PDA

View Full Version : இயால்மாரின் இதயம்

சொ.ஞானசம்பந்தன்
02-06-2010, 12:17 AM
ஸ்வீடன் நாட்டுத் தொன்மக் கதையில் ஒரு கட்டம்:

இல்மேர் என்னும் மன்னனின் மகளும் இயால்மார் என்பவனுங் காதலர்கள். அரசனின் எதிர்ப்பு இருவரையும் இணைய விடவில்லை. வீரத்தால் காதலியை அடைந்துவிடலாம் என்ற முடிவுடன் சிறுபடை திரட்டிச் சென்றான் காதலன். முழுத் தோல்விதான் போர்க்களத்தில் கிட்டியது. அதன் பின்?

19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர் லெக்கோன்த் தலில் (Leconte de Lisle ) அந்தக் கட்டத்தை இயல்மாரின் இதயம் என்ற தலைப்பில் கவிதையாய்த் தீட்டியுள்ளார்.

பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் தருகிறேன். படித்துப் பாருங்கள்.

தெளிந்த இரவு, நடுக்குங் காற்று,
சிவந்த பனித்தரை,
ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்
கல்லறை இல்லாமலே.
வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,
அசைவில்லை மெய்யிலே.
தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை.

இயல்மார் சற்றே நிமிர்கிறான் ரத்தம்
உறைந்த உடல்களின்
இடையே வாள்மீது இருகையும் ஊன்றி.
"அடர்ந்த தோப்பிலே பறவைகள் போலவே
விடியலில் வையகம் அதிரவே பாடிச்
சிரித்துக் களித்த அத்தனைத் திண்டோள்
இளைஞரின் நடுவே
ஏன்'பா மூச்சுண்டா யாருக் கேனும்?"

இல்லை விடை. "என் தொப்பி உடைந்து நொறுங்கிற்று.
கவசமோ துளைபட்டு அதிலிருந்த ஆணிகளைச்
சுக்குநூ றாக்கிற்றுக் கோடரி. என்கண்கள்
சிந்துவது நீரா? செங்குருதி யன்றோ?
வா இங்கே, காக்கையே, மனிதர் தின்னி!
திறவுன்றன் இரும்பலகால் என்னெஞ் சத்தை.
எடுத்துச்செல் இதயத்தை இல்மேரின் புதல்வியிடம்,
சூட்டோடு சூடாக!

உப்சாலா வூரிலே உயர்தர மதுபருகிப்
பொற்கிண்ணம் உராய்ந்து பாடுகின்ற கும்பலில்
தேடென்றன் காதலியை.
புறாக்கூட்டம் உறைகின்ற கோபுரத்தின் உச்சியிலே
பால்வெண் உடலும் நீள்கருங் குழலுமாய்க்
காண்பாய் அவள் நிற்க.
வெள்ளி வளையங்கள் ஊசலிடுங் காதுகளில்.
அந்தி வெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்.

ஏகுவாய்! கருந்தூதா! யானந்தக் காரிகையைக்
காதலிக் கின்றேன் கழறுவாய் கன்னியிடம்.
இதோபார் இதயம் என்றே கொடுத்திடு.
அடையாளங் காண்பாள்; அதுசெக்கச் செவேலென்று
திண்ணியதாய்த் திகழ்கிறது, நடுங்கவில்லை,
வெண்ணிறமாய் மாறவில்லை என்பதனை நோக்கிப்
புன்னகைப்பாள் இல்மேரின் பொன்மகள் பறவையே!

nambi
02-06-2010, 01:13 AM
பிரெஞ்சு மூலத்திலருந்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!

சொ.ஞானசம்பந்தன்
02-06-2010, 05:06 AM
பிரெஞ்சு மூலத்திலருந்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!

பாராட்டுக்கு மிக்க நன்றி.

மதி
02-06-2010, 05:42 AM
தமிழாக்கம் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை..!

செல்வா
02-06-2010, 05:59 AM
மிக உணர்ச்சி மயமான கவிதை...

