PDA

View Full Version : ஒருமுறையேனும்....கீதம்
13-08-2010, 11:21 AM
பிரச்சனை ஏதுமில்லை உன்னோடு எனக்கு,
உன் படைப்புகளோடுதான் பிணக்கு!
என் கவிதைகள் யாவும்
உன் கவி விதைகளே என்று
கவிஞர்கள் சொல்வதை
ஏற்கமுடியவில்லை என்னால்!

கவியரங்குகளில் கொண்டாடப்படும்
உன் கவிதைகள் மீது
கனத்த காழ்ப்புணர்வு எனக்கு.
வெறுத்துப் புறந்தள்ளி
வசைபாடித் தவிர்க்கிறேன்.

அவற்றின் சாயலோ, பாணியோ
அவற்றில் புதைந்திருக்கும்
கருவோ, வேறெதுவோ
என் கவிதைகளை நெருங்கிவிடக்கூடாதென்று
எந்நேரமும் காவலிருக்கிறேன்.

உன் உவமைகளும் உருவகங்களும்
இன்ன பிற விஷயங்களும்
பின்புறவாயில் வழியாய்க்கூட
உட்புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன்
ஒன்றைப் படைக்கிறேன்.

உன்னிலும் வேறுபட்ட ஒன்றை
என் தனித்துவம் மாறாமல்
பிரமாதமாய்ப் படைத்துவிட்டதாய்
பறைசாற்றவும் செய்கிறேன்.

அட, இதுவும் உன்னுடையதை
ஒத்திருக்கிறதாமே!
உதடு பிதுக்கிச் சொல்கின்றனர்.
சே!
உன் கவிதைகளை ஒருமுறையேனும்
வாசித்திருக்கவேண்டுமோ?

தீபா
13-08-2010, 11:41 AM
புன்னகையே வருகிறது.
கவிதை நன்று.
சொல்லவந்ததுவும் நன்றே!

வாழ்த்துக்கள் கீதம் அவர்கலே

பூமகள்
13-08-2010, 11:44 AM
ஒத்த சிந்தனையாய்
வந்த பிணக்கிது..

உதடு பிதுக்கிச் சொல்வோரிடம்
உரத்த குரலில் இனி
சொல்லுங்கள்..

ஒத்த சிந்தனை
மேன் மக்களிடம்
மட்டுமே காணக் கிடைக்கும்..
அதில் எனக்கு
வருத்தமில்லை
பெருமையே என்று....!! :)

மற்றொரு கோணத்தில் யோசித்தால்..

ஒன்றைப் படித்து உணராமல் எப்படி அது என் படைப்பு போல் அல்ல என்று சொல்ல முடியும்?? :icon_ush:

--

கீதத்தின் தமிழ்ப் புலமை கண்டு வியக்கிறேன். கதை, கவிதை என அனைத்திலும் உங்களின் தமிழ் புலமை, தமிழ் வளம் மிக்கவே தெரிகிறது.

விழி விரிய பார்த்த வண்ணமே நான்..

ஆஸ்ரேலியா நாட்டிலிருந்து கொண்டு தமிழை சாறு பிழிந்து தேனமுது படைக்கும் உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாகவும் சில நேரம்..

கவி வரிகள் அற்புதம்.. குறிப்பாக,

உன் உவமைகளும் உருவகங்களும்
இன்ன பிற விஷயங்களும்
பின்புறவாயில் வழியாய்க்கூட
உட்புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன்
ஒன்றைப் படைக்கிறேன்.வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கீதம்.

கலையரசி
13-08-2010, 01:05 PM
"உன் உவமைகளும் உருவகங்களும்
இன்ன பிற விஷயங்களும்
பின்புறவாயில் வழியாய்க்கூட
உட்புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன்
ஒன்றைப் படைக்கிறேன்."

