PDA

View Full Version : பசுமைவேட்டை....!!!:(நிறைவுப்பகுதி)Pages : 1 [2]

சிவா.ஜி
11-07-2010, 06:44 AM
உண்மைதான் அமரன். நண்பனாக இருந்தாலும், பத்திரிக்கயாளனாய் மாறும்போது..சாய்வுத்தன்மை இருக்கக்கூடாது...அதனாலேயே...பிடிக்காதவர்களாகிவிடுகிறார்கள்.

தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி பாஸ்.

சிவா.ஜி
11-07-2010, 06:46 AM
உண்மை பேட்டியில் கேட்கப்பட்டக் கேள்விகள் பாரியின் மூலமாக நான் கேட்க நினைத்தவை போலவே இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுதான் அதை அப்படியே இணைத்தேன் ராஜேஷ்.

ஊக்கப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
11-07-2010, 06:47 AM
நன்றி செல்வா. கதையில் ஒரு தீர்வை சொல்ல முயன்றிருக்கிறேன்...பார்ப்போம்.

சிவா.ஜி
11-07-2010, 06:48 AM
மிக்க நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
11-07-2010, 06:49 AM
ரொம்ப நன்றி மதி.

சிவா.ஜி
11-07-2010, 06:50 AM
மிக உண்மையானக் கருத்துங்க கீதம். கதையில் ஒரு தீர்வைக் காணலாம்...ஆனால் நிஜத்தில்...

நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என நினைக்கத்தான் முடியும். நன்றிங்க* தங்கையே.

சிவா.ஜி
11-07-2010, 02:49 PM
அத்தியாயம்:13


போன தாக்குதலில் ஏற்பட்ட முழுச்சேதம் சல்வா ஜூடும் கும்பலை ஆக்ரோஷமாக்கியிருந்தது. அதனால் இந்தமுறை அதிக அளவில் ஆயுதங்களுடனும், ஆட்களுடனும் தாக்க வந்திருந்தார்கள். எதிர்பாராத தாக்குதல்களை எதிர்கொள்ளும் தைரியம் இருந்ததால், போராளிகளும், கிராமத்து மலைவாழ் மக்களும் அதே ஆக்ரோஷத்துடன் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். ஆனாலும்...அவர்களது நவீன ரக துப்பாக்கிகளுக்கு முன்னால்...மலைவாழ் மக்களின் வில் அம்புகளும், போராளிகளின் ஆயுதங்களும் தாக்குப் பிடிக்க முடியாமல்...கொஞ்சங்கொஞ்சமாக வலுவிழந்துகொண்டிருந்தது.

சமுதாயக்கூடத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த பாரியைப் பார்த்துவிட்ட ஒரு அழிப்புக் கும்பலைச் சேர்ந்தவன்...அவனை நோக்கி ஓடி வந்தான். எங்கிருந்தோ வந்த ஜெய்ராம் சடாரென்று அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினான்.விழுந்த வேகத்தில் அவன் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. ஓடி வந்து அதை எடுத்தப் பாரி..அதற்குள் ஜெய்ராமின் மேல் தாவியேறி தாக்கிக்கொண்டிருந்தவனை பின் மண்டையில் துப்பாக்கியால் தாக்கினான். அலறிக்கொண்டே கீழே விழுந்தவனைப் புரட்டிப் போட்டுவிட்டு எழுந்த ஜெய்ராம், பாரியின் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டு,

“மறைவான இடத்துக்கு ஓடிப்போயிடுடா”

என்றதும்,

“நீ...”

“என்னைப் பத்திக் கவலைப் படாத...நீ ஓடு சீக்கிரம்...”
சொல்லி முடிப்பதற்குள், வேறு ஒருத்தனால் சரமாரியாக சுடப்பட்டான்.

‘ஜெய்ராம்’

கத்திக்கொண்டே அவனை நெருங்கிய பாரியை..ரத்தவெள்ளத்திலிருந்த ஜெய்ராம், பின்னாலிருந்து சுடுபவனுக்கு முதுகைக் காட்டி மறைத்துக்கொண்டே...

“சீக்கிரமா ஓடுடா...”

பாரி ஓடினான். ஜெய்ராம் சரிந்து விழுவதைப் பார்த்துக்கொண்டே ஓடியவன் கால் தடுக்கி கீழே விழுந்தான். எழுந்தவன் அங்கிருந்த உடலைப் பார்த்ததும் அதிகபட்சமாய் அதிர்ந்தான். கண்களைத் திறந்த நிலையில் கையில் வில்லுடன் புலியா இறந்து கிடந்தாள். ஒரு நொடி தயங்கியவன்...மீண்டும் ஓட்டமெடுத்தான். கொஞ்சதூரம்தான் ஓடியிருப்பான்....எங்கிருந்தோ வந்த தோட்டா ஒன்று விலாப்பகுதியில் துளைத்து நுழைந்தது. தூக்கிவீசப்பட்டவனைப் போல பக்கத்திலிருந்த பள்ளத்துக்குள் விழுந்தான்...சரசரவென்று சறுக்கியபடியே வெகு ஆழத்துக்கு போனான்.

பாரி தோட்டா பாய்ந்து சரிந்து பள்ளத்தில் விழுவதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேபான்ஷூ...சல்வாஜூடும் ஆட்களின் கை ஓங்குவதை உணர்ந்து மெல்ல பின்வாங்கினார். எஞ்சியிருந்தப் போராளிகளுடன்...விரைவாக ஓடி மறைந்தார்.

பிராந்தியத் தலைவர் முன்பே சில போராளிகளின் பாதுகாப்போடு தப்பித்துவிட்டிருந்தார்.

பாதுகாப்பான தூரம் வந்ததும் தேபான்ஷூ திரும்பிப்பார்த்தார்....கருகருவென புகை கிளம்பியது தெரிந்தது. குடிசைகளுக்கு நெருப்பு வைத்திருக்கிறார்கள்...அந்த நெருப்பிலேயே...ஜெய்ராமும், புலியாவும் வெந்துபோவார்கள்...பாரியின் உடலை...திரும்பப் பார்க்ககூட முடியாத இடத்தில் விழுந்திருக்கிறான்...முதல் முறையாக அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.சோட்டுவுக்காகவும் ஜெய்ராம், புலியா, பாரிக்காகவும்...அழுதார்.

அவர்கள் வாழ்க்கையில் இதைப்போன்ற இழப்புகள் சாதாரணமானவை....ஆனால்...பாரியுடன் இத்தனை நாட்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள்...அவன் சொன்ன சிலக் கருத்துக்கள்...அவரை சிந்திக்க வைத்தது. தங்களை பார்க்க வந்தவனைக் காப்பாற்ற*முடியவில்லையே என்ற வேதனையும் மிகுந்தது. தங்களுடையத் தோடாவினாலேயே சோட்டு இறந்தானென்பது இன்னும் அதிக வலியைக் கொடுத்தது...


அடுத்த நாள் சென்னையில் பூவிழி தவிப்போடு இருந்தாள். அவர்களது பத்திரிக்கை அலுவலகத்துக்குக் கிடைத்த ஒரு செய்தி அவளை கவலைப்பட வைத்தது. நியம்கிரிப் பகுதியில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் இறந்துவிட்டதாகவும், அதில் ஒருவன் தமிழ் பேசுபவனாய் இருக்கலாமென்றும் அதில் சொல்லியிருந்தது. பதைபதைப்புடன் எழுந்து ஆசிரியரின் அறைக்குப் போனாள். அவரிடம் விஷயத்தை சொல்லுமுன்பே..அவள் வந்ததற்கானக் காரணமாயிருந்த செய்திக்குறிப்பை அவரும் படித்திருந்தார்.

