PDA

View Full Version : அன்னையர் தினம்

கீதம்
02-08-2010, 06:46 AM
நான் அன்னையர் தினத்தை எதிர்நோக்கி அப்படியொன்றும் ஆவலுடன் காத்திருக்கவில்லை. மாறாக, அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்பதைப் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்துக்கொன்டிருந்தேன்.

மூன்று வருடங்கள் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த ஆலிஸின் குறுகிய கால சந்தோஷ வாழ்க்கையில், கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாட்களுக்கான மாபெரும் கொண்டாட்டங்களுடன் இந்த அன்னையர் தினமும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

ஆலிஸ், அன்பு அம்மாவுக்கென்று (அப்பாவின் உதவியுடன் தான்) அனுப்பியிருக்கும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டே அதன் முக்கியத்துவத்தை எவரும் உணரமுடியும்.

இப்போது அவற்றை மீளவும் பார்க்கும் ஆர்வமெழவே, என் பொக்கிஷங்களை ரகசியமாய்ப் பாதுகாக்கும் அலங்காரக் கண்ணாடி மேசையின் கடைசி இழுப்பறையைத் திறந்து, அவற்றை வெளியிலெடுத்தேன்.

இது இப்போது வேண்டாத வேலையென்று உள்மனம் எச்சரித்தாலும், என்னை நானே கட்டுப்படுத்த இயலாத நிலையிலிருந்தேன்.

மூன்று வாழ்த்தட்டைகள்தாம் என்றாலும் ஒவ்வொன்றும் என் இதயத்துடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

முதலட்டையில் பெரிய புஸு புஸுவென்ற முயல் குட்டியொன்று முத்தங்களுடன் ஒரு வாசகத்தையும் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. "இந்த உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்கு"

இதைப்படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதே வாசகத்தைத் தாங்கி எத்தனை எத்தனை வாழ்த்தட்டைகள் எத்தனை எத்தனை அன்னையரிடம் அளிக்கப்படுகின்றன? 'இந்த உலகிலேயே தலைசிறந்த' அம்மாக்கள் என்று எத்தனை பேர்தான் இருக்கக்கூடும்?

அதன் கீழ் "இன்றைய தினம் அற்புதமாய் அமையட்டும், ஏனெனில் நீ கோடிகளில் ஒருத்தி!" என்று எழுதியிருந்தது. கீழே ஆலிஸின் பெயர். ஆனாலும் இதன் அர்த்தத்தை ஆலிஸ் அன்று அறிந்திருப்பாளா என்றால் நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு குழந்தைக்கு என்ன தெரியும் அன்னையர் தினத்தைப் பற்றியெல்லாம்?

அந்த சுகமான தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பல ஏமாற்றங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும் பிறகு, நாங்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோரானோம், அதுவும் அன்னையர் தினத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் என்பதே அந்நாளில் நம்பமுடியாத உண்மையாக இருந்தது.

இரண்டாவது அட்டை ரோஜா நிறத்தில் பளீரிடும் நாடாக்களால் ஒரங்கள் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரமாதமாய் இருந்தது.

அபோதெல்லாம் எங்கு வெளியில் சென்றாலும் ஆலிஸுக்கு ரோஜா நிற உடை உடுத்தியே எடுத்துச் செல்வது வழக்கம். இயல்பாகவே அமைந்த வட்டவடிவ முக அமைப்பு அவளை ஒரு ஆண்பிள்ளையென்றே பிறரை எண்ணச்செய்தது. அந்த எண்ணத்தை விரட்ட ரோஜா நிற உடைகள் உதவின.

ஆலிஸுக்கு அப்போது இரண்டு வயது.அவ்வட்டையில் அவளே தன் கையால் ரோஜா நிற ஜெல் பேனா கொண்டு ஏதேதோ கிறுக்கியிருந்தாள்.

"அம்மா" என்ற வார்த்தையே ஆயிரம் கதை சொல்லும்போது அவளுக்கென்று தயாரிக்கப்படும் வாழ்த்தட்டைகளில் ஆயிரமாயிரம் கற்பனை பீறிட்டு வாராதோ? ஒரு சிறுமியை தாய் அணைத்திருக்க, அவர்களைச் சுற்றிலும் ஏராளமான இதயங்கள்!

