PDA

View Full Version : பெண்மை - சிறுகதை

கலையரசி
03-07-2010, 02:57 PM
”அம்மா! இனிமேல் நான் கல்லூரிக்குப் போகமாட்டேன்,” என்று சொல்லி, கையிலிருந்த புத்தகத்தை மேஜை மேல் தூக்கி எறிந்தவாறு கோபமாக உள்ளே நுழைந்தேன்.

“ஏன்?” என்பது போல் என்னை நிமிர்ந்து பார்த்த அம்மாவின் பார்வையில் உக்கிரம் தெரிந்தது.

“இனிமேல் கதை எழுதறதை நீங்க நிறுத்தினாலொழிய, நான் கல்லூரிக்குப் போக மாட்டேன்.”

“நான் கதை எழுதறதுக்கும், நீ கல்லூரி போறதுக்கும் என்னடி சம்பந்தம்?”

“ஒங்க இஷ்டத்துக்கு எப்படியெல்லாமோ நீங்க கதை எழுதறீங்க. கல்லூரியில எல்லாரும், ஒங்க கதையைப் பத்தி என்ன மாதிரி கிண்டல் செய்றாங்கன்னு எனக்கில்ல தெரியும்?”

“பேசுறவங்களை எங்கிட்ட வந்து பேசச் சொல்லுடி. அவங்க விமர்சனத்துக்குப் பயந்து, படிப்பைப் பாதியில நிறுத்தறது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தின கதை போலத்தான்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க கதையை நிறுத்தலேன்னா, நான் போக மாட்டேன்.”

“சரி. உன்னிஷ்டம். நாளையிலேர்ந்து நீ போக வேண்டாம்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்ற அம்மாவைப் பார்த்துத் திகைத்து நின்றேன்.

பெண்ணுக்குப் படிப்பு தருவதைத் தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட அம்மாவா இப்படிச் சொல்வது? பள்ளியில் ஆசிரியையாகச் சம்பாதிக்கும் அம்மா ஏன் இந்தக் கதையெல்லாம் எழுத வேண்டும்? கன்னாபின்னா என்று எதையாவது எழுதி ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஏன் ஆளாக வேண்டும்?

அன்றிரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அம்மாவிடம் வந்து நானும் அவ்வளவு கோபமாகப் பேசியிருக்கக் கூடாது. என்ன செய்வது? அம்மாவைப் பர்றி மற்றவர்கள் இழிவாகப் பேசுவதை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அம்மா ஒரு சாடிஸ்டாம். அதனால தான் அப்பா, அம்மாவை விட்டுட்டு ஓடிட்டாராம். இதெல்லாம் என் காதுபட கல்லூரியில பேசினது. இதை எப்படி நான் அம்மாக்கிட்ட சொல்றது?

அப்பா ஏன் அம்மாவை விட்டுட்டுப் போனார்? நானும் எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன். சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், நானே சொல்வேன்பாங்க. அம்மாவின் பிடிவாதம் எனக்குத் தெரியும். சொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டா, அவ்வளவு தான்.

அப்பா எதனால ஓடிப் போயிருந்தா எனக்கென்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் அம்மா தான் என் தெய்வம். அவங்களைப் பத்தி தப்பா பேசறதை, என்னால தாங்கிக்க முடியாது.

நாளையிலேர்ந்து கல்லூரி கிடையாது என்று நினைத்த போது வருத்தமாயிருந்தது. ஒரு வீம்புக்காகத் தான் அப்படிப் பேசினேனே தவிர, உண்மையில படிப்பை நிறுத்தறதைப் பத்தி என்னால கற்பனை கூடப் பண்ண முடியல.

அந்தக் கதையை நானும் தான் படிச்சேன். மனைவி மேல மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தி விட்டு விடுகிறான் கணவன். போலீசிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென்று அவள் காலைப் பிடித்து அழுகிறான். மன்னிக்கும்படி வேண்டுகிறான். இருந்தும் அவனை அவள் போலீசில் காட்டிக் கொடுக்கும் போது, எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது.

