PDA

View Full Version : வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்



தங்கவேல்
30-05-2010, 07:09 AM
http://1.bp.blogspot.com/_o8CIlOV5qSM/TAIJBGbk7fI/AAAAAAAAASI/uEa2Wx3MRuU/s1600/IMG_0196.JPG

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

சிவா.ஜி
30-05-2010, 07:58 AM
எது நடக்கவேண்டுமென இருக்கிறதோ அது நடந்தே தீரும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.

பெரியவரின் வாக்குப்படி...உங்கள் இல்லற வாழ்வு நலமாய் அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

என்றும் இதே நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள் தங்கவேல்.

தங்கவேல்
30-05-2010, 09:30 AM
நன்றி சிவா.

Mano.G.
30-05-2010, 02:06 PM
உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு ஒரு படிப்பினை, நன்றி தம்பி

பா.ராஜேஷ்
30-05-2010, 03:11 PM
தெய்வ அனுகிரகம் உங்களுக்கு இருக்கு போலும். ரஜினியின் பட வசனமாகிய இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இறைவன் மறுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பது உங்கள் விஷயத்திலும் உண்மையாகிறது..

govindh
30-05-2010, 04:13 PM
எல்லாம் நன்மைக்கே .....
நல்வாழ்த்துக்கள்.

கீதம்
30-05-2010, 10:41 PM
தெய்வத்தை நேரில் காண விரும்பினீர்கள். அவருடன் வாழும் பாக்கியமே பெற்றுவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள், தங்கவேல் அவர்களே.

தங்கவேல்
31-05-2010, 06:13 AM
கீதம் என் சிறுவயதில் எனக்கான நண்பர்களே வயதானவர்கள் தான். என்னுடன் சினேகமாக இருந்தவர் ஒருவர் சித்தர். அவரின் சித்து விளையாட்டையும் நேரில் கண்டவன் நான். அதைப் பற்றி விரைவில் பதிவிடுவேன். நன்றி மனோ, ராஜேஷ், கீதம், கோவிந்த்

விகடன்
21-06-2010, 11:00 AM
கிடைத்தற்கரிய சண்டிப்புக்கள், அறிவுரைகள் அனுபவங்கள் என்று பலவற்றை பெற்றிருக்கிறீர்கள் போல...

உங்கள் அனுபவங்கள் பல எம்மையும் நெறிப்படுத்தலாம். அந்தவகையில் உங்கள் அனுபவங்களை ஞாபகம் வரும்போதெல்லாம் எழுத்துக்களாக்கி எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

xavier_raja
24-06-2010, 09:35 AM
அருமையான நிஜ கட்டுரை..பலருக்கு தெரிவதில்லை கடவுள் தன்னுள்தான் இருக்கிறார் என்று..

கடவுளை கண்களால் தேடாதீர்கள், இதயத்தால் தேடுங்கள்..

தங்கவேல்
03-07-2010, 07:03 AM
நிச்சயமாய் எழுதுவேன் விராடன். எனது நண்பர்கள் இன்றைக்கு அரசியலில் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். சினிமா உலகில் எண்ணற்ற நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடனான சந்திப்புகள், பேச்சுகள், பெற்ற அனுபவங்கள் பலப்பல. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.

kavinele
04-07-2010, 08:42 AM
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

nambi
04-07-2010, 10:35 AM
அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!