PDA

View Full Version : காற்றுக்கும் எனக்கும்...



kulirthazhal
25-06-2010, 09:15 AM
அவள்
அப்படியொன்றும்
அமைதியாய் இல்லை...

கண்களில் சினம் கொண்டு
காற்றோடு வாதிட்டாள்..,
களைத்துப்போனாள்.....

போராடி காப்பாற்ற
பொக்கிஷங்கள்
இல்லை! இல்லை!
அழுக்கு மூட்டை,,.
ஒட்டுத்திண்ணை..,
ஒற்றைத்தட்டு..,
ஊன்று கொம்பு........

மழைவாசம் முகர்ந்த
குதூகல காற்றோடு
கும்மாளமிடும்
குப்பை காகிதங்கள்
சீண்டி விளையாடின
அவளின்
ஆழக்கோபத்தில்
அக்கறையில்லாத
பேரப்பிள்ளை போல...

அருகில்
படுத்த நாயை
வெறுத்து விரட்டியவள்

தனிமையை
வெறுத்தாளோ..,

முதுமையை
வெறுத்தாளோ..,

வறுமையை
வெறுத்தாளோ..,

வெறுமையை
வெறுத்தாளோ.....

நாய்
நிதானமாய்தான்
நடந்தது
வேறு இடம்தேடி...

காற்றுக்கும்
எனக்கும்
ஏதும் விளங்கவில்லை...

நாய்க்கு
புரிந்து இருக்குமோ..?
நாயையும் காணவில்லை
கேட்டு தெரிந்துகொள்ள.....

- குளிர்தழல்

சிவா.ஜி
25-06-2010, 10:16 AM
ஆதரவற்ற ஒரு மூதாட்டியின் அவலத்தைக் காட்டும் வரிகள். மனம் பிறழ்ந்த நிலையில் பல மூதாட்டிகள் காற்றுடன் சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன்.

வலிய வரிகளுக்கு வாழ்த்துக்கள் குளிர்தழல்.

குணமதி
25-06-2010, 11:45 AM
சிற்றூர்களில் கண்ட உண்மைக் காட்சி!

பதிவு செய்து மறுபடியும் கண்முன்னும் கருத்திலும் தோன்றச் செய்தீர்கள்!

kulirthazhal
27-06-2010, 03:26 AM
ஆதரவற்ற ஒரு மூதாட்டியின் அவலத்தைக் காட்டும் வரிகள். மனம் பிறழ்ந்த நிலையில் பல மூதாட்டிகள் காற்றுடன் சண்டை போடுவதைக் கண்டிருக்கிறேன்.

வலிய வரிகளுக்கு வாழ்த்துக்கள் குளிர்தழல்.

நன்றி! பொதுவாக பெண்களைப்பற்றிய கவிதைகளும் இயற்கையை பற்றிய கவிதைகளும் எளிதில் புரிந்துகொள்ளப்படுகின்றன... எனது இருட்டு தளங்களை பற்றிய கவிதைகள் புரிந்துகொள்ளப்பட்டு பாராட்டப்படுவதில் மகிழ்கிறேன்....

பாலகன்
27-06-2010, 03:30 AM
ஒருவேளை தனக்கே உணவில்லை என்று நாயை துறத்தியிருக்கலாம்!
நல்ல இயல்பான வரிகள்

பாராட்டுகள்

kulirthazhal
27-06-2010, 03:31 AM
சிற்றூர்களில் கண்ட உண்மைக் காட்சி!

பதிவு செய்து மறுபடியும் கண்முன்னும் கருத்திலும் தோன்றச் செய்தீர்கள்!

இதுபோன்ற விமர்சனங்கள் எனது பதிப்புகள் புரிந்துகொள்ளப்படுவதாக காட்டுகிறது... நன்றி!