அம்மா கதை எழுதிட்டா, யார் சொன்னாலும் முடிவை மாத்த மாட்டாங்க. புருஷன் என்ன தப்பு செஞ்சாலும் மன்னிக்கிறது தான் பெண்மையாம். இந்தக் கதையில வர்ற கதாநாயகிக்குப் பெண்மையே இல்லியாம். இன்னும் என்னென்னவோ கல்லூரியில பேசினாங்க. பாதி எனக்கு மறந்து போயிடுச்சு. கதையை விமர்சனம் பண்றவங்க எதுக்குச் சொந்த வாழ்க்கையைப் பத்திப் பேசணும்? என்னைக் கோபப்பட வைக்கணும்னு தான் என் காதுபட பேசியிருக்காங்க. இதுக்காக நான் ஏன் கல்லூரிக்குப் போகாம இருக்கணும்? எவ்வளவு நாள் பேசுவாங்க? பேசிப் பேசி அலுத்துப் போயிடுச்சுன்னா தானா நிறுத்திடுவாங்க.

அம்மாக்கிட்ட மறுபடியும் கல்லூரிக்குப் போறதைப் பத்திக் கேட்க வெட்கமாயிருக்கு. நேத்து ரொம்ப வீம்பா பேசினியேன்னு கேட்பாங்க. பரவாயில்ல. எப்படியாவது மன்னிப்பு கேட்டுட்டு நாளையிலேர்ந்து போகணும்னு தீர்மானிச்சிட்டேன்.

மறுநாள் நான் விடியற்காலையிலேயே எழுந்து விட்டேன். அன்று வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டு வந்து அம்மாவின் மேசை மேல் அடுக்கிய போது, பெரியதாக இருந்த கவர் கண்ணில் படவே அதை எடுத்துப் பிரித்தேன். வழக்கமாக அம்மாவிற்கு வரும் கடிதங்களை நான் தான் பிரித்து வைப்பது வழக்கம். பெரும்பாலானவை வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தாம்.

கவரைப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தவுடன், ஒரு கணம் திடுக்கிட்டு நின்று விட்டேன்.

‘அன்புள்ள கீதா’ என்று அம்மாவின் பெயரை விளித்து எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதத்தில்.

நெஞ்சு படபடக்க, நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்தவாறே அவசர அவசரமாகப் படிக்கலானேன்.

சென்னை, 07/06/2000

”அன்புள்ள கீதா’,

இப்படி அழைக்க எனக்கு உரிமையில்லை என்றாலும் நான் இப்படி விளித்திருப்பதற்கு முதலில் என்னை மன்னித்து விடு. தயவு செய்து கடிதத்தைக் கிழித்து எறிந்து விடாதே. கடந்த வாரம், வார இதழில் உன் புகைப்படத்துடன் வெளியான கதையைப் படித்தேன்.

அன்று நான் உன் மேல் மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் உன் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்தேன். உன் கதாநாயகி போல், அன்று நீ என்னைக் காட்டிக் கொடுத்திருந்தாயானால், அன்றோடு என் வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் நீயோ என்னை மன்னித்தாய். மறு வாழ்வு அளித்தாய். ஆனால் நான் உனக்குக் கொடுத்த பரிசு......

கையில் ஒரு பெண் குழந்தையுடன் இருந்த உன்னை விட்டு விட்டு ஓடி விட்டேன். தீயில் கருகிய உன் பிசாசு முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், உன்னை வாழாவெட்டியாக்கி விட்டு நான் மட்டும் ஒரு நல்ல வாழ்வைத் தேடிக் கொண்டேன்.
இன்று மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில், கையில் பெண் குழந்தையோடு தனியாளாக இந்தச் சமுதாயத்தில் என்னென்ன துன்பங்களை நீ அனுபவித்திருப்பாய் என்று நினைக்கும் போது என் நெஞ்சமே நடுங்குகிறது.

