PDA

View Full Version : புதிய வேர்கள்

கலையரசி
03-08-2010, 01:50 PM
இன்று காலை எழுந்ததிலிருந்தே என் மனசு சரியில்லை. அப்பாவுக்கு உடல்நலமின்றிப் போவதாகக் கனவு கண்டு அதிகாலையில் விழித்துக் கொண்டேன். அதற்குப் பிறகு கனவு தானே என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு தூங்குவதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. சரியான தூக்கமின்றி தலை பாரமாயிருந்தது.

திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகின்றது.

பக்கத்து வீடுகளில் யார் யார் வசிக்கிறார்கள் என்றே இன்றுவரை தெரியவில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் கிளம்புபவர்கள் மாலையில் பறவைகள் கூட்டுக்கு வந்தடைவதைப் போல குழந்தைகளுடன் வீடு திரும்புகிறார்கள். காருக்கான கேரேஜை திறந்து கொண்டு சென்று அதன் வழியாக இருக்கும் நுழைவாயில் வழியாகவே வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள். எப்போதாவது வெள்ளைக்காரர்கள் சிலர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் போது பார்த்தால் உண்டு. உயிரோட்டம் இல்லாத இத்தெருக்கள் நிசப்தமாயும் வெறிச்சோடியும் இருக்கின்றன என் மனசைப் போலவே.

“ஏன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு?” என்றார் கணவர். என் முகவாட்டத்தைக் கவனித்து விட்டார் போலிருக்கிறது.

”அப்பாவுக்கு உடம்பு சொகமில்லாதது மாதிரி ஒரு கனவு கண்டு பாதியிலே முழிச்சிக்கிட்டேன். அதான் என்னவோ ஏதோன்னு பயமாயிருக்கு.”

”அதெல்லாம் ஒன்னுமிருக்காது. நீ எப்பப்பார்த்தாலும் அப்பா, அம்மா, தம்பின்னு நெனைச்சிக்கிட்டிருக்கேல்ல, அதான் கனவா வருது. வேணுமின்னா போன் பண்ணிப் பேசேன்.”

”........”

”என்ன பதிலையே காணோம்?”

”இல்ல. வந்து.....”

”என்ன? இல்ல.. வந்து.”

”நான் ஒரு தடவை ஊருக்குப் போயி அப்பா அம்மாவைப் பார்த்துட்டு......?”.

”ஒனக்கு எத்தினி தட்வை சொல்றது? ஒரு தடவை சொன்னாப் புரியாது? நீ என்ன இன்னும் சின்னப்புள்ளையா? எப்பப் பார்த்தாலும் ஊர்..ஊர்ன்னுட்டு......ஒங்கத்தாத்தா தான் விமான சர்வீஸ் நடத்துறாரு. இந்தியாவிலேர்ந்து வந்து இப்பத்தான் ஒரு வருஷம் ஆவுது. அதுக்குள்ள ஊருக்குப் போகணுமாம். ஒண்ணு செய். ஒன்னை மட்டும் விமானத்தில ஏத்தி விடறேன். ஒங்க வூட்டுக்குப் போய் ஒங்கப்பா, அம்மா, தம்பி கூடவே எவ்வளவு நாள் வேணுமின்னாலும் இரு. இஙக வரவே வாணாம்.”

கோபமாகக் கத்திவிட்டு வெளியே கிளம்பியவரிடம்,.

”என்னங்க! டிபன் சாப்பிட்டுட்டுப் போங்க,” என்றேன்.

”ஒண்னும் வேணாம். எல்லாத்தையும் நீயே சாப்பிடு.” சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்று விட்டார் அவர்..

இப்போதெல்லாம் எங்களிருவருக்கும் சண்டை வர முக்கிய காரணமே இது தான். அடுத்த வருடம் ஊருக்குப் போகலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் இந்த வருடமே போக வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தால் போதும், அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.

வெளிநாட்டில் முதன் முதலில் கணவருடன் வந்து இறங்கிய போது நகரின் அழகும் சாலைகளின் தூய்மையும் கட்டிடங்களின் பிரும்மாண்டமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் என்னைப் பிரமிக்க வைத்ததென்னவோ உண்மைதான்.

தேனிலவைக் கொண்டாடும் விதமாக மெல்போர்னைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்ததோடு, சிட்னிக்கும் போய் அங்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தாயிற்று. ஒரு மாதம் போனது தெரியவில்லை. கணவரின் அலுவலக நண்பர்கள் வீட்டு விஜயம், பார்ட்டி அது இது என்று இரண்டொரு மாதங்கள் ஓடிப் போயின. ஆறாம் மாதத்திலிருந்து தனிமை என்னை வாட்டத் தொடங்கியது. அம்மா, அப்பாவை எப்போது பார்ப்போம் என்றிருந்தது.

கணிணியில் வெப் காமிரா மூலம் அவர்களைப் பார்த்த போது ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவர்கள் மடியில் தலை சாய்த்துத் தூங்க வேண்டும் போலிருந்தது. இத்தனைக்கும் கணவர் என் மீது அன்பாய்த் தான் இருக்கிறார். இருந்தாலும் நினைவுகள் ஏன் பிறந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வருகின்றன?

அவர் கிளம்பிச் சென்றவுடன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசினேன். அப்பாவைப் பற்றி விசாரித்தேன். அப்பா நலமாய்த் தான் இருக்கிறார் என்று அம்மா சொல்லக் கேட்டு ஆறுதல். ஆனால் அம்மா சொன்ன இன்னொரு தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது. எங்கள் வீட்டு மாமரம் திடீரென்று பட்டுப் போய் விட்டதாம். என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று அம்மா சொன்னார்.
வேளாண் துறை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து வந்து காட்டினார்களாம். வேரில் கரையான் வந்து அரித்திருக்கலாம் என்று அவர் சொன்னாராம்.

தொடர்ந்து பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. .
”சீ பைத்தியம். ஒரு மரம் செத்துப் போனதுக்கு யாராவது அழுவாங்களா? மனசளவில இன்னும் குழந்தையாவே இருக்கிறியே? ஒரு மரம் போனா இன்னொன்னு வைச்சிக்கலாம். இதுக்கா இவ்ளோ கவலைப்படுற? நம்மூர்ல சீசன்ல ஒரு கிலோ மாம்பழம் இருபது ரூபாய்க்குச் சிரிப்பாச் சிரிக்குது. இன்னொரு மரம் வைக்க முடியலேன்னாலும் காசைக் கொடுத்து மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டுக்கலாம். அழாதே” என்று சமாதானப்படுத்தினார் அம்மா.

தொலைபேசியை வைத்து விட்டுப் படுக்கையில் வந்து விழுந்த போது மாமரத்தின் இந்தத் திடீர் முடிவு என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. என் பிரிவு தந்த சோகத்தினால் மரம் செத்து விட்டதோ? தம்பியிடம் ஒரு முறை அந்த மாமரத்துக்கும் எனக்குமுள்ள பாசப் பிணைப்பைப் பற்றிச் சிலாகித்துச் சொன்ன போது, அவன் ”லூசாக்கா நீ?” என்று கேட்டுக் கிண்டல் பண்ணத் துவங்கிவிட்டான். அதிலிருந்து அதைப் பற்றி நான் வேறு யாரிடமும் மூச்சு விடவில்லை.

தம்பி முரடன். அவனுக்குப் பாசத்தை வெளிப்படுத்த தெரியாது.. நான் அவனிடம் பிரியமாக இருந்தாலும் வலிய என்னைச் சண்டைக்கு இழுத்து என்னைக் கோபப்பட வைப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம்..

நானும் தம்பியும் சண்டை போடும் போதெல்லாம்,
இப்படி கீரியும் பாம்புமாக எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கிறீங்களே, எப்பத் தான் ஒங்க சண்டை நிக்குமோ என அம்மா அடிக்கடி புலம்புவார்.

