PDA

View Full Version : இப்படியும் மனிதர்கள் - 1



பாரதி
14-06-2010, 09:15 AM
அநேகமாக அது 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாக இருக்கக்கூடும். பெங்களூரில் வெப்பம் லேசாக ஆரம்பித்து, குல்மோஹர் பூக்கள் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் வளாகத்தில் பூக்க ஆரம்பித்திருந்தன. என்னுடைய பட்டயப்படிப்பு பிரிவில் நான் ஒருத்தி மட்டுமே அந்த பெண்கள் விடுதியில் தங்கி இருந்தேன். மற்றவர்கள் பல்வேறு அறிவியல் துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன். அதற்காக அமெரிக்காவில் இருக்கும் சில பல்கலைக்கழகங்கள் படிப்பதற்கு உதவித்தொகையும் அளிப்பதாக தெரிவித்திருந்தன. அந்த நேரத்தில் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வந்தது இல்லை.

ஒரு நாள் எனது அறையில் இருந்து விரிவுரை அரங்க கட்டடத்திற்கு சென்ற போது, அறிவிப்புப்பலகையில் ஒரு விளம்பரத்தைப்பார்த்தேன். வேலைக்கு ஆட்கள் தேவை போன்றதொரு வழக்கமான விளம்பரத்தை பிரபல நிறுவனமான டெல்கோ (இப்போது டாட்டா மோட்டார்ஸ்) வெளியிட்டு இருந்தது. அந்நிறுவனத்திற்கு நல்ல கல்வி அறிவுடன் கூடிய புதிய, திறமையான, நன்கு வேலைபார்க்கக்கூடியவர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் இருந்தது.

விளம்பரத்தின் அடியில் சிறியதாக ஒரு வரி : "பெண்கள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை".

அதைப்படித்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக, பெண் என்பதற்காக பாலின் அடிப்படையில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்.

எனக்கு அந்த வேலையில் சேர வேன்டும் என்ற ஆர்வம் இல்லை என்றாலும் கூட அதை ஒரு சவாலாக கருதினேன். படிப்பில் என்னுடன் படித்த பல ஆண்களைக்காட்டிலும் நான் மிகவும் சிறப்பாக தேர்ச்சி அடைந்திருந்தேன். உண்மை வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி அறிவு மட்டும் போதுமானதல்ல என்பதைக்குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாதிருந்தது.

அந்த விளம்பரத்தைப்படித்து விட்டு அறைக்கு திரும்பிய நான் குமுறிக்கொண்டிருந்தேன். அவ்விளம்பரத்தால் ஏற்படும் அநீதியைக் குறித்து டெல்கோவின் தலைமை நிர்வாகத்திற்கு தெரிவிப்பதென முடிவெடுத்தேன். ஒரு அஞ்சலட்டையை எடுத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஒரு சிறு தடங்கல் : டெல்கோ நிர்வாகத்தை கையில் வைத்திருப்பவர் யார் என்று எனக்கு தெரியாது. டாட்டாக்களில் யாராவது ஒருவராக இருப்பர் என்று நினைத்தேன். ஜே.ஆர்.டி. டாடா அவர்கள் டாடா குழுமத்தின் தலைவர் என்பதை நான் அறிந்திருந்தேன்; அவரது புகைப்படங்களையும் செய்தித்தாள்களில் நான் பார்த்திருக்கிறேன் (உண்மையில் அந்த நேரத்தில் சுமந்த் மூல்ககர் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார்). அஞ்சலட்டையின் முகவரியில் டாடாவின் பெயரைக்குறிப்பிட்டு விட்டு கடிதத்தை எழுதத்துவங்கினேன். அந்த அஞ்சலட்டையில் என்ன எழுதினேன் என்பது இப்போதும் தெளிவாக நினைவில் இருக்கிறது.

...... தொடரும்.

aren
14-06-2010, 09:54 AM
நானும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்த பாகத்தைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன். இவர் நாராயண மூர்த்தி அவர்களின் துணைவியார் என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.

பாரதி
14-06-2010, 10:53 AM
ஆமாம் ஆரென். நீங்கள் கூறுவது சரி.

மதி
14-06-2010, 12:08 PM
சுதா மூர்த்தியின் கதை. ஷாப் ஃப்ளோரில் பணிபுரிந்த முதல் பெண் பொறியாளர் என்று படித்த ஞாபகம். மேலும் தொடருங்கள்...

