PDA

View Full Version : பெரியம்மா



கீதம்
15-08-2010, 11:10 PM
“சரவணா! நீதான் பெரியம்மாவிற்குக் கொள்ளி வைக்கவேண்டுமென்று அம்மா சொல்கிறாள். வா!"

அழைத்த விஸ்வநாதன் மாமாவை அதிர்ச்சியுடன் ஏறிட்டான் சரவணன்.

"என்ன மாமா சொல்கிறீர்கள்? நான் எப்படி......?"

அவன் கேள்வியை முடிக்குமுன்னேயே இடைமறித்தார் மாமா.

''நான் பரிமளத்திடம் பேசிவிட்டேன், சரவணா! அவள் இதில் பிடிவாதமாக இருக்கிறாள். இதைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது அதற்கான நேரமில்லை. பல வருடங்களாகப் படுக்கையில் கிடந்த உடம்பு! ரொம்ப நேரம் வைத்திருக்க முடியாது. வா! மேற்கொண்டு ஆக வேண்டியவற்றைப் பார்ப்போம்!"

சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நடுக்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சடலத்தைப் பார்த்தான். பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதி வெந்த உடல் அது! அதற்கு தான் மேலும் தீ மூட்டவேண்டுமாம்!

வெறுப்பை விழுங்கியவனாக மீண்டும் நோக்கினான். முகம் கூட வெளியில் தெரியாதபடி முழுவதும் போர்த்தப்பட்டிருந்தது. பார்த்தவன், திடுக்கிட்டான். அந்தக் கோடித்துணி.........?

சரவணனின் முதல் மாதச்சம்பளத்தில் அவன் அம்மாவுக்காக வாங்கித்தந்த வெண்பட்டுச் சேலை அது! எவ்வளவு ஆசையாகப் பெற்றுக்கொண்டாள்! அதை அவள் உடுத்தவே இல்லையா?

பெரியம்மாவென்று சொல்லப்பட்டவள் யாரென்று கூட அவனுக்கு சரிவரத் தெரியாது. அவன் அறிந்தவரை 'அது' தன் வீட்டிலிருக்கும் ஒரு ஜடம். அவ்வளவுதான்! அதைப் 'பெரியம்மா' என்றுதான் அழைக்க வேண்டும் என்பது பரிமளத்தின் கட்டளை. அதைப் பராமரிப்பதற்காகவே சொத்து முழுவதையும் செலவழித்தாள். அவர்களது பரம்பரைச் சொத்தில் இப்போது கால்பங்கு கூட இல்லை. அதற்காக பரிமளம் கவலைப்படவும் இல்லை.

சரவணன் படித்து முடித்து நல்ல வேலையும் கிடைத்துவிட்டதால், இனி அவனைப் பற்றிய கவலையில்லையென்றும், மீதமிருக்கும் சொத்துகளை வைத்து, பெரியம்மாவின் கடைசிக்காலம் வரை தன்னால் காப்பாற்ற இயலும் என்றும் அம்மா அடிக்கடி விஸ்வநாதன் மாமாவிடம் கூறுவாள்.

அம்மா மட்டும் இப்படி பார்த்துப் பார்த்துக் கவனித்திராவிடில் இந்த ஜடம் என்றோ போய்ச் சேர்ந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

பரிமளத்தின் பொறுமையும், சகிப்புத்தன்மையும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அந்த ஜடத்திற்குப் பணிவிடை செய்து பராமரித்திருக்கிறாள். அதுவும் சாதாரண ஜடமில்லை; தீயில் வெந்த கை, கால் நரம்புகள் உள்ளிழுக்கப்பட்டு, தசைகள் பின்னப்பட்டு, பாதி முகம் கருகி, கண்கள் இடுங்கி, வாய் கோணி விகாரத்தின் மொத்த வடிவமாக அது இருந்தது.

சுயநினைவு இருந்ததாகக் கூட தெரியவில்லை. எப்போதும் ஒரு வெறித்த பார்வை! பரிமளம்தான் அதற்கு உணவூட்டுவாள்; உடல் துடைப்பாள்; சிறுநீர், மலப்பாத்திரம் மாற்றுவாள். ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டாள். ஒவ்வொரு இரவும் அதனருகில் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளை விவரிப்பாள். சரவணனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

சரவணன் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை அவனும், அவன் நண்பர்களும் சன்னல் வழியே பெரியம்மாவைப் பார்த்துவிட்டு, 'பேய், பேய்' என்று கூச்சலிட்டனர். அதைக் கண்டு பரிமளத்திற்கு வந்ததே கோபம்! இனி அவன் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வரக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டுவிட்டாள்.