இந்த ஜென்மத்தில் எனக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரிந்தும், உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். இந்த முறை என்னிடத்தில் போலித்தனம் இல்லை. தண்டனை என்று தனியாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை. என் மனசாட்சியே என்னைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.

இந்தக் கதையில் வரும் கதாநாயகனைத் தண்டிப்பதன் மூலம் என்னைப் பழி வாங்கிய திருப்தி, உனக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்....”
என்று நீண்டு கொண்டே சென்றது கடிதம்.

அதற்கு மேல் என்னால் படிக்க முடியாதவாறு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு மறைத்தது. ’ஓ அம்மா!’ என்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ’இவ்வளவு பெரிய சோகக்கதையை நெஞ்சினிலே சுமந்து கொண்டு சாதாரணமாய் இருக்க எப்படி முடிகிறது உங்களால்?’

“என்ன கடிதம் அது?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த அம்மாவிடம் கடிதத்தினைக் கொடுத்து விட்டு, அவர்களது கால்களைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.

(குங்குமத்தில் எழுதிய கதை)

சிவா.ஜி
03-07-2010, 03:39 PM
அம்மா கேரக்டரில் தெரியும் உறுதி பாராட்டவைக்கிறது.

கதையில் ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை....
கதைப்படி அம்மா...பல கதைகளை எழுதும் ஒரு கதாசிரியர். நிறையக் கதைகளை எழுதிய பின்தானா தன் சொந்தக் கதையை எழுதுவார். அதுவும் கணவன் தன்னை விட்டுப் பிரிந்த இத்தனை வருடங்கள் கழித்து...?

இது நீங்கள் எழுதிய பழைய கதையாக இருக்குமென்று நினைக்கிறேன்....இப்போதுள்ள எழுத்து....இதில் குறைவாய் இருப்பதாய் தெரிகிறது.

குங்குமத்தில் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.

பா.ராஜேஷ்
03-07-2010, 06:18 PM
அம்மாவின் வீம்பு பற்றி சொல்லும் பொது நதியா கண்முன் வருகிறார். அம்மாவை பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை என்று பெரும் மனப் போராட்டத்திற்கு பிறகு முடிவு செய்திருப்பதை பற்றி எழுதி இருப்பது நன்று. பாராட்டுக்கள்..

மதுரை மைந்தன்
03-07-2010, 09:56 PM
கதையில் வரும் அம்மா பாத்திரம் பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணை அடையாளம் காட்டுகிறது. நல்ல கருத்துள்ள கதை எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

கீதம்
04-07-2010, 01:01 AM
நல்ல கதை. அம்மாவின் மனத்தின்மை பாராட்டுக்குரியது. தந்தையிடமிருந்து வந்த கடிதத்தால் மகள் உண்மைநிலை அறியமுடிகிறது. இல்லையென்றால் அவளுக்கு அம்மாவின் மனத்திட்பம் தெரியாமலேயே போயிருக்கும்.

குங்குமத்தில் பிரசுரமானதற்கு கூடுதல் பாராட்டுகள், அக்கா.

அன்புரசிகன்
04-07-2010, 01:14 AM
நடைமுறை ஜதார்த்தத்தை கூறுகிறது கதை. பெண்ணியம் அது இது என்று பலவாறு கதைக்கும் பலர் நடைமுறைஎன்று வரும் போது கிண்டலும் கேலியும் செய்கிறார்கள.. கல்லூரியிலேயே எள்ளிநகையாடும் இவர்கள் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

வாழ்த்துக்கள்.

மதி
04-07-2010, 04:22 AM
நல்லதொரு கதை கலையரசி. முதலில் குங்குமம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
பெண்மை பற்றிய பார்வைகள் பல இருக்க சின்ன நிகழ்வு மூலம் உணர்த்தி இருக்கிறீர்கள். கதாபாத்திர அமைப்பும் விவரிப்பும் அருமை.

