PDA

View Full Version : சங்கரன்....!!!!



சிவா.ஜி
05-06-2010, 04:34 PM
குடும்பத்தலைவர் மறைந்த சோகத்தை கரைக்கும் வேலையைக் காலம் செய்துகொண்டிருக்க, தங்களை சகஜநிலைக்கு மாற்றிக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தார்கள் அந்த வீட்டிலிருந்த ஆறுபேரும்.

ஜானகிராமன் அந்த மத்திய அரசு நிறுவனத்தில் உயர்பதவியிலிருக்கும்போதே...மாரடைப்பில் இறந்துவிட்டார். அவரது மகனும், மகளும் இருவருமே அதே நிறுவனத்தில்தான் பணிபுரிந்தார்கள். அவரது இறப்புக்குப் பின் கடந்த மாதம்தான், அவருக்காக அளிக்கப்பட்ட பெரிய வீட்டிலிருந்து மாறி, முத்துகிருஷ்ணனுக்கு கிடைத்த சிறிய வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

முத்துகிருஷ்ணன் மூத்தவன். ஜெயா அவனுக்கு அடுத்தவள். அதே நிறுவனத்தின் மருத்துவமனையில் பேதாலஜிஸ்டாக பணிபுரிகிறாள். அவளுக்கு அடுத்தவன்தான் சங்கரன். 'தான்' என்ற விகுதியைச் சேர்த்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பிறகு பார்க்கலாம். அமுதா..முத்துக் கிருஷ்ணனின் மனைவி, அவர்களின் எட்டுமாதக் குழந்தை பூஜா மற்றும், கணவரின் திடீர் மறைவை...இன்னமும் ஏற்றுக்கொள்ள இயலாமல், பகலில் வெற்றுப்பார்வையும், இரவுகளில் புலம்பலுமாக அம்மா...இவர்கள்தான் அந்த வீட்டிலிருக்கும் ஆறுபேர்.

முத்துக்கிருஷ்ணனும், அமுதாவும் தங்கள் பொருள்களை மூட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். முத்துகிருஷ்ணனின் முகம் வாடியிருந்ததிலிருந்து தெரிந்தது...அவனுக்கு இந்த செயலில் விருப்பமில்லை என்று. அடிக்கடி அவனை முறைத்துப்பார்த்தே அவனை...வேலை வாங்கிக்கொண்டிருந்தாள் அமுதா. அம்மா எப்போதும் போல வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயா கவலை தேங்கிய முகத்துடன் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாமான்களின் நகர்த்தல் ஓசையும், கயிறு கட்டும் சரக் ஒலியும்...அந்த நிசப்தத்தை அவ்வப்போது உடைத்துக்கொண்டிருந்தன.சங்கரன் எதுவும் அறியாமல், தூங்கிக்கொண்டிருந்த பூஜாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நேற்று நடந்த அமளிக்கு காரணம் தான்தான் என்பது தெரியாமல்...உமிழ்நீர் வடியும் சற்றுக் கோணலான வாயை, துணியால் துடைத்துக்கொண்டிருந்தான்.

சங்கரன்...ஒரு விதத்தில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். துக்கம், வலி, சோகம் எதையும் உணரும் சக்தியை ஆண்டவன் அவனுக்குக் கொடுக்கவில்லை. சந்தோஷத்துக்கு ஒரு ஆங்காரம்...கோபத்துக்கு ஒரு ஊங்காரம்...மற்றபடி சிறு சிறு உறுமல்...இவைதான் அவனது மொழி. மூளையின் கட்டளைக்குக் கீழ்படியாத கைகளும் கால்களும், தங்கள் இஷ்டத்துக்கு அங்குமிங்கும் அலைந்தபடிதான் நடப்பான். பிறந்தவுடன் அழாதக் குழந்தை அவன். இப்போதும் அப்படியே இருக்கிறான். 26 வயதாகிறது. ஆனாலும்...சாப்பாட்டைச் சிந்தாமல் சாப்பிடத்தெரியாது. வாயிலிருந்து எப்போதும் வழிந்துகொண்டிருக்கும் உமிழ்நீரைத் துடைக்கக்கூடத் தெரியாமல்தான் இருந்தான். ஜெயாதான் அவனுக்கு ஒரு கைக்குட்டையைக் கொடுத்து...துடைத்துக்கொள்ள பழக்கியிருந்தாள்.

பெரும்பாலான...நேரங்களில் அவனது படுக்கைக் கழிவுகளை..அவள்தான் சுத்தம் செய்வாள். அவனைக் குளிப்பாட்டி, உடை மாற்றி, சாப்பாடு ஊட்டி...ஒரு வருடம் இளையவனான அவனை ஒரு வயதுக் குழந்தையாகப் பராமரித்து வந்தாள். அவளுடைய அம்மா கூடச் சொல்லுவார்..."அவனுக்கு என் மகதான் அம்மா" என்று. முத்துக்கிருஷ்ணனுக்கும் தம்பிமேல் பாசம் அதிகம்தான். அவனை மாலை நேரங்களில் வெளியே நடக்க அழைத்துச் செல்வான். அங்குமிங்கும் அலையும், தள்ளாட்ட நடையுடன் சங்கரன்...கண்கள் விரித்துப் பராக்குப் பார்த்துக்கொண்டே வருவான்.

