PDA

View Full Version : பீஷ்மன்



கீதம்
28-06-2010, 10:57 PM
"அப்பா! நான் வருவதற்குள் உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது!" மனம் அரற்றியது. மேகப்பொதிகளுக்குள் ஊர்ந்துகொண்டிருந்தது, விமானம். மனதுக்குள்ளும் ஒரே மூட்டம்! இன்னதென்று அறியமுடியாத துக்கம் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. குழப்பம்... கவலை...பயம்...உணர்ச்சிகளின் கலவையாய் உள்மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆயாசமாகவும் இருந்தது.

ஐம்பது வயதில் ஆயாசமாயிருப்பது ஒன்றும் அதிசயமில்லையே! வாழ்க்கை எந்தப் பிடிப்புமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு தம்பிகள், நான்கு தங்கைகள் அனைவரையும் படிக்கவைத்து, வேலையில் அமர்த்தி, கல்யாணமும் செய்துவைத்து வாழ்க்கையில் செட்டில் செய்தாகிவிட்டது. இனி என்ன இருக்கிறது? அப்பாவையும் நல்லபடியாய் வழியனுப்பிவைத்துவிட்டால் தன் கடமை என்று எதுவும் மீதமிருக்காது. ஆனால் அப்பாவை எப்படி நல்லபடியாய் அனுப்புவது? நெஞ்சு நிறைந்த கவலையுடனும், குற்ற உணர்வுடனும் அல்லவா போவார்? அவரது ஆன்மாவுக்கு நிம்மதி கிடைக்குமா? அல்லது அல்லாடுமா? இறந்தவர்க்கு எப்படியோ? ஆனால் எனக்கு? நான் எப்படி எவ்வித உறுத்தலுமின்றி மீதி நாட்களைக் கழிக்கமுடியும்?

அப்பாவுக்கு நினைவு திரும்பியிருக்குமா? என்னை அடையாளங்காணுவாரா? அடையாளங்கண்டுகொண்டபின் மறுபடியும் வேண்டுகோள் விடுத்தால்..... என்ன பதில் சொல்வது? எட்டுப்பிள்ளைகள் பெற்ற, தம் மனைவி மீது அளவிலாக் காதல் கொண்டிருந்த, அந்தக் காதலையே அவளுக்கு எமனாக்கிய எண்பது வயது முதியவர் ஒருவரின் இறுதிக் காலம் நிறைவேறாத ஆசையுடனேயே முடியவேண்டியதுதானா? தலைமுறை கடந்தும் தண்டிக்கப்படும் விதத்தில் அவர் செய்த குற்றம்தான் என்ன? நெஞ்சில் பாரம் கூடியது. அழுத்திப் பிசைவதுபோல் வலித்தது. வலிக்கட்டும்! பெற்றவரை நோகடித்த பாவத்துக்கு இது தேவைதான்!

அப்பா!

இந்த ஒற்றைச் சொல்லில் எத்தனைக் கணம்! இந்த உறவு சிலருக்கு இதமான, அன்பை நினைவுறுத்தலாம்; இன்னும் சிலருக்கு, அவர்தம் தியாகமும், பெருமையும் நினைவுக்கு வந்து கண்கலங்கச் செய்யலாம்; அரிதாய்ச் சிலருக்கு அவர்மேல் சற்று பயமும் வரலாம். ஆனால்....எனக்கு? அந்தச் சொல்லின் மேலேயே வெறுப்பு! வெறுப்பென்றால் சாதாரணமானதில்லை. ஒரு கொலையாளியின் மேல் கொண்ட வெறுப்பு! அப்பா என்ற காமுகனால் அம்மாவை நிரந்தரமாய் இழந்த வேதனை! தேவதையைப் பார்க்கவிரும்புபவர்கள் என் தாயைப் பார்க்கலாம். அத்தனை தெய்வீகத்தன்மை அவளிடம் குடிகொண்டிருந்தது.

