PDA

View Full Version : ஆண் மனம்!!!



தாமரை
13-08-2010, 04:07 AM
மேலோட்டமாய் பார்த்தால்
வறண்டு காய்ந்திறுகி
கிடப்பதாய் தோன்றும்

தேங்கிக் கிடக்கும்
ஆசை நீர்கள்
குடிக்க ஒண்ணாத
உப்பு நீர் என
ஏளனம் செய்யப்படும்

அந்தப் பககமும்
இந்தப் பக்கமும்
பருவத்திற்கேற்ப
அலைபாயும்
சந்தர்ப்பவாதக் காற்றென்று தூற்றப்படும்

அவ்வப்போது பெய்யும்
காதல் மழையில்தான்
பூக்களும் பயிர்களும்
உண்டாகின்றனவென்று
குறைத்துச் சொல்லப்படும்

ஏதோ சூரியன்
கொடுக்கும் ஒளி

ஏதோ சந்திரன்
கொடுக்கும் குளுமை

இந்தப்பாழும் பூமி
வாழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படித்தான்
பல கதைகள்

இரும்புக் கருவும்
கொந்தளிக்கும்
நெருப்புக்குழம்பும்

புரிந்து கொள்ளப்படாமலேயே
அமுங்கிக் கிடக்கின்றன..

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே
அத்தனை மாற்றங்களுக்கும் அடிப்படையாக
அத்தனைக்கும் ஆதாரமாய்
ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கிறது

அந்தச் சுழற்சியின்
பயனாய் உண்டாகும் ஈர்ப்புதான்
அத்தனைக்கும் அடிப்படை என்பது
எங்கோ மறைந்து கிடக்கிறது

பொத்தலிடப்படும் போதெல்லாம்
நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு

வேதனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம்
கொடியவன் என
முத்திரை குத்தப்பட்டு
பழிக்கப்படுகிறது

இன்னொரு பூமி
இல்லையெனத் தெரியும்வரை
இந்தப் பூமி
ஏளனம் செய்யப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கும்!!!

வியாசன்
13-08-2010, 05:05 AM
தாமரை மற்றவர்களின் வேதனையில்தான் பலர் வாழ்கின்றனர். கவிதை வடிவில் அதை சிறப்பாக வெிளிப்படுத்தியிருக்கின்றீர்கள் பாராட்டுக்கள்.

ஆதவா
13-08-2010, 05:10 AM
இந்த கவிதையில் தலைப்பிலேயே காட்டிக் கொடுத்துவிட்டீர்களே!!!

அந்தச் சுழற்சியின்
பயனாய் உண்டாகும் ஈர்ப்புதான்
அத்தனைக்கும் அடிப்படை என்பது
எங்கோ மறைந்து கிடக்கிறது

இதைப் படிக்கும்பொழுது வாழ்வு என்பது எங்கிருந்து வந்தது என்பது புலனாகிறது. படிமங்கள் நன்கு உணரப்படுகிறது. புவிசுழற்சி மற்றும் வாழ்வு சுழற்சி இரண்டுக்குமான இணைப்பு கிடைக்கிறது.

திரும்பவும் வாசிக்கத் தூண்டும் கவிதைதான் இது.

ஆதவா
13-08-2010, 05:40 AM
நவீன கவிதைகள்:


மேலோட்டமாய் பார்த்தால்
வறண்டு காய்ந்திருகி
கிடப்பதாய் தோன்றும்


மேலோட்டமாகப் பார்த்தால் கவிதைகள் (புரியாத) வறட்சியில் சுற்றுவதாகத் தெரியும்



தேங்கிக் கிடக்கும்
ஆசை நீர்கள்
குடிக்க ஒண்ணாத
உப்பு நீர் என
ஏளனம் செய்யப்படும்

அதன் புரியாமை உப்புநீராக எண்ணப்பட்டு, வெகுஜன வாசகர்களால் ஒதுக்கப்படும்


அந்தப் பககமும்
இந்தப் பக்கமும்
பருவத்திற்கேற்ப
அலைபாயும்
சந்தர்ப்பவாதக் காற்றென்று தூற்றப்படும்

நவீன அல்லது பின் நவீன அல்லது அதற்கு அடுத்த நிலைக்கு முன்னும் பின்னுமோ கவிதை, தன்னை நகர்த்திக் கொண்டு இருப்பதை அல்லது அந்த வட்டத்திற்குள்ளேயே இருப்பதை (அது எல்லையற்றது என அறியாமல்) வாசகன் ஒத்துக் கொள்ள மறுக்கிறான்.


