PDA

View Full Version : அசைப்போம் இசைப்போம்.



அமரன்
08-07-2010, 09:15 PM
வந்தனம் நண்பர்களே!

எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. நானும் வெண்பா எழுத வேண்டும் என்று. அதனை ஒட்டிப் பிறந்தது இந்தப் பயிலரங்கம்.

என்னாசை முதலடியாக அசை பிரிக்கக் கற்றுக்கொள்ளலாம் என்று களம் காண்கிறேன்.

அதென்ன அசை. இதைப் பற்றி மன்றத்தில் பலரும் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும் என் பங்குக்கு நானும் சொல்லிடுறேன்.

அசை இரு வகைப்படும்.

1) நேர் அசை
2) நிரை அசை

நேரசைகளாக அமைவன..

க - குறில் எழுத்து தனித்து

கல் - குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.

கா - நெடில் எழுத்துத் தனித்து தருவது

கால் - நெடில் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.

நிரையசைகளாக அமைவன..

சுடு - குறிலும் குறிலும் இணைந்து வருவது
சுடும் - குறிலும் குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது
கடா - குறிலும் நெடிலும் இணைந்து வருவது
கடாம் - குறிலும் நெடிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது

இந்தளவுதாங்க இப்போதைக்கு நமக்குத் தேவை.

இனி ஒவ்வொரு குறளா அசைச்சுப் பார்ப்போம். அதாங்க அசை பிரிச்சுப் பார்ப்போம்.

அமரன்
08-07-2010, 09:19 PM
முதற்குறளை அசை பிரியுங்க பார்ப்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கீதம்
08-07-2010, 09:29 PM
முதற்குறளை அசை பிரியுங்க பார்ப்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



உதாரணத்துக்கு ஒன்றை நீங்களே பிரித்துக் காட்டிவிடுங்களேன், அமரன்.

அமரன்
08-07-2010, 09:32 PM
கற்க வந்’தவன் எப்’படிங்’க?

குணமதி
09-07-2010, 03:09 AM
அக/ர
முத/ல
எழுத்/தெல்/லாம்
ஆ/தி
பக/வன்
முதற்/றே
உல/கு
பிரித்திருக்கிறேன். சரியா?

த.ஜார்ஜ்
09-07-2010, 04:44 AM
அஞ்சாம் வகுப்பிலையோ, ஆறாம் வகுப்பிலையோ படிச்சது [நீ இப்ப வரைக்கும் அவ்வளவுதான்டா படிச்சிருக்க]

விவரமானவங்க சொல்லித்தாங்க. தெரிஞ்சுகறோம்.

சிவா.ஜி
09-07-2010, 02:11 PM
தேவையானத் திரிதான் பாஸ்...

தெரிஞ்சவங்க நல்லா சொல்லித்தாங்க....

குணமதி...நீங்க பிரிச்சதுல எது நேர் அசை...எவை நிரை அசை என பட்டியல் போடமுடியுமா...இன்னும் விளக்கமாய் புரியும்.(எனக்குத்தான்)

வெற்றி மகிழன்
09-07-2010, 07:23 PM
மன்றத்தினர் அனைவருக்கும் வணக்கம்.
மன்றத்திற்கு நான் ஒரு புது உறுப்பினர்..

"நேர் - நிரை" குறித்த இந்த விவாதத்தில் நானும் எனக்கு தெரிந்தவற்றை சொல்ல விரும்பி உங்களுக்காக இந்த சிறுவன் இதோ....

திரு.அமரன் அவர்கள் மேற்கூறிய விரிவுரைகளை நன்கு படிக்கவும். இப்போது ஒரு சொல்லை எடுத்துக்காட்டாக பார்போம்.

"வணக்கம்" - இந்த சொல்லை நாம் இப்போது பிரித்து பார்போம். இதில் கவனிக்க வேண்டியது, அமரனின் அசை குறித்த விளக்கங்கள். நாம் பிறக்கப்போகும் சொல் அந்த இலக்கண விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

வணக்கம் - வணக் + கம்

வணக் - நிரை அசை, ஏன் என்றால்
"குறிலும் குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது" என்ற விதிக்கு உட்பட்டது .
கம் - நேர் அசை, ஏன் என்றால்
"குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது" என்ற விதிக்கு உட்பட்டது.

அனால் இப்போது உங்கள் மனதுக்கு ஒரு கேள்வி எழும். வணக்கம் என்ற இந்த சொல்லை "வ + ணக் + கம் என்றும் கூட பிரித்து சொல்லலாமே? "

அனால் இங்கு கவனிக்க வேண்டியவை
ஒரு குறில் எழுத்தை மட்டும் வைத்து நாம் "நேர் அசை " என்று முடிவுக்கு வரக்கூடாது. "வ" என்ற குறில் எழுத்தை தொடர்ந்து "ண" என்னும் குறில் எழுத்தோடு 'ம்' என்ற மெய் எழுத்தையும் பார்த்து தான் அது எந்த அசையில் வரும் என்பதை நாம் பிரித்து சொல்ல வேண்டும்.

இப்போது நான் குணமதி அவர்கள் பிரித்த குறளை
விவரிக்கிறேன்.

அக - நிரை /ர - நேர்
முத - நிரை /ல - நேர்
எழுத் - நிரை /தெல் - நேர் /லாம் - நேர்
ஆ - நேர் /தி - நேர்
பக - நிரை /வன்- நேர்
முதற் - நிரை /றே - நேர்
உல - நிரை /கு - நேர்

வெண்பாவின் அசை விதிக்கு மேற் கூறிய இந்த எடுத்துக்காட்டு சரியானது தான் என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் தயவு கூர்ந்து கேளுங்கள்.. காத்திருகிறேன்.. தமிழ் சுவையை உங்களுக்கு தெரிய வைக்க.