இன்று வரை அவன் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைக்கும் துணிவு அவனுக்கு வரவில்லை.

அம்மா கடுமையாகப் பேசினாலும், அன்பின் மறு உருவம் அவள் என்பதை அவன் அறியாமல் இல்லை. அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்தவள். கண்டிக்க வேண்டிய நேரங்களில் ஒரு ஆசிரியையாகவும், அன்பைச் செலுத்துவதில் நல்ல தாயாகவும், விவாதிக்கும் தருணங்களில் ஒரு தோழியாகவும் செயல்படுபவள். ஆனால் 'பெரியம்மா' விஷயத்தில் மட்டும் அம்மாவிடமிருந்து எந்தச் சலுகையையும் பெற இயலவில்லை.

பரிமளம் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாள். ஆனால் பெரியம்மாவைப்பற்றி யாராவது விமர்சித்தால் தாங்கிக்கொள்ள மாட்டாள். கடுமையாகப் பேசிவிடுவாள்.

விஸ்வநாதன், பரிமளத்திற்கு ஒன்று விட்ட அண்ணன் முறை. சரவணன் மேல் அவருக்குப் பாசம் அதிகம். தன் மகள் வேணியை சரவணனுக்குக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு ரொம்ப நாட்களாகவே இருந்தது.

சரவணனுக்கும் வேணி மேல் பிரியம்தான். ஆனால் வேணி, 'அந்தப் பேயிருக்கும் வீட்டில் நானிருக்க மாட்டேன்' என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாளாம். இதை நாசூக்காக பரிமளத்திடம் தெரிவிக்க எண்ணி,

''ஏன் பரிமளம், இதை இன்னும் எத்தனை நாள் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கப் போகிறாய்? உனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. சரவணனுக்குத் திருமணம் செய்யும் எண்ணமில்லையா? அதற்குமுன் இதற்கு என்ன வழி செய்யலாம் என்று யோசி'' என்றார்.

பரிமளம் ஆத்திரத்தோடு, "என்ன வழி செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? ஏதாவது காப்பகத்திற்கு அனுப்பிவிடலாம் என்றா அல்லது மேலோகத்துக்கேவா? அவள் என் தெய்வம்! அவளை வைத்து பராமரிக்கும் எண்ணமுள்ளவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வரட்டும்; இல்லையெனில் சரவணனுடன் தனிக்குடித்தனம் போகட்டும்! எனக்குக் கவலையில்லை. நான் சாகும்வரை அவள் என் பராமரிப்பில் இந்த வீட்டில்தான் இருப்பாள். இதைப் பற்றிப் பேசுவதென்றால் இனி நீங்கள் இங்கு வரவேண்டாம்" என்று கூறிவிட்டாள்.

விஸ்வநாதன் பரிமளத்தின் கோபத்தை அறியாதவர் இல்லை; எனினும் சற்றே பயந்துதான் போனார். ''என்னை மன்னித்து விடம்மா" என்று தலை கவிழ்ந்து வெளியேறிவிட்டார்.

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டு இருந்த சரவணனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிக் கடுமையாகப் பேசியே பல உறவுகளை இழந்தவள், இன்று தான் பெற்ற பிள்ளையையே விலக்கி வைக்கத் துணிந்துவிட்டாள் என்றால்....... அவள் யார்?

துணிந்து அம்மாவிடம் கேட்டான். ''அவள்தான் என்னை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வம்!'' என்ற ஒற்றை வரியே பதிலாகக் கிடைத்தது.

சிறுவனாக இருந்தபோதும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறான். அப்போது, "அவள் உன் பெரியம்மா! நீ அவளை ஒரு மனுஷியாக மதிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை; அவமரியாதை மட்டும் செய்யாதே!" என்பாள். ஆனால் சரவணன் அவளை என்றுமே மதித்ததில்லை. அவள் இருக்கும் அறைப் பக்கம் போவதையே தவிர்த்தான்.

பரிமளம் சில சமயம் அவனைக்காட்டி, "இவனைத் தெரிகிறதா? நம் சரவணன்! எப்படி வளர்ந்துவிட்டான், பார்!" என்பாள். அவனுக்கு சிரிப்புதான் வரும். இந்த ஜடத்திடம் போய் சொல்கிறாளே! அது தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறது?

உண்மையில் அவன் அம்மா பேசுவதையெல்லாம் உணர்கிற நிலையில் அது இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அம்மா சுவருடன் பேசுவது போலத்தான் இருக்கும் அவனுக்கு. ஆனால் அதன் விழிகள் மட்டும் அவனைப் பார்த்துவிட்டால் அலைபாயும். அதுவே பார்ப்பதற்கு இன்னும் பயங்கரமான தோற்றத்தைத் தர விருட்டென்று அறையை விட்டு வெளியேறிவிடுவான். பரிமளம் அவனைக் கடிந்து கொள்வாள்.