நேற்று தூங்கிக்கொண்டிருந்த, தன் அண்ணன் மகளை பாசமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தவன்... குழந்தை மீது அமர்ந்த ஈயை அடிப்பதாய் நினைத்துக்கொண்டு...பக்கத்திலிருந்த தடித்த புத்தகத்தால்...குழந்தையை பலமாய் அடித்துவிட்டான்...வீரென்று அழுதக் குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த அமுதா...கையில் புத்தகத்துடனிருந்த சங்கரனைப் பார்த்ததும்... எக்கச்சக்கமாய் ஆத்திரமடைந்தாள். குழந்தையை வாரி அணைத்துக்கொண்டே சத்தம்போட்டு முத்துக்கிருஷ்ணனை அங்கே அழைத்தாள்.

"உங்க தம்பி செஞ்சிருக்கிற வேலையைப் பாத்தீங்களா...இந்த லூஸு..என் புள்ளையைக் கொலை பண்ணப்பாத்திருக்கானே....கடவுளே படாத எடத்துலப்பட்டு ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆயிருந்தா....என் புள்ள கதி...."

கையில் புத்தகத்துடன் நின்றுகொண்டிருந்த சங்கரனைப் பார்த்ததும், புரிந்துகொண்டான். அமுதாவிடமிருந்துக் குழந்தையை வாங்க முயற்சித்தவனின் கையைத் தட்டிவிட்டாள்.

"அவன் என்ன தெரிஞ்சா செஞ்சான். சரி விடு. இனிமே ஜாக்கிரதையா பாத்துக்கலாம்."

"எப்படி...24 மணி நேரமும் இவ பக்கத்துலே இருக்க முடியுமா. இங்க பாருங்க...இதெல்லாம் சரிப்பட்டு வராது. நாம வேற வீட்டுக்குப் போயிடலாம். நானும் ஒவ்வொருமுறை சொல்றப்பவும்...அம்மாவையும், இவங்களையும் விட்டு வரமாட்டேன்னு சொல்லிக்கிட்டேயிருந்தீங்க. ஆனா...இப்ப என் புள்ளையோட உயிரை இந்தப் பைத்தியத்துக்கிட்டருந்துக் காப்பாத்தனுன்னா...இங்கருந்துப் போகனும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் இனிமே இந்த வீட்ல ஒருநாள்கூட இருக்க மாட்டேன்"

"அமுதா...இதெல்லாம் ரொம்ப ஓவர். அவனுக்கு நம்ம பொண்ணுமேல ரொம்ப பாசம். ஏதாவது பூச்சி, கீச்சியப் பாத்திருப்பான்...அதான் அடிச்சிருக்கான். சரி இனிமேல ஜாக்கிரதையாப் பாத்துக்கலாம்"

"முடியாதுங்க. இனிமே என்னாலத் தாங்க முடியாது. துணியில்லாம நிக்கறது, ஹால்லயே அசிங்கம் பண்றதுன்னு இதுவரைக்கும் எவ்வளவோ பொறுத்துக்கிட்டேன்...இப்ப என் கொழந்தையோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும்...இனிமேலயும் இங்கருக்க என்னால முடியாது. நீங்க வர்றதுன்னா வாங்க இல்லன்னா...நான் மட்டும் எங்க வீட்டுக்கே போயிடறேன்."

"அமுதா...ஜெயாவுக்குன்னு இன்னும் ஒரு வாழ்க்கை அமையல...இந்த நிலையில வேற ஆம்பிளத் தொண இல்லாம விட்டுட்டுப் போனா...பாக்கறவங்க என்ன நினைப்பாங்க...நாலுபேர் எப்படியெல்லாம் பேசுவாங்க..."

"என் கொழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அந்த நாலுபேர்தான் வந்து காப்பாத்தப் போறாங்களா? இங்க பாருங்க...வெட்டி ஞாயம் பேசிக்கிட்டிருக்க வேண்டாம்....போய்த்தான் ஆகனும்"

தீர்மான*மாய் சொல்லிவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டாள்.

ஜெயாவும்...அண்ணனிடம் வந்து...

"அண்ணி சொல்றதுல தப்பில்லன்னா...எப்பவும் நாம இவனைப் பாத்துக்கிட்டே இருக்க முடியாது. அம்மாவும்...முன்ன மாதிரி இல்ல. அவங்களச் சுத்தி என்ன நடக்குதுன்னேத் தெரியாம ஷாக்குல இருக்காங்க. இந்த நிலமையில...நீ தனியாப் போயிடறதுதான் நல்லது. இந்தவீட்ட எனக்கு அலாட் பண்ணிக்கறேன். நீ கிளம்பு. பூஜா கொஞ்சம் பெரியவளானதும் எங்களோடவே வந்துடு. நாளைக்கு சண்டே...எல்லாம் பேக் பண்ணிக்க...."

சொல்லிவிட்டு...அதுவரை அடக்கிவைத்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்...சமயலறைக்குள் ஓடி..கதவைச் சாத்திக்கொண்டு..கதறினாள்.