அவ்வப்போது பெய்யும்
காதல் மழையில்தான்
பூக்களும் பயிர்களும்
உண்டாகின்றனவென்று
குறைத்துச் சொல்லப்படும்

அவ்வப்போது சில காதல் கவிதைகளால் அவை நன்றாக இருக்கின்றன என்று சொல்கிறான்.


ஏதோ சூரியன்
கொடுக்கும் ஒளி
ஏதோ சந்திரன்
கொடுக்கும் குளுமை
இந்தப்பாழும் பூமி
வாழ்ந்து கொண்டிருக்கிறது..

ஒளியென்பது, எல்லையற்று நீளும் ஒரு.... பிம்பமாக வைத்துக் கொள்ளலாம்.. அப்படி எல்லையற்ற படிமங்களையும், சந்திரன் போன்ற குளுமையான குறியீடுகளியும் கொண்டுதான் நவீன பின் நவீன கவிதைகள் வாழ்கின்றன.


இப்படித்தான்
பல கதைகள்

இரும்புக் கருவும்
கொந்தளிக்கும்
நெருப்புக்குழம்பும்

புரிந்து கொள்ளப்படாமலேயே
அமுங்கிக் கிடக்கின்றன..

அவைகளுல் மறைந்திருக்கும் மறைபொருள் புரிந்து கொள்ளப்படாமலேயே அமுக்கி வைக்கப்படுகின்றன.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே
அத்தனை மாற்றங்களுக்கும் அடிப்படையாக
அத்தனைக்கும் ஆதாரமாய்
ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கிறது

இருப்பினும் அக்கவிதைகள் எதிர்பார்புகளற்ற பயணத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது.


அந்தச் சுழற்சியின்
பயனாய் உண்டாகும் ஈர்ப்புதான்
அத்தனைக்கும் அடிப்படை என்பது
எங்கோ மறைந்து கிடக்கிறது

எதிர்பார்புகளற்ற அந்த பயணத்தில்தான் இலக்கியத்தின் அடிநாதமே மறைந்து கிடக்கிறது


பொத்தலிடப்படும் போதெல்லாம்
நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு

விமர்சனம் என்ற பெயரால் நசுக்கப்படும்பொழுதெல்லாம் அது பலவாறான படிம பொருள்களில் தன்னை நிறுத்திக் கொண்டு... வாழ்ந்து....


வேதனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம்
கொடியவன் என
முத்திரை குத்தப்பட்டு
பழிக்கப்படுகிறது

வாசக நிலையை குத்திக் காட்டும் பொழுதெல்லாம், “புரியாத கவிதை எழுதுபவன் கவிஞனேயல்ல” என்று முத்திரை குத்தப்பட்டு


இன்னொரு பூமி
இல்லையெனத் தெரியும்வரை
இந்தப் பூமி
ஏளனம் செய்யப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கும்!!!

வாசகனுக்கு அடுத்த நிலை அதாவது புரிந்து ஏற்கும் நிலை தெரியும்வரை ஏளனப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்.... நவீன கவிதைகள்!!

தாமரை
13-08-2010, 05:50 AM
தலைப்பு என்னும் திசைக்காட்டிப் பலகை மட்டுமே பொருளை ஆராய திசைகாட்டும்.

அந்தப் பலகையை ஒளித்து வைத்து விட்டால்

என்னைப் புரிஞ்சுக்கலையே என்கிற பதம் எங்கெல்லாம் பொருந்துமோ அங்கெல்லாம் இது பொருந்தும் ஆதவா!!!

ஆதவா
13-08-2010, 06:21 AM
தலைப்பு என்னும் திசைக்காட்டிப் பலகை மட்டுமே பொருளை ஆராய திசைகாட்டும்.

