PDA

View Full Version : அவளற்ற அஞ்ஞாயிறு



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-08-2010, 07:26 AM
அன்றைய ஆதவன்
அறவே எழவில்லை
இருளை இறுத்திப் பிடித்தமர்ந்திருந்தது
அவ்விரக்கமன்ற இரவொன்று,
அவரவர் முற்றச் சாளரங்களினூடே
அந்நிலவெளிச்சம் ஒழுகிக்கொண்டிருந்தது
ஓயார நீளிரைச்சலில்
சுரமற்றதொரு வெற்றுக் காற்றை
வெளித் துப்பிக்கொண்டிருந்தன
சூழ் வாழ் இரவு ஜந்துக்கள்
காலம் கடந்த கதிரவன் நோக்கி
கிழக்கு நோக்கி தவம் கிடந்தன
கூவல்களற்ற சேவல்கள்
உலக மொத்தக் குழுமத்தினொரு பகுதி
கோயில் மசூதி தேவாலயங்களில்
குழுமிக்கிடந்தனர் பகல் வேண்டி
ஒற்றைக் குழந்தை வேண்டும்
உற்ற மலடி போல்
எப்படியிருக்கும் அந்த உலகு?

அப்படித்தானிருந்தது அத்தார்ச்சாலை -
அவளின்றிய அஞ்ஞாயிறில்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

அமரன்
23-08-2010, 10:05 AM
வெறுமை நிரப்பி கவிதை எழுதி அவள்மீதான பிரியத்தை விரித்துக் காட்டி விட்டீர்கள்.

உங்களுக்கு அவள் ஒருத்தியாக எனக்கு வேறொருத்தி ஆகலாம்

ஞாயிறுகளில் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகள்.

அந்த வாரம் மகிழ்ந்து உண்ட மனிதர்களின் சிந்திய பருக்கைகளாக வெகுசிலர்.

வாரத்தி இறப்புக்கு அமைதிவணக்கம் செலுத்துவது போல் எங்கும் மௌனம்.

கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மாதிரி எனக்கே கேக்கும் என் இதயத் துடிப்பு..

எல்லாம் இப்படி இருக்க இரவு நீண்டுள்ளதாகவே தோன்றும், அவள் இல்லாத போது.

அவள் தெருநிலவாக இருக்கலாம்.

அங்காடிக் கொலு மொப்பையாக இருக்கலாம்..

எவளாகவும் இருக்கலாம்.

ஆனால் வெளிப்படும் உணர்வு மட்டும் மாறுவதில்லை.
பாராட்டுகள் ஜுனைத்,