PDA

View Full Version : புதிய ஆத்திச்சூடி கதைகள்...!!!ஆறுவது சினம்..!!சிவா.ஜி
23-06-2010, 01:23 PM
புதிய ஆத்திச்சூடி கதைகள்....இந்தத் தலைப்பில் குட்டிக் குட்டிக் கதைகளாக, ஒவ்வொரு கதையாகப் பதிக்கலாமென்றிருக்கிறேன்.
உங்கள் தொடர்ந்த ஆதரவை நாடி....
1. அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5. உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்
பிறரின் சிந்தனைகளையும், ஆக்கங்களையும் குற்றப்பார்வையுடன் படிக்காதே/பேசாதே

8.ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.

9.ஐயம் இட்டு உண்
பகிர்ந்து உண்ணுதல் வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

11.ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
-----------------------------------------------------------------------
முதல் கதை

அறம் செய விரும்பு

பாலு ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். அவனுடைய அப்பா சுந்தர்...ஒரு மோட்டார்சைக்கிள் விற்பனைக் கடையில் பழுதுபார்ப்பவராக வேலை செய்கிறார். குடும்பத்தை நடத்துமளவுக்கு மட்டுமே சம்பாதிக்கிறார். இருந்தாலும், தன் ஒரே மகனின் ஆசைகளை...கஷ்டப்பட்டாவது நிறைவேற்றி வைக்க விருப்பமுள்ளவர்.


பாலு தினசரி பள்ளிக்கு நடந்துபோகும் வழியில், அந்த செருப்புக்கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான காலணிகளைப் பார்த்து பெருமூச்சு விடுவான். அங்கே சிவப்புக்கலரில் மிதிக்கும்போது குதிகால் பகுதியில் விளக்கு எரியுமாறு இருந்த ஒரு செருப்பை மிகவும் விரும்பினான். தன் அப்பாவிடம் ஒருநாள் அதைக் காட்டி...அதனை அணிய ஆசையென்று கொஞ்சினான். அருகில் சென்று விலையைப் பார்த்த சுந்தர் அயர்ந்தார். அவரால் அப்போதைக்கு வாங்கித்தரமுடியாத விலையாக இருந்தது.


அப்போதைக்கு தன்னால் முடியாது என பாலுவை சமாதானப்படுத்திவிட்டாலும்...தன் மகனுக்கு அதை வாங்கித்தந்துவிட வேண்டுமென சிறுகச் சிறுக பணம் சேர்த்தார். ஒருநாள் பாலுவை அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று அவனுக்கு அந்த செருப்பை வாங்கித்தருவதாய் சந்தோஷமாகச் சொன்னார். ஆனால் பாலுவிடம் அவர் எதிர்பார்த்த உற்சாகமில்லை. ஆச்சர்யப்பட்டார்.


"ஏம்ப்பா பாலு...சந்தோஷமாயில்லியா...உனக்குன்னுதான் பணம் சேர்த்தேன்...வாங்கிக்கடா"


என்றார்.


"அப்பா...இந்த பணம் எனக்கு செருப்பு வாங்கறதுக்காக மட்டுமேதானப்பா..?"


"ஆமாம் பாலு"


"அப்படீன்னா....இந்தப் பணத்துல கம்மி விலையில ஒரே மாதிரி ரெண்டு ஜோடி செருப்பு வாங்கித் தாங்கப்பா..."


என்ற பாலுவைப் புரியாமல் பார்த்த சுந்தர்,


"ஏன் பாலு அப்படிச் சொல்ற உனக்கு இரண்டு ஜோடி எதுக்கு?"

"ரெண்டும் எனக்கில்லப்பா. என் கூட ஒரு பையன் படிக்கிறான். முனியன். ரொம்ப ஏழைப்பா... அவங்கப்பா...கூலி வேலை செய்யறாங்க. கால்ல செருப்பில்லாம வெயில்ல நடந்து வராம்ப்பா. இதுல ஒண்ண அவனுக்குக் குடுத்தா...சூட்டுல நடக்க வேண்டியதில்ல...என் கிட்ட இருக்கிற மாதிரியே அவன் கிட்டயும் இருக்குன்னா சந்தோஷப்படுவான் இல்லப்பா?"?"


தன் மகனின் உதவும் மனதைப் பார்த்து...அவனைக் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

ஆதி
23-06-2010, 01:31 PM
//7. எண் எழுத்து இகழேல்//

பிறரின் சிந்தனைகளையும், ஆக்கங்களையும் குற்றப்பார்வையுடன் படிக்காதே/பேசாதே என்று சொல்லலாம் இல்லையா ?

கதையை இன்னும் படிக்கலை அண்ணா.. படிச்சு பின்னூட்டம் போடுகிறேன்.....

பாரதி
23-06-2010, 01:39 PM
மாறுபட்ட சிந்தனை!
நல்ல கதை சிவா!!
கதை பரிசு பெற்ற ஒரு திரைப்படத்தை லேசாக நினைவூட்டியது.
எழுதுங்க சிவா.

சிவா.ஜி
23-06-2010, 01:44 PM
ஆத்திச்சூடியின் விளக்கம் விக்கிப் பீடியாவிலிருந்து எடுத்தது ஆதன். எனக்கு அந்தளவுக்கு ஞானமில்லை.

நீங்கள் சொல்வது இன்னும் பொருத்தமாய் இருக்கிறது.
மாற்றி விடட்டுமா?

சிவா.ஜி
23-06-2010, 01:46 PM
மிக்க நன்றி பாரதி.

