PDA

View Full Version : இப்படியும் மனிதர்கள் - 2



பாரதி
17-08-2010, 09:42 AM
பேட்ரீசியா நாராயணன்

http://www.thehindu.com/multimedia/dynamic/00154/TY27PATRICIA1_154664e.jpg


எனக்கு எப்போதும் சமைப்பதிலும், புதிய வகை உணவுகளை செய்வதிலும் விருப்பம் அதிகம். ஆனால் பிசினஸில் ஈடுபடுவேன் என்று எப்போதும் நினைத்ததில்லை. ஏன் என்றால் நான் பிசினஸ் குடும்பத்தில் இருந்து வந்தவளும் இல்லை. என்னுடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தனர்.

எனது திருமணம் எல்லாவற்றையும் மாற்றியது. திருமணத்திற்கு எங்களது இரண்டு வீடுகளிலும் கடும் எதிர்ப்பு; எனது கணவர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர். துரதிருஷ்டவசமாக எனது திருமண வாழ்க்கை நல்லபடியாக நடக்கவில்லை; எனது கணவர் குடி, போதை போன்றவற்றிற்கு அடிமையானார். என்னால் அவரை அவற்றிலிருந்து திருத்த முடியவில்லை. அந்த வயதில் இதை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத்தெரியவில்லை. தினமும் எனக்கு அடி விழும்.

எனது தந்தை ஒரு கட்டுப்பாடான கிருத்துவராக என்னை மன்னிக்கவில்லை ; என்றாலும் எங்கே போவது என்று தெரியாத நிலையில் எனக்கு புகலிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாய் விடப்பட்டேன். அது எனக்கு ஒரு சவாலாக தோன்றியது. வாழ்க்கையில் ... ஒன்று ...கஷ்டத்தினால் இறக்க வேண்டும் அல்லது போராட வேண்டும். தனியாக போராடுவது என முடிவெடுத்தேன்.

எனது பெற்றோரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைய வேண்டுமெனில் எனக்கு என்ன தெரியுமோ, எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஊறுகாய், ஜாம் போன்றவற்றை வீட்டில் தயாரித்தேன். எனது அம்மாவிடமிருந்து சில நூறு ரூபாயை மட்டும் வாங்கினேன். நான் தயாரித்த அனைத்தையும் ஒரே நாளில் விற்றது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

எனக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. நான் என்ன சம்பாதித்தேனோ அதை மேலும் மேலும் ஊறுகாய்,ஜாம் செய்ய பயன்படுத்தினேன். அப்போதைய நிலையில் பத்து ரூபாய் லாபம் என்பதும் எனக்கு மகிழ்ச்சியைக்கொடுத்தது.

எனது தந்தையின் நண்பர் ஒருவர் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தி வந்தார். அவரிடம் கடை நடத்துவதற்கான வசதியைக் கொண்ட தள்ளுவண்டி இருந்தது. இரண்டு உடல் ஊனமுற்றவர்களை பணிக்கு வைத்தால் தள்ளுவண்டியைத் தருவதாக கூறினார். காபியை எப்படி தயாரிப்பது, எப்படி வாடிக்கையாளர்களுக்குத் தருவது என்பதை அவர்களுக்கு நான் கற்றுத்தர வேண்டி இருந்தது.

நான் மெரீனா கடற்கரைக்கு அருகில் வசித்து வந்ததால் அந்த தள்ளுவண்டியை அண்ணா சதுக்கத்தில் வைத்து வியாபாரம் செய்யலாம் என முடிவெடுத்தேன். ஏனெனில் மக்கள் மாலையில் கடற்கரைக்கு அதிக அளவில் வருவதை கவனித்திருந்தேன். பொதுப்பணித்துறைக்கு பல முறை அலைந்தேன்; முறையான அனுமதியைப் பெற ஒரு வருடகாலம் காத்திருந்தேன்.

