PDA

View Full Version : அவள்தானா அதற்குக் காரணம்?

கீதம்
12-08-2010, 04:15 AM
அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் அம்மாவின் வழக்கமான நெஞ்சுவலி மாத்திரையை வாங்கிக்கொண்டு திரும்பும்போதுதான் நீலாவைப் பார்த்தேன். அவள்தானா என்ற சந்தேகம் அவள் அருகில் வந்ததும் உறுதியானது.

"நீலா!" என்னையறியாமல் கூப்பிட்டுவிட்டேன்.

சட்டென திரும்பியவள், ஒருகணம் திகைத்துப் பின் சிநேகமாய் மலர்ந்தாள்.

"ஹே….வேதா! நீங்களா? நம்பவே முடியல. எவ்வளவு நாளாச்சு உங்களைப் பார்த்து!"

"ரெண்டு வருஷம் இருக்கும், இல்லே?" நான் சொல்லவும் அவள் ஆமோதித்தாள்.

"சந்தியா எப்படி இருக்கா? ஏதாவது விவரம் தெரியுமா?" அவள் என்னைக் கேட்க, நான் அதிர்ந்தேன்.

"நான் உன்னைக் கேட்கலாம்னு நினைச்சேன். நீ என்னைக் கேக்கறே? எனக்குத் தங்கைன்னாலும் என்னை விட உனக்குதானே நெருக்கமான தோழி. உனக்கு எதுவும் தெரியாதா?"

நான் ஏமாற்றத்துடன் கேட்டேன்.

"ப்ச்! நீங்களும் உங்க அம்மாவும் ஊரை விட்டுப் போனதுக்கப்புறம் நானும் கல்யாணமாகிப் போய்ட்டேன். எனக்கும் பல பிரச்சனைகள். அதுக்குப் பிறகு அந்த ஊர்பக்கமே தலை வச்சுப் படுக்கலை. எந்தத் தொடர்பும் இல்ல."

என்ன சொல்கிறாள்? ஊர்ப்பக்கமே போகவில்லை என்கிறாளே? நீலாவை எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தியாவுக்கு இவள் எப்படி தோழியானாள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் சந்தியாவின் காதல் நாடகம் அரங்கேறியபின் அம்மா இவளை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்கள்.

"நீயும் உடந்தைதானேடீ? எனக்குத் தெரியாதுன்னு சும்மா கதையளக்காதே. நீ மட்டும் உங்க அப்பா அம்மா சொல்றவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு சுகமா இருப்பே! என் மகள் ஒண்ணுமில்லாதவனோட ஓடிப்போய் சீரழியணுமா?"

எனக்கே சீ என்றிருந்தது. அம்மாவை அடக்கவும் முடியவில்லை. அம்மாவை மட்டுமல்ல, எவரையுமே எதிர்கொள்ளும் சக்தி எனக்கில்லை.

குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்னைப் பரிச்கசிக்கவென்றே ஒரு கூட்டம் எங்கள் தெருவில் இருந்தது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யார் யாரென்று எனக்குத் தெரியாது. சந்தியாவுக்கு அவர்கள் எல்லோர் பெயரும் அத்துப்படி. சரியான துடுக்கு. எனக்காக அவர்களிடம் வம்புக்கும் செல்லத் தயங்கமாட்டாள்.

ஆனால் வீட்டுக்குள் என்னை ஒரு எதிரியாகவே பார்ப்பாள். ஒருநாளும் அன்பாய் ஆசையாய் பேசியது கிடையாது. இவ்வளவு ஏன்? என்னோடு சேர்ந்து நடக்கவும் விரும்ப மாட்டாள் என்றால் எந்த அளவுக்கு என்மீது அவளுக்கு வெறுப்பு என்பது புரியும்.

அப்பாவுக்குப் பின் இந்தக் குடும்பத்தை நான் தான் துக்கி நிறுத்துகிறேன் என்றாலும் அம்மாவை மறுத்து இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை. அதனாலேயே எப்போதும் நான் தான் அம்மாவின் செல்லம். சந்தியா என்னை வெறுக்க இதுவே முக்கியக் காரணம்.

என்னுடைய அமைதியான அடங்கிப்போகும் குணமும், சந்தியாவின் ஆர்ப்பாட்டமான துடுக்குத்தனமும் எப்போதும் எல்லோராலும் ஒப்பீடு செய்யப்பட்டு விமர்சனத்துக்குள்ளாவது எங்கள் இருவருக்குமே பிடிக்காத ஒன்று. இதுவும் எங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி உடன்பிறந்தவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்கியிருந்தது.

எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம், சந்தியா எங்கள் தெரு தையற்கடைப் பையனுடன் ஓடிப்போனாள். திடுதிப்பென்று நிகழ்ந்த நிகழ்வென்று சொல்லிவிடமுடியாது. ஜாக்கெட் தைக்கப்போகிறேன் என்று அடிக்கடி அங்கு போவாள். ஆனால் இப்படி இருக்குமோ என்ற சந்தேகம் யாருக்கும் துளியும் எழவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

ஓடிப்போவதற்கு முதல் நாள் என்னிடம் பேசினாளே! நான் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமோ? வழக்கம்போலவே என் கோழைத்தனம் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

"வேதா! நீ மட்டும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா போதும், பல பிரச்சனை தீர்ந்திடும். சம்பாதிச்சுக் கொடுக்கறதோட உன் கடமை தீர்ந்ததுன்னு நினைக்கிறே! யார் என்ன சொன்னாலும் உனக்குப் பிடிக்கலைன்னாலும் நீ தலையாட்டிட்டே இருந்தா ஒருநாள் உன் தலையிலேயே மிளகா அரைச்சிடுவாங்க."

"என்னை என்ன பண்ண சொல்றே?"

"நாளைக்கு நான் கேசவனோட புறப்படறேன். அவன் கையில் தொழில் இருக்கு. எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம்! ஆனா இது சரியில்லைன்னு நீ நினைச்சா இப்பவே அம்மாகிட்ட பேசி என் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிக்கொடு."

"நான் எப்படி சந்தியா...அம்மாகிட்ட....?"

"அப்ப…விடு! நான் போறதைப் பத்தி அம்மாகிட்ட மூச்சுவிடாதே. உனக்குப் புண்ணியமாப் போவும்!”

எதுவும் செய்யத்தோன்றாமல் விழித்தேன்.

"அப்புறம் இன்னொரு விஷயம். உன் கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லைன்னும் எனக்குத் தெரியும். அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்காம உனக்காகப் பண்ணிக்கோ. வாயைத் திறந்து உன் வாழ்க்கையையாவது காப்பாத்திக்கோ!"

என்னை நினைத்து எனக்கே பரிதாபம் உண்டானது. எனக்குப் பின் பிறந்தவள் எனக்கு புத்தி சொல்லிப் போகிறாள். நான் என்ன செய்வேன்? வாய் பேசும் துணிவு இருந்திருந்தால்தான் அன்றைக்கே அம்மாவிடம் சொல்லியிருப்பேனே!

நான் வாயைத் திறக்காமலேயே அந்த வரன் முறிந்துபோனது. எல்லாம் சந்தியாவின் கைங்கர்யம்தான். பின்னே? ஓடிப்போன பெண்ணின் வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ள எவர்தான் முன்வருவார்கள்?

நான் மனதளவில் சந்தியாவுக்கு நன்றி சொன்னேன். இருந்தாலும் அவள் எங்கு இருக்கிறாளோ? என்ன துன்பப்படுகிறாளோ? என்ற கவலை இருந்தது. கேசவன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியாது. ஜாக்கெட் தைப்பதில் கெட்டிக்காரன் என்பது மட்டும் தான் தெரியும்.

சந்தியா ஓடிப்போனதும், என் திருமணம் தடைபட்டதும் அம்மாவுக்கு இரட்டை அதிர்ச்சி. எனக்கோ வெளியில் தலைகாட்டமுடியவில்லை. தெருவில் போகும்போதும் வரும்போதும் யாரோ யாருடனோ என்னைப் பற்றி, என் தங்கையைப் பற்றி, கிசுகிசுப்பதை உணரமுடிந்தது.

சந்தியா ஓடிப்போனதால் எங்கள் தெருவிலிருந்த பிரமாதமான ஒரு தையற்கலைஞரை இழந்த வருத்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. அம்மா உருக்குலைந்து போனார்கள். அம்மாவைத் தேற்றும் பொருட்டும் ‘உச்’ கொட்டும் ஊர்சனங்களிடமிருந்து என்னைத் தற்காக்கும் பொருட்டும் அவசர அவசரமாக மாற்றல் வாங்கி இந்த ஊருக்கு வந்தேன்.

எப்படியோ இரண்டு வருடம் ஓடிவிட்டது. அம்மாவுக்கும் பழகிவிட்டது. சந்தியாவின் நிலைதான் தெரியவில்லை. நீலாவுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் அவளைச் சந்தித்த இந்த நொடியில் பொய்த்துப்போனது.

"என்ன வேதா, என்ன யோசிக்கிறீங்க?"

"பழசையெல்லாம் நினைச்சுகிட்டேன். அன்னைக்கு எங்க அம்மா உன்னைத் தவறாப் பேசினதையெல்லாம் மனசில் வச்சுக்காதே, நீலா. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அம்மா இப்ப முன்னாடி மாதிரி இல்ல. நீ அவசியம் வீட்டுக்கு வரணும்."

