PDA

View Full Version : சூறாவளியின் பாடல்



M.Rishan Shareef
04-08-2010, 02:03 AM
சூறாவளியின் பாடல் (http://mrishanshareef.blogspot.com/2010/08/blog-post.html)

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# உயிர்மை
# விகடன்
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

வியாசன்
04-08-2010, 02:13 AM
[QUOTE=M.Rishan Shareef;484242]
சூறாவளியின் பாடல் (http://mrishanshareef.blogspot.com/2010/08/blog-post.html)

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்


[B]- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நல்ல வரிகள் தற்போதைய யதார்த்தை கொண்டு வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே

என்னவோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மன்றத்தில் கவிதைகளில் காற்றடிக்கின்றது. ஏதாவது காற்றுகளுக்குரிய தினமா?

சுடர்விழி
04-08-2010, 08:53 AM
அருமையான கவிதை....பாராட்டுக்கள்!

M.Rishan Shareef
17-08-2010, 03:25 PM
அன்பின் வியாசன்,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
17-08-2010, 03:26 PM
அன்பின் சுடர்விழி,

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :-)