PDA

View Full Version : வெளித்தெரியும் வேர்கள்அமரன்
25-07-2010, 11:20 AM
இமைகளின் மீதமர்ந்து விட்ட கனவுகளுடன்
தூக்கத்தில் நடக்கிறேன்
பகலிலும்..

காற்றும் கடலும்
புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின்
அழுகையும் எழுப்பவில்லை..

மழைத் தூரிகை
மண்ணில் வரைந்த காடுகளின்
கீதமும் கலைக்கவில்லை..

நிலக்காரிகையின்
மலைப் பருவமேடுகள் பெய்கின்ற
கந்தர்வமும் உசுப்பவில்லை..

இயற்கையும் கொதித்திருக்கும்..

அடைமழையென
வீசப்பட்ட சூரிய எரிகற்களில்
பற்றி எரிந்தன கனவுகள்..

அணைந்துதான் போயிற்று
ஆதவனின் கோபம்..

ஆகாயக் குடை திரண்டு வந்து
சாமரச் சுகம் தந்தது..

அப்போதுதான்..
என்கிருந்தோ வந்த மனத்துளி
வேரை நனைத்தது..

கட்பூக்கள் பூத்தன..

nambi
25-07-2010, 01:33 PM
கவதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

நாகரா
25-07-2010, 03:23 PM
கட்பூக்கள் பூத்தன

வெளித்தெரியும்
நேச இருதய வேர்களின்
தூமண் வாசம்

பிரபஞ்ச வாயில்
கண்மைத் தேன் சொரியும்
கட்பூக்களின்
வாடாத் தன்மையில்
தன் சாவாத் திண்மையை
மீட்டு உயிர்க்கிறது
என் மெய்

அருமையான படிமக் கவிதை வாழ்த்துக்கள் அமரன்

பகலில் தொடருந் தூக்க மயக்கம் - கனவுகள்
இரவில் விடியும் தீர்க்க விழிப்பு - கட்பூக்கள்

கட்பூக்கள் பூத்தன - அருமையான சொற்பிரயோகம்

கலையரசி
26-07-2010, 01:20 PM
இந்தக் கவிதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. யாராவது விளக்கினால் நல்லது.

கீதம்
26-07-2010, 10:40 PM
முழுமையான அர்த்தம் விளங்கவில்லையெனினும் வார்த்தைகள் வசீகரிக்கின்றன. இமைகளின் மீதமர்ந்துவிட்ட கனவு, கடலும், காற்றும் புணர்ந்து பிறந்த அலைக்குழந்தை, மழைத்தூரிகை, நிலக்காரிகையின் மலைப் பருவ மேடுகள் என்று அத்தனை வரிகளிலும் கவிவண்ணம் மிளிர்கிறது. மிகுந்த பாராட்டுகள், அமரன்.

அதுசரி. இந்தக் கவிதையை எழுதியபிறகு போட்டியை அறிவித்தீர்களா? அல்லது போட்டியை அறிவித்தப் பிறகு கவிதை தோன்றியதா? பஞ்சபூதங்களும் உலாவருகின்றனவே! அற்புதம்!

ஆதவா
27-07-2010, 03:19 PM
நீங்கள் கவிதையின் நீண்ட தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்க்ள் அமரன்.

கவிதையில் வார்த்தை பிரயோகமும் மொழி நடையும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக,

காற்றும் கடலும்
புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின்
அழுகையும் எழுப்பவில்லை..

மழைத் தூரிகை
மண்ணில் வரைந்த காடுகளின்
கீதமும் கலைக்கவில்லை..

ஆகிய வரிகள் பிரமாதம்,..

மனதில் ஏற்படும் சின்ன ஸ்பார்க் தான்.... பெரிய கனவுகளுக்கு ஆயத்தமாகிறது.
சிறிய விதைக்குள் பெரிய மரமே ஒளிந்திருக்கிறதைப் போல....

வாழ்த்துக்கள் அமரன்.

ஆதவா
27-07-2010, 03:23 PM
இந்தக் கவிதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. யாராவது விளக்கினால் நல்லது.

கவிதை புரிந்தது, புரியாதது என்பதெல்லாம் வாசகருக்குத் தேவையே இல்லாதது. வாசிப்பாளனுக்கு எளிதாக வழங்குதல் படைப்பாளியின் உரிமை/கடமை!!

