PDA

View Full Version : நானெனப்படுவதும் நீங்களெனப்படுவதும்....



சசிதரன்
01-07-2010, 06:35 AM
எல்லா பொழுதுகளிலும்
என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் தவறவிட்ட பொருட்கள் பற்றியோ
மறந்துவிட்ட உடைமைகள் பற்றியோ
பேசிக் கொண்டிருக்கிறீர்கள்..

நான் புறக்கணிக்கப்பட்ட தருணங்கள்
உங்கள் புன்னகைக்குக் காரணமாகிறது.
அடைக்கப்பட்ட கதவுகள் முன்பான
என் காத்திருப்புகளை க் கொண்டு
உங்கள் பொழுதுகளைக் கடக்கிறீர்கள்.

கவிதைகளுக்காய் முயன்று உடைந்த
என் பேனா முனை பற்றியதாயிருக்கிறது
உங்களது மற்றைய பொழுது.

நான் வருகிறேன் போகிறேன்
சிரிக்கிறேன் அழுகிறேன்
நீங்கள் பேசிக் கொண்டேதானிருக்கிறீர்கள்

உங்களைக் கடந்து நான் இறந்த பின்னும்
நீங்கள் பேசிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.

பாரதி
01-07-2010, 07:04 AM
நண்பரே,
புறக்கணிப்பையும் புறக் கணிப்பையும் பற்றி கூறுகிறதா கவிதை?

சிவா.ஜி
01-07-2010, 09:15 AM
புறம் பேசுபவர்களைப் பற்றியா...கவிதை பேசுகிறது சசி...?

ஆதி
01-07-2010, 11:05 AM
நானெப்படுவது - ஒரு செய்தித்தாளாக அல்லது ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்

நீங்களெனப்படுவது - மக்கள்..

ஆக்கப்பூர்வமாய் செயல்கள் எதுவும் புரியாமல், நிகழ்ந்து கொண்டே இருக்கிறது நம் பேச்சு, குறையாய் புறமாய், குத்தலாய், இன்ன பிறவாய்..

இதுதானா சரி, இல்லை நேரிடையாகத்தான் பொருள்படுத்த வேண்டுமா ?

மதி
01-07-2010, 11:13 AM
உங்களைக் கடந்து நான் இறந்த பின்னும்
நீங்கள் பேசிக் கொண்டேதான் இருக்கப் போகிறீர்கள்.
யாரோ ஒரு நானைப் பற்றி?!

nambi
01-07-2010, 11:19 AM
// உங்களை கடந்து இறந்த பின்னும்....//

இந்த இடம் நன்றாக முடிந்திருக்கிறது...குறிப்பாக //இருக்கப்போகிறீர்கள்...//

இந்த உலகம் நல்லவிதமாயும் பேசும் கெட்டவிதமாயும் பேசும்...ஆக மொத்தம் எதையாவுது பேசிக்கொண்டேயிருக்கும்...எனக்கு புரிந்த மட்டும்....

பகிர்வுக்கு நன்றி!

ஆதவா
01-07-2010, 01:38 PM
எல்லா பொழுதுகளையும் கடந்து எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்க நீங்களெனப்படுவது காலங்களெனக் கொண்டேனெனில்,
நானெனப்படுவது நானாகவே....

நீங்களெனப்படுவது காலமென்றால்

ஒரு சிசுவின் சிரிப்பென கடந்து கொண்டிருக்கும் பொழுதுகள் நான் அண்மையில் தவறியவற்றையோ, அல்லது மறந்த உறவுகளைப் பற்றியோ உரக்கச் சொல்லிக் கொண்டுதான் செல்லுகின்றன,
என் புறக்கணிப்பை, என் காத்திருப்பை, என் நிலையாமையை, என் உணர்வுகளை எப்பொழுதேனும் எந்நிலையிலேனும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது,
அனைத்தும் முடிந்தபின்னும், நான் மண்ணுக்குள் மட்கிய பிறகும், என் பெருமையையோ அல்லது எனது பெருந்தவற்றையோ பேசாமல் போவதில்லை,காலம்(கள்)..