நல்ல மொழிபெயர்ப்பு...
தொடருங்கள் உங்கள் சீரிய பணியை ஐயா

சிவா.ஜி
02-06-2010, 07:18 AM
அழகான தமிழில் பிரெஞ்சுக்கவிதையை வாசிக்கவைத்ததற்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.

சொ.ஞானசம்பந்தன்
03-06-2010, 05:34 AM
தமிழாக்கம் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை..!

பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-06-2010, 05:36 AM
அழகான தமிழில் பிரெஞ்சுக்கவிதையை வாசிக்கவைத்ததற்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.

நன்றிக்கு மனமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-06-2010, 05:38 AM
மிக உணர்ச்சி மயமான கவிதை...

நல்ல மொழிபெயர்ப்பு...
தொடருங்கள் உங்கள் சீரிய பணியை ஐயா

பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் அகமார்ந்த நன்றி.

கீதம்
03-06-2010, 10:38 PM
அற்புதமான மொழியாக்கம்! கவிதை கூறும் நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நடுங்கவைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள்!

பகிர்வுக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.

சொ.ஞானசம்பந்தன்
04-06-2010, 04:22 AM
அற்புதமான மொழியாக்கம்! கவிதை கூறும் நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நடுங்கவைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள்!

பகிர்வுக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.

பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் மிக்க நன்றி.

அக்னி
04-06-2010, 01:48 PM
அற்புதம்...

பிரெஞ்சுக்காரர்கள் தம்மொழியிற் படித்திருந்தாற்கூட,
நாமடைந்த உணர்வைப் பெற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

மூலமே தமிழ்மொழிதான் எனத்தக்கதான சொற்கட்டுக்களோடு,
கவிதை கட்டிப்போட்டுவிட்டது...

பாராட்டும் நன்றியும்...

கலையரசி
04-06-2010, 02:44 PM
போர்க்கள காட்சியும், இயால்மரின் மனவோட்டத்தையும் விளக்கும் வரிகளைப் படித்தவுடன் மனம் கனத்துவிட்டது. அருமையான கவிதை, நல்ல மொழிபெயர்ப்பு.

பாரதி
04-06-2010, 02:55 PM
காக்கை விடு தூது!

காதலைப்பகிரத்தான் மனிதர்களுக்கு எத்தனை எத்தனை வழிகள்..!

அருந்தமிழ்சொற்களால் அமையப்பெற்ற கவிதை அழகு.

மூலத்தைப் படித்த உணர்வினைத் தந்தது. மிக்க நன்றி ஐயா.

”தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை” - இவ்வரி மட்டும் சற்று பொருந்தாததாக தோன்றுகிறதே ஐயா - எனது ஐயம் சரியா?

அக்னி
04-06-2010, 03:35 PM
“தண்மதி பொழிகின்றது மங்கிய ஒளியினை”
என்றோ,
“தண்ணொளி பொழிகின்றது மங்கிய நிலவது”
என்றோ
வந்திருக்குமானால் பொருத்தமாயிருக்குமோ...

பாரதி அண்ணாவின் பார்வைக்கூர்மை வியக்க வைக்கின்றது...

சொ.ஞானசம்பந்தன்
05-06-2010, 04:38 AM
அற்புதம்...

பிரெஞ்சுக்காரர்கள் தம்மொழியிற் படித்திருந்தாற்கூட,
நாமடைந்த உணர்வைப் பெற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

மூலமே தமிழ்மொழிதான் எனத்தக்கதான சொற்கட்டுக்களோடு,
கவிதை கட்டிப்போட்டுவிட்டது...

பாராட்டும் நன்றியும்...

உயர்வான பாராட்டுக்கு உள்ளம் நிறைந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
06-06-2010, 01:37 PM
காக்கை விடு தூது!

காதலைப்பகிரத்தான் மனிதர்களுக்கு எத்தனை எத்தனை வழிகள்..!

அருந்தமிழ்சொற்களால் அமையப்பெற்ற கவிதை அழகு.

