PDA

View Full Version : ’மனமும் பஞ்ச பூதங்களும்’



கலையரசி
22-08-2010, 02:40 PM
பண்பட்ட நிலமென
நம் மனமிருந்தால்
அம்மண்ணுக் குள்ளே
வீழ்கின்ற விதைகள்,
விண்ணைத் தொடும்
விருட்சங்களாகலாம்!

தன்னகத்தே துளியேனும்
ஈரமெனும் இரக்கமிருந்தால்,
கருணை மழை பொழிந்து
இரந்தோர் துயர் துடைத்து
இறவாப் புகழ் எய்தலாம்!

பொறாமை எனும் நெருப்புக்கு
மனதில் இடங் கொடுத்தால்,
பொன் விளையும் பூமியைக்கூட
காட்டுத் தீயாய்ப் பொசுக்கி
கட்டாந்தரை ஆக்கி விடும்!

கோபம் எனும் சூறாவளிக்குள்
நாம் அகப்பட்டுக் கொண்டால்,
கண் மண் தெரியாமல்
சுழன்றடிக்கும் பேய்க்காற்றில்,
குடும்பம் எனும் ஆலமரமே
ஆணி வேரறுபட்டுச் சாயக்கூடும்!
திக்குத் தெரியாத காட்டில்
திசை மாறிய பறவைகளாய்ச்
கூடியிருந்த சுற்றமும் நட்பும்!


காட்டாற்று வெள்ளம் போல்
தறி கெட்டோடும் எண்ணங்களைக்
கரையெனும் நல்லொழுக்கத்தால்
கட்டுக்குள் கொண்டு வந்து
அமைதியான நதியினிலே
வாழ்க்கையெனும் ஓடத்தைச்
செலுத்துவோமாயின்
இனிய பூஞ்சோலையாகும்
நம் இல்லம்!
வாழ்வில் என்றென்றும் வீசும்
குளிர் தென்றல்!

nambi
22-08-2010, 03:07 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

Nivas.T
22-08-2010, 04:11 PM
கோபமும், பொறாமையும் நம்மை கொல்லும் ஆயதங்கள்

அழகான கவிதை

நன்றி கலையரசி அவர்களே

கீதம்
23-08-2010, 03:48 AM
மனதுக்குள் எழும் உணர்வுகளுக்கு பஞ்சபூதங்களையும் ஒப்பிட்டவிதம் அழகு. நல்லதொரு வாழ்வுக்கு வித்திடும் கருத்துகளைத் தாங்கி நிற்கும் கவிதைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் அக்கா.

பாரதி
23-08-2010, 07:08 AM
நல் கவிதைக்கு வாழ்த்தும் பாராட்டும்.:icon_b:

கவிதை அமைப்பின்படி சில இடங்களில் உவமைகள் முழுமை பெற்றால் இன்னும் சிறக்கும். எடுத்துக்காட்டாக...

பண்பட்ட நிலமென
நம் மனமிருந்தால்
அம்மண்ணுக் குள்ளே
வீழ்கின்ற விதைகள்,
விண்ணைத் தொடும்
விருட்சங்களாகலாம்!


பண்பட்ட நிலம் = நம் மனம்
விதைகள் = ?

ஆதவா
23-08-2010, 07:26 AM
இந்த கவிதை கவிதைப் போட்டியில் எழுதப்பட்டதுதானே... நன்றாக இருக்கிறது.

என்றாலும் அறிவுரைகளை இரண்டாயிரம் வருடம் முன்பிருந்தே நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே அதனை புதுமையான முறையில் சிந்திக்க மட்டுமே வேண்டும்!! உதாரணத்திற்கு நீங்கள் பொறாமை எனும் தீயை என்று எழுதியிருக்கும் வரிகள் திருவள்ளுவர் இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் இல்லையா... கவிதை தனித்தே இருக்கவேண்டும்..

தொடர்ந்து கவிதை எழுதுங்கள்
அன்புடன்
ஆதவா

அமரன்
23-08-2010, 10:38 AM
ஐம்பொறிக்குள் ஐம்பூதங்களை அடக்கி வாழ்க்கையின் இரகசியம் சொன்ன உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இப்போதெல்லாம் புத்தி சொன்னால் சலிப்பு வரும். ஆதவாவுக்கு வந்திருக்குப் பாருங்க. :)

எதையும் சொல்லுவதை விடச் சேர்ந்து செய்வது நல்லது. இந்தக் கோட்பாட்டில் இந்தக் கவிதையும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பானதாகி இருக்கும்.