"உன் கவிதைகளை ஒருமுறையேனும்
வாசித்திருக்கவேண்டுமோ?"
கவிதை நன்று கீதம். பாராட்டுக்கள்.
ஆனால் எனக்கொரு சந்தேகம். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளில் முரண் தெரிகிறதே!
அக்கவிதைகளை ஏற்கெனவே படித்திருப்பதால் தான் அக்கவிஞர் பயன்படுத்தியுள்ள உவமை, உருவகம் முதலியவற்றைத் தவிர்த்துக் கவிதை படைக்கிறார் இரண்டாமவர்.
ஆனால் கடைசி வரிகளில் ஒரு முறையேனும் வாசித்திருக்க வேண்டுமோ என்கிறார். ஏன் இந்த முரண்?

Ravee
13-08-2010, 01:09 PM
கீதத்தின் தமிழ்ப் புலமை கண்டு வியக்கிறேன். கதை, கவிதை என அனைத்திலும் உங்களின் தமிழ் புலமை, தமிழ் வளம் மிக்கவே தெரிகிறது.

விழி விரிய பார்த்த வண்ணமே நான்..

ஆஸ்ரேலியா நாட்டிலிருந்து கொண்டு தமிழை சாறு பிழிந்து தேனமுது படைக்கும் உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாகவும் சில நேரம்..

கவி வரிகள் அற்புதம்..

பூமகள் , இதே கருத்தை சிறிது நாட்களுக்கு முன் நானும் சொன்னேன் ... ம்ம்ம்...... கற்றார்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ... சும்மாவா சொன்னார்கள் :)

தீபா
13-08-2010, 01:20 PM
ஒன்றைப் படித்து உணராமல் எப்படி அது என் படைப்பு போல் அல்ல என்று சொல்ல முடியும்?? :icon_ush:

.

அக்கா,,
படித்தது கவிதைசொல்லியல்ல, மற்ற கவிஞர்கள்!!

இதுவும் உன்னுடையதை
ஒத்திருக்கிறதாமே!
உதடு பிதுக்கிச் சொல்கின்றனர்.

nambi
13-08-2010, 02:40 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

அமரன்
13-08-2010, 06:19 PM
இந்தக் கவிதைக்கு நேர் மூத்த கவிதையில் (அம்மா என்றொரு மனுசி) காணாமல் போன கீதத்தை இப்போது கண்டேன்.

கலைக்காவிற்கு ஏற்பட்ட நெருடல் எனக்கும்.

அந்தப் பந்திக்கு முன் பந்தி கடைசி அடிக்கான பலமான அடித்தளம்.

உன் சாயலைத் தவிர்ப்பதற்கா உன் ஆக்கங்களையே தவிர்க்கிறேன் என்று சொல்லிக், கடைசியில் படித்தே ஆக வேண்டும் என்று முடித்திருப்பது சிறப்பு ஓட்டம்.

அப்பாவைப் போல..
அம்மாவைப் போல..
தாத்தாவைப் போல..
பாட்டியைப் போல..

இந்த விமர்சனத்தை சந்திக்காத எந்தக் குழந்தையும் இல்லை.

சந்ததி தாண்டி எவரையும் ஒப்பிடுவதில்லை குழந்தையுடன்.

கவிஞர்கள் சந்ததி விதி விலக்கா என்ன.

அதிலும் நிஜத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கவிப் பரம்பரை இயல்பில் பெரிய மாற்றம் இருக்குமா என்ன.

பாராட்டுகள்.

பல தட்டுகளுக்குக் கவிதையைக் கொண்டு போகலாம்.

சுகந்தப்ரீதன்
13-08-2010, 06:26 PM
"காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு"

ஒப்பீட்டால் உண்டாகும் உளப்பிரச்சனையை உரைத்தவிதம் நன்று..!!

வாழ்த்துக்கள்..!!:)

கீதம்
15-08-2010, 12:52 AM
புன்னகையே வருகிறது.
கவிதை நன்று.
சொல்லவந்ததுவும் நன்றே!

வாழ்த்துக்கள் கீதம் அவர்கலே

ரசித்தமைக்கு மிகவும் நன்றி, தீபா அவர்களே.

