருக்கு... கதைத் தளத்துக்குள்ள பயணிக்கிறாப்ல இருக்கு.

சில இடங்கள் மறுவாசிப்புக்குப் பிறகு புரிகின்றன. மொழிநடை இனிது!

எனக்கு ஒரு சந்தேகம்!!! இந்த கதை முடியுமா?? முடியாதா??

அமரன்
25-08-2010, 10:07 AM
அப்படியே பேக்வர்ட் போனோம்னு சொல்லுவாங்களே.... அப்படியிருக்கு... கதைத் தளத்துக்குள்ள பயணிக்கிறாப்ல இருக்கு.

சில இடங்கள் மறுவாசிப்புக்குப் பிறகு புரிகின்றன. மொழிநடை இனிது!

எனக்கு ஒரு சந்தேகம்!!! இந்த கதை முடியுமா?? முடியாதா?? ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா கிடைக்காதா..

வடை கிடைச்சா அப்பத்திய பசி போகும்..

விடை கிடைச்சாத்தான் எப்பத்தியப் பசியும்போகும்.

ஓவியன்
25-08-2010, 10:11 AM
எனக்கு ஒரு சந்தேகம்!!! இந்த கதை முடியுமா?? முடியாதா??


ஒரு கதையை எங்கேயும் முடிக்கலாம்.. அந்த இடம் நமக்கு ஒரு திருப்தியை தருவது போல இருந்தால்.

அது, அது அவரவர் திருப்தியைப் பொறுத்து... :icon_rollout:

ஆதவா
25-08-2010, 10:21 AM
அமரன்... இப்பல்லாம் கிடைக்கிற விடை, குறுவடையைக் காட்டிலும் சிறியதாக இருக்கிறதாம். பசிக்கு பத்தாது!

ஓவியன்...

எனக்கு இப்பவே ஜன்னி வந்திருச்சு!! எப்படா கதை முடியும்னு காத்துட்டு இருக்கேன்!!

தாமரை
25-08-2010, 11:44 AM
வடை கிடைச்சா அப்பத்திய பசி போகும்..

விடை கிடைச்சாத்தான் எப்பத்தியப் பசியும்போகும்.

பத்தியப் பசி என்று ஒண்ணு கிடையவே கிடையாது. பசிக்கு பத்தியம் தெரியாது..:icon_b::icon_b::icon_b:

தாமரை
25-08-2010, 12:25 PM
சிந்தனாவாதிகள் திவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.

பொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.

சிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை(?) பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..

அதற்கு என்ன செய்யலாம்?

யாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிசைகள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.

தங்கினால் போதுமா? உணவு, போக வர வசதி? இரண்டாம் சிந்தனாவாதி சொன்னார்..

இது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..

இதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.

கற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.


பொருட்கள் எதற்கு? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

பொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க

அப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்

ஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..

எல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும்? இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க? நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.

கேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.

எல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.

மீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.

நீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

மாற்றங்களுக்கு எல்லாம் நானே காரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.

தொடரும்

கலையரசி
25-08-2010, 01:01 PM
நீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.
இது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள்.

தாமரை
25-08-2010, 01:09 PM
நீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.
இது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள்.

அப்ப நான் விடற கதையெல்லாம் இதில சேர்த்தி இல்லையோ?

சரி சரி.. இது கொஞ்சம் புது முயற்சி,,, எல்லாமே உருவகம்தான். நதி நதியல்ல.. தீவும் தீவல்ல.. சிந்தனாவாதிகளும் அப்படித்தான். ஒரு தத்துவக் கதையாகக் கொண்டு போகணும் என முயற்சிக்கிறேன்.

கதை வடிவத்தில் நான் எழுதியது கொஞ்சம்தான். ஒரு கதை இன்னும் பாதியில் இருக்கு.. கொஞ்ச நாள் போனதும் தொடரணும்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13950
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17342
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17337
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21057

படிச்சிருங்க!!!:D:D:D:D

ஆதவா
25-08-2010, 01:12 PM
நீலவேணி என்ற நதியும் மனிதர் காலடி படாத அந்தத் தீவின் பசுமையும் சிந்தனாவாதிகள் வரவுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்ற கவலை எழுகிறது.
இது தான் நீங்கள் எழுதி நான் படிக்கும் முதல் கதை. ஆரம்பம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள்.

படிச்சுட்டீங்களா...... போச்சு!!! :eek::eek::eek::eek:

(கலையரசி : இப்படி பயமுறுத்தியே தொறத்தரானுங்களே!!!)

தாமரை
25-08-2010, 01:19 PM
அவங்க பொய் சொல்றாங்க ஆதவா !!!

அந்த ஏழு நாட்கள் படிச்சிருக்காங்க...:lachen001:

ஆதவா
25-08-2010, 01:26 PM
. சிந்தனாவதிகளும் அப்படித்தான். D

ஒரு கால் போடாட்டியும் கரெக்டாதாங்க இருக்கு!!! :)
---------------------------

கதை நல்லா தொடர்ந்துட்டு இருக்கு.... தண்டவாளம் ட்ராக் பிரியறமாதிரி!! இது கொஞ்சம் யூகிக்க நேரம் எடுக்கும்... எனக்கு அப்படித்தான் இருக்கிறது! மற்றவர்களுக்கு எப்படியோ

மதி
25-08-2010, 01:39 PM
சிந்தனைகள் தொடரட்டும்... எனக்கு நதி நதியாகவும்.. சிந்தனாவாதிகள் அவர்களாகவே தெரிகின்றனர்..:D:D

எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா.....!!! :eek::eek:

மதி
25-08-2010, 01:42 PM
எனக்கு ஒரு சந்தேகம்!!! இந்த கதை முடியுமா?? முடியாதா??
இது முடிஞ்ச கதை... முடிகிற கதை... முடியப்போகிற கதை...

கதை.. கதை.. கதை..
இதற்கு யாரிட்டா
விதை விதை விதை..
கண்டுபிடித்து அவரிடம்
கதை கதை கதை...

:icon_b::icon_b:

அமரன்
25-08-2010, 02:10 PM
படைச்சவனுக்கு உண்மை தெரியும்.

படிச்சவனுக்குக் கதை புரியும்.

படிச்சுட்டே இருப்பவனுக்கு உணர்வு பற்றி எரியும்..

தத்துவார்த்தமான கதையாகக் கொண்டு செல்ல முயற்சி என்று அண்ணாச்சியே சொல்லியாச்சு. நாமளும் இப்படி ஏதாச்சும் உழறி வைப்பம்.

புரிஞ்சவங்களுக்குப் புதிர்.

புரியாதவங்களுக்கு.................. நீங்களே நிரப்பிக்கோங்க விருப்பப்படுறதை.

சிவா.ஜி
25-08-2010, 02:35 PM
ஒரு வித்தியாசமான அனுபவத்துக்குள்ள அழைச்சிக்கிட்டுப் போக தொடங்கிட்டார் தாமரை. ஆதவா சொன்ன மாதிரி..அங்கங்க நிறுத்தி திரும்ப மீள் வாசிப்பு செய்ய வேண்டியிருக்கு. இருந்தாலும்...ஒரு கனமான எதுவோ இருக்கும்ங்கற உணர்வு பிடரியில தொத்திக்கிட்டிருக்கிற மாதிரி இருக்கு.

அமைதியான தீவு...சிந்தனாவாதிகளால்..சலனப்பட்டது....இனி அவர்களின் சிந்தனையில் உதித்தவைகளால் இன்னும் சிதிலமாகுமா...சிறப்பாகுமா....தொடர்ந்து வாசிக்க...வாசிக்க புரியலாம்....புரியாமலும் போகலாம்.

அசத்துங்க தாமரை.

(பூமகள் வீட்ல நீங்க பேசி...நான் சிவாஜி ரஜினியானது நினைவுக்கு வருது)

தாமரை
25-08-2010, 03:32 PM
சிந்தனாவாதிகளின் சிந்தனை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களின் கண்முன் ஒரு மிகச் சிறந்த தீவு மின்னிக் கொண்டிருந்தது. அந்தத் தீவில் தங்கி பொழுது போக்க பெரும் பணக்காரர்கள் பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தார்கள்.. இப்பொழுது ஒவ்வொரு சிந்தனாவாதியும் ஒவ்வொரு தீவிற்கு உரிமையாளர்களாக இருந்தார்கள். நான்கும் நான்கு விதம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இவர்களும் தீவும் விதவிதமாக சிலாகிக்கப் பட்டன,

கனவுகள் போதும்.. செயல்கள் இல்லாவிட்டால் கனவுகளால் பலனேது முதல் சிந்தனாவாதி கனவுகளில் இருந்து மற்றவர்களை இழுத்து வெளியே போட்டார்.

வெளியே வர மனமில்லை இரண்டாம் சிந்தனாவாதிக்கு.. இன்னும் கொஞ்சம் சிந்திப்போமே என்றார்.

நிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..

கருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.

ம்ம்ம். மெல்ல புன்னகைத்தார் மூன்றாமவர்.

இமைக்கும் கருவிழிக்கும் இடையில் இருப்பது காற்றும் கண்ணீரும்தான் என்றாம் இரண்டாமவர்..

பேச்சுகள் போதும்.. சிந்திப்போம் என்றார் முதலாமவர். முதலில் நாம் இங்கே என்ன தேவை எனப் பார்ப்போம் என்றார்.

முதலில் தீவினை முழுக்கச் சுற்றிப்பார்ப்போம். இதன் அடையாளங்களை நிர்ணயிப்போம் என்றார் நான்காமவர்.

நீலவேணிக்கு அதிசயமாக இருந்தது, தீவிற்கு அடையாளமா? இந்தத் தீவின் அடையாளமே நான் தானே.. அவள் மனதில் இந்தப் பதிலை உரக்கக் கத்தவேண்டும் போல ஒரு உந்தல் ஏற்பட்டது. சலசலப்புகள் சிந்தனாவாதிகளின் கவனத்தைக் கவருவதாக இல்லை. அவளுடன் பேசுவதை அவர்கள் குறைத்து விட்டார்களோ என்று அவளுக்கு ஐயம் ஏற்பட்டது.. இல்லை என்றும் சொல்லத் தோன்றியது. எதற்கும் என் அருகில்தானே வந்து அமருகிறார்கள் என்ற சமாதானம் உண்டானது.. கரையில் இருக்கும் ஓரிரு சிறு புற்களின் தலையை தடவி தன் கவனத்தை மாற்றிக் கொள்ள முயன்றாள்.

சிந்தனாவாதிகள் தீவின் மூலை முடுக்கெல்லாம் சென்றார்கள். சில பல இடங்களை குறித்தார்கள். சில பல இடங்களை அடையாளமிட்டார்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்கள். தீவு முழுதும் சுற்றிய அவர்கள் திரும்ப ஒரு நாள் நீலவேணியின் மணல் மடியில் அமர்ந்தார்கள்.

இப்படித்தான் இந்தத் தீவு இருக்கிறது முதலாம் சிந்தனாவாதி தன் கையில் இருந்த குறிப்புகளைக் கொண்டு மணலில் கோடுகளைக் கிழித்தார். கிச்சு கிச்சு மூட்டினாலும் நீலவேணிக்கு சிரிப்பு வரவில்லை.. மெல்ல வரைபடத்தை எட்டிப்பார்த்தாள்..

நதி படத்தை அழித்து விட்டது.. இன்னும் கொஞ்சம் மேலே வா.. இரண்டாம் சிந்தனாவாதி சொல்ல நீலவேணிக்கு குழப்பமாய் இருந்தது..

அவளுக்குத் தெரிந்த தீவு அப்படி இருந்ததில்லையே அவளுக்குத் தெரிந்த தீவு எப்பொழுதும் அவளைச் சுற்றியே இருக்கும். அவளுக்குத் தெரிந்தது நீண்ட இருபுறமும் அவளை ஒட்டி நின்றிருந்த மரம் செடி கொடி புதர்களும் சமீபத்தில் தோன்றிய மணற்பரப்புகளும், குடிசைகளும் கற்களும் பாறைகளும்தான்.

சிந்தனாவாதிகள் தன்னை குழப்புகின்றனரா இல்லை உண்மையில் அதுதான் உண்மையா என்று நீலவேணிக்குப் புரியவில்லை. அது உண்மையாய் இருந்தாலும் அவளுக்கு ஒத்துக் கொள்ள மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதான் என் உலகம். மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள். அவள் திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டாள்..

இவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள்..

தொடரும்..

மதி
25-08-2010, 04:09 PM
ஏமாறாம இருந்தா சரி...

ரங்கராஜன்
25-08-2010, 05:21 PM
என்னது தாமரை அண்ணா கதை எழுதுவாரா ரா ரா ரா ரா ரா..... ஆ ஆ ஆ

இன்னும் கதையை படிக்கவில்லை படித்தபின் எழுதுகிறேன் மீதி ஆ ஆ ஆக்களை

கீதம்
25-08-2010, 10:31 PM
உருவகக்கதைகளைக் கையாள்வது மிகக்கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தரும். எனக்கும் ஒரு தோற்றம் மனக்கண்ணில் உருவாகி விரிகிறது. கதாசிரியர் நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேனா என்று தெரியாதபோதும் என் கற்பனை சுகமாகவே உள்ளது. ஏதோ புரிவதுபோலும் உள்ளது. இது இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதவரை என் யூகங்களே சரி என்னும் அகந்தையும் பிறக்கிறது.

தொடருங்கள், என் அகந்தைக்கு எங்கே அடி கிடைக்கிறதென்று பார்ப்போம்.

தாமரை
26-08-2010, 01:47 AM
உருவகக்கதைகளைக் கையாள்வது மிகக்கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தரும். எனக்கும் ஒரு தோற்றம் மனக்கண்ணில் உருவாகி விரிகிறது. கதாசிரியர் நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேனா என்று தெரியாதபோதும் என் கற்பனை சுகமாகவே உள்ளது. ஏதோ புரிவதுபோலும் உள்ளது. இது இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதவரை என் யூகங்களே சரி என்னும் அகந்தையும் பிறக்கிறது.

தொடருங்கள், என் அகந்தைக்கு எங்கே அடி கிடைக்கிறதென்று பார்ப்போம்.

அடியெல்லாம் கொடுக்க மாட்டேன் கவலைப் படாம படிங்க... இதை கவிதைகளில் நிறைய பேர் செய்திருக்கிறார்கள்.. கதை வடிவில் நான் முயற்சிக்கிறேன்..

உதாரணத்திற்கு நீண்ட நாட்களுக்கு முன் நான் பிரித்து மேய்ந்த ஒரு கவிதை இங்கே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15466

ஆக

யூகங்களும், அகந்தையும், அடிகளும், கொட்டுகளும் உங்களுக்கு நீங்களேதான் கொடுத்துக் கொள்ள முடியும்..

முடிந்தால் கதைக்கு உங்க விளக்கத்தையும் அப்பப்ப கொடுங்கள்...

:D:D:D:D:D

அன்புரசிகன்
26-08-2010, 05:43 AM
இங்கே பதிய எனக்கு தேவையான ஸ்மைலி மன்றத்தில் இல்லை... ஒரு படத்தில் சத்யராஜ் சொல்லுவார். அது தான் சொல்ல முடியுது... ம் ம் ம்... டாப் கியர போட்டு மேல தூக்கு தூக்கு தூக்குமா... :D

தாமரை
26-08-2010, 05:50 AM
இல்லைன்னா உண்டாக்கிக்கணும். புலம்பிகிட்டு இருக்கப்படாது. அதான் இந்தக் கதையில் வருகிற சிந்தனையோட்டம் ஆச்சே அன்பு!!:mini023::mini023::mini023:

தாமரை
26-08-2010, 05:54 AM
நிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..

கருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.

நண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..

அன்புரசிகன்
26-08-2010, 05:57 AM
கதை புரியுது. சுவாரசியமாகவும் இருக்குது. பலவிடையங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகிறது என்பதில் எனக்கு கதை பிடிச்சிருக்கு... நீலவேணி என்கிற நதியின் எண்ணத்தையும் யதார்த்தத்தையும் தொகுத்துக்கொண்டு கதை போகிறதாக நான் உணர்கிறேன். (நான் நினைப்பது சரியா தெரியவில்லை) கதையின் அடுத்த அடுத்த வரியில் என்ன இருக்கப்போகிறது என்ற அழவில் எதிர்பார்ப்பு.. வாசிக்கும் போது மனதில் அழுத்தம் கூடிக்குறையுது. அதனால தான் அன்று புரியுது. ஆனா புரியல என்றேன். இப்பவும் அதே நிலை தான். நான் நினைப்பது சரி என்ற எண்ணம் எனக்கு வரும் வரை ............................................

அன்புரசிகன்
26-08-2010, 06:00 AM
நிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..

கருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.

இது ஒரு தலைபட்சமாண நினைப்பு என நான் நினைக்கிறேன். கண்மூடினால் நினைப்பதெல்லாம் கனவல்லவே... கற்பனையும் அல்லவே...

ஆதவா
26-08-2010, 06:24 AM
நிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..

கருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.

நண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..

நான் இருக்கேன்!!! நேத்திக்கு வேலை வந்திருச்சு அதான் மேட்டர். இன்னிக்கும் கடுமையான வேலை இருக்கு!!! இன்னும் சொல்லப்போனா... இந்த கதை சிந்தனாவாதித்துவ கதை :)

முதலில் நான் நினைத்து வைத்த கதையிலிருந்து வெளியே வருகிறேன்!!!

கதையை அங்கங்கே பிரித்து அவற்றுக்கு உருவகத்தைப் பொருத்திப் பார்க்கிறேன்.
-----------------------------------

தாமரை
26-08-2010, 06:53 AM
இது ஒரு தலைபட்சமாண நினைப்பு என நான் நினைக்கிறேன். கண்மூடினால் நினைப்பதெல்லாம் கனவல்லவே... கற்பனையும் அல்லவே...

நிஜங்களின் மேல் போர்த்தப்படும் திரைகள்தானே கனவு!!!

அந்தக் கோணத்தில் யோசித்திப் பார்க்கிறார் சிந்தனாவாதி..

கனவுகளின் அடி ஆழத்தை தோண்டிபார்த்தால் தெரிந்த நிஜம் ஒன்று பல போர்வைகளால் போர்த்தப்பட்டு உருமாற்றப்பட்டிருக்கும். கருவிழி கண்ட ஒன்ற மீது போர்த்தப்படும் இந்தப் போர்வைகள் இமை மூடலில் போர்த்தப்படுகின்றன. இமை திறக்கும் பொழுது நிஜம் மறுபடி தெரிகிறது...

கனவு என்பது போர்த்தப்பட்ட நிஜம்...

Akila.R.D
26-08-2010, 07:06 AM
தாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு..
நீலவேணி - என் அம்மாவின் பெயர்...

அடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்?...

ஆதவா
26-08-2010, 07:21 AM
தாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு..
நீலவேணி - என் அம்மாவின் பெயர்...

அடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்?...

கூடி கும்மியடிப்பாங்க.... ஹாஹாஹா..... :lachen001::lachen001:

தாமரை
26-08-2010, 08:25 AM
கூடி கும்மியடிப்பாங்க.... ஹாஹாஹா..... :lachen001::lachen001:

ஏறத்தாழ அதான்.. பொறுங்க இன்னும் இரண்டு மணி நேரம்:icon_ush::icon_ush::icon_ush:

த.ஜார்ஜ்
26-08-2010, 08:33 AM
முடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..?

தாமரை
26-08-2010, 08:36 AM
முடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..?

கொல்லிமலையில வேணும்னா இரவு முழுதும் விவாதிக்கலாம். :D:D:D:D

தாமரை
26-08-2010, 09:17 AM
நீலவேணியோட மனசைப் போலவே வானமும் அன்று கறுத்தது. வானத்தை அவள் பிரதிபலித்து போல அன்று வானம் அவள் மனதை பிரதிபலித்தது..

காற்றும் நலம் விசாரிக்க வந்தது. மெல்ல பெருமரங்களின் தலையைத் தட்வியபோது அவை என்ன சொல்லிற்றோ தெரியவில்லை.. காற்றிற்கு மதம் பிடித்தது.. ஓ என இரைந்தது.. மேகங்களைத் தட்டித் தட்டி முறையிட்டது.

மேகங்களோ காற்று சொன்ன முறையீடுகளைக் கேட்டு உறுமின. மேகங்களுக்கிடையே பலத்த விவாதம் எழும்பி இருக்கக் கூடும். சளார் சளார் என அவை வாள் போன்ற ஏதோ ஆயுதங்களை உருவின..

மேகங்கள் அனுப்பிய முதல் துளி ஆறுதல் நீலவேணியின் மேல் விழுந்த போது சிந்தனாவாதிகள் பதறிப் போனார்கள்.

காற்று தன் கரங்களால் அவர்களின் குடிசைகளை புரட்டிப் போட்டது.. மரங்களெல்லாம் தலைவிரி கோலத்துடன் அதைப் பார்த்து கைகொட்டி பேய் போலச் சிரித்தன.

சிந்தனாவாதிகளுக்குச் சிந்திக்க நேரமில்லை. காற்றின் உறுமல்கள் அவர்களின் அச்சத்தை மேலும் கூட்டிக் கொண்டிருந்தன..

மூன்றாம் சிந்தனாவாதிதான் சொன்னார். வாருங்கள் மலைக்குச் செல்வோம்..

செல்கின்ற வழியெல்லாம் மரங்கள் எக்காளமிட்டுச் சிரித்தன. துடுக்குத்தனமான சில கிளைகளை வீசி துன்புறுத்தின.. சிந்தனாவாதிகள் உறுதி இறுதிக்கு வரவில்லை ஆனாலும் சற்று சிதறிக் கொண்டுதான் இருந்தது. மலையை அடைந்த அவர்கள் பாறைகளின் இடுக்குகளில் தங்களைச் சொருகிக் கொண்டு மறைந்த பொழுது மேகங்கள் கல் வீசித் தாக்குதலைத் தொடங்கி இருந்தன. ஓ வென்ற பேரிரைச்சலுடன் மேகங்கள் வீசிய அத்தனையும் தீவின் முழுதும் விழுந்தன.

நீலவேணிக்கு புதுரத்தம் பாய்ந்தது போலிருந்தது. அவளுக்கு உணர்ச்சி வெறி தலைக்கேறியது. மெல்லப் பரந்தாள். விரிந்தாள். இரு கரைகளையும் தாண்டி விழுந்தாள்.. புரண்டாள்.. அவளைத் தாண்டி உண்டாக்கப்பட்டிருந்த அத்தனை அடையாளங்களையும் அழித்தாள்.

அவளின் கோபம் கலந்த வெறிக்கூச்சல் மலையெங்கும் எதிரொலித்தது. விலகிச் சென்றிருந்த அத்தனை புதர்களையும் மரங்களையும் தேடிச் சென்று அணைத்துக் கொண்டாள். விழுந்து புரண்டதில் அவள் உடலெங்கும் மணற்கறை ஒட்டிக் கொண்டு அவள் செம்பழுப்பு நிறத்தவளாய் மாறிப் போனாள்.

அவள் வழியில் எதிர்பட்ட நாணல்களை உச்சி முகர்ந்து வெறியுடன் முத்தமிட்டாள்.. பெருமரங்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.. ஓவென்று அரற்றினாள்..

தீவே உணர்வுக் குவியலாக மாறிக் கொண்டிருந்தது. இதைக் கண்டு சில கல்மனங்களும் தங்கள் பிடிமானம் விட்டு மலையிலிருந்து தட் தட் எனக் குதித்து உருண்டு வந்தன..

ஊழிப் பெருங்கூத்தாய் அங்கு இருந்த அத்தனை மரங்கள் கொடிகள் நீலவேணி ஆகியோர் ஆடிய நடனம் சிந்தனாவாதிகளுக்கு மிகப் பெரிய பயத்தை வரவழைத்திருந்தது. உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும் இந்த மாபெரும் கும்பலிடம் மாட்டினால் தங்கள் உடலில் ஒன்றும் மிஞ்சாது என்று நால்வருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் ஒளிந்திருந்த பாறையின் மேலிருந்து கூட நீர் ஓவென்ற இறைச்சலுடன் குதித்தோடி அவர்கள் மறைந்திருந்த இடத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

அந்தத் தீவெங்கும் பூதம் போல மிகுந்த ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான உணர்ச்சிகள்.. அதனால் எங்கும் இருண்டுவிட்டிருந்தது..