அது எந்தப் படமென்று தெரியவில்லை. என் மகன் சிறுவயதில் நான் அதிக விலைக்கு கால் சட்டை எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொன்ன போது, அதே பணத்தில் இரண்டு கால் சட்டைகளைக் குறைந்த விலைக்கு எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னதை வைத்து எழுதினேன்.

சிவா.ஜி
23-06-2010, 01:52 PM
அதேபோல ஐயம் இட்டு உண் என்பதற்கான விளக்கமாய்...யாசிப்பவருக்குப் பிச்சையிட்டுவிட்டு உணவருந்து என இருந்ததை மாற்றி பகிர்ந்து உண் என இட்டிருக்கிறேன். முதல் வரியில் யாசிக்கக்கூடாது எனச் சொல்லிவிட்டு, அடுத்த வரியில் யாசிப்பவருக்கு உணவிடு எனச் சொல்வது சரியில்லை எனத் தோன்றியதால் அப்படி மாற்றினேன்.

மற்றவற்றிற்கும்...மாறுபட்ட விளக்கமிருப்பின் தயவுசெய்து அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

சரண்யா
23-06-2010, 02:16 PM
நல்ல எண்ணம் மனதில் உதித்ததை ஒரே மாதிரி இருக்க வேண்டுமென்பதில் அவன் சொன்ன யோசனையும் அருமை.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
ஆத்திசூடிக்கு ஒப்பான கதைகள் எழுதும் உங்கள் எண்ணத்திற்கு நல்வாழ்த்துகள்..

சிவா.ஜி
23-06-2010, 02:26 PM
ரொம்ப நன்றிம்மா சரண்யா....!!!!

மதி
23-06-2010, 03:27 PM
ஆஹா.. நல்ல முயற்சி... எப்படி உங்களால மட்டும் புதுசா புதுசா யோசிக்க முடியுது..??!! தொடருங்கண்ணா...!!

சிவா.ஜி
23-06-2010, 04:17 PM
நன்றி மதி. புதுசா எதுவுமில்ல...எப்பவோ யாரோ செஞ்சத...திரும்ப நான் செய்யணுன்னு நினைக்கிறேன். முயற்சிதான். பார்ப்போம்.

த.ஜார்ஜ்
23-06-2010, 04:30 PM
முன்பொருமுறை இதே தலைப்பில் பிரபல பத்திரிகையில் கதைகள் வந்தன.அப்போது எழுதியவர் பரசுராம் பிஸ்வாஸ் . இப்போது சிவா.ஜி.

சுழற்றி சுழற்றி அடி பின்னுரீங்கப்பா.
எப்படித்தான் யோசிப்பாய்ங்களோ?

சிவா.ஜி
23-06-2010, 04:46 PM
ஆமாங்க ஜார்ஜ் இப்ப நினைவுக்கு வருது. அவர் கொஞ்சம் பெரிய கதைகளா எழுதியிருப்பாரு. நான் சின்ன சின்னக் கதைகளா எழுதலான்னு இருக்கேன்.

நன்றி நண்பரே

அமரன்
23-06-2010, 05:29 PM
நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஔவையை எடுத்தாண்டு அருமையாகச் சொல்லி இருக்கீங்க.

உங்க மகனுக்கு உங்க குணம் இருக்கத்தானே செய்யும் சிவா..

பா.ராஜேஷ்
23-06-2010, 06:22 PM
ஓஹோ, இது உங்கள் மங்கன் செய்ததா... அருமை... அவரை பாராட்டுகிறேன்... நல்லதோர் முயற்சி அண்ணா... தொடருங்கள்...

மதுரை மைந்தன்
23-06-2010, 08:32 PM
நல்ல கருத்துள்ள கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

செல்வா
23-06-2010, 09:21 PM
நல்ல முயற்சி அண்ணா...

சிறப்பாகச் செதுக்க வாழ்த்துக்கள்.

எத்தனை நாளைக்குத்தான் பழைய கதைகளையேச் சொல்லிக் கொண்டிருப்பது. காலத்திற்கேற்ற புதிய கதைகளும் தேவையல்லவா....!

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...!

அன்புரசிகன்
24-06-2010, 12:45 AM
"ரெண்டும் எனக்கில்லப்பா. என் கூட ஒரு பையன் படிக்கிறான். முனியன். ரொம்ப ஏழைப்பா... அவங்கப்பா...கூலி வேலை செய்யறாங்க. கால்ல செருப்பில்லாம வெயில்ல நடந்து வராம்ப்பா. இதுல ஒண்ண அவனுக்குக் குடுத்தா...சூட்டுல நடக்க வேண்டியதில்ல...என் கிட்ட இருக்கிற மாதிரியே அவன் கிட்டயும் இருக்குன்னா சந்தோஷப்படுவான் இல்லப்பா?"?"

இதை விட வேறு என்ன வேணும் ஒரு தந்தைக்கு... பயனுள்ள திரி. சிறார்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய இத்தகைய கதைகளை அனைத்து சிறார்களும் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தொடருங்கள் அண்ணா

சிவா.ஜி
24-06-2010, 06:09 AM
ஆமாம் அமரன்...என் மகனும் என்னைப்போல இருப்பதில் சந்தோஷமே.

பாராட்டுக்கு நன்றி பாஸ்.

சிவா.ஜி
24-06-2010, 06:10 AM
உங்க பாராட்டுக்கு நன்றி ராஜேஷ். இது முயற்சிதான்....முடிந்தவரை நன்றாக அமைய முயற்சிக்கிறேன்.