”ஏண்டா இன்னுங் கொஞ்ச நாள்ல கல்யாணமாகி அக்கா நம்மளையெல்லாம் விட்டுட்டு ஆஸ்திரேலியா போயிடுவாடா. அதுக்கப்புறம் அவ புருஷன் அனுமதிச்சா தான் நம்ம வீட்டுக்கே அவ வர முடியும். அதுவும் வெளி நாட்டிலேர்ந்து ஒரு மாச விடுமுறையில வரும் போது, மாமியார், நாத்தனார் வீட்டுக்கெல்லாம் போயிட்டு ஒரு வாரமோ, பத்து நாளோ தான் நம்ம வீட்டுக்கு வருவா. அக்கா நம்ம வீட்டுக்கு வர மாட்டாளான்னு அப்ப நீ ஏங்கித் தவிக்கப் போறே. அதுக்கப்புறம் உன்கிட்ட சண்டை போடறதுக்குக் கூட யாரும் கிடையாது,” என்று அம்மா சொல்லும்போது,

”நான் ஒன்னும் ஏங்க மாட்டேன். போய்த் தொலையட்டும். அப்பத் தான் நான் நிம்மதியா இருப்பேன்.” என்று சொன்னவன்,

”அக்கா மறுபடி எப்ப நம்ம வீட்டுக்கு வரும்?” என்று அம்மாவிடம் இப்போது அடிக்கடிக் கேட்கிறானாம். ”நீயில்லாமல் அவனுக்குப் போரடிக்குது,” என்றார் அம்மா பேசும் போது.

அவனிடம் சண்டை போட்ட அந்தப் பழைய ஞாபகங்கள் வந்து மனதைச் சங்கடப்படுத்தின.

”அம்மா, பாருங்கம்மா. ரிமோட்டை வைச்சிக்கிட்டு என்கிட்ட கொடுக்கவே மாட்டேங்கிறான். கொடுக்கச் சொல்லுங்கம்மா”

”ரொம்ப நேரமா நீ தானே பார்த்துக்கிட்டிருக்கே. அவக்கிட்ட கொஞ்ச நேரம் கொடேன்டா. ஒங்க ரெண்டு பேரு சண்டை என்னிக்குத் தான் தீரப்போகுதோ தெரியலையே.”

”முடியாதும்மா. நான் ஒரு முக்கியமான கார்ட்டூன் பார்த்துக் கிட்டிருக்கேன். அது முடிஞ்சப்புறம் தான் கொடுப்பேன்.”

”முடியாது. இப்பவே வேணும். அம்மா, கொடுக்க மாட்டேங்கிறான்மா.”

”ஏண்டி இப்படி நாலு தெருவுக்குக் கேட்கிற மாதிரி கத்துறே. இவ்ளோ பெரியவளா வளர்ந்துட்டியே ஒழிய, இன்னும் தம்பி கூட சரிக்குச் சரி சமானமா நின்னு சண்டை போடறதுக்கு வெட்கமாயில்லே ஒனக்கு?”

”நீங்க எப்பப் பார்த்தாலும் அவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணிப் பேசுவீங்க. எவ்ளோ நேரமா அவனே பார்த்துக்கிட்டிருக்கான். எங்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க”.

”ஏண்டா சனியனே. அதைக் கொடுத்துத் தொலையேன்டா. ஒங்க ரெண்டு பேரோட மல்லுக்கட்டி, மல்லுக்கட்டியே எனக்கு பிரஷர் ஏறித் தொலைஞ்சிடுது. ஒவ்வொரு வீட்டுல கூடப்
பொறந்ததுங்க, ஒன்னுக்கொன்னு எவ்ளோ அன்பா பாசமாயிருக்குதுங்க. எனக்குன்னு வந்து பொறந்திருக்கீங்களே. ரெண்டு பேருமே பார்க்க வேணாம். அந்த ரிமோட்டைக் கொண்டா இப்படி.”

தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு ரிமோட்டைப் பிடுங்கிக் கொண்டு அடுப்பங்கரையில் கொண்டு தம்முடனே வைத்துக் கொள்வார் அம்மா. இது தினந் தினம் எங்கள் வீட்டில் நிகழும் பிரச்சினை.

.இப்போது நினைத்தால் ஒரு பக்கம் சிரிப்பாய் வருகிறது; மறுபக்கம் தம்பியிடம் ஏன் அப்படிச் சண்டை போட்டோம் என்று வருத்தமாகவும் இருக்கிறது. இப்போது நாள் முழுக்க தொலைக்காட்சி பார்க்க வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.
காலையில் கணவருக்கு டிபன் செய்து அனுப்பிய பிறகு நாள் முழுக்க எனக்கு வேறு வேலையில்லை. அவர் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிடும்

”வூட்டு வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டது போட்டாப்ல கெடக்குது. பொண்ணாப் பொறந்தது ஒரு வேலையும் செய்யாம, நாள் முழுக்க ஒக்கார்ந்துக்கிட்டு டீ.வி.யே கதின்னு கெடக்குது. பொண்ணா வளர்த்து வைச்சிருக்கீங்கன்னு மாமியார்க்காரி என் முகத்தில காரித்தான் துப்பப் போறா,” என்று என்னைத் திட்ட அம்மா இங்கில்லை..

எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பதில் என்னுடன் போட்டி போட தம்பியுமில்லை. ஆனால் இப்போதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி எதையும் பார்க்க எனக்குத் துளிக்கூட விருப்பமில்லை. இத்தனைக்கும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இங்கு நன்றாகத் தெரிகின்றன. என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கத் தம்பியில்லை என்பதாலேயே தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு ஆர்வமின்றிப் போய் விட்டதோ?

எனக்குக் கரப்பான் பூச்சி என்றால் பயம் அதிகம். பயம் என்று சொல்வதை விட அருவருப்பு என்று சொன்னால் சரியாக இருக்கும். அதுவும் அது பறக்க ஆரம்பித்தால் நேரே என்னை நோக்கியே வரும். ”போன பிறவியில் நீயும் அதுவும் இணை பிரியாத் தோழிகளாயிருந்திருக்கிறீர்கள்,” என்று தம்பி கிண்டல் செய்வான். எனவே பூச்சி பறக்க ஆரம்பித்தவுடன் நான் அலறியடித்துக் கொண்டு இங்குமங்கும் ஓடுவதைக் கண்டால் அவனுக்கு மகிழ்ச்சி. என்னைக் கோபப்படுத்த வேண்டும் என்றே விழுந்து விழுந்து சிரிப்பான். அப்பூச்சியை அடிக்கச் சொல்லி அவனிடம் நான் கெஞ்ச வேண்டும். கொஞ்ச நேரம் என்னை அழவிட்டு வேடிக்கை பார்த்த பிறகே, அடித்துச் சாகடிப்பான்.

ஒரு தடவை நான் கட்டிலில் படுத்திருந்த போது, ”அக்கா, உன் மேலே ஒரு கரப்பான் பூச்சி,” என்று அவன் சொல்ல, நான் பயந்து போய் கட்டிலிருந்து வேகமாக எழ முயன்று, போர்வை தடுக்கிக் கீழே விழ, முட்டியில் பலத்த காயம்.

எதற்கும் அடிக்காத அப்பாவே அந்த முறை அவன் முதுகில் ரெண்டு சாத்து சாத்தியதில் என் மேல் கோபம் கொண்டு ஒரு வாரம் பேசாமலிருந்தான்.

கதைப் புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர். அதிலும் மர்ம நாவல்களைப் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். தம்பிக்குக் கதைகள் படிப்பதில் ஆர்வமில்லை. ஆனால் என்னிடம் வம்பளப்பதற்காகவே நான் பாதி படித்திருக்கும் கதையின் கடைசி சில பக்கங்களைப் படித்து விட்டு, முடிவைச் ’சொல்லிடுவேன், சொல்லிடுவேன்’ என்று பயமுறுத்துவான். முடிவு தெரிந்து விட்டால் கதையின் மீதத்தைப் படிக்கும் ஆர்வம் எனக்குக் குறைந்து போய் விடும் என்பதற்காக அவனிடம் சண்டை போடுவேன்.

