PDA

View Full Version : அம்மாவின் ஆசை



கலையரசி
18-06-2010, 02:22 PM
எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது.

நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிவிட்டேன் இந்த ஒன்றைத் தவிர.

கார் வாங்கினால் யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து கார் வாங்கப் பயம். மேலும் என்னொருவன் சம்பளத்தில் பையன்களைப் படிக்க வைக்க வேண்டும். நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச் செலவு, வீட்டுக் கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப் பற்றிக் கற்பனை கூடச் செய்யமுடியவில்லை.

ஒரு வழியாகப் பையன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான் அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி நான் யோசிக்கத் துவங்கினேன். எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று வர கார் இருந்தால் தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க சரியென்று தலையாட்டி வைத்தேன். மேலும் என் கம்பெனியிலும் பெட்ரோல் செலவுக்கு மாதா மாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன். அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.

"அம்பாசிடர் கார் தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும்," என்ற மனைவியின் யோசனை சரியென்றே பட்டது எனக்கு. ஆனால் சின்னவன் ஒத்துக் கொள்ளவில்லை. "அந்தக் காரை வாங்குவதாயிருந்தால் நீங்க காரே வாங்க வேணாம்," என்றான் கோபத்துடன். "போர்டு கார் சூப்பராயிருக்கும். எல்லாமே ஆட்டோமாடிக். அதைத் தான் வாங்கணும்," என்றான் அவன். "வெளிநாட்டுக் கார் வேணாம்பா. நம்ம நாட்டுக் கம்பெனி கார் மாடல்களாப் பார்த்து அதுல ஒன்னு
வாங்கலாம்பா," என்ற பெரியவனின் யோசனை ஏற்கப்பட்டு, அதன்படியே ஒரு காரும் வாங்கியாகிவிட்டது.

அம்மாவைக் காரில் அழைத்துக் கொண்டு பக்கத்தில் எங்காவது சென்று வர வேண்டும்; சொந்தக்காரில் பயணம் செய்யும் போது அம்மாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கேட்டேன்:-

"அம்மா! முதன் முதலா இன்னிக்குச் சாயந்திரம் நம்மூர் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே திருநள்ளாறு கோவிலுக்குக் காரில போய்ட்டு வரலாம். வரீங்களாம்மா?"

"வேணாம்பா. நான் வரலை. நீங்கள்லாம் போய்ட்டு வாங்க. அடுத்த வாரம் உங்க அத்தையோட பேத்தி கல்யாணம் திருச்சியில நடக்குதில்லே. அதுக்கு நாமெல்லாரும் சேர்ந்து காரில போய்ட்டு வருவோம்".

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. காரையிலிருந்து திருச்சிக்குக் குறைந்தது நான்கு மணி நேரப் பயணம். மேலும் தற்சமயம் புதிதாகச் சாலை போடும் பணி வேறு நடைபெற்று வருவதால் தஞ்சையிலிருந்து திருச்சி வரை தூக்கித் தூக்கிப் போட்டுப் பயணம் செய்வதற்குள் நல்ல உடல்நிலையில் இருப்பவர்க்கே இடுப்பு கழன்று விடும். அம்மாவின் உடம்பு இந்தப் பயணத்தைத் தாங்குவது கடினம் என்று தோன்றியது.

"அதல்லாம் வேணாம்மா. அவ்ளோ தூரம் போறது ஆபத்து. உங்க உடம்புக்கு ஒத்துக்காது. அதுவுமில்லாம போன வருஷம் தான் அத்தையோட பேரன் கல்யாணத்துக்கு நான் போயிட்டு வந்திருக்கேன். இந்தத் தடவை நானும் போறதா இல்லே. மொய் பணத்துக்கு ஒரு D.D. எடுத்து தபாலில அனுப்பிடலாம்னு இருக்கேன்" என்றேன் தீர்மானமாக.

ஆனால் அம்மா விடுவதாய் இல்லை. "இல்லப்பா. நான் போயே ஆகணும். சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்து எவ்ளோ வருஷமாச்சி. அவங்க எல்லாரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு. இந்த ஒரு தடவை மட்டும் மாட்டேன்னு
சொல்லாம என்னை அழைச்சிட்டுப் போப்பா. எனக்கு ஒன்னும் ஆகாது. கவலைப்படாதே. என் பேரனுங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத் தான் நான் சாவேன்"