அமரன்
09-07-2010, 10:07 PM
இந்த முறை எப்படியாவது நானும் வெண்பா எழுதப் பழகி விடுவேன் என்ற நம்பிக்கையை உறுதியாக்குகிறீர்கள்.

நன்றி நண்பர்களே.

குணமதி அசை பிரித்த போது எனக்குள் எழுந்த சந்தேகம் வணக்கத்தை வைத்து ஜெய்சந்தோஷ் விளக்கிய போது காணாமல் போச்சு.

ஆனாலும் அது தொடர்பால சில தேடல்களை மேற்கொண்டேன். அப்போது சிக்கியவை..



வணக்கம் என்ற பழகிய சொல்லையே எடுத்தோமானால்,
குறில்-குறில்-மெய்-குறில்-மெய் என்றவாறு எழுத்துகள் இணைந்துள்ளன.

நமது அசைகள் பற்றிய அறிவின்படி
குறில்-குறில்-மெய் நிரை அசையாக வருகிறது. எனவே வணக் எனப் பிரிக்கிறோம்.
(இங்கே
குறில் - வ
குறில்+மெய் -ணக்
என இரு அசையாகப் பிரித்தல் ஒழுங்கில்லை)

அடுத்து குறில்-மெய் மிச்சமாகிறது.
நமது அசை அறிவின்படி இது நேர் அசையாக வருகிறது.

இந்த ஒழுங்கு சரிதானா நண்பர்களே.



இன்னொரு சந்தேகம் எழுகிறதே..

பகவன் என்ற சொல்லை ஏன் ப-கவன் என்று அசை பிரிக்கக் கூடாது...?

இங்கே முக்கியமான ஒரு ஒழுங்கு கவனத்துக்கு வருகிறது.

அதாவது,

அசை பிரிக்கும் போது சொல்லின் முன்னிருந்து பார்க்க வேண்டும்.

அதாவது பகவன் என்ற சொல்லின் முதல் மூன்று எழுத்துகள் பகவ.

அதாவது குறில்---->குறில்----->குறில்.

மூன்று குறில் சேர்ந்து வரும் அசை நாம் கற்கவில்லை. எனவே மூன்றாவது எழுத்தை (வ) விடுவோம்.

மிஞ்சுவது பக (குறில்--->குறில்). இது நிரையசை.

பகவன் என்பதில் பக போனால் மீதி வன். குறிலும் மெய்யும். இது நேரசை.

எனவே பகவன் என்பதை அசை பிரித்தால்,

பக-வன்
நிரை-நேர்

இதிலிருந்து நான் கற்றது என்ன என்றால்,
மூன்று குறில் எழுத்துகள் வரும்போது 2+1 என்றவாறு அசை பிரித்தல் ஒழுங்கு. (குறுக்கு வழி:))

சரிதானா நண்பர்களே.

nambi
09-07-2010, 11:40 PM
நல்லது! அசை பற்றித் தொடருங்கள்! இசைவுடன் தொடர்கிறோம்!

அமரன்
10-07-2010, 12:47 AM
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்பதை அசை பிரிக்கிறேன். சரிதானா என்று சொல்லுங்கள்.


அகர---->

மூன்று குறில். எனவே அக (நிரை) ,
ர (நேர்)

முதல---->

மூன்று குறில். எனவே முத (நிரை)
ல (நேர்)

எழுத்தெல்லாம்--->

முதல் மூன்றும் (எழுத்) குறில்+குறில்+மெய் (நிரை என்று கற்றேன் முன்பு).. எழுத் (நிரை)
அடுத்து (தெல்) குறில்+மெய் (நேர் என்று கற்றேன் முன்பு).. தெல் (நேர்)
அடுத்து (லாம்) நெடில்+மெய் (நேர் என்று கற்றேன் முன்பு) லாம் (நேர்)

ஆதி--->

ஆ-நெடில் (நேர் எனக் கற்றேன் முன்பு)
தி -குறில் (நேர் எனக் கற்றேன் முன்பு)

பகவன் ---> முதல் மூன்றும் குறில். எனவே

பக---> குறில் + குறில் (நிரை எனக் கற்றேன் முன்பு) பக (நிரை)
வன் --> குறில் + மெய் (நேர் எனக் கற்றேன் முன்பு) வன் (நேர்)

முதற்றே--->

முதல் மூன்றும் குறில்+குறில்+மெய் (நிரை எனக் கற்றேன் முன்பு). எனவே முதற் (நிரை)
அடுத்தது றே-நெடில் (நேர் எனக் கற்றேன் முன்பு) எனவே, றே (நேர்)

உலகு---> குறில்+குறில்+குறில்... குறுக்கு வழியின்படி உல (நிரை)கு (நேர்)
அக (நிரை) , ர (நேர்)
முத (நிரை) ல (நேர்)
எழுத் (நிரை) தெல் (நேர்) லாம் (நேர்)
ஆ(நேர்) தி(நேர்)
பக (நிரை) வன் (நேர்)
முதற் (நிரை) றே (நேர்)
உல (நிரை)கு (நேர்)

ஆதவா
10-07-2010, 02:30 AM
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உலகு---> குறில்+குறில்+குறில்... குறுக்கு வழியின்படி உல (நிரை)கு (நேர்)

உல (நிரை)கு (நேர்)

உலகு - இதை நிரைபு என்பார்கள். வெண்பாவின் இறுதியடியின் இறுதிச் சொல் அதாவது சீர்,

நேர் (கல்)
நிரை (உள)
நேர்பு (நட்பு)
நிரைபு (உலகு)

போன்ற உறுப்புகள் கொண்டு முடியும்.