ஆலிஸ் வெகுவிரைவிலேயே நடக்கத் தொடங்கிவிட்டாள். விடுவிடுவென்று விரைவாகவும் நடப்பாள். எப்போது எங்கள் கூட்டு வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதல்ல, அவகாசத்தின்பேரில் அளிக்கப்பட்டது என்று எங்களுக்குத் தெரியவந்ததோ, அப்போதிருந்து அவள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி எங்களுடனேயே தக்கவைக்க பெரும்பாடு பட்டோம்.

அதனாலேயே இந்த மூன்றாவது வாழ்த்தட்டை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. திறந்தால் இசைபாடும் அந்த அட்டையை நான் திறந்துகாட்டியதுதான் தாமதம், ஆலிஸ் அதை திறப்பதும் மூடுவதுமாய் நாள்முழுவதும் இசையை ஒலிக்கச்செய்த அந்நாட்கள் நினைவுக்கு வந்தன.

"நீ அதை வீணடிக்கத்தான் போறே!"

என் எச்சரிக்கையை அவள் லட்சியம் செய்யவே இல்லை. ஒரு கள்ளப்புன்னகையுடன் என்னைப் பார்த்தபடியே அவள் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள்.

இந்த அட்டையில் அவளே அவள் பெயரை எழுதியிருந்தாள். அந்தப் பொன்னான தருணங்களை மீட்டெடுத்துக்கொன்டிருந்தன, அட்டைகள். வாழ்த்தட்டை அதுவே கூறிய வாழ்த்து போதாதென நினைத்தோ, என்னவோ ஆலிஸ் தன் பங்குக்கு இன்னும் எழுதியிருந்தாள்.

"அன்புள்ள அம்மா! எனக்கு அம்மாவாய் இருப்பதற்கு உனக்கு அளவிலா நன்றிகள்!" அழகாய் அவள் கைப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

நான்காவது அட்டையும் வரக்கூடும். ஆனாலும் சென்ற முறை கிடைத்த வாழ்த்தட்டையின் பெருமையை இனி வருபவை பெறுமா என்பது சந்தேகமே.

கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. சட்டென சுயநினைவுக்கு வந்த நான், என்னை ஒரு முட்டாளைப் போல் உணர்ந்தேன்.

எவரிடமிருந்தும் அதிகம் வாழ்த்தட்டைகள் வரப் பெற்றிருக்காத, இனியும் பெற இயலாத பரிதாபத்துக்குரிய பழங்கால பாட்டிமார்கள் போன்று நானும் இவ்வளவு நேரம் இருந்திருப்பதை எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். அவர்கள் தங்களுக்கு பல வருடங்களுக்கு முன் வந்திருக்கக்கூடிய ஒரு சில வாழ்த்தட்டைகளை வைத்துக்கொன்டு பழங்கதை பேசி அதில் திளைப்பது வாடிக்கைதானே!

நானும் ஆலிஸின் பழைய வாழ்த்தட்டைகளை வைத்துக்கொண்டு, கடந்தகால நினைவுகளில் மூழ்கி, நிகழ்கால சிந்தனையற்று உட்கார்ந்திருப்பதை யாரேனும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?

நிச்சயம் அவர்கள் வாயைத் திறந்து எதுவும் சொல்லமாட்டார்கள், எனக்குத் தெரியும்.

ஒரு பரிதாபப் பார்வையை வீசிவிட்டு, பேச்சை வேறுபக்கம் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். பெரும்பாலானோர் இப்படித்தானே செய்கிறார்கள், அந்த சம்பவத்துக்குப் பிறகு?

மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இம்முறை பொறுமையற்று பலமாக தட்டப்பட, கதவுக்கு வெளியில் யாரென்பது திறக்காமலேயே விளங்கியது.

அவசரமாக, இழுப்பறையில் அட்டைகளைப் பதுக்கிவிட்டு, கதவைத் திறந்தேன். குட்டி ஏவுகணையொன்று விருட்டென்று வீட்டுக்குள் புகுந்து என் கால்களைக் கட்டிக்கொண்டது. பின் அங்கிருந்து விடுபட்டு நேரே வரவேற்பறை பாய்ந்து தொலைக்காட்சியை முடுக்கி கண்களை மேயவிட்டது.

"முதல்லே ஷூவைக் கழற்று!"

என் வழக்கமான கத்தலுக்கு வழக்கம்போலவே அவள் செவிசாய்க்கவில்லை. பார்ப்பவர்கள் இந்த வீட்டின் எஜமானி அவள்தான் என்று நினைக்கக்கூடும்.