பாரதி
14-06-2010, 12:38 PM
சுதா மூர்த்தியின் கதை. ஷாப் ஃப்ளோரில் பணிபுரிந்த முதல் பெண் பொறியாளர் என்று படித்த ஞாபகம். மேலும் தொடருங்கள்...
நீங்கள் கூறுவதும் மிகவும் சரி மதி.
---------------------------------------------------------------------------------------
"பெருமைமிகு டாட்டாக்கள் எப்போதுமே முன்னோடிகளாக இருப்பார்கள். அவர்கள்தான் அடிப்படை கட்டமைப்புக்குத் தேவையான இரும்பு, எஃகு, இரசாயனம், ஜவுளி, தொடர்வண்டி ஆகியவற்றை ஆரம்பித்தவர்கள். 1900 களில் இருந்து மேற்படிப்புக்கான அவசியத்தை கவனத்தில் கொண்டவர்கள்; இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸை நிறுவ காரணமாக இருந்தவர்கள். அதிர்ஷ்டவசமாக நான் அங்கேதான் படித்தேன். ஆனால் டெல்கோ போன்ற ஒரு நிறுவனம் பெண் என்று பாலின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்ப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது."

அக்கடிதத்தை அஞ்சல் செய்த பின்னர் அதைப்பற்றி நான் மறந்து விட்டேன். 10 நாட்கள் கழித்து எனக்கு ஒரு தந்தி வந்திருந்தது; டெல்கோ நிறுவனத்தின் புனே பிரிவுக்கு நேர்முகத்தேர்விற்கு வரும்படியும் பயணச்செலவுகளை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அதில் தெரிவித்திருந்தது. அந்தத் தந்தியை என்னால் நம்பவே இயலவில்லை!

என்னுடன் அறையில் இருந்த தோழி நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, புனே நகருக்கு இலவசமாக சென்று வரலாம் என்றும், மிகப் பிரபலமாக இருந்த புனே சேலைகளை அவர்களுக்காக மலிவாக வாங்கி வர வேண்டும் என்று கூறினாள். யார் யாருக்கு சேலை தேவையோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து முப்பது ரூபாய்களை வசூலித்தேன். இப்போது அதை நினைத்துப்பார்க்கையிலும் சிரிப்புதான்; அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் நான் அப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றே நினைத்தார்கள்.

புனே நகருக்கு நான் செல்வது அதுதான் முதல் முறை. பார்த்தவுடனேயே அந்நகரை நேசிக்கத்துவங்கி விட்டேன். இன்றைக்கும் அந்த நாள் என் நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கிறது. புனேவில் இருப்பதை எனது சொந்த ஊரான ஹுப்ளியில் இருப்பதைப்போன்றே உணர்ந்தேன்.

அது என்னுடைய வாழ்க்கையை பல வகையிலும் மாற்றி விட்டது. தந்தியில் கூறி இருந்த படி பிம்ப்ரியில் இருந்த டெல்கோ அலுவலகத்திற்கு நேர்முகத்தேர்விற்காக சென்றேன்.

தேர்வுக்குழுவில் ஆறு பேர் இருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே முக்கியத்துவத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள என்னை அழைத்திருக்கிறார்கள் என புரிந்தது.

அறையினுள் நான் நுழையும் போது, " இவள்தான் ஜே.ஆர்.டிக்கு கடிதம் எழுதியவள்" என யாரோ கிசுகிசுப்பதைக் கேட்டேன். அதைக் கேட்டதும் அந்த வேலை எனக்கு கிடைக்கப்போவதில்லை என்று தோன்றியது. அந்த உணர்வே என் மனதில் இருந்த பயத்தை எல்லாம் போக்கியது; ஆகவே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்ட போது நான் மிகவும் சாதாரணமாக இருந்தேன்.

நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே தேர்வுக்குழுவினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவார்கள் என்று எனக்குப்பட்டது. அதனால் " இது வெறும் தொழில்நுட்ப நேர்முகத்தேர்வுதான் என நான் நம்புகிறேன்" என அவர்களிடம் முகத்திலடித்தாற் போல கூறினேன்.

என்னுடைய நாகரீகமற்ற பேச்சைக்கேட்டதும் அனைவரும் மலைத்துப்போனார்கள்.