ஆதவா
10-07-2010, 02:43 AM
பொதுவாக நாம் பேசுவதே இப்படி அசை பிரித்துத்தான் பேசுவோம். ஒரு எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்கும் உள்ள சன்ன இடைவெளிதான் அசையாகப் பிரிகிறது.
நாம் பேசும் வார்த்தைகளை நன்கு கவனித்தாலே தன்னாலே அசை புரிந்துவிடும்.

நீங்கள் அசை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் எழுத்துக்களின் மாத்திரை அளவு தெரிந்து கொள்வது அவசியம். மாத்திரை என்பது எழுத்து வாசிக்கப்படும் நேரம்.

குறில் எழுத்துக்களை நாம் சட்டென வாசித்துவிடலாம். ஆக அது ஒரு மாத்திரை
நெடில் எழுத்துக்களை நாம் குறிலைக் காட்டிலும் சில மில்லி நொடிகள் அதிகமாகவே வாசிப்போம். ஆக அது இரண்டு மாத்திரைகள்
இது போக மற்றவை அரை மாத்திரை குறிப்பாக குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) ஆய்த எழுத்து ஆகியவை.

தமிழில் ஒலி குறைந்த அதாவது ஆங்கிலத்தில் சைலண்ட் எழுத்து எனச் சொல்லப்படும் “ம்” மிக குறைந்த மாத்திரை அளவே.... (மகர குறுக்கத்தின் போது,)

இப்படி மாத்திரை மருந்து என்று ஞாபகம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் சொற்களை நாம் கவனித்து பேசி வந்தாலே எல்லா விஷயமும் புரிந்துவிடும்.

என்னைக் கேட்டால், நேரடியாக அசைக்கு வருவதைக் காட்டிலும் எழுத்துக்களை நன்கு புரிந்து கொண்டு வருவதே பாவகை கற்க சிறந்த வழி

சிவா.ஜி
10-07-2010, 06:42 AM
சிறப்பான விளக்கங்கள். ஜெய்சந்தோஷ் தொடங்கி, அமரன் ஆய்ந்து, ஆதவாவின் மேல் விளக்கங்களுடன் அழகாய் கற்பிக்கிறது இந்தத் திரி. தொடருங்கள் நண்பர்களே...

செல்வா
10-07-2010, 07:39 AM
அசையுங்கோ இசையுங்கோ....
இரசிக்கிறேன் .... !

அமரன்
10-07-2010, 09:25 AM
உலகு - இதை நிரைபு என்பார்கள். வெண்பாவின் இறுதியடியின் இறுதிச் சொல் அதாவது சீர்,

நேர் (கல்)
நிரை (உள)
நேர்பு (நட்பு)
நிரைபு (உலகு)

போன்ற உறுப்புகள் கொண்டு முடியும்.

ஓ.. அப்படி ஒன்று இருக்கா என்ன?

அதைச் சிம்பொலிக்காச் சொல்லத்தான் உல(நிரை)பு என்றவாறு அடைப்புக் குறியுடன் இணைந்து பு வந்ததோ.

அமரன்
10-07-2010, 09:27 AM
இப்ப ஒரு ஞாபகத்தில் வைச்சிருக்கக் கூடிய சுருக்கத்துக்கு வந்திட என்னால் முடியுது.

அதாவது,

மூன்று குறில் இணைந்து வந்தால் 2-1 என்று அசை பிரிக்க வேண்டும்.
மூன்று குறிலும் ஒரு மெய்யும் இணைந்து வந்தால் 2-2 என்று அசை பிரிக்க வேண்டும்.

சரிதானோ?

அமரன்
10-07-2010, 09:37 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


இந்தக் குறளில் ஓரிடத்தில் இரு மெய்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்நிலையில் எப்படி அசை பிரிப்பது?

சொல் அசைபிரிக்க இலகுவக இருந்தது. வார்த்தை கடினமானதாக உள்ளதே.

ஆதவா
10-07-2010, 05:21 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


இந்தக் குறளில் ஓரிடத்தில் இரு மெய்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்நிலையில் எப்படி அசை பிரிப்பது?

சொல் அசைபிரிக்க இலகுவக இருந்தது. வார்த்தை கடினமானதாக உள்ளதே.

அன்/பிலார் (கூவிளம்)
எல்/லாம்/ (தேமா)
தமக்/குரி/யர் (கருவிளங்காய்)
அன்/புடை/யார் (கூவிளங்காய்)
என்/பும் (தேமா)
உரி/யர் (புளிமா)
பிறர்க்/கு (நிரைபு)


பிறர்க்கு

ஒற்று மிக குறைந்த மாத்திரை அளவை கொண்டது. இரண்டு ஒற்றுகள் வரும்பொழுது அது முன்னெழுத்தின் அசையோடே சேரும்.

பிறர்க்கு என்ற வார்த்தையை மெல்ல சொல்லிக் கொண்டேயிருங்கள், அசை பிரிவது உங்களுக்கே தெரியும்.

அமரன்
10-07-2010, 05:29 PM
நன்றி ஆதவா..

தேமா, விளம், கூவிளம், காய், கனி என நிறைய இருக்குப் போலப் படிக்க.

அதை எல்லாம் ஒவ்வொன்றாகக் கற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இப்ப அசை பிரிப்பதில் தேர்ச்சி பெற நீங்களே குறள் வெண்பாகளைக் கொடுங்களேன்.