"ஹாய்!"

தெரஸா, ஆலிஸின் மெய்க்காவலாளி (?) எதையோ சொல்ல விரும்புபவள் போல் இன்னும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள்.

தெரஸா மட்டும் இல்லையென்றால் என் கதி என்னவாகியிருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அதுவும் பள்ளி விடுமுறை நாட்களில்?

ஆலிஸை தெரஸாவின் பொறுப்பில் விட்டுவிட்டு கவலையில்லாமல் அலுவலகம் போகமுடிகிறது. பணி முடிந்து வரும் வழியில் தினமும் அவளை தெரஸா வீட்டிலிருந்து அழைத்து வருவேன்.

இன்று, தெரஸாவே ஆலிஸை அழைத்து வருவதாக சொன்னாள். மேலும் என்னிடம் எதையோ தரவேண்டுமென்றும் சொன்னாள்.

அவள் கையிலிருந்த கடித உறைகளைப் பார்த்த நொடியே எனக்குள் பயம் அப்பிக்கொண்டது. அவள் தன்னுடைய பொறுப்பிலிருந்து விடுபட முன்கூட்டியே கடிதம் தரப்போகிறாள்.

இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். தெரஸா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். படிப்பு முடிந்து வேலை கிடைக்கும்வரைதான் ஆலிஸை அவளால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருந்தேன்.

"நான் உள்ள வரலாமா? இதை உங்களிடம் கொடுக்கணும்," அவள் என்னைப் பார்த்து வித்தியாசமாய் சிரிப்பது போலிருந்தது.

நான் தயங்கியபடியே பின்வாங்கினேன். "தயவுசெய்து...இப்போது இது வேண்டாமே, தெரஸா!"

"ஏன்?" அவள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே சொன்னாள். "இதிலே என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியாது."

"எனக்குத் தெரியும்னு நான் நினைக்கிறேன்."

"நிஜமாவா?"

அவள் இரண்டு கடித உறைகளையும் நீட்டினாள். "ஒண்ணு, உங்களுக்காக ஆலிஸ்கிட்டேயிருந்து. இதை அவளே தயாரிச்சா. மற்றது நான் உங்களுக்குக் கொடுக்கிறது."

எங்கள் உரையாடலைக் கவனித்த ஆலிஸ் வரவேற்பறையிலிருந்து துள்ளிக்குதித்து ஓடிவந்தாள்.

"என்னோடதுதான் முதல்லே......என்னோடதுதான் முதல்லே......"

நான் அப்படியே செய்தேன்.

"உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங்களைக் கண்டதும் என் கண்கள் பனித்தன.

"இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கும் தெரியாம, கடைசி டிராயர்ல! அங்கேயே வச்சிடவா? அப்பதான் இது தனியா இருக்காது!"

ஆலிஸ் உரக்கக் கேள்வியெழுப்பினாள். எதுவும் சொல்ல இயலாமல் மெளனமாய் தலையசைத்தேன். அமைதியாய் அடுத்ததைப் பிரித்தேன்.

"பிரிச்சிப் பாருங்க.....பிரிச்சிப் பாருங்க......"ஆலிஸ் நிலைகொள்ளாமல் மேலும் கீழும் குதித்துக்கொண்டே உற்சாகத்துடன் பாடினாள்.

அது சென்ற வருடத்து அட்டையை அப்படியே ஒத்திருந்தது, அதே இசையைப் பாடியது. ஆனால் ஒரு சிறிய வித்தியாசமிருந்தது.

"அன்புள்ள அம்மா" என்பதில் 'அம்மா' என்ற வார்த்தையின் குறுக்காக ஒரு கோடு கிழிக்கப்பட்டு அதற்குப் பதில் 'அப்பா' என்று எழுதப்பட்டிருந்தது.

"இதெல்லாம் ஆலிஸோட யோசனைதான். நீங்க எதுவும் தப்பா நினைக்கமாட்டீங்கன்னு நம்புறேன்."

தெரஸா அமைதியாய் புன்னகைத்தாள்.

"ரொம்ப அழகா இருக்கு!" என்னை நானே சமாளிக்க பெரும் பிரயத்தனப்பட்டேன்.