"அம்மா பேசினதையெல்லாம் அப்பவே மறந்திட்டேன். நீங்க வருத்தப்படாதீங்க."

"நீலா, நீ எப்படி இருக்கே? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்? என்ன இந்தப் பக்கம்?"

"ரெண்டாவது கேள்வி தவிர்த்து மத்த ரெண்டுக்கும் பதில் என்கிட்ட இருக்கு. நான் நல்லா இருக்கேன். இங்கதான் வேலை பாக்கறேன்." பக்கத்து கடையை கண்களால் சுட்டினாள்.

"வாங்களேன், காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்.."

நீலா அழைக்க, மறுக்க முடியாமல் தொடர்ந்தேன்.

கடைத்தெருவிலிருந்த பிரபல உணவகத்தில் நுழைந்தோம். எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள்.

நீலாவின் கதையைக் கேட்பதா தவிர்ப்பதா ஒன்றும் புரியவில்லை. என் பிறவிக்குணம் என்னைக் கேட்கவிடாமல் தடுத்தது. கேட்பேனென்று எதிர்பார்த்திருப்பாள். கடைசியில் அவளாகவே சொல்லத் தொடங்கினாள்.

நீலாவின் கணவனுக்கு அவளுடனான திருமணத்தில் உடன்பாடு இல்லையாம். வேறு ஒரு பெண்ணை மணக்க விரும்பியிருந்தானாம். அவனுடைய பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் இவளைத் திருமணம் செய்தவன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தன் காதலியுடன் ஓடிவிட்டானாம். இரண்டு தரப்புப் பெற்றோரும் ஒருவரை ஒருவர் தூற்றிப் பழிசுமத்தி சண்டையிட்டுக்கொண்டனரே தவிர இவள் நிலை என்ன என்பதை யோசிக்க மறந்தே போனார்களாம். வெறுத்துப்போனவள், வேலை தேடிக்கொண்டு தனியே வந்துவிட்டாளாம்.

இதையெல்லாம் அவள் சிரித்துக்கொண்டே சொன்னாலும் உள்ளூர ஊறியிருக்கும் சோகத்தை என்னால் உணரமுடிந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் ஏங்கியது.

சந்தியா மட்டும் ஓடிப்போகாமல் இருந்திருந்தால்.... அம்மாவுக்கு இவள்மேல் வெறுப்புண்டாகாமல் இருந்திருந்தால்…….என் காதலை அன்றே அம்மாவிடம் சொல்லி இவளைக் கைப்பிடித்திருப்பேனே என்று தோன்றியது.

‘ஆனால் அதற்கெல்லாம் மூலகாரணமான நீ முதலில் தைரியம் நிறைந்த ஒரு ஆண்மகனாகவும் பொறுப்புள்ள ஒரு அண்ணனாகவும், இருந்திருக்கவேண்டுமேயடா, வேதாசலம்!’ என்று என் மனசாட்சி உள்ளுக்குள் உரைத்தது.

வியாசன்
12-08-2010, 05:19 AM
கீதம் நன்றாக இருக்கின்றது முடிந்துவிட்டதா ? அல்லது தொடருவீர்களா? புரியவில்லை

கீதம்
12-08-2010, 05:48 AM
பின்னூட்டத்துக்கு நன்றி, வியாசன் அவர்களே. இந்தக்கதை இத்தோடு நிறைவுபெற்றது. முடிந்ததுபோல் தோன்றவில்லையா?:confused:

அன்புரசிகன்
12-08-2010, 05:58 AM
இது தொடரும் போல் தெரியல வியாசன். ஒரு கையாலாகாத ஆண்மகனின் மனச்சாட்சி பேசுவதை படம்பிடித்துக்காட்டியுள்ளார் கீதம். பல நினைப்புக்களை எண்ணத்தூண்டுகிறது. வாழ்த்துக்கள் கீதம்.

Akila.R.D
12-08-2010, 06:00 AM
கடைசி வரியில் ஒரு எதிர்பார்க்காத திருப்பம்....

உங்களின் மற்ற கதைகளைப்போல் இதுவும் அருமை...

தொடருங்கள் கீதம்...