“சார்...”

“நானும் பாத்தம்மா....கொஞ்சம் இரு...அவனா இருக்காது. நான் விசாரிக்கிறேன். நீ போய் உன் சீட்ல உக்காரு. அப்புறம் கூப்பிடறேன்.”

தன் இருக்கைக்கு வந்தவள் நிலைகொள்ளாமல் தவித்தாள். கடவுளை வேண்டிக்கொண்டாள்.கைவிரல்களை முறுக்கிக்கொண்டாள்...அவளை அதிக நேரம் அந்த நிலையில் வைக்காமல்...மேசைத் தொலைபேசி அலறியது. எடுத்துப் பேசியவள், வைத்துவிட்டு எழுந்து போனாள்.

“வாம்மா பூவிழி...அது பாரி இல்ல...ஏதோ ஒரு சின்னப்பையன். 13, 14 வயசுதான் இருக்குமாம். அவன்கிட்டருந்த MP3 ப்ளேயர்ல தமிழ் பாட்டுங்க இருந்திருக்கு...அதனால அவன் தமிழா இருக்கலாம்ன்னு சந்தேகப் படறாங்க...இன்னும் விவரம் கிடைக்கலங்கறாங்க...இந்த வயசு துப்பாக்கித் தூக்கற வயசாம்மா...ச்சே...நெனைச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு....துப்பாக்கியத் தூக்கி என்ன சாதிச்சாங்க இவங்க...மேதா பட்கர் ஆயுதத்தையா எடுத்தார்...அவர் பேச்சை அரசாங்கம் கேக்கலையா..? சரி போம்மா..”

நகர்ந்தவளை அழைத்து,

“அந்தப் பயகிட்டருந்து ஏதாவது போன் வந்துச்சா...?”

“இல்ல சார். போய் ஒரு வாரத்துக்கு மேல ஆகுது...காட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவனோட ஃப்ரெண்டு வீட்லருந்துக் கடைசியா பண்ணான்...அதுக்கப்புறம் எந்தக் காலும் இல்லை...”

"என்ன பையன் அவன்...ம்...போனமா வந்தமான்னு இல்லாம...தப்பு பண்ணிட்டேன்..அவனை அனுப்பியிருக்கவே கூடாது. நான் என்ன சொல்றது...ரெட் மாஃபியா அது இதுன்னு சொல்லி என்னை டோட்டலா கன்வின்ஸ் பண்ணிட்டான்...சரி...நீ பயப்படாதம்மா....வந்துருவான்...எமகாதகப் பய...’

அன்று மாலை அலுவலகம் முடிவதற்குள் ஆசிரியருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர்...பதட்டமானார். விவரங்களைக் கேட்டுக்கொண்டார். குறிப்பேட்டில் அதைக் குறித்துக்கொண்டார். அழைப்பைத் துண்டித்துவிட்டு அயர்ச்சியாய் அமர்ந்தார். சற்று நெரம் கழித்து, தொலைபேசியை எடுத்து பூவிழியை அழைத்தார்.

“சொல்லுங்க சார்”

அறைக்குள் வந்ததும் கேட்டாள்.

“நீ ஒரிசாவுக்குப் போக வேண்டியிருக்கும்மா...”

“என்ன சார் சொல்றீங்க...பாரிக்கு....ஏ...ஏதாவது...சார்...சொல்லுங்க சார்..”

“பதட்டப்படாத பூவிழி. பெர்ஹாம்பூர்ங்கற ஊர்ல இருக்கிற ஹாஸ்பிட்டல்லருந்து போன் வந்துச்சி. பாரியை அங்க அட்மிட் பண்ணியிருக்காங்க...சுயநினைவு இல்லையாம். அவன்கிட்ட இருந்த விசிட்டிங் கார்டை வெச்சு நம்ம ஆபீஸக் காண்டாக்ட் பண்ணியிருக்காங்க...பாரின்னு சொன்னதும், ஆப்பரேட்டர் அவன் லீவுல இருக்கறதா சொல்லியிருக்காங்க...அப்புறமாத்தான் எனக்கு கணெக்ட் பண்னாங்க...நீதான் போய்ப் பாத்து என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கனும்”

“அய்யய்யோ என்ன சார் ஆச்சு பாரிக்கு...சார் சுயநினைவு இல்லன்னா......விபரீதமா எதுவுமில்லையே...உண்மைய சொல்லுங்க சார்”

“விளக்கமா எதுவும் சொல்லலம்மா...விலாவுல குண்டு பாஞ்சிருக்கு...ஆனா இப்ப உயிருக்கு ஆபத்தில்லன்னு சொல்றாங்க..நீ உடனே கிளம்பு. இந்தா அந்த ஹாஸ்பிட்டலோட அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் இதுல இருக்கு. கேஷியர்கிட்ட பணம் வாங்கிக்க..நான் ட்ராவல்ஸ்ல சொல்லி புவனேஷ்வருக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடறேன். அங்கருந்து டாக்ஸி புடிச்சுக்க..”

மடமடவென சொல்லிவிட்டு..தொலைபேசியை எடுத்து சுழற்றினார்.அடுத்த அத்தியாயத்தில் நிறைவடையும்....

பாரதி
11-07-2010, 03:00 PM
அன்பு சிவா,
விட்ட இரு பாகங்களையும் இன்றுதான் படித்தேன். உண்மை பேட்டியை இணைத்தது சற்று வித்தியாசமாக இருந்தது உண்மைதான். ஆனாலும் கதையோட்டத்தில் தொய்வை ஏற்படுத்தியது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. மேலும் நீண்ட ஒரு தொடர்கதையை எழுத வேண்டும் என்ற உணர்வில் தொடங்கப்பட்ட கதை சட்டென்று முடியப்போவதாகத் தோன்றுகிறது.

தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
11-07-2010, 03:12 PM
பாரி அங்கே போனதே இப்படியான ஒரு பேட்டிக்காகத்தான் பாரதி. அது நீளமாக இல்லாதிருந்தால்...அதனை நியாயப்படுத்த முடியாது. அதுவுமில்லாமல்...நான் கேட்க நினைத்ததையே...அந்தப் பேட்டியாளரும் கேட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமளித்ததால் அதனை அப்படியே இணைத்தேன்.

மேலும்....இதனை...மற்ற* மசாலாக்கள் சேர்த்து நீட்டிக்கொண்டு போக விருப்பமில்லை. சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேன்...இனி முக்கியமான ஒன்றை இறுதி அத்தியாயத்தில் சொல்லி முடித்துவிடுகிறேன்.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி பாரதி.

கலையரசி
11-07-2010, 03:16 PM
கடந்த 28 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 51000 அரசியல் கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாங்கள் கடந்த ஏழு மாதங்களில் அவர்களில் 52 பேரைக் கொன்றிருக்கிறோம். அரசு, மார்க்சிஸ்ட்டுகளின் அராஜகங்களுக்குப் பதிலடியாகவே நாங்கள் இதைச் செய்தோம்.”

அப்படியானால், மார்சிஸ்ட்டுகளும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரிகளா?
பாரிக்கு உதவி செய்வதற்காகபோய் ஜெய்ராம் உயிரை விட்டுவிட்டானே என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. புலியாவின் இறப்பும் மனதை என்னவோ செய்கிறது.
உண்மையான பேட்டி மூலம் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. பாரி நல்லவிதமாய் குணமடைந்து வர வேண்டுமே!
இரண்டு பாகங்களும் விறுவிறுப்பாக இருந்தன. அடுத்த இதழில் முடியும் என்பதைப் படித்த போது பாரதி சொன்னது போல் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
நீண்ட கதையை நினைத்ததை விட சுருக்கமாய் முடிக்கிறீர்களோ?

