PDA

View Full Version : குப்பைக் கிளறிகள்...அக்னி
04-06-2010, 11:33 AM
விரையும் மனிதனொருவன்
விரையும் மனிதனொருவனைக்
கடந்து செல்கின்றான்...

முந்திச் சென்றவன்,
குப்பைத்தொட்டியைக் கண்டதும் நின்று
தலையை நுழைத்துக்கொள்ள,
அருவருப்பும் பரிதாபமும் கலந்த
வினோதக் கலவையான உணர்வோடு
தாண்டிச் செல்கின்றான் மற்றையவன்...

குப்பை நாற்றத்திற்குள் உணவு வாசம்
தேடும் அந்தமனிதன்,
இவன் மனதோடு கூட வந்தான்...
விரட்டியும் போக மறுத்தவன்
அலுவலக வாசலோடுத்
தொற்றிக்கொண்ட பரபரப்பிற்
தள்ளிப்போய்விட,
கணினித் திரையோடு இவன்
ஒன்றிப்போனான்...

‘அதை எங்கே வைத்தேன்’
கணினித் திரை முழுவதும்
கதவுகள் திறந்து தேடியவனுக்கு
அது கிடைக்கவில்லை...
‘குப்பைக்குட் போயிருக்குமோ’
கணினிக் குப்பைக் கூடைக்குள்
இவன் தலை நுழைந்தது...

வாசலோடு நின்றுகொண்டவன்,
இவன் மனச்சாளரதினூடே
எட்டிப் பார்த்துக் கேட்டான்,
‘ஓ..! நீயும் இரைப்பை நிரப்பக் குப்பை கிளறுபவன்தானா...’

பி.கு:
குப்பைக்கூடைகளுக்குள் தேடுபவர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன்.
பசியைத் தொலைக்கத் தேடும் இவர்களில் ஒருவரை இன்றும் கண்டேன்.
எவ்வாறு பதிவு செய்வது எனப் புரியாததால், இவ்வாறு பதிவுசெய்துவிட்டேன்.
எங்கு பதிவு செய்வது எனத் தெரியாமல், கவிதைப்பகுதியிற் பதிவுசெய்துவிட்டேன்.
பொறுத்தருள்க...

சிவா.ஜி
04-06-2010, 11:50 AM
தெருவோரக் குப்பைக்கிளறி
எச்சமான மிச்சங்களை
அந்த வேளை அனல் வயிற்றை
அணைக்கத் தேடுகிறான்....

அலுவலகக் குப்பைகிளறியோ
அந்த வேலை தொடர்ந்திருக்க*
அனாவசியமென்றெரிந்ததவற்றை
அவசியத்துக்காகத் தேடுகிறான்....

பல நேரங்களிலும்... மனிதன் பிறரின் குப்பைகளைக் கிளறி....அவரை வீழ்த்தி...இவன் மேலெற நினைக்கிறான்.

ஆக...எல்லோருமேக் குப்பைக் கிளறிகள்தான்.

சாதாரணமாய்த் தெருவில் கண்டக் காட்சியை...கவிதையாக்கிய அக்னியாருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

பாரதி
04-06-2010, 01:06 PM
.....!

கிளறுதலில் பறவைகளையும் விலங்குகளையும் தோற்கடிக்க மனிதர்களுக்கு இன்னும் அதிக காலம் தேவையில்லை.

கண்டதை மனத்தழலில் எரித்து கவிதை கண்ட அக்னிக்கு வாழ்த்தும் பாராட்டும்.

அக்னி
04-06-2010, 01:28 PM
அருமையான பின்னூட்டம்...

பல நேரங்களிலும்... மனிதன் பிறரின் குப்பைகளைக் கிளறி....அவரை வீழ்த்தி...இவன் மேலெற நினைக்கிறான்.
குப்பையைக் கிண்டியும் குழி பறிக்கும் மனிதர் பற்றிய குறிப்பு, சிறப்பு...

வாழ்த்துக்கு நன்றி சிவா.ஜி...


.....!
கிளறுதலில் பறவைகளையும் விலங்குகளையும் தோற்கடிக்க மனிதர்களுக்கு இன்னும் அதிக காலம் தேவையில்லை.

இருவிதமான மனிதர்களும் கிளறுவது குப்பைதான்...
ஒருவன் சமூகத்தில் மதிக்கப்பட,
மற்றையவன் சமூகத்தால் அவமதிக்கப்படுகின்றான்...

மற்றைய விலங்குகள் தமக்குள் இந்த வித்தியாசம் பார்ப்பதில்லையே...

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா...

கலையரசி
04-06-2010, 02:40 PM
குப்பையைக் கிளறிச் சிலர் தாள்கள் பொறுக்குவதைக் கண்டிருக்கிறேன். சில சமயங்களில் குப்பைத்தொட்டிகளில் பிறந்து சில மணித்துளிகளே ஆன குழந்தைகள் கிடந்ததாகப் பத்திரிக்கைகளில் செய்தி வாசித்து மனம் நொந்திருக்கிறேன்..
இங்குக் குப்பையில் உணவைத் தேடுபவனையும் கணிணி குப்பையில் பைலைத் தேடுபவனையும் இணைத்து அருமையான கவிதை. பாராட்டுக்கள் அக்னி. சிறப்பான பின்னூட்டமிட்ட சிவா.ஜிக்கும் பாராட்டுக்கள்

அமரன்
05-06-2010, 06:17 PM
கிளறுதல் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் செயல்..

கோழி குப்பையைக் கிளறுவதால் அதற்கு உணவு. விவசாயத்துக்கு பசளை. சில நுண்ணுயிரிகளுக்கு அழிவு.

