PDA

View Full Version : அந்த ஆறாவது குட்டி



த.ஜார்ஜ்
18-07-2010, 02:08 PM
[இது ஏன் சுவையான சம்பவங்கள் பகுதியில்....? வேறு இடம் பரிந்துரைக்கலாம்.. சுவை வகைகளில் இதுவும் ஒன்று என்று அனுமதிக்கவும் படலாம்.! ]


வழக்கமாக நடைபெறுவதுதான். இம்முறையும் அதிகாலையில் விழித்து பார்த்தபோது வாசலருகே கண்விழிக்காத குட்டிகள். ‘ம்கும்..க்கும்’ என்று முனகியபடி ஆறு நாய்குட்டிகள்.
வஞ்சிக்கப்பட்ட தெரு நாய் ஒன்றின் குட்டிகள். ‘கொழுக்மொழுக்’ கென்று அழகாய் இருந்தன.அதில் ஒரு குட்டி மட்டும் கொஞ்சம் நோஞ்சானாக இருந்தது. கடைசி குட்டி போலிருக்கிறது.
என் இரண்டாவது மகனுக்கு அந்த குட்டிகளிடம் ரொம்ப பிரியம்.அழுக்கோடு இருந்தாலும் மடியில் எடுத்து வைத்து ‘செல்லக்குட்டி’ என்று கொஞ்சுவான். முத்தம் கொடுப்பான். ‘குளிருதாம்மா’ என்று கோணிப்பை எடுத்து மூடுவான்.
எப்போதாவது வரும் தாயிடம் பால் குடிக்க அவைகளுக்குள் அவசர போராட்டம் நடக்கும். அந்த போராட்டத்தில் அந்த கடைசிக் குட்டி பின் தங்கி விடும். இவன் அதை தூக்கி பால்குடிக்க உதவி பண்ணுவான். ‘அப்பா நாம இத வளக்கலாம்பா’ பலமுறை அவன் வைத்த கோரிக்கை, இன்னும் பரிசீலிக்கப் படாமல் இருப்பதில் என் மேல் ஏக வருத்தம். தூக்கத்தில் ‘செல்லக்குட்டி அங்க போகாத..அண்ணன்கிட்ட வா மக்களே’ என்று உளறினான்.
எல்லா குட்டிகளும் ஓரளவு வளர்ந்து நடமாடிய பின் ஒரு நாள்...
அலுவலகம் புறப்பட கதவை பூட்டிக் கொண்டு கிளம்புகையில் அந்த கடைசிக் குட்டி பதறிக்கொண்டு ஓடிவந்தது. ‘ அவ்.வ்..வ்’ என்று ஓலம்..திடீரென்று இடதுபுறம் ஓடியது.. அங்கிருந்து வலப்புறம்.. ஓலம் நிற்க வில்லை. எதிர் வீட்டு வாசலில் போய் குரைத்தது. இன்னொரு குட்டி ஓடிவந்து அதை நக்கியது. ‘என்னடா ஆச்சி’ என்று விசாரிக்கிற மாதிரி....
என் முன்னே வந்து நின்று ஏக்கமாய் ஏறிட்டது. என் கால் விரலை நக்கியது. கீழே விழுந்து புரண்டது.. வலது காலை பற்களால் கடித்து காட்டியது ஏதோ முறையிடுகிறதோ.. ஏதோ ஒரு ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று இறைஞ்சுவது மாதிரி.. யாசகம் கேட்கிற மாதிரி அந்தப் பார்வை... என்னை நகர விடாமல் செய்தது.
குனிந்து அதன் தலையை தடவினேன். வலது காலைத் தூக்கி என் கையில் வைத்தது. ‘க்கும்..க்கும், என்று அரற்றியது. அது தந்த காலை மெதுவாக சுரண்டினேன். காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதித்தேன். எதுவும் தென்படவில்லை.ஆனால் அது சாந்தமாயிற்று. காலடியில் சுருண்டு படுத்தது. முனகல் குறைந்தது. ஒருமுறை கண்ணைத்திறந்து என்னை ஏறிட்டு விட்டு அப்படியே தூங்கியது. நிம்மதியாய் அலுவலகம் கிளம்பினேன்