வியாசன்
12-08-2010, 06:13 AM
பின்னூட்டத்துக்கு நன்றி, வியாசன் அவர்களே. இந்தக்கதை இத்தோடு நிறைவுபெற்றது. முடிந்ததுபோல் தோன்றவில்லையா?:confused:

கீதம் அது எனக்கு குழப்பமாகவே இருக்கின்றது. எனக்கென்னவோ தொடர்வது நன்றாக இருக்கும்போல் தெரிகின்றது. விடை தெரியாத பல விடயங்கள் இருக்கின்றதே

Ravee
12-08-2010, 06:18 AM
தெருவில் உள்ளவர்களிடம் எனக்காக சண்டைக்கு போவாள் , நான் தலை குனிந்து கொண்டே போவேன் இப்படியெல்லாம் சொல்லி கடைசியில் ஒரு டுவிஸ்ட் வச்சுட்டிங்களே .... ;)

அந்த கடைசி வரிகளை மனதில் நினைத்துதான் மொத்த கதையும் எழுதி இருப்பீங்க சரிதானே ? :)

பாரதி
12-08-2010, 06:56 AM
நீங்கள் மொழிபெயர்த்த கதையைப் போன்று ஒரு கதையை படைக்க முயன்றிருக்கிறீர்கள். வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். பெயரைத் தேர்வு செய்வதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறீர்கள்!?

இயல்பான கதை; நடை - இறுதியில் ஒரு திருப்பம் என நல்ல சிறுகதைக்கு உண்டானவை இதிலும் உண்டு. மனதார பாராட்டுகிறேன்.

Nivas.T
12-08-2010, 07:17 AM
நல்லா கதைய அமச்சிருக்கீங்க

அதே போல இறுதிவரியில் விடை

அந்த கதாபத்திரம் ஒரு பெண் என்பது போலவே கதையோட்டம், இறுதிவரை யூகிக்க முடியவில்லை.

மனமார்ந்த பாராட்டுகள்

கீதம் அவர்களே

கீதம்
12-08-2010, 09:53 AM
பின்னூட்டமிட்டு விமர்சித்து, வாழ்த்திய நண்பர்கள் வியாசன் அவர்கள், அன்புரசிகன், அகிலா, ரவி, பாரதி அவர்கள், மற்றும் நிவாஸ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

பாரதி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல் நான் மொழிபெயர்த்த 'அன்னையர் தினம்' கதையில் கையாளப்பட்டிருக்கும் உத்தியை முன்வைத்தே இக்கதையை எழுதினேன்.

கதையின் முடிவை முன்பே முடிவு செய்துவிட்டேன். இக்கதையைப் படிப்பவர்களை வேண்டுமென்றே திசைதிருப்பும் முயற்சிதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது.

கதாபாத்திரம் ஆணாக இருக்கும் பட்சத்தில் படிப்பவர்கள் பெண்ணாக எண்ணுமளவுக்கு பத்திரப்படைப்பு இருக்கவேண்டும். நான் சந்தித்த ஒரு நபர் இத்தகைய குணநலங்களோடு இருந்தது எனக்கு சாதகமாக இருந்தது.

முக்கியப் பாத்திரத்தை ஒரு பெண்ணாக நினைத்துப் படித்திருந்தால் இறுதியில் இருந்த திருப்பம் ரசிக்கவைக்கும். ஆரம்பத்திலிருந்தே கதாபாத்திரத்தை ஒரு ஆண்மகனாகவே பார்த்திருந்தால் கதை முடிவு ரசிக்காது. (வியாசன் அவர்களுக்கு இவ்வனுபவம் உண்டாகியிருக்கலாம்.)

துணிந்து அந்த உத்தியைக் கொண்டு ஒரு கதை படைத்துவிட்டேன். உங்கள் அனைவரின் பின்னூட்டம் அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருப்பதாக உறுதி செய்கிறது. என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி, நண்பர்களே.

அன்புரசிகன்
12-08-2010, 11:04 AM
"ஹே….வேதா! நீங்களா? நம்பவே முடியல. எவ்வளவு நாளாச்சு உங்களைப் பார்த்து!"

இந்த இரு வார்த்தைப்பிரயோகங்களும் வேதா ஆண் என்ற எண்ணத்தை முதலே ஏற்படுத்திவிட்டன என்று நான் கருதுகிறேன். நீயா... உன்னை என்று வந்திருந்திருக்கலாமோ... இரு பெண்கள் அதுவும் ஒரே வீட்டில் வந்து போய் பழகியவர்கள் இவ்வளவு மரியாதையாகவா பேசுவார்கள்???:D இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவிர கதையில் குறையில்லை.

மதி
12-08-2010, 11:06 AM
கற்றபின் நிற்க அதற்குத் தக.. :)

முன்னரே கூறியுள்ளது போல அன்னையர் தினம் பாணியிலேயே அசத்தலாய் கையாலாகாத ஒரு ஆண்மகனின் எண்ணங்களை ஒரு பெண் போல் உரைத்துள்ளீர்..

அனைவரையும் குழம்ப வைக்கும் விஷயங்கள் இரண்டு..

1. இருபாலுக்கும் பொதுவான பெயர்..