என் கைகளைப் பிடித்துக் கெஞ்சிய அம்மாவைப் பார்க்க எனக்கு வியப்பாயிருந்தது. அவரது கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று சின்னக் குழந்தையின் உற்சாகத்துடன் எல்லாருக்கும் முன்னதாக எழுந்து வெந்நீர் போட்டுத் தலைக்குக் குளித்து விட்டுப் பட்டுப்புடவை உடுத்தி ஞாபகமாய் தம் இரட்டை வடச் சங்கிலியை எடுத்துப் போட்டுக் கொண்டு காரில் வந்தமர்ந்த அம்மாவைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நேற்று வரை நான் பார்த்த நோயாளி அம்மாவா இவர்? தலைமுடியைக் கூட சீவ முடியாமல் முக்கிக் கொண்டும் முனகிக் கொண்டும் படுத்துக் கிடந்தவர், உறவுகளைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சியில் நான் சின்னப்பிள்ளையில் பார்த்த பழைய அம்மாவாக உருமாறி விட்டாரா என்ன?

மனைவியை முன் சீட்டில் அமரச் சொல்லிவிட்டு பின் சீட்டில் அம்மாவை என் மடியில் படுக்கச் சொல்லி பயணம் செய்து ஊர் வந்து சேர்ந்தோம். பல வருடங்களாகப் பார்க்காமலிருந்த தம் உறவுகளைப் பார்த்த போது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அம்மாவைப் பார்த்தச் சொந்தக்காரர்களும் அவர் மேல் அன்பு மழையைப் பொழிந்தனர்.

"வாங்க அத்தாச்சி! எப்படி இருந்த நீங்க இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டீங்க? ஒங்களுக்கு ஒடம்பு சொகமில்லேன்னு கேள்விப்பட்டு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சி! வந்து பார்க்கணும்னு தான் ஆசை. இந்தப் பாவிக்குத் தான் வர முடியல. இது யாரு? ஒங்க மவனா? சின்னப் பையனா இருந்தப்பப் பார்த்தது. அவங்கப்பாவை அப்படியே உரிச்சி வைச்சிருக்கே! அவங்கப்பாவைத் தான் சீக்கிரமா ஆண்டவன் கொண்டு போயிட்டான். அவர் ஆயுசையும் சேர்த்து ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்."

திருமணத்துக்கு வந்திருந்த யார் யாரிடமோ அம்மா என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்தார்.

"தம்பி! இவர் யாரு தெரியுமா? ஒங்கச் சித்தப்பாவோட, தங்கச்சியோட, நாத்தனாரோட கொழுந்தனார் பையன்."

எனக்குத் தலை சுற்றியது. நல்லவேளையாக அம்மா அத்துடன் நிறுத்திக் கொண்டார். 'அப்படியானால் உனக்கு அவர் என்ன முறை வேண்டும்?' என்று கேள்வி கேட்டிருந்தால் என் கதி அம்பேல் ஆகியிருக்கும். அவர் சொன்ன உறவு முறை புரிந்தது போல் வேக வேகமாகத் தலையாட்டி வைத்தேன். அந்த உறவுக் காரரும் என் நிலையிலேயே இருந்தார் என்பது அவர் திரு திரு என்று விழிப்பதிலேயே கண்டு கொள்ள முடிந்தது.

"இவன் என் பையன். பெரிய கம்பெனியில மேனேஜரா இருக்கான். லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். இப்ப ஏழு லட்சம் போட்டு எனக்காகவே கார் வாங்கியிருக்கான். வாசல்ல படகு மாதிரி தெருவை அடைச்சிக்கிட்டு நிக்குதே, அது இவனோட கார் தான்"

பேசிய அத்தனை உறவுகளிடமும் அம்மா என்னைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். பேச்சினூடே என் காரையும் பற்றிச் சொல்ல மறக்கவில்லை. எனக்குத் தர்ம சங்கடமாயிருந்தது. சத்தம் போட்டு இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த அம்மாவை அணுகி,

"ரொம்பக் கத்திப் பேசாதீங்க. நெஞ்சு வலி வந்துடுச்சின்னா அப்புறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க," என்று எச்சரித்துப் பார்த்தேன். ஆனால் அம்மா என் வார்த்தையைச் சட்டையே செய்யவில்லை.

"அம்மா, கல்யாணம் முடிஞ்ச கையோட சாப்பிட்டுட்டுக் கிளம்பிடலாம். அப்பதான் பொழுதோட ஊர் போய்ச் சேர முடியும். நாளைக்குக் கண்டிப்பா நான் கம்பெனி போயாகணும். முக்கியமான வேலையிருக்கு"

"சரிப்பா. உடனே கிளம்பிடலாம்"

நாங்கள் கிளம்பிய போது மாமாவும் அத்தையும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.

"ரொம்பச் சந்தோஷம் அண்ணி. உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கிறதினாலே நீங்க எங்க வரப்போறீங்கன்னு தான் நாங்க நினைச்சோம். நீங்களும் வந்து மணமக்களை வாழ்த்துனதிலே எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றாள் அத்தை.

அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அத்தையின் கவனம் முழுவதும் என் காரின் மீதே படிந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை.

"நீங்க ஆசைப்பட்டபடி ஒங்கச் சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்ததுல சந்தோஷம் தானே ஒங்களுக்கு?"

மாலை ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்த பிறகு அம்மாவிடம் கேட்டேன்.

"சொந்தக்காரங்களைப் பார்த்ததுல எனக்கு மகிழ்ச்சி தான் தம்பி. ஆனா அதை விட பெரிய சந்தோஷம் உங்கத்தைக்கு முன்னாடி நானும் ஒரு நாள் காரில போய் இறங்கணும்னு நான் செஞ்சிருந்த வைராக்கியமும் நிறைவேறிடுச்சி. எங்க நான் சாகறதுக்குள்ளே நீ கார் வாங்க மாட்டியோ, என் சபதத்தை நிறைவேத்தாம நான் போய்ச் சேர்ந்துடுவேனோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்".

"சபதமா? என்னது அது? எங்கிட்ட நீங்க சொல்லவேயில்லியே?"

"அப்ப நீ சின்னப்புள்ளை. ரெண்டு வயசிருக்கும். நேத்தி நடந்தது மாதிரி இன்னும் என் நினைவில அப்படியே பதிஞ்சிருக்கு. திருச்சியில ஒரு கல்யாணத்துக்கு ஒன்னையும் அழைச்சிக்கிட்டு நானும் ஒங்கப்பாவும் போயிருந்தோம்.

ஒங்கத்தை வாக்கப்பட்டது நல்ல வசதியான குடும்பம். அந்தக்காலத்துல நம்ப சொந்தக்காரங்களிலேயே அவங்கக்கிட்ட தான் காரு இருந்துச்சி. அத்தை வீட்டுக்குப் பக்கத்துல தான் கல்யாண மண்டபங்கிறதால, மத்தியானமே அவங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

சாயங்காலம் மண்டபத்துக்குக் கிளம்பறப்ப, "தங்கச்சி, நம்ப காரை ரெண்டு டிரிப் அடிக்கச் சொல்றேன். நாம எல்லாரும் காரிலேயே மண்டபத்துக்குப் போயிடலாம்,"னு ஒங்க மாமா தான் சொன்னாரு.

அவரு ரொம்ப நல்லவரு. சரின்னுட்டு நான் காரில ஏறப் போன சமயம், காரில உட்காந்திருந்த அத்தை, "உங்களுக்கெல்லாம் காரில இடமில்லை, நீங்க பஸ்சில வாங்க,"ன்னு முகத்திலடிச்சது மாதிரி சொல்லிட்டுப் படாருன்னு கதவைச் சாத்திட்டா. எனக்கு ரொம்ப அவமானமாப் போயிட்டுது. அழுகையும் ஆத்திரமும் தாங்க முடியல..

"சரி. சரி. அழாதே. சின்ன வயசிலேர்ந்தே அவளுக்கு வாய்த்துடுக்கு அதிகம். அதோட இப்ப பணத்திமிரும் சேர்ந்துடுச்சி. பொறுமையா இரு. நமக்கும் ஒரு காலம் வராமலாப் போயிடும்?"னு அப்பா தான் என்னைச் சமாதானம் செஞ்சாரு.

அவளுக்கு முன்னாடி அவ மூக்கில விரல் வைக்கிற மாதிரி நானும் ஒரு நாள், பெரிய காரில போய் இறங்கணும்னு அன்னிக்கு முடிவெடுத்தேன். இத்தினி வருஷமா என் மனசில இருந்த வைராக்கியம் இன்னிக்கு உன்னால நிறைவேறிடுச்சி. இனிமே நான் நிம்மதியாச் சாவேன்."

அம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.

"இதுக்காகத் தான் நீங்க கார் வாங்க விரும்புறீங்கன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா, கடனை உடனை வாங்கியாவது ஒங்கச் சபதத்தை உடனே நிறைவேத்தியிருப்பேனேம்மா"

"நீ அப்படி செய்வேன்னு எனக்குத் தெரியும்பா. ஆனா என் வைராக்கியத்தை நிறைவேத்தணுங்கிறதுக்காக கடன் வாங்கி வரவுக்கு மேல செலவு செஞ்சு நீ கடன்ல மூழ்கிப் போறதை நான் விரும்பல. அததுக்கு ஒரு நேரம் வரணும்ல. இப்பத்தான் என் ஆசை நிறைவேறிடுச்சே. அது போதும் எனக்கு. உங்கத்தை வைச்ச கண் வாங்காம நம்ம காரைப் பார்த்துக்கிட்டே இருந்தாளே, அதைக் கவனிச்சியா? இப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்".