ஆதவா
10-07-2010, 05:44 PM
நன்றி ஆதவா..

தேமா, விளம், கூவிளம், காய், கனி என நிறைய இருக்குப் போலப் படிக்க.

அதை எல்லாம் ஒவ்வொன்றாகக் கற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இப்ப அசை பிரிப்பதில் தேர்ச்சி பெற நீங்களே குறள் வெண்பாகளைக் கொடுங்களேன்.

நானே ஒரு அரைகுறை அமரன்.. தாமரை அண்ணா மாதிரி வெண்பா நல்லா தெரிஞ்சவங்க இதை தொடர்ந்தா இன்னும் நல்லா இருக்கும்.

வெண்பாவில் கனி வராது. (அதுவரைக்கும் தப்பிச்சோம்.) வெண்பா எழுதறது ஈஸிதான். ஏன்னா சரியான வார்த்தை கிடைக்காட்டி மாற்று வார்த்தை நிச்சயம் இருக்கும். அதான் தமிழ்.

அசை பிரிக்க தேர்ச்சியாகவேண்டும்னா, முதலில் வார்த்தைகளை நன்கு கவனித்து உச்சரிக்க வேண்டும். குறில் நெடில் என்று மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டால் சரிவராது. அது பாடம் படிப்பதைப் போன்று இருக்கும்.

ஒரு பாடலை வைத்துத்தான் அசை பிரிக்கவேண்டும் என்பதில்லை. இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த பதிவைக் கூட நீங்கள் அசை பிரிக்கலாம். புது போட்டோகிராபர் பார்க்கிறதை எல்லாம் போட்டோ பிடிக்கிறது மாதிரி நீங்க பார்க்கிற எல்லா வார்த்தைகளையும் அசை பிரிக்கலாம்.

அமரன்
10-07-2010, 05:50 PM
அதே.. அதே..

வெண்பா என்றால் ஏதோ வாயுக்குள் நுழையாத சொற்களால் ஆனது என்ற மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். இயல்பாகப் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு வெண்பா வடிக்கலாம். வெண்பா வடிப்பது இலகுவானது என்று ஒவ்வொருவரையும் இழுக்க வேண்டும் அதுக்குச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களை அசை பிரிச்சு மேயப் பழகனும்...

குறளாக அமைந்தால் வெண்பா விளக்கம் வரும் போது எளிதில் புரிந்து விடலாம் என்றதாலேயே குறளை எடுத்தாள தீர்மானித்தேன்.

ஆதவா
10-07-2010, 05:58 PM
அதே.. அதே..

வெண்பா என்றால் ஏதோ வாயுக்குள் நுழையாத சொற்களால் ஆனது என்ற மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். இயல்பாகப் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு வெண்பா வடிக்கலாம். வெண்பா வடிப்பது இலகுவானது என்று ஒவ்வொருவரையும் இழுக்க வேண்டும் அதுக்குச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களை அசை பிரிச்சு மேயப் பழகனும்...

குறளாக அமைந்தால் வெண்பா விளக்கம் வரும் போது எளிதில் புரிந்து விடலாம் என்றதாலேயே குறளை எடுத்தாள தீர்மானித்தேன்.

நிச்சயமாக இல்லை அமரன். திருக்குறளில் கூட எளிமையான வார்த்தைகள் அதாவது புரியும் வார்த்தைகளில் குறள் இருக்கின்றன. அது அக்காலத்திற்குப் பார்க்கும்பொழுது இன்னும் எளிமையாக இருக்கலாம்.

நீங்கள் அசை பிரிப்பது என்று தீர்மானித்துவிட்டால், குறள் என்ன, பத்தி என்ன, எல்லாவற்றையும் பிரிப்பதுதான் சிறந்தது. மேலும் வார்த்தைகள் நன்கு பழக்கப்படும்.

அமரன்
10-07-2010, 06:02 PM
நீங்-க சொல்-றதும் சரி-தான் ஆ-தவா:)

பாரதி
11-07-2010, 01:07 PM
கற்றுக்கொள்ள ஆவலுடன் அணிவகுக்கும் மாணவர்களில் நானும் ஒருவன். எனினும் இப்போதைய இணைய இணைப்பு காரணமாக பதிவுகளை படிப்பதே சிரமமாக இருக்கிறது. விரைவில் அனைவருடனும் சேர்ந்து நானும் கற்பேன். திரியின் நோக்கம் முழுமை பெற வாழ்த்துகிறேன்.

ஆதி
13-07-2010, 03:38 PM
நானும் வந்து வரிசையில் உட்கார்ந்துட்டேன், படிக்க* திரி ஆரம்பிந்த அமருக்கு, பயிற்றுவிக்கும் ஆதவாவுக்கும் நன்றிகள்.. எப்படியும் ஒரு வெண்பா எழுதியே தீரனும்..

ஆதவா
14-07-2010, 07:35 AM
பயிற்றுவிக்கும் ஆதவாவுக்கும் நன்றிகள்..

ஐயா, இது எப்ப இருந்து? நானே அரைகுறை... நானும் உங்களோடு கத்துக்கணும்னு பார்க்கிறேன்

ஆதி
14-07-2010, 08:46 AM
ஐயா, இது எப்ப இருந்து? நானே அரைகுறை... நானும் உங்களோடு கத்துக்கணும்னு பார்க்கிறேன்

தெரிந்த அரையை எங்களுக்கு சொல்லிக் கொடுங்க குறையை தாமரையண்ணா தீர்த்து வைப்பார்... :)

குணமதி
14-07-2010, 02:44 PM
'குறள் யாப்போம்' - ஈறுதொடங்கி - என்று தொடங்கிய 'திரி' யாரும் எழுதாததால் அப்படியே நின்று விட்டது.