சிந்தனாவாதிகள் சிந்திக்கத் திறனற்றவர்களாய் நடுங்கிக் கொண்டிருந்தனர். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபோது சிந்திப்பதற்கும் ஒன்றுமில்லை என்று ஆகியிருந்தது.

இருளில் நீலவேணி எல்லா இடங்களையும் தடவித் தடவி அவர்களைத் தேடிக் கொண்டிருந்தாள். அவர்கள் பதித்த அத்தனைத் தடங்களையும் வெறியோடு அழித்துக் கொண்டிருந்தாள்.. பத்து மணி நேரங்கள் கடந்து விட்டிருந்தன. ஒடுங்கிப் போயிருந்த சிந்தனாவாதிகள் உறங்க முயற்சிக்கவில்லை. வெறித்து பார்த்தவண்ணம் இருந்தார்கள். இருட்டில் எதுவும் தெரியவில்லை.

இரைச்சல் அடங்கி இருந்தது.. நீலவேணி கூட இரைச்சலை குறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் தீவு முழுதும் விரவிப் பரவி இருந்தாள்..

மேகங்கள் தங்கள் வெறிகளைத் தீர்த்துக் கொண்டு வெளுத்துப் போயின. கீற்று ஒளி மெல்ல கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தது..

அந்தக் கீற்று ஒளியில் நிழலாய் தெரிந்தது...

தரைதட்டிப் போன அந்தக் கப்பல்!!!

தொடரும்

தாமரை
26-08-2010, 09:35 AM
தாமரை எழுதுற கதைனு பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு..
நீலவேணி - என் அம்மாவின் பெயர்...

அடுத்து சிந்தனாவாதிகள் என்ன செய்ய போகிறார்கள்?...

அடுத்த மீட்டிங்ல இந்தக் கதையைப் பற்றி பேச்சுவீங்க என நினைக்கிறேன்.

ஆதவா
26-08-2010, 10:16 AM
மக்களே, இந்த கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, இதுதான் கதை என்று முடிவுசெய்தால் உங்களுக்கு கதையே புரியாது.. ஆகவே முதலிலிருந்து படிக்க... (படித்து முடித்தவர்களுக்கு இது....)

கதை சுருக்கம்.

தன்னந்தனித் தீவு, இயற்கை வளமை மிகுந்த அத்தீவை ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவள் நீலவேணி. (மனுஷியாக நினைப்பது உங்கள் கையில்!!) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா? அதை உண்டு அதன் ருசி பார்க்க ஆள்வேண்டாமா என்று மேலும் சிந்தித்தார்கள் இந்த நால்வர். இதனால் அவர்களுக்கு பலவித யோசனைகள் வந்தன. அந்த தீவை சுற்றுலா மையமாக்க முடிவு செய்தார்கள். தனிமையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட நீலவேணிக்கு இதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதனால் தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தாள். கொதித்தெழுந்து பொங்கினாள். அதன் விளைவுகளால் சிந்தனாவாதிகள் பதறினர்.
------------

இக்கதையை படிக்கும் பொழுது கதையின் போக்கில், நீலவேணி நீலவேணியே அல்ல என்பது புரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் அது நீலவேணியை மையம் கொண்டேதான் ஆரம்பிக்கப்பட்டது. அல்லது அப்படி ஆரம்பிக்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.


அவர்கள் ஒளிந்திருந்த பாறையின் மேலிருந்து கூட நீர் ஓவென்ற இறைச்சலுடன் குதித்தோடி அவர்கள் மறைந்திருந்த இடத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

அந்தத் தீவெங்கும் பூதம் போல மிகுந்த ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான உணர்ச்சிகள்..

தண்ணீர்தான் பிம்பங்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகி.... நீலவேணியின் ருத்ரதாண்டவத்தில் உணர்ச்சி பீய்ச்சிய நீர், ஒவ்வொருவரின் மனபிம்பத்தை நன்கு காட்டிக் கொடுத்துவிட்டது இல்லையா??

ம்ம்.... இப்பொழுது கதையின் பாதை மாறிவருகிறது. அடுத்தது என்னவோ???

ஆதவா
26-08-2010, 10:21 AM
முடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..?

ஜார்ஜ் அண்ணே....

இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???

தீவு - பிரபஞ்சம்
நீலவேணி - பூமி
சிந்தனாவாதிகள் - மனிதர்கள்

இப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை!!! :)

தாமரை
26-08-2010, 10:23 AM
மக்களே, இந்த கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, இதுதான் கதை என்று முடிவுசெய்தால் உங்களுக்கு கதையே புரியாது.. ஆகவே முதலிலிருந்து படிக்க... (படித்து முடித்தவர்களுக்கு இது....)

கதை சுருக்கம்.

தன்னந்தனித் தீவு, இயற்கை வளமை மிகுந்த அத்தீவை ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவள் நீலவேணி. (மனுஷியாக நினைப்பது உங்கள் கையில்!!) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா? அதை உண்டு அதன் ருசி பார்க்க ஆள்வேண்டாமா என்று மேலும் சிந்தித்தார்கள் இந்த நால்வர். இதனால் அவர்களுக்கு பலவித யோசனைகள் வந்தன. அந்த தீவை சுற்றுலா மையமாக்க முடிவு செய்தார்கள். தனிமையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட நீலவேணிக்கு இதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதனால் தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தாள். அழுதாள். அதன் விளைவுகளால் சிந்தனாவாதிகள் பதறினர்.
------------

இக்கதையை படிக்கும் பொழுது கதையின் போக்கில், நீலவேணி நீலவேணியே அல்ல என்பது புரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் அது நீலவேணியை மையம் கொண்டேதான் ஆரம்பிக்கப்பட்டது. அல்லது அப்படி ஆரம்பிக்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.தண்ணீர்தான் பிம்பங்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகி.... நீலவேணியின் ருத்ரதாண்டவத்தில் உணர்ச்சி பீய்ச்சிய நீர், ஒவ்வொருவரின் மனபிம்பத்தை நன்கு காட்டிக் கொடுத்துவிட்டது இல்லையா??

ம்ம்.... இப்பொழுது கதையின் பாதை மாறிவருகிறது. அடுத்தது என்னவோ???

கதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..:icon_ush::icon_ush::icon_ush:

தாமரை
26-08-2010, 10:25 AM
ஜார்ஜ் அண்ணே....

இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???

தீவு - பிரபஞ்சம்
நீலவேணி - பூமி
சிந்தனாவாதிகள் - மனிதர்கள்

இப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை!!! :)

இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்:icon_b:

ஆதவா
26-08-2010, 10:29 AM
கதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..:icon_ush::icon_ush::icon_ush:

அடுத்தடுத்த இழைப்பின்னல்கள்லதானே உலகமே இயங்குது!!! விட்டு பிடிப்போம்!!! :)இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்


இப்போ நீங்க நீலவேணிய பொங்க விட்டிருக்கீங்க..
நம்முள்ளே இருந்தா தண்ணியா போவும்.... :D:D அடங்கினத்துக்கப்பறமா பார்ப்பொம்!! :wuerg019:

த.ஜார்ஜ்
26-08-2010, 10:58 AM
இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்:icon_b:

புரிந்து கொண்டேன்

த.ஜார்ஜ்
26-08-2010, 11:01 AM
ஜார்ஜ் அண்ணே....

இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???
தமிழ் மன்றமாகக் கூட நினைத்துப்பார்க்கலாம் [நினைப்புக்கு என்ன வந்தது?]

ஆதி
26-08-2010, 12:42 PM
அண்ணா கதையால் வானத்தை அளக்கும் முயற்சியோ ?

அப்புறம் பொந்துக்குள் பாம்பு வாலோ எலி வாலோ என்றது வால்நட்சத்திரத்தையோ ?

நீலவேணி சிலநேரம் பூமியா ? சிலநேரம் வானமா ? சிலநேரம் கடலா ? சில நேரம் நம் வாழ்க்கையா ? தெரியுறா ?

மறுவாசிப்பிலாவது கருசிக்குதானு பாக்குறேன்..

தாமரை
26-08-2010, 01:01 PM
அந்தக் கப்பல் தரைதட்டிப் போயிருந்தது. இரவு முழுக்கப் பெய்த பேய் மழை சூறாவளிக் காற்றில் எங்கோ போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தடுமாறி தீவுப் பக்கம் ஒதுங்கி இருந்தது.

அதற்கு முன்னும் அது எங்கோ போய்க் கொண்டிருந்த கப்பல்தான். ஒரு வியாபாரக் கப்பல். எங்கிருந்தோ புறப்பட்டு சரக்குகளை எங்கோ இறங்கி விட்டு எங்கோ சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அது.

வழியில் படகுகள் எதிர்பட்டன. 20 படகுகள் இருக்கலாம். அதில் சிலர் இருந்தார்கள். படகுகள் எதுவும் இயங்கவில்லை. எல்லாம் மிதந்து கொண்டிருந்தன.

அங்கங்கே மிதந்த படகுகளில் பலர் கவிழ்ந்து கிடந்தார்கள். உயிர்துடிப்பு இருக்கிறதா என்று மேலிருப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஏணிகள் இறக்கப்பட்டு படகுகளில் இருந்தவர்கள் சேகரிக்கப் பட்டார்கள். சோர்ந்து கிடந்த அவர்கள் முகமும் வயிறு போலவே வற்றிக்கிடந்தது. எந்த வீட்டிலிருந்தோ ஏதோ ஒரு மருமகள் கொடுமையால் விரட்டப்பட்ட ஏழைத்தாய் போல வற்றிக் கிடந்தார்கள்.

அவர்களை ஏற்றிய கப்பல்தான் புயலில் சிக்கி அந்தத் தீவின் ஓரம் கரை தட்டி இருந்தது..

மேகப் போர்வையை விலக்கிப் பார்த்த சூரியனுக்கு அந்தத் தீவில் நடந்த உரிமைப் போராட்டம் தெரிந்தது. கப்பலில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். இப்போதைக்கு எதையாவது கொண்டு சில நாட்கள் வாழவேண்டும். மீட்புக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பல பசுமரங்கள் உணர்ச்சி வேகத்தில் மாரடைப்பு வந்து சாய்ந்து இருந்தார்கள்.. வளர்ந்த புற்களும் கொடிகளும் அவர்கள் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

பாறை இடுக்கிலிருந்து சிந்தனாவாதிகள் வெளிப்பட்டிருந்தனர். அவர்களைச் சோர்வு பீடித்திருந்தது. மெல்ல இறங்கி தாகம் தீர்த்துக் கொள்ள நீலவேணிக் கரையோரம் வந்தார்கள்.

நீலவேணி ஆவேசம் சற்றே குறைந்தவளாய் இருந்தாள். இன்னும் கோபத்தில் உடல் வீங்கி இருந்தாள். கரைகளை மீறி புரண்டு கொண்டிருந்தாள்.

வீழ்ந்து கிடந்தவர்களின் சொத்துக் கனிகளை வாழ்ந்து கிடந்தவர்கள் பறித்துக் கொண்டு பசியாறினார்கள். சிந்தனாவாதிகளின் கனவுகளுக்கும் நிஜத்திற்கும் இடையில் கண்ணீர்..

வெளிப்பட்ட அவர்கள் கடலை நோக்கி நடந்தனர். அவர்களின் நாவாய்,, வெளி உலகுக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே தூதன் சிதறிக் கிடந்தது.

நீலவேணியின் மறுகரையில் மற்றும் பலர் இருப்பதை சிந்தனாவாதிகள் அறியவில்லை. எல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கப் படவேண்டும் என்பது சலிப்பைத் தருவதாக இருந்தது.

போக்கிடம் இன்றி மீண்டும் வந்தார்கள் நீலவேணியருகில்.

எல்லாம் போனது.. எல்லாம் போனது முதலாம் சிந்தனாவாதி முணுமுணுத்தார்.

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு.. எதை கொண்டு போகப் போகிறோம் பெறுவதற்கு இரண்டாம் சிந்தனாவாதி நிமிர்ந்தார்.

வருவதற்கும் போவதற்கும் இடையில் இருத்தல் இருக்கிறதே மூன்றாம் சிந்தனாவாதி கேள்வியுடன் நிமிர்ந்தார்.

இருத்தல்.. பதியும்படி இருத்தல் இதுதானே நம் இலட்சியம் நான்காம் சிந்தனாவாதி சொன்னார்...