வாழ்த்துகள் மேடம்.:)

கலையரசி
04-07-2010, 05:45 AM
அம்மா கேரக்டரில் தெரியும் உறுதி பாராட்டவைக்கிறது.

கதையில் ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை....
கதைப்படி அம்மா...பல கதைகளை எழுதும் ஒரு கதாசிரியர். நிறையக் கதைகளை எழுதிய பின்தானா தன் சொந்தக் கதையை எழுதுவார். அதுவும் கணவன் தன்னை விட்டுப் பிரிந்த இத்தனை வருடங்கள் கழித்து...?

இது நீங்கள் எழுதிய பழைய கதையாக இருக்குமென்று நினைக்கிறேன்....இப்போதுள்ள எழுத்து....இதில் குறைவாய் இருப்பதாய் தெரிகிறது.

குங்குமத்தில் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.

சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். 1991 ல் நான் எழுதி முதன் முதலில் குங்குமத்தில் பிரசுரமான கதை இது. எனவே நடையும் வித்தியாசமாக இருக்கும்.
நம் பதிவுகளை அரங்கேற்ற தமிழ் மன்றம் போல் ஒரு களம் அப்போது இருந்திருந்தால், நிறைய எழுதி எழுத்துலகில் ஓர் எழுத்தாளராக சாதித்திருப்பேனோ என்னவோ!
அப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி விட்டுப் பிரசுரமாகாதா என்று ஏங்கிய காலம். அதற்குப் பிறகு தினமணிக்கதிரில் நான்கு ஒரு பக்கக் கதைகளும் சிறுவர் மணியில் இரண்டு சிறுவர் கதைகளும் வெளிவந்தன.
அனுப்புபவை பிரசுரமாகாததால், எழுதுவதில் ஆர்வம் குறைந்து போய் விட்டது. தமிழ் மன்றத்தில் 2006 ல் காலெடுத்து வைத்தாலும், தமிழ் தட்டச்சு செய்வது எப்படி என்று தெரியாத காரணத்தால் எதையும் எழுத முடியவில்லை.
2009 ல் தான் நிலாச்சாரல் மூலமாக இ-கலப்பை டவுன் லோடு செய்து எழுதத் துவங்கினேன்.
இனி கதை பற்றி....
கதாசிரியர் எப்போது தன் சொந்தக் கதையை எழுதுவார் என்று யாராலும் கணிக்க முடியாது. எழுத்தாளர் சிலர் தம் சொந்தக் கதைகளை எந்தக் காலத்திலும் எழுதுவதில்லை என்ற கொள்கையோடு இருக்கின்றார்கள்.
வழக்கம் போல் உங்களது முதல் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சிவா.

கலையரசி
04-07-2010, 05:48 AM
அம்மாவின் வீம்பு பற்றி சொல்லும் பொது நதியா கண்முன் வருகிறார். அம்மாவை பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை என்று பெரும் மனப் போராட்டத்திற்கு பிறகு முடிவு செய்திருப்பதை பற்றி எழுதி இருப்பது நன்று. பாராட்டுக்கள்..

பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜேஷ்!

கலையரசி
04-07-2010, 05:49 AM
கதையில் வரும் அம்மா பாத்திரம் பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணை அடையாளம் காட்டுகிறது. நல்ல கருத்துள்ள கதை எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் மதுரை மைந்தன் அவர்களே!

கலையரசி
04-07-2010, 05:50 AM
நல்ல கதை. அம்மாவின் மனத்தின்மை பாராட்டுக்குரியது. தந்தையிடமிருந்து வந்த கடிதத்தால் மகள் உண்மைநிலை அறியமுடிகிறது. இல்லையென்றால் அவளுக்கு அம்மாவின் மனத்திட்பம் தெரியாமலேயே போயிருக்கும்.