சிவா.ஜி
24-06-2010, 06:13 AM
உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய நிச்சயம் முயற்சிக்கிறேன் மதுரை மைந்தன் அவர்களே.

சிவா.ஜி
24-06-2010, 06:14 AM
காலத்துக்கேற்ப சில மாற்றங்கள் அவசியம்தான் செல்வா. ஆனால் அதை செய்யுமளவுக்கு எனக்குத் திறமையில்லை. இது ஒரு முயற்சியே. முயன்று பார்க்கிறேன்.

நன்றி செல்வா.

சிவா.ஜி
24-06-2010, 06:15 AM
சிறார்களுக்காகவும், பெரியவர்களுக்கும் சேர்த்தே சில கருத்துக்களை எழுத முயற்சிக்கிறேன் அன்பு. உங்களனைவரின் ஆதரவு இருக்கும்வரை...முயற்சி வெற்றியடையுமென்ற நம்பிக்கை இருக்கிறது.

மிக்க நன்றி அன்பு.

கீதம்
24-06-2010, 06:20 AM
புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள் அண்ணா. என்னைச் சொல்லிவிட்டு நீங்கள்தான் நிறைய உழைக்கிறீர்கள். அலுவலக வேலையுடன் தொடர்கதையும் (அதுவும் கனமான கரு) எழுதிக்கொண்டு கிடைத்த நேரத்தில் மற்றவர் படைப்புகளையும் வாசித்து பின்னூட்டங்களில் முதல்வராக திகழ்ந்துகொண்டு, இப்போது அறிவுரைக் கதைகளும் எழுதுகிறீர்கள். தொடரட்டும், உங்கள் பங்களிப்பு.

சிவா.ஜி
24-06-2010, 06:34 AM
எனக்குக் கிடைக்கும் எல்லா ஓய்வு நேரத்தையும் மன்றத்தில் செலவழிப்பதைத்தான் கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகிறேன் கீதம். ஒருநாள்கூட மன்றம் வந்து உங்களைவரையும் பார்க்கவில்லையென்றால்... அன்று வெறுமையை உணர்வேன்.

இது என் சுய சந்தோஷம், அதனால் என் பங்களிப்பில் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி கீதம்.

Akila.R.D
24-06-2010, 06:54 AM
ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் படைப்பு....

மேலும் கதைகளை படிக்க ஆவலுடன் காத்திரிக்கிறோம்....

சிவா.ஜி
24-06-2010, 08:57 AM
ரொம்ப ரொம்ப நன்றிங்க அகிலா.

சிவா.ஜி
24-06-2010, 09:57 AM
ஆறுவது சினம்


ராமசுந்தரம் ஒரு ஆசிரியர், அதுவும் தமிழாசிரியர்....அவருக்கு இத்தனைக் கோபம் ஆகாது. வீட்டிலும் தன் ஆசிரிய மிடுக்கைக் காண்பிப்பார். இது சரியில்லை அது சரியில்லை என தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து மனைவியை திட்டித் தீர்த்துவிடுவார். ஒரே மகள் கயல்விழி அப்பாவைக் கண்டாலே பயந்து நடுங்குவாள். தான் பணியாற்றும் பள்ளியில் சேர்க்காமல்...வேறு தனியார் பள்ளியில் தன் மகளைச் சேர்த்திருந்தார்.

இருந்தாலும், ஒவ்வொருநாளும் அவளுக்கு தானே தமிழை பாடமெடுப்பார். உச்சரிப்பு சரியில்லையெனில் பிரம்புதான் பேசும். அவரது மனைவி கதறுவார். சின்னப் பெண்தானே...வளர்ந்தால் சரியாகிவிடுமென்று சொன்னாலும் கேட்கமாட்டார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என பழமொழி சொல்லுவார்.

பள்ளியிலோ கேட்கவே வேண்டாம். வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றாலோ...செய்யுளைச் சரியாக சொல்லவில்லையென்றாலோ...வகுப்பில் பேசினாலோ...பிரம்பால் வெளுத்துவிடுவார். அதிலும் அந்தப் பிரம்பை...மாணவ மாணவிகளையே காசு கொடுத்து வாங்கி வரச் சொல்லுவார். எந்தப் பிரம்பும் ஒரு வாரத்துக்கு மேல் உடையாமலிருந்ததில்லை.

அன்று ஒரு மாணவன்....எழுதியிருந்த செய்யுளில் பல எழுத்துப்பிழைகளைப் பார்த்து, ஆத்திரம் தலைக்கேற, அந்த மாணவனைப் புரட்டியெடுத்துவிட்டார்...பிரம்பால்..அடிக்கும்போது குணிந்ததில் அந்த மாணவனின் கண்ணோரத்தில் பட்டு...சதை கிழிந்துவிட்டது. ரத்தம் ஒழுக அவன் நின்றதையும் பொருட்படுத்தாமல் பிரம்பை தூக்கி வீசிவிட்டு, ஓய்வறைக்கு வந்துவிட்டார்.

மற்ற மாணவ மாணவிகள்தான் அடுத்த வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த வேறொரு ஆசிரியரைக் கூட்டி வந்துக் காட்டி...மருத்துவமனைக்கு அழைத்துப்போக வைத்தார்கள்.

மாலையில் வீடு திரும்பியவர் கயல்விழி தலையில் பெரியக் கட்டுடனும், முகமெல்லாம் வீக்கத்துடனும் இருந்ததைப் பார்த்துப் பதறினார்.