2. தங்கைக்கு முன் பொதுவாக அக்காவுக்குத் தான் திருமணம் புரிவார்கள்.. ஆண்கள் வீட்டில் இருந்தால் கடைசியாக தான் நடக்கும்.. பொதுவில் நம் நாட்டில். மேலும் சந்தியாவின் வயதையோ அவள் படிக்கிறாளா வேலைக்கு செல்கிறாளா என்று சொல்லாததும் கதைக்கு பலம். திருமண வயது வருவதற்கு முன்பே அவள் ஓடிப் போயிருக்கலாம். இப்படி பல அனுமானங்கள் இருந்தாலும்...

அழகாக திறம்பட நினைத்தமாதிரி கதையை வசப்படுத்தி இறுதிவரை அந்த சஸ்பென்ஸை காப்பாற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். மன்றத்தில் ராகவன் எழுதிய ஒரு கதை இருக்கிறது.. இதே மாதிரி கடைசிவரியில் சஸ்பென்ஸ் இருக்கும். அந்த கதை எழுதுவது இன்னும் கடினம்.. அதைப்படித்தால் உங்களுக்கே புரியும்.. முடிந்தால் லிங்க் கொடுக்கிறேன்.. :)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7106

பாராட்டுக்கள் கீதம்.

மதி
12-08-2010, 11:12 AM
இந்த இரு வார்த்தைப்பிரயோகங்களும் வேதா ஆண் என்ற எண்ணத்தை முதலே ஏற்படுத்திவிட்டன என்று நான் கருதுகிறேன். நீயா... உன்னை என்று வந்திருந்திருக்கலாமோ... இரு பெண்கள் அதுவும் ஒரே வீட்டில் வந்து போய் பழகியவர்கள் இவ்வளவு மரியாதையாகவா பேசுவார்கள்???:D இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவிர கதையில் குறையில்லை.
தோழியின் அக்கா..வயது வித்தியாசம் இருப்பின் இப்படித் தான் உரையாடல்கள் அமையும் ரசிகரே..:)

அன்புரசிகன்
12-08-2010, 11:18 AM
தோழியின் அக்கா..வயது வித்தியாசம் இருப்பின் இப்படித் தான் உரையாடல்கள் அமையும் ரசிகரே..:)
:D
இருக்கலாம். ஆனால் நம்மூரில் 2-5 வயது வித்தியாசங்களில் நீங்கள் வாங்கள் என்று பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அன்னியப்படுத்துவதாக அமையும் என்பது எண்ணம். அதிலும் பெரியவர்களை தான் அவ்வாறு பேசுவார்கள்.

கலையரசி
12-08-2010, 01:36 PM
மொழி பெயர்த்த கதையின் உத்தியுடன் புதுக்கதை படைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டாய் கீதம். நான் வேதாவைப் பெண்ணென்றே நினைத்ததால், இறுதியில் நல்ல சஸ்பென்ஸ் இருந்தது. இதைப் போன்ற வெவ்வேறு உத்திகளில் கதைகள் படைத்து மன்றத்துக்கு விருந்து வைக்க வாழ்த்துகிறேன்!

சுகந்தப்ரீதன்
12-08-2010, 03:25 PM
வியாசரின் கேள்வியிலும் நியாயமிருக்கிறது..!! வேதாவுக்கு கல்யாணங்கிறது கனவா இருக்கு... நீலாவுக்கு அது நினைவா இருக்கு..!! இறுதியில் வேதாவும் தன் தவறை உணர்ந்திட்டான்னு காட்டிட்டீங்க... அப்படின்னா அடுத்து நீலாவை கைப்பிடிக்க வாய்ப்பிருக்குல்ல..!! ஆக கதையை முடிஞ்சும் முடியாம இருக்குது...!! என்ன வியாசரே நான் சொன்னது சரிதானே...?!:confused:

வித்தியாசமான முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

அன்புரசிகன்
12-08-2010, 10:09 PM
யோவ் சுகந்தா... அப்படி கட்டிவைச்சா கதை சினிமாத்தன்மையாக தோன்றும். எனக்கு இந்த முடிவு தான் புடிச்சிருக்கு... கதை என்றா ஒரு சஸ்பென்ஸ் இருக்கணும். :D :D :D

கீதம்
12-08-2010, 10:18 PM
கற்றபின் நிற்க அதற்குத் தக.. :)

முன்னரே கூறியுள்ளது போல அன்னையர் தினம் பாணியிலேயே அசத்தலாய் கையாலாகாத ஒரு ஆண்மகனின் எண்ணங்களை ஒரு பெண் போல் உரைத்துள்ளீர்..

அனைவரையும் குழம்ப வைக்கும் விஷயங்கள் இரண்டு..

1. இருபாலுக்கும் பொதுவான பெயர்..

