PDA

View Full Version : தனிமைப் பிரயோகங்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-07-2010, 02:20 PM
விக்கலிலும் திக்கலிலும் ஊனறுத்து
உயிருடைத்துச் செல்லும்
மீறிய தனிமைப் பிரயோகங்கள்

சீரிய பாய்ச்சலில் உட்குத்தி நுழைந்து
மறு வழியாய் நிதானித்து வெளியேறி
வேறு வழியாய் மீண்டும் பாய்ந்து
சீர் வரிசையில் தைத்தெடுக்கின்றன
விட்டு தொட்டு நிற்கும்
அவளைப் பற்றியானவைகள்

சலனமற்றக் குட்டைகள் வழி
நேரிய பிம்பங்களிட்டுச் செல்லும்
சிறுவனின் தவளைக் கல்லாய்
மணிக்கொரு முறை விரைந்தோடுகிறாள்
சீரற்று எகிறும் லப்டப்களினூடே

பரந்து விரிந்த வனாந்திரம்
திடமாய் வீரியமிட்டு நிற்கும்
எல்லைகளற்ற காட்சிப் பொருள்கள்
இந்தச் சூழலின் மையமிருந்தும்
எட்ட மறுக்கும் பார்வைகளில்
முட்டி நெருக்கும் நாற்புற நெருக்கங்களில்
அமிழ்ந்திருப்பதைப் போன்றதொரு பிரமிப்பு
உன் இல்லாமைகளில்

இவ்வளவுகளுக்குமிடையில்
நேர்ந்து கழிந்த கடந்தவைகளுக்காக
மன்னித்து விட்டேனென்ற ஆங்கிலப் பதத்தை
குலைந்து நெளிந்து கூறி முடிக்கையில்
ஒழுகித் தீர்த்த கரிய மேகமாய்
சுத்தமாய் போகிறேன் ஒவ்வொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

அமரன்
11-07-2010, 06:26 AM
சுனைத்..

கவிதையைப் படிப்பதில் அசௌகரியமாக உணர்கிறேன்.

பத்தி பிரித்தோ வரிகளுக்கு இடையில் இடைவெளி விட்டோ எழுதினால் கவிதையின் சுவையை நன்குணரமுடியும்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-07-2010, 08:07 AM
தனது காதலியுடனான முந்தைய சந்திப்பின் போது அவள் ஏதோ ஒரு காரணத்தால் கோபித்துச் சென்றதையும் அதற்கு பின் சந்திக்க இயலாமல் போனதற்கான தனிமையையும் பின் இரண்டாம் சந்திப்பின் போது அவள் சமாதானமுற்றதையும் ஏதோ என்னால் முடிந்த வரை கவிதையில் வரைய முயற்ச்சித்திருக்கிறேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி அமரா. செய்து விட்டேன்.

சிவா.ஜி
12-07-2010, 10:05 AM
சொல்லியக் கருத்து சாதாரணமானதுதான்...ஆனால் சொல்லியவிதம் சிறப்பு. வார்த்தைகள் அம்சமாய் வந்து விழுந்திருக்கிறது.


வாழ்த்துக்கள் ஜுனைத்.

அமரன்
12-07-2010, 09:20 PM
சுனைத்.

கவிதை இரண்டாம் முறை வாசித்த போதே பிடித்து விட்டேன்.
இருந்தாலும், ஒட்டி இருந்த வரிகளின் பிணைப்புகள் வேறுக் கோணத்தையும் தொட்டு நின்றதால் பிரிக்கும்படி வேண்டினேன்.

ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் கூட ஓரளவுக்குப் பரவாயில்லை. ஏன் கோவித்தாள் என்பதே தெரியாமல், அதைத் தனிமையில் சுமப்பது உயிர் தடவும் வலியைத் தருவது. ஒரு தடவையாவது அவள் குரலையோ முகத்தையோ படித்து விட்டாலே போதும் என்று ஏங்கித் துடிக்க வைப்பது.

இந்த உணர்வை புதைத்து வைத்தபடி கவிதை.

பாராட்டுகள் சுனைத்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-07-2010, 09:01 PM
தங்களின் பொற்கருத்துக்கு மிக்க நன்றி அமரா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-07-2010, 09:03 PM
மிக்க நன்றி சிவாண்ணா.

பாலன்
15-07-2010, 03:58 PM
கோபத்தில் பிரிந்து சென்ற தலைவி, தனிமையில் தவிக்கும் தலைவன், மறுபடியும் தலைவின் கோபம் தணிந்து தலைவனின் தாபம் தீரும் தருணம். அழகியல் கவிதைக்குரிய அத்தனை அம்சங்கள் இருந்தும் ஏகாந்தநிலையில் இருந்து உரைப்பது போன்ற வார்த்தை பிரயோகம். இன்னும் கொஞ்சம் வசீகரமாய் வடித்திருக்கலாம் என்பது என் கருத்து.நன்றி.