அந்தப் பலகையை ஒளித்து வைத்து விட்டால்

என்னைப் புரிஞ்சுக்கலையே என்கிற பதம் எங்கெல்லாம் பொருந்துமோ அங்கெல்லாம் இது பொருந்தும் ஆதவா!!!

உண்மைதான்...
புரிந்து கொள்ளப்படாத எத்தனையோ இருக்கிறதல்லவா????
புரியவேண்டியவர்களுக்கும் புரியவேண்டும் அல்லவா.....

தாமரை
13-08-2010, 06:33 AM
உண்மைதான்...
புரிந்து கொள்ளப்படாத எத்தனையோ இருக்கிறதல்லவா????
புரியவேண்டியவர்களுக்கும் புரியவேண்டும் அல்லவா.....

இக்கவிதை கண்டு
கை பரபரக்கும்
நெஞ்சு படபடக்கும்

விரையும் எண்ணங்களின் வேகம்
சிலீர் என்ற உணர்வைத் தரும்

இத்தனையும்
உன்னுள் எழுந்தால்

யாரையோ நீ
புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டாய்
இன்னும்
புரிந்து கொள்ள மறுக்கிறாய்.

இனியும் புரிந்து கொள்ள்
விரும்பவில்லை.
:D:D:D:D

சுளீரென ஒரு
வலி உணர்ந்தால்
புரிந்த கொள்ள
ஆரம்பித்து விட்டாய்
என்று பொருள்

ஏனென்றால்
எல்லோராலும்
ஏதாவது ஒன்று

உதாசீனப் படுத்தப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கிறது!!

சுகந்தப்ரீதன்
13-08-2010, 07:58 AM
பின்னூட்டம் படிப்பதற்க்கு முன்பே இந்த கவிதையை நான் புரிஞ்சுக்கிட்டேன்...!!
என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறது என்னோடவே இருக்கட்டும்...!!:icon_ush:

கடைசிப்பத்தி ரொம்ப டச்சிங்ண்ணா...:D

தாமரை
13-08-2010, 02:14 PM
பின்னூட்டம் படிப்பதற்க்கு முன்பே இந்த கவிதையை நான் புரிஞ்சுக்கிட்டேன்...!!
என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறது என்னோடவே இருக்கட்டும்...!!:icon_ush:

கடைசிப்பத்தி ரொம்ப டச்சிங்ண்ணா...:D

ஏதோ புரிஞ்சுண்டு வாழ்ந்தா சரி...

அமரன்
13-08-2010, 08:28 PM
அண்ணா..

உங்கள் கவிதைகளைக் காட்டிலும் அவற்றின் பிறப்பின் தேவை, நோக்கம் அறிவதில் எனக்கு அதிக ஈடுபாடு.

இந்தக்கவிதை ஏன்.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பொருந்துகிறது என்றாலும் நீங்கள் சொல்லித் தெரிந்து கொண்டால் சிறப்பு.

செல்வா
13-08-2010, 10:44 PM
இந்தக்கவிதை ஏன்.


எனக்குத் தெரியுமே...! ;):icon_ush:

பொருட்குற்றம் இருக்குணு சொல்லப்போய் தலைசுத்தினது எனக்குத் தானேத் தெரியும் :eek:

தாமரை
14-08-2010, 01:40 AM
அண்ணா..

உங்கள் கவிதைகளைக் காட்டிலும் அவற்றின் பிறப்பின் தேவை, நோக்கம் அறிவதில் எனக்கு அதிக ஈடுபாடு.

இந்தக்கவிதை ஏன்.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பொருந்துகிறது என்றாலும் நீங்கள் சொல்லித் தெரிந்து கொண்டால் சிறப்பு.

சில விஷயங்களை அவ்வளவுதான் பொதுவில் சொல்ல முடியும் அமரா!!!

ஆணுக்கும் மனம் இருக்கு!
அதற்குள் எவ்வளவு இருக்கு!
அது எப்படியெல்லாம் கிடக்கு!