அம்மா மற்ற நேரங்களில் இருப்பதைப் போன்றே எப்போதும் தன்னிடம் அன்பாக இருக்கவேண்டுமென்று விரும்பும் அவன், அவள் தன்னிடம் கோபமுறக் காரணமான 'பெரியம்மாவை' முற்றிலும் வெறுத்தான். அவள் சாகவேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தித்தான்.

இதோ, இப்போது பிணமாகக் கிடக்கிறாள்! போகும்போது சும்மா போகாமல், தன் தாய்க்குத் தான் செய்யவேண்டிய கடமையில் பங்கு கேட்கிறாள்! அவள்மேல் வெறுப்பு அதிகரித்தது.

வீட்டின் உள்ளே பார்த்தான். யாரும் அழவில்லை. பரிமளம் மட்டும் இறுகிய முகத்துடன் அதன் அருகில் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே நிறைய அழுதிருந்தாள். அப்பா இறந்தபோது கூட அவன் அம்மா இந்த அளவுக்கு துக்கப்பட்டதாக அவனுக்கு நினைவில்லை.

உறவினர் சிலர் வந்திருந்தனர். யார் முகத்திலும் துக்கம் தென்படவில்லை. மாறாக, ஒருவிதமான நிம்மதி தெரிந்தது. விஸ்வநாதன் பம்பரம்போல் இயங்கி காரியங்களை முடித்தார். வேணி இங்கு வர இனி எந்தத் தடையும் இல்லை. பெருமூச்சு விட்டார். பரிமளத்திடம் மெதுவாகத் திருமணப் பேச்சை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது. பெரியம்மாவுக்குத் தன் கையால் தீ மூட்டியாகிவிட்டது. யாவரும் போன பிறகு வீடு வெறிச்சோடியிருந்தது.

பரிமளம் பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்திருந்தாள். சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அம்மாவின் மௌனம் அவனைக் கொன்றது. முன்பும் இது போன்றதொரு அமைதிதான் அந்த வீட்டில் இருந்தது என்றாலும் இந்த அமைதி அவனை அச்சுறுத்தியது.

சரவணன் சென்று பரிமளத்தின் அருகில் அமர்ந்தான். அரவம் கேட்டு பரிமளம் சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவளிடமிருந்து லேசான புன்முறுவல் வெளிப்பட்டது.

இதுதான் சமயமென்று அவன், "அம்மா, நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்" என்றான். அவளோ, "சரவணா! நீ என்ன கேட்கப்போகிறாய் என்று எனக்குத் தெரியும். அதை உன்னிடம் சொல்வதற்காகத்தான் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன்" என்று கூறவும், ஏதோவொரு பூகம்பம் வெடிக்கப்போகிறதோ என்று அவன் மனம் திடுக்கிட்டது. ஆயினும் இத்தனை நாள் அம்மா மறைத்த ஒரு விஷயத்தை அறியும் ஆவலும் பெருகிற்று. 'திக் திக்' என்ற மனதோடு அவளை ஏறிட்டான்.

"சரவணா! உன்னை தைரியப்படுத்திக்கொள்! உன்னைப் பெற்றவள் உண்மையில் நானில்லை; இன்று கொள்ளி வைத்தாயே அவள்தான், உன் பெரியம்மாதான் உன்னைப் பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்றவள்! இந்த உண்மையை இத்தனை நாள் மறைத்ததற்காக என்னை மன்னித்துவிடு, கண்ணா!"

சரளமாக வெளிப்பட்ட பரிமளத்தின் வாக்கைக் கேட்டு நிலைகுலைந்து போனான். 'வெடிக்கப்போகிறது, வெடிக்கப்போகிறது' என்று பயந்தது, உண்மையிலேயே வெடித்துவிட்டது. சாட்டை கொண்டு யாரோ அவன் இதயத்தைச் சுண்டியிழுப்பது போல் உணர்ந்தான்.

பெரும்புயலில் அகப்பட்ட சிறு படகாக அவன் மனம் தத்தளித்தது. பரிமளம் தன் தாயில்லை என்பதையே இன்னமும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், பெரியம்மாதான் அவனைப் பெற்றவள் என்பதை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

உணர்வற்று சற்று நேரம் உறைந்திருந்தவன், பின் மெல்ல சுயநிலைக்கு வந்தான். பரிமளத்தின் கையை எடுத்துத் தன் நடுங்கும் கைகளுக்குள் பொத்தியவாறு, "அம்மா! நான் இதை நம்பமாட்டேன்! நீங்கள் ஏதோ வேதனையில் பேசுகிறீர்கள். இன்று ஓய்வெடுங்கள்! நாளை பேசலாம்!" என்றான் கெஞ்சிய குரலில்.