கடைசியாக 1982 ஆம் வருடம் ஜூன் மாதம் 21 ஆம் நாள் வியாபாரத்தைத் துவங்கினேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அருகில் இருந்த ரிக்ஷாக்காரர்களின் உதவியுடன் முந்தைய நாள் இரவே தள்ளுவண்டியை கடற்கரைக்கு இழுத்துச்சென்றேன். அது சிறிய நிகழ்ச்சி என்றாலும் நானே செய்ததாலும், அடுத்த நாளில் இருந்து சொந்தமாக தொழில் செய்யும் ஒரு பெண்ணாக விளங்கப்போகிறேன் என்ற உணர்வு மகிழ்ச்சியைத் தந்தது.

அதைப்போன்ற தள்ளுவண்டிகளில் அதுவரைக்கும் டீ, சிகரெட்டுகளை மட்டுமே விற்று வந்தார்கள். நான் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ்,காப்பி, டீ ஆகியவற்றை விற்பதென முடிவு செய்தேன். முதல் நாளில் நான் ஒரே ஒரு கப் காப்பியைத்தான் விற்றேன். அதன் விலை ஐம்பது காசுகள்.

எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது; அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன். இனிமேல் விற்கப்போவதில்லையென அம்மாவிடம் சொன்னேன். "ஒரு கப் காப்பியையாவது விற்றாயே..! அதுவே நல்ல அறிகுறிதான். நாளைக்கு நீ நன்றாக வியாபாரம் செய்வாய்" என்று கூறி அம்மா என்னை சமாதானப்படுத்தினாள். அடுத்த நாள் நான் போயே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். அடுத்த நாள் 600-700 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். கொஞ்சம் பணம் சேர்ந்ததும் ஐஸ்கிரீம், சாண்ட்விச், ஃபிரென்ச் ஃபிரைஸ், ஜூஸ் ஆகியவற்றையும் விற்பனையில் சேர்த்தேன். இன்னும் பல புதிய பண்டங்களை சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சிந்திப்பேன்.

1982 ஆம் வருடத்திலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை அந்த தள்ளுவண்டி வியாபாரத்தை செய்து வந்தேன். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25,000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். பந்த் நாட்களில் அந்த வியாபாரம் நடக்கும். ஒவ்வொரு நாளும் மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை செய்து வந்தேன். பின்னர் காலை 5 மணியில் இருந்து 9 மணி வரை "வாக்கிங்" போகிறவர்களுக்காக கடையைத் திறந்து வைத்திருந்தேன். நான் செய்த எல்லாப்பண்டங்களும் விற்கும் வரை நானே கடையில் இருப்பேன். இராத்திரி நேரங்களில் அங்கே இருப்பதற்கு நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. என் திறமையை நிரூபிக்க வேண்டும்; இன்னும் உயர வேண்டும் என்ற ஒன்று மட்டுமே என் எண்ணமாக இருந்தது.

ஒருவருடைய உதவியும் இல்லாமல் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற பொறி என் உள்மனதில் இருந்தது. தோற்பதற்கு நான் விரும்பவில்லை. உங்களிடமும் அந்தப்பொறி இருக்குமென்றால் நீங்கள் ஜெயிப்பதை இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் தடுக்க முடியாது. கடற்கரையில் என்னைப்பார்த்த குடிசை மாற்று வாரிய அதிகாரி அவருடைய அலுவலகத்தில் இருந்த கேண்டீனை நடத்த முடியுமா என்று கேட்டார். அந்த வாரியத்தின் தலைவி காலையில் நடைப்பயிற்சி செல்லும் போது என்னை சந்தித்து அந்த வாய்ப்பைக் கொடுத்தார். அந்த கேண்டீனை மிகவும் வெற்றிகரமாக நடத்தினேன்.

புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நடக்கும். அப்போது ஏறக்குறைய 3000 பேர் அங்கே வருவார்கள்; அதனால் என் வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 5 மணிக்கு எழுந்து, இட்லியை வேகவைத்து எடுத்துக்கொண்டு கடற்கரைக்குப் போவேன். காலை 9 மணிக்கு கேண்டீனுக்குப் போய் விடுவேன். மாலை 03:30 மணிக்கு மீண்டும் கடற்கரையில் தள்ளுவண்டி வியாபாரத்திற்குப் போவேன். இரவு 11 மணி வரை அங்கே இருப்பேன்.

பின்னர் சமைப்பதற்கு, பொருட்களை சுத்தம் செய்வதற்கு ஆட்களை நியமித்தேன். சமைப்பது எல்லாவற்றையும் கேண்டீனிலேயே செய்து விடுவேன். அப்போது என்னுடைய மாத வருமானம் ஏறத்தாழ 20,000 ரூபாயாக இருந்தது.

அதன் பின்னர் பேங்க் ஆஃப் மதுரை கேண்டீனை நடத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குடிசை மாற்று வாரியத்தில் நடத்தி வந்த கேண்டீனை நிறுத்தினேன். பேங்க் கேண்டீனில் தினமும் 300 பேருக்கு சாப்பாடு பரிமாறி வந்தேன்.

என்னுடைய கணவர் அடிக்கடி வந்து என்னுடன் சண்டை போடவும், தொந்தரவுகள் தரவும் செய்துகொண்டிருந்தார். அப்படி அவருடன் தகராறு நடந்த ஒரு நாள் ஒரு பஸ்ஸில் ஏறினேன். அந்த பஸ் எங்கே கடைசியாக நிற்குமோ அது வரைக்கும் போனேன். கடைசி ஸ்டாப்பில் இறங்கி நடந்தேன். அப்போது மத்திய அரசால் நடத்தப்பட்டு வந்த தேசிய துறைமுக நிர்வாகப் பயிற்சிப்பள்ளியைப் பார்த்தேன். ஒரு கணமும் தாமதிக்காமல் அங்கே இருந்த காவலாளியிடம் நிர்வாக அதிகாரியைப் பார்க்க விரும்புவதாகக்கூறினேன். நிர்வாக அதிகாரியை சந்தித்து, நான் ஒரு கேண்டீன் நடத்தி வருவதையும், அவர்களுக்கு அதைப்போன்ற ஒருவர் தேவைப்படுவதாக கேள்விப்பட்டதாகவும் சொன்னேன்.

ஆச்சரியம் தரும் வகையில், அப்போதிருந்த கேண்டீன் காண்ட்ராக்டருடன் பிரச்சினை இருப்பதால் புதிதாக ஒருவரைத் தேடுவதாக அவர் சொன்னார்!! என்னை கடவுள்தான் அங்கே கொண்டு சென்றார் என்று இன்றும் நம்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. 700 மாணவர்களுக்கு மூன்று வேலை உணவை தயாரித்துக்கொடுக்க வேண்டும் என்று தெரிந்தது. நான் அங்கேயே தங்குவதற்கு வீடும் கொடுத்தார்கள். அது எனக்கு ஒரு புது வாழ்க்கையாக அமைந்தது. ஒரே நாளில் அதை எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொண்டேன். முதல் நாளிலிருந்தே வெற்றிகரமாக நடத்திய அந்த கேண்டீனை 1998 வரை நிர்வாகம் செய்தேன். என்னுடைய முதல் வாரக்கடைசியில் 80,000 ரூபாய் தந்தார்கள். அதுவரை நூறுகளும், சில ஆயிரங்களும் சம்பாதித்து வந்த எனக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. வாரத்திற்கு கிட்டத்தட்ட லட்ச ரூபாய் சம்பாதித்தேன்.

அந்த காலத்தில் எல்லாவற்றையும் நானே பார்த்தால்தான் எல்லாம் சரியாக நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆட்களுக்கு நல்லபடியாக பயிற்சி கொடுத்தால், நமக்கு தேவையான வேலைகளை அவர்கள் செய்வார்கள் என்று இப்போது தெரிந்து கொண்டேன்.