அம்மா அதிகம் படிக்கவில்லை. ஆனால் நடை உடை பாவனைகளில் அப்பாவுக்கு ஈடு கொடுக்கும் வித்தை அறிந்திருந்தாள். அவர்களிருவருக்கும் இடையில் இருந்த பத்து வயது வித்தியாசத்தையும் பிறர் பார்வைக்கு மறைக்கும் அசாத்தியத் திறன் அவளிடம் இருந்தது. அப்பாவுக்கு திருச்சி ரயில்வே பணிமனையில் உத்தியோகம்! அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் சென்று அறிவிப்புச் செய்து ரயில்வே பணிமனைக்கு ஆள் எடுத்தார்கள் என்றும் என் அப்பாதான் அவர் தலைமுறையிலேயே முதல் அரசுப் பணியாளர் என்றும் அடிக்கடி பெருமை பேசுவார். அம்மா அவள் பெற்றோருக்கு ஒரே மகள். மிகுந்த செலவத்துடனும், செல்வாக்குடனும் வளர்ந்தவள். திருமணம் முடித்துக் கொடுத்த பின், மகள் கர்ப்பமாய் இருப்பதைக் கேள்விப்பட்டு பார்க்கவந்த என் தாத்தா, தள்ளிய வயிற்றுடன் அம்மா கிணற்றில் நீர் இறைப்பதைப் பார்த்து வெகுண்டுவிட்டாராம். ராஜாத்தி போல் வளர்ந்த என் பெண்ணைக் கொடுமைப் படுத்துகிறாயே பாவி என்று என் அப்பாவை சபித்துவிட்டு, கையோடு மகளைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். நான் பிறந்தபோதும் அப்பாவுக்கு சொல்லியனுப்பவில்லை. கோபாலகிருஷ்ணன் என்ற பெயரையும் அவரே தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்பாவும் வீம்புடன் தம் மனைவியை அழைக்காது இருந்துவிட்டார்.

ஐந்து வருடங்களாய் இருதலைக் கொள்ளி எறும்பெனத் தவித்த அம்மாவுக்கு, தாத்தாவின் மரணம்தான் ஆசி வழங்கி, கணவன் வீட்டுக்கு வழியனுப்பிவைத்திருக்கிறது. ஐந்து வயதில்தான் முதன்முதலாய் அப்பாவின் பரிச்சயம்! ஆசையுடன் "அப்பா!" என்று கூவிச் சென்ற என்னைப் புறந்தள்ளிய வார்த்தைகள் இன்னமும் வேகம் மாறாமல் என் நெஞ்சில்!

"அப்படியே அந்தாளை உரிச்சிட்டுப் பொறந்திருக்கு! சனியன்!"

புரியாதவனாய் அம்மாவைக் கேட்டேன்.

"அந்தாளுன்னா யாரும்மா?"

கலங்கிய விழிகளுடன் அவள் சொன்னாள்,

"உங்க தாத்தாப்பா! உங்க அப்பாவுக்கு எங்க அப்பாவைப் பிடிக்காது! அதனால் அப்படி சொல்றார்! கொஞ்ச நாள் போனா…...கோபம் போய் உன்னைத் தூக்கிவச்சுக் கொஞ்சுவார்!"

அம்மாவின் ஆசையும் என் நம்பிக்கையும் நாளடைவில் நீர்த்துப் போனது. அப்பா எந்நாளும் என்னை மகனாய் ஏற்கவேயில்லை. எனக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளைக் கையிலாவது எடுப்பார். என்னைக் கண்டாலே எரிந்து எரிந்து விழுவார். அதை ஈடுகட்டும் விதமாய், அம்மா என்மேல் பன்மடங்கு அன்பைக் கொட்டினாள். அது இன்னும் அப்பாவின் கோபத்தை அதிகரித்தது. ஒருவர் சாயலில் பிறந்த ஒரே காரணம், ஒருபக்கம் திகட்டத் திகட்ட அன்பைப் பெற்றுத்தந்தது. இன்னொருபக்கம் வரம்பு மீறிய வெறுப்பை சம்பாதித்தது. அந்த வயதில் இது எனக்கு புரியாத புதிராய் இருந்தது.

அம்மா, அப்பாவுடன் நடத்திய இருபது வருடத் தாம்பத்யத்தில் பாதி வாழ்க்கை வயிற்றில் பாரம் சுமந்தே கழிந்தது. தரித்தவற்றில் பல தங்காமல் போனது. பெற்றதில் இரண்டு பின்னாளில் போனது. அம்மா என்னை ஒரு தோழனைப் போல் பார்த்தாள். கர்ப்பகால மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது, தோளுக்குமேல் வளர்ந்த மகனைத் துணையாய் அழைத்துச் சென்றவள், என் தாய் ஒருத்திதான் இருக்கக்கூடும்.அம்மாவின் கர்ப்பத்தில் ரேணு இருந்தபோதுதான் அது நடந்தது. பரிசோதனை முடித்து அம்மாவை வெளியில் அனுப்பிவிட்டு, டாக்டரம்மா என்னை உள்ளே அழைத்தார். இருபது வயது இளைஞனாய் நின்ற என்னை ஏறிட்ட அவர்,

"உங்களை இந்த தர்மசங்கடமான நிலைக்குக் கொண்டுவந்ததுக்காக வருத்தப்படறேன், தம்பி! ஆனால் உங்க அம்மாவைக் காப்பாத்த எனக்கு உங்களை விட்டால் வேறவழியில்லை!"