என்ற சொல்ல முயற்சி செய்திருக்கேன். மூன்றில் இரண்டு ஆசைகளால் நிரம்பி இருந்தாலும் சிறு நுண்ணுனர்வுகளுக்காக அவை அலைபாயும் க்டலாக அடுத்தவர் கால்வருடுவது மட்டுமே சுகம் என்ற சிலரின் ஆதிக்க மனப்பான்மைகளுக்குச் சின்ன விளக்கம்.

ஒரு சிறந்த ஆண்மகனின் மனம் இப்படித்தான் புரிந்து கொள்ளுங்கள் என்று,,

இதனால் எப்பவாவது ஒரு நன்மை விளையும் என்பதால்.. :D :D

அதுக்கு மேல நீங்க கடி வாங்காம கேட்க முடியாது...

குணமதி
14-08-2010, 03:57 AM
***மூன்றில் இரண்டு ஆசைகளால் நிரம்பி இருந்தாலும் சிறு நுண்ணுனர்வுகளுக்காக அவை அலைபாயும் க்டலாக அடுத்தவர் கால்வருடுவது மட்டுமே சுகம் என்ற சிலரின் ஆதிக்க மனப்பான்மைகளுக்குச் சின்ன விளக்கம்.***

கொஞ்சம் விளக்கிச் சொல்வீர்களா?

தாமரை
14-08-2010, 04:06 AM
***மூன்றில் இரண்டு ஆசைகளால் நிரம்பி இருந்தாலும் சிறு நுண்ணுனர்வுகளுக்காக அவை அலைபாயும் க்டலாக அடுத்தவர் கால்வருடுவது மட்டுமே சுகம் என்ற சிலரின் ஆதிக்க மனப்பான்மைகளுக்குச் சின்ன விளக்கம்.***

கொஞ்சம் விளக்கிச் சொல்வீர்களா?

இதை விளக்குவது கடினமோ கடினம்.

ஏறத்தாழ முடியாத காரியம் கூட..

ஏனென்றால் சிலருக்கு மாத்திரமே இது பொருந்தும்.

உதாரணத்திற்கு செல்லமே சீரியல் ஏ.கே..

கலையரசி
14-08-2010, 10:44 AM
ஆண் மனம் என்ற தலைப்பு இருந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் பொருளை நவீன கவிதைகளுக்குப் பொருந்துமாறு விளக்கிய ஆதவாவின் கிரகிக்கும் திறனைக் கண்டு என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை.
புரிந்து கொள்ளப்படாமலிருக்கும் எல்லா விஷயங்களுக்கும் இக்கவிதை பொருந்துமாறு அமைத்திருப்பது படு சிறப்பு. மிக்க பாராட்டுக்கள் தாமரை!

தாமரை
14-08-2010, 10:50 AM
நன்றி கலையரசி.. ஆண்மனசை புரிஞ்சிகிட்டதுக்கு :D:D:D:D:D

மதி
14-08-2010, 12:29 PM
ஆண் மனசு ஆசமென்ன யாருக்குத் தான் தெரியும்..? அதில் என்ன இருக்குதுன்னு புரியும்?
எல்லாம் மாயை.. புரிதல் என்பது எதுவரை?

இப்படி தான் புரியாம எழுத ஆரம்பிக்கணும். அப்போ தான் புரிஞ்சுக்க முயற்சிப்பாங்க...

தாமரை
14-08-2010, 04:39 PM
மதி... மதி... மதி...

புரிதல் என்பது எதுவரை? நல்ல கேள்விதான்.

பதில் தெரியலையே... எதுக்கு புரிஞ்சிக்கணும் என்ற கேள்வி வரும்வரை என்றுதான் தோணுது!!!

பூமகள்
04-09-2010, 06:32 AM
ஆண் மனம்... தலைப்பே ஆண்களின் மனம் தான் பாடுபொருளெனச் சொன்னாலும்..

பூமியைக் காட்டி, அதன் உள், வெளிகளை அடுக்கி.. பலத்தையும் பலவீனத்தையும் விளக்கி... இப்படி மேலோட்ட பார்வைக்கு ஓர் அர்த்தம் தந்தாலும்..

ஆணின் மனதோடு ஒத்த அர்த்தம் புரிய வைத்து அசத்திவிட்டீர்கள்..

குறிப்பாக..