....... தொடரும்.

கலையரசி
14-06-2010, 01:25 PM
சுதா மூர்த்தியின் தொடர் (விகடனிலா என்பது நினைவில்லை) வந்த போது படித்திருக்கிறேன்.
பெண்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றவுடன் உடனே கம்பெனி தலைமைக்குக் கடிதம் எழுதும் துணிச்சலும் விவேகமும் பாராட்டத்தக்கது. இன்று கணிணி துறையிலும் வேறு பலத் துறைகளிலும் வேலை செய்யும் பெண்கள் சுதா மூர்த்திக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
தொடர் நன்றாகப் போகிறது. தொடர்ந்து எழுதுங்கள் பாரதி.

பாரதி
14-06-2010, 01:45 PM
சுதா மூர்த்தியின் தொடர் (விகடனிலா என்பது நினைவில்லை) வந்த போது படித்திருக்கிறேன்.
பெண்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றவுடன் உடனே கம்பெனி தலைமைக்குக் கடிதம் எழுதும் துணிச்சலும் விவேகமும் பாராட்டத்தக்கது. இன்று கணிணி துறையிலும் வேறு பலத் துறைகளிலும் வேலை செய்யும் பெண்கள் சுதா மூர்த்திக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

ஓ... அப்படியா..!! எனக்குத் தெரியாமல் போய்விட்டதே..!!
இன்றைக்கு ஒரு தளத்தில் இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தைப்படித்தேன். என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. உடனே மன்றத்தில் இதைப்பதிக்க நினைத்தேன். அதன் விளைவே இத்திரி.
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
மிக்க நன்றி.

பாரதி
14-06-2010, 01:51 PM
அப்படி நடந்து கொண்டதை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது. பின்னர் தேர்வுக்குழு என்னிடம் கேள்விகளைக் கேட்கத்துவங்கியது. நான் அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.

குழுவில் இருந்த ஒரு வயதான கனவான் ஆதூரமான குரலில் " நாங்கள் ஏன் பெண்கள் வேலைக்கு விண்ணப்பிக்கத்தேவையில்லை என்று கூறினோம் என்று உங்களுக்குத் தெரியுமா..? ஏன் என்றால் நாங்கள் எந்த ஒரு பெண்ணையும் ஷாப் ஃபுளோர் போன்ற ஆலை வேலையில் வைத்திருந்ததில்லை. இது ஒன்றும் இரு பாலர் படிக்கும் கல்லூரியல்ல. இது ஒரு ஆலை. படிப்பு என்று பார்த்தால் நீங்கள்தான் தொடர்ந்து முதன்மை மாணாக்கராக இருந்திருக்கிறீர்கள். நாங்கள் அதை பாராட்டுகிறோம்; ஆனால் உங்களைப்போன்றவர்கள் சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதுதான் சரி" என்றார்.

நானோ ஹுப்ளி எனும் சின்ன நகரத்திலிருந்து வந்தவள்; எனது உலகமும் மிகச்சிறியது. பெரிய நிறுவனங்களின் போக்கு பற்றியோ அல்லது அவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. "நீங்கள் எங்கிருந்தாவது ஆரம்பிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் உங்கள் ஆலைகளில் பெண்கள் எப்போதும் வேலை பார்க்கவே இயலாமற் போய்விடும்." என்றேன்.

நீண்ட நேர்முகத்தேர்விற்குப் பிறகு நான் அதில் வெற்றி பெற்றிருப்பதாக என்னிடம் கூறினார்கள். அதைத்தான் எதிர்காலம் எனக்காக வைத்திருந்தது போலும். புனேயில் ஒரு வேலையில் சேருவதைப்பற்றி நான் ஒரு போதும் எண்ணியதே கிடையாது!

கர்நாடகத்தை சேர்ந்த சங்கோஜப்படக்கூடிய ஒரு எளிய மனிதரை நான் சந்தித்தேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம்; பின்னர் திருமணம் செய்துகொண்டோம்.