ஒரு தடவை நான் மிகவும் சுவாரசியமான நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் போது, ’அந்த ஹீரோயின் கடைசியில செத்துடுவா,’ என்று அவன் முடிவைச் சொல்ல, கோபத்தில் நான் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஒரு நாள் முழுக்க அவனை ஆத்திரம் தீருமட்டும் திட்டிக் கொண்டிருந்தேன்.

அதே போல் சினிமா என்றாலும் தன் நண்பர்களுடன் படம் வெளியான ஒரு சில தினங்களிலேயே போய்ப் பார்த்து விட்டு வந்து விடுவான். படத்தின் முடிவைச் சொல்லட்டுமா என்று கேட்டு என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான்.

எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் இஞ்சீனியர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் ஆன பிறகு கூட, எங்கள் சண்டை ஓயவில்லை. ஆனால் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் தம்பியின் சார்பாகவே பேசும் அம்மா, அதற்குப் பிறகு என் சார்பாக பேசத் துவங்கியது தம்பிக்குப் பொறுக்கவில்லை. என் மீது அவனுக்குப் பொறாமை இன்னும் அதிகமானது.

உள்ளே ஓர் அழகிய கடிகாரம் வைத்து இரு பக்கமும் திறக்கும் படியான ஒரு சாவிக் கொத்தை அப்பா அலுவலகத்திலிருந்து ஒரு நாள் கொண்டு வந்தார். அதை நண்பரொருவர் அப்பாவிற்குப் பரிசாகக் கொடுத்தாராம். மூடிய பின் ஒரு சிவப்பு வண்டு போல் அழகாக இருந்தது அக்கடிகாரம். அப்பா அதை என்னிடம் தான் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அதை நான் சரியாகப் பார்க்கக் கூட இல்லை. அதற்குள் தம்பி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

”அப்பா எனக்குத் தானே கொடுத்தார். அதைக் கொடு,” என்று தினமும் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ”அவன் கொடுக்க முடியாது,” என்று சொல்லிவிட்டான். அவன் பள்ளி சென்ற சமயங்களில் அவனது மேசை, அலமாரி உட்பட எல்லாவிடங்களிலும் தேடிப்பார்த்து அலுத்துவிட்டது எனக்கு. கடைசிவரை அது கிடைக்கவேயில்லை. எங்கோ பத்திரமாக ஒளித்து வைத்து விட்டான்.

திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நெருங்கிய உறவுகள் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர். திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அப்பாவுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்த தம்பியைப் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.

நேற்று வரை சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட என்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவன், இன்று பெரிய மனுஷன் போல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறானே என எனக்கு ஆச்சரியம்.

திருமணத்தின் போது வ்ந்திருந்த சொந்தங்களுக்குத் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் ஆகட்டும், மாப்பிள்ளை வீட்டார்க்குக் குறையேதும் ஏற்படாவண்ணம் கவ்னித்துக் கொண்டதில் ஆகட்டும், ’பையன் என்றால் இப்படியல்லவோ இருக்கணும்,’ என்ற பாராட்டு அனைவரிடமும் கிடைக்கும் படி நடந்து கொண்டான் தம்பி.

கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலேயே நானும் என் கணவரும் ஆஸ்திரேலியா கிளம்புவதாக ஏற்பாடு. அம்மா வீட்டிலிருந்து மாமியார் வீட்டுக்குக் கிளம்பும் போது, எல்லாப் பெண்களையும் போல் எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

’பிறந்தது முதல் சுற்றிச் சுற்றி வந்த இந்த வீட்டை விட்டு முதல் தடவையாகப் பிரிகிறேன். இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லுடனும் எனக்கு உறவு. வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் அனைத்தும் தினந்தினம் தண்ணீர் ஊற்றி நான் பார்த்துப் பார்த்து வளர்த்தவை.

திருமணம் முடிந்தவுடன் நான் வேற்று மனுஷியாகி விட்டது போல் ஓர் உணர்வு. எனக்கும் இந்த வீட்டிற்கும் இருந்த பந்தம் அறுபட்டுவிட்டது. உரிமை பறிபோய்விட்டது. இந்த வீட்டைச் சுற்றி, உறவுகளைச் சுற்றியிருந்த என் ஆணிவேர் அறுபட்டு விட்டது. . அறுபட்டு விட்டது என்று சொல்வதை விட பலவந்தமாகப் பிடுங்கப்பட்டு விட்டது என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். இனி வேர் அறுபட்ட இந்தப் பெரிய மரம் புகுந்த வீட்டுக்குப் போய் புதிதாய் வேர் விட்டு உயிர் பிழைக்க வேண்டும்,’ என்று எனக்குள் ஏதேதோ எண்ணங்கள்.

கிளம்புவதற்கு முன் என் மாமரத்திடம் போய் பிரியாவிடை பெற்றுக் கொண்டேன். அது வெறும் மரமல்ல. உயிருள்ள என் தாத்தா. எனக்குத் தாத்தா என்றால் கொள்ளைப் பிரியம். சாவதற்கு முன் அவர் நட்டது அது. இன்னும் அந்த நாள் பசுமையாக என் நினைவில் இருக்கிறது.

சாவதற்குப் பத்து நாள் முன்னாடி தான் தாத்தா அந்த மாங்கன்றை நட்டார்.

“உடம்பு முடியாததோட இதெல்லாம் ஏன் தாத்தா செய்றீங்க? இது வளர்ந்து பெரிய மரமாகி, பழம் பழுத்து சாப்பிடற வரைக்கும் நீங்க இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கா தாத்தா ஒங்களுக்கு?

”நானா? இது காய்க்கிற வரைக்குமா? சான்ஸே இல்லடா செல்லம்”

”அப்புறம் ஏன் தாத்தா இதுக்குப் போயி இவ்வளவு கஷ்டப்படுறீங்க?”

”நான் சாப்பிடாட்டி என்னம்மா? நீ சாப்பிட்டா நான் சாப்பிட்டது மாதிரி. எங்கத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நான் பழம் பறிச்சேன். இந்தத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நீயும் தம்பியும் சாப்பிடுங்க. சரியா? உலகத்துல பொறந்த ஒவ்வொருத்தரும் தன்னோட சந்ததிக்காக இந்த மாதிரி மரம் ஒண்ணாவது நட்டு வைச்சிட்டுப் போகணும். புரிஞ்சுதா?”

நான் தலையாட்டி வைத்தேன்.

தாத்தா இறந்த பிறகு தினமும் நீர் விட்டுக் கண்ணுங் கருத்துமாக அச்செடியைக் கவனித்துக் கொண்டேன். மூன்று ஆண்டுகள் கழித்து அதன் பழத்தைச் சாப்பிட்டவர்கள், ’இந்த மாங்கன்னைக் கிழவர் எங்கேர்ந்து தான் கொண்டாந்து வைச்சாரோ தெரியலியே, இவ்ளோ ருசியா இருக்குதே,’ என்று புகழ்ந்தார்கள்.

என் மகிழ்ச்சி, துக்கம் வெற்றி தோல்வி எல்லாவற்றையுமே நான் இந்த தாத்தா மரத்துடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். நான் மிகவும் மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லும் போது தன் கிளைகளை வேக வேகமாக அசைத்து மரம் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது போல் எனக்குத் தோன்றும். அதுவே துக்கச் செய்தியைச் சொன்னால் மரம் ஆடாமல் அசையாமல் கிளைகளைத் தொங்க விட்டுக் கொண்டு சோர்வாக நிற்கும்.

அப்படித்தான் அன்றும் மரத்திடம் பிரியா விடை பெற்றுக் கொண்டேன். ’தாத்தா, நான் ஆஸ்திரேலியா போறேன். போயிட்டு வரட்டுமா? அடுத்த வருஷம் நீ காய்க்கும் போது பழம் சாப்பிட கண்டிப்பா நான் வருவேன்.’

மரம் ஆடாமல் அசையாமல் நின்றது. ’நீ இப்படி இருந்தா நான் போகமாட்டேன். போயிட்டு வான்னு சொல்லு. சொன்னாத்தான் போவேன்.’