அவ்வப்போது பெய்யும்
காதல் மழையில்தான்
பூக்களும் பயிர்களும்
உண்டாகின்றனவென்று
குறைத்துச் சொல்லப்படும்
இந்த வரிகள்.. ஆண்கள் காதல் வந்துவிட்டால் தான் சாதிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு சுய முன்னேற்றம் குறித்த விழிப்பு இல்லையென குறைத்துச் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.. பல நேரங்களில் நிஜத்திலும் இதைத் தானே காணுகிறோம்.. ஆணின் வெற்றிக்கு பின்னால் தன் காதலியான பெண் ஒருத்தி இருப்பது இயல்பில் நடக்கிறது தானே...


இரும்புக் கருவும்
கொந்தளிக்கும்
நெருப்புக்குழம்பும்

புரிந்து கொள்ளப்படாமலேயே
அமுங்கிக் கிடக்கின்றன..
ஆண்களுக்குள் இருக்கும் அந்த திறனும் வேட்கையும் துடிப்பும் புரிந்து கொள்ளப்படாமலே இருக்கிறதென்பதை உணர்த்தும் வரிகள் அருமை.

அக்னி
22-09-2010, 11:32 AM
தலைப்பு கவிப்பொருளை சொல்லிநின்றாலும்,
கவிதையை வாசித்து வரும்போது தலைப்பு மறந்து போய்ப் பூமிமீது ஓர் பரிதாபம் தோன்றுகின்றது...



பொத்தலிடப்படும் போதெல்லாம்
நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு
இந்த வரிகள் அபாரம்...

கவிதையை மட்டும் வாசித்துச் சென்றால் பின்னூட்டங்களை இழந்துவிடுவேன் என்பதனால்,
பின் ஊட்டம் பெற வருகின்றேன்...

தாமரை
22-09-2010, 12:00 PM
அவ்வப்போது பெய்யும்
காதல் மழையில்தான்
பூக்களும் பயிர்களும்
உண்டாகின்றனவென்று
குறைத்துச் சொல்லப்படும்




குறிப்பாக..

இந்த வரிகள்.. ஆண்கள் காதல் வந்துவிட்டால் தான் சாதிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு சுய முன்னேற்றம் குறித்த விழிப்பு இல்லையென குறைத்துச் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.. பல நேரங்களில் நிஜத்திலும் இதைத் தானே காணுகிறோம்.. ஆணின் வெற்றிக்கு பின்னால் தன் காதலியான பெண் ஒருத்தி இருப்பது இயல்பில் நடக்கிறது தானே...



என் வரிகளை உண்மையாக்கியதற்கு நன்றி பூ...பல நேரங்களில் அல்ல சில நேரங்களில் என்பது மட்டுமே உண்மை.

உதாரணங்கள் மட்டும் எல்லாம் ஆகிவிடுவதில்லை என்பதுதான் உண்மை.
காதலின்றியே சாதித்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால் தனக்குப் பயன்படாத ஒன்றை மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளுவதால் அவை மறைந்து கிடக்கின்றன.

தாமரை
22-09-2010, 12:02 PM
தலைப்பு கவிப்பொருளை சொல்லிநின்றாலும்,
கவிதையை வாசித்து வரும்போது தலைப்பு மறந்து போய்ப் பூமிமீது ஓர் பரிதாபம் தோன்றுகின்றது...

.

அதுதாங்க ஆண்மனசு!!!

அனுராகவன்
22-09-2010, 01:47 PM
ஆண்மனம் ஆதங்கம் மட்டுமே படும்..
அதற்கு இது உதா...
என்ன செய்ய மனமே பாரம்...:mini023:

sarcharan
16-02-2011, 05:32 AM
பொத்தலிடப்படும் போதெல்லாம்
நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு

வேதனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம்
கொடியவன் என
முத்திரை குத்தப்பட்டு
பழிக்கப்படுகிறது



ரொம்ப நாளுகளுக்கப்புறம் தூசு தட்டி படித்த கவிதை வரிகள்.. சரியாய் சொல்லி உள்ளீர்கள்.