"ம்.ம். கவனிச்சேன். சரிம்மா! நெஞ்சு வலி அதிகமா இருந்தா மறைக்காம சொல்லிடுங்க. டாக்டர்கிட்ட ஒரு தடவை போயிட்டு வந்திடலாம்." வழக்கமாக போடும் மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டுக் கேட்டேன்.

"டாக்டர் கிட்டப் போனாலும் அவரு புதுசாவா மாத்திரை எழுதப் போறாரு? இதையே தான் எழுதிக் கொடுப்பாரு.வேணாம் தம்பி. என்னைப் பத்திக் கவலைப்படுறத உட்டுட்டு போய்ப்படுத்து நிம்மதியாத் தூங்கு. காலையில எழுந்திருச்சி ஆபிசுக்குப் போகணும்."

"சரிம்மா"

பயணம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு இருந்தாலும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். என்னென்னவோ நினைவலைகள்! அம்மாவின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இதற்குத் தான்அம்மா அவ்வளவு பிடிவாதமாக ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். மனதிலிருந்த வலிமை பயணம் செய்ய தேவையான சக்தியை அவரது உடலுக்கு அளித்தது போலும். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அந்தச் சம்பவம் ஏற்படுத்திய வடு, நீறு பூத்த நெருப்பாய் அம்மாவின் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறது.

இதைப்பற்றி அம்மா முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கலாம். ஒரு வேளை தம் குமுறலை வெளியே கொட்டிப் புலம்பி விட்டால் மனதுக்கு ஆறுதல் கிடைத்து தாம் கொண்ட வைராக்கியத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய் விடும் என அம்மா நினைத்தாரோ? இந்த யோசனைகளில் ஆழ்ந்திருந்த நான் எப்போது தூங்கினேனோ தெரியவில்லை.

"என்னங்க ஏந்திரிச்சி வந்து மாமியைப் பாருங்களேன். பாலை வைச்சிக்கிட்டு ரொம்ப நேரமாக் கூப்பிடறேன். கண்ணையே தொறக்க மாட்டேங்கிறாங்க,"

அதிகாலையில் மனைவி வந்து எழுப்பவே, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடினேன்.அம்மா அசைவற்று இருந்தார். பக்கத்துத் தெருவிலிருந்த டாக்டரைக் கொண்டு வந்து காட்டினேன். தூக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்து விட்டதாகச் சொன்னார் அவர்.

என் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை ஒரு கையால் துடைத்தபடியே அம்மாவைப் பார்த்தேன்.

'நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம். எத்தனையோ முறை செத்துச் செத்து உயிர் பிழைத்தவர் தாம் அம்மா. இவ்வளவு நாட்கள் தம் வைராக்கியத்தை நிறைவேற்றத்தான் அம்மா தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடியிருக்கிறார் என்று இப்போது எனக்குப் புரிந்தது.

அம்மாவை அவ்வளவு தூரம் அழைத்துப் போயிருக்கக் கூடாது; தலை குளிக்க அனுமதித்திருக்கக் கூடாது; உறவுக்காரர்களிடம் ஓய்வின்றிப் பேசவிட்டிருக்கக் கூடாது, இதெல்லாம் தாம் அம்மாவின் சாவுக்குக் காரணம் என்பன போன்ற எண்ணங்களால் குற்றவுணர்வு தோன்றி என்னைப் பெரிதும் அலைக்கழித்தாலும் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்தோம் என்ற எண்ணம் மனதுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது.


(கதைப்போட்டியில் ஏற்கெனவே நீங்கள் படித்தது தான் என்றாலும் உங்களது மேலான விமர்சனம் வேண்டி இங்குப் பதிகிறேன். நிறை குறைகளைத் தயக்கமின்றிச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்)

கண்ணன்
18-06-2010, 02:36 PM
கதை ஓட்டம் மிக அருமை.
கண்டிப்பாக ஏதாவது பத்திகைக்கு அனுப்புங்கள்.
வாழ்த்துக்கள்.

- கண்ணன்

அம்மாவின் ஆசை இருந்தால்தானே எதுவும் நடக்கும். இல்லையென்றால் நாம் பிறந்திருப்போமா? :)

பாரதி
18-06-2010, 03:17 PM
சிலபேரின் வைராக்கியம் நம்மை வியக்கத்தான் வைக்கிறது!

எடுத்த சபதத்தை நடத்த வேண்டும் என்ற ஏக்கம் இருந்தாலும் பையனுக்கு எந்த இன்னலும் தந்து விடக்கூடாது என்றெண்ணும் அந்த ஒன்றே போதும் தாய்மையின் பாசத்தை சுட்ட..!