"டாக்டர்!" அதிர்ந்தேன் நான்.

"உங்க அம்மா ரொம்ப பலகீனமா இருக்காங்க. தொடர்ந்து குழந்தை பெத்துப் பெத்து கர்ப்பப்பையும் வலுவிழந்து போயிடுச்சி! இருக்கிற குழந்தைகள் போதாதா? இன்னும் எதுக்கு? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம்னா உங்கப்பா சம்மதம் வேணும். உங்க அப்பாவை அழைச்சிட்டு வரச்சொன்னால் அதுக்கும் உடன்படலை. நான் என்னதான் செய்யமுடியும்? அறியாமையால ஒரு உயிர் பலியாகறதைப் பாத்துட்டு என்னால் சும்மா இருக்க முடியலை! அதனால்தான் உங்ககிட்ட சொல்றேன். நீங்க படிச்சவர்தானே? புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன். எப்படியாவது உங்க அப்பாகிட்ட பேசி இங்க அழைச்சிட்டு வாங்க! நான் அவருக்குப் புரியவைக்கிறேன்!"

மெளனமாய் தலையசைத்து வெளியேறினேன். அம்மாவிடம் இதுபற்றிப்பேசத் தயக்கமாயிருந்தது. பேசாவிட்டால்….. இந்த அன்பு தெய்வத்தை இழந்துவிடுவேனோ என்று பயமாகவும் இருந்தது. தன் அந்தரங்கத்தில் தலையிட இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நினைப்பாளோ? நினைத்தாலும் அதுபற்றிக் கவலையில்லை. எனக்கு என் அம்மா வேண்டும். அவள் உயிருக்கே ஆபத்து என்றானபின் அந்தரங்கமாவது? மண்ணாங்கட்டியாவது?மூச்சுவாங்க உடன் நடந்துவரும் அம்மாவைப் பார்த்தேன்.

"என்னப்பா! டாக்டர் என்ன சொன்னாங்க?"

"அம்மா…...வந்து…..."

"என்னை மன்னிச்சுடுப்பா!" அம்மா தலைகவிழ்ந்துகொண்டாள்.

"அம்மா! நீங்க என் அம்மா! உங்களுக்கு வேண்டியதைச் செய்யறது என் கடமை! எதுக்கு..மன்னிப்பு...அது...இதுன்னுட்டு?"

அவளிரு கைகளையும், என்னிரு கைகளால் பற்றியபடியே,

"அம்மா! எனக்கு நீங்க வேணும்! எப்பவும் எனக்கு உங்க அன்பும் ஆதரவும் வேணும்! எங்களை விட்டுட்டுப் போயிடாதீங்கம்மா!" சொல்லும்போதே என் குரல் கம்மியது.

அம்மா சிரித்தாள்.

"அசடு! உங்க எல்லாரையும் விட்டுட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்!"

"அப்படின்னா ஆபரேஷன் செய்துக்கறதைப் பத்தி அப்பாகிட்ட பேசுறீங்களா?"

"பேசிப் பாக்கறேன்!"

நிலைமையை அவள் உணர்ந்துகொண்டாள். அவள் பலமும், பலவீனமும் அவளுக்குத் தெரியாதா? என்ன பேசினாள், எப்படிப் பேசினாள் என்று தெரியவில்லை. அப்பா வானத்துக்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.

"அவ என்ன பெரீ……ய #######.....? நான் எத்தனப் புள்ள பெத்தா அவளுக்கென்ன? அவளா சோறு போடறா? ######! என் உடம்புல வலு இருக்கு! கவர்மெண்ட் வேலை இருக்கு! நான் பெத்ததுங்களுக்கு என்னால கடைசிவரைக்கும் கஞ்சி ஊத்தமுடியும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் புடிக்கிறாளா அந்தத் ###### சிறுக்கி? அதக் கேட்டுகிட்டு வந்து எனக்கே புத்தி சொல்றியா ######.......?"