மௌனம் மீண்டும் அங்கே கொஞ்சநேரம்..

இதோ இந்த ஆற்றைப் பாருங்கள்.. இதில் இருந்து சிலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம் என்றார் முதலாம் சிந்தனாவாதி..

நீலவேணிக்கு சிலீரென உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்தது.

மறுகரையில் கப்பலில் வந்த உழைப்பாளிகளும் வியாபாரிகளும் நீலவேணியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

தொடரும்

தாமரை
26-08-2010, 01:13 PM
மறுவாசிப்பிலாவது கருசிக்குதானு பாக்குறேன்..

கரு அவ்வளவு எளிதில் சிக்காது...

ஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...:lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதி
26-08-2010, 01:22 PM
கரு அவ்வளவு எளிதில் சிக்காது...

ஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...:lachen001::lachen001::lachen001::lachen001:

:D :D :D

தாமரை
27-08-2010, 02:12 AM
அப்படி என்ன பாடம் இருக்கிறது - இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்..

இதை ஆழப் பார்த்தால் நமக்கு அவ்வப்பொழுதுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கக் கூடும் - முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

இப்பொழுது நமக்கு என்ன பாடம் கிடைத்தது? மூன்றாம் சிந்தனாவாதி கேட்டார்..

கஷ்டங்களில் நமது வலிமை பன்மடங்காக பெருக வேண்டும். அதுதான் வாழ வழி என்றார் முதலாம் சிந்தனாவாதி..

வலிமை எப்படி பெருக்குவது? நான்காம் சிந்தனாவாதி கேட்டார்.

அங்கே பாருங்கள் பல சிற்றோடைகள்.. மலை உச்சியைக் காட்டினார். முதலாம் சிந்தனாவாதி..

சிற்றோடைகள் ஆமாம் அதனால் என்ன கேட்டார் மூன்றாம் சிந்தனாவாதி..

அது போல சிலரின் உதவியை நாம் பெறவேண்டும் என்றார் முதலாம் சிந்தனாவாதி...

சிலரா? இது ஆள் அரவமற்ற தன்னந்தனித் தீவு என்றார் நான்காம் சிந்தனாவாதி..

அதற்குத்தான் ஆற்றைப் பாருங்கள் என்றேன் என்றார் முதலாம் சிந்தனாவாதி...

அனைவரும் ஆற்றைப் பார்க்க.. அக்கரையில் மனித நடமாட்டம் தெரிந்தது..

இவர்கள் யாராக இருக்கக் கூடும்.. இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்...

நமக்கு முன்பிருந்தே இங்கிருப்பவர்களா? எங்கே வசித்தார்கள் தெரியவில்லையே மூன்றாம் சிந்தனாவாதி பலமாக யோசித்தார்.

இல்லை போலத் தெரிகிறது. அவர்கள் நடையில் வலிமையோ உற்சாகமோ தெரியவில்லை. தள்ளாட்டம் தான் தெரிகிறது.

அப்படியென்றால்..

இவர்கள் வழி தவறி வந்தவர்களாக இருக்கலாம்.

வழி தவறி வந்தவர்கள் எப்படி நமக்கு உதவ முடியும்?

பல வாய்ப்புகள் இருக்கின்றன. போவோம் போய்ச் சந்திப்போம் வாருங்கள் முதலாம் சிந்தனாவாதிதான் கிளம்பினார்..

முதலில் குரல் கொடுப்போம்.. அவர்கள் நம்மை வரவேற்பார்களா தெரியவில்லையே என்றார் இரண்டாம் சிந்தனாவாதி..

ஜாக்கிரதையாய் இருப்பதில் நஷ்டமில்லை என்றார் மூன்றாமவர்.

ஓஹோஹோ உரக்கக் குரல் எழுப்பினர் சிந்தனாவாதிகள்

அக்கரையில் இருந்தவர்களுக்கு வியப்பு.. ஆளில்லா தீவில் மனிதக் குரலா.. நிமிர்ந்த அவர்களின் கண்ணில் வியப்பு..

எப்படியும் இந்தத் தீவிலிருந்து சொந்த ஊர் போய்விடலாம்.. வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி..

அவர்களும் கையசைத்து குரல் எழுப்பினார்கள்.

ஆற்றின் கரைவழியே சென்று ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கடந்தார்கள் சிந்தனாவாதிகள்..

என்ன மொழி பேசுவார்களோ மூன்றாம் சிந்தனையாளர் கேட்டார்..

ஒன்று ஆங்கிலம் அல்லது தமிழ்.. இரண்டாம் சிந்தனையாளர் சொன்னார்..

எப்படிச் சொல்கிறீர்கள் கேட்டார் நான்காமவர்..

ஆங்கிலம் உலகை ஆளத் துடித்து எங்கெங்கும் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் உலகெங்கும் விரட்டி துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

அதனால்தான் - இரண்டாமவர் சொன்னார்..


வாருங்கள்.. வாருங்கள்.. வெல்கம்.. வெல்கம்..

கூவியபடியே சென்றார்கள் சிந்தனைவாதிகள்.

தொடரும்

தாமரை
27-08-2010, 02:28 AM
கதை புரியுது. சுவாரசியமாகவும் இருக்குது. பலவிடையங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகிறது என்பதில் எனக்கு கதை பிடிச்சிருக்கு... நீலவேணி என்கிற நதியின் எண்ணத்தையும் யதார்த்தத்தையும் தொகுத்துக்கொண்டு கதை போகிறதாக நான் உணர்கிறேன். (நான் நினைப்பது சரியா தெரியவில்லை) கதையின் அடுத்த அடுத்த வரியில் என்ன இருக்கப்போகிறது என்ற அழவில் எதிர்பார்ப்பு.. வாசிக்கும் போது மனதில் அழுத்தம் கூடிக்குறையுது. அதனால தான் அன்று புரியுது. ஆனா புரியல என்றேன். இப்பவும் அதே நிலை தான். நான் நினைப்பது சரி என்ற எண்ணம் எனக்கு வரும் வரை ............................................

இதுதான் மனித குணம்.. நாம் தெரிந்து கொண்டதை வைத்து மிச்சம் இருப்பதை அனுமானிப்பது...

அனுமானிக்க முடியாதது தானே இயற்கை.. அதனால்தான் கோட்பாடுகள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. அப்போதைய அறிவிற்கு அந்தக் கோட்பாடு சரியெனவே தோன்றும்..

இதுவரை கதைக் கருவை நான் ஐந்து முறை மாற்றிவிட்டேன். அதனால் கரு கிடைச்சிடும் என்று யோசிக்காதீங்க, கதை கரு கிடைச்சிட்டா எதிர்பார்ப்பு குறைஞ்சிடுமில்ல..

பார்ப்போம் அன்றன்று இருக்கும் என் மூடுக்கேத்த மாதிரி கதை பயணிக்குது....

அதாவது .......

:D:D:D:D:D:D:D

அன்புரசிகன்
27-08-2010, 04:09 AM
ஆராய்ச்சிக்கான சிந்தனைகள் மனிதவளர்ச்சியில் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது. மற்றவர்கள் இப்படிநினைப்பார்கள் அப்படி நினைப்பார்கள் என்று குழம்பாது இப்படிச்செய்வொம் என்ற முன்னோக்க சிந்தனைவாதிகளாக அவர்களை காட்டுகிறீர்கள். என்ன சந்திப்பு எப்படி போகிறது என்று பார்க்கலாம்.

ஆதவா
27-08-2010, 08:58 AM
கதையை நீங்கள் மாற்றிக் கொண்டே வருவது புரிந்தது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். எல்லையில்லா பயணத்தில் நாம் இறங்கிக் கொள்ளும் இடமே எல்லை!!

இப்பொழுது விட்ட இடத்தில் தொடர்ந்தேனேயானால்....

கொலம்பஸ் (அல்லது வெஸ்புகி) போல அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்கள் அந்நாட்டினராய் ஒருபக்கம்..... மறுபக்கம் பிரிட்டிஷ் காரர்களைப் போல...... பார்க்கலாம் ஏகாதிபத்தியம் நிகழ்கிறதா என்று!!!

தாமரை
27-08-2010, 09:12 AM
இந்நேரம் அமரன் கதையை அனுமானித்திருக்க வேண்டும்.

இல்லைன்னா அவர் "ஐ யாம் பேக்" என்ற அனுபவத்தை "ஐ யாம் பேக்கு" என மாற்றவேண்டும்

அமரன்
27-08-2010, 09:13 AM
இந்நேரம் அமரன் கதையை அனுமானித்திருக்க வேண்டும்.

இல்லைன்னா அவர் "ஐ யாம் பேக்" என்ற அனுபவத்தை "ஐ யாம் பேக்கு" என மாற்றவேண்டும்

இதுக்கு மேல நீங்க சொல்லவே வேணாம்..:)

தாமரை
27-08-2010, 09:55 AM
உழைப்பாளிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மனிதர்களைக் காண ஆனந்தமாய் இருந்தது. இங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. இதோ எப்படியோ கரையேறிவிட்டோம். எப்படியும் இடம் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

வியாபாரிகள் ஆங்கிலம் பேசினார்கள். உழைப்பாளிகள் தமிழ் பேசினார்கள். வியாபாரிகளின் ஆவல் உதவி பெறுவதில். உழைப்பாளிகளின் ஆவல் ஆதரவு பெறுவதில்..

கீற்றொளி போல் கசிந்த சூரிய ஒளியில் அவர்களின் நம்பிக்கைகளாக நான்கு சிந்தனைவாதிகள் வந்து கொண்டிருந்தார்கள்.

வியாபாரிகள் உழைப்பாளிகளைக் கட்டுப் படுத்தினார்கள். பொறுங்கள். பொறுங்கள்.. அவர்களால் நமக்கு உதவி செய்யமுடியுமா எனப் பார்ப்போம்.

வியாபாரிகள் சிந்தனாவாதிகளை நெருங்கினர்.

நாங்கள் புயலால் வழி தவறி விட்டோம். இது என்ன நாடு?

நாடா? சிரித்தார் சிந்தனை 1. இது ஒரு தீவு.. பெருங்கடலில் அமைந்திருக்கும் எந்த ஆளுகைக்கும் உட்படாத தீவு..

இங்கே யார் வசிக்கிறார்கள். எங்கள் கப்பல் கரைதட்டி விட்டது.. கப்பலை நீருக்குள் இழுக்க உதவி வேண்டும்...

இங்கு நாங்கள் நால்வர் மட்டுமே வசிக்கிறோம். வியாபாரிகளின் செவியில் பேரிடியாய் விழுந்தது அந்த வார்த்தைகள்..

அப்படியானால் நீங்களும் புயலால் இங்கு ஒதுக்கப்பட்டவர்களா? வாருங்கள் எங்களுடன் இணையுங்கள். உங்களை உலகத்துடன் சேர்த்து விடுகிறோம் வியாபாரிகள் கேட்டனர்.

புயலால் ஒதுக்கப்படவில்லை. உலகத்தில் சென்று ஒளிந்து கொள்ளவும் எண்ணமில்லை. இங்கேயே வாழத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்றார் மூன்றாம் சிந்தனாவாதி.

சரி.. உங்கள் இஷ்டம்.. எங்களுடைய இப்போதைய தேவை உணவு. அடுத்து எதாவது அருகிருக்கும் கப்பலை தொடர்பு கொண்டு உதவி கேட்க வேண்டும். உணவைச் சேகரித்துக் கொண்டு கப்பலுக்குச் செல்லவேண்டும்..

பழங்களும் கிழங்குகளும் இங்கு இருக்கிறது. ஆமாம் அவர்கள் யார்? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

அவர்கள் அகதிகள், வீடற்றவர்கள், நாடற்ற்வர்கள்.. வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். எதாவது துறைமுகத்தில் அகதிகளாகச் சேர்க்க வேண்டும் என்றார் வியாபாரி..

நான் அவர்களுடன் பேசலாமா? என்றார் நான்காம் சிந்தனாவாதி..

பேசுங்கள்.. அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள் என்றார் வியாபாரி..

முதலில் பசியாற்றம். பிறகு பேசுவோம் என்றார் முதலாம் சிந்தனாவாதி.

வியாபாரிகளும், உழைப்பாளிகளும் முடிந்தவரை காய்கனி கிழங்குகளைச் சேர்த்தனர். கூடவே நீலவேணியும் நீரும்.. கப்பலில் உணவைச் சேர்த்தாயிற்று.. வியாபாரிகள் ரேடியோ அலைவரிசைகளில் உதவிக் கரங்களைத் தேட ஆரம்பித்தனர்.