கனவுகளுக்கு ரூபம் கொடுக்க இயற்கையால் முடியவில்லை, மனத்துளியின் ஒலி, கனவின் செவியில் பட்டுவிட்டதாக அமரன் எழுதியிருக்கிறார் என்பது நான் வாசித்தவரையிலும் எனக்குப் பட்ட அர்த்தம்!!

மேலதிகம், அவரே வந்து விளக்கலாம்!!

குணமதி
27-07-2010, 03:48 PM
***கவிதை புரிந்தது, புரியாதது என்பதெல்லாம் வாசகருக்குத் தேவையே இல்லாதது***

இதற்கு என்ன பொருள்?

படைப்பாளிக்கு வாசகர் ஒரு பொருட்டே இல்லை என்று பொருளா?

ஆதவா
27-07-2010, 04:09 PM
அப்படியில்லை.... படைப்பு புரியவேண்டும் என்று அவசியமில்லை என்றேன். அதன் எளிமையும் கடினமும், படைப்பாளியின் கையில்தான் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விதத்தை நாம் குறை சொல்ல முடியாது. படைப்பை வாசகனுக்குப் புரியவைத்தல் அவரது கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

குணமதி
27-07-2010, 04:37 PM

முரணான கூற்றாக உள்ளதே.

Nivas.T
27-07-2010, 04:55 PM
வார்த்தைக் கோர்வைகள் அற்புதம்

ஆனால் கரு விளங்கக் கடினம்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2010, 08:18 PM
கவிதையை பல முறை படித்தேன். சொற் பின்னல்கள் சற்றும் பிடிபடவில்லை. அமரனே விளக்கினால் நல்லது

ஆதி
28-07-2010, 09:55 AM
அமர் ஆதவா ரசித்த வரிகளை நானும் ரசித்தேன் +

நிலக்காரிகையின்
மலைப் பருவமேடுகள் பெய்கின்ற
கந்தர்வமும் உசுப்பவில்லை..

கட்பூக்கள் பூத்தன..

இதுவும் பிரமாதம்.. மொழியாளுமை விழி விரிய வைக்கிறது அமர்..

இந்த கவிதையில் பல பரிமாணங்கள் உள்ளன, நாகரா ஐயாவின் நோக்கு போல விழிப்புநிலை அடைதல்..

இந்த விழிப்புநிலை என்பது வெறும் சாதார்ண ஒன்று அல்ல, ஒரு இலட்சியத்துக்காக இழந்த வாழ்க்கையாக இருக்கலாம், ஒரு தப்பான புரிதலாக இருக்கலாம், சுதந்திரம் சுதந்திரம் என்று பலவற்றுக்கு அடிமையாகி தொலைத்த சுதந்திரமாக இருக்கலாம், இது யாவுமேயல்லாத வெறும் அனுபவமாகவும் இருக்கலாம் இந்த கவிதை..

பாராட்டுக்கள் அமர்..

ஆதி
28-07-2010, 11:47 AM
முரணான கூற்றாக உள்ளதே.

குணமதி, ஆதவா சொல்ல முனைவதை நான் விளக்க விழைகிறேன்..

புரியும் படைப்பு/ புரியாப் படைப்பு என்று படைப்பில் பேதமில்லை. ஆனால் படைப்புகளுக்கு தளங்கள் உண்டு.

ஒரு வாசகன் என்பவன் மாணவன் மாதிரி 1-ஆம் வகுப்பு, 2-ஆம் வகுப்பு, 3-ஆம் வகுப்பு... ...12-ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை... இப்படி.

நமது வாசப்பானுபவம் முதலில் கன்னித்தீவு, அம்புலிமாமா போன்ற கதைகளில் துவங்கி மெல்ல மெல்ல அதன் படிநிலை மாறி சிறுகதை, நெடுங்கதை, நாவல் என்று மேல் உயர்கிறது..

அம்புலி மாமா படிக்கும் வயதில் ஒரு நாவலில் உள்ள கதையம்சம், யதார்த்தம், சூழல், வடிவம், நாவலில் கையாளப்பட்டிருக்கும் புதுமுயற்சி என்று எதுவும் நமக்கு சிக்குவதில்லை... அதற்கு முகாந்திரம் வயதில்லை, முதிர்ச்சி.