முத்துக்கிருஷ்ணன் குடும்பம் தனிக்குடித்தனம் போனபிறகு....பகலில் சங்கரனைப் பார்த்துக்கொள்வது பெரும்பாடாய் போய்விட்டது. வந்த வேலைக்காரிகள் யாரும் ...இரண்டுநாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாம*ல்..போய்விட்டார்கள். அம்மாவுக்கும் அவனைக் கையாளக்கூடிய சக்தியும் இல்லை....தெளிவும் இல்லை. வேறு வழியில்லாமல்...ஒரு அறையில் அவனை வைத்துப் பூட்டிவிட்டு, சாப்பாட்டை வைத்துவிட்டு, அலுவலகம் போகத்தொடங்கினாள் ஜெயா. முதல் ஒரு வாரத்துக்கு அவனது உறுமலும், ஊங்காரமும்...அக்கம்பக்கம் குடியிருப்போரை எரிச்சல் படுத்தி...ஜெயாவிடம் புகாராய் வந்து தொல்லைப் படுத்தியது.
அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை எடுத்துக்கொண்டு, அவனைத் தனியாய் இருக்கப் பழக்கப்படுத்தினாள். அவனது அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து...கார்ட்டூன் படங்களை ஓடவிட்டு சமாதானப்படுத்தி..ஒருவழியாய் அவனை...அவளில்லாமல் பகல் முழுதும் இருந்துகொள்ளுமாறு ஆக்கினாள்.

மாதங்கள் சென்றது. அம்மாவின் நிலையிலும் சிறிது சிறிதாய் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளை தெளிவடைந்ததும்...மகளின் நிலையை நினைத்துப் புலம்பத்தொடங்கினார்.

"உனக்கும் வயசாயிட்டேப்போகுது ஜெயா...எவ்ளோ நாளைக்குத்தான் இவனையும் என்னையும் கவனிச்சிக்கிட்டு இருப்பே. உனக்குன்னு ஒரு நல்லகாரியம் காலாகாலத்துல நடக்க வேண்டாமா...உங்கப்பா இருந்திருந்தா இப்படியா விட்டு வெச்சிருப்பாரு...."

"அம்மா...ஆரம்பிச்சிட்டியா....அப்பாக்கிட்ட சொன்ன அதையேத்தான் உனக்கும் சொல்றேன். நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்ல. நீங்க ரெண்டுபேர் போதும் எனக்கு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா நீ எவ்ளோ நாளைக்கு இவனை வெச்சுப் பாத்துக்க முடியும்..? உனக்கப்புறம் அண்ணனோ அண்ணியோ பாத்துக்குவாங்களா? நீ எதையும் நெனைச்சு மனசப் போட்டுக் கொழப்பிக்காத....நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.."

ஜெயாவின் பேச்சைக் கேட்டு சமாதானமாகாமல் புலம்பிக்கொண்டே இருந்து...சிறிதுநாட்களில்...அதுவும் அடங்கி இருந்தபோதுதான்...பிரதீப் வந்தான்.

எந்தவித வெளி இடையூறுமின்றியிருக்கும் சலனமற்ற குளத்தின் மேற்பரப்பு, இறுக்கமானக் கண்ணாடியாய் தோற்றப்பிழையைக் காட்டினாலும், ஏதோ ஒரு மரத்தினின்று உதிரும் சருகோ, யாரோ ஒரு சிறுவன் எறிந்த கல்லோ, சின்னப் பறவையின் சிறகடிப்போ சலனத்தை உண்டாக்கி, தோற்றத்தை மாற்றி...அது கண்ணாடியல்ல...தண்ணீர்தானெனக் காட்டிவிடுவதைப்போல, சலனமற்றிருந்த ஜெயாவின் மனதின் மேற்பரப்பை மட்டுமல்ல..ஆழம் வரை அசைத்துவிட்டது...பிரதீப்பின் நட்பு. தொழில்முறைப் புன்னகைகளைப்போல, புன்னகை முகமூடியணிந்திருந்த ஜெயாவை...உண்மைச்சிரிப்பை உதிர்க்க வைத்தன அவனது சுவாரசியமான பேச்சும், கபடமில்லாத நட்பும். ஜெயாவின் வீட்டுக்கே வந்துபோகக்கூடிய ஆரோக்கியமான உறவு அவர்களுக்குள் வளர்ந்திருந்தது. சங்கரனைப்பற்றி அக்கறையான அவனது விசாரிப்பு அவளுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.

அன்று வரும்போதே, கையில் டிஜிட்டல் கேமராவைக் கொண்டுவந்த பிரதீப்...ஜெயாவையும், அம்மாவையும் சேர்த்து நிற்கவைத்துப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்த சங்கரன்...மெல்ல பிரதீப்பின் பக்கத்தில் வந்து...ஆர்வமாய்...அதன் சின்னத்திரையில் தெரிந்த தன் அம்மா, அக்கா உருவங்களைப் பார்த்துக் கைகொட்டி...ஹூ...ஹூ...என்றான்.உடனே அவனையும் ஜெயாவுக்கு அருகில் நிறக வைத்து ஒரு படம் எடுத்தான். கேமராவை தானியங்கியில் வைத்து, சங்கரனை,ஜெயாவுக்கும் தனக்கும் நடுவில் நிற்க வைத்து எடுத்த புகைப்படத்தைப் பிரதியெடுத்து, அடுத்த நாள் அதை சங்கரனிடம் காட்டியதும் முறைத்துப்பார்த்துவிட்டு தூக்கிப் போட்டுவிட்டான். கொஞ்சநேரம் கழித்து அதை எடுத்தவன்...தன் அக்காவின் பக்கத்தில் தன்னையும் பார்த்து... அதுவரை அவன் வெளிப்படுத்தாத ஒரு உணர்ச்சியை வித்தியாசமானக் குரலில்,சந்தோஷமாய் வெளிப்படுத்தியதைப் பார்த்து, ஜெயா அவனைக் கட்டிக்கொண்டு சிரித்தாள். கண்களில் கண்ணீர் வழிய பிரதீப்பைப் பார்த்து தலையசைத்து நன்றி சொன்னாள். அந்தப்படத்தை எடுத்து தன் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்ட சங்கரன்..அன்றிலிருந்து அதை மறந்தும் வேறெங்கும் வைக்காமல்....நினைவு வரும்போதெல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.