பரிமளமோ பிடிவாதமாகப்பேசினாள்.

"இல்லையப்பா! நீ அறியும் நேரம் வந்துவிட்டது. அதற்கு முன், உன் தந்தையைப் பற்றி நீ சற்றும் அறிந்திராத செய்தியைச் சொல்கிறேன், கேள். அவர் வழி வழியாக வந்த சொத்து சுகங்களை அனுபவித்துக் கொண்டு பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது தந்தை அவரைத் திருத்த முயன்று தோற்ற நிலையில், திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்திவிடுவான் என்று எண்ணி, தூரத்து உறவினரான என் தந்தையிடம் பேசி என்னை மணமுடித்து வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கு அவரது உண்மைக் குணம் புரிந்தது. என்னால் இயன்றவரை, அவரைத் திருத்தி, பொறுப்புள்ள கணவராகவும், நல்ல மனிதராகவும் வாழ வைக்க முயற்சித்தேன். ஓரளவு பலன் தெரிந்தது.

எங்களுக்குத் திருமணமாகிய சில மாதங்களிலேயே எனக்கு அடிக்கடி வயிற்றுவலி வர, பரிசோதித்துப் பார்த்ததில் கர்ப்பப்பையில் ஒரு கட்டி வளர்வது தெரிய வந்தது. அதை அப்படியே விட்டால் புற்றுநோயாக மாறும் அபாயமிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்க, அறுவை சிகிச்சை செய்து என் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.

தாயாகும் பேறு இனி எனக்கு இல்லை என்ற உண்மையை உணர்ந்து மனம் வேதனைப்பட்டாலும், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தாவது என் தாய்மையை வாழ்விக்க எண்ணி என் யோசனையை என் கணவரிடமும், மாமனாரிடமும் சொன்னேன். அவர்கள் இருவரும் பதில் எதுவும் கூறாததால் அவர்களுக்கு இதில் உடன்பாடில்லை என்பதைப் புரிந்துகொண்டு அதன்பிறகு அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டேன்.

சில நாட்களிலேயே என் மாமனார் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டார். சாகும் தறுவாயில், என்னிடம் தயங்கித் தயங்கி ஒரு உண்மையை வெளியிட்டார். அது, என் திருமணத்திற்கு முன் நிகழ்ந்த சம்பவம்.

அப்போது தன் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த பூரணி என்னும் இளம்பெண்ணின் அழகில் மயங்கிய உன் அப்பா, அவள் வாழ்வைச் சூறையாடி விட்டதாகவும், அதனால் கர்ப்பமுற்ற அவளை, தானும் தன் மகனும் குடும்ப கௌரவம் கருதி, ஏதேதோ காரணம் காட்டி வேலையிலிருந்து அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.

அந்தப் பாவம்தான் தன் வம்சத்திற்கு வாரிசு உருவாகாமல் போன காரணம் என்றும், அந்தக் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து எடுத்து வளர்க்குமாறும் என்னிடம் வேண்டிக்கொண்டு உயிரை நீத்தார்.

எனக்குப் பேரிடியாக இந்தச் செய்தி இருந்தாலும், யாரோ ஒரு குழந்தையை வளர்ப்பதினும், என் கணவரின் குழந்தையைத்தானே வளர்க்கப்போகிறேன் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன்.

பலவிதங்களிலும் தேடியலைந்து பூரணி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அங்குதான் ஒரு வயதுக் குழந்தையாக உன்னை முதலில் பார்த்தேன். ஆம்; நீதான் அந்தக் குழந்தை!

என் எண்ணத்தை வெளியிட்டதும் பூரணி தயங்காமல் உன்னைத் தூக்கி என் கையில் கொடுத்தாள். அன்பின் மொத்த வடிவம் அவள்! நல்ல அழகி, பண்பு நிறைந்தவள்! அவளோடு வாழ்வதற்கு உன் அப்பாவுக்குத்தான் கொடுப்பினை இல்லையென்று நினைத்துக்கொண்டேன்.

நான் அவளிடம், ''உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ வைக்கிறேன்'' என்று கூறி அழைத்தேன். அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

என்னுடைய இடைவிடாத வேண்டுதலையும், கெஞ்சலையும் தாளாமல் ஒருவழியாக என்னுடன் வர சம்மதித்தாள். உரிமை கோரி அல்ல; வீட்டு வேலைக்காரியாக!