"அப்பா! அம்மா மேலேயிருந்து இந்த கார்டையெல்லாம் பாப்பாங்களா?"

"நிச்சயமா பார்ப்பாங்க, கண்டிப்பா பார்ப்பாங்க!"

"இப்படிதான் தெரஸா ஆன்ட்டியும் சொன்னாங்க!"

ஆலிஸ் உற்சாகத்துடன் கூறினாள்.

என் கையிலிருந்த உறையிலிருந்து எதுவோ நழுவிக் கீழே விழ, குனிந்து எடுத்தேன்.

திரையரங்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கட்டுகள்.

வியப்புடன் ஒன்றும் புரியாமல் தெரஸாவை ஏறிட்டேன். நாணத்தால் முகம் சிவந்துபோனது அவளுக்கு.

"அது.... அது வந்து.... நீங்க என்னோட வருவீங்களான்னு தெரியல...... இருந்தாலும்..... ஒருவேளை... இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லைனா..... வருவீங்கன்னு...."

அவள் முடிக்கமுடியாமல் தடுமாறினாள்.

"ரொம்ப நன்றி, தெரஸா!"

நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்களை எங்கள் இருவரது கரங்களுடன் பின்னியபடியே எங்களுக்கிடையில் ஊஞ்சலாடினாள்.

இந்த அன்னையர் தினம் மிகப் பிரகாசமானதாகத் தோன்றியது எனக்கு.

(மூலம்: Sophie King எழுதிய Mother's Day என்ற ஆங்கிலச் சிறுகதை.)

கலையரசி
02-08-2010, 04:03 PM
"மூன்று வருடங்கள் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த ஆலிஸின் குறுகிய கால சந்தோஷ வாழ்க்கையில்......."
இந்த வரிகளைப் படிக்கையில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை. தன் கையாலேயே வாழ்த்து அட்டை தயாரித்து அந்தக் குழந்தை தன் தாயிடம் வெளிப்படுத்தும் அன்பு மனதை நெகிழ்விக்கிறது.
அந்தக் குழந்தைக்கு என்ன கோளாறு என்று சொல்லாமலே கதை முடிகிறது. அடுத்த வருடம் வாழ்த்து அட்டை தயாரித்துக் கொடுக்க அந்தக் குழந்தை இருக்குமா? தாயின் மனநிலையையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.

மனதை நெகிழ்விக்கும் நல்ல கதை. நல்ல மொழி பெயர்ப்பு. பாராட்டுக்கள் கீதம்.

பாலன்
02-08-2010, 04:16 PM
ஆரம்பத்தில் யார் கதையை உரைப்பது என்று புரியவில்லை. இறுதியில்தான் விளங்கியது. கதை முழுதும் மென்மையான உணர்வுகளின் வெளிபாடு. படிப்பதற்க்கே இத்தனை சிரமமாக இருக்கிறதே, கண்டிப்பாக இதை மொழிபெயர்க்க ரொம்பவே சிரமபட்டிருப்பீர்கள். மொழிபெயர்க்கும்போது மூலக்கதை சிதையக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர, வசனங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்றே நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. உங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கீதம்
02-08-2010, 10:45 PM

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, அக்கா.

சமீபத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர் Sophie King எழுதிய ‘சிறுகதைகள் எழுதுவது எப்படி?’ என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பலதரப்பட்ட யுத்திகளில் ஒன்றுதான் எதிர்பாலினத்தில் எழுதி கடைசியில் முடிச்சவிழ்ப்பது. இதற்கு உதாரணமாக இந்தக்கதையை மேற்கோளிட்டிருந்தார். படித்தபோது எனக்கும் உங்களுக்குத் தோன்றியதுபோலவே தோன்றியது.

கதவு திறக்கப்பட்டு குட்டி ஏவுகணையொன்று பாய்ந்தது என்பது வரை ஆலிஸ் என்னும் குழந்தை இருக்கிறதா? இறந்துவிட்டதா? அல்லது ஏதேனும் நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறதா? என்று பல்வேறு சிந்தனைகள்.

குழந்தை வந்ததும் அது கதாசிரியரை ஒரு இடத்தில் (கதை முழுவதிலும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே) ‘அப்பா ‘ என்று அழைக்கிறது. மேலும் ‘அம்மா, மேலே இருந்து என் கார்டை பார்ப்பார்களா?’ என்று கேட்கிறது. அபோது எழுகிறது குழப்பம்.