அதற்கு அடுத்தநாள், அலுவலகத்தில் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னான். ஜெயா இதை எதிர்பார்த்திருந்ததைப்போல எந்த அதிர்ச்சியையும் காட்டாமல்...விரக்தியாய் சிரித்தாள்.

“எனக்குப் புரியுது ஜெயா. கடைசியில இவனும் அங்கதானே வந்து நிக்கிறான்....அப்படீன்னுதானே நினைச்சி சிரிக்கிறே...”

“இல்ல பிரதீப். நீ ப்ரபோஸ் பண்ணதுல தப்பேயில்ல. ஆனா என்னொட நிலைமையை நினைச்சுத்தான்...சிரிச்சேன். விட்ரு பிரதீப். எப்பயும் நண்பர்களாகவே இருந்துடலாம்”

“சங்கரனை நினைச்சுத்தான் நீ இப்படி சொல்றன்னு எனக்குத் தெரியும் ஜெயா. எனக்கு 32 வயசாவுது. எங்கப்பாவும் அம்மாவும்...எத்தனையோ தடவை என்னைக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்துனாங்க...எனக்கென்னவோ...அதுல இண்ட்ரெஸ்டேயில்லாமத் தட்டிக்கழிச்சிக்கிட்டு வந்தேன். ஆனா ட்ரான்ஸ்ஃபர்ல நம்ம ஆஃபீஸுக்கு வந்து, உன்னோட பழக அரம்பிச்சதுக்கப்புறம்..உன்மேல ஒரு ஈடுபாடு வந்துருச்சி. உங்கம்மா, சங்கரன் ரெண்டுபேரையும் நம்மக் கூடவே வெச்சுக் கடைசி வரைக்கும் பாத்துக்கலாம். ப்ளீஸ்...உன்னோட முடிவை மாத்திக்கம்மா...”

“முடியாது பிரதீப். அம்மாவை வேணுன்னா..வெச்சுக் காப்பாத்த முடியும். ஆனா சங்கரனை....ம்ஹீம்...பிராக்டிகலா யோசனைப் பண்ணிப்பாரு...வேணா...ப்ச்...விட்டுடுப்பா”

அதற்குப்பிறகு வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மாவையும் கூட்டு சேர்த்துக்கொண்டு..ஜெயாவை வற்புறுத்திக்கொண்டேயிருப்பான். அவளோ நிர்தாட்சன்யமாய் மறுத்துவிட்டாள். லேசாய் அவளுக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தபோது, சங்கரனுக்கு வலிப்பு வந்து...மருத்துவமனையில் சேர்த்து, மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அவனை மீட்டெடுத்து வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு சுத்தமாய் அந்த நினைப்பையே மனதிலிருந்து எடுத்தெறிந்துவிட்டாள்.

ஆனாலும்...இரவுகளில் யாரும் அறியாமல்..சமையலறைக்குள் உட்கார்ந்துகொண்டு கண்ணீர்விடுவாள். அன்று, பிரதீப்பும் அவளும் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தவள்...ஏதோ உணர்வில் தலையை நிமிர்த்துப் பார்த்தவள்..திடுக்கிட்டுப் போனாள். சங்கரன் அந்தப் படத்தையும், அவளையுமேப் பார்த்துக்கொண்டிருந்தான். வழியும் உமிழ்நீரையும் துடைத்துக்கொள்ளாமல்..வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்தநாள்...அவனது அறையைவிட்டு வெளியே வரவேயில்லை. மாலையில் வீட்டுக்கு வந்தவளிடம்,

“ஜெயா நீ ஆபீஸுக்குப் போனதிலருந்து..அவன் ரூமுக்குள்ள ஒரு சத்தத்தையும் காணம்மா...டி.வி கூட பாக்கல...கதவைத் தட்டித் தட்டிப் பாத்துட்டேம்மா...எனக்கென்னவோ பயமாயிருக்கு..”

அம்மா சொன்னதும், பதறிப்போய்விட்டாள் ஜெயா. ஓடிச்சென்று கதவைப் பலமாகத்தட்டி... அழைத்தாள். அக்காவின் குரல் கேட்டதும் கதவைத்திறந்துகொண்டு வந்தவன்...ஜெயாவை நேராய்ப் பார்த்து, தன் சட்டைப்பையிலிருந்த அந்தப் புகைப்படத்த எடுத்து...அதிலிருந்த பிரதீப்பின் முகத்தைத் தட்டுத்தடுமாறி...தடவிக் காட்டி...ஹூ...ஹூ...என்றான். புரிந்துகொண்ட ஜெயா அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு...முடியாதுடா....என வெடித்து அழுதாள்...அவளுடைய கண்ணீரைத் துடைக்க விரும்பி...அவள் கன்னத்தைத் தடவினான்...பிறகு கோபமாய் ஹூங்காரத்தோடு திரும்ப அறைக்குள் போனவன்..தடாலென்று தரையில் விழுந்து..கைக் கால்களை இழுத்துக்கொண்டு துடித்தான்.

உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாள். ஐ.சி.யுவிற்கு கொண்டு செல்லப்பட்டதும்..வெளியேக் காத்திருக்கச் சொன்னார்கள். ஜெயாவின் அழைப்பைக் கேட்டதும் ஓடி வந்தப் பிரதீப்பும் அவர்களுடன் காத்திருந்தான். அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு...ஆதரவுடன்...லேசாய் அழுத்தினான். அரைமணிநேரம் கழித்து உள்ளே அனுமதிக்கப்பட்டதும் மூன்றுபேரும் சென்றார்கள்.

மூக்கையும் வாயையும் சேர்த்துப் பொத்தியிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்குடன், இடதுகையில் செருகப்பட்டிருந்த ஊசியின் மூலம் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த நிலையில் சங்கரனைப் பார்த்துக் கேவினாள். லேசாய்க் கண்ணைத் திறந்துப் பார்த்த சங்கரன்...பிரதீப்பையும், ஜெயாவையும்...மாறி மாறிப் பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டான்.

“செடேடிவ் குடுத்திருக்கு ஜெயா. நல்லாத் தூங்கட்டும்...மூச்சுத் திணறல் இருக்கு...அதான் ஆக்ஸிஜன் வெச்சிருக்கோம். காலையிலக்குள்ள* சரியாயிடும். நீ போய்ட்டு காலையில வா.”

தெரிந்த டாக்டர் சொன்னதும்..கிளம்பினார்கள். விடியற்காலை நாலரைக்கு... மருத்துவமனையிலிருந்து அந்த செய்தி கிடைத்ததும்...ஜெயா..அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் கதறினாள். “சங்கரன் செத்துட்டானாம்மா....”

இவர்கள் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தபோது...பிரதீப்பும் பதட்டத்துடன் அங்கேக் காத்திருந்தான். அழுகையோடு ஓடிய ஜெயாவை அதே வேகத்தில் பின் தொடர முடியாத அம்மாவைக் கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு...பிரதீப்பும் அவளைத் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தான். மரணத்திற்கானக் காரணத்தைச் சொன்னதும் ஜெயா..அதிகப்பட்ச ஆத்திரத்தில் கீச்சுக்குரலில் கத்தி சண்டை போட்டாள். அவளது சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த மற்றொரு மருத்துவர். அவளை சமாதானப்படுத்திவிட்டு,

“தூக்கத்திலேயோ...இல்லை இப்படி அப்படி புரண்டப்பவோ...ஆக்ஸிஜன் மாஸ்க் கழண்டிருக்கு ஜெயா. கொஞ்ச நேரத்தில் மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டிருக்கு. இதுக்கு நாங்க என்ன செய்யமுடியும். நீயும் இந்த மருத்துவமனையின் ஸ்டாஃப்தானே...புரிஞ்சிக்கம்மா...”

அழுதுகொண்டே சங்கரனின் தலைப்பக்கம் சென்று அவனது தலைமுடியைக் கோதினாள். துக்கத்தில் அடைத்துக்கொண்ட தொண்டையிலிருந்துக் கேவல்கள்...ஹீனஸ்வரத்தில் வந்தது. அப்போதுதான் அவனது மூடியிருந்த இடதுக் கையைப் பார்த்தாள். அவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கசங்கலுடன் இறுகப்பற்றியிருந்தான். அதை அவன் கையிலிருந்து விடுவித்துப் பார்த்தவள் திடுக்கிட்டாள். பிரதீப் அவளது திடீர் திடுக்கிடலுக்குக் காரணம் புரியாமல்...அவள் கையிலிருந்த அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தான்.


அதில்...நடுவிலிருந்த சங்கரனின் முகம் சுரண்டப்பட்டு....பிய்ந்திருந்தது.

அமரன்
05-06-2010, 10:04 PM
மீண்டும் ஒரு உணர்வு பூர்வமான கதை சிவாவிடமிருந்து..

ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு பாத்திரங்கள் கொண்ட கதை வட்டம்.

ஐந்து பாத்திரங்கள் சராசரி தாண்டாமல் சுற்றி வருகின்றன.

மன/மூளைச் சிதைவுக்கு ஆளான சங்கரன்கள் அன்பு கொள்வது வெகு சிலரிடமே.

அப்படிக் கொண்ட அன்பை வெளிக்காட்டும் போது அவர்கள் தீவிரவாதிகளாகி விடுகின்றனர்.

தீவிரவாதிகள் என்று சொல்லக் கூட நாக் கூசுகிறது.

சங்கரன் செய்தது தற்கொலை இல்லை.. தற்கொடை எனும் போது எப்படிச் சுகிக்கும் தீவிரவாதி என்பது..

வித்தியாசமான சிந்தனையுடன் கலக்கும் கதைஞனே! வாழ்த்தும் பாராட்டும்

கீதம்
06-06-2010, 01:18 AM
சங்கரனின் தியாகம் மகத்தானது. வாயில் வடியும் உமிழ்நீரையும் தானாய்த் துடைக்கத்தெரியாத ஒருவனுக்கு, தன் தமக்கையின் வாழ்வு தன்னால் கெடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதுதான் பாசம்.வெளிப்படையாய்ச் சொல்லாமலேயே அவனது செய்கைகள் மூலம் அவனது உள்மன உணர்வுகளை நாம் அறியச்செய்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். மிகுந்த பாராட்டுகள், அண்ணா.