சொல்ல வந்ததை நேரடியாக கூறிய வகையிலும் சிறப்புதான். அம்மாவின் மறைவு இல்லாவிட்டாலும் கூட இக்கதை சிறப்பாகத்தான் இருந்திருக்கும் என்றாலும் மனதில் நிற்க வைக்க இப்படி ஒரு முடிவு வரக்கூடும் என்பதும் எதிர்பார்ததுதான்.

மீண்டும் ஒரு முறை வாழ்த்திப்பாராட்டுகிறேன். எழுதுங்கள்.

சிவா.ஜி
18-06-2010, 04:55 PM
நிறைவாய் அமைந்த கதை. எழுத்தோட்டம்...சீராக இருக்கிறது. அம்மாவின் வைராக்கியம் தெரியாமலேயே மகன் கார் வாங்கினாலும்...அம்மா ஏன் உறவினர் திருமணத்திற்கு காரிலேயேப் போக வேண்டுமென சொல்கிறார் என்பதை அம்மாவின் மூலம் தெரிந்துகொள்ளும் போது....அடடா...அப்படியென்றால் முன்னமே வாங்கியிருக்கலாமே என்ற மகனின் ஆதங்கமும், மகன் கஷ்டப்படக்கூடாது என நினைத்த தாயின் உள்ளமும் ரொம்ப அழகா வெளிப்பட்டிருக்கு.

உறவினர் கல்யாண இடத்தில் நிகழும் நிகழ்வுகள் வெகு எதார்த்தம். நிச்சயம் பரிசுக்குரிய கதைதாங்க கலையரசி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

மதி
18-06-2010, 05:26 PM
ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது. அம்மாவின் வைராக்கியமுன் அதற்காக மகனை கஷ்டப்படுத்தக்கூடாத எண்ணமும் அழகா படம்பிடிச்சிருக்கீங்க. அம்மாவின் செயல்களுக்கான காரணம் இறுதியில் தெரியவரும் இடம் அழகு.

ஆசை எல்லாம் நிறைவேறிய திருப்தியோடு அம்மாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்.. நல்லதொரு கதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் கலையரசி..!

அமரன்
18-06-2010, 05:45 PM
.

உறவினர் கல்யாண இடத்தில் நிகழும் நிகழ்வுகள் வெகு எதார்த்தம். நிச்சயம் பரிசுக்குரிய கதை தாங்க கலையரசி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுவே பரிசுக்குரிய கதைதானே சிவா. :)

அமரன்
18-06-2010, 05:50 PM
வைரம் எப்படி உருவாகிறது.

அது போலத்தான் மென்மைகள் அடுக்குகளாகப் படிந்து வைராக்கியம் பிறக்கிறது.

ஔவையும் சொல்லி இருக்கார்.

வேல் பஞ்சுப் பொதியில் பாயாது என்று..

அம்மாவின் இளகிய மனதில் அவமானம் அழுத்தமாகப் படிந்து வியாதி்களைக் கொடுத்து கடைசியில் ஜெயிக்க வைத்து விட்டது அம்மாவின் ஆசைச் சபதத்தையும் கதைப்போட்டியில் உங்களையும்..

எவ்வளவோ அவமானங்களை வாங்கிக் கட்டிய என் அம்மாவிடமும் இப்படி ஏதாவது ஆசை இருக்குமோ... தோன்றத்தான் செய்தது எண்ணம்..

இராது... லாம்பின் கண்ணாடிக் கூடான அம்மாவிடம் அப்படி ஏதும் இராது... இப்படியும் அடுத்த கணம் எழத்தான் செய்தது..

பா.ராஜேஷ்
22-06-2010, 05:40 PM
முதல் பரிசு வாங்கின கதைதானே... மிக அருமை மேடம்... உங்கள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி...

அன்புரசிகன்
23-06-2010, 12:49 AM
நானும் நினைப்பேன். வெளிநாட்டில் ஃபெராரி ஓடினாலும் வராத பெருமை ஊரில் கொரெல்லா ஓடினாலே வந்திடும். அதுவும் தாயை ஏற்றிக்கொண்டு வலம் வந்தால்.... 2006ல் எனக்கு ஒரு ஆசை இருந்தது. என் உழைப்பில் ஊருக்குப்போய் ஹீரோ ஹொண்டா சி பி ஸட் வாங்கி அப்பாவோட ஊர்சுத்த வேண்டும் என்று. கனவாகவே போய்விட்டதாக அறிகிறேன்.

கதையில் தாயின் மன அங்கலாய்ப்பும் யதார்த்தமான மன வைராக்கியமும் எம் வாழ்வில் ஏற்பட்ட பல விடையங்களை நினைவூட்டின... அழகாக தாய் சேயின் மனவோட்டத்தை காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்...