திடீரென்று வீசிய காற்றில் மரக்கிளைகள் இப்படியும் அப்படியுமாக ஆடின. மரம் எனக்குக் கையசைத்து டாட்டா காட்டியது போல் உணரவே உற்சாகமானேன். ம்ரத்தைக் கட்டியணைத்துப் பிரியா விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

”அம்மா போயிட்டு வரேன்மா. வேலை, வேலைன்னு செஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. உடம்பைக் கவனிச்சிக்குங்க. அப்பாவையும் நல்லபடியா பார்த்துக்கோங்க.....”

அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. அம்மா முந்தானையால் தம் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தார். அப்பாவோ தாம் அழுவது எனக்குத் தெரியக் கூடாது என்பதற்காக வேறு பக்கம் திரும்பிக் கொண்டு என் பார்வையைத் தவிர்த்தார்.

”பொண்ணுக்குக் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்திட்டோம். இன்னும் கொழந்தையாவே தான் இருக்கா. அவ ஏதாவது தப்பு செஞ்சாலும் எங்களுக்காக நீங்க அவளை மன்னிச்சு நல்லவிதமாப் பார்த்துக்கணும்” அப்பா தம் மாப்பிள்ளையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு காரில் ஏறப்போகும் சமயம் என்னையும் அறியாமல் என் கண்கள் தம்பியைத் தேடின.

தம்பி திண்ணை ஓரத்தில் தூணைப் பிடித்த படி நின்று கொண்டிருந்தான். வழக்கமாக அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பைக் காணோம். முகம் வீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலிருக்கிறது.

”வரேன்டா தம்பி, நல்லாப் படிக்கணும்” அவன் அருகில் சென்று அவன் கன்னத்தைச் செல்லமாக ஒரு தட்டு தட்டிச் சொல்லிவிட்டுக் காரினுள் ஏறினேன். காரைச் சுற்றி எல்லாரும் நின்றிருந்தார்கள். என்னையும் அறியாமல் என் கண்கள் தம்பியைத் தேடின. அவன் நான் அமர்ந்திருந்த சன்னல் ஓரமாக வந்து உள்ளுக்குள் கைவிட்டு என் கைமீது பதித்து விட்டு, ’போயிட்டு வாக்கா’ என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்க்காமல் சட்டென்று திரும்பி விடு விடென்று வீட்டினுள் போய்விட்டான்.

கார் கிளம்பிச் சிறிது தூரம் சென்ற பிறகு, என் கையில் ஏதோ உறுத்துவது போலிருக்கவே, எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். அது எனக்கும் தம்பிக்கும் பலமுறை சண்டை வரக் காரணமான அந்தக் கடிகார கீ செயின்!

எனக்குக் கண்கள் பனித்தன.

எங்கோ எப்போதோ படித்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்து மனதைச் சங்கடப்படுத்தின:

”ஒன்றாய் இருந்த போது
ஒட்ட மறுத்த இதயம்
தொலைவில் இருக்கும் போதோ
ஒன்றிட ஏங்கித் தவிக்கிறது”

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நான், எப்போது தூங்கினேனோ தெரியவில்லை. தொலைபேசி அழைப்பு மணியின் சத்தம் கேட்டு எழுந்து போய் எடுத்தேன்.

”ஹலோ?”

”நான் தான்..”

”உம் சொல்லுங்க..”

”சாப்பிட்டியா?”

”இல்லை.”

”ஏன்?”

”அதான் என்னை ஊருக்குப் போ. இனிமே வரவே வேணாம்னு சொல்லிட்டீங்க. அப்புறம் என் மேல அப்படியென்ன கரிசனம்?
நான் சாப்பிட்டா ஒங்களுக்கென்னா? சாப்பிடாட்டி என்ன?
எப்ப எனக்கு விமான டிக்கெட் வாங்கித் தரப் போறீங்க?”

”சீ பைத்தியம். ஒரு கோபத்தில சொன்னா, அதை அப்படியே எடுத்துக்கிறதா? ஒங்கிட்டே ஏற்கெனவே சொல்லியிருக்கேன். நினைவு தெரியறதுக்கு முன்னாடியே எங்கம்மா இறந்திட்டாங்க. தாய்ப்பாசம்னா என்னன்னு தெரியாமலேயே நான் வளர்ந்தேன். சின்ன வயசில சித்திக் கொடுமையை அனுபவிச்சவன் நான். அதனால் பாசத்தை ஒங்கிட்ட எதிர்பார்த்து நான் ஏங்கி நிற்கிறேன். ஆனா நீ எப்ப பார்த்தாலும் அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டேயிருந்தா எந்த ஆம்பிளைக்குத் தான் கோபம் வராது?
எனக்குக் கிட்டாத அந்த அன்பு ஒனக்கு அளவுக்கு மேல கிடைச்சிருக்கிறதை நினைச்சு, சில சமயம் ஒன் மேல பொறாமையா கூட இருக்கு. இன்னிக்குக் காலையில ஒன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வந்த பிறகு மனசே சரியில்லை. வேலையிலேயும் சரியா கவனம் செலுத்த முடியலே. சாயங்காலம் சீக்கிரம் வரேன். கிளம்பித் தயாரா இரு. வெளியில போயிட்டு வருவோம். மனசுல ஒன்னும் வைச்சுக்காதே”

”சரி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு மலரும் நினைவுகளைச் சுமந்து கொண்டிருந்த பழைய நாட்குறிப்பை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டுத் துவங்கப் படாமலே கிடந்த புது வருட நாட்குறிப்பை எடுத்துத் தூசி தட்டி எழுதத் துவங்கினேன்:

”நேற்று என்பது முடிந்து போனது. இனி திரும்ப வராது;
நாளை என்பது நிச்சயமில்லாதது; அது வராமலே போகலாம்; இன்று என்பது மட்டுமே நிஜம்; எனவே இன்றைய தினத்தை நான் மகிழ்ச்சியாக கழிப்பேன்”

க.கமலக்கண்ணன்
03-08-2010, 02:36 PM
நேற்று முடிந்து விட்டது

நாளை என்பது கனவு

இன்று மட்டுமே நிஜம்

உண்மைதான் மனசு கனத்தது என்னவோ உண்மை

சரண்யா
03-08-2010, 03:17 PM
ரொம்ப அருமையாக ஒரு குடும்பத்தை விட்டு வந்த பெண்ணின் பிரிவு..பாசம்,மரங்கள் மீது செண்டிமெண்ட்,பிறந்த வீட்டு அன்பு மழையென எல்லாம் நிறைந்திருந்தது..
பகிர்வுக்கு நன்றி..
நல்வாழ்த்துகள்...

மதி
03-08-2010, 04:52 PM
அருமை கலையரசி அவர்களே. திருமணமாகி ஒரு பெண்ணின் மனதில் ஓடும் நினைவுகளை அப்படியே படம்பிடித்து காட்டுவது போல் இருந்தது கதை. எனக்கு மிகவும் பிடித்தது நூல் கோர்த்தது போல் நீங்கள் சொன்ன கதை தான். அப்பா பற்றி ஆரம்பித்து அம்மாவிடம் வந்து தம்பியுட செய்த ரகளைகள் திருமணம் அப்புறம் மாமரம் பற்றிய நினைவுகள் என கோர்வையாய் தங்குதடையின்றி நினைவுகள் பயணிக்கிறது. நிஜத்திலும் நம் நினைவுப்பயணமும் அப்படியே என்பதால் ரசிக்க முடிகிறது.
பாராட்டுக்கள்...