இந்தியாவில் தொழில்களின் முடிசூடா மன்னராக ஜே.ஆர்.டி விளங்கியதை டெல்கோ நிறுவனத்தில் இணைந்த பிறகே அறிய முடிந்தது. அதைத்தெரிந்து கொண்ட பின்னர் எனக்கு பயம் வந்து விட்டது. ஆனாலும் கூட பம்பாய்க்கு நான் மாற்றல் செய்யப்படும் வரை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு நாள் சில அறிக்கைகளை எங்கள் சேர்மனான மூல்ககரிடம் காண்பிக்க வேண்டி இருந்தது. சுருக்கமாக எஸ்.எம் என்றுதான் அவரை அழைப்போம். பாம்பே ஹவுஸ் (டாட்டா நிறுவனங்களின் தலைமையகம்) கட்டிடத்தின் முதலாவது தளத்தில் அவரது அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திடீரென்று ஜே.ஆர்.டி உள்ளே வந்தார்.

"அப்ரோ ஜே.ஆர்.டி" யை முதல்தடவையாகப் பார்த்தேன். குஜராத்தி மொழியில் அப்ரோ என்றால் "நம்முடைய" என்று பொருள். பாம்பே ஹவுஸில் இருந்த அனைவரும் அவரை அந்த அடைமொழியால்தான் பிரியத்தோடு அழைத்தார்கள்.

எனக்கு நடுக்கம் உண்டானதை உணர்ந்தேன்; அஞ்சலட்டை விவகாரம் நினைவுக்கு வந்ததால். எஸ்.எம் " 'ஜே' (ஜே.ஆர்.டியை அவரது நெருங்கிய நண்பர்கள் அழைக்கும் முறை அதுதான்), இந்த இளம்பெண் ஒரு பொறியாளர். டெல்கோ நிறுவனத்தின் ஷாப் ஃபுளோரில் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண்" என்று அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஜே.ஆர்.டி என்னைப்பார்த்தார். நான் எழுதிய அஞ்சலட்டையைக்குறித்தோ, நேர்முகத்தேர்வினைக் குறித்தோ அவர் எதுவும் கேட்டுவிடக்கூடாது என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அவர் அப்படி எதுவும் கேட்கவில்லை.

பதிலாக "நம் நாட்டில் பெண்கள் பொறியியல் துறையில் சேருவது நல்லதே. உங்கள் பெயர் என்ன..?" என்றார்.

"டெல்கோவில் வேலையில் சேரும் போது நான் சுதா குல்கர்னியாக இருந்தேன். இப்போது சுதா மூர்த்தி" என்றேன். அவர் மெதுவாக புன்னகைத்தார். அப்படியே எஸ்.எம்..மிடம் உரையாட ஆரம்பித்தார். அங்கிருந்து ஒரே ஓட்டத்தில் வெளியே வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் ஜே.ஆர்.டியை அவ்வப்போது காண்பதுண்டு. அவர் டாட்டா குழுமத்தின் தலைவர்; நானோ வெறும் பொறியாளர்.

ஒரு நாள் என் கணவர் மூர்த்திக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

.... தொடரும்.

பாரதி
14-06-2010, 02:36 PM
அலுவலுக்குப் பின்னர் அவர் வந்து என்னை அழைத்துச்செல்வது வழக்கம். அப்போதுதான் ஜே.ஆர்.டி எனதருகே நிற்பதைப் பார்த்தேன். அவரிடம் என்ன சொல்வது என்று எனக்குத்தெரியவில்லை. அப்போதும் எனக்கு நான் அனுப்பிய அஞ்சலட்டை நினைவுக்கு வந்து சங்கடத்தை உண்டாக்கியது. ஜே.ஆர்.டி அதை மறந்து விட்டார் என்பதையும், அவரைப் பொறுத்த வரை அது சாதாரண நிகழ்வு என்பதையும் உணர்ந்தேன்.

"ஏனம்மா இங்கு நிற்கிறீர்கள்?"; "வேலை நேரம்தான் முடிந்து விட்டதே..!" என்று அவர் வினவினார்.

"எனது கணவர் வந்து என்னை அழைத்துச்செல்வார்; அவருக்காகக் காத்திருக்கிறேன்" என்றேன் நான்.

"ஏற்கனவே இருட்ட ஆரம்பித்து விட்டது. இங்கு யாரும் இல்லையே?" ; "சரி. உங்கள் கணவர் வரும் வரை நானும் உங்களுடன் இருக்கிறேன்." என்றார் ஜே.ஆர்.டி.