பாரதி
27-06-2010, 04:27 AM
ஆங்காங்கே காணும் அவலங்கள் மனதில் பிம்பமாக பதிந்து விடுகின்றன. சிலவற்றை கண்டும் காணாததுமாய் இருந்து விட, சில மட்டும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும் தன்மை படைத்தன. அவற்றை எழுத்தில் வரைய தனித்திறமை தேவை.

நாயிடம் கேட்கும் திறன் நமக்கில்லையென்றாலும் நாளைய தினத்தை கணக்கிலெடுத்தால்... கவிதை கூறும் கரு மனதில் நிற்கவே செய்கிறது.

பாராட்டுகிறேன் நண்பரே.

அமரன்
27-06-2010, 09:25 AM
அதிர்வுகள் உணரப்படுகின்றன. மனிதர்களும் காற்றும் சதா இரைந்து கொண்டு இருப்பதால் தம்மில் அதிர்வுகளை கரைத்து விடுகின்றன. கடைசி வரை தேடிக்கொண்டே இருக்கின்றன.

காற்று எப்படி கன இரகசியங்களை தனக்குள் வைத்துக் கொண்டு பயணிக்கிறதோ அதே போல கவிமாந்தரும் பயணித்துக் கொண்டே இருப்பார்கள் உலகின் வேர்களில்.. அவர்களாலும் பூக்கள் பூக்கத்தான் செய்யும் கவிதைகளாகவேனும்.

இருத்தளங்கள் பிடிக்காதவர்கள் எவருண்டு...

ஆடுங்கள் குளிர்தழல்.

ஆதவா
29-06-2010, 02:33 AM
அருமையான கவிதை குளிர்தழல்.

இப்படியாகவெல்லாம் இருந்து கொள்ள மனநிலை பிறழ்ந்திருக்கவேண்டிய அவசியமுமில்லை.
புரிந்து கொள்ளாமலிருக்க காரணங்களும் குறைவில்லை. முதுமையில் நாம் பயம் கொள்ளவேண்டிய ஒரே விஷயம், தனிமையில் தள்ளப்படுவதுதான். தனிமை எனும் நோய் முதிர்ச்சியில்லாத பைத்தியத்தைக் கொடுக்கும். அதுவும் மூதாட்டிகளுக்கு.

இடையே நாயை கொண்டுவந்தது பிரமாதம், அதே போல அதற்கு கிழவியின் வலி புரிந்தாற்போல் கவிதை கொண்டு செல்வது இன்னும் பிரமாதம். கவிதை படிக்கும்பொழுது எனக்கு ஒரு முதியவர் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் சண்டையிட்டதில்லை, வெறுத்ததில்லை. அவருக்கு மட்டுமே தெரிந்த பிம்பத்தோடு பேசுவார். அந்த பிம்பம் பதில் சொல்லுமா தெரியாது, அவர் திருப்தியுடன் வீடு திரும்புவதை கண்டிருக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
ஆதவா:)

nambi
29-06-2010, 04:11 AM
மூதாட்டியின் எண்ண ஓட்டங்களை படம் பிடித்து காட்டும் கவிதை நன்று...பகிர்வுக்கு நன்றி!

பா.ராஜேஷ்
30-06-2010, 06:52 PM
வெகு அருமையான கவிதை வரிகள் குளிர்தழல்.. மூதாட்டியின் நிலை நன்றாக வரிகளால் வெளிப் படுத்தியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்..

சசிதரன்
01-07-2010, 06:22 AM
பல இடங்களில் இன்று காணமுடிகிற விஷயம். கவிதைக்குள் கொண்டுவந்திருக்கும் விதம் அருமை. காற்றுடன் சண்டையிடும் மூதாட்டியின் மொழியை நாய் புரிந்து கொண்டதோ என எழும் கேள்வி கணம் கூட்டுகிறது. ஆதவா சொன்னது போல் முதுமையின் பெரும்பயம் தனிமைதான்..

நல்லதொரு கவிதை...