ஆலிஸின் குறுகிய கால சந்தோஷ வாழ்க்கை என்பது அவள் தாயுடன் வாழ்ந்த அந்த நாட்களைக் குறிக்கிறதாம். உண்மையில் இறந்துபோனது அக்குழந்தையின் தாய்தான்.

ஒரு தாய் தன் நினைவுகளை மீட்டெடுப்பது போன்றே இதுவரை புரிந்துகொண்ட நமக்கு அது தாயில்லை, தந்தை என்ற உண்மை புரிய வெகுநேரமாகிறது. புரிந்தாலும் அந்த மாயையிலிருந்து விடுபட நம்மால் முடியவில்லை. இதுதான் அந்தச் சிறுகதைக்கு கிடைத்த வெற்றி என்கிறார் ஆசிரியர். தெரஸா என்னும் பெண் அந்தக் குழந்தைக்கு தாயாக விரும்புவதுபோல் கதை முடிகிறது.

ஆரம்பத்தில் யார் கதையை உரைப்பது என்று புரியவில்லை. இறுதியில்தான் விளங்கியது. கதை முழுதும் மென்மையான உணர்வுகளின் வெளிபாடு. படிப்பதற்க்கே இத்தனை சிரமமாக இருக்கிறதே, கண்டிப்பாக இதை மொழிபெயர்க்க ரொம்பவே சிரமபட்டிருப்பீர்கள். மொழிபெயர்க்கும்போது மூலக்கதை சிதையக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர, வசனங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்றே நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. உங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

என்னைப் பாதித்த இந்தக் கதையை மன்ற நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவிரும்பியே மொழிபெயர்க்க முடிவுசெய்தேன். இது மொழிபெயர்ப்பில் என் முதல் முயற்சி என்பதால் தடுமாற்றம் இருக்கலாம். கூடுமானவரை உரையாடல்களை இயல்பாகவே கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். குறையிருந்தால் பொறுத்துக்கொள்ளவும். பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி, பாலன் அவர்களே.

ரங்கராஜன்
03-08-2010, 12:06 PM
கீதா அக்கா நன்றாக இருந்தது, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்......

அம்மா இந்த வார்த்தையில் அங்குகிறது அண்ட சராசரம்...

ஒரு துளியில் இருந்து நம்மை உருவாக்கி, செல்கள் கொடுத்து, தசைகள் கொடுத்து, உறுப்புகள் கொடுத்து, ரத்தத்தை கொடுத்து, பிறந்த பின்னர் தன் வாழ்க்கையையே பிள்ளைக்காக கொடுக்கும் ஒரு உன்னத ஜீவன் தாய்.... அவளுக்கு என்று ஒரு தினம் வேண்டாம்......ஒவ்வொரு தினமும் அவளுக்காக வாழ வேண்டும் பிள்ளைகள்...

ஆனால் சமீபகமாலமாக நம் சமுதாயத்தில் சில சம்பவங்களை பார்க்கும் போது மனது வெம்புகிறது.

கணவனுடன் சண்டை பிள்ளைகளை கொடூரமாக கொன்று தாயும் தற்கொலை.... இதையாவது பிள்ளைகளை அனாதையாக விட்டுச் செல்ல மனமில்லாமல், தாய் அப்படி செய்தாள் என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால்......தவறான உறவு முறையால் பிள்ளைகளை பலி கொடுத்து அவர்கள் சுயநலத்துடன் இன்பம் காண ஆரம்பித்து விட்டார்கள், , , ,ஒன்று அல்ல ஆயிரம் சம்பவங்கள் தினம் தினம் இப்படி நடக்கிறது.

இந்த காலகட்டத்தில் தாய்மையின் பெருமையை மறந்து கடமையை மறந்து ஏன் சில பெண்கள் இப்படி செல்கிறார்கள் என்று மனம் ஒரு கட்டத்தில் வெறுத்துகூட போகிறது. எங்கு நடக்கிறது தவறு....... உலகம் எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவில்லை...

தன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பிள்ளைக்காக வாழும் அன்னையர்களும் இன்று பூமியில் அதிக அளவில் ஜீவிப்பதால், நாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம்.......ஒரு நகரத்திற்கு அருகே இருக்கும் நதி தூய்மையாக இருக்கிறது என்றால், நகரத்தில் சாக்கடை வடிகால்கள் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.............சோ சாக்கடைகளை பற்றி கவலைப்படாமல், புனித நதிகளை மட்டும் நாம் வணங்குவோமாக..