சங்க இலக்கியத்தை சுவைக்க ஒரு முதிர்ச்சி வேண்டும், முதிர்ச்சி என்பது இலக்கியத்தின் மீதான நம் பரிட்சயத்தையும், நம் வாசிப்பின் விசாலத்தையும் குறிக்கிறது. சங்க இலக்கியத்தை வாசிக்க முயற்சிக்கும் போது தினை, துறை, இறைச்சி போன்ற வற்றை அறியாமல் வாசிக்க இயலாது, வாசித்தாலும் பாடல்களை சரியாக சுவைக்க இயலாது. இது போல எல்லா இலக்கியங்களை வாசிக்கவும் குறைந்தப்பட்ச புரிதல்கள் அவசியமாகிறது.

ஒரு தேற்றத்தை மனப்பாடம் செய்ய நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை கூட இரு படைப்பை புரிந்துக் கொள்ள நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பாடம் புரியாவிட்டால் மீள மீள வாசிக்கிறோம், அதற்கான பிரயோசனமாய் மதிப்பெண் கிடைக்கிறது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள நாம் அவ்வளவு பிரயத்தனம் எடுக்க தயாரக இல்லை, அதற்கு முகாந்திரம் அந்த படைப்பு புரிவதாலோ/புரியாததாலோ நமக்கு எப்பயனுமில்லை.

ஒரு கவிதையை ஒரு கதையை படிப்பது போல் படிக்க முயல்கிறோம், ஒரு படத்தை போல நோக்குகிறோம். புரியும் இலக்கியமே சிறந்த இலக்கியம் என்னும் படிமத்தை உறுவாக்கி வைத்திருக்கிறோம். கவிதைகளோடான நம் அணுக்கமே தவறானதாய் இருப்பதால், சில கவிதைகள் நமக்கு புரிததாய் இருக்கிறது. "எண்டர் தி டிரகன்" படித்தில் கடைசி சண்டைக் காட்சியில் இக்கட்டான சூழலில் புரூஸ்லிக்கு நினைவுக்கு வரும் குரு சொன்ன "break the image" வாசகத்தை, நாமும் ஒரு படைப்பை அணுகும் போதும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

படைப்புகளின் வாசிப்பனுபவம் என்பது பெரும் புதிரானவை, முதலில் வாசிக்கும் போது அற்புதமானதாய் தோன்றும் படைப்பு மறுவாசிப்பில் சுவையற்றதாக கூட பிரஞ்ஞைக்குபடலாம். இரண்டு மூன்று முறை வாசித்தும் புரியாமல், புரிந்தும் சுவைக்காமல் போகிறப்படைப்பு சில நாள் கழித்து பேரிலக்கியமாக தோன்றலாம். ஒரு படைப்பு நம் மனநிலைக்கு ஏற்பவே பிடிபடுகிறது. ஒரு படைப்பில் பெருஞ்சிறப்பே அதை நாம் எதிர்திசையில் புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளதுதான். கவிதை சொல்லாததையும் நாம் கண்டு பிடிக்கிறோம், கவிதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறோம், கவிஞனுக்கே தெரியாத பரிமாணத்தை நாம் கண்டுணரும் போது கவிதையின் விசாலம் மேலும் விரிவடைந்து, பெரும்படைப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது. படைப்புக்கள் நாம் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் சொல்லும் வல்லமையுடையவைகள். அதனால் படைப்புகள் மீதான நம் வரையறைகளை மாற்றி, நம் படிமங்களை உடைத்து வாசிப்பை விசாலமாக்குவோம்.

கலையரசி
28-07-2010, 01:50 PM
குணமதி, ஆதவா சொல்ல முனைவதை நான் விளக்க விழைகிறேன்..

புரியும் படைப்பு/ புரியாப் படைப்பு என்று படைப்பில் பேதமில்லை. ஆனால் படைப்புகளுக்கு தளங்கள் உண்டு.

ஒரு வாசகன் என்பவன் மாணவன் மாதிரி 1-ஆம் வகுப்பு, 2-ஆம் வகுப்பு, 3-ஆம் வகுப்பு... ...12-ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை... இப்படி.

நமது வாசப்பானுபவம் முதலில் கன்னித்தீவு, அம்புலிமாமா போன்ற கதைகளில் துவங்கி மெல்ல மெல்ல அதன் படிநிலை மாறி சிறுகதை, நெடுங்கதை, நாவல் என்று மேல் உயர்கிறது..