இப்போது தொடங்கும் இம்முயற்சி மன்றத்தில் பலரும் குறள் எழுத உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

அவ்வப்போது நானும் கலந்து கொண்டு எனக்குத் தெரிந்த வரையில் உதவக் காத்திருக்கிறேன்.

பலரும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அமரன்
14-07-2010, 02:46 PM
'குறள் யாப்போம்' - ஈறுதொடங்கி - என்று தொடங்கிய 'திரி' யாரும் எழுதாததால் அப்படியே நின்று விட்டது.

இப்போது தொடங்கும் இம்முயற்சி மன்றத்தில் பலரும் குறள் எழுத உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

அவ்வப்போது நானும் கலந்து கொண்டு எனக்குத் தெரிந்த வரையில் உதவக் காத்திருக்கிறேன்.

பலரும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்-க பதி-கிற எல்-லாரும் அசை-யுடன் பதி-யனும்-னு விதி கொண்-டுவ-ரலாம்.

குணமதி
14-07-2010, 02:51 PM
இங்-க பதி-கிற எல்-லாரும் அசை-யுடன் பதி-யனும்-னு விதி கொண்-டுவ-ரலாம்.

எல்/லா/ரும் - என்று பிரிக்க வேண்டும்.

ஆதவா
14-07-2010, 02:59 PM
இங்-க பதி-கிற எல்-லாரும் அசை-யுடன் பதி-யனும்-னு விதி கொண்-டுவ-ரலாம்.

அப்பறம் யாரும் வரமாட்டாங்க.. விதிகளை உடைத்தால்தானுங்க நல்ல கல்விமுறை மனசுல ஏறும்....

அது சரி, வார்த்தைப் பயிற்சி எடுத்துக்கிட்டீங்களா? நீங்க நொடிப்பொழுதி அசை பிரிச்சு பழகினா அடுத்த கட்டத்துக்குப் போகலாம்...

(நம்ம தாமரை அண்ணா ஏன் மெளனமா இருக்காரு?)

அமரன்
14-07-2010, 03:12 PM
எல்/லா/ரும் - என்று பிரிக்க வேண்டும்.

அதே....அதே...

அமரன்
14-07-2010, 03:19 PM
அப்பறம் யாரும் வரமாட்டாங்க.. விதிகளை உடைத்தால்தானுங்க நல்ல கல்விமுறை மனசுல ஏறும்....

அது சரி, வார்த்தைப் பயிற்சி எடுத்துக்கிட்டீங்களா? நீங்க நொடிப்பொழுதி அசை பிரிச்சு பழகினா அடுத்த கட்டத்துக்குப் போகலாம்...

(நம்ம தாமரை அண்ணா ஏன் மெளனமா இருக்காரு?)

போலாம் ரைட்..

ஆதி
14-07-2010, 04:15 PM
(நம்ம தாமரை அண்ணா ஏன் மெளனமா இருக்காரு?)

அவரு திரிப்பகக்கமே வரல ஆதவா, யாராவது அவரை இந்தப்பக்கம் கூட்டீட்டு வாங்கப்பா..

கலையரசி
15-07-2010, 01:06 PM
எல்/லா/ரும் - என்று பிரிக்க வேண்டும்.

கொண்-டுவ-ரலாம் என்பது சரியா?

கொண்/டு/வர/லாம் என்பது தானே சரி?

குணமதி
15-07-2010, 01:09 PM
கொண்-டுவ-ரலாம் என்பது சரியா?

கொண்/டு/வர/லாம் என்பது தானே சரி?

கொண்/டுவ/ரலாம் - சரி.

ஆதி
15-07-2010, 01:24 PM
கொண்-டுவ-ரலாம் என்பது சரியா?

கொண்/டு/வர/லாம் என்பது தானே சரி?

அக்கா,


நேர் அசை விதிகள் - தனிக் குறில், தனி நெடில், தனிக் குறில்/நெடிலோடு ஒற்று..

என்/னோ/டு =நேர்/ நேர்/நேர்

என் *- தனிக்குறிலோடு ஒற்று

னோ - தனி நெடில்

டு - தனிக்குறில்


நேர் எனும் சொல்லை பிரித்தாலும் நேர் அசையே கிடைக்கும்..

நிரை அசை விதிகள் :-

1) குறிலொடு குறில்

2) குறிலொடு நெடில்

அலை/களே = நிரை/நிரை

அலை - குறிலொடு குறில்

களே - குறிலொடு நெடில்


நிரை எனும் சொல்லைப் பிரித்தாலும் நிரையசையே கிடைக்கும்

சேராதவை :-

1) நெடிலோடு முன்வர குறில் அதனுடன் சேராது

2) ஒற்று முன்வர பின்வரும் நெடிலோ, குறிலோ அதனுடன் சேராது.


இப்போ கொண்-டுவ-ரலாம் ஐ பார்ப்போம்..


கொண்-டுவ-ரலாம் = நேர்-நிரை-நிரை

கொண் - தனிக்குறிலொடு ஒற்று

டுவ - குறிலொடு குறில்

ரலாம் - குறிலொடு நெடில்

நேர்-நிரை-நிரை = கூ-விளங்-கனி

கீதம்
16-07-2010, 12:28 AM
கொண்டுவரலாம் என்பதை கொண்டு வரலாம் என்று பிரித்து எழுதியிருந்தால் கொண்/டு/ வர/லாம் என்று பிரிப்பதுதானே சரி. அதைத்தான் கலையரசி அக்கா கேட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

குணமதி
16-07-2010, 03:37 AM
கொண்டுவரலாம் என்பதை கொண்டு வரலாம் என்று பிரித்து எழுதியிருந்தால் கொண்/டு/ வர/லாம் என்று பிரிப்பதுதானே சரி. அதைத்தான் கலையரசி அக்கா கேட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரி.