2. தங்கைக்கு முன் பொதுவாக அக்காவுக்குத் தான் திருமணம் புரிவார்கள்.. ஆண்கள் வீட்டில் இருந்தால் கடைசியாக தான் நடக்கும்.. பொதுவில் நம் நாட்டில். மேலும் சந்தியாவின் வயதையோ அவள் படிக்கிறாளா வேலைக்கு செல்கிறாளா என்று சொல்லாததும் கதைக்கு பலம். திருமண வயது வருவதற்கு முன்பே அவள் ஓடிப் போயிருக்கலாம். இப்படி பல அனுமானங்கள் இருந்தாலும்...

அழகாக திறம்பட நினைத்தமாதிரி கதையை வசப்படுத்தி இறுதிவரை அந்த சஸ்பென்ஸை காப்பாற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். மன்றத்தில் ராகவன் எழுதிய ஒரு கதை இருக்கிறது.. இதே மாதிரி கடைசிவரியில் சஸ்பென்ஸ் இருக்கும். அந்த கதை எழுதுவது இன்னும் கடினம்.. அதைப்படித்தால் உங்களுக்கே புரியும்.. முடிந்தால் லிங்க் கொடுக்கிறேன்.. :)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7106

பாராட்டுக்கள் கீதம்.

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி, மதி.

ராகவன் அவர்கள் எழுதிய கதையைப் படித்தேன். நீங்கள் சொன்னதுபோல் அந்த வித்தியாசத்தை உணரமுடிந்தது. அக்கதையைப் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

கீதம்
12-08-2010, 10:21 PM
மொழி பெயர்த்த கதையின் உத்தியுடன் புதுக்கதை படைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டாய் கீதம். நான் வேதாவைப் பெண்ணென்றே நினைத்ததால், இறுதியில் நல்ல சஸ்பென்ஸ் இருந்தது. இதைப் போன்ற வெவ்வேறு உத்திகளில் கதைகள் படைத்து மன்றத்துக்கு விருந்து வைக்க வாழ்த்துகிறேன்!

உங்கள் ஊக்கப்பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி, அக்கா. நிச்சயம் என்னால் முடிந்தவரை வேறு வேறு களங்களில், வேறு வேறு உத்திகளில் கதைகள் படைக்க முயல்கிறேன்.

கீதம்
12-08-2010, 10:22 PM
வித்தியாசமான முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

மிகவும் நன்றி சுகந்தவாசன்.

கீதம்
12-08-2010, 10:42 PM
கீதம் அது எனக்கு குழப்பமாகவே இருக்கின்றது. எனக்கென்னவோ தொடர்வது நன்றாக இருக்கும்போல் தெரிகின்றது. விடை தெரியாத பல விடயங்கள் இருக்கின்றதே

இந்த இரு வார்த்தைப்பிரயோகங்களும் வேதா ஆண் என்ற எண்ணத்தை முதலே ஏற்படுத்திவிட்டன என்று நான் கருதுகிறேன். நீயா... உன்னை என்று வந்திருந்திருக்கலாமோ... இரு பெண்கள் அதுவும் ஒரே வீட்டில் வந்து போய் பழகியவர்கள் இவ்வளவு மரியாதையாகவா பேசுவார்கள்???:D இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவிர கதையில் குறையில்லை.

தோழியின் அக்கா..வயது வித்தியாசம் இருப்பின் இப்படித் தான் உரையாடல்கள் அமையும் ரசிகரே..:)

:D
இருக்கலாம். ஆனால் நம்மூரில் 2-5 வயது வித்தியாசங்களில் நீங்கள் வாங்கள் என்று பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அன்னியப்படுத்துவதாக அமையும் என்பது எண்ணம். அதிலும் பெரியவர்களை தான் அவ்வாறு பேசுவார்கள்.

வியாசரின் கேள்வியிலும் நியாயமிருக்கிறது..!! வேதாவுக்கு கல்யாணங்கிறது கனவா இருக்கு... நீலாவுக்கு அது நினைவா இருக்கு..!! இறுதியில் வேதாவும் தன் தவறை உணர்ந்திட்டான்னு காட்டிட்டீங்க... அப்படின்னா அடுத்து நீலாவை கைப்பிடிக்க வாய்ப்பிருக்குல்ல..!! ஆக கதையை முடிஞ்சும் முடியாம இருக்குது...!! என்ன வியாசரே நான் சொன்னது சரிதானே...?!:confused:

யோவ் சுகந்தா... அப்படி கட்டிவைச்சா கதை சினிமாத்தன்மையாக தோன்றும். எனக்கு இந்த முடிவு தான் புடிச்சிருக்கு... கதை என்றா ஒரு சஸ்பென்ஸ் இருக்கணும். :D :D :D

உங்கள் அனைவரின் கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் பார்த்து உள்ளம் பூரித்துவிட்டேன் நண்பர்களே.