1998-ல் சங்கீதா ரெஸ்ட்டாரண்ட் நிர்வாகத்தை சந்தித்தேன். அவர்களுடைய ஒரு பிரிவில் எனக்கு பார்ட்னர்ஷிப் தருவதாக சொன்னார்கள். ஆனால் என் மகன் பிரவீண் ராஜ்குமார் நாமே சொந்தமாக ரெஸ்ட்ராண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் விதி மீண்டும் என் வாழ்வில் விளையாடியது. 2004 ஆம் ஆண்டு என்னுடைய மகள் பிரதிபா சந்திராவுக்கு திருமணம் நடந்தது. அவர்கள் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே என் மகளையும் மருமகனையும் ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்தேன்.

அது என்னை மிகவும் பாதித்தது; நான் செய்து வந்த எல்லாவற்றில் இருந்தும் விலகிக்கொண்டேன். அதன் பின்னர் என் மகன் மகளின் நினைவாக "சந்தீபா" என்ற ரெஸ்ட்டாரண்டை ஆரம்பித்து நிர்வகித்து வந்தான். மகளை இழந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு வந்த நான் என்னுடைய மகனின் தொழிலில் அவனுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். இப்போது முழுமையாக அந்த நிர்வாகத்தில் மூழ்கி விட்டேன். ஜெயிக்க வேண்டும் என்ற அப்பொறி மீண்டும் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறது.

என்னுடைய குழந்தைகளுக்காகவே நான் அத்தனையும் செய்து வந்தேன். என்னுடைய மகளின் இழப்பை இன்னும் என்னால் தாங்க முடியவில்லை. ஆம்புலன்ஸ்காரர்கள் விபத்தில் அடிபட்டவர்களை நடத்தும் விதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரில் இருந்த நான்கு பேரும் இறந்து விட்டார்கள் என்பது தெரிந்ததும், சடலங்களை ஏற்றி செல்ல முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டார்கள். ஒரு வழியாக ஒரு காரின் டிக்கியில் அச்சடலங்களை ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள். சடலங்களை காரில் இருந்து இறக்கும் போது பார்த்ததும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எந்த ஒரு தாயும் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. அப்போதுதான் என் மகளின் நினைவாக அந்த விபத்து நடந்த இடத்தில் ஒரு ஆம்புலன்ஸை நிறுவத்தென்றும், விபத்தில் அடிபட்டவர்கள் உயிரோடோ, சடலமாகவோ இருந்தாலும் அவர்களை ஏற்றி செல்ல அது உதவ வேண்டும் என்றும் முடிவெடுத்தேன்.

இரண்டு பேரைக்கொண்டு என் வியாபாரத்தை ஆரம்பித்தேன். இப்போது எனக்காக 200 பேர் ரெஸ்ட்டாரண்டுகளில் வேலை பார்க்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை முறையும் மாறி விட்டது. சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்த நான் ஆட்டோரிக்ஷாவில் போக ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் சொந்தமாக கார் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஐம்பது பைசாவாக இருந்த வருமானம் இப்போ ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாயாக ஆகி இருக்கிறது.


http://im.rediff.com/money/2010/jun/07slid6.jpg


"ஃபிக்கி எண்டர்பிரனர் அவார்ட் " என்னுடைய முப்பது வருட கடின உழைப்பினால் கிடைத்திருக்கிறது. ஒரு அவார்ட் வாங்குவது எனக்கு இதுவே முதல் முறை. இதுவரைக்கும் நான் என்ன செய்கிறேன் என்பதை நினைத்துப்பார்க்கவே இல்லை. இந்தப்பரிசு கடந்து போன நாட்களையும் வாழ்க்கையையும் நினைவு கூற வைத்திருக்கிறது. இப்போது என் லட்சியம் "சந்தீபா பிராண்ட்" டை உருவாக்குவது என்பதே.