கொண்டு வரலாம் என்று தனித்தனியாக - இரண்டு சீர்களாக எழுதும் போது...

கொண்/டு வர/லாம் - என்று அலகிடுவதே - அசை பிரிப்பதே சரியாகும்.

கொண்டுவரலாம் என்பது ஒரே சீரானால், கொண்/டுவ/ரலாம் என்றே அலகிட வேண்டும்.

செல்வா
16-07-2010, 04:53 AM
அலை/களே = நிரை/நிரை

அலை - குறிலொடு குறில்

களே - குறிலொடு நெடில்


இரண்டுமே குறிலோடு நெடிலே

ஐ - நெடிலாகும்.

கட - குறிலோடு குறில்
கடா - குறிலோடு நெடில்.

ஆதவா
16-07-2010, 05:01 AM
இரண்டுமே குறிலோடு நெடிலே

ஐ - நெடிலாகும்.

கட - குறிலோடு குறில்
கடா - குறிலோடு நெடில்.


செல்வா, சிலசமயம் ஐ நெடிலாகாது!! (ஐகாரகுறுக்கம்!)

அன்னையினால் ஆனது..

இதை அசை பிரியுங்களேன்!!

ஆதி
16-07-2010, 06:46 AM
செல்வா, சிலசமயம் ஐ நெடிலாகாது!! (ஐகாரகுறுக்கம்!)

அன்னையினால் ஆனது..

இதை அசை பிரியுங்களேன்!!

அதே அதே..

செல்வா ஐகாரகுறுக்கம் மறந்துட்டீயோ ?

அலை *- மாத்திரையளைவை கணக்கிடு

ஆதி
16-07-2010, 06:51 AM
அசை வாய்ப்பாடுகள் :

நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்

நேர்நேர்நேர் - தேமாங்காய்

நிரைநேர்நேர் - புளிமாங்காய்

நேர்நிரைநேர் - கூவிளங்காய்

நிரைநிரைநேர் - கருவிளங்காய்

வெண்பா இயற்ற தேவையான அசை வாய்ப்பாடுகள் இவை..

செல்வா
16-07-2010, 07:39 AM
ஐகாரக் குறுக்கத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...

ஆதி
16-07-2010, 08:05 AM
ஐகாரக் குறுக்கத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...

ஐகாரக்குறுக்கம் :-


'ஐ' என்னும் எழுத்தை குறிக்கும் போதும் அளபெடையில் நீளும் போதுமன்றி மற்ற இடங்களில் குறுகியே ஒலிக்கும்,
சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரையும், இடை, கடையில் ஒரு மாத்திரையும் கொண்டொலிக்கும்.


ஐராவதம் - முதல் எழுத்து
அலைகள் - இடையெழுத்து
அவர்களை - கடையெழுத்து

ஆதவா
16-07-2010, 08:20 AM
ஐகாரக் குறுக்கத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...

எனக்கும் அவ்வளவு விளக்கமாகத் தெரியாது செல்வா. ஏதோ தெரிந்ததை சொல்கிறேன். மற்றவை மற்றவர் கையில்.

ஐகார குறுக்கம். அதாவது ஐ’காரம் மாத்திரை அளவு குறுகி வருவது.

எதற்காக என்றால் அசையொலி அவ்விடத்தில் குறைந்து இருக்கும். உதாரணத்திற்கு

”அன்னையினால்” என்ற வார்த்தையை “அன்னயினால்” என்பது போலத்தான் நாம் உச்சரிப்போம்.

”னை” எனும் ஐகாரம் ஒலி அளவில் குறுகி ”ன” ஆகிவிடுகிறது. ஆதலால் இதை ஐகார குறுக்கம் என்கிறோம். சொல்லின் எல்லா இடங்களிலும் ஐகாரகுறுக்கம் வரலாம்.

அதே போல

அகந்தையை விட்டொழி (அகந்தயை)
உண்மையினால் பிழைத்தான் (உண்மயினால்)


ஆனால் எல்லா இடத்திலும் இது ஒத்து வராது. ”ஐயம் (சந்தேகம்)” இதை அய்யம் என்றுதான் நாம் சொல்லுவோம். அதனால் இதனை குறுக்க வேண்டியதில்லை. ( ஐ உம் அய் உம் ஒன்றுதான் ) ஐ யை நெடிலாக பாவித்து, ஐ+யம் என்று பிரிக்கலாம்.

ஐகாரத்திற்கு அருகில் ஒற்று வந்தாலும் அது நெடிலாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். ”ஐங்+கரன்”

எழுத்தில், குறுக்கமும் நீட்சியும் (அளபெடை) உண்டு!!

உயிரளபெடை ,

அனிச்சபூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஆ பறை

ஒற்றளபடை உண்டு!!! (பொன்ன், மண்ண்)


மேற்கூறியவற்றில் ஒன்றிரண்டு தவறுகள் இருக்கலாம். ஆகவே யாரேனும் ஆராய்ந்து அறிந்து கொள்க.