அவள் என்னிடம் பெற்ற சத்தியங்கள் இரண்டு. முதலாவது, அறியாப்பருவமான உன் மனதில் தாயென்ற இடத்திலிருந்து அவளை மெல்ல நீக்கி, கடைசிவரை தன்னை அடையாளங்காட்டக்கூடாது என்பது.

இரண்டாவது, உன் தந்தை எந்தக் காலத்திலும் பழைய உறவை மனதில் வைத்துக்கொண்டு தன்னைத் தீண்டக்கூடாது என்பது. எப்படியாவது அவள் வந்தால் போதுமென்று எண்ணிய நான் அவளது நிபந்தனைகளைக் கூறி உன் அப்பாவின் சம்மதம் பெற்றேன்.

உன்னை சட்டப்படி எங்கள் மகனாக ஏற்றோம். பூரணி வேலைக்காரியாகவே வளைய வந்தாள். நீ அழும் வேளைகளில் கூட உன்னைத்தூக்கி சமாதானப்படுத்த அவள் முன்வரவில்லை.

உன் அப்பாவும் தன் தவறுக்கு வருந்தியதுபோல் தெரிந்தது. உன்னை மனதார ஏற்றுக் கொண்டார். பூரணி மட்டும் அவர் கண்களில் படுவதை பெரும்பாலும் தவிர்த்தாள். வாழ்க்கை சீராகப் போய்க் கொண்டிருந்தது.

உனக்கு நான்கு வயதிருக்கும்போதுதான் ஒருநாள் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது.

என் உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு நீயும் நானும் சென்றிருந்தோம். அறுவடைக்காலம் என்பதால் உன் அப்பா நம்மோடு வரவில்லை. அப்போது வீட்டில் தனித்திருந்த பூரணி அவர் பார்வையில் பட்டுவிட, பழையபடி காமப்பேய் தலைவிரித்தாடத் துவங்கிவிட்டது.
தனிமையின் துணிவில் அவளை நெருங்க, அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடியிருக்கிறாள். அவரோ எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை.

பூரணி உத்தமி! தன்னையும், தன் குழந்தையையும் வாழ வைத்த எனக்கு துரோகம் செய்ய அவள் மனம் உடன்படவில்லை. தன் அழகிய உடல்தானே அவரை நிலைதடுமாறச் செய்கிறது என்று எண்ணியவள்.. யாருமே நினைத்துப் பார்க்க இயலாத அந்தக் கொடியச் செயலைச் செய்தாள்!

தன்னைத்தானே தீக்கிரையாக்கத் துணிந்தாள். பாதி வெந்த நிலையில்தான் அவளை மருத்துவமனை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்குள் எல்லாம் சிதைந்து விட்டது. நீ பார்த்தாயே, அந்த உருவம்தான் மிஞ்சியது! இதைப் பார்த்த உன் தந்தை பித்துப் பிடித்தவர் போலாகி தன் செயலை நினைத்து வருந்தி வருந்தியே தன் வாழ்வை இழந்தார்.

எனக்காக, என்னை வாழ்விப்பதற்காக அவள் செய்த தியாகம்... அப்பப்பா! இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது. உன் அப்பா அவளுக்கு செய்த பாவத்திற்குப் பரிகாரமாகத்தான் நான் அவளைப் பராமரித்து வந்ததாக அனைவரும் எண்ணினர். உன்னைத் தந்து என் வாழ்வை மலரச் செய்த தெய்வமல்லவா அவள்?!''

அம்மா எல்லாவற்றையும் இறக்கிவிட்டாள். இப்போது சரவணனின் மனதில்தான் பெரும் பாரம்!

‘நான் எத்தனை துர்பாக்கியசாலி! பெற்ற தாய் அருகிலிருந்தும் கடைசிவரை அடையாளங்கண்டுகொள்ள இயலாத பாவி!’

சரவணனின் ஆழ்மனது புலம்பியது. கண்கள் கலங்க, துக்கம் பீரிட, ''ஏன் அம்மா, இப்போது மட்டும் சொன்னீர்கள்? இத்தனை நாள் மறைத்ததுபோலவே இனியும் இருந்திருக்கலாமே! என் வேதனை உங்களுக்குப் புரியவில்லையா? '' என்று அரற்றினான்.

பரிமளமோ அமைதியாக, ''அவளுக்குக் கொடுத்த வாக்கை எண்ணியே இத்தனை நாள் மௌனமாக இருந்தேன். ஆனால் நீ அவளை உதாசீனப்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வடித்து மானசீகமாக அவளிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறேன். இப்போதும் உன்னிடம் உண்மையைச் சொல்லாவிடில், சாகும்போது கூட எனக்கு அமைதி கிட்டாது.'' என்றாள்.