உழைப்பாளிகள் பசியாறிச் சற்று தெம்புடன் இருந்தனர். கடற்கரையில் நீலவேணியின் வாயருகே (முகத்துவாரம் - வாய் :) ) அனைவரும் அமர்ந்திருந்தனர்.

நான்காம் சிந்தனாவாதி பேசத்தொடங்கினார்.

மக்களே! உங்கள் ஏக்கங்களை உங்கள் முகங்களில் அறிகிறேன். சொந்தமண்ணில் அனாதைகளாகி ஆதரவின்றி திரியும் உங்கள் அடுத்த திட்டம் என்ன?

எங்காவது சென்று வலிமை பெற வேண்டும். வலிமை பெற்று எங்கள் தாய்மண்ணை மீண்டும் நாங்கள் மீட்க வேண்டும். உழைப்பாளிகள் குரல்கொடுத்தனர்.

எங்காவது என்றால் எங்கு..?

எங்கு எங்களுக்கு ஆதரவு கிடைக்குமோ அங்கு..

ஆதரவு கிடைக்குமிடம் அறிவீர்களா நீங்கள்?

அறியோம். இதுவரை அறியோம். செல்லுமிடமெல்லாம் எங்கள் கதை சொல்வோம். இரக்கச் சிந்தனையாளர்கள் எங்கள் வலிமையை பெருக்க உதவுவார்கள்.

இரக்கச் சிந்தனையாளர்களா? அவர்களின் அடையாளம் என்ன?

சிந்தனைகளுக்கு அடையாளங்கள் உண்டா என்ன? எங்கள் கதையை உலகெங்கும் சொல்லுவோம். மனமுள்ளவர்கள் உதவட்டும்..

ஏன் எங்கெங்கோ செல்கிறீர்கள்?.. ஏன் இங்கேயே நீங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கக் கூடாது?

சிந்தனாவாதிகளின் கேள்விக்கு முதலில் ஒரு நீண்ட மௌனம்தான் பதிலாக வந்தது. பின்னர் சலசலப்பு ஆரம்பமானது...தொடரும்

ஆதவா
27-08-2010, 11:55 AM
நல்லபடியாக இருவரும் சந்தித்துக் கொண்டார்களா...!!!!

உழைப்பாளிகள்/வியாபாரிகளுடன், இப்பொழுது சிந்தனாவாதிகள்.....
நீலவேணிக்கரையில் இனி என்ன நடக்குமோ!!!!

தாமரை
27-08-2010, 12:58 PM
உழைப்பாளிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தத் தீவிலா? ஒரு வசதியும் இல்லாத இந்தத் தீவில் எப்படி வசிப்பது. வீடில்லை. செய்ய வேலையில்லை. பள்ளியில்லை. வாகன வசதிகள் இல்லை. உடைகளில்லை.. விலங்குகளின் வாழ்க்கையை வாழத்தான் உயிரோடிருக்கிறோமா?

புரிந்துதான் பேசுகிறீர்களா? இங்கே மனிதன் வாழ என்ன வசதி இருக்கிறது ? என்றார்கள்..


மனிதன் வாழ என்ன தேவை? நான்காம் சிந்தனாவாதி பேசினார்..

உணவு தேவை

கனிகள் உண்டு. கிழங்குகள் உண்டு.. பயிர் செய்ய நிலங்களும் உண்டு. நீலவேணி உண்டு.

உடை தேவை..

மரநார்களில் உடை பின்னுவோம்.

வீடு தேவை..

வீடுகளை நாமே கட்டிக் கொள்வோம்.

சாலை வசதிகள் தேவை.

தீவையே ஒரு நாளில் சுற்றி வந்து விடலாம். நாம் நடக்கும் வழியெல்லாம் பாதைகள் ஆகும்.

மருத்துவ வசதி தேவை

நோயில்லா இடத்தில் மருந்தெதற்கு?

நாம் நவீன காலத்தில் இருக்கிறோம். நீங்கள் கற்காலத்திற்கு அழைக்கிறீர்கள்.

கற்காலத்திற்கு அல்ல. கற்றலுக்கு அழைக்கிறோம்.

முன்னேறிய உலகில் வாழ ஆசை..

அங்குப் பட்டிகளில் அடைபட்டிருப்பீர்கள். இங்குச் சுதந்திரம் உண்டு,

பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடையாது

ஆபத்தில்லாதவர்களுக்கு பாதுகாப்பு எதற்கு?

சொந்த மண் போலாகுமா?

எது சொந்தமண்? நீங்கள் பிறந்ததால் மட்டும் ஒரு மண் சொந்த மண் ஆகிவிடுமா? நீங்கள் உருவாக்கினால் அது சொந்த மண் இல்லையா?

எங்கள் பரம்பரை மானத்தை மீட்கவேண்டும்...

ஏன் மீட்க வேண்டும்? புதிதாய் ஒரு மானம் உண்டாக்க வேண்டாமா?

உலகம் எங்கேயோ போய்விட்டிருக்கிறது. ஒரு நூறு பேர் மீண்டும் கற்காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா?

நாம் ஆறறிவு உள்ளவர்கள் தானே?

ஆமாம்.

பல அறிவியல் கற்றவர்கள் தானே?

ஆமாம்

நூறு பேர் வாழக் கற்கவில்லையா என்ன?

வாழ்க்கையே இங்கே போராட்டமாய் இருக்கும்..

அங்கே மட்டும் என்னவாய் இருக்கிறது?

எங்கள் சொந்தங்களுடன் என்றாவது சேரவேண்டாமா? சரித்திரங்களில் தொலைந்துவிட மாட்டோமா?

இந்தத் தீவு பூகோளத்தில் இடம் பெற்றால் நீங்கள் சரித்திரத்தில் இடம் பெற மாட்டீர்களா?

இது விதண்டாவாதம்..

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் முன் நாங்கள் ஒரு கனவை வைக்கிறோம். உதவி கிட்டி நீங்கள் போவதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் அந்தக் கனவைச் சற்று அனுபவித்துப் பாருங்கள்.

அனாதைப் பிணங்களாக ஆக எங்களுக்கு விருப்பமில்லை.

அப்படியென்றால் ஒன்றாக இருக்கும் நீங்கள் நூறு பேரும் அனாதைகளா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு இல்லையா?

....................................

எண்ணிப்பாருங்கள். நீங்கள் ஏற்கனவே அனாதைப் பிணங்கள் ஆகியாயிற்று. கடலில் இக்கப்பல் வராமல் இருந்திருந்தால் நீங்கள் அனாதைப் பிணங்களாகி இருப்பீர்கள்.

...................................

இந்தக் கப்பலுக்கு உதவி கிட்டாமல் போனாலும் நீங்கள் அனாதைகள்தான்.

......................................

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் அனாதைகள்தான்.

......................................

இந்தத் தீவின் உரிமையாளர்கள் நீங்கள். இது உங்கள் வீடு. இது உங்கள் நாடு.. இத்தனை உரிமைகளும் நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

நன்றாகத்தான் பேசுகிறீர்கள். ஆனால் அத்தனையும் புனைவுகள். இந்தக் கப்பலும் போனால் எங்களைக் காப்பாற்ற எந்த ஆதாரமும் இருக்காது. கப்பலைத் தவற விட எங்களைத் தூண்டுகிறீர்கள். அதன் பின் எங்களை அடிமைகளாக்கி நீங்கள் அரசாளத் திட்டம் போடுகிறீர்கள்.

நீங்கள் பட்ட அடி உங்களை யாரையும் நம்ப விடாமல் தடுக்கிறது. நீங்கள் நூறு பேர். நாங்கள் நால்வர். எப்படி உங்களை அடிமைப் படுத்த முடியும்?

அப்படித்தான் சொல்லிக் கொண்டு எங்கள் நாட்டில் சிலர் வந்தார்கள். கடைசியில் நாங்கள் அடிமைகளாகிப் போனோம்.

யாரை நம்பி இங்கிருந்து போகிறீர்கள்?

எங்களை நம்பித்தான். எங்கள் நம்பிக்கை எங்களை வாழவைக்கும்.

உங்களின் நம்பிக்கை உங்களை இங்கே வாழ வைக்காதா?

உங்கள் திட்டம் புரிகிறது. நீங்கள் எங்களைப் பிற்காலத்தில் விற்றுவிடத் தீர்மானித்திருக்கிறீர்கள். அதற்கு வாய்ப்பு தரமாட்டோம். அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வந்தோம். இனி அடிமைப்பட மாட்டோம்.

உங்களுக்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது. சிந்தியுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் மீண்டும் பேசுவோம்.

ஏன் வியாபாரிகளிடம் இந்தக் கட்டுக் கதைகளை பேசவில்லையா?

நீங்கள் இங்கே வாழ்வதாக இருந்தால் பேசுவதாகத்தான் இருக்கிறோம்.

அவர்களையும் இங்கே தங்கச் சொல்லியா? அவர்கள் புத்திசாலிகள். தங்க மாட்டார்கள்.

வியாபாரிகளை என்றும் தங்க விடக் கூடாது. அவர்கள் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்.

ஏன்?

தங்கவிட்டால் அவர்கள் கண்களில் பட்டதையெல்லாம் வியாபாரப் பொருளாக்கி விடுவார்கள். சொல்ல முடியாது. இந்தத் தீவைக் கூட யாருக்காவது விற்கலாம்.

பொய் சொல்கிறீர்கள்..

உங்கள் நாடு அப்படித்தானே அடிமைப் பட்டது. நினைவில்லையா?

கனத்த மௌனம் நிலவியது. உழைப்பாளர் கூட்டம் சிந்திக்க ஆரம்பித்திருந்தது.

சிந்தியுங்கள். ஓய்வெடுங்கள். நாளைக் காலை மீண்டும் பேசுவோம்..

சொல்லிவிட்டு மெல்ல நடந்து மறைந்து போனார்கள் சிந்தனாவாதிகள்.

உழைப்பாளிகள் தங்களுக்குள் கசகசவெனப் பேசிக் கொண்டார்கள். சிந்தனை தூண்டப்பட்ட பின் சாதக பாதகங்களை அலசுதல் நடக்கக் கூடியதுதானே..

நிறைய கேள்விகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே தங்குகிறோமோ இல்லையோ, நாளைய வாழ்விற்கு இவர்களின் சிந்தனைகள் உதவக் கூடும். நமக்குத் தேவையான பல சிந்தனைகள் இவர்களில் உள்ளன. ஒரு மூத்த உழைப்பாளி உரத்த குரலில் சொன்னார்.

தொடரும்.

சிவா.ஜி
27-08-2010, 02:41 PM
கதை எப்படியெப்படியோ போகிறது மாதிரி தோன்றினாலும்...சரியான நகர்தலில்தான் இருக்கிறது. வாதங்கள் அழுத்தமாய் இருக்கிறது. எதையெதையோ முடிச்சுப் போட வைக்கிற நிகழ்வுகள், உரையாடல்கள்.....

தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளும் யோசனை நன்றாகத்தானிருக்கிறது....ஆனால்...வியாபாரிகளின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுதிருக்கிறது அது சொந்த நாடாகவே இருக்குமா என்பது.

கீதம்
27-08-2010, 11:44 PM
இதுவரையிலும் நீங்கள் ஐந்துமுறை கருவை மாற்றிவிட்டதாய்ச் சொன்னாலும், ஏதோவொரு உந்துதல் என்னை என் யூகத்திலிருந்து பின் தங்கவிடாமல் தொடரச்சொல்லுகிறது. உங்கள் கற்பனை விரியும் பாதையெல்லாம் எவ்விதத் தடங்கலுமின்றி என் யூகம் தொடர்கிறது. ஆனால் இதுதான் என்று என் யூகத்தைச் சொல்லப்போவதில்லை. தெரிந்தால் வேண்டுமென்றே திசைதிருப்பும் சாதுரியம் உங்களிடம் உண்டு என்பதை நானறிவேன். எனவே மெளனமாய்த் தொடர்வதே உத்தமம் என்று உணர்ந்து உங்களைத் தொடர்கிறேன்.

சிந்தனாவாதிகளுக்கும், உழைப்பாளிகளுக்குமான உரையாடலில் உள்ள உண்மை நிறையவே சிந்திக்கவைக்கிறது. மிகுந்த பாராட்டுகள், தாமரை அவர்களே.