கீதம்
15-08-2010, 12:57 AM
--

கீதத்தின் தமிழ்ப் புலமை கண்டு வியக்கிறேன். கதை, கவிதை என அனைத்திலும் உங்களின் தமிழ் புலமை, தமிழ் வளம் மிக்கவே தெரிகிறது.

விழி விரிய பார்த்த வண்ணமே நான்..

ஆஸ்ரேலியா நாட்டிலிருந்து கொண்டு தமிழை சாறு பிழிந்து தேனமுது படைக்கும் உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாகவும் சில நேரம்..

கவி வரிகள் அற்புதம்.. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கீதம்.

விமர்சனத்துக்கும் விவாதம் கற்றுத்தந்ததற்கும் நன்றி, பூமகள். என்னைப்பார்த்து பொறாமையா? புல்லரித்துப்போகிறேன். பொறாமைப்படுங்கள். அப்படியாவது பூமகள் படைப்புகள் மன்றத்தில் பெருகிவழியட்டும். உங்கள் மனந்திறந்த பாராட்டு உண்மையில் எனக்கு ஊட்டமாகவும் ஊக்கமாகவும் அமைகிறது. மிகவும் நன்றி, பூமகள்.

கீதம்
15-08-2010, 01:06 AM
"உன் உவமைகளும் உருவகங்களும்
இன்ன பிற விஷயங்களும்
பின்புறவாயில் வழியாய்க்கூட
உட்புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன்
ஒன்றைப் படைக்கிறேன்."

"உன் கவிதைகளை ஒருமுறையேனும்
வாசித்திருக்கவேண்டுமோ?"
கவிதை நன்று கீதம். பாராட்டுக்கள்.
ஆனால் எனக்கொரு சந்தேகம். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளில் முரண் தெரிகிறதே!
அக்கவிதைகளை ஏற்கெனவே படித்திருப்பதால் தான் அக்கவிஞர் பயன்படுத்தியுள்ள உவமை, உருவகம் முதலியவற்றைத் தவிர்த்துக் கவிதை படைக்கிறார் இரண்டாமவர்.
ஆனால் கடைசி வரிகளில் ஒரு முறையேனும் வாசித்திருக்க வேண்டுமோ என்கிறார். ஏன் இந்த முரண்?

அக்கா, சிலநேரம் நாம் எப்போதோ படித்த, கேள்விப்பட்ட விஷயங்களை நம்மை அறியாமலேயே அடிமனதில் இருத்தி வைத்திருப்போம். கால ஓட்டத்தில் சிலவற்றை நம் சொந்த சிந்தனைகளாகவே எண்ணும் பக்குவம் பெற்றிருப்போம். அப்படிக்கூட எப்போதோ படித்தவை என் எழுத்தில் புகுந்துவிடக்கூடாது என்று பயந்து கவிஞர் சொல்லியுள்ளதாய் எழுதியிருக்கிறேன்.

முதலில் எதைத் தவிர்ப்பதற்காக வாசிப்பதைத் தவிர்க்கிறாரோ, பிறகு அதைத் தவிர்ப்பதற்காகவே வாசித்திருக்கவேண்டுமென எண்ணுகிறார். இந்த முரணான மனநிலையைதான் குறிப்பிட்டுள்ளேன். முரண் இருக்கத்தானே செய்யும்?

விமர்சனப்பாராட்டுக்கு நன்றி, அக்கா.

கீதம்
15-08-2010, 01:14 AM
கீதத்தின் தமிழ்ப் புலமை கண்டு வியக்கிறேன். கதை, கவிதை என அனைத்திலும் உங்களின் தமிழ் புலமை, தமிழ் வளம் மிக்கவே தெரிகிறது.

விழி விரிய பார்த்த வண்ணமே நான்..

ஆஸ்ரேலியா நாட்டிலிருந்து கொண்டு தமிழை சாறு பிழிந்து தேனமுது படைக்கும் உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாகவும் சில நேரம்..

கவி வரிகள் அற்புதம்..