ஆதி
16-07-2010, 08:27 AM
//இடத்திலும் இது ஒத்து வராது. ”ஐயம் (சந்தேகம்)” இதை அய்யம் என்றுதான் நாம் சொல்லுவோம். அதனால் இதனை குறுக்க வேண்டியதில்லை. ( ஐ உம் அய் உம் ஒன்றுதான் ) ஐ யை நெடிலாக பாவித்து, ஐ+யம் என்று பிரிக்கலாம்.
//

ஆனாலும் நெடிலுக்குறிய இரண்டு மாத்திரை உற்றிலிக்காது 'ஐ'

'அய்' இதற்கு ஒன்றரை மாத்திரை தானே..

அசைப்பிரிக்கும் போது சொல்லின் முதலில் 'ஐ' வந்தால் அதனை நெட்டெழுத்தாகவே கருதுதல் அவசியம்..

ஐராவதம் - ஐ/ரா/வதம் என அசை பிரிக்கவேண்டும்..

செல்வா
16-07-2010, 09:36 AM
ஐகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை பெறும் என உறுப்பியலில் கூறப்பட்டது.ஆயினும் அலகிடும்போது ஐகாரக்
குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின்
வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக
அலகிடப் பெறும்.

எடுத்துக்காட்டு :
அன்னையையான் நோவ தவமால் அணியிழாய்
புன்னையையான் நோவன் புலந்து
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
(அவம் = வீண் ; நோவன் = வருந்துவேன் ; புலந்து
= சினந்து)

மேற்காட்டிய வெண்பாவில் ஐகாரத்தை
நெடில்போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு அன்னையையான், புன்னையையான் எனும் சீர்களை
அன்-னை-யை-யான் எனவும் புன்-னை-யை-யான் என்று
பிரித்தால் அவை நாலசைச் சீர்கள் ஆகும். வெண்பாவில்
நாலசைச் சீர்களுக்கு இடமில்லை. ஆகவே ஐகாரக்
குறுக்கத்தை ஒரு மாத்திரை பெறும் குறில் போலக் கொண்டு
அன்-னயை-யான், புன்-னயை-யான் என அலகிட வேண்டும்.
அச்சீர்கள் கூவிளங்காய்ச் சீர்கள் ஆகி, வெண்பா ஓசை
காக்கப் பெறும்.
(ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
ஐ-யிரு என அலகிட வேண்டும்.

எடுத்துக்காட்டு :
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)
(பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)

மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத்
தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம்
அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால்
இலக்கணம் சிதையும்.)

நன்றி : tamilvu.org

இது இணையத்தில் கண்டெடுத்தது. மொழியின் நுட்பமான அலகுகளில் ஒன்றாகத் தெரிகிறது. உச்சரிக்கும் காலத்தின் அளவைக் கொண்டு அளக்க வேண்டியிருக்கிறது.

தெரிந்தவர்கள் இன்னும் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

ஐ - வரக்கூடிய வார்த்தைகள் தொகுத்து அவற்றை அசை பிரித்தால் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்

அம்மையப்பன்
ஆணை
யானை
பாளை
பானை
சேனை
மனைமாட்சி
ஐந்து
வளையாதது
சிலையானது
மழலை

இவற்றை கொஞ்சம் அசைபிரித்துக் கொடுங்களேன்.

ஆதி
16-07-2010, 10:03 AM
அம்/மையப்/பன்
ஆ/ணை
யா/னை
பா/ளை
பா/னை
சே/னை
மனை/மாட்/சி
ஐந்/து
வளை/யா/தது
சிலை/யா/னது
மழ/லை

செல்வா
17-07-2010, 02:15 PM
ஐராவதம் = ஐரா-வதம்

சரியா? உச்சரித்துப் பார்க்கும் போது ஐ குறுகியிருப்பதாகத் தோன்றுகிறது.

அமரன்
17-07-2010, 02:47 PM
பின்னுறாங்கப்பா எல்லாரும்.

கடைசீல அழகான சட்டைகள் நிறையக் கிடைக்கும்.

ஆதி
17-07-2010, 03:16 PM
ஐராவதம் = ஐரா-வதம்

சரியா? உச்சரித்துப் பார்க்கும் போது ஐ குறுகியிருப்பதாகத் தோன்றுகிறது.

இல்ல டா..

ஐ/ரா/வதம் என்றே பிரிக்க வேண்டும்..

அமரன்
17-07-2010, 03:19 PM
ஐகாரக் குறுக்கம் சம்மந்தமானவற்றைப் படிக்கும் பொது தோன்றியது..

அழுத்தாமக அய் என உச்சரிக்கப்படுபவை நெடிலாகவும்
அ என உச்சரிக்கப்படும் ஐ குறுக்கமாகவும் அமைகிறதோ.

ஆதி
17-07-2010, 03:25 PM
ஐகாரக் குறுக்கம் சம்மந்தமானவற்றைப் படிக்கும் பொது தோன்றியது..

அழுத்தாமக அய் என உச்சரிக்கப்படுபவை நெடிலாகவும்
அ என உச்சரிக்கப்படும் ஐ குறுக்கமாகவும் அமைகிறதோ.

இதை கவனிங்க அமர்

(ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
ஐ-யிரு என அலகிட வேண்டும்.

அமரன்
17-07-2010, 05:04 PM
இப்ப மட்டும் என் வாத்தியார் கையில கிடைச்சார். செத்தார்.

செல்வா
17-07-2010, 07:48 PM
வாரே வா.... இதைப் புரிஞ்சுக்காம இந்தத் தலைப்பை விட்டு விலகுறதா இல்லை.


ஐகார குறுக்கம். அதாவது ஐ’காரம் மாத்திரை அளவு குறுகி வருவது.

