PDA

View Full Version : மரணம் நிகழ்ந்த வீடு...



சசிதரன்
28-06-2010, 07:07 PM
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அதனதன் இயல்பு மாறியிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
வந்து போகும் அத்தனை முகங்களிலும்
ஒரு இறுக்கம் திணிக்கப்படுகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அழும் உறவுகளைத் தேற்றுவதெப்படியென
யாருக்கும் புரிவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
யாருக்கும் பசிப்பதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
சந்திக்கும் உறவுகளும்
புன்னகை பரிமாறுவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
இறந்தவரின் மகனோ மகளோ
அனைவராலும்
கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள்.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
மரணம் நிகழ்ந்த விதம்
விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

nellai tamilan
28-06-2010, 07:21 PM
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

உண்மைதான்.
மரணத்தின் வலியை உணர்தலின் வெளிப்பாடோ இது?
என்றுதான் யோசிக்க தோன்றுகிறது.

மரணவீட்டின் இருக்கத்தை அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள்.

இந்த மரணம் தொடராமல் இருக்க
மரணம் பற்றி பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்ராயம்

அமரன்
28-06-2010, 09:51 PM
உலகம் ஒரு நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்பது பிரபல்யமான வசனம்.

என்னைப் பொறுத்தமட்டில் சாவீட்டில் நாமெல்லாம் நன்றாகவே நடிக்கிறோம்.

சென்ற மாதம் எங்கள் தெருவில் சாவீட்டில் ஒருவர் பகிடிவிட்டு எல்லாரையும் இறுக்கம் தளர்த்திக் கொண்டிருந்தார். எவரும் எரிச்சல் படாதவறு அவர் அதை மேற்கொண்டது என்னை மிகவும் கவர்ந்தது.

கீதம்
28-06-2010, 10:10 PM
மரணம் நிகழ்ந்த வீட்டில் இயல்பாய் இருப்பதை எவரும் விரும்புவதில்லை!நீங்கள் சொல்வதுபோல் ஒரு இறுக்கமுகத்தை அணிந்துகொண்டு வலம் வரவேண்டிய சூழ்நிலை. அங்கு குழந்தைகளின் குதூகலங்கள் கூட அடக்கிவைக்கப்படுகின்றன.

கவிதை வெகு யதார்த்தம். வரிகள் நன்று. மரணம் நிகழ்ந்த வீட்டில் என்ற சொற்பிரயோகம் ஒவ்வொரு வரிக்கும் வருவது மட்டும் சற்று நெருடலாக உள்ளது.

இழவுவீட்டுச் சூழலை, கவிதைக்குள் கொண்டுவந்த உங்களை பாராட்டுகிறேன், நண்பரே.

nambi
29-06-2010, 03:56 AM
மரணம்....கவிதை நன்று...பகிர்வுக்கு நன்றி! வரிகள் அருமை!

சசிதரன்
30-06-2010, 07:41 AM
நன்றி நெல்லை தமிழன், அமரன், கீதம் மற்றும் நம்பி...:)

ஆதவா
30-06-2010, 08:27 AM
இந்த மாதிரி குறிப்பு கவிதைகள் வெகு அழகானவை,

மரணம் நிகழ்ந்த வீட்டில் இழப்புகள் குடியேறும். நிகழ்வுகள் நிலைமாறும், வரவுகள் குறையும்,
எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான், அதை நீங்கள் இறுதி பாராவில் காட்டியிருந்த விதமும் நன்றாக இருக்கிறது.

நான் மரண நிகழ்வு சடங்குகளுக்கு சென்றிருக்கும் பொழுதெல்லாம் நிற்கவோ, அமரவோ, அல்லது அங்குமிங்கும் நடக்கவோ மிகுந்த யோசனை செய்திருக்கிறேன். கூடியழும் பெண்கூட்டத்தினிடையே இறந்தவரின் சாகசங்கள் வளைய வந்து கொண்டிருக்கும். இன்னும் சிலர் வீடு வரைக்கும் சிரித்து பேசிக் கொண்டு வருபவர்கள் வீட்டிற்குள் வந்து இறந்தவரைப் பார்த்ததும் அல்லது பார்ப்பதற்கு முன்பே அழ ஆரம்பித்துவிடுவார்கள்.
“இறுக்கம் திணிக்கப்படுகிறது.” என்பது துக்கத்தின் சாயலை முக அளவிலேனும் கொண்டு வரவதற்கான பிரயத்தனப் படுபவர்களைக் குறிக்கிறது. ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கு அது பொருந்துவதில்லை.

இறந்து பல நாட்களுக்குப் பிறகு மறந்து போன நிலையில், “இறக்காமல் போயிருந்தால்” என்று ஞாபகம் தூண்டுபவர்களால் இன்னும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அந்த வீட்டில், மரணம்.

தொடருங்கள் சசி,

-ஆதவா.

ஆதவா
30-06-2010, 08:30 AM
கவிதை வெகு யதார்த்தம். வரிகள் நன்று. மரணம் நிகழ்ந்த வீட்டில் என்ற சொற்பிரயோகம் ஒவ்வொரு வரிக்கும் வருவது மட்டும் சற்று நெருடலாக உள்ளது.




சில கவிதைகள் இப்படியான தொடர்ச்சியான அல்லது திரும்ப வரும் வார்த்தைகளாலேயே அழகு பெறும். இது அப்படிப்பட்ட கவிதைதான்... அதில் தவறில்லையென்பது என் கருத்து.

சிவா.ஜி
30-06-2010, 09:56 AM
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டை அழகாய் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். செயற்கை அழுகைகள், வலிந்து வரவழைத்துக்கொள்ளும் இறுக்கம், இழப்பு நேர்ந்தவருக்கு என்ன சொல்வது என்பதில் தயக்கம்....பசித்தால் யாரிடம் கேட்பது என்பதில் சிலருக்குக் குழப்பம்....என நான் பார்த்த சில மரணம் நிகழ்ந்த வீடுகளும் உண்டு.

வரிகள் எதார்த்தம் சொல்கின்றன. வாழ்த்துக்கள் சசி.

மச்சான்
30-06-2010, 11:10 AM
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
கவிதையின் இந்த இறுதி வரிகளிலேயே மரணம் நிகிழ்ந்த வீட்டின் தொடர் நிகழ்வுகளை படம்பிடித்து காட்டி விட்டீர்கள். எதார்த்தத்தை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள் ஆசிரியரே.

.

பா.ராஜேஷ்
30-06-2010, 06:38 PM
அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். வரிக்கு வரி ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் என்றில்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.. பாராட்டுக்கள் ..

சசிதரன்
01-07-2010, 06:15 AM
மன்ற உறவுகளின் மேலான விமர்சனங்களுக்கு நன்றிகள் பல... மரணம் நிகழ்ந்த வீடு என்ற வரி ஒவ்வொரு பத்தியிலும் வருவதை பற்றி சிலர் கூறியுள்ளீர்கள். ஆதவ சொன்ன அந்த அழகை கவிதைக்கு அந்த வரி குடுக்கும் என்றே அதை கையாண்டேன்....:)

//“இறுக்கம் திணிக்கப்படுகிறது.” என்பது துக்கத்தின் சாயலை முக அளவிலேனும் கொண்டு வரவதற்கான பிரயத்தனப் படுபவர்களைக் குறிக்கிறது. ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கு அது பொருந்துவதில்லை.//

உங்கள் வாதம் சரிதான் ஆதவா... நான் பெண்களை கவிதையில் விட்டுவிட்டதை தோன்றுகிறது...:)