மதி
11-07-2010, 04:12 PM
அடுத்த அத்தியாயத்தில் முடியப்போகுதா?.. சோட்டுவின் இறப்பிற்கு பின் ஜெய்ராம் புலியாவின் சாவும் அதிர்ச்சி அளித்தது..
உங்கள் முத்தாய்ப்பான முடிவுக்கு காத்திருக்கிறேன்..

சிவா.ஜி
12-07-2010, 06:50 AM
மாவோயிடுகளுக்கும், மார்க்ஸிஸ்டுகளுக்கும் ஆகாதுபோலத்தான் தெரிகிறதுங்க கலையரசி. புத்ததேவ் பட்டாச்சார்யா...மாவோயிஸ்ட்டுக்களை தீவிரமா வேட்டையாடனுன்னு நினைக்கிறார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இஸத்தை வைத்துக்கொண்டு....அவர்களும் குழம்பி, மக்களையும் குழப்புகிறார்கள்.

மேலும் நான் நீண்ட கதையாக எழுத தீர்மாணிக்கவேயில்லை. 12 அத்தியாயங்களில் முடிக்கலாமென்றிருந்தேன்...இப்போது கூடுதலாய் இரண்டு அத்தியாயங்கள் ஆகிவிட்டது.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றிங்க.

சிவா.ஜி
12-07-2010, 06:51 AM
ரொம்ப நன்றி மதி. ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள முடிக்கனும்...அடுத்து..உங்க கதைக்கு வந்து உக்காரனும்.

Nivas.T
12-07-2010, 10:31 AM
என்ன சிவா அண்ணா? :confused: கதைல வந்த முக்கியமான நல்ல கதாபாத்திரங்களை கொன்னுட்டீங்களே, கொடுமையும், பிரிவின் வலியையும் இப்படியா சொல்லணும். அதோட "அடுத்த அத்தியாயத்தில் நிறைவடையும்.... " சொல்லி நல்ல ரசிகர்களையும் கொல்ல போறிங்களே. ஒரு திரைப்படம் பார்த்த முழு திருப்தி எனக்கு.

சிவா.ஜி
12-07-2010, 11:49 AM
என்ன பண்றது நிவாஸ்....அவங்க சாவுதான் சில முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமாய் இருக்கப்போகுது.
தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றிப்பா.

செல்வா
12-07-2010, 12:53 PM
ஏன் இந்த அவசரம்னு தான் எனக்குக் கேக்க தோணுது.... :confused::confused::confused:

சிவா.ஜி
12-07-2010, 02:35 PM
இதுல எதுவும் அவசரமா இருக்கிற மாதிரி எனக்குத் தோணல செல்வா. சரியான இடத்துலதான் முடிக்கிறேன்னு நினைக்கிறேன். தொடங்கும்போதே...இப்படித்தான் முடிக்கனுன்னு நினைச்சுத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்.

பா.ராஜேஷ்
12-07-2010, 03:39 PM
சொல்ல வேண்டிய சேதியை மிக அழகாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்... ஆனாலும் இந்த பாகத்தில் நல்லவர்களை கொன்றதை ஏற்று கொள்ள முடியாது...
அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்..

கீதம்
12-07-2010, 10:55 PM
பலியாகும் உயிர்களில் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் அந்த மரணங்கள் நம்மை பாதிக்கின்றன. ஜெய்ராம், சோட்டு, புலியாவின் மரணங்கள் நம்மை பாதிப்பது இவ்வகையில்தான். ஆனால் நமக்குத் தெரியாத பலர் தங்கள் உயிரை இதுபோன்ற போராட்டத்துக்காக இழப்பதை நாம் கண்டுகொள்வதே இல்லை.

பாரியின் உடல்நிலை தேறி, தான் திரட்டிய தகவல்களையும், சந்திப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி நாட்டுவாழ் மக்களிடம் அப்போராளிகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்.

கதையோட்டம் மிகவும் அருமை. சம்பவங்களை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. மிகுந்த பாராட்டுகள் அண்ணா.

அன்புரசிகன்
13-07-2010, 12:17 AM
இழப்புக்கள் எதிர்பார்த்தது தான். காரணம் ஒரு அரசு ஒருவரை அழிக்க நினைத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை செய்ய முடியும். அதற்கு தான் சர்வதேச ரீதியில் ஒரு வார்த்தைப்பிரயோகம் உள்ளதே... பயங்கரவாத எதிர்ப்பு என்று. அமெரிக்கா முதல் இலங்கை இந்தியா வரை எவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல...கதை முக்கிய கட்டத்தை அடைந்துவிட்டது. இறுதிப்பாகத்திற்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா...

ஆதி
13-07-2010, 08:14 AM
சோட்டு மீண்டும் வாக்மேன் கேட்டப்ப தோணுச்சு ஏதோ கெட்டது நடக்கபோகுது னு, புலியா இறப்பையும் முன்பே கணித்தேன், அதிர்ச்சியாய் இருந்தது ஜெய்ராமின் இறப்புத்தான்..

பாரி அடிப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை மாற்றி இருக்கலாம், காரணம் அவன் திரட்டிய ஆவணங்கள் அவன் மயக்கமாக இருந்த நிலையில் அழிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது, மாவோயிஸ்ட்கள் இருக்கும் காட்டில் ஒருவன் அடிப்பட்டு கிடக்கிறான், அவனை பற்றி காவல்துறைக்கு தகவல் தராமல் எப்படி இருப்பாங்க ?

தொடருங்கள் அண்ணா..

சிவா.ஜி
13-07-2010, 09:06 AM
என்ன செய்யறது ராஜேஷ். துப்பாக்கிக்கு நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு தெரியாதே...

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
13-07-2010, 09:08 AM
ரொம்பச் சரியாச் சொல்லியிருக்கீங்க...எத்தனையோ முகமறியாதவர்களின் உயிர் விலையேயில்லாமல் வீணாகிறது.

நீங்க சொன்ன*தைப் போலத்தான் யோசித்திருக்கிறேன் கீதம். முடிந்தவரை திருப்தியான முடிவாய் கொடுக்கிறேன்.

மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
13-07-2010, 09:10 AM
உண்மைதான் அன்பு...ஒரு சொல்லில் தங்கள் உயிரழிப்பை நியாயப்படுத்திவிடுகிறார்கள். பிரச்சனைகளின் வேரை ஆராய்ந்து அதனை தீர்க்க நினைக்காமல்...அந்த நேரத் தீர்வுக்காக எடுக்கும் நடவடிக்கை...அந்தப் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கும் என ஏன் அவர்கள் உணர்வதில்லை...?

நன்றி அன்பு.

சிவா.ஜி
13-07-2010, 09:11 AM
உங்க எல்லா சந்தேகங்களையும் இறுதி அத்தியாயம் தீர்த்து வைக்கும் என நம்புகிறேன் ஆதன். சில இழபுகள்..சில நன்மைகள் உண்டாக காரணங்களாகிறது.

உடன் வருவதற்கு மிக்க நன்றி ஆதன்.

மதி
13-07-2010, 09:16 AM
இன்னிக்கு முடிச்சிருவீங்க தானே?