பொதுவாக வயதானவர்களுக்கு வீட்டில் முடங்கிக்கிடப்பது தான் நோய்.. 5 வருடங்களுக்கு முன் படுத்த படுக்கையாக இருந்த எனது அம்மம்மா நாம எல்லோரும் ஒரு விசேசத்திற்காக ஊர் சென்றபோது எமக்கு பிடித்தவற்றை சமைத்தே தந்தார். பலருக்கும் வியப்பு.. எப்படி இந்த மனுசியால முடியுது என்று.... அதே துடிப்பை மீண்டும் நான் சென்ற போது கண்டேன்.

எல்லாம் மனந்தான் என பெரியவர்கள் இதை தான் சொல்கிறார்களோ...

சரண்யா
23-06-2010, 02:38 AM
ஆம் மிக அருமையாக இருந்தது..
அதுவும் மகனை அறிமுகம் படுத்திய தாய் தம்பி என்று செல்லமாக அழைப்பது ரொம்ப யதார்த்தமாக சமீபத்தில என் அண்ணனை என் அப்பா ஒரு கல்யாணத்தில் உறவுகளிடம் அறிமுகப்படுத்தியது சட்டென்று நினைவுக்கு வந்தது..
நல்வாழ்த்துகள்..
எழுத்து வழியே ஓர் பந்தம்...
அது என்று உங்களுக்கு சொந்தம்..எனக்கூறி.
இன்னும் நிறைய எழுதுங்க.
நன்றி.

விகடன்
23-06-2010, 04:48 AM
கதையோட்டம் சீராக இருக்கிறது. அனைத்து இடங்களிலும் தெளிவான காட்சியமைப்புக்கள்.

கதையில் ஓரிடத்தில் சபதம் செய்திருந்ததாக, தாய் கூறியதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் அது தமக்குத்தானே செய்துகொண்ட சபதம்/ வைராக்கியம் என்பது பின்னர்த்தான் தெரிந்துகொண்டேன்.

கதை அற்புதம்.
பாராட்டுக்கள்

கீதம்
24-06-2010, 06:10 AM
முதல் பரிசு பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அக்கா. இக்கதையைப் படித்தபோதே மனம் நெகிழ்ந்தது. என் அப்பாவும் தான் ஓய்வுபெற்ற பிறகு கார் வாங்கினார்கள். அதற்குப் பின்னாலும் ஒரு சபதம் இருந்ததை அபோது அறிந்தேன். இத்தனை வருடங்கள் அதை வெளிக்காட்டாத அவரது உள்மனக்குமுறலை எண்ணி மலைத்தேன்.

என் அப்பாவுக்கு தம் மகளைத் திருமணம் செய்விக்க நினைத்தாராம், என் அப்பாவின் மாமா. பெரும்பணக்காரரான அவர் மகளை மணக்க அப்பா சம்மதிக்கவில்லையாம். அப்போது அவர் என் அப்பாவிடம்,'உன் வாழ்நாளில் காரில் சவாரி செய்யும் பாக்கியம் கூட கிடைக்காது. என் மகளை மணந்துகொண்டால் உனக்கு கார் வாங்கித்தருவேன்' என்றாராம். ஆனால் அப்பா, வரதட்சணை வாங்காமல் ஒரு ஏழைப்பெண்ணை மணமுடிப்பது என்ற தன் கொள்கையில் உறுதியாக நின்று என் அம்மாவைக் கைப்பிடித்தாராம். என்றாவது ஒருநாள் என் உழைப்பால் கார் வாங்குவேன் என்று மனதுக்குள் சபதமிட்டாராம். இதில் ஒரு வேதனை என்னவென்றால் இதைக்காண அந்த மாமா இப்போது உயிருடன் இல்லை என்பதுதான்.

எத்தனை பேர் தங்கள் சபதங்கள், வைராக்கியங்களை அவரவர் வாழ்நாளில் நிறைவேறக்காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்? நல்லதொரு கருவைக் கதையாக்கி அளித்த உங்களைப் பாராட்டுகிறேன்.

xavier_raja
24-06-2010, 09:09 AM
கடைசி காலத்தில் மனதில் ஏதாவது குறை இருந்தால் அது நிறைவேறும் வரை நம் உயிர் நம்மை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் பிரியாது.. அம்மா கதைகள் எவ்வளவு வந்தாலும் படிக்க சலிக்காது..