குங்குமத்தில் பிரசுரமானதற்கு கூடுதல் பாராட்டுகள், அக்கா.

பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதம்!

கலையரசி
04-07-2010, 05:51 AM
நடைமுறை ஜதார்த்தத்தை கூறுகிறது கதை. பெண்ணியம் அது இது என்று பலவாறு கதைக்கும் பலர் நடைமுறைஎன்று வரும் போது கிண்டலும் கேலியும் செய்கிறார்கள.. கல்லூரியிலேயே எள்ளிநகையாடும் இவர்கள் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு மிகவும் நன்றி அன்பு ரசிகன்!

கலையரசி
04-07-2010, 05:53 AM
நல்லதொரு கதை கலையரசி. முதலில் குங்குமம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
பெண்மை பற்றிய பார்வைகள் பல இருக்க சின்ன நிகழ்வு மூலம் உணர்த்தி இருக்கிறீர்கள். கதாபாத்திர அமைப்பும் விவரிப்பும் அருமை.

வாழ்த்துகள் மேடம்.:)

வாழ்த்துக்கு மிக்க நன்றி மதி!

சிவா.ஜி
04-07-2010, 06:53 AM
தொடர்ந்த முயற்சியில் ஒன்றிரண்டு கதைகள் பிரசுரமாகிவிட்டால்...பிறகு பரவலாக பிரசுரமாக தொடங்கிவிடும்.

இப்போது நீங்கள் எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் முயற்சி செய்யுங்கள் கலையரசி...நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கலையரசி
04-07-2010, 09:56 AM

உங்கள் பாராட்டும் வாழ்த்தும் மனங்குளிர வைக்கிறது. ஆனால் இனி என் கவனம் முழுவதும் தமிழ் மன்றத்தில் தானிருக்கும். மன்றத்தில் நான் ஒரு நல்ல எழுத்தாளர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதே இப்போது என் லட்சியம். உங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சிவா.

பா.ராஜேஷ்
04-07-2010, 10:17 AM
மன்றத்தில் நான் ஒரு நல்ல எழுத்தாளர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதே இப்போது என் லட்சியம்.

நீங்கள் நல்ல எழுத்தாளர்தான்.. அதில் நிச்சயம் சந்தேகம் இல்லை... நீங்கள் பெற்றிருக்கும் மூன்று விருதுகளே அதற்கு அத்தாட்சி..

nambi
04-07-2010, 10:41 AM
பெண்மை சிறுகதை நன்று!..பகிர்வுக்கு நன்றி!

மச்சான்
04-07-2010, 01:17 PM
குங்குமத்தில் பிரசுரமான கதையா....? வாழ்த்துக்கள் ஆசிரியரே....! அம்மாவை முதலில் மட்டமாக நினைக்கும் மகள், பிறகு தாயின் உண்மை நிலையறிந்து தேம்பி அழும் காட்சி என பல்சுவை நிகழ்வுகளையும் தத்ரூபமாக சித்தரித்திருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

.

அமரன்
04-07-2010, 09:04 PM
ஆழத்தில் அர்த்தம் கொண்ட கதை!

திறனாய்வு செய்தால், பெண்ணியம் தாண்டிய உளவியல் உள்ளோடும்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுவோம்.

அப்படி எத்தனை பேர் இருக்கிறோம். ஆதங்கத்தில் நீந்துகிறோம்

உள்ளக் குடைச்சலுடன் எத்தனை காலம்தான் வாழ்வது?

அந்த ஆதங்கத்தை நீக்க, குடைச்சலை விரட்ட எழுத்துக்களம் சிறந்த சாதனம்.

இதுமட்டுமல்லாமல் தப்பனின் வளர்சிதைமாற்றம், மகளின் மன்மாற்றம் என வாழ்வியல், உளவியல் கோடுகளின் ஓட்டம் ஏராளம்.