சிவா.ஜி
13-07-2010, 09:22 AM
ம்...முடிச்சுடுவேன். ஆனா...இப்ப ஆபீஸ்ல சூழ்நிலை சரியில்லை...மாலையில்தான் முடியும்ன்னு நினைக்கிறேன்.

சிவா.ஜி
13-07-2010, 04:42 PM
அத்தியாயம்:14(நிறைவுப்பகுதி)


விலாவில் தோட்டா பாய்ந்ததும், சரிந்து விழுந்த பாரி..சடாரென்று, விரைவாய் பள்ளத்துக்குள் விழுந்துவிடாமல்...பாதுகாத்தன அங்கிருந்த சின்னச் சின்னப் புதர்களும், தாய் மரத்தை விட்டுத் தனியே தண்ணீர்த் தேடி வந்த சிறு வேர்களும். மிக மெதுவாக சறுக்கிக் கொண்டு சென்ற உடலை..நிற்கவைக்கப் போதுமான நேரம் அவனுக்கிருந்தது. ஆனால்...பதட்டத்தில் எதுவும் அவனுடைய கைகளுக்கு அகப்படவில்லை. இப்படியே சில அடிகள் கீழ்நோக்கி நகர்ந்தவாறே, அங்குமிங்கும் அலைந்த கைகளை...இரண்டு கைகள் பற்றி சட்டென்று மறைவுக்கு இழுத்துக்கொண்டது.

மேலிருந்துப் பார்த்தால் அந்த சிறிய குகையின் நுழைவாயில் யாருக்குமே தெரியாது. ஆனால் அதே கிராமத்தில் வசித்த மலைவாழ் மக்களுக்கு அது அங்கிருப்பது தெரியும். சல்வா ஜூடுமின் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போது, காட்டு முயலைப் பிடிக்க நாட்டுத்துப்பாக்கிகளுடன் போயிருந்த அந்த நான்கு பேரும் திரும்பி வந்தார்கள். மேட்டில் நடப்பதை பார்த்ததும்...இந்த சரிவுக்கு வந்து குகைக்குள் ஒளிந்துகொண்டார்கள். அதே சரிவில் சரிந்த பாரியைப் பார்த்ததும், மேலே ஏறி வராமல்...எப்படியும் அவர்களைத் தாண்டிதான் அவன் பெரும் பள்ளத்துக்குள் விழுவானென்று தெரிந்ததால்...குகைப் பாறையின் இடுக்குகளில் ஒரு கையை நுழைத்துக் கொண்டு இரண்டு பேர் தங்கள் இரண்டு கைகளையும் வெளியே நீட்டி, சரிந்து வந்துகொண்டிருந்த பாரியை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டார்கள்.

அவர்கள் மட்டும் சரியான நேரத்தில் அவனை இழுக்காமல் விட்டிருந்தால்...அடுத்து இறங்கும் அபாயச் சரிவில் வெகு வேகமாய் விழுந்துக் காணாமல் போயிருப்பான் பாரி. அவன் விழுந்த பிறகு அங்கு எட்டிப் பார்த்த சல்வா ஜுடுமினர்...அதல பாதாளத்தைப் பார்த்ததும் வெறித்தனமாய் சிரித்துக்கொண்டு பாரியை இறந்தவனாய் நினைத்துக்கொண்டு போய்விட்டார்கள். குகைக்குள் இழுத்தப்பிறகு பாரியின் நிலையைப் பார்த்ததும், தங்களிடமிருந்த துணியால் ரத்தம் மேலும் அதிகம் வழியாதவாறு இறுக்கக்கட்டினார்கள். ஹிந்தி பேசியதால் பாரிக்கு அவர்களுடன் உரையாட வசதியாய் இருந்தது. கிசுகிசுப்பானக் குரலில், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்...கேமராவிலிருந்து வெளியே எடுத்த நினைவட்டையையும், சிறிய அளவிலிருந்த ஒலிப்பதிவுக்கருவியையும் பூவிழியின் முகவரிக்கு அனுப்பிவிடுமாறு அவளது முகவரியும், அலைபேசி எண்ணுமிருந்த அட்டையை எடுத்துக் கொடுத்தான்.

ஆனால் அதற்கு அவசியமில்லையென்றும், அவன் பிழைத்துக்கொள்வானென்றும் அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு, அவற்றை மீண்டும் பைக்குள்ளேயே வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். அரைமணிநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவன் மட்டும் வெளியேச் சென்று...அனைவரும் போய்விட்டார்களா எனப் பார்த்துவந்தான். இன்னும் அவர்கள் போகாமல் அங்கேயே குடிசைகளைக் கொளுத்திக்கொண்டும், இறந்தவர்களை அந்தத் தீயில் தூக்கிப் போட்டுக்கொண்டுமிருந்தார்கள் எனத் தெரிவித்தான். வேறு வழியின்றி, மிகுந்த சிரமத்துடன் பாரியை அழைத்துக்கொண்டு, மண்ணிலிருந்த வேர்களின் துணையுடன், வேறு பக்கமாய்ச் சென்று பள்ளத்துக்குள் இறங்கினார்கள்.

இரண்டு மணி நேரத்தில் காட்டுச் சாலைக்கு வந்தவர்களுக்கு, காட்டுமரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியொன்று தென்பட்டது. அந்த ஓட்டுநரிடம், தாங்கள் காட்டு மிருகத்தைச் சுட்டபோது தோட்டா இந்த ஆளின் மீது பாய்ந்துவிட்டது...உடனடியாக பெர்ஹாம்பூரிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனச் சொல்லிக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதில் மனமிறங்கிய ஓட்டுநர்..அவர்களை பக்கத்திலிருந்த பெர்ஹாம்பூருக்கு அழைத்து வந்தார். லாரி அதற்குமேல் ஊருக்குள் போகாது என்றும் வேறு ஏதாவது வாகனத்தை ஏற்பாடு செய்துகொள்ளும்படியும் சொல்லிவிட்டு அவர்களை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டுப் போய்விட்டார். பாரி மயக்கமாகிவிட்டிருந்தான்.

பாரியிடமிருந்த பர்ஸில் பணமிருந்ததை பார்த்ததும், ஒருவன் மட்டும் சென்று ஒரு காரை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு வந்தான். நேரே அந்த மருத்துவமனைக்கு வந்தவர்கள்....பாரியை..ஓரமாய் படுக்கவைத்துவிட்டு, இரண்டுபேரை அவனுடன் இருக்கச் சொல்லிவிட்டு..உள்ளே போனார்கள். சற்று நேரத்தில் ஸ்ட்ரெக்சருடன் வந்தவர்களுடன் இருந்த மருத்துவர்...பாரியின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, உடனடியாய் அவனை...அறுவைச் சிகிச்சையறைக்கு அழைத்து வரும்படி சொல்லிவிட்டு, வேகமாய் முன்னால் சென்றார்.

மாவோயிஸ்ட்டுகளில் யாருக்காவது ரகசியமாய் சிகிச்சை தேவையென்றால்...இந்த மருத்துவமனைக்குத்தான் கொண்டுவருவது வழக்கம். அந்த மருத்துவர்...அந்த மருத்துவமனையின் சொந்தக்காரர். சிறிய மருத்துவமனைதான். அவர் மாவோயிஸ்ட்டுகளின் அபிமானி. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பவர். அவரால் முடிந்த உதவிகளை, மலைவாழ் மக்களுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் செய்துகொண்டிருப்பவர். அதனால்தான் பாரியை அங்கே கொண்டுவந்தார்கள்.

