PDA

View Full Version : ஆனாலும் அவன் நடக்கிறான்.



Vel Tharma
09-08-2010, 03:59 PM
இருளே வழியானது

துயரே துணையானது

எங்கும் அவலங்கள்

கூக்குரல்களே இசையானது

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

துணைக்கென வந்தோர்

துரோகிகளாயினர்

தீர்க்கவென வந்தோர்

தீர்த்துக் கட்டினர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பாரா முகங்களே

பழக்கங்கள் ஆயின

அள்ளி வைப்போரே

அருகில் நின்றனர்

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

அடுத்துக் கெடுப்போரே

அயலவர் ஆகினர்.

தடுக்க வேண்டியோரே

தண்டம் கொடுத்தனர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

பொய்களை பலவற்றை

திருப்பி திருப்பிச் சொல்லி

உண்மையாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

உண்மைகளை எல்லாம்

திருப்பி திருப்பி தாக்கிப்

பொய்களாக்கினர்.

ஆனாலும் அவன் நடக்கிறான்.

.

எல்லாமே இழந்தாலும்

நம்பிக்கை இழக்காததால்

கீழ்த்திசையில் ஒரு ஒளிக்கீற்றை

நோக்கி அவன் நடக்கின்றான்

அமரன்
09-08-2010, 06:08 PM
கடைசில சொன்னீங்க பாருங்க.. அதுதாங்க தேவையான வரம்..
நம்பிக்கை..
இந்தக் கை மட்டும் இருந்தால் மேற்கைக் கிழித்துக் கூட உதயம் காணலாம்..

பாராட்டுகள்.. ஏதோ ஒன்று ரசனையைக் கூட்டுது.

உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களையும் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் தர்மா

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-08-2010, 06:38 AM
தும்பிக்கையையும் விட வலுவானது நம்பிக்கை. கவிதையுடன் மன்றம் வந்த தர்மாவுக்கு வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
10-08-2010, 01:07 PM
இப்படித்தான் தர்மா, “போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டுமென் கண்ணனுக்கே”-ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும்..!!

நம்பிக்கையூட்டும் நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள்..!!