அனைவருக்கும் அன்னையர்கள் தின வாழ்த்துக்கள்

பா.சங்கீதா
03-08-2010, 02:25 PM
ரொம்பவும் நல்ல இருக்கு அக்கா........

மதி
03-08-2010, 04:49 PM
வாவ்.... இத இதத் தான் எதிர்பார்த்தேன். நீங்கள் படித்த புத்தகமும் சரி.. இந்த கதையும் சரி... அட்டகாசம். ஆரம்பத்தில் இருந்து படிக்கும் போது ஒரு அம்மாவின் பார்வையாகத் தான் உணர்ந்தேன். முதலில் ஆலிஸுக்குத் தான் என்னவோ என்ற எண்ணம்.. ஆனால் அடுத்ததாக ஆலிஸின் வருகை. உலகின் தலை சிறந்த அப்பா என்று வரும் இடமும் அம்மா மேலிருந்து இதெல்லாம் பார்ப்பாங்களா என்று கேட்கும் போது யார் பார்வை என்பதும் புரிகிறது....
இறுதியாய் வருபவை கதையின் முடிவுக்காக என்றுத் தோன்றுகிறது. ஆலிஸ் அப்பாவிடம் கேட்குமிடத்தில் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...:)

நீங்கள் சொன்ன புத்தகத்தை நானும் வாங்க முயற்சிக்கிறேன். கதை சொல்லும் உத்திகளில் சிறப்பான ஒன்று இது... அதை விட சிறப்பு அதன் அம்சம் குறையாமல் நீங்கள் மொழிபெயர்த்திருப்பது. எந்த இடத்திலும் குழப்பாமல்..அதே நேரம் அந்த சஸ்பென்ஸும் கெட்டுவிடாமல் அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.. அதன் மூலத்திற்கு நியாயம் செய்வது போல்.

மிக்க நன்றி கீதம் அக்கா.. (இப்படி கூப்பிடலாங்களா?? :))

அன்புரசிகன்
04-08-2010, 01:06 AM
இப்படியான எழுத்துக்களுடனான கதையை படிப்பது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன். அச்சுப்பிசகாத எழுத்தாளரின் ஆதே ஆளுமையுடன் கூடிய மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் கீதம். (வம்சமே சிறந்த மொழிபெயர்ப்பாளர்களோ... :D) அந்த குழந்தை அப்பா என்று அழைத்தபோது நீங்கள் ஏதோ மொழிபெயர்ப்பில் தவறுசெய்துவிட்டீர்களோ என்று நினைத்தேன். பிறகு தெரஸா வெட்கி நாணிணாள் என்ற வரியில் தான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது... இது அப்பா என்று அப்போது தான் தெளிவாகிறது. (எனக்கு) அந்த மூன்று வருட விடையம் அவரின் மனைவிக்கானது என்ற முடிச்சு கடைசி வரை எங்கும் காட்டப்படாது விடுகிறது. அது தான் கதையில் மர்மமுடிச்சாக இருக்கிறது.

சரண்யா
04-08-2010, 02:01 AM
மொழிப்பெயர்ப்பு செய்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே..
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துகள்...

கீதம்
04-08-2010, 10:51 PM

உங்கள் கருத்தாழமிக்க பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்துபோனேன் தக்ஸ்.

நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகளுக்கு கலாசார சீரழிவு என்று பெயரிடுவதைத் தவிர வேறென்ன சொல்வது?

வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி, தக்ஸ்.

கீதம்
04-08-2010, 10:52 PM
ரொம்பவும் நல்ல இருக்கு அக்கா........

மிகவும் நன்றி, சங்கீதா.