உள்ளே நுழைந்திருந்த தோட்டாவை அகற்றியதும், நிறைய ரத்தமிழந்திருந்த பாரிக்கு, ரத்தம் ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டு, அவனது தோள்பையை தனது அறைக்கு எடுத்துச் சென்று மறைவாய் வைத்தார். பிறகு அவனது பர்ஸிலிருந்து எடுத்த அவனது அறிமுக அட்டையிலிருந்த பத்திரிக்கை அலுவலக எண்ணை அழைத்து தகவல் தெரிவித்தார்.


அன்று இரவே புவனேஷ்வர் வந்து சேர்ந்த பூவிழி, மருத்துவரின் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு, பாரியின் தற்போதைய நிலையைக் கவலையுடன் விசாரித்தாள். பயப்படத்தேவையில்லையென்றும், இந்த இரவில் அங்கிருந்துக் கிளம்பவேண்டாம், காலையில் புறப்பட்டு வந்தால் போதுமென்றும் சொன்னார். அடுத்தநாள் பொழுதுவிடிவதற்காகக் காத்துக்கொண்டிருந்தவள்...ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லி, வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக்கொண்டு...பெர்ஹாம்பூர் வந்து சேர்ந்தாள்.

மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே...ஒரு பதட்டத்தை உணர்ந்தாள்...பாரியை பல வருடமாய்ப் பிரிந்திருந்ததைப்போன்ற உணர்வு எழுந்தது. அவனை உடனடியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் தவித்தாள். வரவேற்பு மேசையிலிருந்தவரிடம் விசாரித்தாள். ‘மதராஸியா’ எனக் கேட்டதும்..ஆமாமென்றாள். ஐ.சி.யு வில் இருப்பதாய் சொன்னவர்...இப்போது நோயாளியை பார்க்கமுடியாது...என அந்த மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்குமாறு சொன்னார்.

மருத்துவரின் அறைக்குள் நுழைந்தவளையும், அவளின் பதட்டத்தையும் பார்த்ததும் தெரிந்துகொண்டவர்..அவளை அமரச் சொன்னார்.

“நோ டாக்டர்...எனக்குப் பாரியை உடனடியாகப் பார்க்க வேண்டும்...ப்ளீஸ் தயவுசெய்து என்னை உடனே அங்கே அழைத்துச் செல்லுங்கள்”

என்று உட்கார விருப்பமில்லாதவளாக...ஆங்கிலத்தில் சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தார். அவரது அந்த அசந்தர்ப்ப புன்னகையில் சற்றே எரிச்சலடைந்தவள்...அவரால்தான் தன் பாரி பிழைத்திருக்கிறானென்ற எண்ணம் தோன்றியதும்,

“சாரி டாக்டர்..உங்க சிரிப்புக்கான காரணம் விளங்கவில்லை”

“ஓ...நோ...தவறாக நினைக்கவேண்டாம்...உங்கள் தவிப்பைப் பார்த்ததும் உங்கள் காதல் தெரிந்தது....காதலியென எப்படித் தெரிந்தது என நினைக்கிறீர்களா... பாரியின் அலைபேசியை எதேச்சையாய் பார்த்தபோது...நீங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்தேன். மேலும்...இனி பாரிக்கு எந்த ஆபத்துமில்லையென்பதால்...இந்தப் பதட்டம் தேவையில்லையென..நிலைமையை லேசாக்கத்தான் புன்னகைத்தேன்...வாங்க போய் உங்கப் பாரியைப் பார்க்கலாம்..”

மீண்டும் புன்னகையுடன்..அவளை அழைத்துக்கொண்டு ஐ.சி.யு விற்குப் போனார்.

பாரி நினைவில்லாமல் இருந்தான். பூவிழி கண்கள் கலங்கியிருந்தாள். கலக்கத்துடன் மருத்துவரைப் பார்த்தாள்.

“இன்னைக்கு மதியத்துக்குள்ள நினைவு வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. நிறைய ரத்தம் போயிருக்கிறது. அதிக நேரம் விரயமாகியிருக்கிறது. உறுதியான உடல் மட்டுமல்ல...உங்கள் பாரிக்கு, உறுதியான உள்ளமும் இருபதால்....மிக விரைவாகவே தேறிவிடுவார். கவலைப் படாதீர்கள். நீங்கள் அருகிருந்து கவனித்துக்கொள்ள சிறப்பு அனுமதி அளிக்கிறேன். எங்கள் செவிலியர்களும் பிரத்தியேகமாகக் கவனித்துக்கொள்வார்கள். காலை உணவு அருந்தியிருக்க மாட்டீர்களென நினைக்கிறேன்...உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்...வெளியிலிருந்து தருவிக்கிறேன். என் அறையில் அமர்ந்து சாப்பிடலாம்...”

என்ன சொல்கிறாய் என்பதைப்போல அவளது முகத்தை ஏறிட்டார்.

“வேண்டாம் டாக்டர். நான் இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் பசியில்லை. இவன் கண் விழிக்க வேண்டும் அதுதான் இப்போதைக்கு என் தேவை. மிக்க நன்றி...உங்கள் எல்லா உதவிகளுக்கும்....கட்டணம் எவ்வளவு என்பதை சொன்னால்...காசோலையைக் கொடுக்கிறேன்...இல்லையென்றால்...எனது ஏ.டி.எம் அட்டையை உபயோகித்துப் பணமாகக் கொடுத்துவிடுகிறேன்.”

“இதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். நான் வருகிறேன். பிறகு பார்க்கலாம்”

அவர் சென்றதும்...கட்டிலுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். மருந்துவாடையை இப்போதுதான் உணர்ந்தாள். பாரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு...அவனது தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து அளைந்தாள்.

மதியம் பாரி கண் விழித்தான். சோர்வாய் இருந்தான். பூவிழியைப் பார்த்ததும் ஒரு ஆச்சர்யத்தைக் கண்களில் காட்டினான். சிரமமாய் புன்னகைத்தான். அவள் கையைத் தேடித் தன் கையுடன் இணைத்துக்கொண்டான்.பூவிழி மலர்ச்சியடைந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் அவளையறியாமல் பெருகியது. அவள் எப்படி வந்தாளென்பதைச் சொன்னாள். பாரி காட்டில் என்ன நடந்தது...இங்கே எப்படி வந்து சேர்ந்தான் என எல்லாவற்றையும் சொன்னான். மிகப்பெரியக் கண்டத்திலிருந்து அவன் தப்பியதாய் கடவுளுக்கு நன்றி சொன்னாள் பூவிழி.

இரண்டு நாட்களில் பாரி சற்றுத் தேறியதும், அவனை ஆம்புலன்ஸில் ஏற்றி சக்கரநாற்காலியை ஏற்பாடு செய்து, பூவிழியுடன் புவனேஷ்வர் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தார் மருத்துவர். நெகிழ்வுடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.கிளம்பும் சமயத்தில் அவனை அங்கேக் கொண்டுவந்த மலைவாசிகள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தன் மிகுந்த நன்றிகளைச் சொல்லிவிட்டு...கொஞ்சம் பணத்தைக் கொடுத்தான்...வாங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு விருந்தாளியாய் வந்தவரை இந்த நிலையில் அனுப்பிவைப்பது எங்களுக்கு சங்கடமாய் இருக்கிறது என வருத்தப்பட்டார்கள். இனி எங்கே இருக்கப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு... எங்களுக்கென்று குடும்பத்தினர் இனி யாருமில்லை...ஆனால்...எங்கள் காடு இருக்கிறது. அது காப்பாற்றும். அடுத்த தாக்குதலில் அழியும் வரை பிழைத்திருக்க அது உதவும் என்று சொன்னபோது பாரிக்கும், பூவிழிக்கும் வலித்தது.