புதிதாக தொழில் முனைவோருக்கு நான் கூற விரும்புவது :
எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் மேலும் நீங்கள் தயாரிக்கும் பொருளின் மீதும் நம்பிக்கை வையுங்கள். எப்போதும் உங்களுக்கு தெரிந்ததையே செய்யுங்கள். நீங்கள் பணிக்கு ஆட்களை நியமிக்கும் போது அவர்களிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பெரிதாக கற்பனை செய்யுங்கள்; அந்தக்கற்பனையை நனவாக்க முயற்சியுங்கள்.


===================================


குறிப்பு: FICCI (ஃபெடரே ஷன் ஆஃப் இண்டியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) வழங்கிய 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் தொழிலதிபருக்கான பரிசினை வென்றவர் பேட்ரீசியா நாராயணன்.

நன்றி: கட்டுரை ஆசிரியர் ஷோபா வாரியர் மற்றும் ஆங்கிலக் கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.

பட உதவி: தி ஹிந்து நாளிதழ், ரீடிஃப் இணைய தளம்

கீதம்
17-08-2010, 10:25 AM
பேட்ரீஷியா நாராயணன் அவர்களின் மன உறுதியும், வாழ்க்கையை அவர் எதிர்கொண்ட பாங்கும் என்னை நெகிழச்செய்துவிட்டன. துயரங்களையே அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட அவரது வாழ்க்கைக் கட்டடத்தின் வெற்றியும் புகழும் வியக்கவைக்கின்றன. வாழ்க்கையில் சோர்வும் தோல்வியும் கண்ட பல பெண்களுக்கு நிச்சயம் இவரது வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும்.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

பாரதி
17-08-2010, 06:22 PM
ஊக்கத்திற்கு நன்றி கீதம்.

வியாசன்
17-08-2010, 06:45 PM
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பிறகு தைரியம்தான் இருக்கின்றது. போராட்டங்கள் பெண்களை வெளியே தெரிய வைக்கின்றது

குணமதி
18-08-2010, 02:02 AM
பெண்களுக்கு மன உறுதியும் ஊக்கமும் அளிக்கும் பயன்மிக்க பதிவு.

பாராட்டு.

ஆதவா
18-08-2010, 04:37 AM
படித்ததும் பல நினைவுகள் வருகின்றன.. உயரம் தொட்டவர்கள் பலர், தங்களது இளம் வயதில் நன்கு உழைத்தவர்களாகவே இருப்பார்கள்!!!
பகிர்வுக்கு நன்றி பாரதி அண்ணா.

aren
18-08-2010, 07:42 AM
இதைப் படித்துவிட்டு அனைவரும் தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.

அனைவரும் முயன்றால் வெற்றி பெறலாம் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே பகிர்ந்துகொண்ட பாரதி அவர்களுக்கு என் நன்றிகள்.

மச்சான்
18-08-2010, 08:15 AM
வாழ்க்கையில் நொந்து போயிருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் ஒரு கட்டுரை இது......! பகிர்ந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் நண்பரே பாரதி....!

சிறந்த தொழிலதிபர் பரிசு பெற்ற பேட்ரிஷியா நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.

பாரதி
18-08-2010, 04:15 PM
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பிறகு தைரியம்தான் இருக்கின்றது. போராட்டங்கள் பெண்களை வெளியே தெரிய வைக்கின்றது
அட...!
நீங்கள் கூறியது சிந்திக்க வைக்கிறது. இருப்பினும் முதல் நாள் விற்பனையில் தளர்ந்த பேட்ரீசியாவை அவரது தாயார் தேற்றியதும் நினைவுக்கு வருகிறது.
ஊக்கத்திற்கு நன்றி வியாசன்.


பெண்களுக்கு மன உறுதியும் ஊக்கமும் அளிக்கும் பயன்மிக்க பதிவு.

பாராட்டு.
மிக்க நன்றி நண்பரே.


படித்ததும் பல நினைவுகள் வருகின்றன.. உயரம் தொட்டவர்கள் பலர், தங்களது இளம் வயதில் நன்கு உழைத்தவர்களாகவே இருப்பார்கள்!!!
பகிர்வுக்கு நன்றி பாரதி அண்ணா.
மிக்க நன்றி ஆதவா.