சரவணன் அம்மாவைத் தீர்க்கமாகப் பார்த்தான். தன்னைப் பெற்றவள் என்ற ஒரே காரணத்துக்காக, அவள் முடமான பின்பும் அவளை மனுஷியாகவே நடத்தி, ஒரு குழந்தையைப் போலப் பராமரித்து, அவளுக்காகவே தன் உறவுகளை உதறி வாழ்ந்த உத்தமியான இவள் எங்கே?

விகார உருவத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி தன்னைப் பெற்றவளை அலட்சியப்படுத்தியதோடு, தன்னைப் பிள்ளைக்கும் மேலாக வளர்த்தவளின் மனதையும் வேதனைப்படுத்திய தான் எங்கே?

சரவணனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. உலகமே இருண்டுவிட்டதுபோல் தோன்றியது. இருளிலிருந்து ஒரு புள்ளியாய் வெளிப்பட்டது ஓர் உருவம்! அருகில் நெருங்க, நெருங்க தெளிவற்ற பிம்பமாய்.... பொசுங்கிய தலைமயிரும், பாதி கருகிய முகத்தில் விழிகள் மேலேறி, பற்கள் நீண்டு, வாய் கோணி.........அது.....அவள்.....அவன் பெரியம்மாவேதான்! இல்லையில்லை.....அம்மா! அம்மாவேதான்!

இப்போது அவனுக்கு அவளைப் பார்த்து பயமோ, அருவருப்போ ஏற்படவில்லை. மாறாக, பாலூட்டும் பசுவை நாடும் கன்று போல அவளை நாடி இருகரம் நீட்டி ஓடினான். வெற்றிடத்தை வேதனையோடு துலாவினான்.

"அம்மா...........!''

அடிவயிற்றிலிருந்து எழும்பிய கதறல் எங்கும் எதிரொலித்தது. ''அம்மா! என்னை மன்னித்துவிடு, அம்மா! உன்னை உதாசீனப்படுத்திய இந்தப் பாவியை ஏற்றுக்கொள்வாயா? எனக்கு இப்போது உன்னைப் பார்க்கவேண்டும். உன்னுடன் பேசவேண்டும். உனக்குப் பணிவிடை செய்யவேண்டும். அம்மா...! அம்மா....! '' என்று அழுது அரற்றிப் புலம்பும் மகனை வாரியெடுத்து கண்ணீர் மல்க மார்போடு அணைத்துக் கொண்டாள் பரிமளம்.

(நிலாச்சாரலில் வெளிவந்த என் கதை)

*****************************************************

(அன்பு நண்பர்களே! கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் இக்கதைக்கு என் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஏன் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், பார்ப்போம்.)

பாரதி
15-08-2010, 11:41 PM
:traurig001::icon_03::icon_b:

தமிழ் மன்றத்தில் இணைந்த பிறகு நீங்கள் எழுதிய கதை..?
நிலாச்சாரலில் பரிசு பெற்ற கதை...?
உண்மைச்சம்பவம்....? இப்படி வரிசையாக தோன்றுகிறது. என்ன காரணம் என்பதை நீங்களே விளக்குவதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

mojahun
15-08-2010, 11:54 PM
தியாகமா? பாசமா?

கீதம்
16-08-2010, 01:58 AM
பின்னூட்டங்களுக்கு நன்றி, நண்பர்களே. இன்னும் சில யூகங்களுக்குப் பிறகு சொல்வேன்.:icon_b:

அமரன்
16-08-2010, 07:15 AM
இது உங்கள் முதல் கதையாக இருக்கக் கூடும்.

உணர்ச்சிகள் தாமாறாய் ஓடுகின்றன, கதையில்.

எனக்குப் பரிமளத்தைப் பிடிக்கவில்லை.

பூரணி உயிரோடு இருக்கும் போது தான் அதிகம் அழுது, மற்றவர்களை கொஞ்சமாய்க் கலங்க வைத்து, இறந்த பிறகு தன் அழுகையை, சுமையை மகனிடம் மாற்றி விட்டு, குற்ற உணர்வில் தவிக்க விட்டு நிம்மதியைப்பறித்து விட்டாள். இருக்கும் போதாவது எல்லாரையும் சந்தோசமாக வைச்சிருக்க வேண்டாமோ.

பாராட்டுகள் கீதம்.

அன்புரசிகன்
16-08-2010, 11:04 AM
உணர்ச்சிப்பூக்களை தூவி சரமாக்கிய கதை. அமரன் சொன்னது போல் தன் பாரத்தை மற்றவரிடம் மாற்றிய பரிமளம் ஒரு தாயாக தோற்றுவிட்டாளோ என்று எண்ணத்தூண்டுகிறது.