சென்னைக்கு வந்ததும்..பாரியின் வீட்டிலேயே அவனது அறையில் ஓய்வெடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். அழுது புலம்பிய பாரியின் பெற்றோரை ஆசிரியர் சமாதானப்படுத்தினார். மிகப்பெரியக் காரியம் செய்திருக்கிறான் உங்கள் மகன் என்று பெருமையாய்ச் சொன்னார்.


அடுத்தநாள் பூவிழி கையில் ஒரு செய்தித்தாளுடன் பாரியைப் பார்க்க வந்தாள். அதன் முதல் பக்கத்தில் இருந்த போட்டோவில் நிறைய பேர் இருந்தார்கள்...அவர்களில் தேபான்ஷுவை பாரி அடையாளம் கண்டுகொண்டான். செய்தியை வாசித்தவன்...ஆச்சர்யமும், பெருமிதமும் ஒருசேர அடைந்தான்.

“மாவோயிஸ்டுகள் சரண்....இரண்டாம் கட்டத் தலைவர்கலில் ஒருவரான தேபான்ஷு பாசு தங்கள் சகாக்கள் 36 பேருடன் ஒரிசா காவல்துறை தலைவரின் முன்னிலையில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தார். நமது பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,’எத்தனையோ இழப்புகளை நான் பார்த்திருக்கிறேன்...ஆனால் சமீபத்தில் என் கண்முன்னால் நிகழ்ந்த உயிரிழப்புகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது. என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்...துப்பாக்கிக்கு எதிரியையும் தெரியாது, நண்பரையும் தெரியாது...யாரைவேண்டுமானாலும் சுடும் என்று அதைக் கண்கூடாகப் பார்த்தேன். 17 வயது இளைஞனை எங்கள் துப்பாக்கியே அழித்துவிட்டது. அவன் போராளியுமல்ல...அவனுக்கு எங்கள் போராட்டத்தைப் பற்றியும் தெரியாது...ஆனால்...வீணாக அவன் உயிரை இழந்தான்...என் நண்பர்களையும் இழந்தேன்...மகளாக நான் நினைத்திருந்த பெண்ணையும் இழந்தேன்...உண்மையறிய துணிச்சலுடன் எங்களை சந்திக்க வந்த அந்த தைரியமான இளைஞனையும் இழந்தோம். எதற்கு இந்த ஆயுதம் என நினைத்துப் பார்த்தேன். அந்த இளைஞன் கேட்டக் கேள்விகளும் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. காட்டைக் காப்பாற்றக் காட்டிலிருந்துதான் போராட வேண்டுமென்பதில்லை...நல்லதொரு இயக்கமாக, சாத்வீக முறையில் நாட்டிலிலேயே அதனைத் தொடரப் போகிறோம். எனக்கான தண்டனையை அனுபவித்துவிட்டு..எங்கள் பணியைத் துவக்கப்போகிறோம். எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமென என் நண்பர் விரும்பினார்...இதோ ஆரம்பம்.....!! என்னுடைய மற்ற* சகாக்களும் விரைவில் இந்த மனமாற்றத்தை அடைவார்களென்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நண்பருக்கு என் நன்றி”

செய்தியைப் படித்ததும் பாரி, பூவிழியை நிமிர்ந்துப் பார்த்தான்.

“உன்னோட காட்டுப் பயணத்துக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. இந்த செய்தியைப் பாரு”

அதே செய்தித்தாளின் இன்னொரு பக்கத்திலிருந்த செய்தியைக் காட்டினாள்

“மாவோயிஸ்ட்டுகளின் இந்த சரணடைவை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இனி எங்கள் இயக்கங்கள் அரசாங்கத்தை நெருக்கும்...காட்டை தனியார்களுக்குத் தாரை வார்ப்பதை தடுக்க எங்களால் ஆன எல்லா பணிகளையும் செய்வோம்.அவர்கள் ஆயுதங்களை கீழே போடத் தொடங்கிவிட்டார்கள்..அரசாங்கமும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்”

என பேராசிரியர் யஷ்பால்(முன்னனி விண்வெளித்துறையாளர்,பல்கலைக்கழகங்களின் அங்கீகாரக் குழுவின் முன்னாள் தலைவர்)ஸ்வாமி அக்னிவேஷ் (பந்துவா மஸ்தூர் முக்தி சங்கடன்) பேராசியர் பன்வாரிலால் ஷர்மா(ஆஸாதி பச்சாவ் ஆந்தோலன்)பழம்பெரும் காந்தியவாதி நாராயண் தேசாய் (குஜராத் வித்யாபீட் துணைவேந்தர்) தாமஸ் கொச்சேரி (உலக மீனவர்கள் நல அமைப்பு) திருமதி ராதா பட் (காந்தி அமைதி இயக்கம்) என்போர் இணைந்து அளித்த அறிக்கை வெளியாகியிருந்தது.

பாரி மிகவும் சந்தோஷப்பட்டான்.

“எப்போதாவது தேபான்ஷூவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும்...”

“அடிச்சிக்கலாம்...அடுத்த இஷ்யூவிலருந்து உன்னோட தண்டகாரண்யா விசிட்டோடக் கட்டுரை வர்றதா நம்ம பெரியவர் விளம்பரம் கொடுக்கப்போறார். எழுத ஆரம்பி....எல்லா போட்டோவையும் பிரிண்ட் போட்டுட்டேன்...சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லு தலைப்பு என்ன தெரியுமா....’பசுமை வேட்டை’...”

அவள் சொல்லி முடித்ததும், அவளையே அமைதியாய்ப் பார்த்தவன்...

“இல்லை பூ...நான் எதுவுமே எழுதப்போறதில்ல...நான்...நீ...நாம எல்லோரும் ஆசைப்பட்ட மாற்றங்கள் நிகழ ஆரம்பிச்சிருக்கு...இதுக்குப் பிறகு...அங்க நடக்குற கொடுமைகள் எழுத்துல வந்தா....பல இளைஞர்களை அது ஆத்திரப்படுத்தும். இந்த ஆரோக்கியமான மாற்றம்...இன்னும் பரவனும்....மீதியிருக்கிற போராளிகளும்..மனமாற்றம் அடையனும்..நீ பெரியவர்கிட்ட சொல்லி அறிவிப்புக் குடுக்க வேண்டான்னு சொல்லு..இதே பசுமை வேட்டையை நான் இங்கேயே தொடரப்போறேன்....இங்க நம்ம மாநிலத்துல நடக்கிற பசுமை வேட்டையைப் பத்தி இனி துருவப்போறேன்....சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கிறோம்ங்கற பேர்ல...நம்ம பசுமையை வேட்டையாடற அரசாங்கத்தோட முகமூடியைக் கிழிக்கப்போறேன்.....”

பூவிழி...பாரியை பெருமையோடும்...அளவில்லாக் காதலோடும் பார்த்தாள்.


(இந்த பாகம் நிறைவுற்றது....பசுமைவேட்டை:2 இன்னும் சில நாட்களில் தொடங்கும்)

அமரன்
13-07-2010, 09:27 PM
சோட்டுவின் சாவை தேபான்சுவின் மனமாற்றத்துக்கு பயன்படுத்திய விதத்தில் திரைக்கதை உத்தி பளிச்சிடுகிறது.

இறுதிப் பகுதிகள் இரண்டும் உண்மையிலே உச்சக்கட்டம்தான். எழுத்தில் காட்சியை விறுவிறுப்பாக ஓடவிட்டதில் உங்கள் எழுத்து வன்மை தெரிகிறது.