ஆதவா
28-08-2010, 02:06 AM
இருவருக்குமான உரையாடல் சாதாரண பயணமாக ஆரம்பித்து அசாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதிலும்


மீட்க வேண்டும்? புதிதாய் ஒரு மானம் உண்டாக்க வேண்டாமா?


ஒன்றாக இருக்கும் நீங்கள் நூறு பேரும் அனாதைகளா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு இல்லையா?

போன்ற வரிகள் ரசிக்கத் தக்கன...

வியாபாரிகளைப் பற்றிய சிந்தனைகளும் அப்படித்தான்!!! என்றாலும் சில கேள்விகள் எழுகின்றன
வியாபாரிகளால்தானே உலகம் அடுத்தடுத்த நகர்வுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது???
நம்மை நமக்குக் காட்டியவர்களும் வியாபாரிகள்தானே...

இப்பொழுது கதையை என் வாசிப்புக்கு ஏற்ப இழுக்கமுடியவில்லை.. அதன் இழுப்பில் என் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது.

சுகந்தப்ரீதன்
28-08-2010, 07:36 PM
நிஜத்திற்கும் கனவிற்கும் எத்தனை தூரம் தெரியுமா என்றார் மூன்றாம் சிந்தனாவாதி..

கருவிழிக்கும் இமைக்கும் உள்ள தூரம்தான் என்றார் நான்காமவர்.

நண்பர்கள் இது போன்ற சில சிந்தனைத் துளிகளை தைரியமாக விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். எனக்கும் கொஞ்சம் ஜாலியா இருக்கும்... கதை முடிஞ்ச பின்னால பேசலாம்னா... கண்டிப்பா உங்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பே இல்லை..இன்னும் கதை முடியவில்லை... ஆனாலும் இதைப்பற்றி பேச யாருக்கும் தைரியமில்லை..!!:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..!!:D

ஏன்னா... இங்க மன்றத்துல ஒருமுறை ‘கண் கலங்கியது என்பதற்க்கு பதிலாக இமை கலங்கியது’ என்று நான் சொல்லபோயி, நம்ப கத்தாழ கண்ணழகி கண்மணிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சதே எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடுச்சிண்ணா..!!:sprachlos020::traurig001::sprachlos020:

அமரன்
28-08-2010, 09:09 PM
இப்பொழுது கதையை என் வாசிப்புக்கு ஏற்ப இழுக்கமுடியவில்லை.. அதன் இழுப்பில் என் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது


இப்படித் தோன்றாவிட்டால் தப்பு ஆதவா, ஏனெனில், கதைநாடிகளில் இதுவும் ஒன்றுதானே.

ஆதவா
29-08-2010, 02:16 AM
இப்படித் தோன்றாவிட்டால் தப்பு ஆதவா, ஏனெனில், கதைநாடிகளில் இதுவும் ஒன்றுதானே.

அதன் இழுப்புக்கு நான் சென்றால் அது சொல்வதை நான் நம்பவேண்டும்.
என் இழுப்புக்கு அது வந்தால் நான் என்ன சொல்லவேண்டும் என்ற யோசிக்கவேண்டும். பல கோணங்களில்!!!!

இரண்டுமே தேவைதான்!!! :icon_b:

ஆதவா
29-08-2010, 02:19 AM
இன்னும் கதை முடியவில்லை... ஆனாலும் இதைப்பற்றி பேச யாருக்கும் தைரியமில்லை..!!:fragend005: சத்தியமா எனக்கும்கூட தைரியமில்லை தாமரையண்ணா..!!:D


என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.... :smilie_abcfra: :confused:
நம்ம அன்புரசிகர் கேள்வி கேட்டு பதிலும் வந்தாச்சே!!!!! :)

கதைபற்றி பேசினால்தான் தைரியமா என்ன.... ??? :rolleyes:

அன்புரசிகன்
29-08-2010, 08:29 AM
ஒரு புதிய சமுதாயத்திற்கான அடிக்கல் சிந்தனாவாதிகளால் முன்மொழியப்பட்டுள்ளது.

அவை விடிவிற்கு வழிவகுக்குமா... புதிய அனுபவங்கள் சமூகசெயற்பாடுகள் எண்ணங்கள் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பா.ராஜேஷ்
29-08-2010, 03:48 PM
இந்த கதைக்கு பின்னூட்டமிட என்னிடம் வார்த்தைகள் இல்லை... தொடருங்கள், தொடர்கிறேன்...

தாமரை
29-08-2010, 04:07 PM
சிந்தனாவாதிகளுக்கும், உழைப்பாளிகளுக்குமான உரையாடலில் உள்ள உண்மை நிறையவே சிந்திக்கவைக்கிறது. மிகுந்த பாராட்டுகள், தாமரை அவர்களே.

உண்மை, உண்மையிலேயே நிறைய சிந்திக்க வைக்கும் ஒன்றுதான். உண்மையில் உணமையைப் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் நான் நிறைய எழுதி இருக்கேன்

தாமரை
29-08-2010, 05:39 PM
மறுநாள் விடிந்தது. இரவு முழுக்க முயற்சி செய்ததில் எதோ ஒரு கப்பல் ஆபத்துதவி அழைப்பிற்கு பதில் கொடுத்தது. எப்படியும் இன்று மாலைக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை வியாபாரிகளுக்கு இருந்தது.

உழைப்பாளிகள் அன்றிரவு உறங்கவே இல்லை. அவர்கள் இரவு முழுதும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். சிலர் இங்கே இருந்து விடலாம் என்றார்கள். சிலர் வேண்டியதில்லை என்றார்கள். நாளை என்பது எவ்வளவு தூரம் என்பதே தெரியவில்லை. இரவு நீண்டிருந்தது.

கிழக்கு சிவந்தபோது அனைவரின் கண்களும் அதே போல்தான் இருந்தன. இன்று எடுக்கப் போகும் ஒரு முடிவு அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது. தவறாகப் போனால் பின்னால் வருந்திப் பிரயோசனம் இருக்காது.

மறுநாள் காலையில் எல்லோரும் கடமைகளை முடித்து விட்டு கடற்கரையில் சிந்தனாவாதிகளின் வருகைக்குக் காத்திருந்தனர். சிந்தனாவாதிகளும் கடற்கரைக்கு வந்தனர்.

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உழைப்பாளிகள் சுற்றி உட்கார மத்தியில் சிந்தனாவாதிகள் நின்று கொண்டிருந்தார்.

என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்.. மூன்றாம் சிந்தனாவாதிதான் ஆரம்பித்தார்,

முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருக்கிறோம். தெளிவாகப் பேசினார் ஒரு முதிய உழைப்பாளி..

எப்படித்தான் இங்கே வாழ்வது? இங்கு ஒன்றுமே இல்லை. கருவிகள் எந்திரங்கள் ஒன்றும் இல்லை. பள்ளிகள், சாலைகள் ஒன்றுமில்லை. மின்சாரமில்லை. ஒரு மழைக்குத் தாங்கக் கூடிய கட்டிடங்கள் இல்லை. வெளி உலகின் தொடர்பும் இல்லை.

என்ன இல்லை என்பதை எந்த இடத்தில் இருந்து யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும். அதே போல் என்ன இருக்கிறது என்று யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும்.

மனிதர்கள் வாழும் உலகத்தில் எங்களுக்கு எதாவது வேலை கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் உணவும், உடையும், வசதிகளும் கிடைக்கும். எங்களால் இயலாவிட்டாலும் எங்கள் அடுத்த தலைமுறையை உயர்த்த வசதிகள் கிடைக்கும்..

எத்தனை தலைமுறைகளாக உங்கள் மக்கள் இப்படி அலைகிறார்கள்.

இரண்டு தலைமுறைகள் இருக்கும்.

விரல்விட்டு எண்ணிச் சொல்லுங்கள்.. உங்களைப் போல் சென்றவர்கள் யாராவது வலிமை பெற்று உயர்வு பெற்று பெருமை பெற்றிருக்கிறீர்களா?

மிகச் சிலர் இருக்கலாம்.

உறுதி இல்லை.. சரிதானே..

ஆமாம்..

இங்கிருந்து எதோ ஒரு நாட்டிற்குச் செல்லப் போகிறீர்கள்.

ஆமாம்

அங்கு ஒரு இடத்தில் உங்களுக்கு இருப்பிடம் ஒதுக்கப்படும்

ஆமாம்

உங்களுக்கு எதோ சில சின்ன வேலைகளும் மானியங்களும் கிடைக்கும்.

ஆமாம்

உணவு, உடை, உறையுள் பிரச்சனை தீரும்

ஆமாம்..

அதன் பிறகு..

அதன்பிறகு எதையாவது செய்யவேண்டும்.. எங்கள் மண்ணிற்குத் திரும்ப வேண்டும்..

அதாவது தெளிவாய் ஒன்றும் இல்லை.

..............

இங்கு இருபத்தைந்து வருடங்களில் நீங்கள் நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழி உண்டு..

இது நடக்கிற காரியமில்லை.. எப்படி முடியும்?

நாம் உலகிற்குத் தேவையான எதையாவது உற்பத்தி செய்து உலகிற்குக் கொடுப்போம். நமக்குத் தேவையானதை உலகத்திலிருந்து பெற்றுக் கொள்வோம்.

மின்சாரம் கிடைக்குமா? உறுதியான கட்டிடங்கள் கிடைக்குமா? போக்குவரத்து வசதி கிடைக்குமா? பள்ளிகள் மருத்துவமனைகள் கிடைக்குமா?

எல்லாம் கிடைக்கும்.

100 பேர் பத்துவருடத்தில் இதை உண்டாக்க முடியவே முடியாது..

சில அடிப்படைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்..

ம்ம் சொல்லுங்கள்.

கடப்பாரை வேண்டுமானால் கடப்பாரை வாங்குவான் தனிமனிதன்

ஆமாம்.

ஆனால் சமூகம் என்ன செய்ய வேண்டும்?

கடப்பாரை தான் வாங்க வேண்டும்.

அதுதான் தவறு.. பழைய இரும்புச் சாமான் வாங்கி உருக்கி அச்சில் வார்த்து கடப்பாரை செய்யவேண்டும். நான்கு பேர்கள் பழைய இரும்புச் சாமான்களில் இருந்து நமக்குக் கருவிகள் செய்து தர முடியும்.


அது சரி.. ஆனால் பழைய சாமான்களுக்கு எங்கே போவது?

படகுகள் மூலம் நம் பணப்பயிர்களை அண்டை நாட்டில் விற்று, தேவையானவற்றை பெற்று வரவேண்டும்.

100 பேருக்கு வீடுகளும் அப்படித்தானா?

அப்படி இல்லை.

ஒரே பெரிய வீடு கட்டுவோம். பிறகு இரண்டாக்குவோம்.. நாலாக்குவோம்.. 10 வருடங்களில் தேவையான அளவு பொருளைச் சேர்த்தால் ஒரு பெரிய வீட்டில் 100 பகுதிகளைக் கட்டி ஒரே வீட்டில் 100 குடும்பங்கள் வாழலாம்.

பேசுவது எளிது.. ஆனால் இது நடக்கக் கூடியது அல்ல,,

வாழ்க்கையே ஊகங்கள், நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதானே... நாளை இன்னது செய்வோம் என ஊகிக்கிறோம். அது இப்படி முடியும் என நம்புகிறோம். முயற்சி செய்கிறோம். ஆனால் நாளை என்பது இருக்குமா நமக்குத் தெரியாது.. நாளை இருந்தாலும் அது நமக்கு இருக்குமா தெரியாது. நாளை நாம் இருந்தாலும் நினைத்தது நடக்குமா தெரியாது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் நாம் நம் கால்களை முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதே புரிபடவில்லை..

ஒரு நாள்.. ஒரு வாரம்.. ஒரு மாதம்.. ஒரு வருடம்.. இப்படி பார்க்கலாமா? இங்கே வாழ்க்கையை?

விடியற்காலை விழிப்போம். வேம்பு விளாறில் ஒரு குச்சியால் நம் பற்களைத் துலக்கிக் கொள்வோம். காலைக் கடன்கள்.. நீலவேணியில் உடல் நனைத்து உடலைச் சுத்தம் செய்வோம். சுட்ட கிழங்குகள் நமது காலை உணவு.