ஒரு தேற்றத்தை மனப்பாடம் செய்ய நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை கூட இரு படைப்பை புரிந்துக் கொள்ள நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பாடம் புரியாவிட்டால் மீள மீள வாசிக்கிறோம், அதற்கான பிரயோசனமாய் மதிப்பெண் கிடைக்கிறது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள நாம் அவ்வளவு பிரயத்தனம் எடுக்க தயாரக இல்லை, அதற்கு முகாந்திரம் அந்த படைப்பு புரிவதாலோ/புரியாததாலோ நமக்கு எப்பயனுமில்லை.

ஒரு கவிதையை ஒரு கதையை படிப்பது போல் படிக்க முயல்கிறோம், ஒரு படத்தை போல நோக்குகிறோம். புரியும் இலக்கியமே சிறந்த இலக்கியம் என்னும் படிமத்தை உறுவாக்கி வைத்திருக்கிறோம். கவிதைகளோடான நம் அணுக்கமே தவறானதாய் இருப்பதால், சில கவிதைகள் நமக்கு புரிததாய் இருக்கிறது. "எண்டர் தி டிரகன்" படித்தில் கடைசி சண்டைக் காட்சியில் இக்கட்டான சூழலில் புரூஸ்லிக்கு நினைவுக்கு வரும் குரு சொன்ன "break the image" வாசகத்தை, நாமும் ஒரு படைப்பை அணுகும் போதும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

படைப்புகளின் வாசிப்பனுபவம் என்பது பெரும் புதிரானவை, முதலில் வாசிக்கும் போது அற்புதமானதாய் தோன்றும் படைப்பு மறுவாசிப்பில் சுவையற்றதாக கூட பிரஞ்ஞைக்குபடலாம். இரண்டு மூன்று முறை வாசித்தும் புரியாமல், புரிந்தும் சுவைக்காமல் போகிறப்படைப்பு சில நாள் கழித்து பேரிலக்கியமாக தோன்றலாம். ஒரு படைப்பு நம் மனநிலைக்கு ஏற்பவே பிடிபடுகிறது. ஒரு படைப்பில் பெருஞ்சிறப்பே அதை நாம் எதிர்திசையில் புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளதுதான். கவிதை சொல்லாததையும் நாம் கண்டு பிடிக்கிறோம், கவிதைக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கிறோம், கவிஞனுக்கே தெரியாத பரிமாணத்தை நாம் கண்டுணரும் போது கவிதையின் விசாலம் மேலும் விரிவடைந்து, பெரும்படைப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது. படைப்புக்கள் நாம் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் சொல்லும் வல்லமையுடையவைகள். அதனால் படைப்புகள் மீதான நம் வரையறைகளை மாற்றி, நம் படிமங்களை உடைத்து வாசிப்பை விசாலமாக்குவோம்.

ஒரு பத்திரிக்கையிலோ, வார இதழிலோ ஒரு கவிதையோ அல்லது கதையோ படித்து அது புரியவில்லையென்றால், அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. அவரவரின் வாசிப்புத் திறனுக்கேற்ப புரிந்ததைப் படித்து விட்டுப் போகப் போகிறோம்.

மன்றத்தில் பதிந்து அதுவும் படைப்பாளி நமக்குப் பரிச்சயமானவராக இருக்கும் பட்சத்தில், நாமும் ரசிக்கலாமே என்ற ஆர்வத்தில் நமக்குப் புரியாதவற்றை படைப்பாளியோ அல்லது அது புரிந்தவரோ விளக்கக் கேட்கிறோம்.

பதில் சொல்ல விருப்பமிருந்தால் சொல்லலாம். இது கூடப் புரியவில்லையே என சலிப்பு ஏற்பட்டால் சொல்லாமலும் போகலாம். சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்பது என் கருத்து.

ஆதவா
28-07-2010, 02:24 PM

சகோதரி...

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துபாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளபடாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தை பார்த்துவிட முடியும். அதன் வேர்களை கண்ணால் பார்த்து தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படி தான் புத்தகங்களும்.

இதை நான் சொல்லவில்லை... இலக்கிய உலகின் ஆளுமைகளுல் ஒருவரான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது. படைப்புகள் தான் புத்தகங்கள்... ஆக நீங்கள் அவதானித்துக் கொள்ளலாம்..
வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறும்.. ஒவ்வொருவருக்கும் பலவித கோணங்கள் இருக்கும்... அதில் ஒரு கோணத்தை உடைத்துவிட்டால் மற்றவர்கள் மாறுபட்டு காணவேண்டிய அவசியம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

அன்புடன்
ஆதவா.