போராளிகள் சரணைடைந்து விட்டார்கள். ஆயுதங்கள் ஓய்ந்து விட்டன. ஆனால்.........

இழப்புகள் குறைந்து விடும் என்பதில் நம்பிக்கை எனக்கில்லை. தேபான்சு வேண்டுமானால் உயிருடன் இருக்கலாம். அவருடன் சரணடைந்த கீழ்மட்டப் போராளிகள்.....???????

தவிர ஆயுதமேந்தியதுக்கான பிரச்சினை தீரும் என்பதிலும் நம்பிக்கை இல்லை. அதுக்காக உங்கள் முடிவு தவறெனச் சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமா தெரியவில்லை.

இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருகிறேன்.

கீதம்
14-07-2010, 12:14 AM
கதையின் முடிவு திருப்திகரமாக அமைந்ததில் மகிழ்ச்சியே.
இரு கைகள் இணைந்தால்தானே சத்தம் பிறக்கும். இரு தரப்பிலும்
இதுபோன்ற மனமாற்றம் வரவேண்டும். காலம்காலமாய் நடந்துவரும் போராட்டத்துக்கு நல்லதொரு தீர்வு தந்துள்ளீர்கள்.

ஒரு சிக்கலான கருவைக் கையில் எடுத்து மிகக் கவனத்துடன் கையாண்ட
உங்கள் எழுத்துத் திறனுக்கு என் மனமுவந்த பாராட்டுகள்,அண்ணா.
இனி வரும் கரு இதைவிடவும் சிக்கலானது என்று எனக்குத் தோன்றுகிறது.
இதிலும் வெற்றி பெற என் முன்கூட்டிய வாழ்த்துகள்.

அன்புரசிகன்
14-07-2010, 12:59 AM
கதையின் முடிவு............... என்ன சொல்வதென்று தெரியவில்லை. முடிவை கொடுத்தது உங்களின் எண்ணங்கள் என்பதால் அதை விமர்சிக்க முடியாது. எனது எண்ணமாக இதை சொல்கிறேன். தவறென்றால் மன்னிக்க.

இவ்வளவு கால போராட்டத்தில் எத்தனை இழப்புகளை அந்த தலைவர் பார்த்திருப்பார். எத்தனை குழந்தைகள் இறந்திருக்கும். அவற்றால் மனமிழகாத தலைவர் அந்த 17 வயது சிறுவனின் மரணத்தில் தான் மனம் மாறினாரா? இது முதலாவது. இரண்டாவது துப்பாக்கி இரண்டு பக்கமும் சுடும் என்பதை பாரி என்ற ஒருவன் சொல்லி தான் பெரிய தார்ப்பரியங்கள் அறிந்த தலைவருக்கு தெரிந்து மனமாறியிருக்கிறார் என்றால் ... அப்படி நடக்குமா? அவ்வளவு சிந்நிக்க தெரியாத ஒருவரா அங்கு தலைவராக இருந்திருப்பார்? ஆயுதம் ஏந்துவது ஒன்றும் பொழுது போக்குக்காக செய்வது அல்ல. சாத்வீக போராட்டங்கள் பலனற்று போகும் போது தான் அடக்குமுறைக்கு உள்ளாவார்கள். அப்படிப்பார்த்தால் மாவோய்ஸ்டுகளில் தவறு உள்ளது போல கதையின் முடிவு சொல்கிறது. இனி தான் சாத்வீக போராட்டமா?
இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று ஆரம்பத்தில் மாவோய்ஸ்டுக்கள் தவறுக்கு மேல் தவறு செய்திருக்க வேண்டும். இல்லையேல் அந்த தலைவரை கருணாவுக்கு ஒப்பிடவேண்டும். எப்படிப்பார்த்தாலும் வரலாற்றில் அவருக்கு இடமிருக்காது...

முடிவை சற்று வித்தியாசமாக எதிர்பார்த்தேன். சுமூகமாக முடிவு வந்துள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா...

மதி
14-07-2010, 03:02 AM
இறுதியில் சுமூகமான முடிவு... அரசாங்கம் மதிப்பளிக்கும் என நம்புவோம். உங்களோட அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறோம்..

Akila.R.D
14-07-2010, 05:07 AM
திருப்தியான முடிவு...

பசுமைவேட்டை: 2 படிக்க காத்திருக்கிறோம்...

samuthraselvam
14-07-2010, 05:45 AM
பாருங்க நான் நினைச்ச மாதிரியே சொட்டுவைக் கொன்னுட்டீங்க.... பாவமண்ணா இதுபோல மரணத்தின் வாசலில் நின்று போராடும் போராளிகள்....

சிவா.ஜி
14-07-2010, 06:08 AM
உண்மைதான் அமரன். கதையில் ஒரு நல்ல முடிவைக் கொடுக்க முடியும்...ஆனால் நிஜத்தில்...இது மிகப்பெரிய சிக்கல். அரசாங்கம் எதற்காகவும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தீவிரவாத ஒழிப்பு எனும் ஆயுதம் அவர்கள் கைகளில் வலிமையாக உள்ளது.

ஆனால்....மனம்திருந்தியவர்களையாவது மீண்டும் ஆயுதமேந்த வைக்காமிலிருந்தாலே போதும்.

தொடர்ந்த உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாஸ்.

சிவா.ஜி
14-07-2010, 06:09 AM
உங்க எல்லோரோட ஊக்கம்தான் என்னை எழுத வைக்கிறது. முடிவு உங்களுக்கு திருப்ப்தியைத் தந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிம்மா கீதம்.

சிவா.ஜி
14-07-2010, 06:18 AM
உங்கள் உணர்வுகளையும், எண்ணத்தையும் உணரமுடிகிறது அன்பு. மாவோயிஸ்ட்டுகளிடமிருக்கும் கட்டுக்கோப்பும், உறுதியும்...உயிரிழப்பில் வீணாக வேண்டுமா என்ற ஆதங்கத்தில்தான் என் எதிர்பார்ப்பைச் சொன்னேன்.
அவர்களின் தவறு...நாட்டிலுள்ள மற்ற மக்களோடு இணக்கமில்லாதிருப்பதுதான். உயரிய கொள்கைகள் இருந்தும், நடத்தும் படுகொலைகளால்..அரசாங்கம் அவர்களை வெகு சுலபமாக தீவிரவாதிகளென்ற முத்திரையைக் குத்திவிடுகிறது.

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு...மக்களோடு கைகோர்த்து செயல்பட்டால்...நேபாளத்தைப் போல ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புமுள்ளது. அதுவரை அவர்களை அரசாங்கம் வேட்டையாடுவதை தடுக்க முடியாது. உயிரிழப்புகள் வேண்டாமே என்ற ஆதங்கம்தான்.

அதே போல ஒரேயொரு 17 வயது சிறுவனின் சாவில் அவர் மனம் மாறவில்லை...துப்பாக்கி இருபக்கமும் சுடுமென்றும் அவருக்கு முன்பே தெரியும்...ஆனால் மனித மனத்தின் விசித்திரங்கள் நீங்கள் அறியாததல்ல...ஏதோ ஒரு பொறி, ஒரு நிகழ்வு, ஒரு பாதிப்பு...அதை மாற்றுமென்பது அனைவரும் அறிந்ததே. என் கதையில் அந்த நெருக்கமானவர்களின் உயிரிழப்புக்களை அந்த மாற்றத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவே.

உங்கள் கருத்துக்கும், பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி அன்பு.