கலையரசி
26-06-2010, 09:35 AM
[QUOTE=கண்ணன்;476211]கதை ஓட்டம் மிக அருமை.
கண்டிப்பாக ஏதாவது பத்திகைக்கு அனுப்புங்கள்.
வாழ்த்துக்கள்.
- கண்ணன்

வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணன். இக்கதை தமிழ்மன்றச் சிறுகதை போட்டிக்காகவே எழுதப்பட்டு பரிசும் வாங்கியது. எனவே இது முழுக்க முழுக்க தமிழ் மன்றத்துக்கே உரிமையான ஒன்று.
உங்கள் யோசனைப்படி வேறு கதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன். மிக்க நன்றி கண்ணன்.

கலையரசி
26-06-2010, 09:48 AM
பாரதி[/B];476214]சிலபேரின் வைராக்கியம் நம்மை வியக்கத்தான் வைக்கிறது!

"அம்மாவின் மறைவு இல்லாவிட்டாலும் கூட இக்கதை சிறப்பாகத்தான் இருந்திருக்கும் என்றாலும் மனதில் நிற்க வைக்க இப்படி ஒரு முடிவு வரக்கூடும் என்பதும் எதிர்பார்ததுதான்.

மீண்டும் ஒரு முறை வாழ்த்திப்பாராட்டுகிறேன். எழுதுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க பாரதி. உங்கள் வாழ்த்தும் பாராட்டும் தாம் என்னை மேலும் எழுத ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு என் ஸ்பெஷல் நன்றி!

கதையில் அம்மாவுக்கு இப்படிப்பட்ட முடிவு வரப் போகிறது என்பதைத் தெரிவிக்கத் தான் கதையின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது:

'எவ்வளவோ மருத்துவம் பார்த்தும், அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது'.

அந்த வைராக்கியம் நிறைவேறியவுடன், உயிரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த அம்மாவின் மனவலிமையும் நீர்த்துப் போய் விடுகிறது. எனவே தான் அந்த முடிவு. மேலும் நீங்கள் கூறியது போல் மனதில் நிற்க வைக்க இந்த முடிவும் தேவைப்பட்டது.
மீண்டும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

கலையரசி
26-06-2010, 09:54 AM
நிறைவாய் அமைந்த கதை. எழுத்தோட்டம்...சீராக இருக்கிறது.

உறவினர் கல்யாண இடத்தில் நிகழும் நிகழ்வுகள் வெகு எதார்த்தம். நிச்சயம் பரிசுக்குரிய கதைதாங்க கலையரசி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

நிச்சயம் பரிசுக்குரிய கதை தான் என்பதை உங்கள் வாயால் கேட்ட போது நானடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. உங்களது மனமார்ந்த பாராட்டுக்கு அகம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலையரசி
26-06-2010, 09:56 AM
ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது. அம்மாவின் வைராக்கியமுன் அதற்காக மகனை கஷ்டப்படுத்தக்கூடாத எண்ணமும் அழகா படம்பிடிச்சிருக்கீங்க. அம்மாவின் செயல்களுக்கான காரணம் இறுதியில் தெரியவரும் இடம் அழகு.

ஆசை எல்லாம் நிறைவேறிய திருப்தியோடு அம்மாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்.. நல்லதொரு கதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் கலையரசி..!

நல்லதொரு எழுத்தாளரிடமிருந்து கிடைத்த இந்த விமர்சனம் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மதி!

கலையரசி
26-06-2010, 10:01 AM
வைரம் எப்படி உருவாகிறது.

அது போலத்தான் மென்மைகள் அடுக்குகளாகப் படிந்து வைராக்கியம் பிறக்கிறது.

ஔவையும் சொல்லி இருக்கார்.

வேல் பஞ்சுப் பொதியில் பாயாது என்று..

அம்மாவின் இளகிய மனதில் அவமானம் அழுத்தமாகப் படிந்து வியாதி்களைக் கொடுத்து கடைசியில் ஜெயிக்க வைத்து விட்டது அம்மாவின் ஆசைச் சபதத்தையும் கதைப்போட்டியில் உங்களையும்..

எவ்வளவோ அவமானங்களை வாங்கிக் கட்டிய என் அம்மாவிடமும் இப்படி ஏதாவது ஆசை இருக்குமோ... தோன்றத்தான் செய்தது எண்ணம்..

இராது... லாம்பின் கண்ணாடிக் கூடான அம்மாவிடம் அப்படி ஏதும் இராது... இப்படியும் அடுத்த கணம் எழத்தான் செய்தது..

உங்கள் வாக்கு பலித்ததற்கு உங்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்லவேண்டும் அமரன்.
அம்மாவிடம் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.
ஏனென்றால், குடும்பத்தினர் நலனுக்காக தம் சுகங்கள் யாவையும் தியாகம் செய்யும் அம்மா, தம் ஆசைகளையும் அவ்வளவு சீக்கிரம் வெளியிட மாட்டார். எனவே அம்மா மனதில் புதைந்திருக்கும் ஆசைகளைப் பிள்ளைகள் தாம் வெளிக் கொணர வேண்டும்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அமரன்!