இப்படி ஒவ்வொரு கிளறலிலும் உண்டு.

மனக்குப்பையைக் கிளறுவது ஒவ்வொருவருக்கும் அவசியம்..

வாழ்ந்து வாழ வைத்தல் வாழ்க்கை என்றார் செல்வர். வாழ்ந்து, அழித்து, வாழவைப்பது வாழ்க்கை என்பேன் நான்.

முத்தொழில் செய்வதால்தான் நானும் கடவுள்.

காட்சியை வரைந்தமைக்கு வாழ்த்துகள் அக்னி.

அலை...
05-06-2010, 09:12 PM
அருமை...

ஒரு பழைய கவிதை நினைவுக்கு வருகிறது..

அழகான வேலைகாரி
வீடு கூட்டினாள்..
வீடு சுத்தமாச்சு...மனசு குப்பையாச்சு..

ஆனால் என்னைப்பொறுத்த வரை..

குப்பை என்பது subjective...

சுடர்விழி
06-06-2010, 12:58 AM
அருமையான பதிவு.....நாம் எல்லாருமே ஏதோஒரு விதத்தில் குப்பைக்கிளறிகள் தான்..அமரன் அவர்களின் பின்னூட்ட விளக்கம் நல்லா இருக்கு..

கீதம்
06-06-2010, 01:27 AM
அடுத்தவர் எறிந்ததில்
தனக்கு ஏதேனும் கிடைக்குமாவென்று
அவன் தேடுகிறான்,
இவனுக்கு வேண்டாமென்று எறிந்ததையே
இவன் தேடுகிறான்.
இருவரின் நிலையையும் அழகாய்ப் படம்பிடித்துக்காட்டுகிறது, கவிதை. பாராட்டுகள் அக்னி அவர்களே.

nambi
06-06-2010, 01:49 AM
குப்பைக்கிளறிகளை இங்கு கிளறிய விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி! இணைந்து கிளறிய தோழர்களுக்கும் நன்றி! ஆனால் நாற்றமெடுக்கவில்லை.....வரிகளின் வாசம் அதை.......

குணமதி
06-06-2010, 04:37 AM
இரண்டு குப்பைக் கிளறல்களையும் ஒப்பிட்டால், முன்னது இழிவானது; பின்னதில் இழிவேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

புதிய சிந்தனை. பாராட்டு.

govindh
06-06-2010, 09:03 AM
குப்பை நாற்றத்திற்குள் உணவு வாசம்
தேடும் அந்தமனிதன்,
இவன் மனதோடு கூட வந்தான்...

வாசலோடு நின்றுகொண்டவன்,
இவன் மனச்சாளரதினூடே
எட்டிப் பார்த்துக் கேட்டான்,
‘ஓ..! நீயும் இரைப்பை நிரப்பக் குப்பை கிளறுபவன்தானா...’

மனதோடு கூட வந்தவன்....
அழகான கவியால்...
அருமையானப் பாடம் நடத்தும்
ஆசிரியர் ஆக்கினான்.

பாராட்டுக்கள் அக்னி அவர்களே.

அமரன்
06-06-2010, 12:12 PM
இரண்டு குப்பைக் கிளறல்களையும் ஒப்பிட்டால், முன்னது இழிவானது; பின்னதில் இழிவேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

புதிய சிந்தனை. பாராட்டு.

நீங்கள் இழிவானது என்று சொன்னது எந்த வகையில் என்று தெரியாது.. ஆனால் அதில் உண்மை உள்ளது..

குப்பைத்தொட்டிக்குள் தலைவிட வைத்தவர்களில் தலையானவர்களாக நான் நினைப்பது குப்பைக்குள் சாப்பாடுகளைக் கொட்டியவர்களைத்தான்.

தேவைக்குச் சாப்பிட வேணும். நம்மில் பலர் ஆசைக்குச் சாப்பிடுவதும் உண்டு.. இதனாலும் பலரது தேவைக்குச் சாப்பாடு கிடைப்பதில்லை. இந்த இலட்சணத்தில் ஆசைக்கு அதிகமாக சமைச்சு அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு மிச்சத்தைக் குப்பையில் கொட்டி அழிவு செய்யும் இவர்கள் இழிவானவர்கள்தான்.

ஷீ-நிசி
09-06-2010, 03:29 PM
கவிதையின் கரு புதியது....

இருவேறு மனிதர்களின் நிலையை இணைப்பு காட்ட எடுத்திருக்கும் கவி முயற்சி வெற்றியாகவே அமைந்துள்ளது....

வாழ்த்துக்கள் நண்பரே!

gans5001
11-06-2010, 10:50 AM
மனம் முழுக்க குப்பை
அவ்வப்போது சின்ன சின்ன கிளருதல்கள்
முடை நாற்றம் இன்னமும் தொடர்ச்சியாய்!
என்னை விட
அவன் நிலை பரவாயில்லை!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2010, 08:10 AM
இந்த உலகில் புதியது என்று எதுவுமே இல்லை. முன்னவர்கள் விட்டுச் சென்ற குப்பையைத்தான் நாம் கிளறிக்கொண்டிருக்கிறோம். சிலருக்கு மாணிக்கம் கிடைக்கிறது. சிலருக்கு மண்ணாங்கட்டி கூட கிடைப்பதில்லை. அதைத்தான் நாம் அவரவர் விதிப்பயனென்று நம்மை சமாதானப்படுத்துகிறோம். அருமையான கவிதை தோழரே. பாராட்டுக்கள்.