எதற்காக என்றால் அசையொலி அவ்விடத்தில் குறைந்து இருக்கும். உதாரணத்திற்கு

”அன்னையினால்” என்ற வார்த்தையை “அன்னயினால்” என்பது போலத்தான் நாம் உச்சரிப்போம்.




ஐ-ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
ஐ-யிரு என அலகிட வேண்டும்யிரு என அலகிட வேண்டும்


ஆதவாவின் மற்றும் ஆதனின் விளக்கங்களிலிருந்து
மரபுக் கவிதைக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்புண்டு என்பது எனது எண்ணம். நமது யாப்பிலக்கணம் முழுக்க தமிழிசைக் குறிப்புகள் என்றே நான் நம்புகிறேன். அதனால் தான் ஒலிநீளமடிப்படையில் கட்டப்பட்டுள்ளது யாப்பு.

குறுக்கமும் அளபடையும் உச்சரிக்கும் காலத்தை வைத்து மட்டுமே கணிக்கப் படுகிறது. அதன்படி பார்த்தால் ஐயர் - ஐயிரு இரண்டும் உச்சரிக்கும் போது ஐயில் ஒரு அழுத்தம் தெரிகிறது. அதற்கு நாம் கொடுக்கும் காலம் ஒரு மாத்திரைக்கும் அதிகமாக இருப்பதே காரணமாகப் படுகிறது. எனவே ஐ இங்கே நெடிலாகக் கொள்ள வேண்டும்.

இதுவே ஐராவதம் - எனும் போது ஐ ஒரு மாத்திரை அளவே உச்சரிக்கப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே இதைக் குறிலாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஐயா என்பதை எப்படி உச்சரிப்போம்? ஐ- க்கு அழுத்தம் கூடுகிறது எனவே ஐயானது ஒரு மாத்திரை அளவிற்கும் அதிகமாக ஒலிக்கிறது எனவே நெடில் இங்கே.

சரியானு சொல்லுங்கப்பா...

பங்காளி இந்த வார்த்தைகளை உச்சரித்துப் பார்த்து இசையினடிப்படையில் கால அளவு என்ன தோன்றுகிறது. என்பதைச் சொல்லேன்.

ஆதி
18-07-2010, 05:18 AM
//இதுவே ஐராவதம் - எனும் போது ஐ ஒரு மாத்திரை அளவே உச்சரிக்கப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே இதைக் குறிலாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.//

'ஐ' என்னும் எழுத்தை குறிக்கும் போது தவரி மற்ற இடங்களில் குறுகும்..

ஐராவதமும், ஐயா,ஐயர் எல்லா இடத்திலும் குறுகியே ஒலிக்கும்,

அய்ராவதம்,அய்யா,அய்யர் இப்படி பார்த்தால் யாவிற்கும் ஒன்றரை மாத்திரைதான்..

குணமதி
18-07-2010, 10:36 AM
ஐகாரம் குறித்த பல செய்திகள் கூறப்பட்டன.

புதிதாக வெண்பா எழுதும் ஆவலோடு இருப்பவர்கள் குழப்பமடையாமல் எளிதாகப் பின்பற்ற ஐகாரம் குறித்த செய்தி :

சொல்லின் - சீரின் - முதலில் வரும் ஐகாரம் நெடிலாகக் கொள்ளப்படும்.

இடையிலும் இறுதியிலும்(கடையிலும்) வரும் ஐகாரம் குறிலாகக் கொள்ளப்படும்.

இதை நினைவில் இருத்தினால் போதும்.

எடுத்துக்காட்டு:

ஐயன் - இதில் ஐகாரம் நெடில்

புதையல் - இதில் ஐகாரம் குறில்

உன்னை - இதில் ஐகாரம் குறில்.

அவ்வளவே.

அமரன்
18-07-2010, 02:39 PM
அதே.. அதே.. குணமதி!

செல்வா
19-07-2010, 07:17 PM
இதை ஏற்றுக் கொள்கிறேன். தொடரலாமே பாடத்தை.
இது போல அசைகளை அசைக்கும் குறுக்கங்கள் அளபடைகள் வேறேதும் உளதா?

சிவா.ஜி
19-07-2010, 09:28 PM
ஆஹா ஐகாரக்குறுக்கத்துக்கு....இவ்ளோ அழகான விளக்கங்களா...?

குணமதியின் சுலபமான விளக்கம்...ரொம்ப சூப்பர். நன்றி அனைவருக்கும்.

ஆதி
27-07-2010, 09:01 AM
வெண்பா எழுதிடும் வித்தைப் பயின்றிங்கே
உன்பா எழுதிட ஓர்த்திரி ஏற்றினாய்
நண்பா! அமரா! நயத்திரி மீட்டெடுத்து
நன்-பாடம் மேலும் நடத்து!

குணமதி
27-07-2010, 04:48 PM
வெண்பா எழுதிடும் வித்தைப் பயின்றிங்கு
உன்பா எழுதிட ஓர்த்திரி ஏற்றினாய்
நண்பா! அமரா! நயத்திரி மீட்டெடுத்து
நன்-பாடம் மேலும் நடத்து!

'பயின்றிங்கு உன்பா' - என்பது சேர்த்தெழுதினால் 'பயின்றிங் குன்பா' என்று அமையும். தளை தவறாகும். பயின்றிங்கே உன்பா - என்றால் சரியாகும். வேறு வகையிலும் திருத்தலாம்.

ஆதி
28-07-2010, 07:16 AM
கவனிக்காமவிட்டுடேன் குணமதி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருத்திவிட்டேன்..