கலையரசி
26-06-2010, 10:03 AM
முதல் பரிசு வாங்கின கதைதானே... மிக அருமை மேடம்... உங்கள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி...

என் எழுத்துக்களைத் தவறாமல் படித்து உற்சாக வார்த்தைகளால் பின்னூட்டமிடும் உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி ராஜேஷ்!

கலையரசி
26-06-2010, 10:10 AM
[QUOTE=அன்புரசிகன்;476850]நானும் நினைப்பேன். வெளிநாட்டில் ஃபெராரி ஓடினாலும் வராத பெருமை ஊரில் கொரெல்லா ஓடினாலே வந்திடும். அதுவும் தாயை ஏற்றிக்கொண்டு வலம் வந்தால்.... 2006ல் எனக்கு ஒரு ஆசை இருந்தது. என் உழைப்பில் ஊருக்குப்போய் ஹீரோ ஹொண்டா சி பி ஸட் வாங்கி அப்பாவோட ஊர்சுத்த வேண்டும் என்று. கனவாகவே போய்விட்டதாக அறிகிறேன்.

கதையில் தாயின் மன அங்கலாய்ப்பும் யதார்த்தமான மன வைராக்கியமும் எம் வாழ்வில் ஏற்பட்ட பல விடையங்களை நினைவூட்டின... அழகாக தாய் சேயின் மனவோட்டத்தை காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்...

உண்மைதான். உங்கள் ஆசை கனவாகவே போய்விட்டதை அறிந்து மனம் மிகவும் நெகிழ்ந்தது. அப்பா, அம்மாவின் ஆசைகளை அவர்கள் மனங்குளிர நிறைவேற்றும் வாய்ப்பு எல்லா மகன்களுக்கும் கிடைப்பதில்லை.
உங்கள் அம்மம்மா செயல் வியப்பளிப்பதாக இருந்தது. உடல் நலிவுற்ற போதிலும் அவர்களுக்கிருந்த மனவலிமை உடலுக்குத் தேவையான சக்தியை அளித்திருக்கிறது போலும்!

உங்கள் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

கலையரசி
26-06-2010, 10:12 AM
[QUOTE=சரண்யா;476855]ஆம் மிக அருமையாக இருந்தது..
அதுவும் மகனை அறிமுகம் படுத்திய தாய் தம்பி என்று செல்லமாக அழைப்பது ரொம்ப யதார்த்தமாக சமீபத்தில என் அண்ணனை என் அப்பா ஒரு கல்யாணத்தில் உறவுகளிடம் அறிமுகப்படுத்தியது சட்டென்று நினைவுக்கு வந்தது..
நல்வாழ்த்துகள்..

கதை மிகவும் யதார்த்தமாக இருந்தது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி சரண்யா! உங்கள் வாழ்த்துக்கு என்றும் நன்றியுடையவளாக இருப்பேன் சரண்யா!

கலையரசி
26-06-2010, 10:14 AM
கதையோட்டம் சீராக இருக்கிறது. அனைத்து இடங்களிலும் தெளிவான காட்சியமைப்புக்கள்.
கதை அற்புதம்.
பாராட்டுக்கள்

அற்புதம் என்ற உங்கள் பாராட்டு என் மனதைக் குளிர்வித்தது. இந்த ஒரு வார்த்தையே என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வீராடன்!

கலையரசி
26-06-2010, 10:16 AM
முதல் பரிசு பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அக்கா. இக்கதையைப் படித்தபோதே மனம் நெகிழ்ந்தது.
எத்தனை பேர் தங்கள் சபதங்கள், வைராக்கியங்களை அவரவர் வாழ்நாளில் நிறைவேறக்காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்? நல்லதொரு கருவைக் கதையாக்கி அளித்த உங்களைப் பாராட்டுகிறேன்.

இந்தக் கதை தாயைப் போல் உன் தந்தை வாழ்விலும் ஒரு நிகழ்வு இருந்திருக்கிறது என்பதை அறிந்த போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
உன் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதம்!

கலையரசி
26-06-2010, 10:18 AM
கடைசி காலத்தில் மனதில் ஏதாவது குறை இருந்தால் அது நிறைவேறும் வரை நம் உயிர் நம்மை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் பிரியாது.. அம்மா கதைகள் எவ்வளவு வந்தாலும் படிக்க சலிக்காது..

உண்மை தான் ராஜா! அதைத் தான் மனவலிமை என்று சொல்கிறார்கள்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜா!