PDA

View Full Version : ஆடல் காணீரோ



சொ.ஞானசம்பந்தன்
01-07-2010, 12:49 PM
(18 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர் வொல்த்தேர் (Voltaire) இயற்றிய சதீக் அல்லது விதி என்னும் நூலில், ஒரு சிறு பகுதியின் மொழி பெயர்ப்பு).


நபுசான் மிக நல்ல மன்னர்களுள் ஒருவன். வரி வசூலிக்கும் அதிகாரி அவனை ஏமாற்றிக் கொண்டிருந்தான். அரசனுக்கு உண்மை தெரியவே, அவனை நீக்கி வேறு ஆளை நியமித்தான். இவ்வாறு பல முறை ஆட்கள் மாறினார்களே தவிர, வருமானத்தைச் சமமற்ற இரு பங்காக்கி, சிறிய பங்கை வேந்தனுக்குச் செலுத்தி விட்டுப் பெரிய பங்கைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் மாறவில்லை.

மன்னன் தன் கவலையை அறிஞர் சதீக் இடம் வெளியிட்டான்.
”எவ்வளவோ அறிந்த உங்களுக்கு நேர்மையான அதிகாரியைக் கண்டுபிடித்துத் தர தெரியாதா?” என்று அவரிடம் கேட்டான்.

“நிச்சயமாகத் தெரியும். யோக்கியனைக் கண்டுபிடிக்க மிக நம்பகமான ஒரு வழியை நான் அறிவேன்,” என்று அவர் விடையளித்தார்.

பொறுப்பு அவரிடம் விடப்பட்டது.

மன்னனின் பெயரால் ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்:
வரி வசூலிக்கும் அதிகாரி வேலையைப் பெற விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட நாளில் பேட்டிக்காக அரண்மனையில் கூடுமாறு கோரப்பட்டனர்.

64 பேர் குழுமினர். பேட்டி நடைபெறும் அறைக்கு ஒரு நீண்ட நடைப்பாதையின் வழியே வரவேண்டும்; போதிய வெளிச்சமற்ற அந்தப் பாதையில் அரசனது கருவூலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. பேட்டிக்கு வந்தோர் ஒவ்வொருவராய் அழைக்கப்பட்டனர். .

யாவரும் அறைக்குள் நுழைந்த பின்பு வாத்தியங்கள் முழங்கின; நடனம் ஆடும் படி எல்லாருக்கும் அரசன் ஆணையிட்டான்.

அடடா! அவ்வளவு மோசமான குழு நடனம் அதற்கு முன்பு எங்கும் நடைபெற்றதில்லை. எல்லாரும் குனிந்த தலையும், வளைந்த இடுப்புமாய்த் தொடைகளைக் கைகளால் அமுக்கியபடி அலங்கோலமாய்க் குதித்தனர்.

‘திருட்டுப் பயல்கள்!” என்று முணுமுணுத்தார் சதீக்.

ஒருவன் மட்டும் நிமிர்ந்த தலையும் நேர் கொண்ட பார்வையுமாய்க் கைகளை உயர்த்திக் கொண்டு எளிதாய் ஆடினான்.

“ஆகா! இவனே நேர்மையானவன்; இவனே நாணயமானவன்!” என்று கூவினார் சதீக். அவனை மன்னன் கட்டித் தழுவினான்; அதிகாரியாய் நியமித்தான். மற்றவர் அனைவரும் கடுமையாய்த் தண்டிக்கப்பட்டனர்.

காரணம்? அவர்கள் அறையில் நுழைவதற்கு முன், நடைப் பாதையில் தனியாய் இருக்க நேர்ந்த அந்தச் சிறு பொழுதில், தம் கால்சட்டைப் பைகளைப் பணத்தால் நிரப்பிக் கொண்டு விட்டனர்!



(1986 ல் மஞ்சரியில் வந்த என் மொழிபெயர்ப்பு)

சிவா.ஜி
01-07-2010, 01:48 PM
நம்ம ஊர் அக்பர் பீர்பல் கதை மாதிரி இருக்கு. சரியான வழியில் திருட்டுப்பயல்களைக் கண்டுபிடித்தார் அறிஞர்.

பகிர்வுக்கு நன்றி சொ.ஞா அவர்களே.

பா.ராஜேஷ்
01-07-2010, 09:30 PM
ஒருவேளை அவன் இறுதியாய் வந்ததால் அனைத்தும் காலி ஆகி விட்டதோ... :D .. நல்லதோர் பகிர்வு... நன்றி அய்யா..

கீதம்
01-07-2010, 09:54 PM
கதையும், மொழிபெயர்ப்பும் அருமை.
தலைப்பு வெகுபொருத்தம்.
தொடரட்டும் உங்கள் மொழியாக்கம்.
மிகுந்த பாராட்டுகள்.

விகடன்
07-07-2010, 12:34 PM
சிறந்தகதை. அதிலும் வெறுமனே மொழிபெயர்க்காமல் அதை சிறந்தமுறையில் கதைவடிவம் கொடுத்திருக்கிறீர்களே ஐயா.

பாராட்டுக்கள் :aktion033:

அமரன்
07-07-2010, 06:17 PM
சின்ன வயசுல கதை கேட்ட ஞாபகங்களைக் கிளறிவிட்டது.

உங்கள் மொழிபெயர்ப்பு அருமை.

நன்றி அய்யா.

சொ.ஞானசம்பந்தன்
11-07-2010, 09:41 AM
நம்ம ஊர் அக்பர் பீர்பல் கதை மாதிரி இருக்கு. சரியான வழியில் திருட்டுப்பயல்களைக் கண்டுபிடித்தார் அறிஞர்.

பகிர்வுக்கு நன்றி சொ.ஞா அவர்களே.

பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-07-2010, 09:42 AM
சின்ன வயசுல கதை கேட்ட ஞாபகங்களைக் கிளறிவிட்டது.

உங்கள் மொழிபெயர்ப்பு அருமை.

நன்றி அய்யா.

பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-07-2010, 09:44 AM
சிறந்தகதை. அதிலும் வெறுமனே மொழிபெயர்க்காமல் அதை சிறந்தமுறையில் கதைவடிவம் கொடுத்திருக்கிறீர்களே ஐயா.

பாராட்டுக்கள் :aktion033:

பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-07-2010, 09:46 AM
கதையும், மொழிபெயர்ப்பும் அருமை.
தலைப்பு வெகுபொருத்தம்.
தொடரட்டும் உங்கள் மொழியாக்கம்.
மிகுந்த பாராட்டுகள்.

ஊக்கம் தந்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-07-2010, 09:50 AM
ஒருவேளை அவன் இறுதியாய் வந்ததால் அனைத்தும் காலி ஆகி விட்டதோ... :D .. நல்லதோர் பகிர்வு... நன்றி அய்யா..

மன்னனின் கருவூலம் ஆயிற்றே! இன்னும் பலருக்கும் தேவையான பொருள் இருந்திருக்கும் பாராட்டுக்கு மிக்க நன்றி.