அழகான கதை. வாழ்த்துக்கள் கீதம்.

Nivas.T
16-08-2010, 12:10 PM
மனதை கனக்கவைத்து
கண்ணீரை வரவழைக்கும்
பாசத்தின், தியாகத்தின்
சான்று அவள் - பெரியம்மா

நன்றி கலந்த வாழ்த்துக்கள் கீதம் அவர்களே

மதி
16-08-2010, 03:05 PM
உணர்ச்சிக்குவியல். ஒருவாறாக ஆரம்பத்திலிருந்தே கதையின் போக்கை யூகிக்க முடிவது சற்றே ஏமாற்றம் தான். இது நீங்கள் எழுதிய முதல் கதையா??

சுகந்தப்ரீதன்
16-08-2010, 04:43 PM
சினிமாத்தனமென்று நீங்களே சொல்லிட்டீங்க... ஆனால் சில சமயங்களில் நிஜ வாழ்க்கைங்கிறது நிழல் வாழ்க்கையைவிட விசித்திரமானதாக இருப்பதுண்டு..!!

கதைக்கு என் வாழ்த்துக்கள்...!!:)

கீதம்
16-08-2010, 10:46 PM
இக்கதை என் மகளை விடவும் மூத்தது. ஆம். நான் எழுதிய முதல் கதை இதுவே. ஆனந்தவிகடனுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. இதற்குப்பின் இன்னும் இரண்டு மூன்று கதைகள் நிராகரிக்கப்பட்டபின் கதை எழுதுவது எனக்கு சாத்தியப்படாத ஒன்று என்று முடிவுகட்டி ஒதுங்கிவிட்டேன். மேலும் மேலும் முயற்சிக்கத் தவறிவிட்டேன்.

உங்கள் அனைவரின் ஊக்கமும் விமர்சனங்களும் என் எழுத்தில் தேர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. இக்கதையைப் படித்தபிறகு அதை உங்களாலும் உணரமுடியும் என்று நம்புகிறேன். பின்னூட்டங்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி, நண்பர்களே.

கலையரசி
18-08-2010, 12:53 PM
இது நான் ஏற்கெனவே படித்தது தான். மீண்டும் ஒரு முறை படித்த போது தான் எழுத்து நடை இப்போது மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறது என்பது தெரிந்தது.
படித்தவர்கள் முதல் கதை எனச் சரியாக யூகித்தது வியப்பைத் தருகிறது.

கீதம்
22-08-2010, 01:42 AM
பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

சிவா.ஜி
23-08-2010, 08:35 AM
உணர்ச்சிபூர்வமான கதை. ஆனால்....மிகவும் வளர்த்தப்பட்ட...நீட்டப்பட்டக் கதையாய் தோன்றியது. பின் குறிப்பைப் பார்த்ததும் புரிந்தது. முதல் கதை என யூகித்தேன். முதல்கதையில் எழுத நினைப்பதை சுருக்கமாய் எழுதும் கலை தெரிந்திருக்காது. இதையே இப்போது எழுதினால்....வேறு மாதிரியாய் இருக்கும்.

அமரன் சொன்னதைப் போல....உணர்வுகள் பலவாறாய் அலைகிறது, ஆனாலும்...மனதை பாதிக்கவே செய்கிறது. பெரியம்மாவை...சரவணனின் தந்தையின் முதல் மனைவியாய் யூகித்தேன். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருந்தது.

என்னதான் வாக்கு கொடுத்திருந்தாலும், அம்மா எனச் சொல்லியிருந்தால்...மகனின் பாசமாவது அந்த பரிதாபத்துக்குரியவளுக்கு கிட்டியிருக்கும்.

வாழ்த்துக்கள் தங்கையே.

கீதம்
23-08-2010, 11:56 PM
உணர்ச்சிபூர்வமான கதை. ஆனால்....மிகவும் வளர்த்தப்பட்ட...நீட்டப்பட்டக் கதையாய் தோன்றியது. பின் குறிப்பைப் பார்த்ததும் புரிந்தது. முதல் கதை என யூகித்தேன். முதல்கதையில் எழுத நினைப்பதை சுருக்கமாய் எழுதும் கலை தெரிந்திருக்காது. இதையே இப்போது எழுதினால்....வேறு மாதிரியாய் இருக்கும்.

அமரன் சொன்னதைப் போல....உணர்வுகள் பலவாறாய் அலைகிறது, ஆனாலும்...மனதை பாதிக்கவே செய்கிறது. பெரியம்மாவை...சரவணனின் தந்தையின் முதல் மனைவியாய் யூகித்தேன். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருந்தது.

