PDA

View Full Version : நான்மீகம்



நாகரா
12-07-2010, 10:13 AM
இருப்பின் அகண்ட விரிவில்
குவிந்து திரளும் புள்ளி
"நான்"

மொத்த இருப்பின் அழுத்தம்
என்னைத் துளைத்துச்
செய்த இருதயத் துளையில்
"நான்"
மொத்தமாய்க் கழிய
இருப்பின் அகண்ட விரிவாய்
என்னை விளங்கி
"இருக்கிறேன்"

சுயம் "நான்"
இருப்பின் அகண்ட விரிவாம்
அயல் "அது"வாய்
தயவாய்ப் படர்கிறேன்.

அயலது தீ எனில்
சுயம் "நான்" வெம்மை போல்
இணை பிரியாதிருக்கிறோம்.

"நீர்" எனும்
முன்னிலைத் தண்மை
தீயதன்
உள்ளுறைத் தன்மை

தீயது கரும யோகம்
நீரது பத்தி யோகம்
வெம்மை நானது ஞான யோகம்

படர்க்கை முன்னிலை தன்மை
மூன்றும் பின்னிப் புணர்ந்த
ஓர்மை யாமே
நான்மீகம் சுட்டும் மகாயோகம்

கருமம் அடி: வயிறு
பத்தி நடு: மார்பு
ஞானம் முடி: தலை

மகா மனிதம்
அடி நடு முடி
யாமே

மெய்யெடுத்தோம்
யாமே!

யாம் "உயிர்மை"
மெய்யிருக்க
மரண பயமேன்!?

பிடிபடா அழகனைப்
படத்திலும் கல்லிலும்
பிடிக்கும் அவலம்!

அன்பின் திருமுகம்
செப்புங் குருமொழி
நெஞ்சுள் முழங்க
அவலமே பிடிக்கும்
அவமய மனம்!

குமரன் குருபரன்
அமர்ந்தான் இருதயம்!
"யாமிருக்க பயமேன்!?"
மந்திரம் கேண்மின்!
புந்தியில் தெறிக்கும்
நான்மீகம்!

நாகரா
13-07-2010, 06:22 AM
சுயநலக் கருந்துளைக்குள்
சுருங்கி ஒழியாமல்
பொதுநல மலர்வெடியாய்
விரிந்து வாழ்கிறேன்

கருந்துளை = black hole
மலர்வெடி = supernova

நாகரா
14-07-2010, 06:19 AM
"நான்" எனக் குவியும்
அகண்ட இருப்பின் விரிவு

"இருக்கிறேன்" என அகண்டு விரியும்
"நான்" எனும் சுருக்கம்

குவிதல் சுயநல இறுக்கம்
விரிதல் பொதுநல இரக்கம்

அகண்ட இருப்பு குவிந்து
சுயச் சுருக்கமாகும்

குவிந்த சுயம் விரிந்து
அகண்ட இருப்பாக வேண்டும்

குவிந்த சுயம் விரிய மறந்தால்
கருந்துளையாய் ஒழியும்
விரிந்தால் வெடிமலராய் வாழும்

நாகரா
15-07-2010, 06:57 AM
அகண்ட இருப்பின் விரிவைச்
சுழன்று சுட்டுஞ் சிறு விரல்
நான்
சுழலவுஞ் சுட்டவும் மறந்ததால்
கருந்துளையாய் ஒழிந்தேன்

நாகரா
16-07-2010, 06:45 AM
நான் என் சுருக்கத்தை மீறி
அகண்ட இருப்பின் விரிவாய்
இருக்கிறேன்

சுருங்கிச் சுயத்தை விளங்கி
விரிந்துப் பொதுவுக்கிரங்கி
இருக்கும் அகண்ட இருப்பு

சுருங்கும் முன் புறம்
சுருங்கியப் பின் அகம்
விரிகிறது அனகம்

நாகரா
17-07-2010, 06:31 AM
அகண்டு விரிந்தும்
விளங்கா இருப்பு
சுருங்கி விளங்கும்
சுயத்தை

சுயமோ அகண்டு விரியும்
தன்னை இருப்பாய்
விளங்கி

சுயச் சுருக்கத்தை விளங்கி
அதன் இறுக்கத்தை நீக்கி
பொது இரக்கத்தை நோக்கி
விரிந்து கொண்டே இருக்கிறேன்
நான்

நாகரா
18-07-2010, 09:41 AM
திடப் புள்ளி
நான்
சிறுந்துளையாகி
இருப்பெனும் பெருந்துளையை
விழுங்கி
இருக்கிறேன்

நாகரா
24-07-2010, 03:26 PM
நான் எனும் நாகம்
உமிழும் மாணிக்கம்
அகண்ட இருப்பின்
அணையா விளக்கம்

நாகரா
28-07-2010, 11:27 AM
"நான்"
கெட்ட வார்த்தை தான்!
ஆனாலும்
இந்தக் கெட்ட வார்த்தையின்றி
எந்தவொரு நல்ல வார்த்தையும்
உயிர்த்தெழ முடியாது!

நானே ஜீவனுள்ள வார்த்தையாய் இருக்கிறேன்
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்

நாகரா
29-07-2010, 11:14 AM
ஐயா துரை நான் தான்!
நாகரா யாரோ?
அவர் தம் அடியாள் தான்.

அடியாள்
ஐயாவில் கரைந்தால்
நான் நானே தான்!

நாகரா
30-07-2010, 06:00 AM
இருந்தது
தன்னை அறியாமல்
தான் என இருந்தது

தன்னை அறிந்து
அது
நான் எனப் பிறந்தது

பிறந்த நான் அது
இருந்ததில் கரைந்தது

"இருக்கிறேன்" எனத்
தன்னை விளங்கி
இருக்குது
விரியுது அகண்டமாய்

அனுராகவன்
22-09-2010, 01:50 PM
நாகரா..அரிய கவிகள் தொகுப்பு..
தொடர்ந்து பல தர வாழ்த்துக்கள்...