நாகரா
28-07-2010, 03:19 PM
இமைகளின் மீதமர்ந்து விட்ட கனவுகளுடன்
தூக்கத்தில் நடக்கிறேன்
பகலிலும்..

காற்றும் கடலும்
புணர்ந்து பிறந்த அலைக்குழந்தையின்
அழுகையும் எழுப்பவில்லை..

மழைத் தூரிகை
மண்ணில் வரைந்த காடுகளின்
கீதமும் கலைக்கவில்லை..

நிலக்காரிகையின்
மலைப் பருவமேடுகள் பெய்கின்ற
கந்தர்வமும் உசுப்பவில்லை..

இயற்கையும் கொதித்திருக்கும்..

அடைமழையென
வீசப்பட்ட சூரிய எரிகற்களில்
பற்றி எரிந்தன கனவுகள்..

அணைந்துதான் போயிற்று
ஆதவனின் கோபம்..

ஆகாயக் குடை திரண்டு வந்து
சாமரச் சுகம் தந்தது..

அப்போதுதான்..
என்கிருந்தோ வந்த மனத்துளி
வேரை நனைத்தது..

கட்பூக்கள் பூத்தன..
இமைகளோடு கனவுகளையும்
உதறி விட்ட
அதீத விழிப்பில்
இருக்கிறேன்
நள்ளிரவில்

மூச்சும் மெய்யும்
புணரும் அம்ச(ஹம்ஸ) ஒலியில்
கும்மிருட்டில் பிறக்கிறது
ஞான ஒளி

நெஞ்சக் கண்மை
கண்களில் பொழியக்
கற்பூர தீபமாய்
மணக்கிறது மெய்

மயான பூமியில்
நள்ளிரவில் விடிகிறது
அமர வாழ்வு

இறைமையின் தயவியற்கை
அடைமழையென வீழ
ஈரக் கதிர்களில்
பற்றி எரிகின்றன
கரும வினைகள்

ஆறிப் போனது
ஆணவச் சூடு

பரமாகாசம் தலை மேல் திரண்டு
பரமானந்தம் தருகிறது

பரம ரகசிய
என் இருதய வேரைப்
பகிரங்கமாக்கிக்

கட்பூக்கள் பூத்துள்ளன..

குணமதி
28-07-2010, 04:47 PM
ஆதன்,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

எப்படி இருந்தாலும், மன்றத்தில் ஒரு உறுப்பினரின் பதிவு புரியவில்லை என்ற இன்னொரு உறுப்பினரிடம், புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து கொள்ளுங்கள் என்று சுற்றி வளைத்துக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆதி
28-07-2010, 05:24 PM
ஒரு பத்திரிக்கையிலோ, வார இதழிலோ ஒரு கவிதையோ அல்லது கதையோ படித்து அது புரியவில்லையென்றால், அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. அவரவரின் வாசிப்புத் திறனுக்கேற்ப புரிந்ததைப் படித்து விட்டுப் போகப் போகிறோம்.

மன்றத்தில் பதிந்து அதுவும் படைப்பாளி நமக்குப் பரிச்சயமானவராக இருக்கும் பட்சத்தில், நாமும் ரசிக்கலாமே என்ற ஆர்வத்தில் நமக்குப் புரியாதவற்றை படைப்பாளியோ அல்லது அது புரிந்தவரோ விளக்கக் கேட்கிறோம்.

பதில் சொல்ல விருப்பமிருந்தால் சொல்லலாம். இது கூடப் புரியவில்லையே என சலிப்பு ஏற்பட்டால் சொல்லாமலும் போகலாம். சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்பது என் கருத்து.

அக்கா, முதலில் என்னை மன்னிக்கவும், மேதாவி போல பேசிட்டேன் நு நினைக்கிறேன் மன்னிக்கவும்.

அமரன்
28-07-2010, 08:52 PM
கவதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நம்பி.

அமரன்
28-07-2010, 08:55 PM
கட்பூக்கள் பூத்தன

வெளித்தெரியும்
நேச இருதய வேர்களின்
தூமண் வாசம்

பிரபஞ்ச வாயில்
கண்மைத் தேன் சொரியும்
கட்பூக்களின்
வாடாத் தன்மையில்
தன் சாவாத் திண்மையை
மீட்டு உயிர்க்கிறது
என் மெய்

நல்ல பின்கவிதை.