அப்பாவின் மூர்க்கம் எரிச்சல் தந்தது. வசவுகள் வரம்பு மீறிப்போக, உள்நுழைந்து உண்மை உணர்த்த முடிவு செய்தேன்.

"அப்பா! எதுக்கு இப்படிக் கத்தறீங்க? டாக்டர், அம்மாவோட நல்லதுக்குதான சொல்றாங்க! கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்களேன்!"

"ஓ! நீயும் உடந்தையா? சீ! பெத்தத் தகப்பன்கிட்டப் பேச வெக்கமாயில்ல, உனக்கு?"

"நான் எதுக்கு வெக்கப்படணும்? என் அம்மா நல்லாயிருக்கணும். அவங்க ஒண்ணும் குழந்தை பெத்துப்போடற மெஷின் இல்ல. உயிருள்ள மனுஷி! ஒண்ணு, நீங்க கட்டுப்பாடா இருக்கணும், இல்லைனா குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கணும்! ரெண்டும் முடியாதுன்னா எப்படி...?"

இத்தனை வருடங்களில் அப்பாவிடம் நேரடியாய்ப் பேசியது இதுதான் முதல்முறை. ரோஷம் வந்துவிட்டது அவருக்கு. நான் அவர் மகன் என்பதையே மறந்தார். மாமனாரே என் உருவில் அவர்முன் நிற்பதுபோல் உணர்ந்திருக்கவேண்டும்.

"நாயே, நீ யார் நாயே என்னைக் கட்டுப்பாடா இருக்கச் சொல்றதுக்கு? ######.......மவனே! என் பெண்டாட்டிகிட்ட நான் போறேன். உனக்கென்னடா போச்சு?"

"அப்பா! வார்த்தையை அளந்துபேசுங்க. அம்மாவுக்காகத்தான் அடங்கிப் போறேன், இல்லைனா...."

"இல்லைனா...என்னடா செய்வே? #########..........யா?"

"அப்பா!"

என் குரல் ஓங்கி ஒலிக்க, விபரீதம் நடக்கவிருப்பதை உணர்ந்து அம்மா இடைபுகுந்தாள்.

"வேணாம்யா! விட்டுடுய்யா! உன்னைக் கையெடுத்துக் கும்புடறேன்!"

கரம் குவித்துக் கெஞ்சினாள்.

"ஏய்! நீ வெலகுடி! இன்னைக்கு நானா…. அவனானு பாத்திடறேன். டேய்! உன்னை இத்தன வருஷம் சோறு போட்டு வளத்து, படிக்கவச்சதுக்கு உபகாரமாடா பண்றே? வெளியில போடா! எப்ப என்னையே கட்டுப்பாடா இருக்கச் சொன்னியோ, அப்பவே உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லனு ஆயிடுச்சிடா! போடா, நாயே வெளியில….!"

"இனிமேலும் இந்த வீட்டுல நான் இருக்கமாட்டேன். மனுஷன் வாழமுடியுமா, உங்களோட? பெண்டாட்டினா புள்ளபெத்துக்க மட்டும்தான்னு நெனப்பு உங்களுக்கு! அதைத்தாண்டி எவ்வளவோ இருக்கு!"

"என்னடா மேல மேல பேசிகிட்டே போற? நாளைக்கு உனக்குக் கல்யாணமாச்சுதுன்னா அப்ப தெரியும்! நான் பாக்கத்தாண்டா போறேன், பெண்டாட்டி முந்தானையப் பிடிச்சுகிட்டு நீ நாயாட்டம் அலையிறத!"

"சீ! என்ன மனுஷன் நீங்க? இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க. என் வாழ்க்கையில கல்யாணம்கிற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமில்ல. பிரம்மச்சரியத்தை கடைசிவரைக்கும் கடைப்பிடிச்சிக் காட்டறேன். நீங்க என் காலில் விழுந்து கதறினாலும் என் முடிவு மாறாது!"

"ஆங்! பெரிய இவரு! பிரம்மச்சரியமாம்ல.......எல்லாம் பேச நல்லாத்தான் இருக்கும். நடமுறையில் ஒண்ணும் தேறாது. பாக்கத்தானே போறேன்!"

"பாருங்க, பாருங்க! அதுக்காகவாவது அந்தக் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!"