இவ்வளவு தூரம் அலசியிருப்பதிலிருந்தே இக்கதை உங்களில் உண்டாக்கியிருக்கும் தாக்கத்தை உணர்கிறேன்.

இப்படி ஒரு கதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேனே தவிர, அதை எப்படி எழுதுவது என்று புரியாமல் ரொம்பவும் குழம்பினேன். எந்த இடத்திலும் சொதப்பல் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனாலும் சொதப்பிவிட்டேன் என்று புரிகிறது.

வேதா என்கிற வேதாசலம் முழுமையான ஆண்மகனாய் மாறிவிட்டானா என்பதை சொல்லவில்லை. அதனால் அவன் தன் காதலை இன்னும் சொல்லத் தயங்குகிறான். சில பிறவிக்குணங்களை நம்மால் மாற்ற முடியாது அல்லவா?

ஆனால் அம்மா முன்போல் இல்லை என்று கூறி நீலாவை வீட்டுக்கு வா என்று அழைக்கிறான். அப்படிப் பார்த்தால் அம்மாவே அவர்களை ஒன்றுசேர்க்கும் வாய்ப்பு உள்ளது.

என்னுடைய கதைகள் சிலவற்றின் முடிவுகளை வாசகர் விருப்பத்திற்கே விட்டுவிடுவேன். காரணம் இருதரப்பட்ட நிலை கொண்ட வாசகர்களையும் அந்த முடிவுகள் திருப்திப்படுத்தும் என்றுதான். இதுவும் சிறுகதைக்கான உத்திகளில் ஒன்று.

அப்புறம் அன்புரசிகனுக்கு எழுந்த சந்தேகம்.'வீட்டில் வயதுவந்த பெண் இருக்கும்போது அண்ணனுக்கு திருமணம் செய்வார்களா?' என்பது. சில வீடுகளில் இது நடக்கும். அதாவது பணநெருக்கடி உள்ள வீடுகளில் இப்படி மருமகளிடம் வாங்கி மகளுக்குச் செய்யும் சில பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்.

அந்த வாங்க, போங்க என்ற மரியாதை சொந்த அண்ணனாகவோ, அக்காவாகவோ இல்லாமல் தோழியின் மூத்த உடன்பிறப்புகளாக இருக்கும்பட்சத்தில் கொடுக்கப்படுவதுதான்.

உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துவிட்டேன் என்று நம்புகிறேன்.
முடிவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நண்பர்களே!

உங்க எல்லோருடைய நேர்மையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.:icon_b:

அன்புரசிகன்
12-08-2010, 11:14 PM
அடக்கடவுளே... சொதப்பல் எல்லாம் இல்லை. தவிர அந்த கல்யாண மாட்டர் நான் கேட்க்கல. :D

மற்றது எனது கருத்தே... நான் வாழ்ந்த சூழல் அப்படி. என்னுடன் நெருக்கமாக பழகிய அக்காமார் அண்ணன் மாரை வாடா போடா என்று பேசுவேன். காரணம் அவர்களும் அவர்களது அண்ணன் அக்காமாரை கூப்பிடுவதை பார்த்து. ஒன்றாக புளியமரத்துக்கு அடியில் விழையாடும் போது மரியாதை பார்த்தால் ஈடுபாட்டுடன் விளையாட முடியாதே.... எனக்கு அப்படி தோன்றியதால் மேலேயே வேதா ஒரு ஆண் என அடையாளம் கொள்வதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை. ஒருவேளை பெண்ணாக இருந்திருந்தால் எனது எண்ணம் பொய்த்திருக்கும்... (நாம வித்தியாசமான பிறவியோ... :D)

சரி இத விடுங்க. அடுத்த கதை எப்போ???

கீதம்
12-08-2010, 11:25 PM
அட, ஆமாம்! மதி கேட்ட கேள்வியை நீங்கள் கேட்டதென்று தவறாக நினைத்துவிட்டேன். மன்னிச்சிடுங்க, அன்புரசிகன்.

கதைப்போட்டியில் 'பீஷ்மன்' கதை எழுதினேன் இல்லையா, அதைப் பற்றி தக்ஸ் குறிப்பிடுகையில் ஒரு ஆண் எழுதுவதைப் போன்று நீங்கள் எழுதியிருந்தாலும் ஒரு ஆணுக்கான பழக்கவழக்கங்களை, மேனரிஸத்தை காட்டவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நான் ஆணாய் இருந்திருந்தால்தானே அது சாத்தியம்?

ஆனாலும் இந்தக்கதையின் நோக்கம் வாசகர் ஆண்பாத்திரத்தை ஒரு பெண்ணாய் உணரவேண்டும் என்பதுதான். அவ்வனுபவம் எல்லோருக்கும் உண்டாகியிருந்தால்தான் கதைக்கு முழுமையான வெற்றி என்பேன். அதைத்தான் சொதப்பல் என்றேன். மற்றபடி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருபவைதான். விளக்கத்துக்கு நன்றி, அன்புரசிகன்.