பாலன்
03-08-2010, 06:11 PM
இயல்பான குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பு. அன்புக்கு ஏங்கும் கணவன், அது அறியாமல் பிறந்த வீட்டு அன்பை நாடும் மனைவி, இறுதியில் யதார்த்தம் உணர்ந்து புரிதல் என தெளிவான நீரோடைபோல் கதையோட்டம். வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
03-08-2010, 07:07 PM
ஓரிடம் வளர்ந்த செடியை பிடுங்கி வேறிடம் நட்டுவைத்தால்...அது வேர்விட சில நாளாகும்....பிறந்த வீட்டை விட்டு கணவர் வீட்டுக்குப் போகும் பெண்ணின் ஏக்க உணர்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

அம்மாவின் பாசம், தம்பியியுடனான..செல்லச் சண்டைகள்...மாமரத்தின் மீதான ஈர்ப்பு என கோர்வையாகச் சொல்லி...கடைசியில் கணவனின் பாச ஏங்குதலில் முடித்தவிதம் அருமை. வாழ்த்துக்கள் கலையரசி.

Ravee
03-08-2010, 07:21 PM
கலை , சின்ன அலையாக அடிக்க ஆரம்பித்து நினைவுகள் என்ற சுழலில் போய் பின்னர் தெளிந்த நீரோடையாது போன்ற கதை . மௌனராகம் படம் போல மனதில் காட்சிகளை வரவைத்த கதை. கண்டிப்பா ரேவதியும் மோகனும் பொருத்தமாக இருப்பாங்க இந்த கதைக்கு....:) :)

அன்புரசிகன்
04-08-2010, 12:10 AM
மனசுல ஒன்னும் வச்சுக்காத என்ற வரி வரைக்கும் கதையை கண் இமைக்காது படித்தேன். அந்தளவு கதையின் ஆத்மார்த்தமான ஆழம் ஆர்வத்துடன் கதையை படிக்கத்தூண்டியது. வீட்டில் அந்த மரங்களிடையே ஆன உறவை உணர்ச்சி கொப்பளிப்பாக காட்டியுள்ளீர்கள். அருமையாக இருந்தது. உண்மை. கடல் கடந்தால் இப்படியான வாழ்க்கைக்கு உட்பட்டே ஆகவேண்டும். வாழ்த்துக்கள் கலையரசி.

----

சிறு சந்தேகம். முடிந்தால் தீர்த்துவையுங்கள். பழைய நாட்குறிப்பை வைத்து பூட்டி புதிய நாட்க்காட்டியை தூசி தட்டுவதன் அர்த்தம் அந்த பெண் கதாபாத்திரத்தில் மாசு இருந்ததாகவே உணர்த்துகிறது. அதாவது இதுவரை (1வருடமாக) அவரது வாழ்க்கை சரியாக இல்லாது புதிதாக ஆரம்பித்துள்ளார். அந்த தூசி தட்டுவது எதேச்சையான வரியா இல்லை உருவாக்கப்பட்ட வரியா??? புதியதை தூசுதட்டுவது???????

Akila.R.D
04-08-2010, 07:00 AM
வெளிநாடு போகும் ஒரு பெண்ணின் ஏக்கங்களை அழகாய் கூறியுள்ளீர்கள்..

வாழ்த்துக்கள் கலையரசி..

கீதம்
04-08-2010, 11:00 AM
கதை என்று சொல்வதை விட பல பெண்களின் ஆரம்பகால திருமண வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இப்போது பெண்கள் என்ன, ஆண்பிள்ளைகள் கூட மேற்படிப்பு , வேலை என்று குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை. தாய்நாட்டைப் பிரிந்த எல்லோருக்குமே எழும் ஏக்கம் என்றாலும், புதிய குடும்பத்தில் அடியெடுத்துவைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும்.

இயல்பான நிகழ்வுகளும், ஆழ்ந்த உணர்வுகளும் ஆங்காங்கே அழகாய் கோர்க்கப்பட்டு அற்புதக் கதையாக வடிவம் பெற்றிருக்கிறது. என் மனமார்ந்த பாராட்டுகள். அக்கா.

ஆதவா
04-08-2010, 12:47 PM
ரொம்ப நல்லா இருக்குங்க கதை.

வெளிநாடுகளில் வாழும் பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது போலும்.
நல்ல நினைவுகளும், உரையாடல்களும் கலந்து இருக்கின்றன.!

(அந்த கவிதை தாமரை அண்ணா எழுதியது என்று நினைக்கிறேன்.)

கலையரசி
04-08-2010, 01:51 PM
நேற்று முடிந்து விட்டது

நாளை என்பது கனவு

இன்று மட்டுமே நிஜம்

உண்மைதான் மனசு கனத்தது என்னவோ உண்மை

முதல் பின்னூட்டத்திற்கு நன்றி கமலக்கண்ணன்.

கலையரசி
04-08-2010, 01:53 PM
ரொம்ப அருமையாக ஒரு குடும்பத்தை விட்டு வந்த பெண்ணின் பிரிவு..பாசம்,மரங்கள் மீது செண்டிமெண்ட்,பிறந்த வீட்டு அன்பு மழையென எல்லாம் நிறைந்திருந்தது..
பகிர்வுக்கு நன்றி..
நல்வாழ்த்துகள்...

திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு முதன் முதலில் புகுந்த வீடு செல்லும் எல்லாப் பெண்களுக்குமே இந்த உணர்வுகள் இருக்கும் சரண்யா. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

கலையரசி
04-08-2010, 01:55 PM
அருமை கலையரசி அவர்களே. திருமணமாகி ஒரு பெண்ணின் மனதில் ஓடும் நினைவுகளை அப்படியே படம்பிடித்து காட்டுவது போல் இருந்தது கதை. எனக்கு மிகவும் பிடித்தது நூல் கோர்த்தது போல் நீங்கள் சொன்ன கதை தான். அப்பா பற்றி ஆரம்பித்து அம்மாவிடம் வந்து தம்பியுட செய்த ரகளைகள் திருமணம் அப்புறம் மாமரம் பற்றிய நினைவுகள் என கோர்வையாய் தங்குதடையின்றி நினைவுகள் பயணிக்கிறது. நிஜத்திலும் நம் நினைவுப்பயணமும் அப்படியே என்பதால் ரசிக்க முடிகிறது.
பாராட்டுக்கள்...

அருமை எனப் பாராட்டியதற்கும் ரசித்ததற்கும் மனம் நிறைந்த நன்றி மதி. என நடுத்தம்பியின் பெயரும் மதி என்பதால் என்னை அக்கா என்று அழையுங்கள். அவர்களே என்பது வேண்டாம். சரியா?

கலையரசி
04-08-2010, 01:56 PM
இயல்பான குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பு. அன்புக்கு ஏங்கும் கணவன், அது அறியாமல் பிறந்த வீட்டு அன்பை நாடும் மனைவி, இறுதியில் யதார்த்தம் உணர்ந்து புரிதல் என தெளிவான நீரோடைபோல் கதையோட்டம். வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி பாலன்.

கலையரசி
04-08-2010, 01:57 PM
ஓரிடம் வளர்ந்த செடியை பிடுங்கி வேறிடம் நட்டுவைத்தால்...அது வேர்விட சில நாளாகும்....பிறந்த வீட்டை விட்டு கணவர் வீட்டுக்குப் போகும் பெண்ணின் ஏக்க உணர்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

அம்மாவின் பாசம், தம்பியியுடனான..செல்லச் சண்டைகள்...மாமரத்தின் மீதான ஈர்ப்பு என கோர்வையாகச் சொல்லி...கடைசியில் கணவனின் பாச ஏங்குதலில் முடித்தவிதம் அருமை. வாழ்த்துக்கள் கலையரசி.

ஏகப்பட்ட குடும்ப பணிக்களுக்கிடையிலும் மன்றம் வந்து பின்னூட்டமிட்டு வாழ்த்திய சிவா.ஜி சாருக்கு மனம் நிறைந்த நன்றி.

கலையரசி
04-08-2010, 01:59 PM
[QUOTE=Ravee;484212][COLOR="RoyalBlue"][B][SIZE="2"]கலை , சின்ன அலையாக அடிக்க ஆரம்பித்து நினைவுகள் என்ற சுழலில் போய் பின்னர் தெளிந்த நீரோடையானது போன்ற கதை .

அழகான கவிதை வரிகளால் கதையை விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி ரவி. இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.