தீ உண்டாக்க தீப்பெட்டி?

படித்த இயற்பியல் மறந்திருக்கலாம். சிக்கிகுக்கிக் கற்களால் பொறியுண்டாக்கி அதில் பஞ்சில் தீயுண்டாக்கி அந்த தீயில் சுள்ளியைப் பற்றவைத்து நாங்கள் உண்டாக்கிய தீ ஒரு மலைக்குகையில் அணையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.. அதில் இருந்து தீ எடுத்துக் கொள்ளலாம். தீப்பெட்டி நமக்குத் தொடர்ச்சியாய் கிடைக்கும்வரை...

பிறகு..

பிறகு தீவினுள் செல்வோம்.. விவசாயம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைச் சீர்படுத்துவோம். குறுகிய காலப் உணவுப் பயிர்கள், நீண்ட கால உணவுப் பயிர்கள், பணப்பயிர்கள் எனப் பல வகைப் பயிர்களை

கருவிகள் வேண்டுமே..

சில மாதங்களுக்குக் குச்சிகளும் கட்டைகளும் கற்களுமே கருவிகள்.. பணப்பயிர்களை விற்று கருவிகளை வாங்கிக் கொள்வோம்.

யாருக்கு விற்பது?

அதற்குத் தான் வியாபாரிகளிடம் பேச வேண்டும்.

மதியம் வரை விவசாயம். மதியத்திற்கு மேல் தீவு மேம்பாட்டுக்கான வேலைகள்..

அப்படி என்ன வேலைகள்

எவ்வள்வோ இருக்கிறது.. இந்தத் தீவை அங்குலம் விடாமல் அறிந்து கொள்ள வேண்டும். புதிய இடங்களை பயன்படுத்த ஏதுவாக திட்டங்கள் போட வேண்டும். வீடுகள் உண்டாக்க வேண்டும். வடிகால் வசதிகள்.. கல்வி பயிற்றுவித்தல்.. இரும்பை உருக்கி கருவிகள் உண்டாக்கும் தொழில் அறிந்து நம் கருவிகளைத் தயாரித்துக் கொள்ளுதல் இப்படி பலப் பல..

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்று நாம் ஒரு இன்றைய சாதாரண மனித வாழ்க்கைக்கு வருவது?

25 ஆண்டுகள் ஆகலாம்.

அதெப்படி முடியும்.. மின்சாரம் வேண்டும்.. வாகனங்கள் வேண்டும், வெளி உலக மனிதர்கள் வந்து போகவேண்டும். நாமும் உலகம் சுற்ற வேண்டும்,

ஒன்றுமே இல்லாத இந்த இடம் போலவே 400 வருடங்களுக்கு முன் ஒரு இடம் இருந்தது. அது இன்று உலகில் மிகப் பெரிய வல்லரசாகி இருக்கிறது.

அமெரிக்காவைச் சொல்கிறீர்களா?

ஆமாம். அமெரிக்கா இப்படித்தான் இருந்தது. கப்பல் கப்பலாக அகதிகள்தான் சென்றார்கள். இடங்களை வளைத்துப் போட்டு விவசாயம் செய்தார்கள்.. வளர்ந்தார்கள். மெல்ல மெல்ல சுயசார்பை வளர்த்துக் கொண்டார்கள்..

ஆனால் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எல்லாம் கிடைத்தது... அவர்களை அடிமைப் படுத்தி இருந்தது இங்கிலாந்து. போராடி விடுதலை பெற்றார்கள்.

நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். வியாபாரிகள் தேவை. வெளி உலகிற்கும் நமக்கும் இடையிலான தொடர்பு ஊடகம் அவர்கள்தான். ஆனால் அவர்களை நம் மேல் ஆதிக்கம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது

அதாவது பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து நமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள வியாபாரிகளின் உதவி தேவை..

ஆனால் இன்னும் எங்களுக்குப் புரியவில்லை. ஒரு கால் நூற்றாண்டில் இந்தத் தீவை மனிதர்கள் வசிக்க உதவும் ஒரு நல்ல பகுதியாக மாற்றுவதாகச் சொன்னீர்கள். ஆனால் தொழில்நுட்பத்தில் பின் தங்கி இருக்கும் வரை நாம் பின் தங்கியவர்கள்தானே..

நாம் உலகை ஆள நினைக்கவில்லை, உலகில் வாழ நினைக்கிறோம் அல்லவா?

ஆமாம்.

அப்படியானால் ஏன் உயர் தொழில் நுட்பம் உயர் தொழில் நுட்பம் என அழுகிறீர்கள்?

அப்பொழுதுதானே நாம் உயர்ந்து வாழ முடியும்?

மற்றவன் முதுகில் ஏறி வாழமுடியும் என்று சொல்லுங்கள்..

உயர்தொழில் நுட்பம் தேவையில்லையா?

தேவைதான்.. ஆனால் எந்த அளவிற்கு? நாம் உபயோகிக்கும் அளவிற்கு. அதைச் சந்தைப் படுத்தும் அளவிற்கு உயர்வது குறுகிய கால நோக்கம் அல்ல, அதற்கு இந்தத் தீவு போதாது.. நம் எண்ணிக்கையும் போதாது..

இந்த நீண்டவழியை விட்டால் இல்லையா?

ஒரு குறுக்கு வழி உண்டு.. அதன் படி செய்தால் ஐந்து வருடங்களில் இங்கு ஒரு ஹைடெக் நகரம் இருக்கும்.

என்ன அது..? ஆவலுடன் கேட்டார்கள் உழைப்பாளிகள்

நீங்கள் யாரும் இங்கு தங்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...

ஒரே ஒரு பொய்யா?

ஆமாம்.. நீங்கள் இங்கு நான்கு சித்தர்களை தரிசித்ததாக... கடகடவெனச் சிரித்தார்.. நான்காம் சிந்தனாவாதி!!!


தொடரும்

கீதம்
29-08-2010, 10:26 PM
இது நல்லா இருக்கே! இரவோடு இரவாக ஒரு கல்லுக்கு மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்தாலே அடுத்தநாள் அங்கொரு கோவில் உருவாகி பக்தர் கூட்டம் அலைமோதும். மக்களின் மூட நம்பிக்கையை சுருக்கமாய்ச் சொல்லி சுருக்கென்றொரு குத்தல், வெகு அசத்தல். சிந்தனாவாதிகள் நன்றாகவே சிந்திக்கிறார்கள். உழைப்பாளிகளிடம் எடுபடுமா இந்த மூளைச்சலவை? அறியக் காத்திருக்கிறேன்.

தாமரை
30-08-2010, 03:11 AM
. உழைப்பாளிகளிடம் எடுபடுமா இந்த மூளைச்சலவை?

உலகத்திலேயே மிக எளிதான காரியம் உழைப்பாளிகளை மூளைச்சலவை செய்வதுதானே!!!

தாமரை
30-08-2010, 03:42 AM
இந்த கதைக்கு பின்னூட்டமிட என்னிடம் வார்த்தைகள் இல்லை... தொடருங்கள், தொடர்கிறேன்...

வார்த்தைகள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் உற்பத்தி விலைக்கே கிடைக்கும். :icon_rollout::icon_rollout::icon_rollout:

மதுரை மைந்தன்
30-08-2010, 10:59 AM
உங்களுடைய எழுத்தாற்றல் கதையின் பின்னணி இவை என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் கதையின் கரு இலங்கை தமிழர் அகதிகளாக படகுகளில் ஆஸ்திரேலியா கானடா நாடுகளில் தஞ்சம் புகுவதைப் பற்றியது என நினைக்கிறேன்.

ஆதவா
30-08-2010, 11:27 AM
இருவருக்கும் உண்டான பேச்சுக்கள் அபாரம். அது மூளைச்சலவைதான். வெண்மை தரும் சோப்பு போட்டு சலவை!!

எனக்கு பிடித்ததே, அந்த உயர்தொழில் நுட்பத்தைப் பற்றி பேசும் இடம்தான். அது எவ்வளவு உண்மையான வார்த்தை!!!
செல்போன் வைத்திருக்கும் எல்லாரும் (வியாபாரிகள், தொழிலதிபர்கள்) சொல்வது என்ன, “இந்த சனியனை கட்டிட்டு அழுகிறேன்” என்பதுதான்.. ஆனால் யாராவது முன்வந்து டைவர்ஸ் செய்கிறார்களா?? இல்லையே............. தொழில்நுட்பத்தினால் கருவிகள் பெருகுகின்றன. வாழ்க்கைத் தரம் இயந்தரத்தனமாகிறது. மனிதன் இயந்திரத்தின் கட்டுக்குள் வருகிறான் (இப்படித்தான் ஒரு கவிதை எழுதிட்டு ஒம்போது நாளா அதையே பார்த்துட்டே இருக்கேன்)

கூட்டுக்குடும்ப வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் சிறந்தது!!:icon_b: அதுவும் நூறு குடும்பம்!!!:)

சித்தர்’ஆவது பித்தர் ஆவது...... ஏதாவது ஒரு ‘ஆனந்தாவைச் சொன்னால் மக்கள் கூட்டம் கூட்டமாக .... விழுவார்கள்!! :sauer028::lachen001:

ஒரு ரிக்வஸ்டு!!!

இன்னமும் ஒரு பொண்ணை கூட கண்ணுல காமிக்க மாட்டேங்கிறீங்க. பயிர் உற்பத்தி பத்தி பேசறீங்க. உயிர் உற்பத்தி வேணும்ல............. :)

தாமரை
30-08-2010, 12:35 PM
உழைப்பாளிகளுக்கு குழப்பம் இருக்கத்தான் செய்தது. ஆதிவாசி வாழ்க்கையில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை. கூடிய விரைவில் உச்சத்தைத் தொடவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாய் என்றுமே இருந்து வந்திருக்கிறது, கடுமையான அதே சமயம் மிகச் சுற்றுவழியாய் இருக்கும் ஒன்றை ஏற்றுக் கொள்வது?

இதுவே மனித நடமாட்டமும் மற்ற நாடுகளுடன் இணைந்திருக்கும் ஒரு இடம் என்றால் சரி என்று எல்லோரும் ஒரே மூச்சில் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் யாருமில்லாத தகவல் தொடர்பே இல்லாத ஒரு இடம் என்பது அவர்களுக்கு மிகவும் அதிருப்தியையே தந்தது.

இங்கு நாங்கள் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம் நாளைய சந்ததியை இருட்டில் தள்ளிய பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றார்கள் உழைப்பாளிகள்.

நாம் எதையெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே போகிறது. அன்று சுதந்திர வாழ்க்கை முக்கியமாகப்பட்டது. சுதந்திரம் இன்று உனது என்றானபோது உடனே இங்கு இந்த இடத்தில் நாளைய சமூகத்தின் எதிர்காலம் மட்டுமே முக்கியமாகப்படுகிறது. சொன்னார் முதலாம் சிந்தனாவாதி..

ஒரு பொருள் உழைப்பின்றி கிடைக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. அதன் குற்றம் குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன என்றார் இரண்டாம் சிந்தனாவாதி.

உழைப்பாளிகள் மௌனித்தார்கள். யதார்த்தங்களைச் சொல்லும்பொழுது பலர் இப்படி மௌனித்துப் போகிறார்கள்.

இந்தத் தீவை நீங்கள் முன்னேற்றத் துடிக்கிறீர்கள். எங்களால் ஆன சில உதவிகளைச் செய்கிறோம். ஆனால் எங்கள் குடும்பங்களை இப்படி மனித இனத்தில் இருந்து பிரித்துவிட முடியாது என்றார்கள் சில நடுத்தர வயதினர்.

நீங்கள் அப்படிச் செய்யக் கூடிய உதவிகளும் சில உண்டு என்றார் முதலாம் சிந்தனாவாதி..

என்ன அவை..?

உங்களிடம் இருக்கும் உதவாத பொருட்களை விட்டுச் செல்லுங்கள். இப்படி ஒரு தீவு இருப்பதை மீனவர்களுக்குத் தெரியும்படி செய்யுங்கள். மீன்பிடிக் கப்பல்கள் இந்தத் தீவிற்கு வந்து செல்லுமானால் வியாபாரம் ஆரம்பமாகி விடும்..

மீன்பிடிக் கப்பல்களா?

