PDA

View Full Version : மலர் மஞ்சம் - தி.ஜா

கண்ணன்
18-05-2010, 02:48 PM
மோகமுள்ளுக்கு அடுத்தபடியாக மலர் மஞ்சத்தையும் அம்மா வந்தாளையும் வைக்கலாம். தி.ஜா இந்தப்புத்தகத்திலும், சமூகம் ஏற்காத உறவுகளை அவருக்கே உரித்தான் கும்மோண/தஞ்சைத் தமிழில் தருகிறார். தி.ஜாவைப் போல எழுத்து நடையை வேறு யாராலும் தர இயலாது. அந்தத் தமிழுக்காகவே, எப்பொழுது எனக்கு எங்கள் ஊர் ஞாபகம் வந்தாலும் தி.ஜாவின் ஏதாவதொரு புத்தகத்தை கையிலெடுத்துவிடுவேன்.

இந்த நாவலில், பாலி என்கின்ற பாலாம்பாள் தனக்கு தன் தந்தைப் பார்த்த தங்கராஜையும், குடும்ப வக்கீல் நண்பரின் பேரன் ராஜாவையும் காதலிக்கிறார். அந்த வகையில், ஆண்களின் இருதார உறவை விடுத்து ஒரு பெண் ”மனத்தளவில்” இரு உறவு கொள்ளுமாறு இந்நாவலைப் படைக்கிறார். அது கூட (1960கள்), எழுதப்பட்ட காலத்தில் ஒரு புரட்சிதான்.
இந்நாவலில் வரும் ராமையா (பாலியின் தந்தை), கோணவாய் நாயக்கர், வக்கீல் மாமா, தங்கராஜீ, ராஜா, செல்லம், அத்தை, ஜகது, வையன்னா ஆகிய அனைவரும் நம் மனதில் நீங்காது நிற்க வைத்துவிடுகிறார் தி.ஜா.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரெ ஒரு குறை, ஒரு சில இடங்களில், சில பாத்திரங்கள், பிராமணத் தமிழ் பேசுவதாக தி.ஜா சித்தரிக்கிறார் (வக்கீல் குடும்பத்தைத் தவிர அனைவரும் பிராமணரல்லாதவர்கள்). அந்த ஒரு பிழையைத்தவிர எனக்கு ஒரு குறையயும் தெரியவில்லை.

நீங்கள் படித்திருக்கீர்களா? உங்கள் எண்ணங்கள் என்ன?

-கண்ணன்

செல்வா
18-05-2010, 03:30 PM
மேற்சொன்ன இரு புத்தகங்களையும் நான் வாசித்ததில்லை.... என்றாலும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் கருத்திலிருந்து இன்னும் வலுவாக இந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

நூல் மதிப்புரையை இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதியிருக்கலாமோ..?

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

கலையரசி
20-05-2010, 02:23 PM
தி.ஜா.வின் எழுத்து நடை போற்றுதலுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. அவரது மோக முள், அம்மா வந்தாள் வாசித்திருக்கிறேன்.
அம்மா வந்தாள் என்ற கதையை எனக்குப் பிடிக்கவில்லை. பெண்ணொருத்தி கணவனுடன் இருந்து கொண்டு வேறொருவரின் வைப்பாக இருப்பது என்பது நம் தமிழ்க் கலாச்சாரத்துக்கு முரண்பட்டது. அந்தக் கதையில் வரும் கணவனை ஒரு கையாலாகாதவனாக தி.ஜா காட்டியிருப்பார். அதாவது மனைவியின் நடத்தை பற்றித் தெரிந்திருந்தும் அதை 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு காலந்தள்ளுவார்.

இதே போல் நீங்கள் மேலே கூறியிருக்கும் மலர் மஞ்சத்தில் பெண்ணொருத்தி மனதளவில் இருவரிடம் உறவு கொள்வதையும் சகிக்க முடியவில்லை. இதில் ஏதும் புரட்சி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கணவனுடன் வாழ முடியவில்லையெனில் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நல்லது. அதை விடுத்து இம்மாதிரியான செய்கைகளில் ஈடுபடுவதைக் கொண்டு இலக்கியம் படைப்பது நாம் அத்தகைய செயல்களை அங்கீகரிப்பது போல் ஆகிவிடும்.

கண்ணன்
20-05-2010, 04:35 PM

கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகள் கலைகளைக் கட்டுப்படுத்தாது, கட்டுப்படுத்தவும் கூடாது.

அம்மா வந்தாளில் வரும் கூடா உறவு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என தி.ஜா சொல்லவில்லை, மாறாக, தன்னுடைய ஆசைப்பிள்ளையே அவளை வெறுத்து விலகி, ஒரு விதவையை ஏற்றுக்கொள்வது போல அமைத்திருப்பார். இந்தக்கதையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பிசைந்துக்கொள்ளலாம். ஓரு மகன் (அதுவும் வேதம் படித்தவன்) தன் அம்மாவின் நடத்தை பிடிக்காமல், குடும்பத்தை விட்டு விலகி, ஒரு விதவைக்கு வாழ்வுகொடுப்பது என்பதுதான் கதை. தகாத உறவை எப்படி எழுதலாம் என நீங்களும் கேட்கலாம், எழுதுவதில் என்னத் தவறு, முடிவைப்பாருங்கள் என நானும் சொல்லலாம். அந்த விவாதமே, இலக்கியத்திற்கு வெற்றிதான்.

மலர் மஞ்சம் படித்துவிட்டு சொல்லுங்கள். எனக்கு விளக்கத்தெரியவில்லை. பாலியைப்போல் பல பெண்கள், கட்டாயத்திருமணாத்திற்கும் தன் விருப்பத்திற்கும் இடையே அல்லாடுகிறார்கள். அதுதான் மையக்கரு.

-கண்ணன்

கலையரசி
21-05-2010, 02:02 PM
கலை கலைக்காகவே எனச் சிலர் வாதிடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நாம் படைக்கும் இலக்கியம் ஓரளவுக்காகவாவது நம் சமுதாய மேன்மைக்கு உதவ வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
மோக முள் என்ற கதையிலும் திருமணமான ஒருத்தி வேறு ஒருவனுடன் சோரம் போகும் கதை வரும். நான் சொல்வது என்னவென்றால் எழுதப்பட வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்க, இது போன்ற தகாத உறவுகளைப் பற்றியே தி.ஜா. எழுத வேண்டிய அவசியம் என்ன என்பது தான்.
மலர் மஞ்சம் கிடைப்பின் படித்து விட்டு என் கருத்தை எழுதுகிறேன். நன்றி கண்ணன்.