கலையரசி
04-08-2010, 02:13 PM
மனசுல ஒன்னும் வச்சுக்காத என்ற வரி வரைக்கும் கதையை கண் இமைக்காது படித்தேன். அந்தளவு கதையின் ஆத்மார்த்தமான ஆழம் ஆர்வத்துடன் கதையை படிக்கத்தூண்டியது. வீட்டில் அந்த மரங்களிடையே ஆன உறவை உணர்ச்சி கொப்பளிப்பாக காட்டியுள்ளீர்கள். அருமையாக இருந்தது. உண்மை. கடல் கடந்தால் இப்படியான வாழ்க்கைக்கு உட்பட்டே ஆகவேண்டும். வாழ்த்துக்கள் கலையரசி.

----

சிறு சந்தேகம். முடிந்தால் தீர்த்துவையுங்கள். பழைய நாட்குறிப்பை வைத்து பூட்டி புதிய நாட்க்காட்டியை தூசி தட்டுவதன் அர்த்தம் அந்த பெண் கதாபாத்திரத்தில் மாசு இருந்ததாகவே உணர்த்துகிறது. அதாவது இதுவரை (1வருடமாக) அவரது வாழ்க்கை சரியாக இல்லாது புதிதாக ஆரம்பித்துள்ளார். அந்த தூசி தட்டுவது எதேச்சையான வரியா இல்லை உருவாக்கப்பட்ட வரியா??? புதியதை தூசுதட்டுவது???????

புத்தாண்டு துவங்கி சில மாதங்கள் ஆகி விட்டன. புது நாட்குறிப்பு எழுதப்படாமல் தூசி படிந்து மேஜை மேல் கிடக்கிறது. அவளோ பழைய நாட்குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு அதில் எழுதப்பட்ட விஷயங்களையே மீண்டும் மீண்டும் படித்துப் பிறந்த வீட்டின் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருக்கிறாள். ஒரு வருடம் ஆகியும் அவளால் புகுந்த வீட்டில் ஒன்ற முடியவில்லை.

கணவனோடு சண்டையிட்டுச் சமாதானம் ஆகும் அன்று தான் அவளுக்குக் கணவன் தன் அன்புக்கு ஏங்கும் செய்தி புரியத் துவங்க, பழைய நாட்குறிப்பை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறாள். அதாவது பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மனக்கதவை மூடி விட்டு கணவனுக்காக புதுச் சாளரத்தைத் திறக்கிறாள்.
நான் வேண்டுமென்றே தான் இந்த வரிகளை உருவாக்கினேன். கதைக்குச் சரியாகப் பொருந்தவில்லையாயின் அவற்றை நீக்கி விடுவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை.

கதையை ஆழமாகப் படித்து அருமையான பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் அன்பு ரசிகன். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. அதற்கு மீண்டும் என் நன்றி.

கலையரசி
04-08-2010, 02:16 PM
வெளிநாடு போகும் ஒரு பெண்ணின் ஏக்கங்களை அழகாய் கூறியுள்ளீர்கள்..

வாழ்த்துக்கள் கலையரசி..

பிறந்த வீட்டிலிருந்து திருமணம் ஆகி வேறு வீடு சென்றாலே கஷ்டம். அதிலும் சில வருடங்களுக்குப் பெற்றோரைப் பார்க்க முடியவில்லையென்றால் இன்னும் கஷ்டம். அந்த ஏக்கத்தைத் தான் கதையாக்கினேன் அகிலா. வாழ்த்துக்கு மிக்க நன்றி அகிலா.

கலையரசி
04-08-2010, 02:25 PM
ரொம்ப நல்லா இருக்குங்க கதை.

வெளிநாடுகளில் வாழும் பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது போலும்.
நல்ல நினைவுகளும், உரையாடல்களும் கலந்து இருக்கின்றன.!

(அந்த கவிதை தாமரை அண்ணா எழுதியது என்று நினைக்கிறேன்.)

நல்லா இருக்குன்னு பாராட்டியதற்கு மிக்க நன்றி ஆதவா.
இந்தக் கவிதையைச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வார இதழில் படித்தேன். அந்தக் கவிதையை எழுதி வைக்காமல் போனோமே என நான் வருந்தியதுண்டு. கடைசி மூன்று வரிகள் மட்டுமே ஓரளவிற்கு நினைவிலிருந்தன. அதைத் தான் கதையில் எழுதினேன்.

அது தாமரை அவர்களால் எழுதப்பட்டதா? அப்படியாயின் மன்றத்தில் அது இருக்கும் இணைப்பைக் கொடுங்கள். மீண்டும் படிக்க மிகவும் ஆசை.

ஆதவா
04-08-2010, 02:52 PM
அது கவிச்சமர்ல இருக்கும்னு நினைக்கிறேன். அவர் தனித்திரிகள்ல எழுதினதவிட பதிவுகள்ல (ரிப்லை) எழுதினதுதான் அதிகம்!

கலையரசி
04-08-2010, 02:58 PM
அது கவிச்சமர்ல இருக்கும்னு நினைக்கிறேன். அவர் தனித்திரிகள்ல எழுதினதவிட பதிவுகள்ல (ரிப்லை) எழுதினதுதான் அதிகம்!

நான் தேடிப்பார்க்கிறேன். மிக்க நன்றி ஆதவா.

பா.ராஜேஷ்
04-08-2010, 03:01 PM
அடடா!! வழக்கம் போல மிக அருமையான கதை... திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்களின் மனத்தை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

Nivas.T
04-08-2010, 04:34 PM
கார் கிளம்பிச் சிறிது தூரம் சென்ற பிறகு, என் கையில் ஏதோ உறுத்துவது போலிருக்கவே, எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். அது எனக்கும் தம்பிக்கும் பலமுறை சண்டை வரக் காரணமான அந்தக் கடிகார கீ செயின்!

எனக்குக் கண்கள் பனித்தன.

எங்கோ எப்போதோ படித்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்து மனதைச் சங்கடப்படுத்தின:

”ஒன்றாய் இருந்த போது
ஒட்ட மறுத்த இதயம்
தொலைவில் இருக்கும் போதோ
ஒன்றிட ஏங்கித் தவிக்கிறது”

அழகான கதை :)
நல்ல பாசப்பிணைப்பு :)
மனசை கனக்கவைக்கும் கதை :mad:

தொடருங்கள் :icon_b:

அன்புரசிகன்
04-08-2010, 10:06 PM
கணவனோடு சண்டையிட்டுச் சமாதானம் ஆகும் அன்று தான் அவளுக்குக் கணவன் தன் அன்புக்கு ஏங்கும் செய்தி புரியத் துவங்க, பழைய நாட்குறிப்பை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறாள். அதாவது பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மனக்கதவை மூடி விட்டு கணவனுக்காக புதுச் சாளரத்தைத் திறக்கிறாள்.
நான் வேண்டுமென்றே தான் இந்த வரிகளை உருவாக்கினேன். கதைக்குச் சரியாகப் பொருந்தவில்லையாயின் அவற்றை நீக்கி விடுவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை.

கதையை ஆழமாகப் படித்து அருமையான பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் அன்பு ரசிகன். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. அதற்கு மீண்டும் என் நன்றி.

கடவுளே.. நான் நீக்கச்சொல்லவில்லை. என் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். அவ்வளவே. அந்த இறுதி வரிகளில் தான் கதையின் நீதியே உள்ளது. எழுதுங்கள். நாம படிக்கத்தான மன்றம் வருகிறோம். மனம் சோர்வடையும் போது மன்றம் வந்து ஏதாவது படிக்கும் போது தான் புத்துணர்ச்சி அடைகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு இது பெரிதாக தோற்றாது. ஊரை பிரிந்து வாழும் உறவுகளுக்கு BOOST. வாழ்த்துக்கள்.

பாரதி
05-08-2010, 10:12 AM
அழகிய கதை.

ஒரு தம்பியின் கண்ணோட்டத்தில் இருந்து இக்கதையை புரிந்து கொள்ள முடிகிறது. பல நிகழ்வுகள் உண்மையானவை!

மனதைத் தொட்ட கதை.