கலாசுரன்
20-02-2011, 03:56 AM
இக்கவிதை தன் அர்த்தங்களில் விரிவடைந்து செல்லும் விதத்தில் அமைந்துள்ளது வாழ்த்துக்குரியது ..!!

வானத்தில் எவ்வளவோ தூரம் அறிவியல் ஆராட்சியின் விரல்களை நீட்டிச் செல்லும் மனிதனுக்கு, குறைந்த தூரத்தில் பூமிக்குள் அமைந்திருக்கும் உட்கருவை புரிந்து கொள்ளுதல் முடியாததாகவே இருக்கிறது (இதை மறைபொருளாய் விடை தெரியாமல் இருக்கும் எதனுடனும் உவமைப் படுத்திக்கொள்ளலாம்) உயிர் உருவெடுத்ததாக கருதப்படும் சமுத்திரங்கள் உப்பு நீரால் ஆனதால் அது பருகப்படுவதில்லை தான். (நாம் கடந்து வந்து பின் விரும்பாத உயிரோட்டமான எதனுடனும் இதை பொருத்திக்கொள்ளலாம்). பருவக்காற்றை வாழ்விலான பருவங்களில் அலைபாயும் மனதுடன் உவமைப்படுத்துவது ஒரு அடர்த்தியான படிமம்.

மற்றும் வாசகனை மெல்ல அழைத்து சென்று ஒரு அடர்ந்த சிந்தனையின் காட்டுக்குள் தள்ளி விடுகிறது இந்தப் படைப்பு.. இறுதியில் சொன்னதுபோல் புரிந்தும் புரிந்துகொள்ள முடியா வாழ்கை..!!

வாழ்த்துக்கள் ..:icon_b:

ஜானகி
20-02-2011, 04:56 AM
அடேயப்பா...! பெண்மனம் ஆழ்கடல் என்றால்....ஆண்மனம் புதை மணலாகவன்றோ தெரிகிறது..!ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடாதீர்கள் ...ஜாக்கிரதை !

ரௌத்திரன்
17-07-2012, 02:01 AM
நன்றாகச் சிந்திக்கிறீர்கள். ஆயினும் இதில் கவிதைக்கான கனம் குறைவு.ஆங்காங்கே உரைநடையாய் உருமாறியிருப்பது வருத்தத்திற்குரியது------ரெளத்திரன்.

தாமரை
17-07-2012, 03:37 AM
நன்றி ரௌத்திரன். நம்முடைய உள்ளம் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறதோ அதுதானே கவிதையில் கனமாக வெளிப்படும். எனது உள்ளம் அவ்வளவு அழுத்தத்தில் இல்லை என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல. கவிதையின் கரு வாசகனுக்கு எவ்வளவு பரிச்சயமானது என்பது வாசகன் பக்கத்தில் கனத்தை நிர்ணயிக்கிறது. எனவே இதன் கனம் உங்களுக்கு வேறு எனக்கு வேறு மற்றும் ஒவ்வொரு வாசகருக்கும் வெவ்வேறு. உங்களுக்கு கனமாகத் தெரிவது எனக்கு இலேசாக இருக்கலாம். எனக்கு கனமாகத் தெரிவது உங்களுக்கு இலேசாகத் தெரியலாம். அதற்குரிய அனுபவம் கிட்டும்போதுதான் கனம் புரிய ஆரம்பிக்கும்.

கவிதையின் நடை.. அது எதற்காக எழுதப்பட்டது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்தக்கருத்திற்கு நான் குறிவைத்த வாசகர் வட்டத்திற்கு இந்த நடை சரியாக இருக்கும் என்று எண்ணினேன். அதனாலேயே இந்நடையில் அமைத்தேன். இதை வேறு வடிவில் அமைப்பதற்கான உரிய சமாதானம் எதுவும் என் மனதிற்குக் கிட்டவில்லை.

கலைவேந்தன்
19-07-2012, 03:49 AM
இன்னொரு பூமி
இல்லையெனத் தெரியும்வரை
இந்தப் பூமி
ஏளனம் செய்யப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கும்!!!

முழுக்கவிதைக்கு முத்தாய்ப்பான வரிகள். பாராட்டுகள் தாமரை..!