நினைவுகளென்பது நீங்களெனில்,

சாளரத்தில் அறையும் மழைத்தூறலென கடந்து செல்லும்,
நான் தவறிய வார்த்தைகளையோ, மறந்துவிட்ட வார்த்தைகளையோ மனதினுள் ஆழ்ந்து கத்தும் (தவறவிட்ட பொருட்கள்) நான் புறக்கணித்த ஒரு காதலை அல்லது என்னைப் புறக்கணித்த காதலை மறதிக்குள் மூழ்காமல் அழுத்திச் சொல்லும்.
வந்தார், சென்றார், நண்பர், எதிரி (நான் வருகிறேன் போகிறேன், சிரிக்கிறேன் அழுகிறேன்) என அத்தனையைப் பற்றியும் பேசும்
சூழ்நிலை நீங்கிய பிறகும் அது பேசிக் கொண்டேதான் இருக்கும்,

நீங்களென்பது பெருந்தவறெனில்

எல்லாபொழுதுகளும் பெருந்தவறை அறைந்து கொண்டேயிருக்கும்,
நான் தவறிழைத்தவற்றை, நான் மறந்து விட்ட தவறை சத்தமாக சொல்லிக் கொண்டேயிருக்கும்,
புறக்கணிப்பு அல்லது புறக்கணிக்கப்படுதலை
அல்லது
எனது எல்லா செய்கைகளுமே பெருந்தவறின் வாயில் சிக்கிக் கொண்டுதானிருக்கும்
இறந்த பிறகும் கூட..

நீங்களென்பது நீங்களாகவே இருந்தால்...??

நேரிடை அர்த்தம், அல்லது மறைமுக அர்த்தமெடுத்துக் கொள்ளுதல் அவரவர் வசதிக்குப் பொருந்த, இக்கவிதை நல்ல இசங்களோடு படைக்கப்பட்டிருக்கிறது, பாரதி அண்ணா கூறியதைப் போன்று புறக்கணிப்பின் புறக் கணிப்பையும் கவிதை கூறலாம், ஆதி சொன்னதையும் மனதிற்கொள்ளலாம்.

மேலே நான் சொன்னதில் ”நீங்களெனப்படுவதை” மட்டுமே நான் வேறு கோணத்தில் பார்க்க முடிந்தது, நான் என்பதை நானாகவே எடுத்துக் கொண்டேன். அதனினும் மேலும், உங்களது உள்ளத்திலிருக்கும் அர்த்தம் என்ன வென்பதை அறிந்து கொள்ள ஆவலாகவும் இருக்கிறேன்.

அன்புடன்
ஆதவா.

அமரன்
01-07-2010, 05:08 PM
அருமையான பார்வை ஆதவா..

நான் காலமானால் புதுப்பரிமாணம் கிடைக்கும் போலும்.

பாராட்டுகள் அனைவருக்கும்.

govindh
01-07-2010, 07:25 PM
புறம் பேசுபவர்களை
நன்றாக குத்தி விட்டீர்கள்....!

பாராட்டுக்கள் சசிதரன்.

சசிதரன்
07-07-2010, 01:39 PM
மன்ற சொந்தங்களின் வேறுபட்ட பார்வை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலோட்டமாய் புறம்பேசுபவர்களை பற்றியதாய் கவிதை அமைத்தாலும், இது வாசகனின் யூகங்களுக்கு விடப்பட்ட கவிதை.
அன்பின் ஆதவா... உங்கள் மேலான வாசிப்பிற்கும் பகிர்தலுக்கும் நன்றி... இங்கு நீங்கள் சொல்வது போல் நானெனப்படுவது நானாகவே... நீங்களெனப்படுவதை காலமென கொண்டு சில பத்திகளை அமைத்தேன். எனினும் உண்மையில் வாசகனின் பார்வைக்கு வேறுபட வேண்டும் கவிதை என்றே விரும்பினேன். அது இங்கு வெகுவாக நிறைவேறி இருப்பதை பார்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சி. ஒவ்வொரு கோணமும் நிறையவே யோசிக்க வைக்கிறது. அமரன் சொல்லும் கோணம் உண்மையில் நான் கொஞ்சமும் யோசிக்காதது. மதி அண்ணாவின் பார்வையும் நிதர்சனம்.

உங்கள் வேறுபட்ட பார்வைகள் கவிதையை இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறது ஆதவா. இங்கு நீங்களெனப்படுவதை ஒரு குறிப்பிட்ட பார்வையில் நான் படைக்க விரும்பவில்லை. உங்கள் புரிதலுக்கும் பகிர்விற்கும் நன்றிகள்... :)