துணிமணிகளையும், சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு அன்றே சென்னைக்கு ரயிலேறினேன். அம்மா என்னைத் தடுக்கவில்லை. கொஞ்சநாள் நண்பர்கள் உதவியுடன் வாழ்க்கை நடந்தது. கொல்கத்தாவில் கிடைத்த வேலை ஒன்றைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல மேலேறினேன். ஆயிற்று! முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை.இடைப்பட்டக் காலத்தில் நடந்தவைகளை தம்பி தங்கைகள் கடிதத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். நான் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு புதிய வழி கண்டுபிடித்ததுபோல் அம்மா, ரேணுவைப் பெற்றுவிட்டு பரலோகம் போய்ச்சேர்ந்திருந்தாள். அம்மாவின் இறுதி யாத்திரைக்கும் போகவில்லை. அப்பாவைக் கண்டால் பொங்கிவரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் காரணம்.அம்மாவின் மறைவுக்குப் பிறகு அப்பா ரொம்பவே உடைந்துவிட்டாரென்றும், பழைய ஆவேசமெல்லாம் இருந்த இடம் தெரியவில்லையென்றும் கேள்விப்பட்டபோதும் அவர்மேல் எந்தப் பிடிப்பும் உண்டாகவில்லை.

போனமாதம் வரை அப்படிதான் இருந்தேன். அப்பாவின் மீதான என் வெறுப்பை மாற்றி, அவர்மீது மரியாதையை உண்டாக்கிய அந்த சம்பவம், ரேணுவின் குழந்தையின் காதுகுத்து விழாவுக்குச் சென்றிருந்தபோது நடந்தது.

"பெரியப்பா! உங்கள தாத்தா கூப்புடுறாங்க!"

குழந்தைகள் சொல்லவும் தயக்கமாய் அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன். சாய்வுநாற்காலியில் சாய்ந்திருந்தார். தேகம் மிகவும் தளர்ந்திருந்தது. தோலின் சுருக்கங்கள் அவரது வயதைப் பறைசாற்றின. கதவைத் தாழிட்டு வரும்படி சொன்னார். செய்தேன்.எதுவும் பேசாமல் அவரெதிரில் நின்றிருந்தேன். அவர் சற்றே சிரமப்பட்டு எழுந்தார். எழுந்தவர்……….. நான் சற்றும் எதிர்பாராத கணத்தில் நெடுஞ்சாண்கிடையாக என் கால்களில் வீழ்ந்தார்.

அதிர்ச்சியுடன் பின்வாங்கினேன். என்னாயிற்று? மயங்கி விழுந்துவிட்டாரா? தடுமாறிவிட்டதா? எதுவும் புரியவில்லை. கைகொடுத்துத் தூக்கிவிட்டேன். கண்ணீருடன் என்னைக் கட்டிக்கொண்டார்.

"அப்……பா………!"

ஏனோ கல்லாயிருந்த என் மனம் கரையத் துவங்கியது. என் கண்களிலும் நீர்! அதைத் துடைக்கவும் தோன்றவில்லை. அவரை அணைத்தபடியே மெல்ல அவரது இருக்கையில் அமர்த்தி, அவர் காலடியில் அமர்ந்துகொண்டேன். கனத்த மெளனம் எங்கள் இருவரிடையிலும் வந்தமர்ந்துகொண்டது. அதை விரட்ட நானோ, அப்பாவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. யாரோ கதவைத் தட்டி சாப்பிட அழைத்தார்கள். இருவரையும் ஒன்றாகப் பார்த்த வீடே வியப்பில் ஆழ்ந்தது. அனைவர் முன்னிலையிலும் அப்பா என்னிடம் தன் வேண்டுகோளை விடுத்தார்.

"கோபாலா! நீ கல்யாணம் பண்ணிக்கணும்! எனக்காக…..! என்னைப் பழி வாங்காதேப்பா! என்னைப் பழி வாங்கறதுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கியது போதும்!"

நான் சிரித்தேன்.

"அப்பா! எனக்கு இப்போ ஐம்பது வயசு! கல்யாணம் பண்ற வயசா இது?"

அப்பா சட்டென்று மறுத்தார்.

"கோபாலா! நம்ம ரேணு பிறக்கறப்போ என் வயசு என்ன தெரியுமா? நீ சொன்ன ஐம்பதுதான்! தெரிஞ்சுக்கோ!"

"அதில்லைப்பா.....வந்து.....நான்...."

இதுதான் சமயமென்று தம்பிகள், அவர்கள் மனைவிமார்கள், தங்கைகள், அவர்கள் கணவன்மார்கள் எல்லோரும் பிடித்துக்கொண்டனர்.