இதைப் படித்துவிட்டு அனைவரும் தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.

அனைவரும் முயன்றால் வெற்றி பெறலாம் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இங்கே பகிர்ந்துகொண்ட பாரதி அவர்களுக்கு என் நன்றிகள்.
மிக்க நன்றி ஆரென் அண்ணா.


வாழ்க்கையில் நொந்து போயிருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் ஒரு கட்டுரை இது......! பகிர்ந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் நண்பரே பாரதி....!

சிறந்த தொழிலதிபர் பரிசு பெற்ற பேட்ரிஷியா நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே.

meera
19-08-2010, 06:21 AM
பாரதி அண்ணா,

இவர்களின் வாழ்க்கையும், வெற்றியின் ரகசியமும் தோல்வியைக் கண்டு துவழும் மனதிற்க்கு ஒரு நல்ல மருந்து..

சாதிக்கும் எண்ணமிருந்தால் எல்லாமே சாத்தியம் தான் என்ற நம்பிக்கை வருகிறது.
அண்ணா, அருமையான கட்டுரை தந்தமைக்கு நன்றி.

அமரன்
19-08-2010, 10:27 AM
அவசியமான தகவல்.

நீங்கள் மொழிபெயர்த்த விதமோ, இல்லை பக்டிசியா நாராயணனின் நா நயமோ, உயர்ந்த பின்னும் எப்படி உயர்வது என்றும் சொல்வது மிக மிகப் பயனுள்ளது.

200 பேருக்கு வேலை கொடுத்தேன் என்பதுக்கும், 200 பேர் எனக்காக வேலை செய்கிறார்கள் என்பதுக்கும், இருநூறு குடும்பத்துகாக வேலை செய்கிறேன் என்பதுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

நன்றி பாரதிண்ணா.

Nivas.T
19-08-2010, 01:37 PM
வலிமை மிக்க இதயம் எதனையும் சாதிக்கும்

அடிவிழ அடிவிழ எழுபவன்தான் நிமிர்ந்து நிற்கமுடியும்

பேட்ரீசியா நாராயணன்

அவர்களுக்கு ஒரு சலுயுட்

நன்றி பாரதி

பாரதி
19-08-2010, 04:03 PM
இவர்களின் வாழ்க்கையும், வெற்றியின் ரகசியமும் தோல்வியைக் கண்டு துவழும் மனதிற்கு ஒரு நல்ல மருந்து..

சாதிக்கும் எண்ணமிருந்தால் எல்லாமே சாத்தியம் தான் என்ற நம்பிக்கை வருகிறது.

உண்மைதான் மீரா. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.



நீங்கள் மொழிபெயர்த்த விதமோ, இல்லை பக்டிசியா நாராயணனின் நா நயமோ, உயர்ந்த பின்னும் எப்படி உயர்வது என்றும் சொல்வது மிக மிகப் பயனுள்ளது.

200 பேருக்கு வேலை கொடுத்தேன் என்பதுக்கும், 200 பேர் எனக்காக வேலை செய்கிறார்கள் என்பதுக்கும், இருநூறு குடும்பத்துகாக வேலை செய்கிறேன் என்பதுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

நீங்கள் கூறிய பின்னரே கவனித்தேன். இதில் என்னுடைய பங்கு ஏதுமில்லை அமரன். உண்மையிலேயே அவர்களுடைய எண்ணம்தான் அவர்களை உயர்த்தி இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஊக்கத்திற்கு நன்றி அமரன்.


வலிமை மிக்க இதயம் எதனையும் சாதிக்கும்
அடிவிழ அடிவிழ எழுபவன்தான் நிமிர்ந்து நிற்கமுடியும்
பேட்ரீசியா நாராயணன்
அவர்களுக்கு ஒரு சலுயுட்

உண்மையான சொற்கள் நண்பரே! ஊக்கத்திற்கு மிக்க நன்றி.