PDA

View Full Version : காற்று



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2010, 08:30 PM
என் சன்னலை அடுத்த காற்றும்
என்னோடே பயணித்தது
என் சமச்சீர் வேகமாய்
எந்த இலக்குகளுமற்று,
சுவற்றையடுத்த திண்ணையிலும்
சன்னல் வழியாய் தாவாரத்திலும்
தன்னார உலாவியது,
மெல்லத் தன் சிணுங்கி
சமயங்களில் கடுகடுத்து
தன்னிருத்தலை இறுக்கமாய் உணர்த்தியது
வெம்மையள்ளியிறைத்தும்
சிலநேரம் மித தென்றலிட்டும்
என் போலவே
ஈர் குணம் பகர்ந்தது
கழிந்த கால கருமாந்திரங்களை
செவ்வனே கடந்த இறுமாப்பில்
இன்னும் ஒய்யார நடை கண்டது,
பெருமழைக்கு பிந்தியதொரு நேரத்தின்
தன் நிலையற்ற நிலை மாடமொன்றை
நிர்மூலப்படுத்திய நிகரற்ற துணிவில்
விஞ்சிய கோட்டை கொத்தளங்களை
உயர்ந்து உருண்டு திரண்டிருந்த
ஆல வேல மரங்களை
அகற்றவிளைந்து வெறுமையாய் மோதி
புழுதியுண்டு பொத்தென விழுந்தது
இறுமாப்பில் அடியுறும் என்னையொத்து.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

நாகரா
28-07-2010, 11:18 AM
அரபு மொழியில் நஃபஸ்(NAFAS) என்று அறியப்படும் மூச்சுக் காற்றை அரபு மொழியில் நஃப்ஸ்(NAFS) என்று அறியப்படும் உம் சுயத்தோடு ஒப்பிடும் உம் கவிதை அபாரம். "நஃப்ஸ்" எனும் சுயத்தின் இறுமாப்பை "நஃபஸ்" எனும் இறை மூச்சில் அர்ப்பணிப்போம்! அல்லாவில் இறப்போம், முகம்மதுவில் பிறப்போம்!

வாழ்த்துக்கள் திரு. ஹஸனீ

கீதம்
02-08-2010, 11:41 PM
குள்ளக் கதவிடுக்கின் வழியே குடிசைக்குள்
ஒரு கள்ளனைப்போல் மெல்லத் தவழ்ந்தேகி
ஒளிர்ந்துகொண்டிருந்த ஒற்றைச் சுடரையும்
உப்பென்று ஊதி அணைத்து,
ஒன்றுமறியாப்பிள்ளை போல் வெளியேறிய காற்று,
குடிசையின் குடுமிபெற்ற தீப்பொறியை மட்டும்
ராட்சஷனைப் போல் தன் கொடுங்கரங்களால் பற்றி
சொக்கப்பனை சோதியென
ஓங்கி எரியச் செய்தது.

முன்பு ஒருமுறை எனக்குத் தோன்றியது இது. (கவிதை என்று சொல்வதற்கில்லை) சில இடங்களில் உங்கள் கருத்தை ஒத்திருந்ததால் பதியத் தோன்றியது. ஈர்குணம் கொண்ட காற்றுக்கும் மனிதனுக்கும் உள்ள கருத்தொற்றுமையை அழகாகக் கையாண்டுள்ளீர்கள். அதிலும் திண்ணையிலும், தாழ்வாரத்திலும் பயணப்படும் காற்றுடன் நானும் பயணித்ததுபோன்றதொரு உணர்வு.

இறுதியில் இறுமாப்பு அழிந்திடுமோ? மீண்டும் மூர்க்கம் பெற்று வருமன்றோ?

பாராட்டுகள் சுனைத் அவர்களே.

சுடர்விழி
03-08-2010, 01:50 AM
நல்ல கவிதை...

”வெம்மையள்ளியிறைத்தும்
சிலநேரம் மித தென்றலிட்டும்
என் போலவே
ஈர் குணம் பகர்ந்தது”
நான் ரசித்த வரிகள்..பாராட்டுக்கள்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2010, 05:34 PM
மூச்சுக் காற்றிற்கு அரபியில் நஃபஸ் என்று சொல்லப்படும். ஆனால் காற்றிற்கு அரபியில் ஹவா என்றும் ரீஹ் என்றும் சொல்லப்படும். ஏறி இறங்கும் காற்றைப் போல் நமது எண்ணங்களும் அவ்வப்போது பல வடிவம் கொள்கின்றன. அதைத்தான் கூறவிளைந்தேன். தகவலுக்கு நன்றி நாகரா அவர்களே.

சிவா.ஜி
03-08-2010, 06:57 PM
அலையும் காற்றுதான் அழிக்கும் காற்றாகவுமிருக்கிறது....எல்லாம் அழித்து....எதையும் அடையாத இறுமாப்பை பறைசாற்றும் காற்றைப்போலத்தான்...மனிதனும்....கருத்தாளமிக்க கவிதைக்கு வாழ்த்துக்கள் ஜுனைத்.

சிவா.ஜி
03-08-2010, 06:58 PM
கீதத்தின் கவிதை ரசிக்க வைக்கிறது....அவரது வித்தியாசப்பார்வையை...வியக்கிறேன். வாழ்த்துக்கள் தங்கையே.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2010, 08:39 PM
சொக்கப் பனை சோதியா அது. அது யார் சொக்கப்பன் என்று சிறிது நேரம் திகைத்து விட்டேன். அற்புதமான கவிதை கீதம். அழகான வரிகள். சிறுத்த கவிதையில் பெருத்த கருத்தாழம். நன்றி கீதம்.

வியாசன்
03-08-2010, 09:11 PM
சுனைத் உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது.
கீதம் சிறிய கவிதையானாலும் நன்று வாழ்த்துக்கள்.