இதயப்பூர்வமான பாராட்டு!

தாமரை
05-08-2010, 10:24 AM
நல்லா இருக்குன்னு பாராட்டியதற்கு மிக்க நன்றி ஆதவா.

அது தாமரை அவர்களால் எழுதப்பட்டதா? அப்படியாயின் மன்றத்தில் அது இருக்கும் இணைப்பைக் கொடுங்கள். மீண்டும் படிக்க மிகவும் ஆசை.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13932

கலையரசி
05-08-2010, 12:59 PM
"அருகில்
தூரப்பட்ட மனங்கள்
தூரமுள்ள மனங்கள்
அருகில்.."
அழகான வரிகள். தாமரையின் அர்த்தமுள்ள அரட்டை படித்தேன், ரசித்தேன். இணைப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

கலையரசி
06-08-2010, 01:30 PM
அடடா!! வழக்கம் போல மிக அருமையான கதை... திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்களின் மனத்தை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜேஷ்!

சுடர்விழி
07-08-2010, 12:09 PM
என்ன சொல்றதுன்னே தெரியல....ரொம்ப அருமையான கதை..என்னுடைய மன உணர்வுகளோடு ஒட்டிய கதை...ரொம்ப கஷ்டம்தான்...குடும்பத்தை பிரிவதே வேதனை..அதிலும் வெளிநாடு...[நானும் இது போல் நிறைய அழுதிருக்கிறேன்]....ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க...மிகுந்த பாராட்டுக்கள்.

கலையரசி
07-08-2010, 01:07 PM
அழகான கதை :)
நல்ல பாசப்பிணைப்பு :)
மனசை கனக்கவைக்கும் கதை :mad:

தொடருங்கள் :icon_b:

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நிவாஸ்.

கலையரசி
07-08-2010, 01:10 PM
கடவுளே.. நான் நீக்கச்சொல்லவில்லை. என் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். அவ்வளவே. அந்த இறுதி வரிகளில் தான் கதையின் நீதியே உள்ளது. எழுதுங்கள். நாம படிக்கத்தான மன்றம் வருகிறோம். மனம் சோர்வடையும் போது மன்றம் வந்து ஏதாவது படிக்கும் போது தான் புத்துணர்ச்சி அடைகிறது. ஊரிலிருப்பவர்களுக்கு இது பெரிதாக தோற்றாது. ஊரை பிரிந்து வாழும் உறவுகளுக்கு BOOST. வாழ்த்துக்கள்.

கதையை நாம் எழுதி இன்னொருவர் படித்துச் சுட்டிக்காட்டும் போது தான் சில தவறுகள் நமக்குத் தெரிய வரும். அப்படி நினைத்துத் தான் மாற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்று சொன்னேன்.
உங்களது வாழ்த்துக்களுக்கு மீண்டும் என் நன்றி.

அமரன்
07-08-2010, 01:10 PM
கோர்வைதான் கதையின் பலம்.

பிறந்த இடத்திலிருந்து பெயர்த்து புகுந்த வீட்டில் ஊன்றப்பட்ட பெண்ணின் மனவோட்டத்தில் கோர்க்கப்பட்ட உறவுகள்..

ஒரு பக்கத்தில் மட்டும் பார்வை பதிவது பிரச்சினைகள் பலதுக்கு மூலம். முடிவில் அதை உணர்த்துவது, குறிப்பாக நாட்குறிப்பின் மூலம் எழுதி இருப்பது சிறப்பு. சுகமோ சோகமோ சுமப்பது நாட்குறிப்பின் பொறுப்பு என்பது மறுக்க முடியாதது.

சுழலும் சக்கரத்துக்கு இசைவாக மண்ணை வனைந்தால் பானை நிச்சயம். இசைமுறிவு என்றால் உடைவுதான் மிஞ்சும்.

கருத்தார்ந்த கதை.

பாராட்டுகள் கலைக்கா.

கலையரசி
07-08-2010, 01:11 PM
அழகிய கதை.

ஒரு தம்பியின் கண்ணோட்டத்தில் இருந்து இக்கதையை புரிந்து கொள்ள முடிகிறது. பல நிகழ்வுகள் உண்மையானவை!

மனதைத் தொட்ட கதை.

இதயப்பூர்வமான பாராட்டு!

தம்பியின் கண்ணோட்டத்தில் படிக்கும் போது நிறைய வீடுகளில் இது நடக்கும் கதை தான். உங்களது இதயப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி.

கலையரசி
08-08-2010, 09:34 AM
கதை என்று சொல்வதை விட பல பெண்களின் ஆரம்பகால திருமண வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இயல்பான நிகழ்வுகளும், ஆழ்ந்த உணர்வுகளும் ஆங்காங்கே அழகாய் கோர்க்கப்பட்டு அற்புதக் கதையாக வடிவம் பெற்றிருக்கிறது. என் மனமார்ந்த பாராட்டுகள். அக்கா.

பலரின் ஆரம்ப காலத் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது கீதம். பலருடைய உணர்வுகளை இக்கதை நினைவுபடுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!

கலையரசி
08-08-2010, 09:36 AM
என்ன சொல்றதுன்னே தெரியல....ரொம்ப அருமையான கதை..என்னுடைய மன உணர்வுகளோடு ஒட்டிய கதை...ரொம்ப கஷ்டம்தான்...குடும்பத்தை பிரிவதே வேதனை..அதிலும் வெளிநாடு...[நானும் இது போல் நிறைய அழுதிருக்கிறேன்]....ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க...மிகுந்த பாராட்டுக்கள்.

கதை உங்களது பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டது என்பதை அறியும் போது யதார்த்தம் கதையில் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். இப்போது அழுவதில்லை அல்லவா? புகுந்த வீட்டில் புதிய வேர்கள் விட்டு ஆழமாக வேரூன்றி விட்டீர்கள் அல்லவா?
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுடர்விழி.

கலையரசி
08-08-2010, 09:38 AM
கோர்வைதான் கதையின் பலம்.

பிறந்த இடத்திலிருந்து பெயர்த்து புகுந்த வீட்டில் ஊன்றப்பட்ட பெண்ணின் மனவோட்டத்தில் கோர்க்கப்பட்ட உறவுகள்..

ஒரு பக்கத்தில் மட்டும் பார்வை பதிவது பிரச்சினைகள் பலதுக்கு மூலம். முடிவில் அதை உணர்த்துவது, குறிப்பாக நாட்குறிப்பின் மூலம் எழுதி இருப்பது சிறப்பு. சுகமோ சோகமோ சுமப்பது நாட்குறிப்பின் பொறுப்பு என்பது மறுக்க முடியாதது.

சுழலும் சக்கரத்துக்கு இசைவாக மண்ணை வனைந்தால் பானை நிச்சயம். இசைமுறிவு என்றால் உடைவுதான் மிஞ்சும்.

கருத்தார்ந்த கதை.

பாராட்டுகள் கலைக்கா.
உங்களது ஆழ்ந்த விமர்சனமும் பாராட்டுக்களும் என் மனதை மிகவும் மகிழ்விக்கின்றன. அன்புத் தம்பி அமரனுக்கு மிக்க நன்றி.

சுடர்விழி
08-08-2010, 10:27 AM
கதை உங்களது பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டது என்பதை அறியும் போது யதார்த்தம் கதையில் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். இப்போது அழுவதில்லை அல்லவா? புகுந்த வீட்டில் புதிய வேர்கள் விட்டு ஆழமாக வேரூன்றி விட்டீர்கள் அல்லவா?
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுடர்விழி.

என்னதான் புதிய வேர்கள் வேரூன்றி விட்டாலும் ,இன்னும் கொஞ்சம் பழைய வேர்கள் அங்கே பாக்கியிருக்கின்றன..அதையெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.பழகி விட்டது அவ்வள்வு தான்..

கலையரசி
12-08-2010, 01:59 PM
என்னதான் புதிய வேர்கள் வேரூன்றி விட்டாலும் ,இன்னும் கொஞ்சம் பழைய வேர்கள் அங்கே பாக்கியிருக்கின்றன..அதையெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.பழகி விட்டது அவ்வள்வு தான்..