பாராட்டுகள் நாகாய்யா.

கவிதையை எழுதியப் பிறகு பன்முகம் காட்டும் விதமாக வார்த்தைகள் தவறி வார்க்கப்பட்டு விட்டன என்பதை உணர்ந்தேன். இந்த விழிப்பு நிலையும் அடைந்தேன்.

அமரன்
28-07-2010, 09:02 PM
இந்தக் கவிதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. யாராவது விளக்கினால் நல்லது.

கலையரசி..

என் குறையே இதுதான். எளிமையாகச் சிந்திப்பேன். அதை எழுத்தாக்கம் செய்யும் போது தவறிழைப்பேன். வந்து விழும் வார்த்தைகள் விரட்டாமல் விடுவதால் வரும் வினை இது..

மனத்துளி விளக்கம் என்னால் சரிவரக் கவிதையில் கொடுக்கப்படாததால் குழப்பம் விளைந்துவிட்டது. விளைவு பல கோணக் கவிதையாகி விட்டது. புரிதலை கடினமாக்கி விட்டது. நாகாய்யாக்குச் சொன்ன மாதிரி, எழுதியதும் எனக்கிது தெரிந்தாலும் அப்படியே விட்டு விட்டேன்.

கடினப் போக்கை விட வேண்டுமென்ற முயற்சியில் இம்முறையும் எனக்குத் தோல்வியே..

நான் நினைத்த கரு ஆதவாவுடையதே..

இயற்கையை விஞ்சிய பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.

அந்த இயற்கையால் முடியாததை ஒற்றை மனத்துளி முடித்து வைக்கிறது. முன்பு சொன்னது போல மனத்துளியை நன்கு விளக்கி கவிதை வடித்திருந்தால் இலகுத் தன்மை வந்திருக்கும்.

நன்றிக்கா.

அமரன்
28-07-2010, 09:04 PM
அதுசரி. இந்தக் கவிதையை எழுதியபிறகு போட்டியை அறிவித்தீர்களா? அல்லது போட்டியை அறிவித்தப் பிறகு கவிதை தோன்றியதா? பஞ்சபூதங்களும் உலாவருகின்றனவே! அற்புதம்!

ஹஹ்ஹ்ஹ்ஹா..

21 ஆம் திகதி எழுதப்பட்ட கவிதை கீதம்.

பாராட்டுக்கு நன்றி.

அமரன்
28-07-2010, 09:13 PM
நன்றி ஆதவா..

இமைகளில் சுமையேற்றி மூட வைத்த கனவுகள் கலைந்து (நிறைவேறினாலும் கனவு கலைந்ததாகக் கொள்ளலாம்தானே) கண்களைத் திறந்த காரணத்தை தெளிவாகச் சொல்லாமல் கவிதையின் நீண்ட தூரத்தில்தான் நிற்கிறேன்.:)

அமரன்
28-07-2010, 09:24 PM
முரணான கூற்றாக உள்ளதே.

இதில் முரண் ஒன்றும் இல்லையே குணமதி..

கவிதை வடிவம் வாசகனுக்குப் பிடிபடாமல் இருக்கலாம். ஆனால் கவிதை அதாவது பாடு பொருள் வாசகனுக்குப் புரிய வேண்டும்.
இதைத்தான் ஆதவா சொல்லி இருக்கார் என்று நினைக்கிறேன்.

என் கவிதை பலரைச் சென்றடைய வேண்டுமெனில் நான் அதை சரிவர வெளிக்காட்ட வேண்டும். புரிய முடியாத போது கவிதையை விளக்க வேண்டிய கடமையும் எனக்குண்டு.

அதாவது எப்படி எழுத வேண்டும் என்பது என் உரிமை.
அதை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டியது என் கடமை.
புரிய வைக்காவிட்டால் ஆகிவிடும் அது முதிர்கன்னிக்கவிதை.

வரவுக்கு நன்றி.

அமரன்
28-07-2010, 09:26 PM
வார்த்தைக் கோர்வைகள் அற்புதம்

ஆனால் கரு விளங்கக் கடினம்

நன்றி நிவாஸ்

கவிதையை பல முறை படித்தேன். சொற் பின்னல்கள் சற்றும் பிடிபடவில்லை. அமரனே விளக்கினால் நல்லது

நன்றி சுனைத்.

மேலே உள்ளவை போதும் என்று எண்ணுகிறேன்.