மூலத்தைப் படித்த உணர்வினைத் தந்தது. மிக்க நன்றி ஐயா.

”தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை” - இவ்வரி மட்டும் சற்று பொருந்தாததாக தோன்றுகிறதே ஐயா - எனது ஐயம் சரியா?

பாராட்டுக்கு மிக்க நன்றி. தண்மதி- குளிர்ந்த சந்திரன்
நிலவினை - நிலவாகிய வெளிச்சத்தை
குளிர்ந்த சந்திரன் மங்கலான வெளிச்சத்தைப் பொழிகிறது.
சிந்து நதியின் மிசை நிலவினிலே - பாரதியின் பாட்டில் நிலவினிலே என்பது நிலவு வெளிச்சத்திலே என்று பொருள்படுவது காண்க.

சொ.ஞா.

சொ.ஞானசம்பந்தன்
06-06-2010, 01:39 PM
“தண்மதி பொழிகின்றது மங்கிய ஒளியினை”
என்றோ,
“தண்ணொளி பொழிகின்றது மங்கிய நிலவது”
என்றோ
வந்திருக்குமானால் பொருத்தமாயிருக்குமோ...

பாரதி அண்ணாவின் பார்வைக்கூர்மை வியக்க வைக்கின்றது...

இங்கு மங்கிய நிலவினை என்பது மங்கலான நிலா ஒளியைக் குறிக்கின்றது.
நன்றி.

சொ.ஞா.

அமரன்
06-06-2010, 08:46 PM
சகோதர மொழி இலக்கியங்களை தீந்தமிழ்ச் சொல்லில் எடுத்துப் பருகத் தரும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்..

நம் தமிழ் இலக்கியங்களில் களத்துக் கேற்ப எல்லாம் இருக்கும். அதே சிறப்பை இந்தக் கவிதையிலும் காண்கிறேன். காக்கை அதிலொன்று..

ஒரு பக்கத்தின் அழிவு மறு பக்கத்தில் மகிழ்வாய் எதிரொலிக்கும் போது ஏற்படும் உயிர் உலுக்கும் வேதனையை அண்மைக் காலங்களில் அனுபவிக்கும் பலரில் நானும் ஒருவன்.

அதையும் தாங்கியபடி..

காதல்..
தனக்காக உயிர்நீத்தவர்கள்..
அவர்கள் தியாகம் பயனற்றுப் போனமை..
சுடலைத் தனிமை..

இப்படி ஏராளமான உணர்வுகளின் தாக்குதலையும் சமாளித்து, தோல்வி மாலை சூடிய நொடியை, அப்பொழுது எழுந்த விரக்தியை அச்சுப் பிசகாமல் கவிதையாக மொழி பெயர்த்திருக்கி்றீர்கள் மூலக்கவியும் நீங்களும்.

அக்னி
07-06-2010, 06:12 AM
தெளிவுற விளக்கம் சொல்லியமைக்கு மிக்க நன்றி சொ.ஞா. அவர்களே...

அமரா, உன் பின்னூட்டம் சமகாலத் தமிழ் மனங்களின் பிரதிபலிப்பு...

சொ.ஞானசம்பந்தன்
07-06-2010, 10:09 AM
பாராட்டுக்கும் விரிவான விமர்சனத்துக்கும் நன்றி. உங்கள் சொந்த அனுபவம் என்னில் துயரம் விளைத்தது.
சொ.ஞானசம்பந்தன்

சொ.ஞானசம்பந்தன்
07-06-2010, 10:11 AM
தெளிவுற விளக்கம் சொல்லியமைக்கு மிக்க நன்றி சொ.ஞா. அவர்களே...

அமரா, உன் பின்னூட்டம் சமகாலத் தமிழ் மனங்களின் பிரதிபலிப்பு...

நன்றிக்கு நன்றி.

பாரதி
07-06-2010, 02:24 PM
நன்றி ஐயா!

சொ.ஞானசம்பந்தன்
08-06-2010, 04:46 AM
நன்றி ஐயா!

நன்றிக்கு நன்றி.