பூமகள் , இதே கருத்தை சிறிது நாட்களுக்கு முன் நானும் சொன்னேன் ... ம்ம்ம்...... கற்றார்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ... சும்மாவா சொன்னார்கள் :)

ரவி, உங்கள் கைவசம் ஏகப்பட்ட உற்சாக டானிக் பாட்டில்கள் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். அனைவருக்கும் அனுப்பியபடியே இருக்கிறீர்களே!

உங்களைப்போன்ற வாசகர்கள் இருப்பதே என் எழுத்தின் பலம். என்னாலும் எழுதமுடியுமென்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது என் தனிமை. என்னால் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது தமிழ்மன்றம்.

என் இலக்கற்ற வாழ்வில் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தைப் பெற உதவிய தமிழ்மன்றத்துக்கும், மன்ற உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்கவார்த்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி, ரவி.

கீதம்
15-08-2010, 01:17 AM
அக்கா,,
படித்தது கவிதைசொல்லியல்ல, மற்ற கவிஞர்கள்!!

விளக்கத்துக்கு நன்றி, தீபா அவர்களே.

கீதம்
15-08-2010, 01:18 AM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

மிகவும் நன்றி, நம்பி அவர்களே.

கீதம்
15-08-2010, 01:22 AM
இந்தக் கவிதைக்கு நேர் மூத்த கவிதையில் (அம்மா என்றொரு மனுசி) காணாமல் போன கீதத்தை இப்போது கண்டேன்.

கலைக்காவிற்கு ஏற்பட்ட நெருடல் எனக்கும்.

அந்தப் பந்திக்கு முன் பந்தி கடைசி அடிக்கான பலமான அடித்தளம்.

உன் சாயலைத் தவிர்ப்பதற்கா உன் ஆக்கங்களையே தவிர்க்கிறேன் என்று சொல்லிக், கடைசியில் படித்தே ஆக வேண்டும் என்று முடித்திருப்பது சிறப்பு ஓட்டம்.

அப்பாவைப் போல..
அம்மாவைப் போல..
தாத்தாவைப் போல..
பாட்டியைப் போல..

இந்த விமர்சனத்தை சந்திக்காத எந்தக் குழந்தையும் இல்லை.

சந்ததி தாண்டி எவரையும் ஒப்பிடுவதில்லை குழந்தையுடன்.

கவிஞர்கள் சந்ததி விதி விலக்கா என்ன.

அதிலும் நிஜத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கவிப் பரம்பரை இயல்பில் பெரிய மாற்றம் இருக்குமா என்ன.

பாராட்டுகள்.

பல தட்டுகளுக்குக் கவிதையைக் கொண்டு போகலாம்.

கலை அக்காவுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறேன். நெருடல் தீர்ந்ததா? ஆழ்ந்த விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி, அமரன்.

கீதம்
15-08-2010, 01:24 AM
"காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு"

ஒப்பீட்டால் உண்டாகும் உளப்பிரச்சனையை உரைத்தவிதம் நன்று..!!

வாழ்த்துக்கள்..!!:)

ஒற்றைவரியில் கவிதையின் உட்கருவை உரைத்தவிதம் அருமை. மிகவும் நன்றி, சுகந்தவாசன்.

தாமரை
15-08-2010, 02:25 AM
நம்ம மன்றத்தில் இதற்கு உல்டாவா இரண்டு பேர் இருந்தாங்க..

அவரைப் போல எழுதணும் இவரைப் போல எழுதணும்..

இப்படிக் கவிதைகளை எழுதிகிட்டு இருந்தாங்க..

ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஞானோதயம் வந்தது...

எதற்கு 'போல" "போல" எழுதணும். நான் யார்.. என்னுடைய அடையாளம் என்ன?

அவர் மாறினார் கவிதை மழை பொழிந்து நவரசக் கவிஞர் அப்படின்னு பட்டமும் வாங்கினார்.

எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்.. யோசிச்சுப் பார்க்கிறேன்..