மூர்த்திக்காக காத்திருப்பது எனக்கு வழக்கமானதுதான். ஆனால் ஜே.ஆர்.டியும் எனதருகில் காத்திருப்பது எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியது. ஓரக்கண்ணால் அவரைப்பார்த்தேன். சாதாரண வெள்ளை நிற காற்சட்டையையும் சட்டையையும் அவர் அணிந்திருந்தார். வயதாகி இருந்தாலும் கூட அவருடைய முகம் பொலிவாக இருந்தது. தான் பெரியவன் என்ற எண்ணம் எதுவும் அவருக்கிருந்ததாக தோன்றவில்லை.

"இந்த மனிதனைப்பார்! ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். நம் நாட்டில் எல்லோராலும் மிகவும் மதிக்கப்படக்கூடிய ஒருவர். இருந்தாலும் கூட ஒரு சாதாரண தொழிலாளிக்காக அவர் காத்திருக்கிறாரே!" என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

மூர்த்தி தூரத்தில் வருவதைப்பார்த்து விட்டு அவரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

"அம்மா.. உங்கள் கணவரிடம் சொல்லுங்கள் - இனி ஒரு போதும் அவர் மனைவியை காத்திருக்க வைக்கும்படி விட வேண்டாம் என்று" என்றார்.

1982 ஆம் ஆண்டு என்னுடைய வேலையை நான் இராஜினாமா செய்ய நேர்ந்தது. எனக்கு வேலையை விட்டுச்செல்ல விருப்பமில்லை; ஆனால் எனக்கு வேறு வழியும் இல்லை.

கணக்கு வழக்குகளை முடித்து எனக்கு சேர வேண்டிய தொகையைப்பெற்றுக்கொண்டு பாம்பே ஹவுஸின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தேன்.

கணக்கு வழக்குகளை முடித்து எனக்கு சேர வேண்டிய தொகையைப்பெற்றுக்கொண்டு பாம்பே ஹவுஸின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது ஜே.ஆர்.டி மேலே வந்து கொண்டிருந்தார். என்னைப்பார்த்ததும் சற்றே சிந்தித்தார்.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல விரும்பி நான் நின்றேன். அவர் என்னைப்பார்த்தார்.

"என்ன செய்கிறீர்கள் திருமதி.குல்கர்னி?" என்றார் அவர். (அவர் என்னிடம் பேசும் போது அவ்விதம்தான் வினவுவார்.)

"ஐயா. நான் டெல்கோவை விட்டு பிரிந்து செல்கிறேன்" என்றேன்.

"எங்கே செல்கிறீர்கள்?" என்றார்.

"புனே..விற்கு செல்கிறேன். என் கணவர் இன்போஸிஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். அதனால் நான் புனே..விற்கு குடிபெயர்கிறேன்" என்றேன்.

"ஓ..! அதில் வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

"வெற்றி பெறுவோமா என்று எங்களுக்குத் தெரியாது" என்று ஆரம்பித்ததும், "எப்போதும் அவநம்பிக்கையுடன் ஆரம்பிக்கக்கூடாது" என்று அவர் அறிவுறுத்தினார்.

"எப்போதும் தன்னம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். நீங்கள் வெற்றி பெறும் போது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். சமூகம் நமக்கு ஏராளமானவற்றைத் தந்திருக்கிறது. அதற்கு கைமாறாக நாமும் செய்ய வேண்டும். எல்லாம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்" என்று கூறி விட்டு தொடர்ந்து படிகளில் ஏற ஆரம்பித்தார்.

அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஆண்டுக்கணக்கில் அப்படியே இருந்தது போல ஒரு உணர்வு. அவரை உயிருடன் நான் பார்த்தது அதுவே கடைசி முறை.

பல வருடங்களுக்கு பிறகு இரத்தன் டாடாவை அதே பாம்பே ஹவுஸில் சந்தித்தேன். ஜே.ஆர்.டி அமர்ந்திருந்த அதே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் டெல்கோவில் பணி புரிந்த இனிமையான காலங்களைப் பற்றி கூறினேன்.

