PDA

View Full Version : நிஜத்தின் ஆழ் படிமம்



சசிதரன்
11-07-2010, 01:25 PM
உன்னிடம் மறைத்து வைக்க
நிறைய இருக்கிறது என்னிடம்.

இதமான ஒரு புன்னகையை
உனக்குத் தந்துவிட்டு
மறைத்து வைக்க ஓர்
ஏளனப் புன்னகை இருக்கிறது என்னிடம்.

காதல் மட்டுமே உனக்களிப்பதாய்
பாவித்து
மறைத்து வைக்க கொஞ்சம்
காமம் இருக்கிறது என்னிடம்.

உன் நம்பிக்கையின் வேர்களுக்கு
தண்ணீர் ஊற்றிக் கொண்டே
மறைத்து வைக்க ஒரு
கோடரி இருக்கிறது என்னிடம்.

நான் மட்டுமே உலகமென்று
நீ அழுத்தமாய் சொல்லுமோர் நாளில்
மறைத்து வைக்க ஓர்
உலகமே இருக்கும் என்னிடம்.

nambi
11-07-2010, 02:15 PM
பகிர்வுக்கு நன்றி!

...............................


//உன் நம்பிக்கையின் வேர்களுக்கு
தண்ணீர் ஊற்றிக் கொண்டே
மறைத்து வைக்க ஒரு
கோடரி இருக்கிறது என்னிடம்.//

நம்பிக்கை.....வேர்....கோடரி....?

ஒன்றை... உவமைக்காக ஏற்றப்பட்டுள்ளது... இன்னொன்று...அப்படியே ஏற்றாமல்...விடப்பட்டு இருக்கிறது......ஏனோ?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2010, 09:30 AM
காதலை பாடும் கவிதையா? அல்லது சாடும் கவிதையா? தன்னிலையை பெண்பாலுக்கு கொடுத்திருந்தால் கவிதை அப்படியே ஒரிஜினல் கவிதையாய் இருந்திருக்கும் உங்கள் தலைப்பிற்கேற்ப.

எந்திரன்
12-07-2010, 09:42 AM
சசிதரன் வழங்கியுள்ள தலைப்புக்கு தகுந்த கவிதை. இன்னும் பல நிஜங்களில் ஆழ் படிமங்களை பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.

சிவா.ஜி
12-07-2010, 09:56 AM
மொத்தக் காதலும் அவனுக்குத்தான் என தெரியும்வரை பட்டியலிட்டவை மட்டுமல்லாது பலதும் மறைந்திருக்கும் ஆழ்மனதில்.

அழகாய் சொல்லப்பட்டக் கவிதை....காதலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் கவிதை. வாழ்த்துக்கள் சசி.

சசிதரன்
16-07-2010, 03:35 AM
நன்றி நம்பி, எந்திரன், எஸ்.எம். சுனைத் ஹஸனீ மற்றும் சிவா அண்ணா.. :)

@எஸ்.எம். சுனைத் ஹஸனீ
//காதலை பாடும் கவிதையா? அல்லது சாடும் கவிதையா.//

நான் காதலை சாடி எழுதவில்லை நண்பரே... காதல் என்று சொல்கிறோம்.. வெளிக்காட்டப்படும் பிரியங்கள் உண்மையானதுதானா... நம் காதல் ஏற்றுக் கொள்ளப்படும்வரை பெரும்பாலும் பொய்களில் தளம் அமைத்தே நிற்கிறோம்.

//? தன்னிலையை பெண்பாலுக்கு கொடுத்திருந்தால் கவிதை அப்படியே ஒரிஜினல் கவிதையாய் இருந்திருக்கும் உங்கள் தலைப்பிற்கேற்ப//

புரியவில்லை நண்பரே... ஏன் அப்படி தோன்றுகிறது என்று தெரிந்துக் கொள்ளலாமா..