"ஆமாண்ணா! பண்ணிக்கோங்க அண்ணா! எத்தனை வருஷமா உங்களைக் கெஞ்சறோம்! நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க, பொண்ணு பாக்கவேண்டியது எங்க பொறுப்பு!"

விழாவுக்கென கூடியிருந்தவர்கள் முன் வேடிக்கைப் பொருளானதுபோல் உணர்ந்தேன். பெரும்பாடுபட்டு எப்படியோ அப்போதைக்குத் தப்பித்து கொல்கத்தா திரும்பினேன். அந்த சம்பவத்துக்குப் பிறகு அப்பாவின் மேலிருந்த வெறுப்பு மறையத் துவங்கியது. என் வாழ்நாள் வீணாவதாய் எண்ணி அப்பா கவலைப் பட்டதும், காலில் விழுந்ததும் அடிக்கடி நினைவுக்கு வந்து வாட்டியது. இந்நிலையில்தான் நேற்று பெரிய தம்பியிடமிருந்து போன். அப்பா குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், தலையில் அடிபட்டதால் நினைவு தப்பிவிட்டதாகவும் சொல்ல……. இதோ, பதறியடித்துக்கொண்டு வருகிறேன். அவரது விருப்பத்தை நிறைவேற்ற இயலாதவனாய் அவர்முன் நிற்கப்போகிறேன்.

விமானம் தரையிறக்கப்பட்டது. தம்பிகள் காத்திருந்தனர்.அப்பாவைப் பற்றிக் கேட்டபோது எந்த முன்னேற்றமும் இல்லையென்று சொன்னார்கள். நேரே மருத்துவமனைக்குதான் சென்றோம். ஏகப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் அவரும் ஒரு ஜடமாய் படுத்திருந்தார். அவரைப் பார்க்க முடியாமல் குற்றவுணர்வு முன்னே வந்து தடுத்தது.நான் சாதித்துவிட்டேனா? நீங்கள் என் காலில் விழுந்தாலும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற என் சபதத்தில் வெற்றி பெற்றுவிட்டேனா? உண்மையில் அது வெற்றிதானா? அந்த வெற்றியைப் பெற நான் தந்த விலை......? புரியாமல் குழம்பினேன். நாட்கள் நகர்ந்ததே தவிர அவரிடம் எந்த அசைவும் தெரியவில்லை. மடிக்கணினி உதவியால் இங்கிருந்தே அலுவலகத்துக்கு கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு குடும்பம், குழந்தைகள், பணிச்சுமை என்று பல்வேறு கடமைகள் இருக்க, அவர்களுக்குத் தொல்லை தராமல் அப்பாவை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை நானே எடுத்துக்கொண்டேன்.

மருத்துவமனையிலேயே நான் பழியாய்க் கிடந்ததற்கு கூடுதலாய் ஒரு காரணமும் இருந்தது. கெளசல்யா! நண்பன் ஜீவாவின் தங்கை! கல்லூரி நாட்களில் அவனைக் காணப்போகும்போது சந்தித்திருக்கிறேன். அப்போது அவள்மீது ஒரு ஈர்ப்பு இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காலம்தான் என்னை வேறுதிசையில் திருப்பிவிட்டதே! தாய்தகப்பனற்ற அவளை ஜீவாதான் படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்தான். கொஞ்சநாளிலேயே ஜீவா ஒரு விபத்தில் பலியானான். அதுவரைதான் எனக்குத் தெரியும். இப்போது கெளசல்யா, இந்த மருத்துவமனையில் ரேடியோலொஜிஸ்ட்டாக வேலை பார்க்கிறாள். அவளை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தது. இந்தப் பத்துநாள் பழக்கத்தில் அவள் என் தோழியாகவே மாறியிருந்தாள். கடந்தகால வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டாள்.

குழந்தையில்லாக் குறையைக் காரணமாய் வைத்து விவாகரத்தாகி, இருபது வருடங்களாய் தனிமரமாய் வாழ்க்கை நடத்துபவளுக்கு நான் ஏன் துணையாய் இருக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழத்துவங்கியது. வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய், பற்றுதலாய் வாழ்வது எத்தனை சுகம் என்று மனம் ஏங்கியது. எனக்கான வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கவேண்டும் என்ற ஆவல் உந்தியது.

அவளிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்க, அவள் யோசித்துச் சொல்வதாய்ச் சொன்னாள். இரண்டுநாள் தவிப்பாய்க் கழிந்தது. மூன்றாம் நாள், அப்பாவின் அறைக்கு வந்தாள். அவர் முன்னிலையிலேயே சம்மதம் தெரிவித்தாள். எனக்கு இதை அப்பாவிடம் சொல்லவேண்டுமென்று உள்ளம் துடித்தது.

"அப்பா! இங்கே பாருங்கப்பா! உங்க ஆசைப்படியே நான் கல்யாணம் செய்துக்கப்போறேன். நீங்க எழுந்துவந்து எங்களை ஆசிர்வாதம் செய்யணும்ப்பா! அப்பா! நான் பேசுறது கேக்குதா? அப்பா...."

என் விரதத்தை முடித்து, அப்பாவின் உள்ளக்குறுகுறுப்பைத் தீர்க்க, கெளசல்யாவின் கரம் பற்றியவேளை........அதுவரை அசையா ஜடமென இருந்த அப்பாவிடமிருந்து ஒரு நீண்ட கேவல் வெளிப்பட்டு தன் விண்ணுலகப் புறப்பாட்டை அறிவித்து........அமைதியாய் அடங்கியது அவரது இறுதிமூச்சு!

“அப்பா………!”

நான் வேதனையுடன் விம்மத்தொடங்கினேன்.

அன்புரசிகன்
29-06-2010, 03:37 AM
கதைப்போட்டியில் படித்தது. வில்லனாய் தோன்றிய தந்தை காலத்தின் கட்டாயத்தில் குற்றத்தை உணர்ந்து தன் மகனுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பது ... உறவுகளின் மகிமையை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
29-06-2010, 06:56 AM
பீஷ்மன்..அருமையான தலைப்பு. பொருத்தமான தலைப்பு. பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளும் முடிவை எடுக்க வைத்த நிகழ்வை மிக அழகாக கொடுத்திருக்கீங்க. பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலாகட்டும், அதற்கான உரையாடல்களை அமைப்பதிலாகட்டும்....நீங்கள் மிகச் சிறப்பானவர் கீதம்.

உள்ளத்தில் குற்ற உணர்ச்சியைத் தேக்கிக்கொண்டு....உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கும் கிழவரை....அந்த ஐம்பது வயது மகன்....நிம்மதியுடன் விடுதலை செய்வது நெகிழ வைக்கிறது.

உங்கள் கதைப்பயணத்தில் இந்தக் கதையும் ஒரு மைல்கல்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.

கலையரசி
29-06-2010, 01:41 PM
அம்மா பிள்ளை பெற்கும் இயந்திரமல்ல என்று தந்தையுடன் மோதி, அதன் காரணமாக திருமணம் செய்யாமலேயே தன் இளமையைத் தொலைக்கும் கதை நாயகனின் முடிவு மனதை நெகிழ வைக்கிறது. வயதான பிறகு தம் தவறை உணர்ந்து தம் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய நினைக்கும் தந்தையின் தவிப்பை உணர்ந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மரணத்துடன் போராடும் தந்தைக்கு நிம்மதி அளிப்பதும் நல்ல முடிவு.
மனதைத் தொடும் கதை. வாழ்த்து கீதம்!

பா.ராஜேஷ்
29-06-2010, 02:11 PM
வழக்கம் போல அசத்தலான கதை... பொருத்தமான தலைப்பு... நல்ல முடிவு... போட்டிக்கு சவாலாய் இருந்த கதை... பாராட்டுக்கள் கீதம் அவர்களே ..

பாரதி
29-06-2010, 03:14 PM
மீண்டும் கதையை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றி.
உறுதி எடுப்பது எத்தனை சவாலானது என்பதை புரியவைக்கும் கதை. வேறுபட்ட தகப்பனையும், தாயைப் பேண உறுதி பூண்ட தனயனையும் சரியாக கோணத்தில் காட்டுகிறது. எந்தக் காயத்தையும் காலம் ஆற்றும்/மாற்றும் சக்தி கொண்டது என்பதும் நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. முடிவு எதிர்பார்த்ததைப் போன்றே இருந்தது.
தொடர்ந்து கதை படைக்கும் வல்லமை உங்களிருப்பதை பறை சாற்றிய கதையல்லவா... வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

மதி
29-06-2010, 04:41 PM
தலைப்பே கதையில் நம்மை இழுக்கிறது. அதற்கேற்றார் போல் கதையும்.. பெற்றவளுக்காக பேசி தந்தையின் வெறுப்பை பெற்று பின் பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க சொல்லும் காரணமும் இறுதியில் தந்தை நிம்மதியாய் மூச்சை விடும் தருணமும் நெகிழ வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வர்ணனையும் சிந்தனையோட்டங்களை கதையுள் புகுத்திய விதமும் அருமை. வாழ்த்துக்கள்..