அமரன்
28-07-2010, 09:28 PM
இந்த கவிதையில் பல பரிமாணங்கள் உள்ளன, நாகரா ஐயாவின் நோக்கு போல விழிப்புநிலை அடைதல்..

இந்த விழிப்புநிலை என்பது வெறும் சாதார்ண ஒன்று அல்ல, ஒரு இலட்சியத்துக்காக இழந்த வாழ்க்கையாக இருக்கலாம், ஒரு தப்பான புரிதலாக இருக்கலாம், சுதந்திரம் சுதந்திரம் என்று பலவற்றுக்கு அடிமையாகி தொலைத்த சுதந்திரமாக இருக்கலாம், இது யாவுமேயல்லாத வெறும் அனுபவமாகவும் இருக்கலாம் இந்த கவிதை..

பாராட்டுக்கள் அமர்..

உண்மைதான் ஆதன்.

இப்படி இருக்கக் கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் விரும்புகிறேன். முடிவதுதான் இல்லை.

உங்களில் வழியும் தமிழுடன் ஒப்பிடுகையில் என் தமிழ் பிரமாதமில்லை.

நன்றி ஆதன்

அமரன்
28-07-2010, 09:34 PM
ஒரு பத்திரிக்கையிலோ, வார இதழிலோ ஒரு கவிதையோ அல்லது கதையோ படித்து அது புரியவில்லையென்றால், அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. அவரவரின் வாசிப்புத் திறனுக்கேற்ப புரிந்ததைப் படித்து விட்டுப் போகப் போகிறோம்.

மன்றத்தில் பதிந்து அதுவும் படைப்பாளி நமக்குப் பரிச்சயமானவராக இருக்கும் பட்சத்தில், நாமும் ரசிக்கலாமே என்ற ஆர்வத்தில் நமக்குப் புரியாதவற்றை படைப்பாளியோ அல்லது அது புரிந்தவரோ விளக்கக் கேட்கிறோம்.

பதில் சொல்ல விருப்பமிருந்தால் சொல்லலாம். இது கூடப் புரியவில்லையே என சலிப்பு ஏற்பட்டால் சொல்லாமலும் போகலாம். சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்பது என் கருத்து.

கலையரசி..

நீங்கள் சொல்வதை மறுப்பின்றி ஏற்கிறேன்.

கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.

சொல்லும் கடமை எனக்கு உள்ளது.

ஆதனின் கருத்தில் எனக்கு அறை விழுந்துள்ளாது என்றால் நம்புவீர்களா.

ஆதன் கடைசியாக முடித்த படிமங்களை உடைத்தல்.. இதில் கவிதையை எழுதியவன் பங்கும் பெரும்பான்மை உண்டு.

பொருத்தியவனே பிரித்துக் காட்டினால்த்தானே பொறி முறை விளங்கும். அதை விளக்காமல் என்ன செய்கிறாய் என்று என்னை திட்டி இருக்கார்கள் பாருங்கள் ஆதவாவும் ஆதனும்.

மதி
29-07-2010, 03:10 AM
ஒரு கவிதையில் இத்தனை விஷயங்களா...?? கவிதையும் கவிதை கருப்பொருளும் நன்று.. :)

சுடர்விழி
29-07-2010, 05:06 AM
அருமையான கவிதை..பாராட்டுக்கள்...

ஆதி
29-07-2010, 11:44 AM
ஆதன்,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

எப்படி இருந்தாலும், மன்றத்தில் ஒரு உறுப்பினரின் பதிவு புரியவில்லை என்ற இன்னொரு உறுப்பினரிடம், புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து கொள்ளுங்கள் என்று சுற்றி வளைத்துக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பதை எண்ணிப் பாருங்கள்.

இந்த திரியை வாசியுங்கள் குணமதி http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10991&page=3

#40-ல் இருந்து..

தாமரையண்ணா நிறைய அலசி இருப்பார்..

//புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து கொள்ளுங்கள் என்று சுற்றி வளைத்துக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பதை எண்ணிப் பாருங்கள்
//

உங்கள் பதிவுக்கும் சேர்த்து பதில் தந்துவிடலாம் என்று எண்ணியதால், கலையரசியக்கா அவர்களிடம் மன்னிப்பு மட்டுமே கேட்டு முடித்துக் கொண்டேன்..

சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லை என்று எண்ணுகிறேன்..