மாலை வீட்டுக்கு வந்த போது... பள்ளியிலிருந்து வந்திருந்த மகன் கவலையோடு உட்கார்ந்திருந்தான். “அப்பா அந்த ஆறாவதுக் குட்டி செத்துப் போச்சிப்பா” என்றான் மிகுந்த துயரத்தோடு.
பதறிப் போனேன்.. ஐயய்யோ ஒரு உயிரை காப்பற்ற முடியாமல் போனேனே.. ஒரு பெரிய பாரம் போல் துயரம் என் நெஞ்சில் வந்து உட்கார்ந்தது. கடைசி நேரத்தில் அது என்ன சொல்ல வந்தது.
“அந்த புதர்ல போய் விளையாடியிருக்கும் பாம்பு ஏதாவது கடிச்சிருக்கும்’ பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.
என்னால் அந்த செல்லக் குட்டியின் கடைசி பார்வையை இப்போதும் மறக்க முடியவில்லை..

பாலகன்
18-07-2010, 02:17 PM
அய்யோ நெஞ்சு இளகிடுச்சி ஜார்ஜ்!!!

அன்புரசிகன்
18-07-2010, 02:25 PM
இதை சுவையான சம்பவம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. மனிதர்களிலும் புத்திகூர்மையான பிராணி அது...

வேறு ஏதும் சொல்ல இயலவில்லை.

Narathar
18-07-2010, 02:27 PM
அருமை!

என் குழந்தைப்பருவத்தை நினைவூட்டியது உங்கள் பதிவு நானும் சின்ன வயதில் பூனைக்குட்டிகளை வளர்த்திருக்கின்றேன்.............. கண் திறக்காத அந்த அழகிய முகங்கள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன

நன்றி உங்கள் பகிர்வுக்கு

அமரன்
18-07-2010, 02:38 PM
உணர்வுபூர்வமான பகிர்வு.

ஏக்க விழிகளூடு பிரிந்து கொண்டிருக்கும் உயிர்...

என்றும் நெஞ்சை விட்டகலாத தருணம்.

மதி
18-07-2010, 02:43 PM
மனசு பதற வைக்கும் பதிவு.. அதன் கடைசி பார்வையை உணர முடிகிறது...

பா.ராஜேஷ்
18-07-2010, 05:08 PM
பாவம் அந்த குட்டி... உங்களை பார்த்த தைர்யத்தில் அதற்கு தெம்பு வந்து சாந்தம் ஆனாலும் அதனால் பிழைக்க இயலவில்லை...

அந்த நாய் உங்களிடம் முறையிட்டதை உங்கள் மகன் அறிந்தாரா இல்லையா!!??

த.ஜார்ஜ்
19-07-2010, 04:13 PM
உணர்வுகளை பதித்துக் சென்ற அனைவருக்கும் நன்றி.

சிவா.ஜி
19-07-2010, 09:11 PM
நெகிழ்வான பதிவு. உயிர்களுக்கு இரங்கும் நல்ல மனது. ஆறாவது குட்டி மனசை என்னவோ செய்கிறது.

Mano.G.
20-07-2010, 04:28 AM
மனதை கனக்க வைத்து
கண்களையும் பனிக்க வைத்து
ஜார்ஜ்.

பூமகள்
20-07-2010, 04:56 AM
மனம் கனக்க வைத்த பதிவு..
கண்ணீர் தெறிக்க
கடைசி நிமிடம்
ஆறாவது குட்டி பட்ட துயர் உணர முடிகிறது.

கதைப்பகுதியே சரியான இடம்.. சுவையான பகுதியில் பார்க்க இயலாது எம்மால்.

அமரன்
20-07-2010, 05:43 AM
இதில் நீதி உளதே!

கதை என்றால் பாராட்டுக் குவியும்.

இந்த அனுபவத்துக்கு பாராட்டு அவசியமற்றது.

அப்படித்தானே..