(உங்கள் கணக்குப்படி குடும்பத்தலைவர் தவிர்த்து அந்த வீட்டில் ஆறுபேர்தானே இருக்கிறார்கள்?)

சிவா.ஜி
06-06-2010, 05:31 AM
முதல் பின்னூட்டமாய்...எழுத்துவித்தகரின் ஊக்கம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி பாஸ்.

உண்மைதான் இப்படிப்பட்டவர்களுக்கு சிலரின் மீது மட்டும் அளவில்லா பாசம் வந்துவிடுகிறது.

ஆனால்...மனவளர்ச்சிக் குன்றியவன்...தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு சிந்திப்பானா என்றால்....சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதனால்தான்...அதை யூகத்துக்கு விட்டுவிட்டேன்.

அக்கா..தன்னால் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பது சங்கரனுக்குத் தெரிகிறது. அதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை...கோபம் மட்டும் வருகிறது. அப்போதைய ஆத்திரத்தில்...தன் முகத்தை சுரண்டியிருக்கலாம்...கையைக் காலை...ஆட்டியிருக்கலாம்....மாஸ்க் கழன்றிருக்கலாம்....அவனே அறியாமல்.....அக்கா வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கலாம்... என்ற சாத்தியங்கள் இருப்பதால் அப்படி முடித்தேன்.

சிவா.ஜி
06-06-2010, 05:42 AM
கதையில் சங்கரனுக்கு இளையவனாக ஒருவனைக் காட்டியிருந்தேன். அவன் அமெரிக்காவில் இருப்பதாயும்....சங்கரன் இருக்கும்வரை தான் அங்கிருந்து திரும்பி வரமாட்டேன் எனச் சொல்லும் சுயநலமிக்கவனாகக் காட்டியிருந்தேன். பிறகு கதையின் நீளம் கருதி அவனை நீக்கிவிட்டேன்.

ஆனால் அந்த ஏழுபேர் என்பதை மாற்ற* மறந்துவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி தங்கையே.

அன்புரசிகன்
06-06-2010, 06:24 AM
வியப்பூட்டும் கதை. சங்கரனுக்கும் அக்காவின் வாழ்வு தன்னால் பாழாகிறது என்ற எண்ணம் வாட்டியுள்ளது... அதை உங்களுக்கே உரித்தான அழகு வர்ணணையில் தந்தது மிக மிக சிறப்பாக உள்ளது. இன்னொரு பாசமலர்கள். திருப்பாச்சி சகோதரர்கள்...

வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
06-06-2010, 06:44 AM
ரொம்ப நன்றி அன்பு.

(ஆனாலும் உங்க அளவுக்குத் தரமானக் கதையை எப்படியாவது எழுதிவிடவேண்டுமென முயற்சிக்கிறேன்....இதுவரை இயலவில்லை....)

அன்புரசிகன்
06-06-2010, 07:34 AM
ரொம்ப நன்றி அன்பு.

(ஆனாலும் உங்க அளவுக்குத் தரமானக் கதையை எப்படியாவது எழுதிவிடவேண்டுமென முயற்சிக்கிறேன்....இதுவரை இயலவில்லை....)

பார்ரா...
இது டூமச்... டூடூமச்...
இந்த டகால்டியெல்லாம் நம்மகிட்ட வேணா....... :lachen001:

மதி
06-06-2010, 07:38 AM
எப்படி இப்படி ஒரு கதையை உங்களால் யோசிக்க முடிகிறது.. சங்கரன் நிலையையும் ஜெயாவின் பாசத்தையும் காட்டி கண்கலங்க வைத்துவிட்டீர்கள். மன்வளர்ச்சி இல்லையென்றாலும் அக்காவின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்தது..அடடா.. முடிவு மனதை கனக்க செய்தது..

மதி
06-06-2010, 07:38 AM
பார்ரா...
இது டூமச்... டூடூமச்...
இந்த டகால்டியெல்லாம் நம்மகிட்ட வேணா....... :lachen001:
டூவுக்கு அப்புறம் த்ரீ இல்லியா??? டூடூவா:cool::cool::cool::cool:

அன்புரசிகன்
06-06-2010, 08:40 AM
டூவுக்கு அப்புறம் த்ரீ இல்லியா??? டூடூவா:cool::cool::cool::cool:


அப்போ டூவுக்கு அப்புறம் த்ரீயா???:confused:

சிவா.ஜி
06-06-2010, 08:48 AM
இப்படியொரு சங்கரனாக ஒரு நாடகத்தில் நான் நடித்திருக்கிறேன் மதி. அப்போது..அவர்களில் சிலரை அருகிருந்துப் பார்த்து, அதை முடிந்தவரை என் நடிப்பில் கொண்டுவந்தேன்.

அவர்களில் ஒருவரைப் பற்றி எழுதவேண்டும் என நினைத்தபோது...ஜெயா கிடைத்தாள்...பிறகு பிரதீப் கிடைத்தான்....எழுதியாச்சு.

ரொம்ப நன்றி மதி.

சிவா.ஜி
06-06-2010, 08:49 AM
டகால்ட்டி இல்ல அன்பு. முழுக்க முழுக்க உண்மை. உங்க புல்லெட் கோதுகள், புகையும் பந்தங்கள்....இவைகளின் தரத்தில் நிச்சயம் என்னால் எழுத முடியுமென நான் நினைக்கவில்லை.

