PDA

View Full Version : நீதிக் கதைகள் - சிறந்த ஆயுதம்



சசிதரன்
12-08-2010, 04:29 PM
நீதிக் கதைகள் மட்டும் நண்பர்களே... :)

சசிதரன்
12-08-2010, 04:30 PM
மனித மனத்தின் சிந்தனை...ஓர் அழகான ரோஜா செடி.
அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ.
அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது.
இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை
வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.

ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது,
“ஆஹா... கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக
இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின்
நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை
ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே.
அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது.

நீதி : நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

ரங்கராஜன்
12-08-2010, 04:54 PM
லா லா லலலலாலா லா லா லாலாலால

விக்ரமன் படம் பார்த்த மாதிரி இருக்கு டா, ஹா ஹா ஹா,

நீதிகதைகள், நிஜ சுவையான அனுபவங்கள் என்று இந்த பகுதிக்கு தலைப்பு இருந்தாலும் பெரும்பாலானோர் நிஜ சம்பவங்களையே இதில் அதிகம் பதிப்பார்கள்..

நீதிக்கதையை யாரும் கண்டுக் கொள்வது இல்லை, என்னையும் சேர்த்து தான்.

அதை வளர்க்கும் விதமாக நீ இந்த திரியை ஆரம்பித்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இன்றைக்கு இருக்கிற தொழில்நுட்ப உலகத்தில், மறுபடியும் ரோஜா, முள்ளு, ஞானி, கோணி இதெல்லாம் வேண்டாம் டா. இதே கருத்தை உன்னுடைய சிந்தனையில் மக்களுக்கு புரியும் படி கொடு, இந்த மாதரி முதல் வரியை படித்தவுடன் முழுகதையும் புரியும் படி கொடுக்காதே......

உன்னுடைய பாணி இதில் எதுவுமே இல்லை, மேஜையில் வந்து தலை விழுவது போல வந்து விழ வேண்டும் நமக்குள் இருக்கும் நீதி, அப்படி பதி இக்கதைகளை......

இவரின் முயற்சியை தரம் தாழ்த்துகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம், இவரின் முயற்சி வெற்றியடைய தான் சொன்னேன்...

சசிதரன்
13-08-2010, 04:27 PM
குருவிடம் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’

‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’

‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’

‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?’’ என்றார் குரு.

நீதி : ‘‘கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்"

அன்புரசிகன்
14-08-2010, 01:25 AM
பத்தாவது காசு தேடுவது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நீதி அதில். தொடருங்கள் சசிதரன்.

சசிதரன்
14-08-2010, 02:13 PM
நன்றி அன்புரசிகன்... :)

சசிதரன்
14-08-2010, 02:14 PM
ஓஷோவின் குட்டிக்கதை`
ஒரு தேவதை காலையில் காட்டு வழியே பறந்து கொண்டிருந்த போது, குள்ளன் ஒருவனைச் சந்தித்தது.

அது அவனை நோக்கி, “ குள்ளனே, நான் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். உனக்கு என்ன தேவையோ கேள்; உன் தேவை பூர்த்தியாகப்படும்” என்றது

குள்ளன் தன் தலையை சொறிந்து கொண்டான். அது அவனை சிந்திக்கத் தூண்டியது, ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு அவன் கூறினான் :
“ அப்படி யென்றால் எனக்கு ஒரு கேன் நிறைய குளிர்ந்த பீர் வேண்டும்!”

ஒரு டேங்க் நிறைய குளிர்ந்த பீர் அவன் எதிரே வந்தது

தேவதை கூறியது:

“இந்த டேங்க் பீர் வசீகரிக்கப்படுத்தப் பட்டது. எப்போதுமே காலியாகாது. இதிலிருந்து பீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும், நீ விரும்பும் வரை இதிலிருந்து குடிக்கலாம், இதனால் எந்தவித நோயும் உன்னை அணுகாது, கொஞ்சம் இதிலிருந்து ருசித்தாலும் போதும்; இதன் சுவயை நீ மறக்க மாட்டாய் , உன்னுடைய தாகத்தை இது தணித்துவிடும். மேலும் இதை நீ பருகிக் கொண்டே இருக்கப் போகிறாய் !”

அந்தக் குள்ளன் மிகவும் மகிழ்வுற்றான். சிறிதளவு பீர் எடுத்துப் பருகினான்.தன் நாவை கொண்டு உதடுகளை ருசி பார்த்தான். அவனுக்கு மிக மிக திருப்தி ஏற்பட்டது.