கதாமாந்தருடைய உளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், எழுத்தாயினித் தாயின் உள வெளிப்பாட்டில் தொன்மம் ஒன்று படிந்திருப்பது கதையின் கனதியைக் கூட்டுகிறது.

இந்த மன்றத்து எழுத்தாளர்கள் மேல் எனக்குப் பயங்கரக் கோபம். ஏதாச்சும் எழுதலாம் என நினைச்சு களங்களையும், கருத்துகளையும் தெரிவு செய்து ஆயத்தப்படுத்தினால் அதற்குள் அதே களங்களிலோ கருவுடனோ படைத்துப் பரிமாறி விடுவார்கள். பழயபடி நான் தூங்கப் போயிடுவேன். இந்த முறை சற்றே கோபத்தைக் கூட்டி விட்டீர்கள்..1991 ஆம் ஆண்டே எழுதி்.

கலையரசி
06-07-2010, 01:26 PM
நீங்கள் நல்ல எழுத்தாளர்தான்.. அதில் நிச்சயம் சந்தேகம் இல்லை... நீங்கள் பெற்றிருக்கும் மூன்று விருதுகளே அதற்கு அத்தாட்சி..

உங்களது வார்த்தைகள் டானிக் குடித்தது போல் உற்சாகத்தைத் தருகின்றன. நன்றி ராஜேஷ்!

கலையரசி
06-07-2010, 01:27 PM
பெண்மை சிறுகதை நன்று!..பகிர்வுக்கு நன்றி!

உங்களது பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி நம்பி.

கலையரசி
06-07-2010, 01:28 PM
குங்குமத்தில் பிரசுரமான கதையா....? வாழ்த்துக்கள் ஆசிரியரே....! அம்மாவை முதலில் மட்டமாக நினைக்கும் மகள், பிறகு தாயின் உண்மை நிலையறிந்து தேம்பி அழும் காட்சி என பல்சுவை நிகழ்வுகளையும் தத்ரூபமாக சித்தரித்திருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

.

உங்களது பாராட்டுக்கு மிகவும் நன்றி!

கலையரசி
06-07-2010, 01:39 PM
ஆழத்தில் அர்த்தம் கொண்ட கதை!

திறனாய்வு செய்தால், பெண்ணியம் தாண்டிய உளவியல் உள்ளோடும்.
தாமாந்தருடைய உளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், எழுத்தாயினித் தாயின் உள வெளிப்பாட்டில் தொன்மம் ஒன்று படிந்திருப்பது கதையின் கனதியைக் கூட்டுகிறது.

இந்த மன்றத்து எழுத்தாளர்கள் மேல் எனக்குப் பயங்கரக் கோபம். ஏதாச்சும் எழுதலாம் என நினைச்சு களங்களையும், கருத்துகளையும் தெரிவு செய்து ஆயத்தப்படுத்தினால் அதற்குள் அதே களங்களிலோ கருவுடனோ படைத்துப் பரிமாறி விடுவார்கள். பழயபடி நான் தூங்கப் போயிடுவேன். இந்த முறை சற்றே கோபத்தைக் கூட்டி விட்டீர்கள்..1991 ஆம் ஆண்டே எழுதி்.

ஆழமான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அமரன்.
கிடைக்கும் ஓய்வு நேரத்தை மன்றத்திற்காகவும் அதைத் திறம்பட நடத்துவதற்காகவும் செலவிடும் போது கதை எழுத உங்களுக்கு ஏது நேரம்? உங்களது பின்னூட்டங்களைப் புரிந்து கொள்ளவே எனக்குக் கொஞ்ச நேரமாகும். (குறிப்பாக கவிதை பகுதியில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள்)நேரங் கிடைத்தால் உங்களாலும் தலை சிறந்த கதைகளைப் பதிக்க இயலும். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம். எங்களுக்கு எழுதுவதைத் தவிர வேறு வேலையில்லையே!