ஆமாம்.. நீலவெணிக் கழிமுகத்தில் சிறந்த மீன்கள் கிட்டும்.. அதே போல் மீனவர்கள் நெடுந்தொலைவு மீன் பிடித்த பின்னர்.. இளைப்பாறி மீண்டும் செல்ல இந்த இடம் உபயோகப்படும்..

அவர்களுக்கு உணவும் கிடைக்கும். குடிநீரும் கிடைக்கும். சில பணப்பயிர்களும் இங்கு கிடைக்கும். அவர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது கருவிகள். கடப்பாரை, மண்வெட்டி, தீப்பெட்டிகள், உடைகள், ஆணிகள், சுத்தியல்கள், இரம்பங்கள் இப்படிச் சில. மீன்பிடித் தொழிலோடு அவர்களுக்குச் சற்று அதிக வருமானமும் கிடைக்கும்.

இந்த யோசனை சிந்திக்க வைக்கிறது என்றார் ஒரு வயதானவர்.

உழைப்பால் நாம் உற்பத்தி செய்வதை மீனவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். அதற்கு பதிலாய் நவீன உலகத்துடன் பாலமாய் இருக்கட்டும்.

முதலில் நம் வாழ்வைச் ஸ்திரப் படுத்திக் கொள்ள இவையெல்லாம் உதவும். இப்பொழுதாவது சிலர் இங்கு தங்க யோசிப்பீர்களா?

வியாபார்களிடம்?

வியாபாரிகளிடம் இதைத்தான் கேட்கப் போகிறேன். இப்பகுதியில் என்ன கிடைக்கிறது என்பதையும் இத்தீவிற்கு வரவேண்டிய வழியையும் உலகிற்குச் சொல்ல.. அதேபோல் உதவாது என அவர்கள் எறியும் பொருட்களையும் எங்களுக்குக் கொடுத்துச் செல்ல.

இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டுமா? இவ்வளவு சிந்தனை உள்ள நீங்கள் ஏன் மக்கள் வாழும் உலகிற்கு வந்துவிடக் கூடாது?

மக்கள் வாழும் உலகம்... மெல்லச் சிரித்தார் மூன்றாம் சிந்தனையாளர். மனிதன் வசிக்க வேறு கிரகங்கள் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் இதை நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.

அவர்கள் அத்தனைத் தொழில்நுட்பங்களின் துணையோடுதானே செல்கிறார்கள்?

காரணம் அங்கு அவர்களால் வாழமுடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.. இங்கு நம்மால் வாழமுடியும்.

அப்படி என்னத்தான் சாதிக்க நினைக்கிறீர்கள் இந்தத் தீவில்?

இதற்கு எந்தச் சிந்தனாவாதியும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் மௌனமாய் இருந்தனர். பின்னர் நால்வரும் உறுதியான குரலில் சொன்னார்கள்

"புதியதோர் உலகம் செய்வோம்"

தொடரும்

ஆதவா
30-08-2010, 12:44 PM
அடுத்த உலகம் நிச்சயம் காத்திருக்கிறது!!!!!
நானும் காத்திருக்கிறேன்.

ஆனால் தீவின் அழகு???
அழகு பெறுமா?
அழுக்கு பெறுமா?
"புதியதோர் உலகம் செய்வோம்":)

பா.ராஜேஷ்
30-08-2010, 05:54 PM
அருமையான தொடர்ச்சி... புதியதோர் உலகத்திற்கு காத்திருக்கிறோம்...
வாத, பிரதி வாதங்களை வெவ்வேறு வண்ணம் அல்லது மேற்குறி இட்டு காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமே...

Nivas.T
31-08-2010, 12:40 PM
இயந்திர வாழ்க்கை இல்லை,
போராட்டம் இல்லை,
பொறாமை பட தேவை இல்லை,
பட்டினி இல்லை,
ஆடம்பரம் இல்லை,
சுய விளம்பரம் இல்லை,
அநாதை இல்லை,
நாறிப்போன அரசியல் இல்லை,
நசுங்கிப்போன சமூகம் இல்லை,
இங்கு எல்லாம் நமக்கு, எதுவும் நமக்கு, அனைத்தும் நமக்கு, எதுவும் நாம், நாம், நாம் தான்.
வாருங்கள் கற்(றல்)காலத்திற்கு, துவங்குவோம் புது பூமியை, புதிய சமுதாயத்தை வேற்றுமை இல்லா பூமியை.

உரையாடல் கதையோட்டம் அற்புதம்
தொடருங்கள் நாங்களும் சிந்திக்கிறோம்

அமரன்
01-09-2010, 07:06 PM
நான்காம் பக்கத்தில் கதை முடிந்து விட்டது.

இப்போது, கதையின் முடிவில் வாசகன் ஒரு முடிவுக்கு வரத் தோதாக கதைக்கோணம் அமைகிறது.

புதியதோர் உலகம் செய்வோம்..

இதுவே கதையின் ஒற்றை வரி என்பதை இரண்டாம் பக்கத்தில் அனுமானித்து மூன்றாம் நான்காம் பக்கங்களில் உறுதிப் படுத்தி விட்டேன்..

ஆனால், இந்த ஒற்றை வரியில் வாசகனின் பார்வை வசதியாக அமர்ந்து ’திருப்தி’யை கொடுக்கிறது. எது எப்படியோ, எத்தனை தோற்றம் தந்தாலும் அத்தனையும் கட்டி எழுப்படும் கோட்பாடு ஒன்றுதான்.

புதியதோர் உலகம் செய்வோம்.

நல்ல வாசகன் ஆவதற்கு, நல்ல விமர்சகன் ஆவதற்கு, நேரிய சிந்தனையாளன் ஆவதற்கு இந்தப் படைப்பை புலனாய்வு செய்தால் போதும்.

அன்புரசிகன்
02-09-2010, 12:04 AM
புதியதோர் உலகம் செய்யலாம் அண்ணா. இந்த வாசகம் அடிப்படை தேவை பூர்த்தியாகும் வரை தானே... அதன் பின் தொழில் பசுமைபுரட்சி பொருளாதாரம் என்று வளர்ச்சியடைய தகுந்த சமூகக்கட்டமைப்பு அரசியல் என்று பழய பல்லவி வந்துவிடுமே...

நான் பார்த்த அளவில் எந்த நாட்டு அரசியலில் சீர்கேடு இல்லை. கொஞ்சம் வித்தியாசம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ரோட்டில் நிக்கிற காவல் அதிகாரி லஞ்சம் கேட்ப்பார். மேலத்தேய நாடுகளில் அவர் கேட்க்கமாட்டாரே தவிர காவல்துறை பணிப்பாளர் போன்ற பெரிய மட்டத்தில் பணம் தானே பலதையும் நிர்ணயிக்கிறது. நான் காவல் துறை என்று சொன்னது ஒரு உதாரணம். தனக்கு என்று வரும் போது எவனும் சுயநலமாகத்தானே சிந்திக்கிறான். ஒரு காலத்தில் இதே சிந்தனா வாதிகள் வந்தவர்களை பார்த்து நீ வந்தவன். நான் இங்கேயே இருந்தவன் என்று பாகுபாடு எழமாட்டாதா??? மறுதலையாகவும் நிகழலாம். வந்த தொழிலாளிகள் சிந்தனாவாதிகளை விரட்டிவிடமாட்டார்களா??? உதாரணமாக அமெரிக்கா அவுஸ்திரேலியாவை எடுக்கலாம். செவ்விந்திய இனம் அமெரிக்காவில் இல்லையென்றே சொல்லலாம். அவுஸில் ஒரு இனமே அப்படியே ஒடுக்கப்பட்டது.

இதற்கு எப்படிப்பட்ட தீர்வுகள் வந்த அந்த தொழிலாளிகளை அல்லது சிந்தனா வாதிகளை காப்பாற்றும்,,,???

meera
03-09-2010, 04:44 AM
அண்ணா, ரொம்ப பிரயத்தனப்பட்டு கதையை நான்கு நாட்களில் படித்து முடித்து ஓரளவு புரிதலுக்கும் வந்தாயிற்று. நீலவேணி நடந்து செல்லும் பாதையெங்கும் அத்தனை அழகும் எழுத்தாய் கொட்டிகிடக்கிறது. நீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன். சிந்தனாவாதிகள் அவர்களின் பணியை செவ்வனே செய்கிறார்கள், உழைபாளிகளுக்கே உண்டான சந்தேகமும் கேள்வியும் நிஜமாய் நீண்டு கொண்டிறுக்க, நீலவேணி கண்முன்னே நிழலாய் விரிந்து கொண்டிருக்கிறாள்............


நீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன்...............:eek::eek:

தாமரை
03-09-2010, 06:10 AM
கொஞ்சம் பொறுங்க கொல்லிமலைச் சித்தர் கிட்ட பேசிவிட்டு வந்து மேல எழுதறேன்

Nivas.T
03-09-2010, 06:41 AM
ஒரு சமூக சிறுகதை எழுதவே எனக்கு நாக்கு தள்ளிடுது :icon_dance::medium-smiley-100:
நீங்க எப்டி தத்துவக்கதை அதுவும் தொடர்கதை :icon_blush:
உங்கள பாத்தா மலைப்புக்கே மலைப்பு வந்துடும் :shutup:
தொடருங்கள் கதையோட்டம் அருமை :icon_b:

ஆதவா
03-09-2010, 06:56 AM
நீலவேணியின் அடுத்த அடிக்காக நானும் காத்திருக்கிறேன்...............:eek::eek:

அடிவாங்கறதுக்கும் காத்திட்டு இருக்கிறது நம்ம மன்றத்திலதான்!!!!

சூரியன்
03-09-2010, 07:52 AM
இன்னொரு முறை படிச்சுட்டு வந்துடரறேன்.
(தம்பி நீ இன்னும் வளரனும் போல.)

meera
03-09-2010, 08:44 AM
அடிவாங்கறதுக்கும் காத்திட்டு இருக்கிறது நம்ம மன்றத்திலதான்!!!!

இந்த அடி அந்த அடி இல்ல தம்பி ஆதவா.. இது நெக்ஸ்ட் நெக்ஸ்டு லெவலு ம்கும்..

ஒரு போஸ்டிங் போடவிட மாடீங்களே.. மீராவை கவுத்தறதுக்குன்னே குறி வச்சு திரியுது ஒரு கூட்டம்..

சிவா.ஜி
03-09-2010, 08:52 AM
அந்த கடைசி வரி....கதையின் போக்கை புரிந்துகொள்ள வைக்கிறது. இந்தக்கதையின் கரு பலநாளாய் உங்களுக்குள் ஊறிப் பக்குவப்பட்டிருக்கிறது என்பது தெளிவாய் தெரிகிறது.

இதற்குமுன் பல பதிவுகளில் இந்தக் கருவின் சில பாகங்கள் உங்களால் இந்த மன்றத்தில் தூவப்பட்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

தொடர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். தொடருங்கள்...ஆவலுடன்...தொடர்கிறேன்.

பூமகள்
04-09-2010, 05:27 AM
தாமரை அண்ணாவோடு அளவலாவிய நாளிலிருந்து இந்த கதைக்கருக்கான வேட்கை அவரில் இருப்பது நான் அறிந்ததே.. அத்தனை அழகான சமுதாயத்தை உருவாக்க தனிமனிதர் இவருள் தான் எத்தனை ஆர்வம்..!!

அமர் அண்ணா போல் எனக்கும் இக்கதை ஆரம்பித்தவுடனேயே "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற வாசகத்துக்கான துணுக்கு நினைவுறுத்தியது இவரின் சிந்தையை. எத்தகைய ஓர் உலகம் இவர் கனவில் கண்டு கொண்டிருக்கிறார் என்பதை இக்கதையில் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவார் என்று நம்புகிறேன்.

கதை, கதையோட்டம், நீலவேணியின் எழில், சிந்தனையாளர்களின் சாதூர்ய தங்கச் செதுக்கலான கேள்வித் தூவல்கள் என என்னை சிந்திக்க வைத்த இடங்கள் அதிகம்.. ஆதவா குறிப்பிட்ட இடங்கள் வெகு ரசனைக்குறியவை..

தொடர்ந்து நீலவேணியின் கரையில் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கும் மன்ற கூட்டத்தோடு நானும் காத்திருக்கிறேன். :)

நாஞ்சில் த.க.ஜெய்
18-10-2012, 08:07 AM
சிந்தனைவய பட்ட சிந்தனாவாதியின் இலக்கு எட்டியதோ தாமரை அவர்களே...