PDA

View Full Version : சீனமொழியில் திருக்குறள்



அறிஞர்
20-05-2010, 01:57 PM
மொழி பெயர்க்கிறார் தைவான் கவிஞர் யூஷீ

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில், தைவான் நாட்டு கவிஞர் யூஷீக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமை வகித்தார். பதிவாளர் சண்முகவேல், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கவிஞர் யூஷீக்கு ‘திருக்குறள்’ புத்தகத்தை பரிசாக வழங்கி பேசியதாவது:

தைவான் நாட்டு கவிஞர் யூஷீயை சந்தித்தபோது, திருக்குறளின் பெருமையை பற்றி அவரிடம் சொன்னேன். அவர் சீனமொழியில் திருக்குறளை மொழி பெயர்க்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த பணியை வரும் டிசம்பர் மாதத்துக்குள் செய்து முடிப்பதாகவும் கூறியுள்ளார். நமது எண்ணம் உயர்வாக இருந்தால், லட்சியங்கள் மனதில் உருவாகும். அதுவே நம்மை உயர்த்தும். அதுபோன்றுதான் இவரது எண்ணம் எழுத்தாக மாறி கவிதையாக உருவெடுத்துள்ளது. அவரது கவிதைகளை படிக்கும்போது, திருவள்ளுவரின் சிந்தனை நாட்டைக் கடந்து, மொழியைக் கடந்து, எல்லைகளைக் கடந்து, நிலைத்து நிற்கிறது என்பதை நினைக்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

யூஷீயின் கவிதைகள் சமுதாய நோக்கத்தோடு அமைந்துள்ளது. இங்கு பேசிய ஒவ்வொருவரின் கருத்துக்கள் என்னும் மலர்களை பூச்செண்டுகளாக்கி அவருக்கு கொடுக்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழகம் எனது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. இங்குதான் படித்தேன்; ஆசிரியராக பணியாற்றினேன். அதன் விளைவாக ஜனாதிபதி பதவியும் கிடைத்தது. அதேபோன்று, இங்கேயே படித்து ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

மதி
20-05-2010, 02:00 PM
ரொம்ப பெருமையான செய்தி.. திருக்குறளின் புகழ் எங்கும் ஓங்கட்டும்

கலையரசி
20-05-2010, 02:06 PM
திருக்குறள் சீன மொழியில் பெயர்க்கப் படுவதையறிந்து தமிழன் என்ற முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
செய்திக்கு நன்றி.

சிவா.ஜி
20-05-2010, 02:47 PM
உண்மையிலேயே பெருமைப்படத்தக்க செய்தி.

கவிஞர் யூஷீ....அவர்களே உங்களை பூஷீ(ஜி)க்கிறோம்....

பகிர்வுக்கு நன்றி அறிஞரே.

சிவகுமார்
20-05-2010, 03:30 PM
மகிழ்ச்சியான தகவல்! ஏற்கனவே பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், சீன மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவதன் மூலம், நம் இனத்தின் பெருமை அதிகமான மக்களைச் சென்றடையும் வாய்ப்புக் கிட்டியுள்ளது!!!

பகிர்ந்தமைக்கு நன்றி அறிஞரே!!!

அமரன்
20-05-2010, 05:22 PM
வேறெங்கும் காணாதது என்று விருந்தோம்பலை சிலாகித்தார் ஜேர்மனிய அறிஞர்!

சீனர்கள் எதைச் சிலாகிப்பார்..

வானோங்கிய வள்ளுவன் இப்பவாச்சும் சீனம் சென்றானே.

மகிழ்ச்சி.

கீதம்
20-05-2010, 09:42 PM
இம்முயற்சிக்கு அடித்தளமிட்டுத்தந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கும், அதை செயலாக்க முனைந்த கவிஞர் யூஷீ அவர்களுக்கும், இவ்வரிய செய்தியை இங்கு பகிர்ந்துகொண்ட அறிஞர் அவர்களுக்கும் நன்றிகள் பல.

nambi
21-05-2010, 04:53 AM
அய்யன் திருவள்ளுவர் சீனாவிலும் கால் பதிக்கின்றாரா? பதிக்கட்டும். உலகத் திருமறையாம் திருக்குறளின் சீன மொழிபெயர்ப்பின் மூலம் இன்னும் ஆழமாக பதிக்கட்டும். கவிஞர் யூஷி தமிழர்களின் போற்றுதலுக்குரியவராகிறார். பகிர்வுக்கு நன்றி!