கீதம்
04-08-2010, 10:58 PM
வாவ்.... இத இதத் தான் எதிர்பார்த்தேன். நீங்கள் படித்த புத்தகமும் சரி.. இந்த கதையும் சரி... அட்டகாசம். ஆரம்பத்தில் இருந்து படிக்கும் போது ஒரு அம்மாவின் பார்வையாகத் தான் உணர்ந்தேன். முதலில் ஆலிஸுக்குத் தான் என்னவோ என்ற எண்ணம்.. ஆனால் அடுத்ததாக ஆலிஸின் வருகை. உலகின் தலை சிறந்த அப்பா என்று வரும் இடமும் அம்மா மேலிருந்து இதெல்லாம் பார்ப்பாங்களா என்று கேட்கும் போது யார் பார்வை என்பதும் புரிகிறது....
இறுதியாய் வருபவை கதையின் முடிவுக்காக என்றுத் தோன்றுகிறது. ஆலிஸ் அப்பாவிடம் கேட்குமிடத்தில் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...:)

நீங்கள் சொன்ன புத்தகத்தை நானும் வாங்க முயற்சிக்கிறேன். கதை சொல்லும் உத்திகளில் சிறப்பான ஒன்று இது... அதை விட சிறப்பு அதன் அம்சம் குறையாமல் நீங்கள் மொழிபெயர்த்திருப்பது. எந்த இடத்திலும் குழப்பாமல்..அதே நேரம் அந்த சஸ்பென்ஸும் கெட்டுவிடாமல் அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.. அதன் மூலத்திற்கு நியாயம் செய்வது போல்.

மிகவும் நன்றி, மதி.

புத்தகத்தின் பெயர் How to write short stories for magazines and get published? கிடைத்தால் வாங்குங்கள். நிறைய யுத்திகள் சொல்லியிருக்கிறார். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நான் நூலகத்தில் எடுத்துப் படித்தேன்.)

மிக்க நன்றி கீதம் அக்கா.. (இப்படி கூப்பிடலாங்களா?? :))

தாராளமாய் கூப்பிடுங்கள். 'அக்கா' என்றால் ஒரு தனி மரியாதைதானே?:icon_b:

கீதம்
04-08-2010, 11:08 PM
இப்படியான எழுத்துக்களுடனான கதையை படிப்பது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன். அச்சுப்பிசகாத எழுத்தாளரின் ஆதே ஆளுமையுடன் கூடிய மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் கீதம். (வம்சமே சிறந்த மொழிபெயர்ப்பாளர்களோ... :D) அந்த குழந்தை அப்பா என்று அழைத்தபோது நீங்கள் ஏதோ மொழிபெயர்ப்பில் தவறுசெய்துவிட்டீர்களோ என்று நினைத்தேன். பிறகு தெரஸா வெட்கி நாணிணாள் என்ற வரியில் தான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது... இது அப்பா என்று அப்போது தான் தெளிவாகிறது. (எனக்கு) அந்த மூன்று வருட விடையம் அவரின் மனைவிக்கானது என்ற முடிச்சு கடைசி வரை எங்கும் காட்டப்படாது விடுகிறது. அது தான் கதையில் மர்மமுடிச்சாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பில் என் முதல் முயற்சி என்றபோதும் அது சரியாகவே வந்திருக்கிறது என்பதை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிகிறேன். மேலும் பல மொழியாக்கங்கள் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எழுகிறது. உங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
04-08-2010, 11:10 PM
மொழிப்பெயர்ப்பு செய்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே..
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துகள்...

மிகவும் நன்றி, சரண்யா. என்னை அக்கா என்றே அழையுங்கள். நிச்சயம் நீங்கள் என்னைவிட இளையவராகவே இருப்பீர்கள்.:)

பாரதி
05-08-2010, 06:53 AM
பாராட்டுகிறேன்!
கதை சொல்லும் முறைகளில் அதன் முடிச்சை அவிழ்க்கும் போது "அட..!" போட வைக்கும் வியப்பான முறையில் அமைந்த கதையை மூலம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துத் தந்தமை நன்று. நூலாசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி.

மதி
05-08-2010, 09:42 AM
மிகவும் நன்றி, மதி.

புத்தகத்தின் பெயர் How to write short stories for magazines and get published? கிடைத்தால் வாங்குங்கள். நிறைய யுத்திகள் சொல்லியிருக்கிறார். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (நான் நூலகத்தில் எடுத்துப் படித்தேன்.)