தேவதை அவனைப் பார்த்துச் சொன்னது;

“ இரண்டு வரத்தைக் கொடுத்தேன் , ஒன்றை பெற்றுக் கொண்டாய்; மற்றொன்றைக் கேள்!”

அந்த குள்ளன் மிகவும் மகிழ்ந்தவனாய் “ அப்படியா?….. இன்னொன்று!… அப்படியென்றால் எனக்கு மற்றோரு பீர் டேங்க் வேண்டும் ! இதே போல! “

ஓஷோ கூறுகிறார்

பேராசை முட்டாள்தனமானது, பேராசை கொண்டவன் அறிவுப் பூர்வமாகச் செயல் படவே மாட்டான், விவேகமுள்ளவன் தனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவனாக இருப்பான்.“

Ravee
14-08-2010, 02:17 PM
நான் படித்த பல நீதிக்கதைகள் இருக்கிறது இங்கே பதிவிடலாமா சசிதரன் உங்கள் அனுமதியுடன் ... :)

பாரதி
14-08-2010, 03:06 PM
நல்ல தேர்வை நண்பர்களுக்காக பகிரும் சசிக்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.

சசிதரன்
14-08-2010, 03:24 PM
நான் படித்த பல நீதிக்கதைகள் இருக்கிறது இங்கே பதிவிடலாமா சசிதரன் உங்கள் அனுமதியுடன் ... :)

நிச்சயமாக ரவி... நண்பர்கள் அனைவரும் பகிரவே இந்த திரி... உங்களுள்ளு தெரிந்த நீதிக் கதைகளை பதியுங்கள்... காத்திருக்கிறேன்... :)

சசிதரன்
14-08-2010, 03:25 PM
நல்ல தேர்வை நண்பர்களுக்காக பகிரும் சசிக்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.

மிக்க நன்றி பாரதி அண்ணா... :)

அமரன்
14-08-2010, 03:35 PM
நிலாக்காலம் அழைத்தும் செல்லும் முயற்சி வெற்றி பெறட்டும்.

நீதிக்கதைகள் புனைவது எந்தளவு சவாலானது. அதுக்கொரு களம் கட்டாயம் அமைத்துக் கொடுக்க வேண்டும் போல.

சசிதரன்
15-08-2010, 01:33 PM
நன்றி அமரன்... :)

சசிதரன்
15-08-2010, 01:35 PM
மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போதுத் தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து கீழிரங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து கணப்பட்டது. (இதத்தான் சந்தரமுகி படத்துளே தேஜஸ் தெரியுதுனு சொன்னாங்க போல).

” உங்களுக்கு என்ன வேண்டுமானாழும் தருகிரேன், என்னுடன் ‘Macedonia’ வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர்.

யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாக கூறினார்.

தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலேக்சான்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார், “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலேக்சேண்டர். என் ஆனையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதை கேள்” என்றார்.

யோகியோ தைரியமாக, “உங்களால் மாயையான என் உயிரை கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரை போர்த்திய ஆடைமட்டுமே”, என்று அமைதியாக கூறி மீண்டும் தொடர்ந்தார், “அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.

“ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலெக்சான்டர்.

“என்னால் என் கோபத்தை கட்டுப் படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எழிதாக உங்கள் கோபத்திற்கு அளாகிவிடுகிறிர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.

யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது. வாயடைத்தவனாய் அங்கிருந்துச் சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலெக்சான்டர்.

(கோபம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சி அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பெரியோர் வாக்கு. கோபத்தை கட்டுபடுத்தி மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.)

அன்புரசிகன்
15-08-2010, 10:02 PM
அழகான நீதி. இந்த கோபம் கட்டுப்படுத்தப்படவேண்டியது தான். ஆனால் எல்லா கோபங்களையும் கட்டுப்படுத்தினால் நன்மை பெறுமா????

mojahun
16-08-2010, 12:43 AM
அருமையான தொடுப்பு! நீதி, அறிவுரை என்றாலே தீயில் கட்டுண்டது போல் அலறும் காலத்தே தங்கள் இடுகை மகிழ்வுறச் செய்கிறது. தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருங்கள்.

சசிதரன்
16-08-2010, 02:00 PM
ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள்,சிலைகள்,விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் - “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் - “அந்தச் சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.”.

”இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” - வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” - க.த.

“ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” - வ.போ.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் க.த. சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள். அய்யா. வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிரியதா? / பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே
விரும்புகிறேன்”.