அடுத்த கதையா? கூடிய விரைவில் பதிக்கிறேன். ஆனால் அதற்கொரு தனித்துவம் உண்டு. கதையைப் படித்து கண்டுபிடியுங்கள்.:)

பூமகள்
13-08-2010, 04:38 AM
தேர்ந்த எழுத்து நடை.

இறுதியில் சொல்லும் விடை... அழகாய், அம்சமாய் அமைந்திருக்கிறது கீதம்.

நிஜமாகவே கலக்கிட்டீங்க.

தொடர்ந்து அசத்துங்க. :)

leema
13-08-2010, 05:47 AM
அருமையான கதை கீதம். மேலும் தொடர வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!

கீதம்
13-08-2010, 11:06 AM
தேர்ந்த எழுத்து நடை.

இறுதியில் சொல்லும் விடை... அழகாய், அம்சமாய் அமைந்திருக்கிறது கீதம்.

நிஜமாகவே கலக்கிட்டீங்க.

தொடர்ந்து அசத்துங்க. :)

பூமகளிடமிருந்து பாராட்டு என்றால் பூங்கொத்து கிடைத்ததைப்போல் மகிழ்கிறேன். மிகவும் நன்றி, பூமகள்.

கீதம்
13-08-2010, 11:07 AM
அருமையான கதை கீதம். மேலும் தொடர வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!

மன்றத்தில் அடியெடுத்து வைத்ததுமே என் கதையைப் படித்துப் பாராட்டிய உங்கள் அன்புக்கு நன்றி, லீமா.

தீபா
13-08-2010, 11:45 AM
இறுதி வரியை ரசிக்கும் போது குறுநகை ஏற்படுகிறது. சிறப்பாக இயல்பாக, எளிமையாக, மற்றும் எல்லாமுமாக கதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே
-
தீபா

கீதம்
15-08-2010, 11:07 PM
இறுதி வரியை ரசிக்கும் போது குறுநகை ஏற்படுகிறது. சிறப்பாக இயல்பாக, எளிமையாக, மற்றும் எல்லாமுமாக கதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே
-
தீபா

உங்கள் பாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி, தீபா அவர்களே.

பா.ராஜேஷ்
29-08-2010, 02:55 PM
இன்றுதான் இந்த கதையை படிக்க நேர்ந்தது... வழக்கம் போலவே மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்... முடிவு எதிர் பாராத திருப்பம்... பாராட்டுக்கள்..

பா.சங்கீதா
05-09-2010, 06:56 AM
இறுதியில் நல்ல சஸ்பென்ஸ்
பாராட்டுகள் :)

கீதம்
06-09-2010, 12:31 AM
இன்றுதான் இந்த கதையை படிக்க நேர்ந்தது... வழக்கம் போலவே மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்... முடிவு எதிர் பாராத திருப்பம்... பாராட்டுக்கள்..

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உங்கள் அன்புக்கு நன்றி, ராஜேஷ்.

கீதம்
06-09-2010, 12:32 AM
இறுதியில் நல்ல சஸ்பென்ஸ்
பாராட்டுகள் :)

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி, சங்கீதா.

சுடர்விழி
06-09-2010, 02:16 AM
வழக்கம் போல் அசத்திட்டீங்க கீதம்...வித்தியாசமான முயற்சி ,அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள் !!

கீதம்
07-09-2010, 03:10 AM
வழக்கம் போல் அசத்திட்டீங்க கீதம்...வித்தியாசமான முயற்சி ,அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள் !!

உங்கள் மனமுவந்த பாராட்டுக்கு நன்றி, சுடர்விழி.

சிவா.ஜி
10-09-2010, 08:53 AM
சமீபகாலமாக மன்றத்தில் தொடர்ந்து வரும் பால் மாறாட்ட சஸ்பென்ஸ் கதைகளுக்கு இதுதான் முன்னோடியா....நான் விடுமுறையில் இருந்தபோது எழுதியிருக்கிறீர்கள்.

மிக மிக அருமை. உண்மையில் இந்தக் கதைக்குப் பின்னால் வந்த இதே சாயல் கதைகளைப் படித்தும்...இதைப் படிக்கும்போது கடைசிவரையில் என்னால் வித்தியாசத்தை உணர முடியவில்லை. பிரமாதம்.

ரொம்ப அருமையா கதையை செதுக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்மா.

கீதம்
12-09-2010, 01:12 AM

இந்தக்கதை பல கதைகளுக்குத் தூண்டுகோலாய் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன். உங்கள் பின்னூட்டம் இதற்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. மிகவும் நன்றி, அண்ணா.