அமரன்
29-06-2010, 08:35 PM
எல்லாப் பாத்திரங்களும் திருந்தி சுபமாவது கதையின் சிறப்பு.

கணவனுக்குக் கண்மூடித்தனமாக உடன்பட்ட அம்மாவாகட்டும்,
மகனிடம் மன்னிப்புக் கேட்ட அப்பா ஆகட்டும்,
தகப்பனின் ஆசையை நிறைவேற்றும் தனயனாகட்டும்,
எல்லாருமே நேர்வந்து சுபம் போடுவது கதையின் சிறப்பு.

நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்படி இருக்கக்கூடாது என்று சொல்லிப்புரிய வைத்த சிறந்த கதை.

பாராட்டுகள் கீதம்.

இளசு
29-06-2010, 08:59 PM
இனம்புரியா அவஸ்தையான ஓர் உணர்வு....

இக்கதையை வாசித்ததும்...

ஒரு தலைமுறை வாழ்க்கையை அதன் வழிப்படி நடத்த
அடுத்த தலைமுறை நல்வழி அறிந்தும் நடைமுறைப்படுத்த இயலாமல் போக.....

எடுத்த சபதமும் சூழலும் பிரம்மாண்டமாய் நெஞ்சைத் தாக்கின..

பின் காலம் அதை மெல்ல மெல்ல நெகிழ்த்தி
சுபமான முடிவில் நிறுத்தி காட்சியிலும் நெஞ்சு ஈரமானது.


பாராட்டுகள் கீதம்..

கீதம்
29-06-2010, 11:38 PM
பின்னூட்டமிட்டு, விமர்சித்து வாழ்த்திய நண்பர்கள் அன்புரசிகன், சிவா.ஜி அண்ணன், கலையரசி அக்கா, ராஜேஷ், மதி, அமரன், பாரதி அவர்கள் மற்றும் இளசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இக்கதையின் முன்பாதி உண்மைச்சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டது. பிற்பாதி என் கற்பனையைப் புகுத்தியது. இக்கதையின் நாயகன் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று சத்தியம் செய்வதாக எழுதியுள்ளேன். ஆனால் உண்மையில் அந்த மகன் தன் மனைவியும், தாயும் ஒரே நேரத்தில் கருத்தரித்திருப்பது தனக்கு அவமானம் என்று தந்தையிடம் சண்டையிட்டார். கடைசிவரை தந்தைக்கும், மகனுக்கும் ஒத்துவரவில்லை என்பதே உண்மை. கதையை விமர்சித்து என்னை இன்றும் வழிநடத்தும் நண்பர்களுக்கு என் நன்றி.

Ravee
29-07-2010, 05:48 PM
பீஷ்மர் ... மகாபாரதத்தில் எனக்கு பிடித்த மிக உன்னதமான கதாபாத்திரம். ஆனாலும் தன் தந்தையின் இச்சைக்காக அவர் விரதம் கொண்டது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . அதை உங்கள் கதையில் கடைசியில் மாற்றிவிட்டீர்கள் . இதில் பாராட்ட வேண்டிய அம்சம் தாய்க்கும் மகனுக்கும் இருந்த பாச நிகழ்வுகள் .வாழ்த்துக்கள் கீதம் .

மேலும் , இந்த கதை என் தாத்தா பாட்டியை நினைவு படுத்தியது . என் பெரிய அத்தையின் மகனை விட என் சின்ன அத்தை சிறியவர் . எங்கள் சிறிய அத்தை பிறந்த போது இறந்து போன என் பாட்டிக்குப்பிறகு அவரின் அக்காவே பால் கொடுத்து வளர்த்ததாக சொல்வார்கள். இதே போல நடிகர் கமலஹாசன் கூட அவர் தாயார் இறந்து போக தன அண்ணியிடம் வளர்ந்ததாக அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்

கீதம்
31-07-2010, 12:42 AM
அந்தக் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம்தானே! அதுபோன்றதொரு காலத்திடமிருந்து விடைபெறும் தருவாயில் நிகழ்ந்த கதை இது.

விமர்சனத்துக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி, ரவி அவர்களே.