கவிதையை புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்கும், கவிதையை புரிந்து கொள்ள முயற்சியுங்கள் என்று சொல்வதற்கு வித்யாசமிருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு கவிதையை தப்பாக புரிந்து கொள்ளுதல் கூட கவிதையின் சக்தி என்று சொல்லி இருக்கும் போது புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து கொள்ளுங்கள் என்று எப்படி பொருள்படுத்திக் கொள்குறீர்கள்.

எழுதியவர் அந்த கவிதையை விளக்கியவுடன் அந்த கவிதையில் உள்ள மற்ற கோணங்கள் நமக்கு புலப்படாமலே போய்விடுகின்றன, திருக்குறளை பரிமலழகரின் நோக்கிலேயே எல்லாரும் பார்த்திருந்தால் மற்றவிளக்கங்கள் நமக்கு கிடைத்திருக்காது, ஒரு கவிதையை நாமே புரிந்து கொள்ளும் போது கிடைக்கிற மகிழ்ச்சி, கவிதையை எழுதியவர் விளக்கம் தந்து புரிந்து கொள்ளும் போது கிடைப்பதில்லை. இந்த இரு விடங்களையே நான் சொல்ல முயற்சித்தேன். ஒரு படைப்பு புரியவில்லை என்றால் அது நமக்கு புரியவே புரியாது என்று முடிவு கட்டிவிட வேண்டாம் என்றும், மீண்டும் பல முறை அதை வாசித்து புரிந்து கொள்வதில் தப்பில்லை என்றும் சொல்ல முயற்சித்தேன்.

பூமகள்
30-07-2010, 03:48 PM
மிக மிகப் பொறுமையாய் படித்தேன். கட்பூக்கள் பூத்தன என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் விளங்கியது போன்ற தோற்றம் தந்தது.

அடைமழையென
வீசப்பட்ட சூரிய எரிகற்களில்
பற்றி எரிந்தன கனவுகள்..
இவ்வரிகளை வெகுவாக ரசித்தேன்.

ஒரு கணம் நின்று யோசிக்க வைத்த முரண். அடை மழையில் கனவுகள் நனையும் தானே, அதெப்படி எரிந்தது என்று சிறு குழப்பம். பின், அடைமழையென வந்த எரிகற்கள் - கனவுகள் எரிப்பு.. வித்தியாசத்திலும் வித்தியாசம். கலக்கல் அமர் அண்ணா.

இக்கவிதை படிக்கையில், ஏனோ மனிதர்கள் இரவெல்லாம் ஒளி வெள்ளமாய் பூமியை ஆக்கி, உறங்காமல் விழித்து உடல் வெப்பமாக்கி, நிலத்தையும் சூடாக்கி கண்ணில் பகல் முழுதும் அரை மயக்க உறக்கத்தில் கனவுகள் உடன் தள்ளாடி நடப்பது போன்றும், அதை எந்த இயற்கையின் அழிந்து வரும் வனப்பும் அவர் தம் தவறை உணர்த்த முடியாதது போன்றும், இறுதியில் ஆதவனின் கோபத்துக்கு ஆளாகி எரிகற்களால் (புவி வெப்பமாதல் விளைவு? )தாக்கப்பட்டு தனது முதலுக்கே மோசமாக மனிதன் பட்டு திருந்துவது போன்றும் பின் வந்த பேரமைதிக்குப் பிறகு கட்பூக்கள் எனும் செடிகள் பூமியில் மீண்டும் துளிர்விட்டு உயிர் உருவாவது போன்றும் தோன்றியது.

இந்த அர்த்தத்திலும் இக்கவிதையை நோக்கலாம் தானே அமர் அண்ணா?? :icon_ush:

நமக்கு எப்பவும் இயற்கை மீதிருக்கும் காதல் தீராதே.. தப்பிருந்தால் கோபிச்சிக்காதீங்க.. தங்கச்சி இப்படித் தான் தத்து பித்துன்னு உளறும்னு நினைச்சிக்கோங்க. :p

வியாசன்
30-07-2010, 06:56 PM
நல்ல கவிதை எங்கள் கனவுகள் காணாமல் போய்விட்டன

அமரன்
31-07-2010, 01:31 PM
இந்த அர்த்தத்திலும் இக்கவிதையை நோக்கலாம் தானே அமர் அண்ணா?? :icon_ush:

தாராளமாக..

புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும் போது சந்தோசம் பிறக்கும்

நன்றி பூமகள்.