பாரதி
20-07-2010, 01:08 PM
ஐந்தறிவை ஆறறிவு அறிய முடியாமல் போன வருத்தமும் துக்கமும் என்னையும் தாக்குகிறது. :frown:

கலையரசி
20-07-2010, 01:22 PM
அந்தக் குட்டியின் முடிவு மனதை நெகிழச் செய்கிறது. பாவம் அந்த ஜீவன்!

govindh
20-07-2010, 02:15 PM
மனம் கனக்கிறது...!

த.ஜார்ஜ்
20-07-2010, 02:16 PM
அஞ்சலி செலுத்திய நல்ல உள்ளங்களுக்கு...நன்றி

samuthraselvam
21-07-2010, 08:59 AM
மனதை நெகிழ வைக்கிறது அந்த ஆறாவது குட்டி...

இது சம்பவம்... ஏன் நம் மன்ற நிர்வாகிகள் இதற்கென ஒரு பகுதியை உருவாக்கினால் நல்லது என்று தோன்றுகிறது.....

மச்சான்
21-07-2010, 09:36 AM
நாய்க்குட்டிதான்.....! இருந்தாலும், சம்பவத்தை அறிந்து மனசு ரொம்பவே சங்கடமாகிப் போய்விட்டது.

.

கா.ரமேஷ்
21-07-2010, 12:16 PM
நமக்கும் பிராணிகளின் பாசை தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.....
மனதை நெகிழ வைத்த நிகழ்வு...

விகடன்
26-07-2010, 02:23 PM
ம்ம்ம்....
உங்களிடம் வந்து உதவிகேட்டிச்சுதே அந்தக்குட்டி.

த.ஜார்ஜ்
26-07-2010, 04:17 PM
ம்ம்ம்....
உங்களிடம் வந்து உதவிகேட்டிச்சுதே அந்தக்குட்டி.

அப்படிதான் நினைக்கிறேன்.

விகடன்
27-07-2010, 06:55 AM
அப்படிதான் நினைக்கிறேன்.

நடந்ததென்னவோ அப்படியாக இருக்கலாம். ஆனால் நான் அந்த வரிகளை நொந்துதான் எழுதியிருந்தேன் :) .

அந்த வரிகளால் சொல்லவந்தது இதுதான், போயிம் போய் உங்களிடம் வந்து கேட்டிச்சுதே

Mano.G.
27-07-2010, 09:33 AM
நடந்ததென்னவோ அப்படியாக இருக்கலாம். ஆனால் நான் அந்த வரிகளை நொந்துதான் எழுதியிருந்தேன் :) .

அந்த வரிகளால் சொல்லவந்தது இதுதான், போயிம் போய் உங்களிடம் வந்து கேட்டிச்சுதே

இல்லை விராடன் , அந்த குட்டி உங்களிடம் கேட்டிருந்தாலும்
அது விதிப்படித்தான் நடந்திருக்கும். அதற்காக விதியை மதியால் வெல்லலாம் எனவும் கூறலாம் , அதன் பாஷை புரிந்திருந்தால்.

விகடன்
27-07-2010, 10:42 AM
தெரியும் மனோ அண்ணா.

சும்மா அவரோட குற்ற உணர்ச்சிக்கு கொஞ்சம் பெற்ரோல் ஊற்ற எண்ணினேன். அவ்வளவுதான். :)

த.ஜார்ஜ்
27-07-2010, 02:01 PM
தெரியும் மனோ அண்ணா.

சும்மா அவரோட குற்ற உணர்ச்சிக்கு கொஞ்சம் பெற்ரோல் ஊற்ற எண்ணினேன். அவ்வளவுதான். :)

ஆகா.. என்ன ஒரு பெருந்தன்மை.
அதன் பாஷை புரிந்த உங்களிடம் அதை அனுப்பியிருக்க வேண்டும்.தவறிழைத்து விட்டேன்.[போதுமா.. பெட்ரோல் பற்றி எரிகிறதா?]

arun
07-08-2010, 10:45 AM
நெகிழ வைக்கும் பதிவு முன்குட்டியே நமக்கு ஏதேனும் நடக்க போகிறது தெரிந்து இருக்குமோ என்னவோ