என்னதான் வாக்கு கொடுத்திருந்தாலும், அம்மா எனச் சொல்லியிருந்தால்...மகனின் பாசமாவது அந்த பரிதாபத்துக்குரியவளுக்கு கிட்டியிருக்கும்.

வாழ்த்துக்கள் தங்கையே.

விமர்சனப்பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அண்ணா.

நம்முடைய சின்னவயது புகைப்படங்களைப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு சந்தோஷக்குறுகுறுப்பு வருமே அப்படி இருக்கும் இந்தக் கதையைப் படிக்கும்போது. என் உணர்வினை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பியே இந்தக் கதையை இங்கு பதித்தேன். :)

ஆதவா
24-08-2010, 06:03 AM
சமீப கதைகளில் நீங்கள் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறீர்கள் எனும் அளவுகோலிட இக்கதை ஒரு அளவுகோல். முதல்முறையோ அல்லது எத்தனையாவது முறையோ, முறைகள் என்பது முக்கியமல்ல. வெளிவந்திருக்கும் பிரவாகம் எத்தனை ஆக்ரோஷமானது என்பதே மிகமுக்கியம். கதை இரண்டு பகுதிகளால் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதில் உண்மை தெரிந்தபிறகு எழும் உணர்ச்சிகள் மழுங்கப்பட்டிருக்கிறது. கதைக்கு முடிவு முக்கியமல்ல. கதையில் மாந்தர்களை உலவவிடுதலே முக்கியம். படித்த பிறகு பாதி வரைக்கும் எழுத்துக்களோடே வந்தேன். பிறகு இறங்கி வெளியே நின்று படித்தமாதிரி இருந்தது!!

என்றாலும் நீங்கள் அடைந்திருக்கும் தற்போதைய உயரம் எங்களால் எட்டாதபடி இருக்கிறது!!

மேலும்..

ஒரு சந்தோஷம்தான்..... முதல்கதை அல்லவா...!!

கீதம்
24-08-2010, 11:05 PM
சமீப கதைகளில் நீங்கள் எத்தனை தூரம் வளர்ந்திருக்கிறீர்கள் எனும் அளவுகோலிட இக்கதை ஒரு அளவுகோல். முதல்முறையோ அல்லது எத்தனையாவது முறையோ, முறைகள் என்பது முக்கியமல்ல. வெளிவந்திருக்கும் பிரவாகம் எத்தனை ஆக்ரோஷமானது என்பதே மிகமுக்கியம். கதை இரண்டு பகுதிகளால் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதில் உண்மை தெரிந்தபிறகு எழும் உணர்ச்சிகள் மழுங்கப்பட்டிருக்கிறது. கதைக்கு முடிவு முக்கியமல்ல. கதையில் மாந்தர்களை உலவவிடுதலே முக்கியம். படித்த பிறகு பாதி வரைக்கும் எழுத்துக்களோடே வந்தேன். பிறகு இறங்கி வெளியே நின்று படித்தமாதிரி இருந்தது!!

மேலும்..

ஒரு சந்தோஷம்தான்..... முதல்கதை அல்லவா...!!

பின்னூட்ட அலசலுக்கு மிகவும் நன்றி, ஆதவா.


என்றாலும் நீங்கள் அடைந்திருக்கும் தற்போதைய உயரம் எங்களால் எட்டாதபடி இருக்கிறது!!

இப்படியெல்லாம் சொன்னா நான் அதை உண்மைன்னு நம்பிடுவேன்னு நினைச்சீங்களா?:):)

பா.ராஜேஷ்
29-08-2010, 04:19 PM
முதல் கதையா... மிக நன்று...
நல்லவேளையாக நீங்கள் கதை எழுதும் முயற்சியை விட்டுவிட இல்லை... நல்லதோர் கதாசிரியரை நாங்கள் இழந்திருப்போம்... விடா முயற்சி வெற்றியின் அறிகுறி என்பதற்கு நீங்கள் ஓர் நல்லுதாரணம்...

கீதம்
06-09-2010, 12:29 AM
முதல் கதையா... மிக நன்று...
நல்லவேளையாக நீங்கள் கதை எழுதும் முயற்சியை விட்டுவிட இல்லை... நல்லதோர் கதாசிரியரை நாங்கள் இழந்திருப்போம்... விடா முயற்சி வெற்றியின் அறிகுறி என்பதற்கு நீங்கள் ஓர் நல்லுதாரணம்...

வெற்றி பெற நான் இன்னும் பல மைல்கள் பயணிக்கவேண்டும். உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவே என் விடாமுயற்சிக்குக் காரணம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, ராஜேஷ்.