இரண்டு கண்தான், இரண்டு காதுகள்தான், ஒரே வாய்தான்.. ஒரே மூக்குன்னாலும் இரண்டு துவாரங்கள்... தலை ஒண்ணுதான் கை கால் எல்லாம் அப்படியேதான்..

ஆனால் எல்லாத்திலும் வித்தியாசமும் இருக்கு.

ஒற்றுமையைத் தேடினாலும் ஆயிரக்கணக்கில் பட்டியலிடலாம்
வித்தியாசங்களைத் தேடினாலும் ஆயிரக்கணக்கில் பட்டியலிடலாம்..

இறைவன் தன் சாயல் உள்ளவனாக மனிதனைப் படைத்தான் என்கிறது விவிலியம்..

பாதிப்பு.. பாதி உப்புதான்.. மீதி ஸ்வீட்..

பிடித்ததை வெறுப்பது உலகில் மிகக்கடினமான காரியம்..

அதைத்தான் உங்க கவிதையில் வார்த்தைகளை அடுக்கி வண்ணமாய் காட்டி இருக்கீங்க..

அழகான உணர்வைச் சொல்லுது கவிதை..

வாழ்த்துக்கள் கீதம்!!!

சிவா.ஜி
15-08-2010, 06:50 AM
வாழ்த்துக்கள்ம்மா....அருமையா எழுதியிருக்கீங்க. ஒப்பீடு....நாம எழுதினால்....நாமே செஞ்சுக்கறது.....வாசிப்பவர்கள் செய்யறதுன்னு....எப்பவுமே இருக்கத்தான் செய்யுது....கதை எழுதினா ராஜேஷ்குமார் மாதிரி இருக்கு, சுஜாதா மாதிரி இருக்குன்னு சொல்லும்போது.......ஒரு பக்கம் சந்தோஷம்ன்னாலு...இன்னொரு பக்கம்....அப்ப நம்ம பாணி என்ன அப்படீங்கற எண்ணம் தோணுது....தவிர்க்க முடியறதில்ல..

மனசுல நினைக்குறதை....எண்ணங்களை......வார்த்தையாக்குறதும்....அதை மத்தவங்க புரிஞ்சிக்கற மாதிரி எழுதறதும் சுலபமில்ல....ஆனா...உங்களுக்கு அது...நல்லாவே கை வருது..என்னோட தங்கைங்கறதுல எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்மா. எழுதுங்க.....படிச்சு....பெருமிதப்படறேன்.

Nivas.T
15-08-2010, 07:31 AM
மிக சிறந்த படைப்புகளின் பாதிப்பு
இயல்பு

அப்படி அவை பதிப்பை தராவிட்டால்
அது ஒரு நல்ல படைப்பு ஆகாது

நம் பயன்பாட்டு மொழி, சிந்தனை, கலை
இவை அனைத்தும் சிலருடைய படைப்புகள்தான்

காலத்திற்கு தக்கவாறு வடிவமும், தரமும் மாறுபடும்

நல்ல ஒரு கவிதை
நல்ல ஒரு கண்ணோட்டம்

நன்றி கீதம் அவர்களே

சுடர்விழி
15-08-2010, 08:11 AM
ஒவ்வொரு வரியும் அருமை...மனதில் நினைப்பதை( மற்றவர்களுக்கும் புரியும் படியாக ),அப்படியே எழுத்தில் வடிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது. வார்த்தை முத்துக்களைத் தேடி எடுத்து கோர்த்த அழகான கவிமாலை..மனமார்ந்த பாராட்டுக்கள் தோழி !!

கலையரசி
15-08-2010, 10:04 AM
அக்கா, சிலநேரம் நாம் எப்போதோ படித்த, கேள்விப்பட்ட விஷயங்களை நம்மை அறியாமலேயே அடிமனதில் இருத்தி வைத்திருப்போம். கால ஓட்டத்தில் சிலவற்றை நம் சொந்த சிந்தனைகளாகவே எண்ணும் பக்குவம் பெற்றிருப்போம். அப்படிக்கூட எப்போதோ படித்தவை என் எழுத்தில் புகுந்துவிடக்கூடாது என்று பயந்து கவிஞர் சொல்லியுள்ளதாய் எழுதியிருக்கிறேன்.