நீதி : உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்

பா.சங்கீதா
16-08-2010, 02:53 PM
கதை அனைத்தும் அருமை........
மேலும் தொடர வாழ்த்துகள்........:)

அன்புரசிகன்
17-08-2010, 12:27 AM
நீதி : உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்

ஒரு பணியாளிக்கு பணி திருப்தி ஏற்படுத்திக்கொடுப்பவன் தான் சிறந்த முகாமையாளருக்கு அழகு என்பது முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தில் உள்ளது. அது போன்ற ஒரு கருத்துக்கொண்ட நீதியை அழகான கதை மூலம் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சசிதரன். தொடருங்கள்.

xavier_raja
17-08-2010, 01:45 PM
செய்யும் தொழிலில் உள்ள நேர்மை பற்றிய கதை நன்றாக இருந்தது..

அதே போல் கோவத்தை கட்டுபடுதவேண்டும் என்கிற கதையும் நன்றாக இருந்தது.. தொடர்ந்தது இதுபோன்ற கதைகளை எழுதி எங்களை மகிழ்வியுங்கள்..

சசிதரன்
17-08-2010, 02:04 PM
நன்றி நண்பர்களே... :)

சசிதரன்
17-08-2010, 02:05 PM
மெய்க்கும் பொய்க்கும் உள்ள தூரம்

ஒருநாள் அக்பர், பீர்பாலுடன் பொழுது போக்காக உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் பலவேறு விஷயங்களைப் பற்றி உரையாடினர்.

பேச்சிற்கு இடையே அகபர், '' பீர்பால் ! உலகத்தில் மெய் பொய் என்னும் இரு விஷயங்கள் மக்கள் மத்தியிலே அதிகமாகப் பேசப்படுகின்றன. பொய்க்கு நேர் விரோதமான ஒன்று மெய் என்று பொதுவாக கூறப்படுகிறது. எனக்கு ஓர் ஐயப்பாடு. தத்துவரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால், மெய் என்பது என்ன, பொய் என்பது என்ன ? இதைப் பற்றி விளக்க இயலுமா?'' என்றார்.

'' மெய்க்கும் பொய்க்கும் உள்ள தூரம் ஏறத்தாழ நான்கு விரற்கடை அளவுதான் '' என்று பீர்பால் பதிலளித்தார்.

'' மெய்யையும் பொய்க்கும் நீர் அளக்கும் அளவு கோலே வியப்பாக இருக்கிறதே ! சற்று விளக்கமாக, எனக்குப் புரியும் வகையில் கூறும் '' என்றார் அக்பர்.

மன்னர் பெருமானே ! நாம் கண்களால் பெரும்பாலும் மெய்யைத்தான் காண முடியும். ஆனால் காதுகளால் பொய்யை அதிக அளவு கேட்பதற்கு உண்டு. கண்ணுக்கும் காதுக்கும் உள்ள இடைவெளி ஏறத்தாழ நான்கு விரற்கடை அளவுதானே !'' என்று ,மறுமொழி புகன்றார் பீர்பால்.

சுடர்விழி
18-08-2010, 09:23 AM
நல்லதொரு திரி சசிதரன் ! கதை எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..நல்ல கருத்துக்களை முன்வைத்து செய்யும் எதுவுமே கண்டிப்பாக வெற்றியடையும்..தொடருங்கள்

பா.ராஜேஷ்
18-08-2010, 11:50 AM
நல்லதொரு அருமையான திரி... மிக நல்ல கதைகள்... தொடருங்கள் அன்பரே..

சசிதரன்
18-08-2010, 03:44 PM
நன்றி சுடர்விழி மற்றும் ராஜேஷ்... :)

சசிதரன்
18-08-2010, 03:46 PM
பணிவு......!


மௌரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வீதிஉலா வந்துகொண்டிருக்கும் போது, எதிரில் ஒரு புத்த பிட்சு வருவதை பார்த்து, ரதத்தை விட்டு இறங்கி சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது.

துறவி தனது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்த அமைச்சர், சங்கடப்பட்டு, "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரிய கௌரவம் என்னாவது? என்று மன்னரிடம் வினவினார்.

அசோகர் மன்னர் சிரித்தார். கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையை பிறப்பித்தார்.

'ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை, ஒரு மனித தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

ஏவலர்கள் நாற்புறமும் பறந்தனர்.

ஆட்டு தலை கிடைக்க சிரமமே ஏற்படவில்லை. இறைச்சி கடையில் கிடைத்து விட்டது. புலி தலைக்கு அலைந்தார்கள். அதுவும் ஒரு வேட்டைக் காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டில் இருந்து ஒரு பிணத்தின் தலையை எடுத்து வந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோகர், தன அமைச்சர்களிடம் கட்டளையிட்டார்.

சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்"

ஆட்டு தலை அதிக சிரமமின்றி நல்ல விலைக்கு விலை போனது. புலித் தலையை ஒரு வேட்டை பிரியரான பிரபு ஒருவர் அதனை வாங்கி தன வீட்டில் அலங்காரமாக பாடம் செய்து மாட்டி வைக்க எடுத்து போனார்.

மீதமிருந்த மனித தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்குக் கூட அதை வாங்க ஆளில்லை. அந்த தலையை இனாமாகவாவது கொடுத்து விட முயன்றும், யாரும் வாங்க முன் வரவில்லை.

இப்போது அசோகர் கூறினார்.

"பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்பு கால் காசுக்குக் கூட பெறாது. இலவசமாக கூட இதை யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்றுனர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?" என்றார்.



பூவுக்கு மனம் இயல்பிலேயே உண்டு. நாருக்கு அது இல்லை. ஆனால், அந்தப் பூவுடன் இணையும்போது நாறும் மனம் வீசுகிறது.

ஞானம் அடைதல் துறவிகளின் இயல்பு. அத்தகு ஞானியரை வணகுவதாலும், அவர் தம் அருளுரையைக் கேட்பதாலும், அவர்கள் காட்டிய வழியில் நடப்பதாலும் ஒருவன் ஞானம் பெற முடியும்.

உண்மையான ஞானிகளை மட்டும் சொல்கிறேன்...:D:D:D

பாரதி
18-08-2010, 04:06 PM
...! நல்ல நீதிக்கதை.
மீன் செத்தா கருவாடு... பாடல் வரிகளை நினைவூட்டியது.
மன்னனாயிருந்தாலும் மமதையின்றி நடந்த அசோகர் வாழ்த்திற்குரியவரே.
பகிர்ந்தமைக்கு நன்றி சசி.

சசிதரன்
30-08-2010, 03:49 PM
நன்றி பாரதி அண்ணா...:)

சசிதரன்
30-08-2010, 03:52 PM
சிறந்த ஆயுதம்

சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், "ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!" என்றார்.


"ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!" என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், "பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?" என்று கேட்டார்.

"பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!" என்றார் பீர்பல். "ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார்.

"இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!" என்று பீர்பல் சொல்ல, "அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார்.

"மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!" என்றார் பீர்பல்.

"பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?" என்று சலிப்புடன் அக்பர் கேட்க, "பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.

தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.

அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை" என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், "திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?" என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.

"வாள்!" என்றார் ஒருவர். "இல்லை!" என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!" என்றார். "எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!" என்றார் மற்றொருவர்.

"பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!" என்றார் பீர்பல். "சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?" என்று அக்பர் கேட்க, "சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!" என்றார் பீர்பல்.

"வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!" என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். "சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்றார் பீர்பல்.

மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, "பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.

அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.

உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.

வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.

வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.

தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.

சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!" என்று மனதாரப் பாராட்டினார்

பாரதி
30-08-2010, 04:02 PM
நல்ல கதை சசி.
பகிர்ந்தமைக்கு நன்றி.
(பீர்பால் எப்படி பூனையைப் பிடித்தார்...? சும்மா... :aetsch013:)
அக்பர் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்ததால் நதியில் இறங்கி தப்பித்திருக்கலாமே என்றும் எண்ணத்தோன்றுகிறது.

சுடர்விழி
31-08-2010, 07:49 AM
நல்ல கதை...பகிர்வுக்கு நன்றி!

விகடன்
04-10-2010, 10:44 AM
சுய அனுபவங்கள் நிறைந்திருக்கும் இந்தப்பகுதியில் நீதிக்கதைகளும் வருவது நன்றாக இருக்கிறது. ஒவ்வோர் கதைக்கும் தனித்தனி திரி ஆரம்பிக்காது ஒரே திரியில் பதிவது இன்னும் அழகாக இருக்கிறது.

மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
04-10-2010, 04:11 PM
நல்ல கதை. ஆனா ஆபத்து சம்யத்துல....மூளை மரத்துப்போய்...'பேஸ்த்' அடிச்சு நிக்கற மாதிரி பல நேரங்கள்ல ஆயிடுதே...

வாழ்த்துக்கள் சசி.

அன்புரசிகன்
04-10-2010, 11:51 PM
தமிழ் படங்களில் ஹீரோ செய்யும் சாகசங்களை அந்தக்காலத்தில் பீர்பல் செய்திருக்கார். :D :D :D
தொடருங்கள் சசி.