பின்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில், " 'ஜே' குறித்து நீங்கள் கூறியது மிகவும் நன்றாக இருந்தது. வருத்தம் என்னவென்றால் இப்போதைய நிலையில் உங்களைக் காண அவர் உயிருடன் இல்லை என்பதுதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜே.ஆர்.டி அவர்களை மிகச்சிறந்த மனிதராக கருதுகிறேன். ஏன் என்றால் அவர் எவ்வளவோ அலுவல்களுக்கு இடையிலும் ஒரு பெண் எழுதிய சாதாரண அஞ்சலட்டையைப் பார்த்து நீதி கிடைக்கும் படி செய்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கும். அவர் நினைத்திருந்தால் என்னுடைய அஞ்சலட்டையை தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் அப்படி அவர் செய்ய வில்லை. பணத்தையோ அல்லது யாருடைய சிபாரிசையோ எதிர்பாராமல் நின்ற ஒரு முகம் தெரியாத பெண்ணின் உணர்வுகளை அவர் மதித்தார். அவளுக்கு தன் நிறுவனத்தில் பணிபுரியவும் ஒரு வாய்ப்பைக்கொடுத்தார். அவர் அவளுக்கு வெறும் வேலையை மட்டும் வழங்கவில்லை; அவளுடைய வாழ்க்கையை, அவளுடைய சிந்தனையை மாற்றினார்.

இன்றைய பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்களில் 50 விழுக்காட்டினர் பெண்கள். பல்வேறு ஆலைகளிலும் இப்போது பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். அந்த மாற்றங்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் ஜே.ஆர்.டியை நினைத்துக்கொள்கிறேன். காலம் ஒரு கணம் நின்று வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று கேட்குமெனில், நாங்கள் ஆரம்பித்த நிறுவனம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஜே.ஆர்.டி உயிரோடு இருக்க வேண்டும் என்று கேட்பேன். அவரும் நிச்சயம் முழுமனதோடு அதை இரசித்திருப்பார்.

டாட்டா குறித்த எனது அன்பும் மரியாதையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எளிமை, பெருந்தன்மை, கனிவு, தொழிலாளர்கள் மீது அக்கறை ஆகியவற்றில் ஜே.ஆர்.டியை ஒரு முன்னோடியாக பார்த்தேன். அவருடைய நீலக்கண்கள் பிரம்மாண்டத்தையும் அழகையும் கொண்ட வானத்தை நினைவுபடுத்தும்.

- சுதா மூர்த்தி.

(சுதா மூர்த்தி இன்போசிஸ் பவுண்டேசனின் தலைவர். சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அவரது கணவர்.)

ஆங்கில மூலம் : Lasting Legacies (Tata Review- Special Commemorative Issue 2004), brought out by the house of Tatas to commemorate the 100th birth anniversary of JRD Tata on July 29,2004.

சிவா.ஜி
14-06-2010, 04:17 PM
சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள். இன்றைய இமாலய நிறுவனத்தின் தலைவர்...நேற்ரைய வாழ்க்கையை மறக்காமல் இருப்பதும், தனக்கு முதல் வாய்ப்பை அளித்த ஜே.ஆர்.டி அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதும் அவரது வெற்றியைப் பறைசாற்றுகிறது.

இன்றளவும் இன்ஃபோசிஸின் அலுவலகங்களில் ஜே.ஆர்.டி அவர்களின் புகைப்படம் இருக்கிறது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி பாரதி.

பாரதி
14-06-2010, 04:59 PM
சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள். இன்றைய இமாலய நிறுவனத்தின் தலைவர்...நேற்றைய வாழ்க்கையை மறக்காமல் இருப்பதும், தனக்கு முதல் வாய்ப்பை அளித்த ஜே.ஆர்.டி அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதும் அவரது வெற்றியைப் பறைசாற்றுகிறது.

இன்றளவும் இன்ஃபோசிஸின் அலுவலகங்களில் ஜே.ஆர்.டி அவர்களின் புகைப்படம் இருக்கிறது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.


நன்றி சிவா.

நாராயண மூர்த்தி அவர்களைக்குறித்த புத்தகங்களை முன்பே படித்திருக்கிறேன். ஆனால் திருமதி சுதா மூர்த்தி குறித்து இன்றுதான் அறிந்தேன்! என்னைப்போல அவரைக்குறித்தும் ஜே.ஆர்.டி அவர்களைக் குறித்தும் அறியாதவர்களுக்கு இதைப்போன்ற நிகழ்வுகள் ஒரு நம்பிக்கையை அளிக்க வல்லவை.

கீதம்
15-06-2010, 01:25 AM
தன்னம்பிக்கையைத் தூண்டும் அற்புதமான பதிவு. சிறந்த மொழியாக்கம் தடையின்றித் தொடர உதவியது. மிக்க நன்றி பாரதி அவர்களே.