சிவா.ஜி
14-07-2010, 06:21 AM
அதேதான் மதி....அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி மதி.

சிவா.ஜி
14-07-2010, 06:23 AM
நன்றிங்க அகிலா. விரைவில் சந்திப்போம்.

சிவா.ஜி
14-07-2010, 06:24 AM
உண்மையிலேயே பாவம்தாம்மா....என்ன செய்யறது...அவங்க தேர்ந்தெடுத்த வாழ்க்கை அது. ரொம்ப நன்றிம்மா.

Nivas.T
14-07-2010, 08:31 AM
நிகழ்வுகளை கணிக்க முடியுமே தவிர உறுதியிட முடியாது. இருபுறமும் இறுதிமுடிவை நோக்கினாலும் இழப்புகளை ஈடு செய்ய இயலாது. கதைக்கு இது ஒரு அற்புதமான முடிவு ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் ஆகாது. பாரியின் பயணம் தொடரும்....... :)

samuthraselvam
14-07-2010, 11:21 AM
இறுதி பாகத்தை இப்போது தான் படித்தேன்.... மனது வலிக்கிறது.... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் மனது எவ்வளவு தான் பலமாக இருந்தாலும் சிறு நிகழ்வுகளால் அந்த பலம் ஆட்டம் கண்டுவிடும்.... அதுபோல தான் சோட்டாவின் மறைவு அவர்களுக்கு...

அடுத்து பசுமை வேட்டை 2 -ஆ? கலக்குங்க கலக்குங்க...

கலையரசி
14-07-2010, 02:29 PM
உங்கள் கதைப்படி முடிவு வந்தால் நல்லது தான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை.

ஏனெனில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு பல்வேறு வழிகளில் அவர்கள் போராடிப் பார்த்து விட்டு வேறு வழியின்றித்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்.
மாற்றம் அவர்களுக்கு மட்டும் வந்தால் போதாது. அரசாங்கத்திடமும் வர வேண்டும். அவர்கள் சரணடைந்ததைத் தங்கள*து அடக்குமுறைக்குக் கிடைத்த வெற்றியாக அரசு நினைத்துக் கொண்டு மென்மேலும் அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட வாய்ப்புண்டு.
எப்படியோ கதையிலாவது சுமுகத் தீர்வு கிடைத்த வரையில் மகிழ்ச்சியே. பசுமை வேட்டை தொடரப்போவது அறிந்து மகிழ்ச்சி. நல்லதொரு கதை கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள்.
ஊர் போய் விட்டு வந்த பிறகு தொடருங்கள்.
உங்கள் கதை மூலம் மாவோயிஸ்ட் பிரச்சினைகளை நாங்கள் எல்லோரும் தெரிந்து கொண்டோம். அதற்கு என் நன்றி.

சிவா.ஜி
14-07-2010, 06:13 PM
கண்டிப்பா நடைமுறையில இது சாத்தியப்படாது...ஆனா...கதையிலயாவது நல்லது நடக்கட்டுமே....நன்றி நிவாஸ்.

சிவா.ஜி
14-07-2010, 06:16 PM
ஆமாம் லீலும்மா...எத்தனை உறுதியானவர்களுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும்...மனதில் மென்மை மறைந்திருக்கும். அது வெளிப்படும்போது ஏற்படும் மாற்றங்கள் ஆச்சர்யமேற்படுத்துகிறது...அவ்வளவுதான்.

நன்றி லீலும்மா.

சிவா.ஜி
14-07-2010, 06:21 PM
இல்லைங்க கலையரசி...அவங்க வேற எந்த முறையையும் முதல்ல கடைபிடிக்கல...எப்போதுமே ஆயுதம்தான்..ஏன்னா...மாவோவோட சித்தாந்தமே துப்பாக்கி முனையில்தான் நியாயம் பிறக்கும் என்பது. ஆனால் அது..எப்போதும்...இருபக்க இழப்புகளையே கொடுக்கும் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அப்படி பொருட்படுத்திய ஒருவரைத்தான் நான் இந்தக் கதையில் காட்டியிருக்கிறேன்.

ஆனால் அரசாங்கம்..அவர்களது சரணடைவை தங்கள் வெற்றியாக நினைத்தால்...அது மிகப்பெரிய தவறு என உணருவார்கள்.

தொடர்ந்த ஊக்கப் பின்னூட்டத்திற்கு நன்றிங்க சகோதரி.

govindh
14-07-2010, 10:35 PM
பிரச்னைகள் தீர வேண்டும்....
அமைதி நிலவ வேண்டும்...
மகிழ்வு தொடர வேண்டும்.
கதை முடிவு - பாரியின் மூலம் பறை சாற்றுகிறது...!

தொடரட்டும் ...உங்கள் அடுத்த வேட்டை...!
வாழ்த்துக்கள் அண்ணா....

சிவா.ஜி
15-07-2010, 05:38 AM
தொடர்ந்து உடன் வந்து ஊக்கமளித்ததற்கு நன்றி கோவிந்த்.

பா.ராஜேஷ்
15-07-2010, 07:10 AM
வேலை பளு அதிகமாகி விட்டதால் மன்றம் அடிக்கடி வர இயலாத நிலை... முடிவை இப்பொழுதுதான் படித்தான்... நிஜத்தில் சாத்தியம் இல்லையென்றாலும் கதையில் சாத்திய படுத்தியதில் தவறில்லை... அந்நியன் எப்படி திரையில் நன்றாக இருந்ததோ, அதே போல் இந்த முடிவும் கதை என்ற வகையில் மிக அருமை... நிஜத்திலும் அது நிகழ்ந்தால் அதை விட மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்ன இருக்க கூடும்... உண்மையில் அரசாங்கம் முதல் கட்ட நடவடிக்கை எடுத்து அரசியல் செய்யாமல் இருந்தால் எல்லாம் நலமாக செல்லும்... பாராட்டுக்கள் அண்ணா, பசுமை வேட்டை 2 காத்திருக்கிறேன்..

த.ஜார்ஜ்
24-07-2010, 10:36 AM
அப்பாடா.. ஒரே மூச்சில் படித்தாயிற்று.

கொள்கை சார்ந்த ஒரு களத்துக்குள்ளே லாவகமாக போய் வந்திருக்கிறீர்கள்.

கதைக்காக சில சமரசங்கள் செய்திருந்தாலும்,பொதுப்படையாய் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு தன்மையின் மறுபக்கத்தையும் அலச முயன்றிருக்கிறீர்கள்.

ஒரு மர்மக்கதை போல் தொடங்கி சமூகக் கதையாக முடித்திருக்கிறீர்கள்.

வன்முறை இருபக்கமும் தீட்டப்பட்ட கத்திதான். நம்பார்வை கத்தியை பிடித்திருப்பவனின் கையைப் பொறுத்தே அமைகிறது.

சிவா.ஜி
27-07-2010, 12:34 PM
தாமதமான நன்றிக்கு மன்னிச்சுக்குங்க ராஜேஷ்.....

ஆரம்பத்துலருந்து தொடர்ந்து ஊக்கமூட்டும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி.

சிவா.ஜி
27-07-2010, 12:36 PM
உண்மைதான் ஜார்ஜ்...வன்முறைங்கற இருபக்க கூருள்ள கத்தியை கையாள்பர்களே அதன் பலியாகவும் மாறக்கூடும்.

நோக்கம் சரியானதாய் இருந்தாலும்....வழிமுறையில்தான்....வேறுபாடுகள் தோன்றுகிறது.

வாசித்தமைக்கும், பின்னூட்ட ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.