"அய்யய்யோ..என்னம்மா என்ன இது...என்ன ஆச்சு..?"

" வீட்டுப்பாடம் எழுதலன்னு அவளோட கிளாஸ் டீச்சர் அடிச்சிருக்காங்க....பிரம்பு பலமாப் பட்டு மண்டை உடைஞ்சுடிச்சி...நாலு தையல் போட்டிருக்கு..."

சொல்லிவிட்டு அவரை அமைதியாய், தீர்க்கமாய்ப் பார்த்தார் அவரின் மனைவி.

தாங்க முடியாத கோபத்தில்...

"எவன் அவன்...என் பொண்ண இப்படி காட்டுமிராண்டி மாதிரி அடிச்சது. இப்பவே போய் அவனை உண்டு இல்லன்னு பண்ணிடறேன்"

என ஆத்திரத்தோடு கிளம்பியவரைத் தடுத்து,

"நில்லுங்க....உங்க மகளை அடிச்சதுக்கு...அவரை அடிப்பீங்களா...அப்ப இன்னைக்கு நீங்க அடிச்சு ரத்தகாயம் ஏற்படுத்தின பையனோட அப்பாவும் உங்களை அடிக்க வந்தா என்ன செய்வீங்க.....எனக்கு எப்படித் தெரியுன்னு பாக்கறீங்களா....அந்தப் பையனோட அப்பா அம்மா வந்திருந்தாங்க....உங்களை மாதிரி அடிக்கிறேன், புடிக்கிறேன்னு குதிக்கல..ஆசிரியர்ன்னா...பசங்களை அடிச்சுத் திருத்தறதுல தப்பில்ல....ஆனா...தயவுசெஞ்சு...ஆத்திரத்தோட அடிக்க வேண்டான்னு ஐயா கிட்ட சொல்லுங்கம்மா....கொஞ்சம் தவறியிருந்தா பையனோட கண்ணே போயிருக்கும்.....அப்படீன்னு சொல்லிட்டுப் போனாங்க....ஆத்திரம் கண்ண மறைக்கக்கூடாதுங்க....அவ்வையை சொல்லித்தர்ற நீங்க அவங்க சொன்னதை ஏன் கடைபிடிக்க மாட்டேங்கறீங்க...."

நிதானமாய்த்தான் சொன்னார் அவரது மனைவி...ஆனால்...இதயத்தில் ஈட்டி பாய்ச்சியதைப்போலிருந்தது தமிழாசிரியருக்கு.

அடுத்தநாள் பள்ளிக்குப் போனதும் முதல்வேலையாய் அந்தப் பிரம்பை உடைத்து தூக்கி எறிந்தார்.

ஆதி
24-06-2010, 10:46 AM
கதை நல்லா இருக்குங்கண்ணா, ஆனால் யாதார்த்தமில்லை..

அவரின் குணத்துக்கு பொண்ணையும் முதலில் ரெண்டு வெளு வெளுத்திருப்பார் அப்புறம் தான் என்ன னு கேட்டிருப்பார்..

வேற மாதிரி கதையை நகர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.. சினம் என்றவுடன் ஒரு கோவக்காரரை காட்டிவிட்டீங்க, இது வழக்கமான சினமா கெட்க்னிக்.. ஓய்வு பெற்ற ரணுவக்காரர் எந்நேரமும் பச்சை சட்டை போட்டிருப்பது மாதிரி..

பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா, பாடலில் ஔவை சொல்லுவாளே ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

இதுதான் கரு அண்ணா, எவ்வளவு பெரிய கோவமும் ஒரு நாள் ஆறும்.. ஆனால் இது பின்னே நிறைய விஷயம் இருக்கு.. உறும் கோவத்தால் உண்டாகிற இழப்புக்கள் பல.. தொடருங்கள் அண்ணா..

சிவா.ஜி
24-06-2010, 11:44 AM
அதெப்படி ஆதன்...தலையிலக் கட்டோட துவண்டுபோய் இருக்கிற குழந்தையை வெளுக்க முடியும்....? கோவக்காரரை அப்படித்தானே காட்ட முடியும்.

நான் இதுல சொல்ல வந்தது....இவர் அடிச்சு மிகப்பெரிய காயம் ஆனதுக்கப்புறமும்...அந்தப் பையனோட பெற்றோர்..நியாயமாய் வரக்கூடியக் கோபத்தைக்கூடக் காட்டாமல்....ஆத்திரம் புத்தி மட்டு...என்பதை ஆசிரியருக்கே உணர்த்தியதைத்தானே....

தனக்கு வரும் கோபத்தைப்போல அந்த மற்றொரு ஆசிரியரும் கோபப்பட்டதால் தன் மகள் மண்டையுடைந்து நிற்கிறாள் என்பதுகூட உறைக்காமல்...அப்போதும் கோபப்படும் அவர்....தான் அடித்தப் பையனின் பெற்றோர் செய்த நன்னயம் கண்டுதானே திருந்துகிறார்.

சினம் தனிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன் ஆதன்.

கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

ஆதி
24-06-2010, 11:55 AM
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..

என்பதால் தான் இந்த கேள்வியே அண்ணா, நான் பார்த்திருக்கேன் இப்படி பலரை.. அடிப்பட்டிருப்பதை பார்த்து எங்க போய் ஏறி குதிச்ச எருமமாடே என்று முதலில் சாத்து சாத்துவாங்க அப்புறம் தான் என்ன னு கேப்பாங்க.. ( எங்கப்பா அப்படித்தான் :D, ஆனால் அஎங்கப்பா மட்டுமே இல்லை... )

அதனாலத்தான் சொன்னேன் அவர் குணத்துக்கும் பதற்றத்துக்கும் பொருந்ததலை என்று..

//சினத்தை தனிக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கேன் ஆதன்//

ஆத்திச்சூடி சினம் தனிவது என்று தானே சொல்கிறது..

ஆறுவது சினம் என்பதற்கும் கதையிலுள்ள கருத்துக்கும் வித்யாசமிருக்குங்கண்ணா...

ஆறுவது சினத்தை ஆழ்ந்து யோசித்தால் உங்க முயற்சி சிறப்பாகும் என்பதே என் கருத்து..

சிவா.ஜி
24-06-2010, 12:04 PM
புரியுது ஆதன். பலநாள் கோபம் ஒருநாளில் தீரும். பரம்பரை பரம்பரையாக வஞ்சம் வைத்து ஆத்திரத்திலிருந்தாலும்...அந்தக் கோபம் என்றாவது ஒருநாள் தீரும் அப்படீங்கறதுதான். ஆனா....இங்க நான் கொடுத்திருக்கறது...முதல் பக்கத்துல கொடுத்த விளக்கத்துக்காகத்தான்.

தணிக்கப்படவேண்டியது கோபம். அதைத்தான் சொன்னேன்.

மேலும்....நீங்க சொல்ற நடைமுறை புரியுது. அது சாதாரணமாய் அடிபட்டு வந்திருந்தால் சட்டெனக் கோபம் வரும். பெண்குழந்தை...தலையில் கட்டோடு...சரி...சரி...திரும்பத் திரும்ப அதையே சொல்ல வேண்டாம்.

எதார்த்தம்...நான் வழக்கமாய் எழுதும் கதைகளில் இல்லையெனில் திருத்திக்கொள்வேன். ஆனால்...இங்கு வேறுமாதிரியாய் எழுதுகிறேன். என் பாணியை விட்டு எழுதும் கதைகள். இதில் அதிகமாய்...எதார்த்தத்தை எதிர்பார்க்கமுடியாது.

சிறிதானக் கதை...சின்ன அறிவுரை....ஆத்திச்சூடியின் வாசகத்துக்குப் பொருந்தும் கரு. இதுதான் நான் இங்கே வைப்பது.

ஆதி
24-06-2010, 12:24 PM
//சிறிதானக் கதை...சின்ன அறிவுரை....ஆத்திச்சூடியின் வாசகத்துக்குப் பொருந்தும் கரு. இதுதான் நான் இங்கே வைப்பது. //

இதனால் தான் நான் விவாதமே பண்றேன், உங்களுக்கு தெரியாத நான் கதை பகுதி பக்கமே வர்றாதவனு..

நான் ஏன் இவ்வளவு விவாதிக்கிறேன்னா.. வழக்கமான நீதி கதைகளுக்கு ஆத்திச்சூடி கதைகளுக்கும் ஒரு வித்யாசம் வேணும் என்றுத்தான்..

மக்களோட வாசிப்பு திறன் அதிகமாய்டுச்சு, நீங்க கதையை ஆறம்பிச்சவுடன் முடிவை கணிச்சுடுவாங்க, ஆத்திச்சூடி எல்லாருக்கும் முன்பே தெரியும், அதன் அர்த்தமும், இதனால் தான் இது சவாலான விஷயம், இவ்வளவுக்கும் மேல் எழுத்தாளன் செய்ய வேண்டியது வழக்கத்தை உடைத்து ஆத்திச்சூடியின் அர்த்தத்தை இன்னும் ஆழமா ஆக்க முனைவதே..

அதாவது ஆறுவது சினம் என்று படிச்சா இனி சிவா அண்ணாவோட கதை ஞாபகம் வரனும்..

இந்த திரிக்கும் பின்னூட்டமிட்டதோடு இந்த கதையோட கனம், தாக்கம் எல்லாம் மறைஞ்சுடக் கூடாது..

நாளைக்கு நான் யாருக்காவது "ஆறுவது சினம்" பொருள் சொல்லும் போது இந்த கதையை சொல்லனும்..

சரி விஷயத்துக்கு வர்றேன்..

ஆறுவது சினம்.. இதை ஆறு அது சினம் என்று பிரிக்கலாம்..

இப்ப பொருள் மாறும்..

ஆறு - கரைகளை பிளந்து ஓடக் கூடியது.. சினமும் அப்படித்தானே உறவுகளை பிளக்கும்..

இப்படி ஆத்திச்சூடியை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்துணர்ந்து எழுதினும் நீங்க என்றே ஆசைப்படுறேன்..

சிவா.ஜி
24-06-2010, 02:57 PM
சரி ஆதன்.. இந்தக் கோணத்துலயும் எழுதறேன். கனமான கரு வேண்டாமே என நினைத்தேன். ஆனால்...நீங்கள் சொல்வதிலும்....உண்மை இருக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வேறு அர்த்தங்களை எடுத்துக்கொள்ளலாம்.

நான் ஏழாவது வாக்கியத்துக்கு நீங்கள் முன்பே சொன்ன பொருளைத்தான் எடுத்துக் கையாளலாமென்றிருந்தேன். அதை இரண்டாவதற்கே செய்துவிடுகிறேன்.

உங்க அன்பான, அக்கறையுடனான கருத்துக்கு மிக்க நன்றி ஆதன்.

கலையரசி
27-06-2010, 05:48 AM
ஆத்திச்சூடி கதைகள் என்ற பெயரில் துவங்கியிருக்கும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டு. தலைப்புக்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை எழுத முனைந்திருக்கும் செயல், உங்கள் கற்பனை வளத்தையும், உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கிருக்கும் அபார நம்பிக்கையையும் காட்டுகிறது.

கதையைப் படிக்கும் சாக்கில் சிறு வயதில் படித்த ஆத்திச்சூடி பாடல்களையும் நினைவுக்குக் கொண்டு வர இது உதவும்.

இனி முதல் கதை பற்றி:-
நல்லதொரு கருத்தைச் சொல்லும் கதை. பசித்தவனுக்குத் தான் பசியின் கொடுமை தெரியும். அது போல செருப்பில்லாமல் கொளுத்தும் வெயிலில் தார்ச் சாலையில் நடப்பவனுக்குத் தான் அந்த வேதனையும் வலியும் புரியும். எனவே சக மாணவனுக்கு ஒன்று வாங்கித் தர நினைக்கும் மனித நேய கருத்தைக் கொண்ட முதல் கதையை மிகவும் பாராட்டுகிறேன். வாழ்க உங்கள் மனித நேயம்!

இரண்டாவது கதை: ஆறுவது சினம்.

இது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஏனெனில் மகள் கயல் விழிக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் போதும் ,தந்தை பிரம்பைத் தான் பயன்படுத்துகிறார். எனவே பெண் அடிபட்டு வந்து நிற்கும் போது மட்டும், அடித்த ஆசிரியர் மேல் அவர் கோபப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை.
மகள் மேல் அதிகமான அன்பு வைத்துள்ள தந்தையாகவும் அவள் மீது துரும்பு விழுவதைக் கூட சகிக்க முடியாத தந்தையாகவும் அவரை அறிமுகப்படுத்தியிருந்தால் இதை நம்பலாம்.
தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் தான் வெளிப்படையாக என் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். சரியான விமர்சனம், நம் எழுத்து பண்பட உதவும் என்று நான் நம்புவதால் வெறுமனே பிரமாதம், அற்புதம் என்று புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.

மற்றபடி உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். தொடருங்கள்.

சிவா.ஜி
27-06-2010, 05:55 AM
வெளிப்படையானக் கருத்தை எப்போதுமே வரவேற்பவன் நான் கலையரசி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என் எழுத்தின் மேல் அக்கறையுள்ள*வர்களுக்காகத்தான் நான் எழுதுகிறேன் என்பதில் பெருமிதமடைகிறேன்.

எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒருவரைக் காட்டினேன். தான் செய்யும் தவறைக்கூட உணர்ந்து கொள்ளாத முன்கோபி என்பதைத்தான் ராமசுந்தரம் மூலமாக காட்ட நினைத்தேன். ஆனால் புரிந்துகொள்ளப் பட்ட விதத்தைப் பார்க்கும்போது....சரியாய் வெளிப்படுத்தாதது என் தவறு என நினைக்கிறேன்.

அதே போல ஆறுவது சினம் என்பதற்கான ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டேன்...ஆதன் சொன்னதைப்போல மறு கோணத்தில் இன்னொரு கதை எழுதுகிறேன். அது உங்களையும், மற்றவரையும் திருப்தி படுத்தினால் சந்தோஷம்.

மிக்க நன்றி சகோதரி.

செல்வா
27-06-2010, 07:37 AM
காத்திருக்கிறேன்................ :)

சிவா.ஜி
27-06-2010, 09:45 AM
சிங்காரம் யாரோ ஒருவருடன் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பதை செல்வம் பார்த்தபோது அவன் தன் இருசக்கர வாகணத்தில் பயணித்துக்கொண்டிருந்தான். சட்டென்று வேகத்தைக் குறைத்து அவர்களுக்கு அருகே சென்று நிறுத்திவிட்டு சிங்காரத்தை நோக்கிப் போனான். நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரை சந்திக்கப்போகிறான். செல்வத்தின் அப்பாவின் பால்ய நண்பர். 40 வருடங்களாக அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தவர்கள். சிங்காரத்தை செல்வமும் அவனுடைய தம்பி தங்கைகளும் பெரியப்பா என்றே அழைக்குமளவுக்கு நெருக்கம்.

செல்வம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த சிங்காரம்...இவன் எதற்கு என்னிடம் வருகிறான் என்று அவனைப் பார்ப்பது அவருக்குப் பிடித்தமானதல்ல என்பதைப்போல முகம் மாறினார். அவருக்கு எதிரே வந்து நின்ற செல்வம்,

"நல்லாருக்கீங்களா பெரியப்பா"

என்றதும், சிங்காரம் 'யாருடா உனக்குப் பெரியப்பா" என்றே கேட்டுவிட வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை பொது
இடத்திலிருக்கிறோம் என்ற நாகரீகம் கருதி...தொண்டைக்குள்ளேயே அடக்கிவிட்டார். ஆனால் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

"ஏன் பெரியப்பா...இன்னும் எங்க அப்பாமேல இருக்கிற கோபம் போகலையா...?"

செல்வத்தின் கேள்வியைக் கேட்டதும் அந்த சம்பவம் நடந்தது அவரது நினைவில் ஆடியது....

சிங்காரத்துக்கு அவசரமாய் கொஞ்சம் பணம் தேவைப்பட்டபோது நேராய் வந்து செல்வத்தின் அப்பாவிடம் கேட்டார். அந்த சமயத்தில் அவ்வளவு பணம் அவரிடமில்லாததால், தன் மனைவியின் சங்கிலியை பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்து வங்கியில் அடமானம் வைத்துப் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். மனைவி வீட்டிலில்லாத நேரத்தில் வேண்டாம்...அவர் வந்ததும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுக் கொடுத்தால் போதுமென்று சிங்காரம் சொல்லியும் கேட்காமல்..வற்புறுத்திக் கொடுத்தார். இரண்டு மணிநேரம் கழித்து உடம்பெல்லாம் ஆத்திரத்தில் நடுங்க..வீட்டுக்கு வந்த சிங்காரம் செல்வத்தின் அப்பாவைப் பார்த்து,

"எவ்ளோநாளா என்னை அவமானப்படுத்தனுன்னு நெனைச்சே...ச்சே..நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சங்கூட நினைச்சுப் பாக்கல...டூப்ளிகேட் நகையைக் கொடுத்து என்னை அத்தனைப் பேருக்கு முன்னால அவமானப்படுத்தினதுமில்லாம...போலீஸ்ல வேற புடிச்சுக் குடுக்கப் பாத்தியே....மேனேஜர் கால்ல கையில வுழுந்து..மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வந்தேன். இனிமே இனிமே உன் ச*ங்காத்த*மே வேண்டாம்....பணமேயில்லன்னு சொல்லியிருந்தாக் கூட வேற எடத்துலக் கேட்டிருப்பேன். இப்படி நம்பவெச்சுக் கழுத்தறுத்திட்டியே...போதுண்டா சாமி...நண்பன்னு நம்பனதுக்கு எனக்கு இந்த அவமானமே போதும்"

என்று இரைந்துவிட்டு, செல்வத்தின் அப்பாவுடைய எந்த சமாதானத்தையும் கேட்காமல் போய்விட்டார். திரும்ப அவர் வீட்டுக்குப் போன அப்பாவை...பார்க்கக்கூட விருப்பமில்லாமல்..கதவை அறைந்து சாத்தி அவமானப் படுத்தியனுப்பிவிட்டார். இரண்டொரு நாளில் வீட்டைக் காலி செய்துகொண்டு வேறு இடத்துக்குப் போனவர்...நான்கு வருடங்களுக்குப் பிறகு செல்வத்தை இப்போதுதான் பார்க்கிறார்.

தன் நினைவுகளிலிருந்து மீண்ட சிங்காரம், அந்த நினைவுகள் கொடுத்த வெறுப்புணர்வோடு...செல்வத்தைப் பார்த்து...

"எதிரியைக் கூட மன்னிச்சுடலாம்...உங்கப்பன மாதிரி ஆள மன்னிக்கவே முடியாது....உன்கிட்ட என்ன பேச்சு...நீ இடத்தை காலி பண்ணு"
வார்த்தைகளில் மிகுந்த வெறுப்பையும், கோபத்தையும் காட்டிய சிங்காரம், தன்னுடன் இருந்தவரிடம்,

"அப்ப நான் கிளம்பறேங்க பசுபதி. அப்புறம் பாக்கலாம்.."

சொல்லிவிட்டுக் கிளம்பியவரின் கையை மென்மையாய் பிடித்து நிறுத்தி...

"உங்க கோபம் புரியுது பெரியப்பா....அப்பா அந்த காரியத்தை தெரிஞ்சி செய்யல...அது டூப்ளிகேட்டுன்னு அவருக்கே தெரியாது"

"அவருக்கே தெரியாதா என்னடா கதை விடற...உங்கம்மாவோட நகை...உங்கப்பாவுக்கு டூப்ளிகேட்டுன்னு தெரியாதா....அதுசரி...நீ உங்கப்பனுக்குத்தானே வக்காலத்து வாங்குவ...உன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல கையை விடு"

"பெரியப்பா தயவுசெஞ்சி புரிஞ்சுக்குங்க நீங்க வந்துக் கேட்டதும் சட்டுன்னு எடுத்துக் குடுத்துட்டாரு....ஆனா அதுக்கு ஒரு வாரம் முன்னால எங்க பாட்டி வீட்டுக்குப் போன எங்கம்மா...அவங்க அண்ணன் பொண்ணு கல்யாணம் நாலு பவுன் சங்கிலியால தடைபட்டிருக்குன்னு தெரிஞ்சி..தன் கழுத்துலருந்ததை கழட்டிக் குடுத்துட்டாங்க. எங்க மாமாவும் கூடிய சீக்கிரம் அதே மாதிரி சங்கிலி செஞ்சுக் குடுத்தடறதா சொல்லியிருக்காரு. அதுவரைக்கும் அப்பாவுக்குத் தெரிய வேண்டான்னு, அதே மாதிரி டூப்ளிகேட்டை செஞ்சு போட்டுக்கிட்டு வந்திருக்காங்க. அது தெரியாம எங்கப்பா...அந்த நகையை உங்களுக்கு குடுத்துட்டார். நீங்க கோவிச்சுக்கிட்டு வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுப் போனதுக்கப்புறம்...மாசக்கணக்குல புலம்பிக்கிட்டேயிருந்தார். இந்த நாலு வருஷமா எங்கம்மாக்கிட்ட பேசறதையே நிறுத்திட்டார் தெரியுமா உங்களுக்கு?"

செல்வம் சொன்னதைக் கேட்டதும்...அதிர்ந்து நின்றார் சிங்காரம். கோபத்துல யோசிக்கிற சக்தியையே தொலைச்சிருக்கோமே... எவ்வளவு மட்டமாய் நடந்திருக்கிறோம் நாம் என வெட்கினார். செல்வத்தை ஆதுரமாய் தோளைப் பிடித்து,

"அப்பா நல்லாருக்காரா...நான் நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்கறேன்னு சொல்லு....என் தம்பியையும், தம்பிப் புள்ளைங்களையும் பாத்து வருஷக் கணக்காச்சி."

தழுதழுத்தக் குரலில் சொன்ன சிங்காரம்...பொது இடம் என்றுக்கூட நினைத்துப் பார்க்காமல் கண்ணீர் சிந்தினார். செல்வம் போனதும், சிங்காரத்தைப் பார்த்து பசுபதி,

"உங்களுக்கு ஒரு தம்பியிருக்கறதா நீங்க சொல்லவேயில்லை..."
என்றதும்,

"ஆமாங்க என்னோட ஒரே தம்பி... ஒரு சின்ன மனஸ்தாபம்...தப்பா புரிஞ்சிக்கிட்டேன் தப்பு என்னோடதுதான்...மனசுலருந்த கோபமெல்லம் இப்ப ஆறிப்போச்சு....சந்தோஷமா இருக்கேன்"

மலர்ச்சியுடன் சொன்னார்.

கீதம்
27-06-2010, 09:40 PM
கதை நல்லாயிருக்கு அண்ணா. செல்வம் இதமாய்ப் பேசியும் எடுத்துச் சொல்லியும் பெரியப்பாவின் கோபத்தைக் குறைத்துவிட்டான். ஆனால் ஒரு சந்தேகம்! இதேபோல் தன் அப்பாவுக்கு அம்மாவின் மீதிருக்கும் கோபத்தையும் குறைத்திருக்கலாமே? நான்கு வருடமாய் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பேச்சுவார்த்தை இல்லையென்பதை எந்த மகனால்தான் தாங்கிக்கொள்ள இயலும்? ஒருவேளை சிங்காரத்தின் கோபத்தைக் குறைப்பதற்காக அவ்வாறு ஒரு பொய் சொன்னானா?

ஒளவை சொன்னதுபோல் எல்லாக் கோபமும் ஒருநாள் ஆறும். சில சமயம் நீண்டபிரிவுகூட அந்தவேலையைச் செய்யும். இதை என் உறவினர்களிடமும் கண்டிருக்கிறேன். தொடர்ந்து வரும் கதைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

சிவா.ஜி
28-06-2010, 05:55 AM
நடந்த உண்மையைச் சொல்லி சிங்காரத்தை சமாதானப்படுத்துவது செல்வத்தால் இயன்றது...அதேபோல*...நண்பன் அவமானப்படத் தான் காரணமாகக் காரணம் மனைவி தன்னிடம், தான் செய்ததை மறைத்ததுதான் என்ற கோபத்தை ஆற்ற முயன்றிருக்கலாம்... வெற்றியும் பெற்றிருக்கலாம்...அல்லது முடியாமல் விட்டிருக்கலாம்...நான் அதனுள் அதிகம் செல்லவில்லை.

எல்லாக் கோணங்களிலும் போகவில்லை கீதம். அடுத்த கதையில் இப்படிக் கேள்வி எழுவதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி தங்கையே.

பாரதி
28-06-2010, 01:40 PM
நினைத்தபடி கதை வடிக்கும் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன்.
நல்லெண்ணங்களை விதைக்கும் கதைகளை எத்தனை முறை படைத்தாலென்ன..? கதை நன்று, கூடவே கீதம் அவர்களின் பார்வையின் படி பார்த்திருக்கலாம் என்பதும் தோன்றத்தான் செய்கிறது சிவா.
ஆத்திச்சூடி கதைகள் உங்களுக்கு மகுடத்தை சூட்டட்டும்.

சிவா.ஜி
28-06-2010, 02:36 PM
நன்றி பாரதி. உங்கள் கருத்துக்களை கவனத்தில் வைத்துக்கொள்கிறேன்.

கலையரசி
29-06-2010, 02:13 PM
அசராமல் புதிய கோணத்திற்கேற்ப உடனேயே கதை எழுதிய உங்கள் கற்பனைத்திறனைக் கண்டு வியப்படைந்தேன். கதை நன்றாயிருந்தது. தொடருங்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
29-06-2010, 02:20 PM
அப்படியொரு திறமை எனக்கிருக்கிறதென்ற் நீங்கள் சொன்னால்...அது நிச்சயமாய் உங்களைப் போன்றோரின் வெளிப்படையான விமர்சனங்களாலும், பின்னூட்டக் கருத்துக்களாலும்தான் கலையரசி.

அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி.

பா.ராஜேஷ்
29-06-2010, 02:31 PM
கதை நன்று அண்ணா... அது எப்படி பட்டு பட்டுன்னு புட்டு புட்டு எழுதறீங்க!!??

சிவா.ஜி
29-06-2010, 02:37 PM
எல்லாம் மன்றம் கொடுத்த பயிற்சிதான் ராஜேஷ். எனக்கு சிறந்த ஆசான்களையும், பாடங்களையும் கொடுத்தப் பள்ளி இது.

ரொம்ப நன்றி ராஜேஷ்.