ஆமாம் சுடர்விழி. ஆனால் குழந்தைகள் வந்துவிட்டால் அவர்களைச் சுற்றி புது உலகம் ஒன்றை நம்மால் சிருஷ்டித்து விட முடியும்! அப்போது இந்தப் பிறந்த வீட்டுக் கவலைகள் தானாக நம்மை விட்டு நீங்கிவிடும்.
நன்றி சுடர்விழி!

mojahun
16-08-2010, 12:33 AM
மனித மன உணர்வுகளை வெளிப்படுத்திய அருமையான வெளிப்பாடு. இக் கதை பெண்களின் உணர்வுகளுக்கு மட்டுமே அன்று! ஊதியம் ஈட்ட வெளிநாடு செல்லும் ஆண்களுக்கும் பொருந்தும். அருமை! அருமை!! நன்றி கலையரசி அவர்களே!

கலையரசி
18-08-2010, 12:43 PM
மனித மன உணர்வுகளை வெளிப்படுத்திய அருமையான வெளிப்பாடு. இக் கதை பெண்களின் உணர்வுகளுக்கு மட்டுமே அன்று! ஊதியம் ஈட்ட வெளிநாடு செல்லும் ஆண்களுக்கும் பொருந்தும். அருமை! அருமை!! நன்றி கலையரசி அவர்களே!

ஆமாம். இப்போது வெளிநாடு செல்லும் ஆண்களுக்கும் இவ்வுணர்வுகள் பொருந்தும். பின்னுட்டத்திற்கு நன்றி. உங்களை எப்படி அழைப்பது?

KONGU
25-08-2010, 12:15 PM
மனதை தொட்டுவிட்டீர்கள்,வாழ்த்துக்கள்...!

கலையரசி
25-08-2010, 01:04 PM
வாருங்கள் கொங்கு! உங்கள் மன்ற வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

இராஜேஸ்வரன்
28-03-2012, 05:53 AM
படித்து முடிக்கும் வரை நிறுத்த முடியாமல் செய்த ஒரு அருமையான கதை.

”நான் சாப்பிடாட்டி என்னம்மா? நீ சாப்பிட்டா நான் சாப்பிட்டது மாதிரி. எங்கத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நான் பழம் பறிச்சேன். இந்தத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நீயும் தம்பியும் சாப்பிடுங்க. சரியா? உலகத்துல பொறந்த ஒவ்வொருத்தரும் தன்னோட சந்ததிக்காக இந்த மாதிரி மரம் ஒண்ணாவது நட்டு வைச்சிட்டுப் போகணும். புரிஞ்சுதா?”

தாத்தா மரம் நடுவதை சொல்லுவதாகட்டும்.....

எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பதில் என்னுடன் போட்டி போட தம்பியுமில்லை. ஆனால் இப்போதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி எதையும் பார்க்க எனக்குத் துளிக்கூட விருப்பமில்லை. இத்தனைக்கும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இங்கு நன்றாகத் தெரிகின்றன. என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கத் தம்பியில்லை என்பதாலேயே தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு ஆர்வமின்றிப் போய் விட்டதோ?

சண்டை போடும் தம்பியை ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைத்து பார்ப்பதாகட்டும்........

நினைவு தெரியறதுக்கு முன்னாடியே எங்கம்மா இறந்திட்டாங்க. தாய்ப்பாசம்னா என்னன்னு தெரியாமலேயே நான் வளர்ந்தேன். சின்ன வயசில சித்திக் கொடுமையை அனுபவிச்சவன் நான். அதனால் பாசத்தை ஒங்கிட்ட எதிர்பார்த்து நான் ஏங்கி நிற்கிறேன். ஆனா நீ எப்ப பார்த்தாலும் அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டேயிருந்தா எந்த ஆம்பிளைக்குத் தான் கோபம் வராது?
எனக்குக் கிட்டாத அந்த அன்பு ஒனக்கு அளவுக்கு மேல கிடைச்சிருக்கிறதை நினைச்சு, சில சமயம் ஒன் மேல பொறாமையா கூட இருக்கு. இன்னிக்குக் காலையில ஒன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வந்த பிறகு மனசே சரியில்லை. வேலையிலேயும் சரியா கவனம் செலுத்த முடியலே. சாயங்காலம் சீக்கிரம் வரேன். கிளம்பித் தயாரா இரு. வெளியில போயிட்டு வருவோம். மனசுல ஒன்னும் வைச்சுக்காதே”

தாய்ப்பாசத்தை அறியாத கணவன் தன் நிலையை விளக்கிச் சொல்வதிலாகட்டும்.........

கார் கிளம்பிச் சிறிது தூரம் சென்ற பிறகு, என் கையில் ஏதோ உறுத்துவது போலிருக்கவே, எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். அது எனக்கும் தம்பிக்கும் பலமுறை சண்டை வரக் காரணமான அந்தக் கடிகார கீ செயின்!

தம்பியின் பாசத்தை கடைசியில் சொல்வதிலாகட்டும்........ உங்களின் எழுத்து திறமை பளிச்சிடுகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

Kausalya
04-04-2012, 05:08 AM
கோர்வையாக கதையின் பாதை மாறாமல் நகைச்சுவையுடனும் அன்பால் ஏற்பட்ட நெகிழ்வுடனும் அனைந்துள்ளது. இந்த கதையில் வரும் நாயகி போல், ஒவ்வோரு வீட்டிலும் மணமான பெண்கள் உணரும் மனப்போராட்டத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

கலையரசி
08-04-2012, 06:19 AM
படித்து முடிக்கும் வரை நிறுத்த முடியாமல் செய்த ஒரு அருமையான கதை.

தாத்தா மரம் நடுவதை சொல்லுவதாகட்டும்.....

சண்டை போடும் தம்பியை ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைத்து பார்ப்பதாகட்டும்........

தாய்ப்பாசத்தை அறியாத கணவன் தன் நிலையை விளக்கிச் சொல்வதிலாகட்டும்.........

தம்பியின் பாசத்தை கடைசியில் சொல்வதிலாகட்டும்........ உங்களின் எழுத்து திறமை பளிச்சிடுகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆழமான பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இராஜேஸ்வரன்!

கலையரசி
08-04-2012, 06:20 AM
கோர்வையாக கதையின் பாதை மாறாமல் நகைச்சுவையுடனும் அன்பால் ஏற்பட்ட நெகிழ்வுடனும் அனைந்துள்ளது. இந்த கதையில் வரும் நாயகி போல், ஒவ்வோரு வீட்டிலும் மணமான பெண்கள் உணரும் மனப்போராட்டத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கெளசல்யா!

கலைவேந்தன்
08-04-2012, 06:41 AM
ஓர் உண்மையைச் சொல்லவேண்டும்.

நானும் சில கதைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் ஒரு சிறுகதைக்கு நாலுபக்க பின்னூட்டங்களா என்று சற்று எரிச்சலுடன் கதையை வாசித்தேன்..

மனதைக் கவர்வது என்பதை எக்கதைகளும் செய்யக்கூடும். மனதைத் தொடுவது என்பது உங்களின் இந்த கதை போல சிலவற்றுக்கே முடியும்.

கதை தொடக்கத்தில் இருந்து கதை நாயகியின் உணர்வுகளூடே பயணம் செய்து ஒரு கட்டத்தில் கண்களில் சில நீர்த்திவலைகளையும் கொணர்ந்தது உங்கள் கதை.

பாராட்டுகள் கலையரசி.. பெயரில் ஒற்றுமை இருப்பதால் இரட்டிப்பு மகிழ்வும் கூட..!

கலையரசி
09-04-2012, 01:12 PM

மனதைத் தொட்டுக் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது என்பதை அறியும் போது இக்கதை வெற்றி பெற்றதாக உணர்கிறேன்.
உங்களது மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி கலைவேந்தன்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-04-2012, 01:42 PM
மிகவும் எதார்த்தமாக இந்தக் கதையை எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.:):)