பாரதி
15-06-2010, 01:33 AM
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே.

மதி
15-06-2010, 04:52 AM
நல்ல மொழியாக்கம். ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் படிப்பது நன்றாக இருக்கிறது..

அக்னி
15-06-2010, 06:45 AM
யாரைக்குறித்து வியப்பது...

முதலாளியையா அல்லது தொழிலாளியையா...

இருவரும் சிறப்புகுரியவரே...

நல்லதொரு சுயசரிதையை மொழிமாற்றம் செய்து தந்தமைக்கு நன்றி அண்ணா...

செல்வா
15-06-2010, 06:55 AM
இந்தக் கட்டுரையை முன்பே வாசித்த ஞாபகம் என்றாலும். பாரதியண்ணாவின் தமிழில் வாசிக்கும் அனுபவம் மிக அருமை.

நல்ல மொழிபெயர்ப்பு.... தொடர்ந்து இது போன்ற படைப்புகளை தருவதோடு

தங்கள் சொந்தப் படைப்புகளையும் தருமாறு வேண்டுகிறென்.

அன்புரசிகன்
15-06-2010, 10:53 AM
பெருமைப்படுத்தப்படவேண்டிய முதலாளியும் தொழிலாளியும்... சிரத்தை எடுத்து பகிர்ந்ததற்கு நன்றிகள் அண்ணா...

வாழ்த்துக்கள்.

Akila.R.D
15-06-2010, 11:16 AM
பல முறை மின்னஞ்சலில் படித்த செய்திதான்...

ஆனால் இப்போதுதான் தமிழில் படிக்கிறேன்...

பாரதி அவர்களுக்கு நன்றி...

த.ஜார்ஜ்
15-06-2010, 02:24 PM
அருமையான மொழிபெயர்ப்பு பாரதி.கூடவே நல்ல விசயமும்.

பாரதி
15-06-2010, 05:22 PM
நல்ல மொழியாக்கம். ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் படிப்பது நன்றாக இருக்கிறது..
நன்றி மதி.


யாரைக்குறித்து வியப்பது...
முதலாளியையா அல்லது தொழிலாளியையா...
இருவரும் சிறப்புகுரியவரே...

அச்சமில்லா தொழிலாளியும் அரவணைக்கும் முதலாளியும் இருப்பின் ஊக்கத்திற்கும் அமைதிக்கும் பஞ்சமேது?
நன்றி அக்னி.


இந்தக் கட்டுரையை முன்பே வாசித்த ஞாபகம்
நல்ல மொழிபெயர்ப்பு.... தொடர்ந்து இது போன்ற படைப்புகளை தருவதோடு
தங்கள் சொந்தப் படைப்புகளையும் தருமாறு வேண்டுகிறென்.
நன்றி செல்வா.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.


பெருமைப்படுத்தப்படவேண்டிய முதலாளியும் தொழிலாளியும்...
ஆமாம் அன்பு. மிக்க நன்றி.


பல முறை மின்னஞ்சலில் படித்த செய்திதான்...
ஆனால் இப்போதுதான் தமிழில் படிக்கிறேன்...

பலரும் அறிந்த ஒன்றைத்தான் இங்கே இட்டிருக்கிறேன் என்பது புலனாகிறது. இருப்பினும் மகிழ்ச்சியே. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.


அருமையான மொழிபெயர்ப்பு பாரதி.கூடவே நல்ல விசயமும்.
ஊக்கத்திற்கு நன்றி ஜார்ஜ்.

விகடன்
07-07-2010, 01:14 PM
படிக்கையில் எமது கடந்தகாலங்களையும் சிந்திக்கவைத்திட்ட பதிவு. உண்மைதான். எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பெரிய மனிதர்களை சந்தித்திருப்போம். தலைதெறிக்க ஓடும் கால ஓட்டத்தில் அவர்களை மீள ஒருதடவை நினைவுகூர்ந்து பார்க்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. இவ்வாறு வரும் ஆக்கங்களை படிப்பவர்களில் ஒருதொகையினர் மட்டுமே சிந்தித்து முடிந்தால் ஓர் துளி கண்ணீரும் சிந்திவிடுவார்கள்.


இரசித்துப்படித்த ஆக்கம்.
மொழிமாற்றித்தந்தமைக்கு மிக்க நன்றி.