தாராளமாய் கூப்பிடுங்கள். 'அக்கா' என்றால் ஒரு தனி மரியாதைதானே?:icon_b:
படித்துக் கொண்டிருக்கிறேன்...
இன்றைக்குள் படித்து விடுவேன் என்று நம்புகிறேன்.. :icon_b:

Nivas.T
05-08-2010, 11:04 AM
தொடக்கம் முதல் அம்மாவின் கண்ணோட்டம் தான் தெரிந்தது:sprachlos020: முடிவில்தான் அது அப்பா என்பது விளங்கியது:eek:. எனக்கு இதுதாங்க புரியல:confused:. சின்ன சின்ன கருவா எடுத்து எப்டி இப்படி எழுதமுடியுது?. :confused:

ரொம்ப நல்ல இருக்குங்க:). உண்மைய சொன்னா உங்களையெல்லாம் பாக்கும்போது ரொம்ப பொறாமையா இருக்குங்க:frown:

கலையரசி
05-08-2010, 01:19 PM
கதை சொல்லும் முறையில் இது வித்தியாசமான உத்தி தான். அன்னையர் தினத்தைப் பற்றிக் கதை துவங்குவதால், நம்மையும் அறியாமல் அவர் ஆலிசின் அம்மா என்றே நினைக்க நேரிடுகிறது. அதனால் படிக்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏமாந்தே போக வாய்ப்பிருக்கிறது. மொழி பெயர்ப்பின் மூலம் ஒரு வித்தியாசமான உத்தியை மன்றத்துக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கீதம்!

selvaaa
08-05-2011, 03:05 PM
அன்னையர் தின நாளில் மீண்டும் நினைவு படுத்துவதில் தவறில்லையே!

குறுக்காய் அமைந்த அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
08-05-2011, 03:55 PM
அன்னையர்தினத்துக்குத் தகுந்த கதை தகுந்தவரால் மொழிபெயர்க்கப்பட்டு, தகுந்த இடத்தில் பதித்தமைக்கு பாராட்டுகள் தங்கையே. அன்னையர்தின வாழ்த்துக்கள்.....உங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும்.

கீதம்
10-05-2011, 04:55 AM
பாராட்டுகிறேன்!
கதை சொல்லும் முறைகளில் அதன் முடிச்சை அவிழ்க்கும் போது "அட..!" போட வைக்கும் வியப்பான முறையில் அமைந்த கதையை மூலம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துத் தந்தமை நன்று. நூலாசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி.

நன்றி பாரதி அவர்களே.

தொடக்கம் முதல் அம்மாவின் கண்ணோட்டம் தான் தெரிந்தது:sprachlos020: முடிவில்தான் அது அப்பா என்பது விளங்கியது:eek:. எனக்கு இதுதாங்க புரியல:confused:. சின்ன சின்ன கருவா எடுத்து எப்டி இப்படி எழுதமுடியுது?. :confused:

ரொம்ப நல்ல இருக்குங்க:). உண்மைய சொன்னா உங்களையெல்லாம் பாக்கும்போது ரொம்ப பொறாமையா இருக்குங்க:frown:

நன்றி நிவாஸ். இது என் சொந்தக் கரு அல்ல, மொழிபெயர்ப்பு மட்டுமே என்னுடையது.

கதை சொல்லும் முறையில் இது வித்தியாசமான உத்தி தான். அன்னையர் தினத்தைப் பற்றிக் கதை துவங்குவதால், நம்மையும் அறியாமல் அவர் ஆலிசின் அம்மா என்றே நினைக்க நேரிடுகிறது. அதனால் படிக்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏமாந்தே போக வாய்ப்பிருக்கிறது. மொழி பெயர்ப்பின் மூலம் ஒரு வித்தியாசமான உத்தியை மன்றத்துக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கீதம்!

நன்றி அக்கா.

அன்னையர் தின நாளில் மீண்டும் நினைவு படுத்துவதில் தவறில்லையே!

குறுக்காய் அமைந்த அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

பின்னூட்டமிட்டு இப்பதிவை மீள்பார்வைக்குக் கொண்டுவந்த உங்களுக்கு என் நன்றி selvaaa.

அன்னையர்தினத்துக்குத் தகுந்த கதை தகுந்தவரால் மொழிபெயர்க்கப்பட்டு, தகுந்த இடத்தில் பதித்தமைக்கு பாராட்டுகள் தங்கையே. அன்னையர்தின வாழ்த்துக்கள்.....உங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும்.

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா.

ஜானகி
10-05-2011, 05:55 AM
அருமையான கதை, அதைவிட அருமையான மொழிபெயர்ப்பு.....பார்வைக்கு மீட்டு வந்த செல்வாவுக்கு நன்றி. சோகத்தில் தான் அழகு அதிகமாக மிளிர்கிறதோ...?