பா.ராஜேஷ்
06-06-2010, 11:18 AM
நள தமயந்தி படத்தில் வரும் சிறுவன் பாத்திரத்தை கண்முன் நிறுத்தி விட்டீர்கள் அண்ணா. அருமையான எழுத்து... பாராட்டுக்கள்..

சிவா.ஜி
07-06-2010, 05:59 AM
ரொம்ப நன்றி ராஜேஷ்.

nambi
07-06-2010, 06:55 AM
ஒரு சிறுகதையின் மூலம் நாடகம் அரங்கேற்றியிருக்கிறீர்கள்....நன்றாக இருந்தது...இந்த சிறு கதை...

(நிஜத்தில் சில குடும்பங்கள் இன்னும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து இது மாதிரி சுயமாக செயல்படமுடியாத சந்ததிகளை உருவாக்கிவிட்டு அந்த சந்ததிகளை கருணை..... ? என்று யோசித்து கொண்டிருப்பவர்கள் பலர். இதுநகரத்திலேயே உண்டு.).

எனக்கு இந்த கதை படிக்கும் போது அந்த குடும்பங்களை பற்றிய நினைவு வந்தது. தெரிந்தே மீண்டும் மீண்டும் இந்த பந்தங்களை உருவாக்குகின்றனர். சங்கரன் கதாபாத்திரம் நினைவில் நிற்கிறது. பகிர்வுக்கு நன்றி!

அக்னி
07-06-2010, 07:54 AM
சங்கரன் போன்றவர்கள் தாயின் அரவணைப்பையும் தந்தையின் ஸ்பரிசத்தையும் உணர்ந்து கொள்ளுவார்கள்.
சகோதரர்கள் பாசம் காட்டுதலைப் பொறுத்து சகோதர்கள் மீதான அவர்கள் நிலைப்பாடு அமையும்.

மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்ட சூழ்நிலைகள்.., கதையில்...

ஜெயா திருமணத்தை மறுக்க ஓர் வலுவான காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.
அண்ணி, தாயின் அடுத்த ஸ்தானம் என்பார்கள். அவர்களே புறக்கணித்தால், எல்லாம் தெரிந்தும் தனக்கு மாலை சூடுபவன் எவ்வளவு காலத்திற்குத்தான் தாக்குப்பிடிப்பான் என்ற கேள்வி அவள் மறுப்பாகியது மிக வலுவான காரணமாக அமைந்தது.

சங்கரன் போன்ற ஒரு பாலகனை எனக்குத் தெரியும்.
தாய் தந்தையின் அரவணைப்பில் அவனுக்குக் குறைகள் இல்லை.
அவர்களுக்கு இரண்டாவதாக ஓர் பிள்ளை கிடைக்க இருந்த போது, முழுமையான மருத்துவக் கண்காணிப்புத் தாயின் மேல் இருந்தது. கருவின் மீதான முழுமையான ஆராய்ச்சி இருந்தது. பிறக்கப்போகும் குழந்தை குறைபாடின்றிப் பிறக்குமா என்பதைக் கண்ணும் கருத்துமாக ஆராய்ந்தார்கள். அப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்படின், அக்கருவை குழந்தையாக அனுமதித்திருக்க மாட்டார்களாம். ஆனால், இறைவனின் அனுக்கிரகம், அழகான ஓர் பெண்குழந்தை அவர்களுக்குக் கிடைத்தது.

நான் சொல்ல வந்த விடயம் என்னவென்றால், சங்கரன் போன்றவர்கள் குழந்தையாகிப், பெரியவர்களாகிக் கஸ்ரப்படுவதிலும், உரிய மருத்துவபரிசோதனைகளில் நிச்சயப்படுத்தப்பட்டால், அவர்களுக்குக் கருவிலேயே கருணைச் சாவு கொடுப்பது அவர்களுக்குப் பெரும் விடுதலையாக அமையும்.

சங்கரன், ஜெயாவின் வாழ்க்கைத் தடங்கலின் காரணம் தானே என்பதைப் புரிந்தே இருப்பான். பிரதீப் எடுத்த புகைப்படம் அவனுக்கு ஏதோ ஒன்றை எப்படியோ உணர்த்தியிருக்கும்.
அதனிலும் மேலான காரணம், அவள் தாய்ப்பாசத்திலும் மேலான பாசம்...

உலக மனிதர்களுக்குள் இந்த மனிதர்களின் உலகையும் உணர்வையும் பதிவு செய்த கதைக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்...
சிவா.ஜி க்குப் பாராட்டு...

சிவா.ஜி
07-06-2010, 09:25 AM
உண்மைதான் நம்பி. நெருங்கிய சொந்தங்களில் நடக்கும் திருமணங்களி இப்படி குழந்தைகள் பிறக்கும் சாத்தியங்கள் உள்ளது என மருத்துவர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும்...கேட்காமல்...மீண்டும் இப்படிப்பட்ட திருமணங்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

பாவம் ஓரிடம்....பழி ஓரிடம். பாவம் இந்தப் பிறப்புகள்.

பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிவா.ஜி
07-06-2010, 09:42 AM
கருவிலேயேக் கண்டு, பிறப்பைத் தடுப்பது...இத்தகையோர் அவல வாழ்க்கை வாழாமல் இருக்க உதவும்.

கதையை ஆழமாய் உள்வாங்கி, எழுதியவனின் மனம் அறிந்து இட்ட உங்கள் திறனாய்வுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.

நட்சத்திரங்களுக்கு சிறப்பு நன்றி.