முதலில் எதைத் தவிர்ப்பதற்காக வாசிப்பதைத் தவிர்க்கிறாரோ, பிறகு அதைத் தவிர்ப்பதற்காகவே வாசித்திருக்கவேண்டுமென எண்ணுகிறார். இந்த முரணான மனநிலையைதான் குறிப்பிட்டுள்ளேன். முரண் இருக்கத்தானே செய்யும்?

விமர்சனப்பாராட்டுக்கு நன்றி, அக்கா.
உன் விளக்கத்தைப் படித்த பிறகு விளங்கிவிட்டது. நான் தான் தப்பாகப் புரிந்து கொண்டுள்ளேன். நன்றி கீதம்.

கீதம்
16-08-2010, 02:13 AM
பிடித்ததை வெறுப்பது உலகில் மிகக்கடினமான காரியம்..

அதைத்தான் உங்க கவிதையில் வார்த்தைகளை அடுக்கி வண்ணமாய் காட்டி இருக்கீங்க..

அழகான உணர்வைச் சொல்லுது கவிதை..

வாழ்த்துக்கள் கீதம்!!!

விரிவான விமர்சனப்பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு அகமார்ந்த நன்றி, தாமரை அவர்களே.

கீதம்
16-08-2010, 02:14 AM
வாழ்த்துக்கள்ம்மா....அருமையா எழுதியிருக்கீங்க. ஒப்பீடு....நாம எழுதினால்....நாமே செஞ்சுக்கறது.....வாசிப்பவர்கள் செய்யறதுன்னு....எப்பவுமே இருக்கத்தான் செய்யுது....கதை எழுதினா ராஜேஷ்குமார் மாதிரி இருக்கு, சுஜாதா மாதிரி இருக்குன்னு சொல்லும்போது.......ஒரு பக்கம் சந்தோஷம்ன்னாலு...இன்னொரு பக்கம்....அப்ப நம்ம பாணி என்ன அப்படீங்கற எண்ணம் தோணுது....தவிர்க்க முடியறதில்ல..

மனசுல நினைக்குறதை....எண்ணங்களை......வார்த்தையாக்குறதும்....அதை மத்தவங்க புரிஞ்சிக்கற மாதிரி எழுதறதும் சுலபமில்ல....ஆனா...உங்களுக்கு அது...நல்லாவே கை வருது..என்னோட தங்கைங்கறதுல எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்மா. எழுதுங்க.....படிச்சு....பெருமிதப்படறேன்.

அழகிய கருத்துரைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி, அண்ணா.

கீதம்
16-08-2010, 02:16 AM
மிக சிறந்த படைப்புகளின் பாதிப்பு
இயல்பு

அப்படி அவை பதிப்பை தராவிட்டால்
அது ஒரு நல்ல படைப்பு ஆகாது

நம் பயன்பாட்டு மொழி, சிந்தனை, கலை
இவை அனைத்தும் சிலருடைய படைப்புகள்தான்

காலத்திற்கு தக்கவாறு வடிவமும், தரமும் மாறுபடும்

நல்ல ஒரு கவிதை
நல்ல ஒரு கண்ணோட்டம்

நன்றி கீதம் அவர்களே

நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனதின் மூலையில் ஓர் சஞ்சலம். அவ்வளவே. மிகவும் நன்றி, நிவாஸ்.

கீதம்
16-08-2010, 02:18 AM
ஒவ்வொரு வரியும் அருமை...மனதில் நினைப்பதை( மற்றவர்களுக்கும் புரியும் படியாக ),அப்படியே எழுத்தில் வடிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது. வார்த்தை முத்துக்களைத் தேடி எடுத்து கோர்த்த அழகான கவிமாலை..மனமார்ந்த பாராட்டுக்கள் தோழி !!

சிறந்த கவிஞரிடமிருந்து சிறப்புப்பாராட்டு.:icon_b:
மிகவும் நன்றி, சுடர்விழி.