Nivas.T
07-06-2010, 12:41 PM
:music-smiley-019: மனசு கனக்குது! சிவா அண்ணா! சங்கரன் அற்புதமான கதாபத்திரம்

சிவா.ஜி
07-06-2010, 02:23 PM
ரொம்ப நன்றி நிவாஸ்.

govindh
08-06-2010, 11:50 PM
சங்கரன் கதை.....
அல்ல.... காவியம் படித்தேன்....
அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்...
உணர்ச்சிமயமான உன்னத அமைப்பு....
வரிக்கு வரி உணர்வு இழைகளால் அழகாகக்
கோர்த்திருக்கிறீர்கள்....

பாராட்டுக்கள்....சிவா.ஜி அவர்களே....

சிவா.ஜி
09-06-2010, 05:39 AM
உங்கள் பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி கோவிந்த்.

Mano.G.
09-06-2010, 05:47 AM
சிவா.ஜி கணேசன் , நடிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு,
நம்ம மன்ற சிவா.ஜி யின் கதை நமக்கு ஒரு எடுத்துக்காட்டு,

சங்கரன் பாத்திரத்தை அருமையாக படைத்துள்ளீர் ஐயா.
தியாகம் தன் தமக்கைக்காக , தன் தமக்கை செய்த தியாகத்திற்கு
தன் உயிரை தியாகம் செய்த சங்கரன்.

வாழ்த்துக்கள் ஐயா.

மனோ.ஜி

சிவா.ஜி
09-06-2010, 06:02 AM
சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு இமயம். நானெல்லால்...சின்ன மண்மேடு மனோ.ஜி ஐயா.

உங்கள் பாராட்டும், ஊக்கமும் உற்சாகத்தையளிக்கிறது. மிக்க நன்றி.

கலையரசி
09-06-2010, 12:57 PM
வேலைப் பளு காரணமாக இன்று தான் படிக்க நேர்ந்தது. மீண்டும் உங்களிடமிருந்து அற்புதமான ஒரு கதை.
சங்கரனைப் போன்ற ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். எப்போதோ அவர்கள் வீட்டுக்குப் போகும் எங்களை அடையாளம் கண்டு மகிழ்ச்சியாகக் கத்துவார்.
சிந்திக்கத் திறனின்றியும் தங்கள் மீது பாசம் பொழிவோரை அவர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்வர்.
கதையிலேயும் ஜெயா அவன் மீது பாசத்தைப் பொழிகிறாள். எனவே தன் சகோதரியின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்து கொள்கிறான் எனவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது அவன் அசைத்ததில் மாஸ்க் கழண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்குமாறு முடிவை அமைத்ததற்குப் பாராட்டுகிறேன்.
நல்லதொரு கவிதையாக இக்கதை மன்றத்தை அலங்கரிக்கிறது. வாழ்த்துக்கள்
சிவா.ஜி.

"எந்தவித வெளி இடையூறுமின்றியிருக்கும் சலனமற்ற குளத்தின் மேற்பரப்பு, இறுக்கமானக் கண்ணாடியாய் தோற்றப்பிழையைக் காட்டினாலும், ஏதோ ஒரு "மரத்தினின்று உதிரும் சருகோ, யாரோ ஒரு சிறுவன் எறிந்த கல்லோ, சின்னப் பறவையின் சிறகடிப்போ சலனத்தை உண்டாக்கி, தோற்றத்தை மாற்றி...அது கண்ணாடியல்ல...தண்ணீர்தானெனக் காட்டிவிடுவதைப்போல, சலனமற்றிருந்த ஜெயாவின் மனதின் மேற்பரப்பை மட்டுமல்ல..ஆழம் வரை அசைத்துவிட்டது...பிரதீப்பின் நட்பு."
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

(அவர்களே என்பதைத் தட்டச்சு செய்து செய்து கை வலிக்கிறது. மனதில் மரியாதை இருந்தால் போதும் என்று நினைத்தும், என் உடன் பிறவாச் சகோதரராக உங்களை நினைத்தும் 'அவர்களே' என்பதை நீக்கிவிட்டேன்)

சிவா.ஜி
09-06-2010, 03:29 PM
வாங்க கலையரசி...நீங்க இல்லாம மன்றம் களையில்லாம இருந்தமாதிரி இருந்தது. உண்மையிலேதான் சொல்றேன். எப்பவும் வர்றவங்க வர்ல*ன்னா அப்படித்தான் தோணுது. அகிலா கூட இப்ப கொஞ்சநாளா பாக்க முடியல..ஜனகனையும் பாக்க முடியல...

உண்மைதாங்க...மூளைவளர்ச்சிக் குறைந்தவர்களென்றாலும், பாசம் காட்டுபவர்களை மிகச் சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள். சங்கரனும் அப்படித்தான். ஜெயாவைப்போல ஒரு அக்காவை நான் பார்த்திருக்கிறேன். அந்த தன்னலமற்றப் பெண்ணுக்கு சமர்ப்பண*மாகத்தான் இந்தக் கேரக்டரை அமைத்தேன்.

அப்புறம்...யாருமே என்னை அவர்களே என அழைப்பதில் எனக்குச் சங்கடம்தான்....கொஞ்ச தூரம் தள்ளிவைப்பதைப்போல உணருவேன். ஒரு சகோதரியாய்..நீங்கள் இனி வெறும் பெயர் சொல்லியே அழைக்கலாம்.
மிக்க நன்றிங்க கலையரசி.